​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 30 May 2013

சித்தன் அருள் - 126

நாடி படித்து வருகிற விஷயங்களை பார்க்கிறபோது எப்போதும் எனக்கு ஆச்சரியம் தான் மிஞ்சும்.  எப்படி இத்தனை நுணுக்கமான நிகழ்ச்சிகள் அகத்தியருக்கு தெரியவருகிறது?  இந்த உலகத்தின் மொத்த ஜனத்தொகையை எடுத்தால் 1000 ம் கோடிக்கு மேல் வரும்.  ஒவ்வொரு தனிப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையில் அவர்கள் செய்த தவறுகளை அகத்தியர் கண்டுபிடித்து, அதுவும் இரு செவி அறியாமல் செய்த தவறை கூட கண்டுபிடித்து, சரி செய்ய ஒரு வாய்ப்பை அமைத்துக் கொடுத்து, அவர்களை திருத்தி, வாழ்க்கையை செம்மை ஆக்கி அவர்களையும், அவர்கள் குடும்பத்தையும் சந்தோஷத்தில் மிதக்க விடுகிறார் என்று நினைக்கும் போது, சித்த சக்திக்கு முன் நாம் எல்லாம் ஒரு தூசு என்று தான் தோன்றுகிறது.  அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை இன்று பார்ப்போம்.

ஒரு நாள் ஒரு தாய் நாடி படிக்க வந்தாள்.

"எனக்கு இரண்டு ஆம்பிள்ளை பசங்க.  ஒண்ணு நல்லா படிக்குது.  இன்னொன்று படிக்கவே மாட்டேங்குது.  ஏதாவது பரிகாரம் இருந்தா அகத்தியர் கிட்டே கேட்டுச் சொல்லுங்க" என்று மிகுந்த சோகத்தோடு கேட்டாள்.

"படிப்பு தானே, பசங்க  அப்படியும் இப்படியுமாகத்தான் ஆரம்பத்தில் இருப்பாங்க.  கவலைப்படாதீங்க, பின்னர் எல்லாம் சரியாகிவிடும்" என்று சொல்லிவிட்டு நாடியைப் பிரித்தேன்.

பல ஆச்சரியமான சம்பவங்களை என்னிடம் சொல்லி, படிப்பு நன்றாக அமைய சில பரிகாரங்களை செய்ய சொன்னார் அகத்தியர்.

அவர் சொன்ன பிரார்த்தனைகளைக் குறித்துக் கொண்ட அந்த பெண், "படிப்பு மட்டும் இல்லைங்க, நடவடிக்கைகளும் சரியா இல்லை.  காலேஜில படிக்கிறவன், கண்ட பொம்பிள்ளை பிள்ளைகள் கூட சேர்ந்து ஊர் சுற்றுகிறான்.  தினமும் ஏகப்பட்ட புகார் வருது.  அதாங்க எனக்கு மிகப்பெரிய கவலையாக இருக்கு" என்றாள், அடுத்தபடியாக.

"பையனுக்கு என்ன வயது இருக்கும்?"

"இருபது"

"இப்போது தான் இப்படி மாறியிருக்கிறானா?  இல்லை........ சின்ன வயசிலேயிருந்தே இப்படித் தானா?"

"எட்டு வயசிலேயிருந்தே இப்படித்தான்.  ஆசையும், பாசமுமாக வளர்த்தேன்.  ஆனால் அம்மா என்று கூட பார்க்காமல் எதிர்த்து பேசுவான், திட்டுவான்.  ஏன்.. ஒரு சமயத்திலே அரிவாள் மனையைத் தூக்கி என் மீது எறிஞ்சிருக்கான்.  நல்ல வேளை லேசான காயத்தோடு தப்பித்தேன்" என்று காயம்பட்ட வகிடை என்னிடம் காண்பித்தாள் அவள்.

அந்தப் பையனைப் பற்றி பல ஆச்சரியமான சம்பவங்களை, அகத்தியர் ஏற்கனவே சொல்லி விட்டதால், அந்தப் பையனின் போக்கைப் பற்றி நான் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.

"இன்னொரு பையன் எப்படி?"

"அவனைப் பற்றி எந்த குற்றமும் சொல்ல முடியாது.  பயபக்தி உள்ளவன்.  நன்றாக படிக்கிறான்.  என் மீது அளவு கடந்த பாசம் வைத்திருக்கிறான்.  ஆனால் எனக்கோ மூத்த பையன் மீது தான் ரொம்ப பாசம்" என்று கண்கலங்கி பேசினாள்.

சில நிமிடம் நான் பொறுமையாக அந்த பெண்ணையே பார்த்தேன்.

"ஏன் சார்... மூத்த பையன் திருந்துவானா?  மாட்டானா?" நம்பிக்கை இல்லாமலேயே கேட்டாள், அந்தப் பெண்.

"கவலைப்படாதீர்கள்.  அவனை திருந்த வைப்போம்" என்று வாக்குறுதி கொடுத்தேன்.

"இன்னொன்று சார்.. அவன் இவ்வளவு கெட்டவனாக மாறியதற்கு என் தந்தை கொடுக்கிற இடம் தான் காரணம்.  ஏன் தான் இப்படி இருக்கிறாரோ தெரியவில்லை" என்றும் குறைப்பட்டுக் கொண்டாள்.

"பேரன் என்கிற செல்லம் தான் இதற்கு காரணமாக இருக்கும்" என்றேன் நான்.

அவள் பதிலொன்றும் சொல்லாமல் கிளம்பினாள்.

இரண்டு மாதம் கழிந்திருக்கும்.

இந்தப் பெண்மணியின் தந்தை என்னிடம் வந்து, "என் பேரன் நிறைய தப்பு பண்ணிட்டான்.  இப்போ போலீஸ் வந்து பிடிச்சுண்டு போயிட்டாங்க.  அவனைக் காப்பாத்தணும்.  நீங்க தான் உதவி செய்யணும்" என்று மிகுந்த கவலையோடு கேட்டார்.

"போலிசே வந்து பிடிச்சுட்டு போற அளவுக்கு அப்படி என்ன தப்பு பண்ணிட்டான்" என்று கேட்டேன்.

"இள வயசு.  இவன் கூடச் சேர்ந்தவங்க ஒரு பெண்ணைக் கூட்டிட்டு வெளியூர் போயிருக்காங்க.  அங்கே ஏதோ ஒண்ணு நடந்திருக்கு.  அதிலே அந்த பொண்ணு செத்துப் போச்சு.  மத்த எல்லோரும் தப்பிச்சுக்கிட்டாங்க.பாவம், அப்பாவி இவன் மட்டும் மாட்டிக்கிட்டான்" என்று மிகவும் சர்வ சாதாரணமாகச் சொன்னார், அந்தப் பையனுடைய தாத்தா.

இதைக் கேட்கும் போது எனக்கு மனம் பதை பதைத்தது.

"சார்... இதற்கெல்லாம் போய் அகத்தியர் உதவி செய்வார்னு நினைக்காதீங்க.  குற்றவாளிகளுக்கு அகத்தியர் துணை போகமாட்டார்" என்று நான் சொன்னேன்.

"என்ன சார் இது... நீங்களே இப்படி முடிவெடுத்தால் எப்படி?  கொலை கேசுல இருந்து என் பேரன் தப்பிச்சு வரணும்.  அகத்தியர் கிட்டே கேட்டுச் சொல்லுங்க" என்று மிரட்டல் தொனியில் கேட்டார்.

"மன்னிச்சுக்கோங்க.  அகத்தியர் கிட்டே இதற்கெல்லாம் அருள் வாக்கு கிடைக்காது.  வேறு ஏதாவது நாடியை வேண்டுமானாலும் பாருங்கள்" என மறுத்தேன்.

அந்த தாத்தாவுக்கு சட்டென்று கோபம் வந்து விட்டது.

"என் பேரனைப் பற்றி உண்மையைச் சொன்னதால் தானே நாடி படிக்க மறுக்கிறீர்கள்.  உண்மையைச் சொல்லாமல் இருந்தால் நாடி படித்திருப்பீர்கள் அல்லவா?" என்று ஒரு போடு போட்டார்.

"நீங்கள் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் அகத்தியர் எனக்கு உண்மை நிலையை எடுத்துக் காட்டிவிடுவார். தெய்வ ரகசியம் என்பதால் நானும் அதை வெளியில் சொல்லுவதில்லை" என்றேன்.

"இதை நான் நம்பத் தயாராக இல்லை.  நீங்களாக எங்களை ஏமாற்ற நாடகம் போடுகிறீர்கள்".

"எனக்கு எதற்கு நாடகம் போட வேண்டும்?  நானென்ன பணத்தை எதிர்பார்த்தா நாடி படிக்கிறேன்.  எனக்கு நாடி படிக்க வேண்டியது அவசியம் இல்லை.  இது எனக்கு பிழைப்பும் இல்லை.  எனவே நீங்கள் வெளியேறலாம்" என்றேன் சற்று கடுமையாக.

சட்டென்று எழுந்தார் அவர்.  வெளியே கிளம்பப் போகிறார் என்று எண்ணினேன்.

ஆனால் நடந்ததோ வேறு!

சடாரென்று என் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

"நான் சோதிடம் சொல்பவன் அல்ல.  கர்மவினை தீர அகத்தியரிடமிருந்து அருள் வாக்கைப் பெற்றுக் கொடுப்பவன்.  என்னை யாரும் அதிகாரம் பண்ண முடியாது.  மிரட்டி உருட்டி பயமுறுத்தி பலன் கேட்கவும் முடியாது.  அப்படி மீறிக் கேட்டல் அவர்களை அகத்தியர் எளிதில் விடமாட்டார்.  எனவே அடக்கி வாசியுங்கள்" என்றேன்.

இதைக் கேட்டதும் அவரது சப்த நாடியும் அடங்கிவிட்டது.

"என்னை மன்னித்து என் பேரனுக்கு வாழ்வு கிடைக்க அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என்றார், பணிவாக. பேச்சில் பயம் இருந்தது.

"அது இருக்கட்டும்.... உங்களுக்கு ஏன் இந்தப் பேரன் மீது இவ்வளவு அக்கறை, விஸ்வாசம்?"

"சின்ன வயதில் இருந்தே செல்லம் கொடுத்து வளர்த்து விட்டேன்.  அது தான் காரணம்."

"உங்களை பற்றி அன்றைக்கே அகத்தியர் பல விஷயங்களை எனக்குச் சொல்லி விட்டார். ஆனால் நீங்கள் சொன்ன காரணம் சரியாக இல்லையே" என்றேன்.

இதைக் கேட்டதும் அந்த பெரியவர் முகம் வெல வெலத்துப் போயிற்று..

"என்ன வந்தது நாடியில்" - அவரே பதட்டத்துடன் கேட்டார்.

"சொன்னால் நம்ப மாட்டீர்களே...."

"இல்லை நம்புகிறேன்"

"ஒன்றுமே தெரியாதது போல் என்னிடமே கேட்கிறீர்கள்.  நீங்கள் செய்த ஆரம்பத் தப்பு ஒன்று இருக்கிறதே, அதை மறந்து விட்டீர்களே."

"நீங்கள் சொல்வது ஒன்றும் எனக்கு விளங்கவில்லை."

"எத்தனை ஆண்டு காலமாக இந்த தப்பை மறைத்து விட்டிருக்கிறீர்கள் என்று அகத்தியருக்கு தெரியும்.  நீங்கள் என்னிடம் மறைக்க முடியாது" என்ற நான், பின்பு அந்தப் பெரியவர், தான் செய்த தவற்றை அகத்தியர் சொல்லக் கேட்கட்டும் என்று நாடியை படிக்க ஆரம்பித்தேன்.

"இவன் பெயர் சுந்தரலிங்கம்.  இவனுக்கு பிறந்த ஒரே மகள் ஷீலாராணி.  நிறைய சொத்து சுகம்.  செல்வாக்கு இருந்தது. ஷீலாராணியை, அவள் விருப்பத்திருக்கு மாறாக ஒரு இளைஞ்சனுக்கு இவன் திருமணம் செய்து வைத்தான்.  ஷீலாராணி கர்பமானாள்.  அவள் பிரசவத்திற்காக ஒரு தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டாள்.  குழந்தை பிறந்தது.  பிறந்த அந்தக் குழந்தை செத்தே பிறந்தது.  அப்போது ஷீலாராணி மயக்க முற்ற நிலையில் இருந்தாள்.

தன குடும்பத்திற்கு ஒரு அருமையான வாரிசு இல்லாமல் போயிற்றே என்ற கவலையாலும், ஷீலாராணிக்கு குழந்தை இறந்து விட்டது என்ற தகவல் தெரியாமல் இருக்கவும் நள்ளிரவு நேரத்தில் அதே மருத்துவமனையில் பிறந்த இன்னொரு குழந்தையை எடுத்து இங்கே வைத்து விட்டான்.  இந்த சதிக்கு உடந்தையாக இருந்த செவிலித்தாயை பின்பு ஊரை விட்டே விரட்டி விட்டான்.

அந்தக் குழந்தை தானே இவனது பேரப்பிள்ளை?" என்று அகத்தியர் ஒரு அதிர்ச்சிக் கேள்வியைக் கேட்ட பொழுது, அந்தப் பெரியவரின் எல்லா நாடியும் தளர்ந்து போயிற்று.

"ஒரு குடிகாரனுக்கும், நடத்தை கெட்ட பெண்ணுக்கும் பிறந்த அந்த குழந்தை, இந்த சுந்தரலிங்கத்தால் கெட்டுப் போனான்.  செல்லம் கொடுத்து வளர்த்து, அந்தப் பையனைக் குட்டி சுவராக்கினான், இல்லையா?" என்று அடுத்த கேள்வியைக் கேட்டபொழுது அவர் என் காலைப் பிடித்துக் கொண்டு அழுதே விட்டார்.

"ஷீலாராணியும் அந்தப் பையனை தன் பிள்ளை போல் வளர்த்தாள்.  ஆனால் அந்தப் பையனுக்கு அவனுடைய உண்மையான தந்தை, தாயின் குணம் தான் இருந்தது.  அவனை திருத்த முடியவில்லை.

இந்த உண்மை இதுவரை ஷீலாராணிக்குத் தெரியாது.  சுந்தரலிங்கத்திற்கு மட்டுமே தெரியும்.  இதற்குப் பிறகு ஷீலாராணிக்கு பல ஆண்டுகள் கழித்து மற்றொரு குழந்தை பிறந்தது.  இந்த குழந்தையின் பரிணாம வளர்ச்சி, ஷீலா ராணிக்கு ஒத்துப் போயிற்று இல்லையா?"

அகத்தியர் எல்லாவற்றையும் புட்டு புட்டு வைத்ததும் சுந்தரலிங்கம் நடு நடுங்கிப் போனார்.

"சார்.  இந்த விஷயம் ஷீலாராணிக்கோ, மற்றவர்களுக்கோ தெரிய வேண்டாம்.  அதோடு அந்த பையனும் இந்த போலீஸ் கேசிலிருந்து வெளிவர நீங்கள் தான் உதவி செய்ய வேண்டும்" என்று மன்றாடிக் கேட்டுக் கொண்டார்.

"சுந்தரலிங்கம், இதனை மறைப்பது நல்லதல்ல.  உன் பெண் ஷீலாரணியிடம் பக்குவமாக எடுத்துச் சொல்.  முதலில் அதிர்ச்சியாகத் தான் இருக்கும்.  வளர்த்த பாசம் காரணமாக அவளே இயல்பான நிலைக்கு மாறி விடுவாள்.

உனது பேரன் செய்த தவறுக்கு, கர்மவினைப்படி சிறு தண்டனை பெற்று, தப்புவான்.  அதுவரை சில சில பரிகாரங்களை செய்து வா" என்று அகத்தியர் அருள்வாக்கு தந்தார்.

ஷீலாராணிக்கு உண்மைச் சம்பவம் தெரிந்த பிறகு நான்கு மாதம் சுயநினைவே இல்லை.  அதிர்ச்சியடைந்த நிலையில் காணப்பட்டாள்.  பிறகுதான் தேறினாள்.  மூத்த மகனை ஆசையோடு வளர்த்ததால் அந்த பாசம் வென்றது.  அவனையும் தன மகன் போல் ஏற்றுக் கொண்டாள்.

அந்த பையன் சிலகாலம் தண்டனை பெற்று, நன்னடத்தை ஜாமீனில் வெளியே வந்தான்.

இப்போது, அன்மீகப் பணிக்காக சேவை செய்து கொண்டிருக்கிறான்.  அவன் இப்போது என்னிடம் கேட்பது இதுதான்.

"எனது உண்மையான தந்தை - தாயை அகத்தியர் எனக்கு அடையாளம் காட்டக் கூடாதா?"

இதற்கு அகத்தியர் தான் பதில் சொல்ல வேண்டும்.  சில கேள்விகளுக்கு ஒரு போதும் அகத்தியரிடமிருந்து பதில் கிடைக்காது.  அந்த பிரிவில் சென்று இந்த கேள்வி அமர்ந்தது. இன்றுவரை அந்த கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.

சித்தன் அருள் .................... தொடரும்!

4 comments:

  1. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நமக...
    ஓம் அகத்தீசாய நமக...
    ஓம் அகத்தீசாய நமக...

    ReplyDelete
  3. sir,
    i got this facebook link about agathiyar
    https://www.facebook.com/photo.php?fbid=573421272688526&set=a.554565281240792.1073741831.293309174033072&type=1&relevant_count=1

    ReplyDelete
  4. அந்த பையன் படிப்பு வராமல் இருக்க என்ன காரணம் என்று நீங்கள் சொல்லவில்லையே.பல விஷயங்கள் அவன் கல்வி பற்றி அகத்தியர் சொன்னதாகவும் ,அவை என்ன என்றும் நீங்கள் பதிவில் குறிப்பிடவில்லை.வேறொரு பதிவில் நீங்கள் குறிப்பிட்டால் பொதுவாக கல்வி தடை பட காரணத்தை நாங்கள் தெரிந்து கொள்வோம்.மேலும் அகத்தியர் மந்திரமாகிய "ஓம் கிலி சிவ" என்னும் மந்திரத்தை 48 நாட்கள் 128 முறை காலையில் குளித்து விட்டு சூரியனை நோக்கி சொன்னால் உடும்பாக பற்றி இருந்த சனி தோஷம் விலகிடும் என ஒரு தளத்தில் படித்தேன்.அந்த அகத்தியர் பாடலை இங்கே தருகிறேன்.


    கோனவனார் குடியிருந்த பிடரிதன்னில்
    கொள்கிநின்றார் சனியனெனும் பகவான்றானே
    தானென்ற சனிபகவான் பிடரிமேலே
    தானேறி நின்று கொண்டு தலைகால் வேறாய்
    கோனென்ற அறிவுதனை நிலைக்கொட்டாமல்
    குடிலமென்ற குடிலமெல்லாங் கூறாய்ச் செய்து
    நானென்ற ஆணுவமே நிலைக்கப்பண்ணி
    நன்னையென்ற வெளிகளெல்லா மிருளாய்க் கட்டி

    கானென்ற கபடமதுக் கேதுவாய் நின்று
    கரையேற வொட்டாமல் கருதுவானே
    கருதுகின்ற சனிபகவான் பிடரிமேலே
    கவிழ்ந்து நின்ற பாசமதைக் களையவேண்டி
    சுருதி பொருளானதொரு நாதன்பாதம்
    தொழுதுமன துறுதியினால் துகளறுத்து
    நிருதியெனுஞ் சாபமது நிவர்த்தியாக
    நீமகனே சொல்லுகிறே னன்றாய்க்கேளு

    பருதிஎனும் ரவிதனையே நமஷ்கரித்து
    பாங்குடளே ஓம் கிலி சிவவென்று சொல்லே
    சொல்லிடுவாய் தினம்நூத்தி யிருபத்தெட்டு
    சோர்வின்றி மண்டலமே செபித்தாயாகில்
    வல்லுடும்பாய் நின்றசனி மாறிப்போகும்
    மகத்தான மந்திரமுஞ் சித்தியாகும்

    இந்த மந்திரத்தை நன் அகத்தியர் சொன்ன முறையில் பல முறை ஜெபித்து வருகிறேன்.பல காரணங்களால் என்னால் 10 அல்லது 13 நாட்களுக்கு பிறகு தொடர்ந்து ஜெபிக்க முடியாமல் தடை வருகிறது.மறுபடி தொடர்ந்தால் அது 14 நாள் கணக்கா அல்லது முதல் நாள் எனக்கொள்ள வேண்டுமா?எதற்காக எனக்கு இவ்வளவு தடைகள் வருகிறது? அகத்தியரிடம் கேட்டு சொல்லவும்.உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete