​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 23 May 2013

சித்தன் அருள் - 125


அகத்திய பெருமானை ஒரு சிலர் பார்க்கிற பார்வையை நினைத்தாலே "ஏன் இப்படி அறியாமல் நடந்துகொள்கிறார்கள்" என்று நினைக்க தோன்றும். பணம், சொத்து போன்றவை சேரச் சேர, எதையும் மறைத்து வைத்து அவரிடம் விளையாடலாம் என்கிற எண்ணம் சிலருக்கு தோன்றும். அகத்தியரை ஏமாற்றிவிடலாம் என்கிற எண்ணத்தில் வருகிறவர்களுக்கு, ஒன்றுமே எனக்கு தெரியாது என்கிற நிலையில் இருந்து அகத்தியர் திருவிளையாடலை நடத்துவது, நாம் முதலிலேயே அறிந்தால் "வேடிக்கை" பார்க்கலாம், இல்லை எனில் நாமும் குழம்பிவிடுவோம்.  சித்தர்களுக்கு இந்த உலகத்தில் எத்தனையோ யுகங்களுக்கு, நூற்றாண்டுகளுக்கு முன்னர் ஒரு குறுப்பிட்ட இடத்தில் என்ன நடந்துள்ளது என்பது கூட மிக தெளிவாக தெரியும்.  அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை இன்று பார்ப்போம். 

ஒரு நாள், நாடி பார்க்க வந்தவர்களில் ஒருவர், 

"இந்த இடத்தை வாங்கலாமா? வேண்டாமா? என்று அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என்று கேட்டார்.  அவரை கண்டதும், அவர் ஒரு கோடீஸ்வரர் என தோன்றியது.

அகத்தியரிடம் நான் அனுமதி கேட்டேன்.

"அந்த இடத்தில் தென்கிழக்குத் திசையில் பூமி தோஷம் இருப்பதால் இதை வாங்குவது அவ்வளவு நல்லதல்ல.  சற்று பொறுமையாக இருந்தால் இதைவிட மிக அருமையான இடம் கிடைக்கும்" என்று அகத்தியரிடமிருந்து பதில் வந்தது.

இந்த பதிலைக் கேட்டதும் வந்திருந்த அந்த கோடீஸ்வரரின் முகம் மாறியது.  சிறிது நேர சிந்தனைக்குப் பின் 

"பூமி தோஷம் விலக என்ன செய்ய வேண்டும்? அதைச் செய்துவிட்டால் அந்த இடத்தை வாங்கலாமா?"

"பூமி தோஷம் விலக ஹோமம் எதுவும் செய்ய வேண்டாம்.  அந்த இடத்தின் தென்கிழக்குத் திசையில் சுமார் பன்னிரண்டு அடி தோண்ட வேண்டும்.  நான்கு அடி அகலத்தில் தோண்டவும் வேண்டும்.  அப்படி தோண்டிப் பார்க்கும் பொழுது கருமையாக ஒரு பொருள் கிடைக்கும்.  அதை கைப்படாமல் பிளாஸ்டிக் மூலம் எடுத்து வெளியே தூக்கி, யாரும் கால் படாத இடத்தில் எரிந்து விட வேண்டும்.  பின்பு குளிக்கவும் வேண்டும்.  இதைச் செய்தால் போதும்.  அல்லது நம்பிக்கை இருந்தால் அந்த இடத்தின் எட்டு திசைகளிலும் கலசம் வைத்து பூசித்து, அந்த கலசத் தண்ணீரை அங்கங்கே கொட்டி விட்டால் பூமி தோஷம் விலகிவிடும்.  பிறகு இதுபற்றி முடிவு எடுக்கலாம்" என்று அகத்தியர் வழி காட்டினார்.

"எல்லாம் சரி......... அந்த இடத்தை வாங்கிய பின்னர் தானே இதைச் செய்யவேண்டும்? அதற்கு முன்னர் இதை எப்படிச் செய்ய முடியும்?" என உடனே கேட்டார் அவர்.

இதுவும் எனக்கு நியாயமாகப்பட்டது.  அகத்தியரிடம் கேட்டேன் இது பற்றி.

"அகத்தியனுக்கு தெரியாதா இது?  முறைப்படி வாங்கிய பின்னர் தான் இப்படிப்பட்ட தோஷம் போகா "புண்யா வசனம்" செய்ய வேண்டும் என்று,  இவன் ஏற்கனவே அந்த இடத்தை வாங்கி விட்டான்.  ஆனால் வாங்காதது போல் அகத்தியனிடம் கேட்கிறான்.  எதற்கு இந்த பொய் வாக்கு?  ஆகவே தான் அவனுகேற்றவாறு நானும் மாறிப் பேசினேன்" என்றதும் அந்த நபர் முகம் வாடிப் போயிற்று.

ஆனால் வாக்குவாதம் எதுவும் செய்யவில்லை.  அமைதியாக சில நிமிடம் அமர்ந்து விட்டு "வருகிறேன்" என்று சொல்லி விட்டுப் போனார்.

பின்பு சில மாதங்கள் அவரை காணவே இல்லை.  நானும் இயல்பாகவே மறந்து விட்டேன்.

"சரி! எல்லாம் நல்லபடியாக நடந்திருக்கும்" என்று விட்டு விட்டேன்.  இதற்கிடையில் அவரது நண்பர் ஒருவர் யதேச்சையாக என்னைப் பார்க்க வந்தார்.  பேச்சின் இறுதியில் "அந்த கோடீஸ்வர நண்பர் எப்படி இருக்கிறார்?" என்று கேட்டேன்.

"அவருகென்ன சார், அந்த இடத்தை வாங்கியதிலிருந்து பெரும் பணம் பண்ணுகிறார்.  தோண்ட தோண்ட அந்த இடத்தில் மிகவும் அதிசயமான கிரானைட் கற்பாறைகள் கிடைத்துக் கொண்டிருக்கிறது.  அந்த மாதிரியான அபூர்வமான கிரானைட் கல் கிடைப்பது மிகவும் கடினமாம்.  அதனால் அந்த கற்களை வெளி நாட்டிற்கு கப்பல் கப்பலாக ஏற்றிக் கொண்டிருக்கிறார்" என்றார் அந்த நபர்.

"பரவயில்லையே" என்று வாழ்த்தினேன்.

இது நடந்து ஒரு மாத காலம் ஆகியிருக்கும்.  ஒரு நாள் காலையில் அந்த கிரானைட் கோடீஸ்வரர் என்னைத் தேடி வந்தார்.  முகத்தில் கலக்கம் இருந்தது."என்ன விஷயம்? தொழில் நன்றாக நடக்கிறது என்று கேள்விப்பட்டேன்.  மனமுவந்த வாழ்த்துக்கள்" என்றேன்.

அவர் ஒன்றும் பதில் பேசவே இல்லை.  கண்கள் கலங்கி இருந்தன.  இன்னும் சற்று நேரத்தில் "ஒ"வென்று அழுதுவிடுவார் போலிருந்தது.

"இல்லை சார்.  நான் நம்பி ஏமாந்து விட்டேன்.  பல கோடி இழப்பு ஏற்பட்டு விட்டது.  அகத்தியர் சொன்னதைக் கேட்காமல் போனேன்.  அதனால் தான் இப்போது கஷ்டப்படுகிறேன்" என்றார்.

"நன்றாக உங்கள் வியாபாரம் நடக்கிறது.  கப்பல், கப்பலாக வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்வதாக அல்லவா கேள்விப்பட்டேன்" என்றேன்.

"முதலில் அப்படித்தான் இருந்தது.  வெளிநாட்டவர் எனது கிரானைட் கற்களை  தட்டிப் பார்த்து ஆராய்ந்து பார்த்துவிட்டு ஆச்சரியப்பட்டார்கள்.  இது விசேஷமான கல் என்பதால் ஐம்பது கோடிக்கு ஆர்டர் கொடுத்தார்கள்.  அந்த சந்தோஷத்தில் அகத்தியர் சொன்னதை மறந்து கற்களைத் தோண்டி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்தேன்.

முதலில் சென்ற கற்கள் நன்றாக இருந்தன.  பின்னர் தென் கிழக்குத் திசையில் இருந்து எடுத்த கற்கள் அத்தனையும் பொடிப் பொடியாகிவிட்டன.  அது மட்டுமல்ல....... அதற்கு பிறகு எந்த இடத்தை தோண்டினாலும் அத்தனைக் கற்களும் பூமியிலிருந்து எடுக்கும் போதே மண்ணாக உதிர்ந்து விட்டன", என்றார் அவர்.

"அடப் பாவமே" என்றேன்.

அவர் தொடர்ந்தார்.

"அதுமட்டுமின்றி முதலில் கப்பலில் அனுப்பி வைத்த கற்களும் வெளிநாட்டுத் துறைமுகத்தில் இறக்கும் பொழுதே கண்ணாடி போல் உடைந்து சிதறியதால் அவர்கள் ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டார்கள்.  இதனால் எனக்கு ஒரு கோடி நஷ்டமாகி விட்டது.  பெருங் கடன்காரனாக மாறி விட்டேன்.  சில சமயம் தற்கொலை செய்து கொள்ளலாமோ என்று தோன்றுகிறது.  நீங்கள் தான் எனக்கு அகத்தியரிடம் கேட்டு வழி காட்ட வேண்டும்" என்று கெஞ்சினார்.

"கற்கள் பொடியாகப் போனதற்கும் அகத்தியருக்கும் என்ன சம்பந்தம்?" எனக் கேட்டேன்.

:"இருக்கிறது.  நான் வாங்கிய இடத்தில் "பூமி தோஷம்" இருக்கிறது என்று அகத்தியர் ஏற்கனவே கூறி இருக்கிறார்.  தென் கிழக்குத் திசையில் தோண்டி ஒரு கருப்பு நிறப் பொருளை எடுத்துப் போடச் சொன்னாரே உங்களுக்கு ஞாபகமிருக்கிறதா? அதை நான் செய்யவில்லை.  அது தான் இத்தனை நஷ்டத்திற்கும் காரணம்" என்று கண்ணீர் விட்டார்.

"சரி! இப்போதாவது அந்த தென்கிழக்குத் திசையைத் தோண்டி அந்த கருப்பு நிறப் பொருளைத் தூக்கி எறியலாமே?"

"முடியாது.  ஏனென்றால் அந்தப் பக்கம் தோண்டி அந்த மண்ணையும் கல்லையும் எடுத்து கப்பலுக்கு அனுப்பும் போது தான் ரசாயன மாற்றம் போல் வலுவான அத்தனை கற்களும் பொடிப் பொடியாகப் போயிற்று.  வேறு சாந்தி பரிகாரம் எதுவும் நான் செய்யவும் இல்லை.  இதற்கு வேறு மாற்று வழி ஏதேனும் இருக்கிறதா? என்று அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என்று முடித்தார்.

அவரைப் பார்க்கும் பொழுது உண்மையில் எனக்குப் பரிதாபமாக இருந்தது.  அதே சமயம் அகத்தியர் சொன்னதை செய்யாததால் இத்தனை பெரிய தண்டனையை அடைந்திருக்கிறார் என்பதையும் என் உள் மனம் ஏற்கவில்லை.  ஏனெனில், அகத்தியர் அத்தனை கொடூரமானவர் அல்ல.  அகத்தியருக்கு கோபம் வரும், பார்த்திருக்கிறேன்.  ஆனால் யாரையும் இது வரை சாபம் இட்டதாக எனக்கு நினைவில்லை.

இந்த நண்பர் முதன் முதலில் வாங்கிய அந்த நிலத்தை வாங்கவில்லை என்று பொய் சொன்னார்.  இரண்டாவதாக அந்த இடம் பூமி தோஷம் உள்ளது, வாங்க வேண்டாம், பொறுத்திருந்தால் இதைவிட அருமையான இடம் கிடைக்கும் என்று நல்ல வழியைத்தான் அகத்தியர் காட்டினார்.  இவர் அகத்தியர் சொன்னபடி நடக்கவில்லை அவ்வளவுதான், என்று எண்ணிக் கொண்டேன்.

அகத்தியரிடம் உத்தரவு கேட்டு அவருக்காக நாடி படிக்க ஆரம்பித்தேன்.

"பொறுமை இருந்திருந்தால் இவ்வளவு நஷ்டம் வந்திருக்காது.  பணத்திற்கு ஆசைப்பட்டு, அவசர முடிவு எடுத்து விட்டான்.  அந்த இடம் ஒரு காலத்தில் மயான பூமியாக இருந்தது.  சோழர்கள் அரசாண்ட பொழுது இந்த இடத்தில் தான் பல்வேறு சிறு சிறு போர்களும் நடந்தது.  ஏகப்பட்ட பேர்கள் பலியான இடம் அது.  தட்ப வெப்ப சூழ்நிலையால் அந்த இடத்தில் பாறைகள் தோன்றினாலும் பார்ப்பதற்கு வழ வழப்பான கற்களாக மாறியது.  ஆனால் இவை எல்லாம் மக்களின் உபயோகத்திற்கு ஏற்ப்புடையதல்ல.

இவன், இன்னும் சில காலம் பொறுத்திருந்தால் இந்த இடத்திற்கு ஐநூறு ஏக்கர் பரப்பளவில் அற்புதமான மனைவளம் உள்ள பூமி கிடைத்திருக்கும்.  சிமெண்ட் தயாரிக்க பெருமளவு மூலப் பொருள்கள் உள்ள பூமி அது.  அதை வாங்கியிருந்தால் பாரத தேசத்தில் இவன் பெரும் கோடீஸ்வரராகவும், மிகப் பெரிய தொழில் வேந்தனாகவும் மாறியிருப்பான்.  இனிமேல் அதைப் பற்றி பேசி என்ன பயன்? அந்த இடமும் இனி இவனுக்கு கிடையாது.  அதுவும் கை விட்டுப் போயிற்று" என்று முடித்துக் கொண்டார்.

"என்னதான் இதற்கு பரிகாரம்? வேறு வழியே இல்லையா? என்று குரல் தழுதழுக்கக் கேட்டார்.

"இருக்கிறது.  ஆனால் அகத்தியர் சொன்னபடி நடக்க வேண்டுமே" என்று அகத்தியரிடமிருந்து பதில் வந்தது.

"கண்டிப்பாக நடக்கிறேன்" என்றார்.

"ஒன்று செய்.  இந்த இடத்தைப் பற்றி ஆசையை விட்டு விடு.  நேராக "கடப்பா": வை நோக்கி செல்.  சில காலம் தங்கு.  அங்கு உனக்கு வழி கிடைக்கும்" என்று அகத்தியரிடமிருந்து பதில் வந்தது.

"அங்கு நிலத்தை வாங்கினால் கிரானைட் கற்கள் கிடைக்குமா? என் கடன் அடையுமா? அதே ஏற்றுமதியை தொடர்ந்து செய்யலாமா?" என்று கேட்டார் அந்த கோடீஸ்வரர்.

"அகத்தியனிடமே மறைக்கிறாயே, இது நியாயமா? உன்னிடம் பணமா இல்லை.  குறுக்கு வழியில் பெரும்பணம் சேர்த்து அதை உன் ஆசை நாயகியிடம் கொடுத்து வைத்திருக்கிறாயே.  அதைச் சொல்லவா? இல்லை உன் வீட்டு பூசை அறையில் ரகசிய அறையில் நீ  குறுக்கு வழியில் சம்பாதித்த கருப்பு பணத்தை பதுக்கி வைத்திருக்கிறாயே அதைச் சொல்லவா? அந்தப் பணத்தை வைத்து பாதி தமிழ் நாட்டையே உன்னால் வாங்க முடியுமே?" என்றதும் அந்த நபர் சட்டென்று அகத்தியர் நாடியின் பாதத்தில் விழுந்தார்.

"முதலில் அகத்தியன் இட்டதொரு கட்டளையைச் செய்.  இழந்ததை மீண்டும் பெறுவாய்.  ஆனால் ஒன்று இனி வரும் தொழில் லாபத்தில் மூன்றில் ஒரு பங்கை ஏழைகளுக்கும், அனாதைகளுக்கும் செலவிடு.  ஏற்கனவே வாங்கிப் போட்ட இடத்தை உன்னிடம் பணிபுரியும் வசதியில்லாத தொழிலாளர்களுக்கு இலவசமாக வீட்டு மனையாக தானம் செய்து விடு.  அப்படி தானம் செய்யும் முன்பு பூமி தோஷ பூஜையையும் செய்து விட்டு பின்பு தானம் செய்.  உன்னுடைய எதிர்காலம் இன்னும் சிறப்பாக இருக்கும்" என்று கடுமையாகவே அகத்தியர் ஆணையிட்டார்.

இப்படி அகத்தியர் நாடி மூலம் பதில் சொல்வார் என்று அந்த நபர் சிறிதும் எதிர்பார்க்கவில்லை.  ஒன்றும் பேசாமல் எழுந்து சென்று விட்டார்.

நான்கு மாதம் கழிந்தது.

ஒரு நாள் என் எதிரில் கைநிறைய பழங்களோடு வந்து நின்றார் அந்த கோடீஸ்வரர்.  வாயெல்லாம் பல்லாகத் தெரிந்தது.  சந்தோஷம் உடலெங்கும் பூரித்திருந்தது.  கூடவே அவரது மனைவியும் வந்திருந்தார்.

அன்றைக்கு அகத்தியர் போட்ட போடில் இவர் திரும்பி என்னிடம் வருவார் என்று நான் துளியும் நம்பவில்லை.  ஆனால் அவரும் அவரோடு மனைவியும் சேர்ந்து வந்திருந்தது எனக்கு ஆச்சரியத்தை உண்டு பண்ணியது.

"அகத்தியர் சொன்னபடியே கடப்பாவுக்குச் சென்றேன்.  மூன்று மாதம் கடுமையாக உழைத்து அலைந்தேன்.  கடைசியில் அகத்தியர் சொன்னபடி ஒரு அருமையான நண்பர் கிடைத்தார்.  பீமா ராவ் என்பது அவரது பெயர்.  அவரது துணையால் கிரானைட் நிலம் ஒன்று மிகவும் மலிவான விலைக்கு கிடைத்தது.  நிலத்தில் எந்த விதப் பிரச்சினையும் இல்லை" என்றவர் " இன்னொரு ஆச்சரியமான சம்பவம் என்ன தெரியுமா? எந்த ஒப்பந்தத்தை வெளிநாட்டுக்காரர் ரத்து செய்தாரோ, அவரே மீண்டும் ஒப்பந்தம் செய்து கொண்டிருக்கிறார்.  மனதுக்கு சந்தோஷமாக இருக்கிறது." என்றார்.

"அது சரி! பழைய நிலத்தை என்ன செய்தீர்கள்?" என்று நான் கேட்டேன்.

"அதைச் சொல்ல மறந்து விட்டேனே.  அகத்தியர் சொன்னபடி புனர்பூசை செய்து என் நிறுவன ஊழியர்களுக்கு இலவசமாக மனை போட்டு கொடுத்து விட்டேன்.  இது உண்மை.  இனி எதையும் அகத்தியரிடம் மறைக்க மாட்டேன்.  வேண்டுமென்றால் அகத்தியரிடமே கேட்டுப் பாருங்கள்" என்றார் அந்த நபர்.

"கூட வந்திருப்பவர்" என்று மெதுவாக கேட்டேன்.

"சத்தியமாக இவள் என்னுடைய மனைவி தான் மற்ற தொடர்புகளை விலக்கிக் கொண்டு விட்டேன்" என்றார் மகிழ்ச்சியோடு.

"எப்படியோ நன்றாக இருந்தால் சரி" என்று அகத்தியர் சார்பாக அந்த தம்பதிகளை வாழ்த்தினேன்.

இதிலிருந்து ஒரு விஷயம் உறுதியாக புரிந்தது.  அகத்தியரிடம் மறைக்க நினைத்தால் ஏமாந்து போவோம்.  அவர் கோபப்பட்டாலும், யாரையும் கை விடுவதில்லை, சரணடைந்துவிட்டால்.

சித்தன் அருள் .................... தொடரும்!

11 comments:

  1. Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha
    Om Agatheesaya Namaha

    ReplyDelete
  2. //அவர் கோபப்பட்டாலும், யாரையும் கை விடுவதில்லை, சரணடைந்துவிட்டால்.

    உண்மையான வாக்கியம்...

    ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி...
    ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி...
    ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி...

    ReplyDelete
  3. sathiya vakku agathiyar vakku , agathiyar thiruvadigal potri

    ReplyDelete
  4. OM AGATHEESAAYA NAMAHA.
    OM AGATHEESAAYA NAMAHA.
    OM AGATHEESAAYA NAMAHA.
    GURUVAD CHARANAM.
    HARI OM NAMO NARAYANAAYA.

    ReplyDelete
  5. தங்களது மின்னஞ்சல் தர  முடியுமா  

    ReplyDelete
  6. தங்களது மின்னஞ்சல் தர  முடியுமா  

    ReplyDelete
  7. ITS TRUE. LIKE SAME AN INCIDENT HAPPENED IN OUR LIFE

    ReplyDelete
  8. I'm new to this site with grace of agasthiar.amazing site.

    ReplyDelete
  9. ஓம் அகஸ்தீசியா நமஹ |
    ஓம் அகஸ்தீசியா நமஹ |
    ஓம் அகஸ்தீசியா நமஹ |
    ஓம் அகஸ்தீசியா நமஹ |
    ஓம் அகஸ்தீசியா நமஹ |
    ஓம் அகஸ்தீசியா நமஹ |
    ஓம் அகஸ்தீசியா நமஹ |
    ஓம் அகஸ்தீசியா நமஹ |
    ஓம் அகஸ்தீசியா நமஹ |

    ReplyDelete