​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 11 February 2016

சித்தன் அருள் - 272 - "பெருமாளும் அடியேனும்" - 40 - ஆதிசேஷனுக்கு சனீஸ்வரனின் உத்தரவு!


​"விதி" என்பது வலிது.  அது யாரையும் விட்டுவிடாது. இறைவனுக்கு மாத்திரம் அது விதிவிலக்கு என்பதெல்லாம் உண்மையல்ல. என்பதை எத்தனையோ புராணங்கள் எடுத்துக் காட்டியிருகின்றன.

நமக்கெல்லாம் ராகு-கேதுக்களால் பிரச்சினை என்று வந்தால், உடனே நாகலிங்கத்திற்கு அர்ச்சனை செய்து வழிபடுவோம்.  பிரார்த்தனை செய்வோம்.

ராகு-கேதுவுக்கு அதிபதியாகிய ஆதிசேஷனுக்கே பிரச்சினை வந்தால்? இப்போது சனீச்வரன் தூண்டுதலின் பேரில் ஆதிசேஷனும் தன் புத்தியை கொஞ்சம் இழந்து கொண்டிருந்தான் என்று சொல்வதை விட, முற்றிலும் தன்னை இழந்துவிட்டான் என்று தைரியமாகச் சொல்லலாம்.

சனீஸ்வரனுக்கு மிகப்பெரும் மகிழ்ச்சி.

கருடனைத்தான் பெருமாளிடமிருந்து பிரிக்க முடியாமல் போயிற்று. குறைந்த பட்சம் ஆதிசேஷனையாவது திருமாலிடமிருந்து பிரித்து வைக்க முடிந்ததே என்ற சந்தோஷம் இருந்தது.

"சனீச்வர அண்ணா! நான் இப்போது என்ன செய்ய வேண்டும்? உடனடியாகச் செய்கிறேன்" என்று உணர்ச்சி பொங்கக் கேட்டார் ஆதிசேஷன்.

"நிறைய காரியங்கள் செய்ய வேண்டியிருக்கிறது. ஆனால்..........." என்று இழுத்தார் சனீச்வரன்.

"என்ன ஆனால்?"

"ஒன்றுமில்லை, கருடாழ்வாரும் முதலில் இப்படித்தான் சொன்னார். ஆனால் சட்டென்று மாறி, திருமால் பக்கம் சென்று விட்டார். அதே போல் ஆதிசேஷனாகிய நீயும் ஏன் குணம் மாறிவிடமாட்டாய் என்ற சந்தேகம் வந்தது" என்றார்.

சனி பகவான் சொல்லி முடிப்பதற்குள் ஆதிசேஷனுக்கு வந்ததே கோபம். "உஷ்! உஷ்!" என்று சீறினார்.

"என்னை மிகத் தவறாக எண்ணிவிட்டீர்கள். நான் தன்மானத்தை மிகவும் நேசிப்பவன். என்னையும் கருடாழ்வாரையும் ஒன்றாக எண்ணி ஒப்பிட்டுப் பார்த்ததற்காக மிகவும் வருந்துகிறேன்" என்று உணர்ச்சி போங்க ஆதிசேஷன் சொன்னார்.

இதைக் கேட்டதும் "பரவாயில்லை! ஆதிசேஷன் கோபத்தின் உச்சகட்டத்தில் இருக்கிறார். நிச்சயம் பெருமாளை விட்டு வெளியே வந்துவிடுவார். பின்னர் திருமாலின் கதி அதோ கதிதான்" என்று எண்ணி மனதிற்குள் சந்தோஷப் பட்டுக் கொண்டார் சனிபகவான். பிறகு மெல்ல ஆதிசேஷனை சமாதானப் படுத்தினார்.

"தம்பி ஆதிசேஷா! எனக்கேற்பட்ட அனுபவம்தான் இப்படிப் பேசவைத்தது. போனது போகட்டும். எதையும் மனதில் வைத்துக் கொண்டு வருந்தாதே! அடிக்கடி உணர்ச்சி வயப்படுவது நல்லதல்ல. முடிந்தால் என்னைப் போல் மௌனமாக இருக்க முயற்சி செய்" என்று ஆதிசேஷன் முதுகைத் தட்டிக் கொடுத்து அவரைக் குளிர்ச்சியாக மாற்றினார்.

சனீஸ்வரனின் இந்த அரவணைப்பு அதிசேஷனுக்கு மிகவும் இதமாக இருந்தது. தங்கக் கிண்ணத்தில் பாலை அருந்திக் கொண்டே ஆதிசேஷன் சனீச்வரன் சொல்வதைக் கேட்டார்.

"நீ இன்று முதல் திருமாலை விட்டுவிட்டதாகவும், இனிமேல் திருவேங்கடவனுக்கு சேவை சாதிக்கப்போவதில்லை என்றும், எல்லாத் தேவர்களுக்கும், கந்தர்வர்களுக்கும், முனிபுங்கவர்களுக்கும் தெரியப் படுத்து" என்றார் சனீச்வரன்.

"அப்படியே ஆகட்டும் அண்ணா!" என்றார் ஆதிசேஷன்.

"இந்த தகவலைக் கேட்டதும் திருமலை வேங்கடவன் அதிர்ச்சி அடைவார். பின்னர் உன்னைச் சமாதானப்படுத்த பலரை தூது அனுப்புவார், வருகின்ற தூதுவர்கள் உன்னிடம் தேனொழுகப் பேசி உன் எண்ணத்தை அடியோடு மாற்றவும் கூடும்."

"அதுதான் என்கிட்டே நடக்காது. நான் முடிவெடுத்தது, முடிவெடுத்ததுதான். என்னை யாராலும் மாற்ற முடியாது" என்று கர்ஜித்தார் ஆதிசேஷன்.

"சரி! சரி! அப்படி திருமாலால்  அனுப்பப்பட்ட தேவதூதர்களிடம் ஒரு கோரிக்கையை விடு" என்றார் சனீச்வரன்.

"என்ன கோரிக்கை அண்ணா?"

"நான் மறுபடியும் திருமலையில் குடியிருக்கும் வேங்கடவனுக்கு தொடர்ந்து பணிவிடை செய்ய வேண்டுமென்றால் முதலில் கருடாழ்வார், திருமாலை விட்டு நிரந்தரமாக விலகவேண்டும் என்று கூறு" என்றார்.

"நல்ல கோரிக்கை அண்ணா. அந்த கருடாழ்வார் திருமாலை விட்டு விலகினால்தான் நான் நிம்மதியாக இருக்க முடியும். இதை அப்படியே திருமால் தூதுவர்களிடம் சொல்லிவிடுவேன். பிறகு?"

"இன்னும் இருக்கிறது ஆதிசேஷா! ஏதோ திருமால் உன்னிடம் உயர்ந்த பற்று கொண்டு திருமலையில் உன்னையே ஏழுமலையாக மாற்றி உன்மீது ஆனந்தமாக அமர்ந்து கொண்டு இருக்கிறாரே, இது ஓர் அடிமைத் தொழில் போல் இல்லையா? எத்தனை காலம் தான் நீ இதை தாங்குவாய்? எனவே இன்று முதல் திருமலையில் மலையாகத் தோற்றமளிக்கும் நீ அந்த இடத்தைவிட்டு சட்டென்று அகன்றுவிடவேண்டும்" என மிகப் பெரிய குண்டைத் தூக்கிப் போட்டார் சனீச்வரன்.

சித்தன் அருள்.................... தொடரும்!

4 comments:

  1. வணக்கம்!
    தங்களிடம் அகத்தியர் அடியவர்களுக்காக ஒரு விடயம் தெரிவிக்க விரும்புகிறேன்! மின்னஞ்சலில் எம்மை தொடர்பு கொள்ள வேண்டுகிறேன்! jayaseelan94@gmail.com

    ReplyDelete
  2. Thiru jayaseealan avargale ...intha thagaval arunachalam ayya virka ilai anaivarum minnachalil thodarbu kollalama....om agatheesaya namah

    ReplyDelete
  3. Thiru jayaseealan avargale ...intha thagaval arunachalam ayya virka ilai anaivarum minnachalil thodarbu kollalama....om agatheesaya namah

    ReplyDelete
  4. மன்னிக்கவும்! அது அருணாச்சலம் அவர்களுக்கானது!

    ReplyDelete