​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 9 May 2013

சித்தன் அருள் - 123

நாடி பார்க்க வருபவர்களில் பலவித குணங்களை கொண்டவர்கள் உண்டு. அகத்தியர் சொல்வதை அப்படியே சிரம் மேற்கொண்டு செய்து நன்மை அடைபவர் ஒரு விதம்.  அகத்தியரை மதித்தாலும் அவர் வார்த்தையை மதிக்காமல் தனக்கு தோன்றியபடி செய்து, மிகப் பெரிய பிரச்சினையில் மாட்டிக்கொண்டு, பின்னர் என்ன செய்வதென்று அறியாமல், அவரிடமே ஓடி வந்து சரணடைந்து, பின்னர் அந்த ச்ரமங்களை சிலகாலம் கூட அனுபவித்து கழித்து, நிறைய பரிகாரங்களை செய்து மீண்டும் நல்வழிக்கு வந்து வாழ்க்கையை புரிந்து கொண்டு நடப்பவர்கள் இன்னொரு விதம்.  எத்தனை பெரிய தவறை செய்தாலும், "சரணம்" என்று வந்துவிட்டால், சித்தர் கூட உதவுவார், என்பதற்கு உதாரணமாக ஒரு நிகழ்ச்சியை இன்று பார்ப்போம்.

அன்றைய தினம் மிக அமைதியாக விடிந்தது.  நிதானமாக பூசை, த்யானம் போன்றவை முடித்துவிட்டு, நாடியுடன் வெளியே ஹாலில் வந்து அமர, 

காத்திருந்தவர்களில் 

"என் எதிர்காலம் பற்றி அகத்தியரிடம் நாடியில் கேட்டுச் சொல்ல முடியுமா?" என்று ஓர் இளம் பெண் என்னிடம் கேட்டாள்.

நாடியில் "கல்வியறிவு அற்புதம், நல்ல தொழிலும் வெளிநாட்டில் அமையும், ஆனால் நாகப் பிரதிஷ்டையை ஆகம விதிப்படி நாற்பத்தி ஐந்து நாட்கள் பூசித்து செய்யவும்" என்று அகத்தியரிடமிருந்து பதில் வந்தது.

கொஞ்சம் நாத்திகவாதம் குணத்தில் கொண்டவள் போலும், சற்று யோசனைக்கு பின்,

"இந்த பிரார்த்தனைகளைச் செய்யாவிட்டால் என்ன ஆகும்?" என்று அந்தப் பெண் எதிர் கேள்வி கேட்டாள்.

"ஒன்றும் ஆகாது" "விதி" தன் கடமையைச் செய்யும்.  எல்லாம் இருந்தாலும் புத்திர தோஷத்தால் ஏதேனும் ஒரு குறை ஏற்ப்படும்.  அவ்வளவுதான்" என்றார் அகத்தியர்.

"நானாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்.  பயந்தோ அல்லது தலையெழுத்தே என்று நடுங்கி இந்த பிரார்த்தனையைச் செய்வேன்.  ஆனால் இதில் நம்பிக்கை இல்லாதவர்களும், வெளிநாட்டினரும், மற்ற மதத்தை சேர்ந்தவர்களுக்கும் இந்த பிரார்த்தனை மீது நம்பிக்கை இல்லையெனில் அவர்களுக்கும் இந்த தோஷம் ஏற்படுமா?" என்று மிகத்தெளிவாக கேட்டாள்..

"நீ அகத்தியனை நாடி வந்தாய், உன் எதிர்காலப் பலனைச் சொன்னேன். என்னை வந்து கேட்பவர்களுக்கு மட்டுமே வழியைக் காட்டுவேன்.  கேட்காதவர்களுக்கு நான் ஏன் வாயைத் திறக்கப்போகிறேன்.  உனக்கு புத்திர தோஷம் உண்டு.  அவ்வளவுதான் என்னால் இப்போது சொல்ல முடியும்.  இந்த தோஷம் போக பரிகாரம் செய்வதும், செய்யாததும் உன் விருப்பம்.  அகத்தியன் ஒரு போதும் கட்டாயப்படுத்த மாட்டேன்" என சுருக்கமாகவே முடித்துக் கொண்டார்.

அவள் சிறிது நேரம் தயங்கினாள்.  மௌனமாக் இருந்தாள். அப்புறம் என்ன நினைத்தாளோ, தெரியாது.  சட்டென்று எழுந்து சென்றாள்.

இரண்டு மாதம் கழிந்தது.

"நான் தான் அந்தப் பெண்ணின் தந்தை" என்று கூறி நடுத்தர வயதைச் சேர்ந்தவர் என்னிடம் வந்தார், ஒரு கடிதத்தை கொடுத்தார்.  வாங்கிப் பிரித்து படித்தேன்.

"அகத்தியர் மகானை நான் மதிக்கிறேன்.  ஆனால் பரிகாரங்களைச் செய்யாமல் வாழ்ந்து என்னுடைய புத்திர தோஷத்தை முறியடித்துக் காட்ட விரும்புகிறேன்.  ஏனெனில் எனக்கும், என்னை மணந்து கொள்ளப் போகிற அமெரிக்கா கணவருக்கும் பரிகாரம், தெய்வ நம்பிக்கை போன்ற விஷயங்களில் நம்பிக்கை இல்லை.  தாங்களே வியக்கும் வண்ணம் ஒரு அழகான குழந்தையைப் பெற்றெடுத்து தங்களிடம் வந்து காட்டப் போகிறேன், எந்த விதப் பரிகாரமும் செய்யாமல்" என்று எழுதியிருந்தாள்.

இதை படித்ததும் எனக்கு அதிர்ச்சியாக இருந்தது. ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று பதறிப் போனேன்.  "அகத்தியரும், நீங்களும் தான் அவளுக்கு ஆசி வழங்க வேண்டும்" என்று நா தழுதழுக்க அவள் தந்தை என்னிடம் கேட்டுக் கொண்டார். அன்றைக்கு இருந்த சூழ்நிலையில் நான் இந்தக் கடிதத்தை பொருட்படுத்தவே இல்லை.  அப்படியே விட்டு விட்டேன்.

ஒன்றரை ஆண்டுகள் கழிந்தது. அவளுக்கு  ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்திருப்பதாகவும், குழந்தையும் தாயும் ஆரோக்கியமாக இருப்பதாகவும் அவள் தந்தை வந்து சொல்லி விட்டுப் போனார்.

இதற்கு என்ன அர்த்தமெனில், புத்திர தோஷத்திற்கு உரிய எந்த விதமான பரிகாரமும் செய்யாமல் தான் அழகான குழந்தையை அமெரிக்காவில் பெற்றெடுத்து விட்டதால் அகத்தியரின் வாக்கு பொய்த்து விட்டது என்பதை இலைமறை காயாக தன் தந்தையை விட்டு எனக்கு சொல்லச் சொல்லி இருக்கிறாள்.

இதற்கும் நான் வருத்தமோ, கோபமோ படவில்லை.  அவள் யாரோ நான் யாரோ, எதற்காக அவள் மீது கோபப் பட வேண்டும்?  அகத்தியருக்கும், அவளுக்கும் உள்ள தொடர்பு இது, என்று விட்டு விட்டேன்.

மூன்று வருடம் கழிந்தது.

திடீரென்று ஒருநாள் அவள் தந்தை வெகு வேகமாக என்னிடம் வந்தார்.

"அவள் தன் குழந்தையோடு உங்களைச் சந்திக்க வருகிறாள்.  அவள் இப்போது ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டிருக்கிறாள் போல் தெரிகிறது.  என்னிடம் அதைப் பற்றி ஒன்றுமே கூறவில்லை.  நீங்கள் அவளுக்கு உதவ வேண்டும்" என்றார்.

"குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லையே?"

"இல்லை என்றுதான் தோன்றுகிறது!"

அவள் எப்படி இருக்கிறாள்?"

"டென்ஷனாக இருக்கிறாள்.  நிதானமாக பேசவில்லை."

"சரி! அவள் கணவர்?"

"அவர் அமெரிக்கர்! அவள் அவரை அழைத்து வரவில்லை".

"சரி! நாளைக்கு மதியம் வரச் சொல்லுங்களேன்" என்று அவரை வாசல் வரை சென்று வழி அனுப்பி வைத்தேன்.

எதற்காக இப்போடியொரு டென்ஷன்? என்று எனக்கும் புரியவில்லை.  அவளைப் பற்றி நாடியில் கேட்கவும் மனமில்லை.  விட்டு விட்டேன்.

மறுநாள் மாலை.

அவள் தனது மூன்று வயது ஆண் குழந்தையை தூக்கிக் கொண்டு கலங்கிய விழிகளோடு உள்ளே நுழைந்தாள்.

வந்தவளை உட்காரச் சொன்னேன்.

ஆனால் அவளால் உட்கார முடியவில்லை.  முகத்தைப் பொத்திக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

அவளது குழந்தைப் பார்த்தேன்.  பார்க்க மிக அழகாக இருந்தது.  வெளியில் பார்ப்பதற்கு ஆரோக்கியமாக இருந்தாலும், ஏதோ ஒரு பெருங்குறை இருப்பது போல் என் கண்ணில் தென்பட்டது.

இதற்கிடையில் அவளே குழந்தையைக் காட்டி பேச ஆரம்பித்தாள்.

"இவன் ஒன்றரை வயது வரை நன்றாக பேசிக் கொண்டும், விளையாடிக் கொண்டும்தான் இருந்தான்.  அம்மா! அப்பா! என்று கூட பேசினான்.

ஆனால்,

ஒரு நாள் சட்டென்று எதையோ கண்டு மிரண்டு போனது போல் தென்பட்டான்.  என்னவெல்லாமோ செய்து பார்த்தேன்.  இவனுக்கு பேச்சே நின்று போனதால் மந்தமாகிப் போனான்.  பயந்து போன நான், டாக்டரிடம் அழைத்துப் போனேன்.

குழந்தையைப் பரிசோதித்து விட்டு, இந்தக் குழந்தைக்கு மூளை நரம்பில் கோளாறு ஏற்பட்டிருக்கிறது.  இதனால் இவனுக்கு நிறைய மருத்துவச் சிகிர்ச்சை தேவைப்படும்.  பதினைந்து வயது குழந்தையாகும் போது இரண்டு வயது குழந்தைக்குரிய மூளை வளர்ச்சிதான் இருக்கும்.  வேறு வழியில்லை" என்று கை விரித்து விட்டார்.

"இப்படியொரு அதிர்ச்சியை நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை.  என் குழந்தையை அகத்தியர் தான் எப்படியாவது காப்பாற்ற வேண்டும்" என்று அழுதாள்.

மீண்டும் அந்தக் குழந்தையை உற்றுப் பார்த்தேன்.

"கூப்பிட்டால் திரும்பி பார்க்க முடியாது.  பசியெடுத்தால் வாய் திறந்து கேட்க முடியாது.  பாத்ரூம், சிறுநீர் வருவதை அவனால் சொல்லத் தெரியாது.  உடம்பில் வலி ஏற்பட்டால் அதைச் சுட்டிக் காட்டி பெற்றோரின் உதவி கேட்க முடியாது.

மற்ற குழந்தைகளிடமிருந்து பிரித்துதான் தனியாக அவனுக்கு கல்வி சொல்லித் தரவேண்டும்.  சில சமயம் அவன் என்ன செய்கிறான் என்பதை அவனால் புரிந்து கொள்ள இயலாது.  பேச முடியாத குறை, எதையும் சண்டை போட்டு போராடி பெற்றுக் கொள்ள முடியாத ரகம்; இதனால் தனைத்தானே கடித்துக் கொள்வது......" என்று அவள் கதறியபடி கொட்டித்தீர்த்தாள்,

அவள் தனது குழந்தையைப் பற்றிச் சொல்லும் பொழுது உண்மையில் அப்போது நான், நானாக இல்லை.  துடித்துவிட்டேன்.

குழந்தையே இல்லை என்றால் கவலை இல்லை.  குழந்தை பிறந்தும் இப்படி ஒரு நிலை ஏற்பட்டால், வாழ்க்கையில் நிம்மதியே இல்லை என எண்ணத்தான் தோன்றியது.  அவளுக்கும், அந்தக் குழந்தைக்கும் என்னால் ஒரு சொட்டுக் கண்ணீர்தான் விட முடிந்தது.

மனம் நிறைய வேதனையுடன் அகத்தியரிடம் வேண்டிக் கொண்டேன்.  அகத்திய பெருமானே நல்வாக்கு கொடுங்கள் என்று பிரார்த்தனை செய்தபடி நாடியைப் பிரித்தேன்.

"இது அவரவர் கர்மவினை" என்று சட்டென்று முடித்துக் கொண்டார் அகத்தியர்.  வேறு எதுவும் வாக்கு வரவில்லை.  பல முறை பிரார்த்தனை செய்து நாடியை திறந்த போதும் அகத்தியர் எதுவும் சொல்லவில்லை.

புத்திர தோஷம் பற்றி முன்னதாகவே சொன்ன பிறகும், அதை ஏற்காமல் தன்னை அவமதித்ததால் அவளுக்கு அருள்வாக்கு சொல்லாமல் அகத்தியர் கோபமாக இருப்பதை அறிய முடிந்தது.

அவளிடம் இதை தெரிவித்து மானசீகமாக அகத்தியரிடம் மன்றாடி, மனம் உருகி பிரார்த்தனை செய்யுமாறு கேட்டுக் கொண்டேன்.  நானும் என்னுடைய பங்கிற்கு அகத்திய பெருமானை மனம் உருகி வேண்டினேன்.

"தவறு செய்தவர்கள் மனம் திருந்தி வந்துள்ளனர்.  அவர்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டிய அகத்தியரே கோபப்பட்டால் அது முறையாகுமா? மனம் திருந்தி வந்தவர்களுக்கு உதவவேண்டியது அகத்தியரின் கடமை...." என்று பலவாறாக மன்றாடி வேண்டினேன்.  அதன் பிறகு அகத்தியர் கோபம் தணிந்து பதில் சொன்னார்.

"அன்றைக்கே யாம் சொன்னோம்.  ஆங்கோர் இன்னல் தீர நாகம் தன்னை ஆகம விதிப்படி நாற்பத்தைந்து நாட்கள் பூசித்து அருகிலுள்ள கோவிலில் வைக்கச் சொன்னேன்.  கேட்டாள் இல்லை.  இப்போது வந்து புலம்புவதில் என்ன பயன்?"

"அகத்தியன் தெய்வமல்ல.  ஆனால் நல்வழியைக் காட்டுபவன்.  பிரார்த்தனை செய்தால் விதிமகளிடம் போராடி விதியை மாற்றிக் கொள்ளலாம் என்று அற நிலைக்கு வித்திடுபவன்.  இந்தச் சொல்லை அவமதித்ததால் ஏற்பட்ட விளைவுதான், இது.  இனி என்ன செய்வது?  சில பிரார்த்தனைகளை இன்னும் பதினைந்து ஆண்டு காலம் தொடர்ந்து செய்யத்தான் வேண்டும்.  இந்த நிலையிலிருந்து இந்தக் குழந்தை பிழைத்து மாறி விடும் என்றாலும் அவனுக்கு திருமணம் என்பது ஒரு கேள்விக் குறியாகவே இருக்குமே" என்று சொன்ன அகத்தியர், "அகத்தியனை இவள் நாடி வந்ததால் இவளது குழந்தையை மற்ற குழந்தை போல் மாற்ற முயற்சிக்கிறேன்" என்றார்.

இதை கேட்டதும் தான் அவளுக்கு உயிரே வந்தது.  ஆனந்தத்தினாலோ அல்லது நல்ல வாழ்க்கை கிடைக்க அகத்தியரே முயர்ச்சிப்பதினாலோ பரவசப்பட்டாள்.

ஐந்து நிமிட அவகாசத்திற்கு பின் அகத்தியர் ஜீவநாடியை மீண்டும் படித்த பொழுது........

"அந்தக் குழந்தை காலில் அணிந்திருக்கும் ஷூவை முதலில் கழற்றி வாசலில் தூக்கி ஏறி" என்றார்.

தொடர்ந்து கூறும் போது, "உன் அமெரிக்க வேலைக்காரியை உடனடியாக மாற்று.  இதனால் தான் பிரச்சினையே உருவாகியிருக்கிறது" என்றார்.

மூளை வளர்ச்சியற்ற அவளின் குழந்தைக்கு மூலிகை மருந்து ஏதாவது தருவார் என்றுதான் நானே எதிர் பார்த்தேன். ஆனால் அகத்தியர் வேறு விதமாகச் சொன்னது ஆச்சரியமாக இருந்தது.

"குழந்தையின் காலில் இருந்த "ஷூ"வைக் கழற்றி வெளியே வீசுக என்று சொன்ன போது அகத்தியரை அவமதித்து விட்டதாக எண்ணித் தான் இப்படிச் சொல்கிறாரோ என எண்ணிக் கொண்டேன்.

ஆனால்

அந்த "ஷூ"வை அந்த குழந்தை அணியும் போதெல்லாம் ஒரே பதற்றமாக பயந்து கொண்டிருக்கும்.  அந்த "ஷூ"வின் அடியிலிருந்து வெளிவரும் சப்தம் அந்தக் குழந்தையை அச்சுறுத்த வைக்கும் என்பதை பெற்றவர்களும் உணரவில்லை.  மற்றவர்களுக்கு தெரியவில்லை.

அந்தக் குழந்தை மற்ற "ஷூ" அணியும் பொழுது எந்த சப்தமும் வராது.  அதனால் அது இஷ்டப்படி குதித்து விளையாடிக் கொண்டிருக்கும்.  இந்த சப்தம் வரும் "ஷூ"வின் அடிப்பாகத்தில் உள்ள செப்புத் தகட்டில் அதர்வண வேதத்தின் பாதிப்பு இருப்பதால் அது குழந்தையை பயமுறுத்திக் கொண்டிருக்கிறது என்பதை அகத்தியர் ஒருவரால், மட்டுமே அன்றைக்குக் கண்டுபிடிக்க முடிந்தது.

அகத்தியர் சொன்னபடி அவள், அந்த "ஷூ"வைக் குழந்தையின் காலில் இருந்து கழற்றியதும் குழந்தையின் முகத்தில் ஆறுதல் வந்தது.  சிறுது நேரம் கழித்து குஷியாக விளையாட ஆரம்பித்தது.

"எதற்காக அகத்தியர் "ஷூ"வைக் கழற்றச் சொன்னார்?" என்று அவள் கேட்டாள்.

"அந்த "ஷூ"வுக்கு அடியில் குழந்தைகளை குஷிப் படுத்துவதர்க்காக வைக்கப்பட்ட இசைக்கருவியில் ஒரு சிறு செப்புத் தகடு எப்படியோ வந்துவிட்டது.  அது அதர்வண வேதத்தின் பாதிப்பைக் கொண்டது.  அது குழந்தையை பலவாறு பயமுறுத்திக் கொண்டிருந்தது.  அதை எடுத்து விட்டதால் இப்போது குழந்தை சந்தோஷமாகக் காணப்படுகிறது" என்று அகத்தியர் சொன்னதை சொன்னேன்.

இதைக்கேட்டு அதிர்ந்து போன அவள், "இந்த ஷூவை வாங்கி ஒன்றரை வருஷம் ஆகிறது.  ஆனால், அதிகமாக உபயோகப்படுத்துவதில்லை.எப்போதாவது ஒருமுறை தான் பயன்படுத்துவோம்.  நல்லவேளை இப்போதாவது தெரிந்ததே.  அகத்தியருக்கு என் நன்றிகள்" என்றாள்.

"எல்லா ஷூவிலும் இம்மாதிரி இருப்பதில்லை.  ஏதோ தப்பித் தவறி வந்திருக்கிறது.  இனிமேல் பயப்பட வேண்டாம்.  இப்பொழுதே குழந்தை பாதி குணம் ஆகிவிட்டதாக எண்ணிக் கொள்ளவும்" என்றேன்.

"அது சரி! அமெரிக்காவிலும் வேலைக்காரியையும் உடனே மாற்றுக என்றாரே? அதற்கு ஏதாவது காரணம் உண்டா?" என்று கேட்டாள்.

இதற்கு அகத்தியர் பதில் அளிக்கும் போது"அதை இப்போது முழுமையாக உரைக்க முடியாது.  அது எப்படி என்பதை உங்கள் வீட்டு ஒளிப்பட நகலை பார்த்து தெரிந்து கொள்க" என்று சுருக்கமாக முடித்துக் கொண்டார்.

அவளால் பொறுமையாக இருக்க முடியவில்லை.  உடனடியாக அமெரிக்காவிலுள்ள தன் கணவருக்கு தொடர்பு கொண்டு, வீட்டிலுள்ள வீடியோவை போட்டு பார்க்க சொன்னாள்.

கணவன்-மனைவி இருவரும் வேலைக்குச் சென்று விடுவதால் குழந்தையை கண்காணிக்க வேலைக்காரியை நியமித்து செல்வது வழக்கம்.

அப்படித்தான் அவர்களும் ஒரு வேலைக்காரியை தன் குழந்தைக்காக ஏற்பாடு செய்திருந்தனர்.  அந்தக் குழந்தை சற்று அடம் பிடித்ததால் அந்தக் குழந்தையை பயமுறுத்தி மிரட்டி அடக்கப் பார்த்து இருக்கிறாள் அந்த வேலைக்காரி.  பெற்றோர் இல்லாத சமயத்தில் அந்த வேலைக்காரி மிரட்டி பயமுறுத்தி குழந்தைக்கு உணவு கொடுத்ததால், அந்த குழந்தை மிரண்டு அதிர்ச்சி அடைந்து மூளை நரம்பு பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது பின்னர் தான் தெரிய வந்தது.

அவள் கணவர், அந்த வேலைக்காரிக்குத் தெரியாமல் வைத்திருந்த கண்காணிப்பு வீடியோவில் அந்த வேலைக்காரியின் மிரட்டல் நடத்தை பதிவாகியிருந்ததை பார்த்துவிட்டுச் சொன்னார்.

அடடா, இத்தனை நாளுக்கு இதைப் பார்க்காமல் விட்டு விட்டோமே என்று அங்கலாயித்துக் கொண்டாள்.  இனிமேல் அந்த வேலைக்காரி வீட்டிற்கு வர வேண்டாம் என்றும் இங்கிருந்தபடியே தன் கணவருக்கு உத்தரவும் போட்டாள்.

அந்த "ஷூ" அணிந்திருந்ததால் ஏற்பட்ட மன அழுத்தம், வேலைக்காரி அந்தக் குழந்தையை தன் கட்டுப்பாடிற்குள் கொண்டு வர மிரட்டியது ஆகியவை அந்தக் குழந்தைக்கு மூளைச் சிதைவை உண்டு பண்ணியது என்பதை அகத்தியர் நாசூக்காக தன் நாடி மூலம் அவளுக்கு எடுத்துக் காட்டியது எனக்கு எல்லாமே பெரும் ஆச்சரியம்.

அகத்தியரிடம் அவள் கெஞ்சிக் கேட்டாள், "இனிமேலாவது என் குழந்தை சரியாகி விடுவானா?"

இதற்கு அகத்தியர் சிரித்துக் கொண்டே இருந்தார்.  பதில் எதுவும் வரவில்லை.

"ராமேஸ்வரம் சென்று ஆங்கோர் தர்ப்பணம் செய்துவிட்டு வா மேற்கொண்டு உரைக்கிறேன்" என்று முடித்துக் கொண்டார்.

ஆயிரம்கோடி நமஸ்காரங்களை அகத்தியருக்குச் சொல்லிவிட்டு, ராமேஸ்வரம் போய் விட்டு வருவதாக கிளம்பினாள்.

அவள் சென்று வெகுநேரம் ஆனா பின்பு கூட நான் இயல்பான நிலைக்கு வரவில்லை.  எப்படி அகத்தியரால் இதையெல்லாம் எடுத்து காட்ட முடிகிறது என்று மெய்மறந்து போனேன்.  இயல்பான நிலைக்கு வர எனக்கே பலமணி நேரம் ஆயிற்று.

பத்து நாட்களுக்குப் பின்.......

அவள் மறுபடியும் என்னைப் பார்க்க தன் குழந்தையோடு வந்தாள்.  அவள் முகத்தில் கொஞ்சம் தெளிவிருந்தது.  ராமேஸ்வரம் சென்று தர்ப்பணம் செய்து விட்டதாகச் சொன்னாள்.  தான் அமெரிக்கவாசி என்று தெரிந்ததால் நிறைய பணம் கேட்டதாகவும் ஆனால் மந்திரங்களை உருப்படியாகச் சொன்னார்களா என்பது தனக்குத் தெரியாது என்றும் சொன்னாள்.

எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டு அகத்தியரின் நாடியைப் புரட்டினேன்.

"விதியை வெல்ல பிரார்த்தனை உதவும் என்கிற உண்மையை இப்போதாவது அவள் தெரிந்து கொண்டாளே, அது போதும்.  நாகப் பிரதிஷ்டையை நல்ல படியாக பூசித்து, கோயிலில் வைக்கட்டும்.  அதோடு வல்லாரை, கருந்துளசியை பொடி செய்து தினம் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து அந்தக் குழந்தை சாப்பிட்டு வரட்டும், படிப்படியாக குழந்தை குணமடைவான்" என்றார்.

பன்னிரண்டு வருஷ காலம் ஆயிற்று.

இப்போது அவள் பையன் மற்ற குழந்தைகளுக்கு இணையாகப் படிக்கிறான்.  ஓட்டப்பந்தயம் ஓடுகிறான்.  ஆரோக்கியமான சூழ்நிலைக்கு ஏறக்குறைய வந்துவிட்டான், என்று அவளும் சொல்கிறாள்.

அவள் சார்பில் அவளது தந்தையும் அடிக்கடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு சொல்லியும் வருகிறார்.

இன்னும் நான்காண்டு காலத்தில் அவன் முழு மனிதனாக முற்றிலும் மாறிவிடுவான் என்று அகத்தியரும் வாக்கு அளித்திருப்பதால் அந்தப் பையனுக்கு அவள் "அகத்தியன்" என பெயர்  இட்டாள்..

சித்தன் அருள்.................. தொடரும்!

7 comments:

 1. Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha

  ReplyDelete
 2. இது கதையல்ல, நடந்த உண்மை நிகழ்ச்சி.

  ReplyDelete
 3. ஓம் அகத்தீசாய நம...
  ஓம் அகத்தீசாய நம...
  ஓம் அகத்தீசாய நம...

  ReplyDelete
 4. IDHU KATHAI ALLA SIDDAR PERUMAN AGATHIARIN ARUL PARIPLANANGALIL ORU THIRUVILAIYADAL ENDRU NANDRAAGAVE PURIGIRATHU.
  0M AGATHEESAAYA NAMAHA.
  PATHIVUGALUKKU MIKKA NANDRI AYYA.

  ReplyDelete
 5. ஐயா, இந்த பதிவை தாங்கள் முன்பே எழுதியிருக்கிறீர்கள்.,,,
  நன்றி..,,,,
  ஓம் அகத்தீசாய நம.,
  ஓம் அகத்தீசாய நம.,
  ஓம் அகத்தீசாய நம.,

  ReplyDelete
 6. Sarguruve saranam Sarguru Patham Saranam Patham

  ReplyDelete