அகத்தியப் பெருமான் அங்கு குழுமியிருந்த அனைவரையும் நோக்கி பேசத்தொடங்கினார். அத்தனை பேரும் பெருமாளுக்கும், அகத்தியப் பெருமானுக்கும் இடையில் நடந்த சம்பாஷணையின் சாராம்சம் என்ன? என்று அறிந்துகொள்ளும் ஆவலில் படபடப்புடன் இருந்தனர்.
"மாமுனியே சித்தர்களுக்கெல்லாம் தலையாய சித்தரே! இந்த விஷயத்தை தாங்கள், தங்கள் திருவாய் மலர்ந்து இந்த தெய்வக் கூட்டத்தில் சொல்லிவிடுங்கள்" என்று அகஸ்தியருக்கு திருமால் அன்பு வேண்டுகோள் விட்டார்.
அகஸ்த்தியப் பெருமான் கூறத் தொடங்கினார்.
"திருமலையில் குடியிருக்கும் திருமாலின் அருளால், அவரது உத்தரவின் பேரில் இங்கு உடனேயே சில நிகழ்ச்சிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த கோனேரிக்கரை புண்ணிய ஸ்தலத்தில் கலிபுருஷனின் கொட்டத்தை அடக்கி ஜனங்களைக் காப்பாற்ற கல்தெய்வமாக அவதாரம் எடுத்த திருபாற்கடலில் பள்ளி கொண்டிருந்த திருமால், பல யுகங்களாகத் தனக்கு பக்க பலமாக இருந்து வரும் "கருடாழ்வாரை"க் கெளரவப்படுத்துவதற்காக, நாரதர், முக்கண்ணன், பிரம்மாவின் விருப்பத்திற்கேற்ப இந்த ஏழுமலையின் ஒரு மலைக்கு "கருடகிரி" என்று பெயர் சூட்டி வாழ்த்துகிறார். இனி, இந்த மலைக்கு "கருடாத்திரி" என்ற பெயரே காலகாலமாக நிலவும். அந்த சிறப்புமிகும் நிகழ்ச்சி இன்னும் சில வினாடிகளில் இங்கு நடக்கும். அதைக் கண்டுகளிக்கவே திருமால் உங்களை எல்லாம் இங்கு வரவழைத்திருக்கிறார். மேலும் இந்த நிகழ்ச்சியின் தொடர்ச்சியாக திருமலையில் அனைத்து நிகழ்ச்சிகளும் பத்து நாட்களுக்கு மிகச் சிறப்பாக கொண்டாடப்படும். இங்கு குழுமியிருக்கும் உங்களுக்கும், இனி வந்து பத்து நாட்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்பவர்களுக்கும் வேங்கடவரின் அருளும், ஆசிர்வாதமும் கிடைக்கும் என்று, திருமாலின் உத்தரவின் பேரில் அடியேன் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
அந்த சபையில் அகஸ்த்தியர் பெருமாளின் விருப்பத்தை அறிவித்த பொழுது கரகோஷம் தாங்க முடியவில்லை. அத்தனை பேரும் பெருமாளை வணங்கி, அவர் அருள் பெற்றனர்.
மேலும் அகஸ்தியப்பெருமான் பேசலானார்.
"இன்னொரு செய்தி தெரியுமா? திருமலை வேங்கடநாதன் யாருடைய மனதையும் புண்படுத்த மாட்டார். வாழ்க்கை என்பது நல்லதும் கெட்டதும் கலந்தது. சோதனையும், சந்தோஷமும் கலந்தது. எத்தனை சோதனை வரினும், அவரை நம்பி அடைக்கலம் புகுந்துவிட்டால், நிச்சயம் அந்த ஒருவரின் வாழ்க்கையை இன்பமயமாக்கிவிடுவார். இங்கு குழுமியிருக்கும் அனைவரும் இந்த பெயர் சூட்டல் படலம் நிறைவு பெற்றதும், இந்த செய்தியை, திருமாலின் தூதுவராக சுமந்து சென்று எங்கெங்கோ வாழ்ந்து கொண்டிருக்கும், தவசிகள், முனிவர்கள், முனி புங்கவர்கள், பக்தர்கள், சித்தர்கள் அனைவருக்கும், தெரிவித்து இந்த பத்து நாட்களுக்குள் திருமால் பாதம் பணிந்து அவர் அருள் பெற்று செல்ல, அழைப்பிதழாக ஏற்றுக் கொள்ளும்படி, கூறிட வேண்டுகிறேன்."
இதை கூறி முடித்ததும் தான் தாமதம், மறுபடியும் மிகுந்த கரகோஷ ஒலி அந்த மலை எங்கும் எதிரொலித்தது.
அகத்தியப் பெருமான், திருமாலை நோக்கி வணங்கி, "அடியேன், எனக்கிட்ட பணியை செவ்வனவே செய்து முடிக்க ஆசிர்வதித்ததற்கு மிக்க நன்றி" எனக் கூறி சிரம் தாழ்த்தி நின்றார்.
எல்லோரையும் நோக்கி எழுந்து வந்த பெருமாள், "கருடாழ்வாரை" அழைத்து ஆரத்தழுவி, ஒரு அரியாசனத்தில் அமர்த்தி, அங்கு குழுமியிருந்த முனிவர்களை நோக்கி புன்னகைக்க, வேத மந்திர கோஷம் முழங்க, கருடாழ்வாரின் திரு நாமத்தை, அந்த மலைக்கு சூட்டினார். பின்னர் அனைவருக்கும், தன் கரம் உயர்த்தி ஆசிர்வாதத்தை வழங்கினார். அது ஒரு கண் கொள்ளாக் காட்சி. பிறகு, அகஸ்தியப் பெருமானை நோக்கி தலை அசைக்க, அவர் கை கூப்பி வணங்கிய பின், அங்கு குழுமியிருந்த அனைவருக்கும் "பத்துநாள் கருடோத்சவம் திருமலையில் நடக்கப்போகிறது" என்ற செய்தியை கொடுத்து அனைவருக்கும் சொல்லச் சொன்னார்.
அனைவரும் அகஸ்தியப் பெருமானின் உத்தரவை சிரம் மேற்கொண்டு அங்கிருந்து புறப்பட்டனர்.
அகத்தியரின் இந்த செய்தி, ஆதிசேஷனுக்கும் வந்து சேர்ந்தது.
"கருடாழ்வாருக்குப் பாராட்டு விழாவா? அதுவும் பத்து நாளைக்கு திருமலையில் வெகு விமரிசையாகக் கொண்டாடப் போகிறார்களாம். இந்திரலோகத்தைச் சேர்ந்தவர்களும், பூலோகத்து மகரிஷிகளும், முனி புங்கவர்களும் சேர்ந்து கொண்டாடப் போகிறார்களாம்" என்ற செய்தியைக் கேட்டதும், ஆதிசேஷன் அரண்டு போனார்.
செய்யாத தவறேதும் செய்துவிட்டோமோ என்று சஞ்சலப்படவும் செய்தார். சனீஸ்வரன் தன்னை தவறான வழிக்குக் கொண்டு செல்கிறாரோ என்ற பயமும் ஏற்ப்பட்டது. இதனால் வார்த்தைகள் வெளிவரவில்லை.
ஆனால், சனீஸ்வரனுக்கு உள்ளூர பயம்தான். எங்கே ஆதிசேஷனும் தன்னை விட்டு விலகிப் போய்விடுவாரோ என்று நினைத்ததால், ஆதிசேஷனை நெருக்கி அணைத்துக் கொண்டார்.
பின்னர், பேசத் தொடங்கினார்.
சித்தன் அருள்................. தொடரும்!