நல்ல எண்ணங்கள் தான் வாழ்க்கையை செம்மைப்படுத்தி நம்மை சுற்றி அரணாக நின்று காக்கும். தீய எண்ணங்கள், சிந்தனைகள், சந்தேகத்தை உருவாக்கி நிம்மதியையே கெடுத்து விடும். பலரும் இது போன்று நாடி படிக்க வந்து உட்கார்ந்த உடனேயே அகத்திய பெருமான் அவர்களை, மறைமுகமாகவோ, நேரடியாகவோ எச்சரித்து உடனேயே அனுப்பிவிடுவார். சிலரிடம், ஏதோ ஒரு காரணத்துக்காக கேள்வி மேல் கேள்வி கேட்டு விளையாடிவிட்டு, அவர்கள் திருந்துவார்கள் என்றால் நல் வழி காட்டுவார். அதன் படி நடந்து நல்லது செய்து வாழ்க்கையில் இழந்த சந்தோஷத்தை மீட்டு வாழ்ந்த ஒருவரின் நிகழ்ச்சியை பார்ப்போம்.
நல்லதொரு பதவியில் இருப்பவர், அவர். ஆனால் அழுக்கு பேன்ட், மூன்று அல்லது நான்கு நாட்களாக துவைக்காத சட்டையைப் போட்டுக் கொண்டு எதையோ பறிகொடுத்தவர் போல் என்னிடம் வந்தார்.
"என்ன விஷயம்?"
"என் மனைவியைப் பற்றி கேட்க வேண்டும்".
"கேட்டால் போயிற்று. எது விஷயமாக கேட்க வேண்டும் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?" நிதானமாகக் கேட்டேன்.
"அவள் நடத்தையைப் பற்றி கேட்க வேண்டும்" என்று சொன்னதும் நான் வெல வெலத்துப் போனேன்.
ஏனெனில் வந்த நபருக்கு வயது குறைந்த பட்சம் ஐம்பதுக்கும் மேலிருக்கும். திருமணமாகி முப்பது ஆண்டு காலம் குடித்தனம் நடத்தியிருப்பார். அப்படியிருக்க எதற்காக இப்படியொரு சந்தேகம் என்பது ஒன்று.
இன்னொன்று, இதற்க்கெல்லாம் அகத்தியர் பதில் சொல்வாரா? மாட்டாரா? என்ற பயமும் வந்தது. இதுவரை இப்படிப்பட்ட கேள்வியை யாரும் அகத்தியரிடம் கேட்டதில்லை. நானும் பதில் சொன்னதில்லை.
நான் இதைப்பற்றி யோசித்துக் கொண்டிருக்கும் பொழுதே அவருக்குப் பொறுமை இல்லை. "நாடியில் இதற்கு பதில் கிடைக்குமா? இல்லையா?" என்று சற்று அதிகாரத்தோடு கேட்டார்.
எனக்கு கோபம் வந்தாலும் அடக்கிக் கொண்டு "நீங்கள் நினைப்பது போல் அகத்தியர் ஜோதிடர் அல்ல. உங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய கட்டாயமும் அவருக்கு இல்லை. நீங்கள் போகலாம்" என்றேன்.
இந்த பதிலை அவர் என்னிடமிருந்து எதிர் பார்க்கவில்லை. ஒரு மாதிரியாகிவிட்டார். பிறகு குரலை தாழ்த்திக்கொண்டு "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் கொடுக்கிறேன். தயவு செய்து அகத்தியரிடம் கேட்டுப் பாருங்கள்" என்று அடுத்த பீடிகையை வைத்தார்.
எனக்கு இது கேள்வி எரிச்சலை தந்தது.
"எவ்வளவு பணம் தருவீர்கள்?"
"5000"
"அவ்வளவுதானா?"
"10000"
"பரவயில்லையே. உங்கள் மனைவியின் நடத்தையை பற்றிய கேள்விக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் செலவழிக்கத் தயாராக இருக்கிறீர்கள். இந்த பணத்தை வைத்து அவருக்கு ஒரு புடவை வாங்கிக் கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்":என்றேன்.
அவர் மவுனமானார்.
"இதற்கெல்லாம் அகத்தியரிடமிருந்து பதில் கிடைக்காது. நீங்கள் வேறு இடத்தை நோக்கிச் செல்லுங்கள். பணத்தையோ அல்லது பதவியையோ வைத்து அகத்தியரிடமிருந்து அருள்வாக்கு வாங்க முடியாது" என்று கையெடுத்துக் கும்பிட்டேன்; எப்படியேனும் அந்த நபர் இந்த இடத்தை விட்டு நகர்ந்தால் சரி என்ற எண்ணத்தோடு.
இருந்தாலும், அவர் நகர்வதாக தெரியவில்லை.
"சார்! நானும் எத்தனையோ நாடி ஜோதிடர்களை பார்த்து விட்டேன். பல வருடங்களாக அலைந்து கொண்டிருக்கிறேன். பணம்தான் தண்ணீராக செலவழிகிறது.நிம்மதியான பதில் எங்கும் கிடைக்கவில்லை. அதனால் தான் உங்களிடம் வந்திருக்கிறேன்".
"அதாவது உங்கள் மனைவி கற்புடையவள் என்று சொன்னால் அதை ஏற்க மாட்டீர்கள். நடத்தை கெட்டவள் என்று சொல்ல வேண்டும் என்று எதிர் பார்க்கிறீர்கள் இல்லையா?"
"ஆமாம்?"
"இதிலென்ன சந்தோஷம் இருக்கிறது. அப்படி விரும்பினால் அவளை விட்டு விலகி விட வேண்டியதுதானே"
"முடியாதே!"
"ஏன்?"
"கோடிக்கணக்கான பணம் - சொத்து அவளிடம் இருக்கிறது. தொழில் நிமித்தம் நான் வெளியூரில் வேலை பார்க்கிறேன். வருஷத்திற்கு ஒன்று இரண்டு தடவைதான் வீட்டிற்குப் போகிறேன்" என்றார்.
இனியும் இவரிடம் பேசிப்பயனில்லை, அகத்தியரிடம் நேரடியாகக் கேட்டுவிடலாம் என்று எண்ணி நாடியைப் பிரித்தேன்.
"சில கட்டுப்பாடுகளை விதித்து அதற்கு உடன்பட்டுத்தான் இவனுக்கு கோடீஸ்வரியைத் திருமணம் செய்து கொடுத்தனர். அதற்கெல்லாம் தலையாட்டி விட்டு இன்றல்ல, நேற்றல்ல, முப்பது ஆண்டுகளாக தன மனைவி மீது சந்தேகப்பட்டு ஊர் ஊராக திரிகிறான்".
"அகத்தியனே உண்மையைச் சொன்னாலும் இவன் ஏற்க மாட்டான். இவனுக்குள்ள ஆசையெல்லாம் எல்லோரும் இவன் மனைவியைக் கெட்டவள் என்று சொல்ல வேண்டும் என்பதுதான். இதில் இவனுக்கு ஓர் அற்ப மகிழ்ச்சி. இவனால் வேறு எதுவும் செய்ய இயலாது. இவன் கேட்பதில் ஓர் நியாயம் இருக்கிறது. இவன் மனைவி இவனைத் திருமணம் செய்து கொள்ளும் முன்பு, சூழ்நிலை காரணமாக தன நினைவு இல்லாத சமயத்தில் தவறு ஒன்று நிகழ்ந்திருக்கிறது. இதனை அவளே தன வாயால் சொல்லியிருக்கிறாள்.
என்றைக்கு அவள் இந்த உண்மையைச் சொன்னாளோ அன்று முதல் இவன் நொந்து போனான். அன்றைக்கு ஏற்பட்ட சந்தேகம் இன்று வரை போகவில்லை. இன்னும் சொல்லப் போனால் உனக்குப் பிறந்த முதல் குழந்தையைகூட நீ உன் குழந்தையாக எண்ணவில்லை. யாருக்கோ பிறந்ததாக எண்ணுகிறாய் இல்லையா?" என்று அகத்தியர் நேரிடையாகவே அவனிடம் கேட்டார்.
"ஆமாம்" என்று தலை அசைத்தான்.
"உன் மகன் இல்லை என்று சந்தேகப்பட்டே அவனை நீ வளர்த்து வந்தாய், அவனுக்கு வயது இருபத்தாறு ஆகப் போகிறது. அவனுக்கு ஓர் மணம் முடித்து தனியே வெளிநாட்டிற்கு அனுப்பிவிடு. அதற்கான வாய்ப்புகளும் வந்து விடும். பிறகு உன் சந்தேகம் அத்தனையும் போய் விடும்" என்றார். இது தவிர, அந்த பெண்மணி கெட்டுப் போனதாகவோ அதனால் பிறந்தவன் தான் அவளது மூத்த மகன் என்றோ அகத்தியர் சொல்லவில்லை.
இதைக்கேட்டு சந்தோஷப்பட்டாலும் அவன் சரியான நிலைக்கு வரவில்லை. அரை குறை மனதோடு எழுந்துவிட்டான்.
இது போன்ற நபர்களை ஒரு போதும் திருத்த முடியாது என்று எண்ணிக்கொண்டேன்.
ஐந்து மாதம் கழிந்திருக்கும்.
அந்த நபரும், அவனது மனைவியும் ஒரு நாள் காலையில் என்னைத் தேடி வந்தனர்.
முகத்தில் புன்னகை இருந்தது. அப்பாடி! நம்மை இனிமேல் ஏடாகூடமாக கேள்வி கேட்டு சங்கடப்படுத்த மாட்டார்கள் என்று ஒரு அற்ப சந்தோஷம் ஏற்பட்டது.
தட்டு நிறைய பழங்களை வைத்து நமஸ்காரம் செய்த அந்த குடும்பத்தினர் பிறகு கீழே அமர்ந்தனர்.
"என்ன விசேஷம்? பையனுக்கு திருமணம் நிச்சயம் ஆகி விட்டதா?" என்றேன்.
"இல்லை"
"பிறகு"
"உங்களைப் பார்க்க வந்தோம். நான் சொன்ன சொல் எங்க குடும்பத்தை கடந்த முப்பது வருஷமாக எப்படியெல்லாம் பாதித்து விட்டது என்பதை இப்போதுதான் நான் உணர்கிறேன்" என்றாள் அவரின் மனைவி.
"என்னம்மா விஷயம்?"
"நான் நல்லவளா? கெட்டவளா? என்று இவரிடம் அகத்தியரே விளக்கி விடட்டும்" என்றாள்.
இதென்ன புது கதையா இருக்கிறது என்று எண்ணிக் கொண்டேன். நாடி பார்க்க எனக்குத் தோன்றவே இல்லை.
"அகத்தியரை நான் முழுமையாக நம்புகிறேன் என் முன்னால் அகத்தியர் எதைச் சொன்னாலும் அதை ஏற்கிறேன். தயவு செய்து படியுங்கள்" என்றார் அந்தப் பெண்மணி.
நடப்பதை யார் தடுக்க முடியும்? விதியை மாற்ற அகத்தியர் முன் வந்தால் சரி, என்று மனதில் திடம் கொண்டு நாடியைப் பார்த்தேன்.
"பருவம் அடைவதற்கு முன்பு, தன நினைவு இல்லாமல் இவள் இருந்த போது இவள் வீட்டு வேலைக்காரன் தொட்டிருக்கிறான். இது தான் நடந்து இருக்கிறதே தவிர, வேறு எந்த தவறும் நடக்கவில்லை. இந்த சம்பவம் இவள் மனதை பெருமளவு பாதித்திருப்பதால் எல்லோரிடமும் அதை வெளிபடையாகவே சொல்லியிருக்கிறாள்.
திருமணத்திற்கு பின்பு கணவரிடம் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும் என்றெண்ணி இந்த பழைய சம்பவத்தைச் சொன்னதால் இவளது கணவன் நொந்து போனான். நடந்த சம்பவம் பருவமடைவதற்கு முன்னால் நடந்திருந்தாலும் அதை இவளது கணவன் மனம் ஏற்கவில்லை.
இவனுக்கு பிறந்த முதல் குழந்தையின் ஜாடை வித்யாசமாக இருப்பதாக எல்லோரும் சொன்னதால், மேலும் அவனுக்கு சந்தேகம் அதிகமாயிற்று. அதுவே வியாதியாக மாறிற்று. இதுதான் உண்மை. இவள் கெட்டுப் போகவுமில்லை எந்த தவற்றையும் பின்பு செய்யவும் இல்லை" என்று அகத்தியர் அடித்து சொன்னதின் பேரில் அவன் ஏற்றுக் கொண்டான்.
"அப்பாடி" என்று பெருமூச்சு விட்டாள், அந்தப் பெண்.
பிறந்த அந்த குழந்தை தன மகன்தான் என்று எண்ணி, அவனை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டான்.
"இப்பொழுதுதான் நான் முழு மனிதனாக மாறினேன்' என்று அவன் சொன்னதையும் நான் கேட்டேன்.
"வேறு யாரிடமும் ஜோதிடம் கேட்டு மீண்டும் மனதைக் குழப்பிக் கொண்டு அலையை மாட்டீர்கள்" என்றேன்.
"நிச்சயமாக போக மாட்டேன்" என்றார், உற்சாகத்தோடு.
பின்பு அந்த பெண்மணியிடம் சொன்னேன். "எல்லோரும் என்றைக்கும் ஒரு நாள் ஏதாவது தவறு செய்ய நேரிடும் இது அவரவர் சந்தர்ப்ப சூழ்நிலை, மனதை பொறுத்தது நீங்கள் உண்மையாக இருக்க வேண்டும் என்று முதலிரவில் சொன்னது முப்பது ஆண்டு கால வாழ்க்கையை பாதித்து விட்டது. எனவே பேசுவதில் எச்சரிக்கை இருக்கட்டும்" என்றேன்.
தங்கள் வாழ்க்கையில் ஒளியேற்றிய அகத்தியரை வணங்கிவிட்டு ஆனந்தமாக அவர்கள் புறப்பட்டு சென்றனர்.
நிம்மதியை நாம் நமக்குள் தான் தேடிக்கொள்ளவேண்டும், வெளியே தேடினால் தொலைந்துதான் போவோம் என்று எனக்கு அன்று புரிந்தது.
சித்தன் அருள்................... தொடரும்!