​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 18 June 2017

சித்தன் அருள் - 700 - அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு!


அகத்தியப் பெருமானின் இன்றைய அருள் வாக்கு

இறைவன் அருளால் நாங்கள் அடிக்கடி கூறுவது போல உணவை மனிதன் உண்ண வேண்டும். எந்த உணவும் மனிதனை உண்ணக் கூடாது. அப்படிப் பார்த்து மனிதன் உண்ணும் ஒரு முறையை கற்க வேண்டும். இன்னும் கூறப்போனால் உணவு என்பது ஒரு மனிதன் வாயைப் பார்த்து, நாவைப் பார்த்து உண்ணக் கற்றுக்கொண்டிருக்கிறான். அப்படியல்ல. வயிற்றைப் பார்த்து, வயிற்றுக்கு எது சுகமோ, வயிற்றுக்கு எது நன்மை தருமோ அப்படிதான் உண்ண பழக வேண்டும். உணவும் ஒரு கலைதான். இன்னும் கூறப்போனால் உணவு எனப்படும் இரை சரியாக இருந்தால், மாற்று இரை தேவையில்லை. அஃதாவது மாத்திரை தேவையில்லை என்பது உண்மையாகும். எனவே உடல் உழைப்பு, சிந்தனை உழைப்பு இவற்றைப் பொறுத்து ஒரு மனிதன் உணவை தேர்ந்து எடுத்துக்கொள்ள வேண்டும். எப்பொழுதுமே உணவிலும் சாத்வீகத்தைக் கடைபிடிப்பது அவசியமாகும். ஒருவனின் அன்றாடப் பணிகள் என்ன ? அதிலே உடல் சார்ந்த பணிகள் என்ன? உள்ளம் சார்ந்த பணிகள் என்ன? இவற்றையெல்லாம் பிரித்து வைத்துக்கொண்டு அதற்கு ஏற்றாற் போல் உணவைப் பயன்படுத்த வேண்டும். அதிக உடல் உழைப்பு இல்லாதவர்கள் உணவைக் குறைத்துக் கொள்வதும், உணவிற்கு பதிலாக கனி வகைகளை சேர்த்துக் கொள்வதும், இன்னும் கூறப்போனால் மசை பண்டம், இன்னும் அதிக காரம், அதிக சுவையான பொருள்கள், செயற்கையான உணவுப் பொருள்கள் இவற்றையெல்லாம் தவிர்த்து உணவை ஏற்பதே சிறப்பாக இருக்கும். வயது, தன்னுடைய உடலின் தன்மை, அன்றாடம் செய்கின்ற பணியின் தன்மை, மன நிலை இவற்றை பொருத்துதான் எப்பொழுதுமே உணவை தேர்ந்தெடுத்துக் கொள்ள வேண்டும். அதை விட முக்கியம், ஒருவன் எந்த சூழலில் இருக்கிறானோ, எந்த தட்ப, வெப்ப நிலையில் இருக்கிறானோ அதற்கு ஏற்றாற் போல் உணவை மாற்றிக்கொள்ள வேண்டும். எல்லாவற்றையும் விட கவனம் வேண்டியது,  உணவை பகிர்ந்துண்டு ஏற்பது. அஃது மட்டுமல்லாமல் உயர்ந்த உணவாயிற்றே, இதை வீணடிக்கக் கூடாது என்பதற்காக ஏற்காமல், உணவு வீணானானாலும், உடல் வீணாகாமல் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு ஏற்பதே சிறந்த உணவாக இருக்கும். உணவு, நல்ல உணர்வை தூண்டக்கூடியதாக இருக்க வேண்டும். சாத்வீக உணவாக இருக்க வேண்டும். எனவே உணவை ஒவ்வொரு மனிதனும் உண்ணும்பொழுது அந்த உணர்வை சிரமப்படுத்தாத உணவாகப் பார்த்து, ஒரு உணவு உள்ளே செல்கிறதென்றால் அந்த உணவு பரிபூரணமாக செரிமானம் அஃதாவது ஜீரணம் அடைந்த பிறகே அடுத்ததொரு உணவை உள்ளே அனுப்பும் முறையைக் கற்க வேண்டும். காலம் தவறாமல், நாழிகை தப்பாமல் உண்ணுகின்ற முறையை பின்பற்ற வேண்டும். வேறு வகையில் கூறப்போனால் சமையல் செய்கின்ற ஒரு தருணம், ஒருவன், ஒரு அடுப்பிலே ஒரு பாத்திரத்தை ஏற்றி நீரை இட்டு, அதிலே அரிசியை இட்டு அன்னம் சமைத்துக் கொண்டிருக்கிறான். அப்பொழுது அங்கே மூன்று மனிதர்கள் இருக்கிறார்கள். அதனால் மூன்று மனிதர்களுக்கு ஏற்ப அன்னம் தயாரித்துக் கொண்டிருக்கிறான். அன்னம் பகுதி வெந்துவிட்டது. இப்பொழுது மேலும் மூன்று மனிதர்கள் அங்கே வந்துவிட்டார்கள். உடனடியாக ‘ ஆஹா ! இப்பொழுது சமைத்த உணவு பத்தாது. இப்பொழுது வெந்து கொண்டிருக்கும் இந்த அரிசியிலேயே இன்னும் மூன்று பேருக்குத் தேவையான அரிசியைப் போடுகிறேன் ‘ என்று  யாராவது போடுவார்களா ?. மாட்டார்கள். இதை முழுமையாக சமைத்த பிறகு வேறொரு பாத்திரத்தில் மேலும் தேவையான அளவு சமைப்பார்கள். இந்த உண்மை சமைக்கின்ற அனைவருக்கும் தெரியும். ஆனால் ஏற்கனவே உண்ட உணவு அரைகுறையான செரிமானத்தில் இருக்கும்பொழுது மேலும் உணவை உள்ளே அனுப்புவது உடலுக்கு வியாதியை அவனாகவே வரவழைத்துக் கொள்வதாகும். ஒரு மனிதனுக்கு பெரும்பாலான வியாதிகள் விதியால் வராவிட்டாலும், அவன் மதியால் வரவழைத்துக் கொள்கிறான். விதியால் வந்த வியாதியை பிரார்த்தனையாலும், தர்மத்தாலும் விரட்டலாம். பழக்க, வழக்கம் சரியில்லாமல் வருகின்ற வியாதியை மனிதன்தான் போராடி விரட்டும் கலையைக் கற்றுக்கொள்ள வேண்டும். நல்ல உணவு என்பது நல்ல உணர்வை வளர்க்கும் என்பதை புரிந்து கொண்டு அதற்கு ஏற்றாற் போல் பக்குவமாக உணவை, அகங்காரம் இல்லாமல், ஆத்திரம் இல்லாமல் , வேதனை இல்லாமல், கவலையில்லாமல், கஷ்டமில்லாமல் நல்ல மன நிலையில் அதனை தயார் செய்ய வேண்டும். நல்ல மன நிலையில் அதனை பரிமாற வேண்டும். உண்ணுபவனும் நல்ல உற்சாகமான மன நிலையில் உண்ண வேண்டும். இதில் எங்கு குறையிருந்தாலும் அந்த உணவு நல்ல உணர்வைத் தராது.

2 comments:

  1. ஓம் அவென அகரத்தின் பொருளே போற்றி
    ஓம் ! லோபமுத்ரா சமேத அகத்தீஸ்வராய நம

    ReplyDelete
  2. ஓம்! ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

    ReplyDelete