​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 16 May 2013

சித்தன் அருள் - 124


எந்த ஒரு மனிதரையும், பிற மனிதர்கள் கைவிடுவார்கள்.  அதற்கு இரு காரணங்கள் இருக்கும்.  ஒன்று அவர் செய்கிற செயல்கள் மற்றவருக்கு பிடிக்காமல் போவதால். இல்லை என்றால் மற்றவர் ஒரு சுயநலவாதியாக இருந்து தான் நினைத்த காரியம் நடந்து முடிந்ததும் கழற்றி விடுவதினாலும் ஆகலாம்.  இரு நிலைகளிலும் அதிகம் ஸ்ரமத்தில் உழலுவது இவர் மட்டும். ஆனால், சித்தர்கள் ஒருபோதும் தன்னை நம்பி வந்தவர்களை, எவ்வளவுதான்அவர்கள் சொன்ன பேச்சு கேட்க்காவிட்டாலும், பொறுமையாக அவர்கள் உணரும் வரை அமைதியாக இருந்து, வாழ்க்கையை சீர் படுத்துவார்கள், என்பது நிதர்சனமான உண்மை. ஆனால், நம்மவருக்குத்தான் பொறுமையே கிடையாதே.  தானும் "கொதித்து" மற்றவரையும் குறைவாக பேசி.......... என்ன சொல்ல!  அப்படி நடந்த ஒரு நிகழ்ச்சியை இன்று பார்ப்போம்.

மிகச் சிறந்த  நண்பர் அவர்.  ஆனால் எதைச் சொன்னாலும் அதற்கு நேர் எதிர்மறையாகப் பேசுவார்.  சிலசமயம் செயல்பட்டும் கட்டுவார்.  யார் என்ன சொன்னாலும் கேட்கமாட்டார்.  அவரைத் திருத்தவும் முடியாது என்று எல்லோரும் கை விட்டு விட்டனர். அவருக்குள் தனக்கு எல்லாம் தெரியும் என்கிற எண்ணமும், தன் வாழ்க்கையை  தான் தீர்மானிக்கிறேன் என்கிற நினைப்பும் வலுவாக் இருந்தது.  இருந்தும் "பரிசுச்சீட்டு" எடுத்துப்பார்ப்போமே என்று நமக்கு எல்லாம் வருகிற எண்ணம் போல, அடிக்கடி நாடி பார்க்கவும் வருவார்.

அப்படிப்பட்ட நண்பர் திடீரென்று ஒருநாள் என்னிடம் வந்தார்.

"தவறாக எண்ணாதீர்கள்.  அகத்தியர் சொன்னது எல்லாம் அப்படியே நடக்கிறது என்று எல்லோரும் சொல்கிறார்கள்.  இதெல்லாம் ஏமாற்று வேலை.  அப்படி எல்லாம் நடக்காது.  அவர் சொல்வதை நம்பவே வேண்டாம் என்று நான் சொல்லி வருகிறேன்.  இப்போது நீங்கள் எனக்கு நாடி படிக்க வேண்டும்" என்றார் மிகவும் உரிமையுடன்.

சிரித்துக் கொண்டே சொன்னேன், "எதற்கு வீண் சரமம்.  உங்களுக்கோ ஜோதிடத்தில் நம்பிக்கை இல்லை.  அகத்தியர் ஜீவநாடி என்பது இல்லை. அத்தனையும் பொய் என்றும் சொல்கிறீர்கள்.  பின் எதற்கு உங்கள் நேரத்தையும், என் நேரத்தையும் வீணாக்கிக் கொண்டு நாடி பார்க்க வேண்டும்.  விட்டு விடுங்கள்" என்றேன்.

"பரவாயில்லை என்னதான் நடக்கிறது என்றுதான் பார்ப்போமே" என்றார் பகுத்தறிவு தன்மையோடு.

"விதி யாரை விட்டது" என்று எண்ணிக் கொண்டேன்.  படிப்பதா, வேண்டாமா என்றும் யோசித்தேன்.  ஏதேனும் சொல்லி அகத்தியரின் கோபத்திற்கு ஆளாக வேண்டாமே என்ற பயமும் இருந்தது.  இருப்பினும் நண்பரின் வற்புறுத்தலைத் தொடர்ந்து நாடியைத் திறந்து படிக்க ஆரம்பித்தேன்.

"உன்னுடைய உடன்பிறந்த சகோதரிக்கு திருமண வாழ்க்கை சரியில்லை. புகுந்த வீட்டில் துன்பப்படுவதால் இருமுறை தற்கொலைக்கு முயன்று தோற்றுப் போனாள்.  நாடி கேட்கின்ற இந்த நேரத்தில் அவள் மாடியிலிருந்து கீழே குதித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பாள், சென்று பார்" என்று நாடியில் வந்தது.

அந்த நண்பர் இதைக் கேட்டு அமைதியானார்.  பதில் ஒன்றும் சொல்லவில்லை.

"என்னுடைய சகோதரி ஹைதரபாத்தில் இருக்கிறாள்.  உடனடியாக நான் சென்று பார்க்க முடியாது.  தொலை பேசியில் கேட்டு விட்டுச் சொல்கிறேன்" என்றவர் அறையை விட்டு வெளியே சென்றார்.

அப்போதெல்லாம் செல்போன் இல்லாத காலம்.  எனவே ட்ரன்க்கால் போட்டு பேசவேண்டும்.  நேரிடையாக சட்டென்று பேச முடியாது.  எனவே வெகுநேரம் காத்திருந்துதான் பேச வேண்டியிருந்ததால் அந்த நண்பர் பேசிவிட்டு பின்பு என்னிடம் மறுபடியும் வந்தார்.

"சார்.  ஹைதராபாத்திலுள்ள என் தங்கை வீட்டாரிடம் பேசிவிட்டேன்.  நீங்கள் சொன்னபடி எதுவும் அங்கு  நடக்கவில்லை என்கிறார்கள்.  அப்படிஎன்றால் அகத்தியர் வாக்கு பொய்யாகிவிட்டது என்பதுதானே அர்த்தம்?" என்று படு உற்சாகத்தோடு சொன்னார் அந்த நண்பர்.  

"அகத்தியர் சொன்னது பொய் ஆகிவிட்டதே, இப்போது அவர் என்ன சொல்கிறார் என்று கேளுங்கள்" என்று கேலியாய் பேசினார்.

நான் அமைதியாக் இருந்தேன்.  அகத்தியர் ஏதோ "திருவிளையாடல்" நடத்துகிறார் என்று உணர்ந்து கொண்டேன்.

"நீங்கள் உங்கள் தங்கையோடு பேசினீர்களா?" என்று கேட்டேன்.

"இல்லை"

"பின் யாருடன் பேசினீர்கள்?"

"என் தங்கையின் மாமியாரிடம் பேசினேன்." என்றார்.

"ஏன் உங்கள் தங்கையிடம் பேசியிருக்கலாமே.  அவரிடம் நேரிடையாக பேசிவிட்டு வாருங்கள்.  பின்பு அகத்தியர் நாடி படிப்போம்" என்றேன்.

இதை அவர் முழமையாக ஏற்றுக் கொள்ளவில்லை.

"எப்படியும் என் சகோதரியிடம் பேசிவிட்டு வருகிறேன்.  அதுவரை தாங்கள் எனக்காக காத்திருக்க வேண்டாம்" என்று சொன்னவர் அவசர அவசரமாக வெளியேறினார்.

மறுநாள் காலையில் அந்த நண்பர் ஓடோடி வந்தார்.

"சார்! ஹைதராபாத்திலிருந்து தந்தி வந்திருக்கிறது.  தங்கைக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டிருப்பதால் அவள் ஆசுபத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறாள் என்று மட்டும் அதில் தகவல் உள்ளது" என்று கூறியபடி அந்த தந்தியை என்னிடம் காண்பித்தார்.

"உங்கள் சகோதரிக்கு ஒன்றும் ஆகிவிடாது.  பயப்பட வேண்டாம்.  குலதெய்வத்திற்கு செய்ய வேண்டிய பிரார்த்தனைகளை செய்யாமல் அவசர அவசரமாக அவளுக்குத் திருமணம் செய்து வைத்துவிட்டீர்கள்.  சுமங்கலி பிரார்த்தனை செய்திருக்க வேண்டும்.  அதுவும் செய்யவில்லை.  உங்களது தாயார் முடிபோட்டு வைத்திருக்கும் ஒரு மஞ்சள் துணியில் திருப்பதி பெருமாளுக்கு காணிக்கை இருக்கிறது.  அதையும் செலுத்தவில்லை.  இதை செய்துவிட்டால் எந்த வித பயமும் இல்லை.  எனவே அதனை முறைப்படி செய்து விட்டு ஊருக்கு புறப்பட்டு செல்லுங்கள்.  நல்ல செய்தி வரும்.  தங்கையைப் பற்றி பயப்பட வேண்டாம்" என்று உடனடியாக அகத்தியர் நாடி படித்துச் சொன்னேன்.

"எல்லாம் கேட்க நன்றாக இருக்கிறது.  ஆனால் இதெல்லாம் எனக்கோ அல்லது என் வீட்டாருக்கோ உடன்பாடில்லை.  சுமங்கலி பிரார்த்தனை, திருப்பதி பெருமாள் உண்டியலுக்கும், என் தங்கை உடல்நிலை பாதிக்கப்பட்டிருப்பதர்க்கும் என்ன சம்பந்தம் சார்.  தவறாக எண்ண வேண்டாம்.  இதெல்லாம் செய்யாமலே நான் ஹைதராபாத் சென்று விட்டு வருகிறேன்" என்றார் அந்த நண்பர்.

"அது உங்கள் இஷ்டம்.  என்னிடம் ஏன் சொல்லவேண்டும்?" என்று சொல்லி விட்டு எழுந்து விட்டேன்.  அந்த நண்பரும் கிளம்பி விட்டார்.

ஒரு மாதம் கழிந்தது.

சென்னை பொது மருத்துவமனயிலிருந்து ஓர் போன் வந்தது.  பேசியது அந்த நண்பர்தான்.

"என் தங்கைக்கு எலும்பு முறிவு பல இடங்களில் ஏற்பட்டிருக்கிறது.  ஹைதராபாத்தில் சரியான சிகிர்ச்சை செய்ய இயலவில்லை.  சென்னை மருத்துவமனையில் இப்போது சேர்த்திருக்கிறேன்" என்றார்.

"சீக்கிரம் குணமடைய வாழ்த்துகிறேன்" என்றேன்.

"இல்லை சார்! என்னதான் சிகிர்ச்சை செய்தாலும் இன்னும் ஆறு மாதத்திற்கு மேல் என் தங்கை உயிர் பிழைப்பது கடினம் என்று பெரிய பெரிய டாக்டர்கள் சொல்கிறார்கள்".

"சரி.  நான் என்ன செய்ய வேண்டும்?"

"மறுபடியும் என் தங்கைக்காக அகத்தியர் நாடி படிக்க வேண்டும்" என்றார் அந்த நண்பர்.

"ஏற்கனவே அகத்தியர் சொன்ன பரிகாரங்களை செய்து விட்டீர்களா?"

"இல்லை"

"பின் எதற்காக நான் மறுபடியும் படிக்க வேண்டும்?"

"அப்போது எனக்காக படித்தீர்கள்.  இப்பொழுது என் தங்கைக்காக படிக்கக் கூடாதா?" கெஞ்சினார் அவர்.

"படிக்கிறேன்.  ஆனால் அகத்தியர் ஏதேனும் பிரார்த்தனை அல்லது பரிகாரம் சொன்னால் அதை நீங்களும் செய்ய மாட்டீர்கள்.  இப்பொழுது இருக்கின்ற நிலையில் உங்கள் தங்கையும் செய்ய முடியாது.  எனவே நான் உங்களுக்காக நாடி படிக்க விரும்பவில்லை.  என்னை விட்டு  விடுங்கள்" என்று கறாராக சொல்லி விட்டேன்.

அதற்கு பிறகு அந்த நண்பரிடமிருந்து பதில் இல்லை.

பதினெட்டு நாட்கள் கழிந்தது.

அந்த நண்பர் என்னைத் தேடி வந்தார்.  முகத்தில் கவலையும், சோகமும் கலந்திருந்தது.  பேச முயன்றும் அவரால் பேசமுடியவில்லை.

"என்ன?" என்றேன்.

"என் தங்கை இப்போது அபாயகட்டத்தில் இருக்கிறாள்.  ஆபரேஷன் செய்து சரியான குணம் ஆகவில்லை.  இன்னும் இருபத்தி நான்கு மணி நேரம் டாக்டர்கள் கெடு விதித்திருக்கிறார்கள்.  அவளை எப்படியாவது பிழைக்க வைக்க வேண்டும்.  அது அகத்தியரால் தான் முடியும்" என்றார் அந்த நண்பர்.

"மன்னிக்க வேண்டும்.  அகத்தியர் தெய்வமல்ல.  அவர் ஒரு சித்தர்.  நாடி வந்தால் வழிகாட்டுவார். அதை செய்யவில்லை எனில் மறுபடியும் அவர் உரைக்க மாட்டார்.  நீங்களோ அகத்தியர் ஜீவநாடி என்பது பொய் என்று நினைக்கிறீர்கள்.  பின் எதற்காக இங்கு வரவேண்டும்?  பிரார்த்தனை செய்யுங்கள்.  டாக்டரிடம் ஆலோசனை கேளுங்கள்.  நிச்சயம் உங்கள் தங்கை பிழைத்துக் கொள்வாள்" என்றேன்.

"வேறு வழியே இல்லையா?"

"வேறு நாடியைச் சென்று பாருங்கள்.  நல்ல வழி கிடைக்கும்" என்றேன்.

"உங்களுக்கு மனிதத் தன்மையே கிடையாதா?  ஓர் உயிர் அங்கு துடிக்கிறது, கொஞ்சம் கூட அசைந்து கொடுக்க மாட்டீர்களா?" என்று என் மீது சாடினார்.

"நண்பரே ஏன் இந்த வேகம்.  கடந்த முப்பது ஆண்டுகளாக தினமும் நான் அகத்தியரோடு தொடர்பு கொண்டிருக்கிறேன்.  அவரோடு போராடி வெற்றி பெற வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்.  எனக்கு அகத்தியரைப் பற்றி நன்கு தெரியும். அவர் சொன்னபடி செய்யாமல், வந்தால் நல்ல பதில் கிடைக்காது.  நானோ அகத்தியப் பெருமானோ யாருக்கும் ஏஜென்ட் அல்ல.  உங்களது குறைகளை வைத்து பணம் பிடுங்கும் எண்ணமும் எனக்கு இல்லை.  ஆனால் நீங்களோ அல்ப கண்ணோட்டத்தில் என்னையும் அகத்தியரையும் எடை போட்டு ஊரெல்லாம் பேசுகிறீர்கள்.  நானென்ன மந்திரவாதியா சட்டென்று எதையும் மாற்றுவதற்கு? விட்டு விடுங்கள்" என்றேன்.

"பிறகு என்னதான் நான் செய்ய வேண்டும்?"

"முதலில் உங்கள் தாயார் விரும்பியபடி வீட்டில் சுமங்கலி பிரார்த்தனைக்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்.  இரண்டாவதாக, திருப்பதி கோவிலுக்கு உடனடியாக ஆளை அனுப்பி வீட்டில் வைத்திருக்கும் மஞ்சள் துணியோடு உள்ள காணிக்கையை உண்டியலில் போட்டு விடுங்கள்" என்று வழி காட்டினேன்.

"இதை இப்போது என்னால் செய்ய இயலாதே.  மருத்துவமனையில் தங்க வேண்டும்" என்றார்.

"பயப்படவேண்டாம், உங்கள் தங்கையின் உயிருக்கு ஒன்றும் ஆபத்து வராது.  இதைச் செய்ய ஆரம்பித்து விட்டாலே அவள் மரணத்தின் பிடியிலிருந்து தப்பி விடுவாள்.  இனி இதனைச் செய்வதும் செய்யாததும் உங்கள் இஷ்டம்" என்றேன்.

மேற்கொண்டு எதுவும் பேசாமல் அங்கிருந்து நகன்றார் அந்த நண்பர்.

ஒரு வாரம் கழிந்தது.

அந்த நண்பர் மலர்ந்த முகத்தோடு என்னிடம் வந்தார்.  கையில் இனிப்பு பொட்டலம் இருந்தது.  நான் வாய் திறந்து பேசும் முன்னரே அவரே என்னிடம் இருந்த அகத்தியர் நாடிக்கு நமஸ்காரம் செய்தார்.

"என் தங்கை பிழைத்துக்கொண்டாள்" என்றவர் என்ன நடந்தது என்ற விஷயத்தை விளக்கினார்.

"அன்றைக்கு நீங்கள் சொன்னபடியே என் தாயார் முடி போட்டு வைத்திருந்த காணிக்கையோடு திருப்பதிக்கு கிளம்பினேன்.  ரயிலில் நிற்கக் கூட இடம் இல்லை.  என்ன நடக்குமோ ஏது நடக்குமோ என்று பயந்து கொண்டே சென்ற போது யாரோ ஒருவர் என் கையைப் பிடித்து முதல் வகுப்புக்கு அழைத்துச் சென்றார்.  அங்கு தன பக்கத்தில் என்னை உட்கார வைத்தார்.

திருப்பதிக்குத்தான் தானும் போவதாகவும், அங்கு தனக்கு செல்வாக்கு இருப்பதாகவும், அங்குள்ள பேஷ்காரிடம் சொல்லி சவுகரியமாக தரிசனம் செய்து தருவதாகவும் சொன்னார், அந்தப் பெரியவர்.  அவர் யார்?  எதற்காக தன்னிடம் பரிவுகாட்டி திருப்திக்கு அழைத்துச் செல்ல வேண்டும்? என்று எனக்கு தெரியவில்லை.

திருப்பதி மலைக்குச் சென்றதும் அந்த பெரியவர் அங்கிருந்த பேஷ்காரிடம் என்னைச் சுட்டிக் காட்டி ஏதோ பேசிவிட்டு சென்று விட்டார்.  உடனே என்னை அழைத்துச் சென்று திருப்பதி வேங்கடவனை ஸ்பெஷல் தரிசனத்தில் தரிசிக்க வைத்தார்.

பெருமாளை தரிசித்த பின்னர், என் அம்மா முடி போட்டு காணிக்கையாக வைத்திருந்த மஞ்சள் துணி முடிப்பை உண்டியலை திருப்பதியில் போட்டேன்.

எப்போது காணிக்கையை உண்டியலில் போட்டேனோ அந்த நேரத்தில்தான் மரணத்தருவாயில் இருந்த என் தங்கையும் கண் திறந்திருக்கிறாள்.  அவள் உயிரும் தப்பிவிட்டது.

நேற்று தான் என் வீட்டில் சுமங்கலி பிரார்த்தனையும் நடந்தது.  இப்போது என் தங்கை மிக நன்றாகப் பேசுகிறாள்.  அவள் உயிருக்கு எந்த பயமும் இல்லை, என்று டாக்டர்களே சொல்லி விட்டார்கள்.  இனி அகத்தியர் நாடியை பழிக்கமாட்டேன்" என்று நீண்ட கதையை உணர்ச்சிவயப்பட்டு சொன்ன போது நானும் மெய்மறந்தேன்.

அவரது தங்கை மாடியிலிருந்து வீழ்ந்ததற்கு காரணமானவர்கள் வேறு விதமாக துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம்.

ஆனால்.....

அகத்தியரிடம் நாடி கேட்டு அதை அலட்சியமாகவோ வேண்டா வெறுப்பாகவோ, நம்பிக்கை இல்லாமல் செய்தாலோ அல்லது செய்யத் தவறியவர்களுக்கு ஏனோ எந்த காரியமும் நடப்பதில்லை என்பது மட்டும் என் அனுபவ ரீதியான உண்மை.

சித்தன் அருள் .................... தொடரும்!

3 comments:

  1. very important message to all from siddhars

    ReplyDelete
  2. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  3. நம்பினோர் கைவிடப்படுவதில்லை...

    ஓம் அகத்தீசாய நம...
    ஓம் அகத்தீசாய நம...
    ஓம் அகத்தீசாய நம...

    ReplyDelete