ஆக, இந்த பூமி என்பது சித்தர்கள் நடமாடிய இடம், முனிவர்கள், முனி புங்கவர்கள் நடமாடிய இடம். மகா புருஷர்கள், தாமிரபரணியில் நீராடி, தங்கள் பாபத்தை போக்கிக்கொண்ட இடம். சற்று சில நாட்களுக்கு முன்பு, இதே அகத்தியன், நம்பி மலையில் இரவு 12 மணிக்கு நாடி படிக்கச் சொன்னேன். அங்கே ஒரு விஷயத்தை சொன்னேன். உங்களுகெல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் மறுபடியும் சொல்வதால் தவறில்லை. ஏன் என்றால், எத்தகைய, வளமான புண்ணிய நதி இந்த தாமிரபரணி என்பது உங்களுகெல்லாம் தெரிந்திருக்கவேண்டும். அதற்காக சொல்கிறேன்.
அன்றொருநாள், அத்தனை பாபங்களையும் சுமந்த மனிதர்கள் அனைவரும், அந்தந்த நாட்டிலுள்ள எல்லா புண்ணிய நதிகளிலும் நீராடினர். கங்கையில் பலர், கோதாவரியில் பலர், யமுனையில் பலர், வைகையில் பலர் என்று நீராடி தங்கள் பாபத்தை போக்கினர். கடைசியில், எல்லா நதிகளும் சேர்ந்து, "எல்லா மனிதர்களும் குளித்ததினால் அத்தனை பாபமும் எங்களிடம் சேர்ந்துவிட்டது. நாங்கள் எங்கு போய் பாபத்தை தொலைப்போம்" என்று கேட்ட பொழுது, கங்கையில் போய் குளியுங்கள், அந்த பாபம் கரைந்து போகும் என்றார் விஷ்ணு. இதை சிவபெருமானும் ஆமோதித்தார். பிரம்மாவோ "ஆமாம் ஆமாம்" "ததாஸ்து" என்றார். அப்பொழுது எல்லா நதிகளும் கங்கையில் நீராடி குளிக்கவும், கங்கையே பாபமாயிற்று. அப்பொழுது கங்கை ஓடி வந்து அழுதாள் அகத்தியனிடம்.
"அகத்தியா! அகத்தியா! என்னிடம் எல்லா பாபங்களையும் கொட்டிவிட்டு போகிறார்களே. இவர்கள் இன்னும் பாபங்களை செய்து விட்டு மறுபடியும் என் மீது கொட்டுவார்களே! இதெல்லாம் தாங்கிக்கொள்ளும் சக்தி என்னிடம் இல்லையே. என்னை தலையில் வைத்துக் கொண்டிருக்கும் சிவபெருமான் என்னை கண்டுகொள்ளாமல் இருக்கிறார். நீயாவது என்னை கண்டு கொள்ளக்கூடாதா! பாபத்தை போக்கக்கூடாதா?" என்று அன்று ஒருநாள் கேட்டாள்.
அப்பொழுது அகத்தியன் சொன்னேன்,"அஞ்சிடாதே! எமது தாமிரபரணி நதிக்கரையில் வந்து தாமிரபரணியில் நீராடும் போது உன் சகோதரி, உன் அத்தனை பாபத்தையும் எடுத்துக் கொள்வாள்" என்று சொன்னேன்.
அப்பொழுது கங்கை கேட்டாள் "என் பாபத்தை எல்லாம் எடுத்துக் கொண்டால், தாமிரபரணி அத்தனை பாபத்தை என்ன செய்வாள்?" என்றாள்.
"அதை நான் போக்கி விடுகிறேன்! எனக்கு அந்த சக்தி உள்ளது" என்று சொல்லிய அந்த நாள் இந்த நாள்தான்.
அதைத்தான் அன்றொரு நாள் நம்பிமலையில், நடு இரவில், ஆங்கோர் வாக்குரைக்கும் போது சொன்னேன், "இன்றைய தினம் நம்பிமலையில் ஆற்றில் கங்கை வந்து நீராடி விட்டு சென்று இருக்கிறாள். கீழே இறங்கி பாருங்கள், கீழே வட்டப் பாறையில் அவள் மஞ்சள் பூசி குளித்த மஞ்சள் கூட இருக்கும்" என்று சொன்னேன்.
மறு நாள் காலை சென்று பார்த்தார்கள். ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருந்தது என்று சொன்னார்கள். இது அகத்தியர் செய்யும் ஆச்சரியம் அல்ல. இதுவரை காணப்படாத மஞ்சள் துண்டு அந்தப் பாறையில் எப்படி வந்தது? எந்தப் பெண்ணாலும் அங்கு செல்ல முடியாது, நீராட முடியாது. ஆதிவாசிகளாக இருந்தாலும் கூட பண்ண முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் கங்கை அங்கு வந்து மஞ்சள் நீராடி பாபத்தை போக்கிக் கொண்ட நம்பியாறு, தாமிரபரணி சிற்றாறு. ஆக நதியின் பெருமையை பற்றி சொன்னேன். அந்த நதியில் ஒருமுறை நீராடினால் போதும், அத்தனை தோஷங்களும் போகும். கங்கையே நீராடிய நாள், நல்ல நாள், கங்கை அகத்தியன் உபதேசம் பெற்ற நாள். அகத்தியன் உபதேசம் பெற்ற கங்கை நடந்து வந்து, இந்த தாமிரபரணியில் நீராடுவதற்கு முன்பாக இந்த கோடகநல்லூருக்கு வந்தாள். அங்கு தான் விசேஷம் இருக்கிறது. இதை அன்றைக்கே, அடுத்த நாள் காலையில், நம்பி மலையில் சொல்லலாம் என்று எண்ணி இருந்தேன். ஏதோ ஒன்று உறுத்தல், ஏதேனும் நடந்துவிடலாம், நாளை மன நிலை என்ன ஆகுமோ. எல்லோருக்கும் இதை கேட்கக் கூடிய பாக்கியம் இருக்கிறதோ இல்லையோ. யாம் அறியேன். ஆகவே தான் இப்பொழுதே சொல்கிறேன். இந்த கோடகநல்லுருக்கு கங்கை வந்தாள். தாமிர பரணியில் நீராடி தபசு செய்த இடம் தான், நீங்கள் அமர்ந்திருக்கின்ற இந்த இடம். இதே ஓரத்தில் தான் கங்கை என்ற புண்ணிய நதி தன் தபசு கோலத்தில் உட்கார்ந்து தன் பாபத்தை போக்க வந்த இடம்தான் இந்த கோடக நல்லூர். ஏற்கனவே இன்னொரு சம்பவம் இங்கு நடந்திருக்கிறது. இந்த தாமிரபரணி நதிக்கரை பற்றி எல்லாம் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்லுகின்றேன். இந்த ஊருக்கு சற்று தொலைவில் இருக்கிறது, கரும்குளம் என்ற அற்புதமான ஊர். ஏற்கனவே பலருக்கு சொல்லியிருக்கிறேன். ஏன் என்றால் ஒரு சிலருக்கு இன்னும் தெரியாது என்பதற்காக சொல்ல விரும்புகிறேன். அன்றொருநாள், அகலிகையால் சாபம் விடப்பட்ட இந்திரன் உடம்பெல்லாம் நோயுற்று திண்டாடி துடித்திருக்கும் போது "என் பாபத்தை போக்குவதற்கு என்ன செய்ய வேண்டும்" என முக்கண்ணனிடம் கேட்ட பொழுது, எல்லா தெய்வங்களும் கண்ணை மூடிக்கொண்டு அகத்தியனை கை காட்டி விட்டார்கள். அப்பொழுது அகத்தியன் அந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டேன். இந்திரா கவலைப்படாதே! உனக்குள்ள நோயை தீர்ப்பதற்கு கருங்குளத்திற்கு வா. அங்குள்ள தாமிரபரணி தீர்த்தத்தில் நீராடி, அங்கமர்ந்து கொள். தண்ணீருக்குள் 37 நிமிடம் உட்கார்ந்து கொள். நவக்ரகங்கள் தம்பதிகளாக வருவார்கள்.அங்கு வந்து நவக்ரகங்கள் தம்பதிகளாக வந்து ஆசிர்வதிப்பார்கள். அதில் நீராடிவிட்டு, அப்படியே அவர்கள் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து நமஸ்காரம் செய். உன் தோஷம் எல்லாம் போகும் என்று சொன்னேன். இந்திரன், இதே ஸ்ரீவைகுண்டம் என்கிற புண்ணிய தலத்துக்கு வந்து அந்த நதியில் அகத்தியன் சொன்னபடி நீராடி, கண்ணை விழிக்கிறான், நவக்ரகங்கள் தம்பதிகளாக காட்சி கொடுக்கின்ற முதல் இடம், இன்றுவரை வேறு எங்கும் இல்லை, கரும்குளமே. அந்த கருங்குளத்தில் தான் இன்றைக்கும் கூட தம்பதிகளாய் இருக்கிற நவக்ரகங்கள் இருக்கிறது. அது ஆண்டு வரலாறு பலப் பல. நவக்ரகங்கள் தம்பதிகளாக ஒன்று சேர்ந்து காட்சி கொடுத்த நிகழ்ச்சி வேறு எங்காவது உண்டா! இதற்குப் பிறகுதான் மற்ற கோவில்களில் ஆரம்பித்திருக்கிறார்களே தவிர, முதலிடம், கருங்குளம்தான். தம்பதிகள் அகத்தியன் சொல்படி கேட்டு, அகத்தியன் யாம் அங்கிருந்தேன், இந்திரன் வந்தான், நதியில் நீராடிவிட்டு அப்படியே நமஸ்காரம் பண்ணினான். அவன் அத்தனை தோஷங்களும், அகலிகையால் ஏற்பட்ட தோஷங்கள், விச்வாமித்ரரால் ஏற்பட்ட சாபங்கள் நீங்கியது. அந்த நாளும் இந்த நாள் தான். மேலும் இந்த நாளை பற்றி இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். பல மணிகணக்காக சொல்லிக்கொண்டே போகலாம். வரலாறு தெரியாதவர்கள் இதை புரிந்து கொள்ள வேண்டும். இவர்களாக சட்டத்தை போட்டுக் கொள்வது மனிதர்கள் தானடா! இவர்களுக்கு என்ன தெரியும் சட்டத்தைப் பற்றி. ஆகம விதியை பற்றி ஏதாவது தெரியுமா? எத்தனை விஷயங்களை கண்டு கொண்டாலும், இன்னும் மனிதர்களுக்கு புரியவில்லை. இன்னும் தெரியவில்லை. இவர்கள், ரத்தமும், சதையும் நன்றாக இருக்கும் வரை எதை வேண்டுமானாலும் பேசலாம், பாராட்டலாம். ஆகவே, அத்தனையையும் ஒதுக்கிவிட்டு, இறைவன் நமக்கு நல்லது செய்திருக்கிறான், நல்ல வாக்கு கொடுத்திருக்கிறான். நல்ல ஆரோக்கியத்தை கொடுத்திருக்கிறான். அதற்கு நன்றி சொல்லவேண்டிய நல்ல நாள் இந்த நாள் தான். இந்த புனிதமான ஸ்தலத்துக்கு வந்த பிறகாவது, இனி புத்தி திருந்தி கொள்ளட்டும். இஷ்டப்படி வைப்பதெல்லாம் சட்டம், என்பதை தூக்கி எறியட்டும். மனிதர்களின் ஆத்மா, தெய்வமே. எல்லா ஆத்மாக்களுக்குள்ளும், தெய்வம் இருக்கிறது. அகத்தியன் எந்த ஆத்மாவையும் குறை சொல்லி பேசியது கிடையாது. எல்லோரிடமும் பலமுறை சொல்லியிருக்கிறேன். உன் முன் அமர்ந்திருப்பவன் உன்னை விட பாக்கியசாலியாக இருந்திருக்கலாம், உன்னை விட புண்ணியம் செய்தவனாக இருந்திருக்கலாம். அவனது ஏழ்மையின் காரணமாகவோ, சூழ்நிலையின் காரணமாகவோ சற்று கோபப்பட்டு இருக்கலாம். பேசத்தெரியாமல் பேசியிருக்கலாம். அவனை, அவன் பேசியதை மன்னித்துவிடு. என்று பலமுறை சொல்லியிருக்கிறேன். இன்னமும் அவர்கள் யாரும் கேட்கவில்லை என்றாலும் மறுபடியும் சொல்ல வேண்டும் அல்லவா. ஆகவே புனிதமான நாள், புனிதமான இடம். இந்த இடத்திலே, நாக பிரதிஷ்டை அகத்தியன் சொல்லி, அது நடந்திருக்கிறது. அது மட்டுமல்ல, இந்த கோயிலுக்கு அறங்காவலர்கள் ஆக இருந்து வருபவர்கள் 1547 ஆண்டுகளாக சேவை செய்து வந்தவர்கள். ஒன்றே ஒன்று சொல்வேன். இவர்கள் சும்மா இந்த கோவிலுக்கு சேவை செய்ய வரவில்லை. முன் ஜென்மத்து தொடர்பு இருக்கிறது. இவர்களுக்கு, குலோத்துங்க சோழனும், குலோத்துங்க பாண்டியனும், வர்த்தமான் பாண்டியனும் எழுதி வைத்த செப்புப் பட்டயம் இன்றும் இருக்கிறது. கோவிலின் வட கிழக்கு திசையில், 40 அடிக்கு கீழே 6 செப்புத் தகடுகள் இருக்கிறது. என் கணக்குப்படி இங்கு சுற்று புறத்தில் 40 மைல் அளவுக்கு இந்த கோவிலுக்கு எழுதி வைத்த சொத்துக்கள் உண்டு. அப்படி இந்த கோவிலை நிர்வாகித்து வந்தவர்கள் தான், அடுத்த பிறவி, அடுத்த பிறவி என எடுத்து இப்பொழுதும் நிர்வாகித்து வருகின்றனர். இந்த கோவிலுக்கு கைங்கரியம் செய்பவர்களுக்கு அத்தனை பேருக்கும் அந்த பாக்கியம் இருக்கிறது. யார் யார் இந்த கோவிலுக்கு கைங்கர்யம் செய்து வருகிறார்களோ, யார் யார் ஆத்மார்த்தமாக அபிஷேகம் செய்து வருகிறார்களோ, அவர்களுக்கும் முன் ஜென்ம தொடர்பு உண்டு. இல்லையென்றால் அகத்தியன் இங்கு வந்து ஒரு வாக்கு உரைக்க மாட்டேன். அனைவருக்கும் நிறைய சொத்து சுகம் உண்டு, இன்றும் இருக்கிறது; ஆனால் மறைந்து இருக்கிறது.
சித்தன் அருள்.......... தொடரும்!