"ஆதிசேஷா! பூலோகத்திலுள்ள மனிதர்கள்தான் நன்றியில்லாமல் இருக்கிறார்கள் என்று எண்ணிவிடவேண்டாம். தேவலோகத்திலும் அப்படிப்பட்ட சூழ்நிலை வந்து வெகு நாள்களாயிற்று. இதை இன்னும் ஆதிசேஷன் புரிந்து கொள்ளவில்லை என்று எண்ணும் பொழுது எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை" என்று சனீச்வரன் தன் வாய் எண்ணத்தை ஆதிசேஷன் மீது செலுத்தினார்.
"தாங்கள் சொல்வது எனக்கு எதுவும் விளங்கவில்லை" என்றார் ஆதிசேஷன்.
"ஆதிசேஷா! நீ சதாசர்வகாலமும் திருமால், திருமால் என்று எண்ணிக் கொண்டிருக்கிறாயே, அந்தத் திருமால் உன்னை இருட்டறையில் தள்ளிக் கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால் உன்னை ஒரு நாகரீக அடிமையாக வைத்துக் கொண்டிருக்கிறார் என்பதுதான் உண்மை" என்றார் சனீச்வரன்.
சனீச்வரன் ஆதிசேஷனுக்கு மேலும் தூபமிட்டார். அதுமட்டுமல்ல, இதுவரை "தாங்கள்-நீங்கள்" என்று அழைத்த சனீச்வரன் இப்போது ஆதிசேஷனை ஒருமையாகவே பேச ஆரம்பித்தார்.
சாதாரணமாக இருந்தால் ஆதிசேஷன் சீறிப் பாய்ந்திருப்பார். ஆனால் அப்போதுள்ள சூழ்நிலையில் ஆதிசேஷன் பெட்டிப் பாம்பாக அடங்கி விட்டார். காரணம் அஷ்டமச்சனி ஆரம்பித்துவிட்டது என்பதுதான் உண்மை.
"திருமால் அப்படி செய்வார் என்று நம்பவில்லை சனீஸ்வரரே"
"ஆதிசேஷா! உன்னையும் திருமாலையும் பிரிப்பதற்கா நான் இதைச் சொன்னேன்? எனக்கு வேறு வேலை இல்லையா? இப்பொழுது ஒன்று சொல்கிறேன் கேள். நானோ சனீச்வரன். நீயோ ராகு-கேது அம்சம். நம் இருவர் எண்ணமும் செயலும் எப்போதும் ஒன்று போல்தான் இருக்கும் இல்லையா?"
"ஆமாம்"
"இதுவரை நமக்குள் ஏதாவது சண்டை சச்சரவு வந்திருக்கிறதா? சொல் பார்க்கலாம்?"
"இல்லை! சனீஸ்வரரே! இல்லை!"
"நாம், பூலோக மனிதர்களை ஞான வழிக்கும் தெய்வீக வழிக்கும் கொண்டு வரத்தான் பிரம்மாவின் கட்டளைப்படி அவர்களுக்கு அவ்வப்போது துன்பம் கொடுத்துக் கொண்டிருக்கிறோம். இல்லையா?"
"ஆமாம். இதில் என்ன சந்தேகம்?"
"அப்படியிருக்க நாம் இருவரும் சகோதரர் போல்தானே? இதை ஏற்றுக் கொள்கிறாயா?"
"நிச்சயமாக ஏற்றுக் கொள்கிறேன் சனீஸ்வரரே!"
:"சனீஸ்வரரே என்று சொல்ல வேண்டாம். "சனீச்வர அண்ணா" என்று கூறு!"
"அப்படியே ஆகட்டும்"
"மிக்க மகிழ்ச்சி! ஆதிசேஷா! என்னை என் உடன் பிறந்த சகோதரனாக ஏற்றுக் கொண்டாயே, அதுவே எனக்குப் போதும். இதை விட எனக்கு வேறு என்ன பாக்கியம் வேண்டும்?" என்று சனீச்வரன், ஆதிசேஷனைக் கட்டிப் பிடித்து கண்ணீர் விட்டார்.
இது அன்பின் அடையாளம், ஆனந்தக் கண்ணீர்தான் என்று ஆதிசேஷன் எண்ணினார். இதன் மூலம் அவருக்கு அஷ்டமச்சனி மிக நன்றாக வேலை செய்ய ஆரம்பித்துவிட்டது என்று திருமால் ஞானதிருஷ்டியால் எண்ணிக் கொண்டார்.
"ஆதிசேஷா! இப்போது நான் சொல்வதை மிக நன்றாக எண்ணிப்பார். என் சகோதரன் கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை. திருமால் உன்னை ஓர் அடிமையாகத்தான் எண்ணிக் கொண்டிருக்கிறார். கருடன் மீது அமர்ந்து அவனுக்கு உயர்பதவி கொடுத்த திருமால், அந்தக் கருடன் காலில் உன்னைக் கட்டிவிட்டு வேடிக்கை பார்க்கிறார். உன்னை இதைவிடக் கேவலப்படுத்த வேறு யாரால் முடியும்?"
"சனீஸ்வரரே! அவருக்குக் குடையாகப் பல யுகங்கள் நான் தலை தூக்கி நிற்கிறேனே"
"உண்மை! காலடியில் மிதிக்கின்ற திருமால், உன் மடியில் தலைவைத்து படுக்கையாக வைத்து, வெயில் படாமல், மழைபடாமல், உன் தலையைப் பாதுகாப்பாக மாற்றி சுகத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார் இல்லையா?"
ஆதிசேஷன் மௌனமாக நின்றார்.
"இல்லையா என்பதைவிட அடிமையாக நசுக்குகிறார் என்பதுதான் உண்மை. இதை இனிமேலாவது பகுத்தறிவுச் சிந்தனையோடு நீ உணர வேண்டாமா?" என்று ஒரு கொடிய விஷத்தை ஆதிசேஷனுக்கே ஊட்டினார், சனீச்வரன்.
ஆதிசேஷன் இதை யோசிக்கலானார்.
"இப்போது புரிகிறதா ஆதிசேஷா! திருமால் உன்னைத் தலை தூக்கவிடவில்லை. அது மட்டுமா? உனக்குப் பரம விரோதி யார்? கருடன்தானே! கருடனை துணைக்கு வைத்து, உன்னை இங்கும், அங்கும் நகரவிடாமல் பயமுறுத்துகிறார். நீ என்றைக்காவது தலை தூக்கி சுதந்திரமாக ஓட முடிய நேரிட்டால், அன்றே உன்னை, கருடனைக் கொண்டு கொத்திப் போடவும் திட்டமிட்டிருக்கிறார். இதை எல்லாம் நீ என்றைக்காவது உணர்ந்து பார்த்திருக்கிறாயா?" என்று மேலும் ஆதிசேஷனைத் தூண்டிவிட்டார், சனீச்வரன்.
சற்று நின்று யோசித்துப் பார்த்த ஆதிசேஷனுக்கு, சனீச்வரன் சொன்னது எல்லாம் முற்றிலும் உண்மை என்றுதான் தோன்றிற்று.
"இப்போது நான் என்ன செய்யவேண்டும் சனீச்வர அண்ணா?" என்று சனீஸ்வரனின் கையைப் பிடித்துக் கொண்டு நன்றி உணர்வோடு கண்கலங்கக் கேட்டார் ஆதிசேஷன்.
"ஒன்றும் செய்ய வேண்டாம். எப்போது உன் மீது திருமால் சந்தேகப்பட்டு, அவதூறாகப் பேசிவிட்டாரோ, இனிமேல் நீ திருமாலைவிட்டு, குறிப்பாக திருமலையை விட்டு முற்றிலுமாக வெளியே வந்துவிடு" என்று சனீச்வரன் சொன்னான்.
ஆதிசேஷனுக்கும் அது நியாயம் எனப்பட்டது.
பெருமாள் தூரத்திலிருந்து, நடக்கிற அத்தனை விஷயங்களையும் கவனித்துக் கொண்டிருந்தார்.
சித்தன் அருள்............. தொடரும்!
This series is creating a nagging doubt. So many lakhs of devotees are going to Tirunallar and other nava-graha temples, with desperation, and hoping they will get some relief from their problems. Since Sansiswara Bhagwan is involved with Kali Purusa, will he really give us relief from our problems, which are mostly the result of Kali only. Of course, we cannot reach any conclusion on this question, till we come to know what happens in the end of this episode. No dis-respect intended.
ReplyDelete