​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 18 February 2016

சித்தன் அருள் - 273 - "பெருமாளும் அடியேனும்" - 41 - பெருமாளின் அதிரடி நடவடிக்கை!


​"அது எப்படி சனீச்வர அண்ணா?" என்றார் ஆதிசேஷன்.

"பொறுமையாக கேள் தம்பி ஆதிசேஷா! நீ இப்பொழுது மனதளவில் என்னோடு இணைந்து விடுகிறாய். ஆனால் உடல் அளவில் திருமலையில் எழுமலையாக கோகர்ணம் முதல் ஸ்ரீசைலம் வரை விரிந்து அமர்ந்து, உன் நடுப்பகுதியில் திருமலை வேங்கடவன் உருவத்தை தூக்கி வைத்துக் கொண்டிருக்கிறாய்" என்றார் சனீச்வரன்.

"ஆமாம் அப்போது இதை நானே விரும்பி ஏற்றுக் கொண்டதுதானே? அதனால் எந்த பாதிப்பு வந்துவிடப் போகிறது?"

"இல்லை. இங்கேதான் ஒரு சூட்சுமத்தை திருமால் செய்துவிட்டார். இதில் நீயும் ஏமாந்து விட்டாய். பரவாயில்லை. இனி அந்த ஏழு மலையாக இருக்கும் நீ அந்த மலையைச் சுருக்கிக் கொண்டு சட்டென்று அந்த இடத்தை விட்டு வெளியே வந்துவிடு."

"வந்துவிட்டால்?"

"திருமால் பொத்தென்று ஏழாவது மலையிலிருந்து கீழே விழுவார். கோனேரி நதிக்கரையில் தான் அவர் பள்ளி கொள்ள வேண்டியிருக்கும். எப்படி என் யோசனை?" என்றார் சனீச்வரன்.

இதைக் கேட்டதும் ஆதிசேஷன் மௌனமானார்.

"என்ன ஆதிசேஷா? இது உனக்குப் பிடிக்கவில்லை என்றால் விட்டு விடு. உன்னை அடிமையாக்கி, கருடாழ்வாரைத் தலையில் தூக்கிவைத்து கொண்டாடுகிறாரே, அந்தத் திருமலைவாசன், அவன் ஒரு நயவஞ்சகன். என் தம்பி ஆதிசேஷன் இனியும் கஷ்டப்படக்கூடாது என்பதற்காக இதைச் சொன்னேன்" என்று ஓரக்கண்ணால் ஆதிசேஷனைப் பார்த்தபடி சனீச்வரன் சொன்னார்,

"நீங்கள் சொல்வதில் தவறே இல்லை. இத்தனை நாள்களாகத் தாங்கிக் கொண்டிருந்த திருமாலை சட்டென்று உதறிவிட்டு வரச் சொல்கிறீர்களே, அதை நினைக்கும் போது சங்கடமாக இருந்தது. உடளவில் அங்கு இருந்து விட்டுப் போகிறேன். மனதளவில் உங்களோடு இருந்துவிடுகிறேனே" என்றார் ஆதிசேஷன்.

"பார்த்தாயா, பார்த்தாயா என்னுடன் வந்து சேர்ந்த சில வினாடிக்குள்ளேயே பேச்சில் வாக்கில் தடம் புரளுகிறாயே, உன்னை எப்படித் திருத்துவது என்றே புரியவில்லை. ம்ம்...ம்ம்ம். உன் தலையெழுத்து. காலாகாலமும் திருமாலுக்கு அடிபணிந்து கருடாழ்வாருக்குக் கட்டுப்பட்டுக் கிடக்க வேண்டும் என்றிருந்தால் அதற்கு நான் ஒன்றும் செய்யமுடியாது" என சனீச்வரன் பொய் கோபத்தோடு பேசினார்.

"கோபப்படாதீர்கள் சனீஸ்வர அண்ணா! இதெல்லாம் நான் எல்லாவரையும் அழைத்து என் நிலையைச் சொன்ன பிறகுதானே? அதை அப்புறம், பார்த்துக் கொள்ளலாம். ஆனால் ஒன்று. ஒருவேளை நான் திருமாலை விட்டு விலகி, கருடாழ்வாருக்கு எதிராக எதுவும் வெளியிடாமல் இருந்து திருமால் யாரையும் தூதுவராக என்னிடம் அனுப்பி வைக்கவில்லை என்றால், என் கதி என்னவாவது?" என்றார் ஆதிசேஷன்.

"அப்பாடி! இப்போதாவது புத்திசாலித்தனமாக ஒரு கேள்வி கேட்டாயே! அதுவே எனக்குப் போதும். அப்படியேதும் நாம் திட்டமிட்டபடி எதுவும் நடக்காவிட்டால் பிறகு என்ன செய்ய வேண்டும் என்பதை நானும் கலிபுருஷனும் திட்டம் தீட்டி உனக்கு எந்த விதச் சேதாரமும் இல்லாமல் காப்பாற்றுவோம். கவலைப்படாதே!" என்று ஆத்சேஷனுக்கு தைரியத்தை ஊட்டினார் சனீச்வரன்.

இந்த அத்தனை சம்பாஷணைகளையும் தன் ஞானக் கண்ணால் அறிந்து, மௌனமாக,  ஆனால் பதற்றமில்லாமல் திருமலைவாசன் கேட்டுக் கொண்டிருந்தார்.

"கலிபுருஷன் எவ்வளவு திறமையாகத் திட்டம் தீட்டி சனீச்வரன் துணை கொண்டு செயல்பட்டுவருகிறான். உண்மையில் இந்த கலிபுருஷனை இப்படியே விட்டுக் கொண்டிருந்தால் இது எங்கு போய் முடியும்? அத்தனை ஜீவ ராசிகளின் மனதிலும் விஷத்தை ஊன்றி, கலிகாலத்தை இப்பொழுதே பலம் பெற செய்துவிடுவான். இதை சற்றேனும் தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கென நடவடிக்கை எடுத்து அதிர்ச்சி வைத்தியம் கொடுத்தால் தான் சரிப்படும்" என்று யோசித்தவர், பின்னர் கருடாழ்வாரை அழைத்து 

"அகத்தியனை உடனடியாக அழைத்து வா!" என்றார்.

கருடாழ்வாரும், அகத்தியர் எங்கிருக்கிறார் என்று விசாரித்து தேடி வந்தார்.

அகத்தியப் பெருமானோ, ஒரு காட்டிற்குள் அமைந்த ஒரு தடாகத்தின் அருகே அமர்ந்து நாராயணனை நினைத்து பூசை செய்து கொண்டிருந்தார்.

சன்னமாக வீசிய தென்றலால், ஏதோ உணர்ந்து திரும்பி பார்க்க, அங்கே கருடாழ்வார் நின்றுகொண்டிருந்தார்.

"வாருங்கள் கருடாழ்வாரே! வந்தனம். நலம் தானே. எங்கே இவ்வளவு தூரம்! என்னை தேடியா? சொல்லிவிட்டிருந்தால், அடியேனே உங்களை தேடி வந்திருப்பேனே? உங்கள் முகத்தை பார்த்தால், வேங்கடவன் உத்தரவால், ஏதோ சேதி சொல்ல வந்தது போல் உள்ளது. அடியேனுக்கு உத்தரவிட்டால், உடனேயே சிரம் மேற்கொண்டு அதை செய்கிறேன்!" என்றார்.

"அகத்தியப் பெருமானே! அடியேன் நலம். ஏழுமலையில் தான் எதுவும் எப்பொழுது எப்படி நடக்கும் என்று தெரியவில்லை. வேங்கடவனின் உத்தரவை தங்களிடம் கூற வந்திருக்கிறேன். வேறு விஷயங்கள் ஒன்றும் இல்லை. வேங்கடவர் உங்களை உடனேயே அழைத்து வரச் சொன்னார். வாருங்கள் போகலாம்" என்று கைகூப்பிய படி கருடாழ்வார் தெரிவித்தார்.

"அடடா! வேங்கடவன் அழைத்து வரச்சொன்னாரா? இப்பொழுதே புறப்படுகிறேன். சற்று முன் வரை அவருக்குத்தான் பூசை செய்துகொண்டிருந்தேன். எப்படிப் பட்ட பெரும் பாக்கியம். வாருங்கள் கருடாழ்வாரே! இப்பொழுதே செல்லலாம்" என்று கூறி நாராயணனுக்கு செய்து கொண்டிருந்த பூசை நிறைவு செய்தபின், புறப்பட்டார்.

இருவரும், மலையில் நடக்கும் விஷயங்களை அளவளாவி பேசிக் கொண்டே செல்லவும், தூரத்தில் கலிபுருஷன் மறைந்திருந்து கவனித்துக்கொண்டிருந்தான்.

திருமாலின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள அவ்வளவு ஆசை.

கருடாழ்வாரைத்தான் பிரிக்க முடியவில்லை. ஆதிசேஷனை சனீச்வரன் துணையுடன் வேங்கடவனிடமிருந்து பிரித்தாகிவிட்டது என்ற சந்தோஷம்.

வேக வேகமாக வந்து பெருமாள் முன் கை கூப்பி, சிரம் தாழ்த்தி, தன் வந்தனத்தை தெரிவித்தார், அகத்தியப் பெருமான்.

"வாருங்கள் அகத்தியரே! நலம் உண்டாகட்டும். தங்களால் ஒரு முக்கியமான வேலை ஒன்று நிறைவேற வேண்டியுள்ளது. அதனால் தான், விஷயத்தை சொல்லாமல் தங்களை இங்கு வரவழைத்தேன்" என்றார் பெருமாள் புன்னகை பூத்தபடி.

"உத்தரவிடுங்கள் வேங்கடவரே! தங்கள் அனுக்ரகத்தால் சிரம் மேற்கொண்டு செய்கிறேன்." என பவ்யமாக கை கூப்பியபடி நின்றார் அகத்தியர்.

எல்லோரும் பெருமாள் என்ன உத்தரவிடப் போகிறார் என்று கேட்பதற்காக ஆவலுடன் காத்திருந்தனர்.

பெருமாளோ, மௌனமாக அகத்தியரை பார்த்துக் கொண்டிருந்தார். மௌனத்தின் அர்த்தத்தை புரிந்து கொண்ட அகத்தியர், கை கூப்பி கண் மூடி மிகுந்த ஸ்ரத்தையுடன் நின்றார்.

இருவருக்கும் இடையில் எந்த சம்பாஷணையும் நடை பெறவில்லை.

சற்று நேர அமைதிக்குப் பின் வேங்கடவர்,

"இதுதான் எமக்கு நீர் செய்ய வேண்டிய வேலை. உடனேயே அதற்கான நடவடிக்கைகளை தொடங்கிவிடும்" என்று உத்தரவிட்டார்.

சுற்றி இருந்த அனைவருக்கும், நாரதரையும் சேர்த்து, ஒன்றும் விளங்கவில்லை.

எல்லோரும் அகத்தியர் என்ன பேசப்போகிறார் என்று காத்திருந்தனர்.

"தன்யனானேன் அடியேன்! இதோ இப்பொழுதே அதற்கான வேலைகளை தொடங்கிவிடுகிறேன்" என்று உரைத்தார்.

சித்தன் அருள்.............. தொடரும்!

3 comments:

  1. அருமை :-) நாங்களும் ஆவலுடன் உள்ளோம்!

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நம

    ReplyDelete