​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 2 May 2013

சித்தன் அருள் - 122


தனது ஒரு மகளை அழைத்துக் கொண்டு என்னை பார்க்க வந்தனர் ஒரு பெற்றோர்.

அவர்களை வரவேற்று அமரச்செய்து "வந்த விஷயம் என்ன?" என்று கேட்டேன்.

அதற்கு அந்தத் தாய்

"இவள் என் மகள்.  அவளுக்கு முப்பத்திரண்டு வயது ஆகிறது.  இன்னமும் பருவம் அடையவில்லை.  இவள் பருவம் அடைவாளா?  இவளுக்கு திருமணம் நடக்குமா?  வாரிசு பாக்கியம் இருக்குமா? என்று அகத்தியரிடம் நாடியில் கேட்டுச் சொல்லுங்களேன்" என்றார்.

இந்த மாதிரி உடல் நோயுடன் வருபவரிடம் ஒரு சில கேள்விகளையும் கேட்டுத் தெரிந்து கொள்வேன்.  அது போல் அவர்களிடமும் பொதுவாக கேட்டேன்.

"டாக்டர்களிடம் இது பற்றி கேட்டீர்களா?"

"கேட்டோம்.  அதற்குரிய வாய்ப்பே இல்லை என்று ஒட்டு மொத்தமாக கூறிவிட்டனர்.  அகத்தியர் தான் இதற்கு வழிகாட்ட வேண்டும்" என்று கண்ணீருடன் வேண்டினர்.

அகத்தியரிடம் அவர்களின் பிரச்சினைக்கு வழி கேட்கலாம் என்று, நாடியை பிரார்த்தனை செய்தபின் திறந்து படிக்க தொடங்கினேன்.

அதில், பல்வேறு முன் ஜென்ம தோஷங்களை விடாமல் சொல்லி, சதுரகிரியில் அல்லது கொல்லிமலையில் விளையும் கருதோன்றி மூலிகைகளைப் பற்றி விளக்கி, கலப்படமில்லாத அந்த மூலிகைச் சாற்றைப் பற்றியும் பக்குவமாக சொன்னார்.

"இந்த மூலிகைகள் பத்து மாதத்திற்கு ஒரு முறைதான் வளரும்.  எனவே பொறுத்திருந்து, அந்த மூலிகைச் சாற்றை காட்டிலுள்ள சித்த வைத்தியர் மூலம் ஒரு அமாவாசை விடியற்காலையில் உட்கொண்டால், அதற்ககு பிறகு பதிமூன்று மாதங்கள் கழிந்து பருவநிலை அடைவாள்" என்று நீண்டதோர் விளக்கத்தை அளித்தார்.

"திருமணத்திற்குப் பிறகு குழந்தை பெரும் பாக்கியம் உண்டா? என்றாள், அந்தப் பெண்ணின் தாய்.

"அந்த பாக்கியம் நான்கு ஆண்டுகளுக்கு பின் ஏற்படும்" என்றார் அகத்தியர்.

இந்த வார்த்தையைக் கேட்டு உண்மையிலேயே அந்த பெற்றோர் சந்தோஷப்பட்டிருக்க வேண்டும்.  ஆனால் சந்தோஷப் படவில்லை!

மவுனமாக இருந்தார்கள்.

இதனால் எனக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அந்த பெண்ணோ தலைகுனிந்தபடியே இருந்தாள்.  அவள் கண்களில் இருந்து நீர் வடிந்தது.

அந்தப் பெண்ணின் தந்தை பேசத் தொடங்கினார்.

"சார்.  எங்களை தவறாக எண்ணக் கூடாது.  இந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு எல்லா மருத்துவரிடமும் சென்று காட்டினேன்.  இவள் பருவம் அடைவதற்கு வாய்ப்பே இல்லை, ஏனெனில் கருப்பை மிகவும் சுருங்கி, செயல் அற்று போய் விட்டது.  எந்த மருத்துவச் சிகிர்ச்சையாலும் ஒன்றும் செய்ய இயலாது என்று சொல்லிவிட்டார்கள்" என்றார்.

எனக்கு உள்ளுக்குள் சிறு அதிர்ச்சிதான்!

கருப்பையே குறையோடு காணப்படும் பொழுது எப்படி சினை முட்டைகள் தோன்றும்?  பருவம் அடைவதற்கு வாய்ப்பே இல்லையே?  அப்படியிருக்க அகத்தியர் எப்படிச் சொன்னார்? என்ற கேள்வி எழுந்தது.

அந்தப் பெரியவர் சில மருத்துவச் சான்றிதழ்களை என்னிடம் கட்டினார்.  இவளுக்கு கருப்பையே இல்லை என்று ஓர் சான்றிதழ்.  கருப்பை இருக்கிறது, அது செயல்படவில்லை என்று இன்னொரு சான்றிதழ்.

வலது பக்கம் கடைசி விலா எலும்பு இல்லாததால் எப்படியும் இவள் பருவம் அடைந்து குழந்தை பெறும் பாக்கியம் உண்டு.  இதற்கு எட்டு ஆண்டுகள் தீவிரமாக மருத்துவச் சிகிர்ச்சை பெற வேண்டும். இருப்பினும் அறுதியிட்டு முழுமையாக உறுதிதர முடியாது என்று புகழ் பெற்ற பெண் டாக்டர் கொடுத்த சான்றிதழை பார்த்தபொழுது எனக்கே "பகீர்" என்றது.

அகத்தியர் என்னடாவென்றால், சர்வ சாதாரணமாக இவள் பருவமடைவாள், மூலிகைச் சாரை உண்டு வாழ்ந்தால் போதும் என்று சொல்லி விட்டாரே, இதை எப்படி நம்புவது? என்று யோசித்துப் பார்த்தேன்.

அவர்களிடம் கடைசியாகச் சொன்னேன்.  "நீங்கள் அகத்தியரிடம் கேள்வி கேட்டீர்கள், அவரிடமிருந்து நல்ல பதிலை வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.  அவ்வளவுதான்.  இதற்கு மேல் என்னால் விளக்கம் தர இயலாது.  நீங்களாயிற்று, அகதியராயிற்று" என்று தான் என்னால் சொல்ல முடிந்தது.

"நாங்க அகத்தியரை நம்பித்தான் கடைசியாக இங்கு வந்திருக்கிறோம்.  அவர் சொன்னபடி மலைகளுக்குச் சென்று மூலிகைகளை எப்பாடு பட்டேனும் பெற்று சாப்பிடச் சொல்கிறோம்.  ஆனால்..."

"என்ன ஆனால்?"

"நாங்கள் மலையிலிருந்து வாங்கும் மூலிகைகள் உண்மையானதா?  அல்லது போலியானதா? என்பதைப் பற்றி அகத்தியர் தான் வழிகாட்ட வேண்டும்.  அதற்கு உதவுங்கள்", என்றார் அந்த பெண்ணின் தந்தை!

"அதற்கென்ன?  வாங்கி வாருங்கள்.  பார்த்து சொல்கிறேன்" என்று அவர்களை அனுப்பி வைத்தேன்.

ஆறு மாதம் கழிந்திருக்கும்.

ஒரு நாள் மூன்று பாட்டில்களில் ஏதோ ஒரு தைலத்தைத் தூக்கிக் கொண்டு அந்த பெண்ணின் தந்தை என்னிடம் வந்தார்.

"பொதிகைமலை, சதுரகிரி மலை, கொல்லி மலைகளில் கஷ்டப் பட்டு தேடி மூன்று விதமான தைலங்களை கொண்டு வந்திருக்கிறேன்.  இவைதான் கருதோன்றி தைலமா?  இவை கருப்பை தோஷ நிவாரணம் தருமா? என்று தெரியவில்லை.  இதில் எதை உட்கொண்டால் இந்தப் பெண்ணுக்கு கருப்பை வளரும்? என்று அகத்தியரிடம் கேட்டுச் சொல்லுங்கள்" என்றார்.

அகத்தியரை வேண்டிக் கொண்டு நாடியைப் புரட்டினேன்.

"இந்த மூன்றுமே கருப்பை தோஷ நிவாரண மூலகை தைலங்கள் அல்ல.  அந்த மூன்றும் கலந்த செந்நிறமாக ஒரு அளவு மூலிகைச் சாறு கிடைக்கும்.  இது பொதிகை மலை உச்சியில் புலி, சிறுத்தைகள் உலாவும் காட்டுப் பகுதியில் உள்ள ஒரு சிறிய நீர் வீழ்ச்சிக்கு இடது பக்கத்தில் அமைந்துள்ள குகைக்கு அருகே வளர்ந்திருக்கும் செடியைப் பறித்து ஆறு மாதம் பக்குவப்படுத்தி தருவது.  அதுதாண்டா கருப்பை தோஷ நிவாரண மூலிகை.  இந்த மூலிகை எல்லாம் சரியானதில்லை" என்று விளக்கம் கொடுத்தார், அகத்தியர்.

"இந்த தகவலை அன்றைக்கே அகத்தியர் கொடுத்திருந்தால், இன்றைக்கு அதைக் கொண்டு வந்திருப்போம்" என்று அங்கலாய்த்தார் அந்தப் பெண்ணின் தாயார்.

"அன்றைக்கு அகத்தியர் அருள்வாக்கை கேட்க வந்திருந்த போது உங்களுக்கு அகத்தியர் மீது சிறிதும் நம்பிக்கை இல்லை.  தற்கால மருத்துவர் சொன்னதைத்தான் முழுமையாக நம்பினீர்கள்.  அதனால் தான் அகத்தியன் வாய் திறக்கவே இல்லை" என்று சட்டென்று மறுமொழி சொன்னார், அகத்தியர்.

இது உண்மைதான், ஏனெனில் நாடி பார்க்க வரும் பெரும்பாலானவர்களுக்கு அகத்தியர் அருள்வாக்கு இது என்று எண்ணுவதில்லை.  ஒரு சாதாரண ஜோதிடரிடம் ஜோதிடம் பார்ப்பதுபோல் பார்த்து விட்டுச் செல்கிறார்கள்.  தெய்வ வாக்காக - சித்தர் வாக்காக எண்ணுவதில்லை.

இப்படிப்பட்ட மனிதர்களை அகத்தியர் முன் கூட்டியே அடையாளம் கண்டு கொண்டு அவர்களது அவ நம்பிக்கைக்கு ஏற்றவாறே பதில் சொல்லிவிடுகிறார்.  ஏனெனில் அவர்கள் முழு நம்பிக்கையோடு பிரார்த்தனை அல்லது பரிகாரங்களை செய்வது இல்லை.  இதைப் பற்றி அகத்தியரும் கண்டு கொள்வதில்லை.

பின்னர் எதுவும் நடக்கவில்லை என்று சொல்பவர்களுக்கு வேறு இடம் நோக்கிச் செல்க என்று பட்டவர்த்தனமாக சொல்லி விடுகிறார்.  இதனால் எந்த நஷ்டமும் அகத்தியருக்கு இல்லை.

அகத்தியர் சொன்னதை இப்போதுதான் அந்த பெண்ணின் தாயார் ஒத்துக் கொண்டாள்.

பொதிகை மலைக்குச் சென்று அகத்தியர் சொன்ன அந்த மூலிகைகளைப் பறிப்பதாக அந்த பெரியவர் சொல்லிவிட்டு விடை பெற்றார்.

ஒரு மாதம் கழிந்தது.

"சார்! இப்போது பொதிகை மலைக்குச் செல்ல முடியாதாம்.  வனத்துறை அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்து விட்டனர்.  ஏப்ரல் கடைசியில் அல்லது மேய மாதம் பொதிகை மலைக்குச் செல்ல அனுமதி தருவோம்.  அப்போது சென்று உங்கள் தேவையை பூர்த்தி செய்து கொள்ளலாம் என்று சொன்னார்கள்" என்று சோர்ந்து போய் சொன்னார்.

"கொஞ்சம் பொறுத்திருந்து பாருங்கள்.  வேறொன்றும் செய்ய முடியாது" என்று நானும் ஒதுங்கிக் கொண்டேன்.

கடைசியாக பலமுறை வற்புறுத்தியதின் பேரில் அகத்தியர் நாடியை, அந்த நபருக்காக படித்த பொழுது.........

"இன்னும் மூன்று மாதத்திற்குள் பொதிகைப் பயணம் இருக்கும்.  அதை பயன்படுத்திக் கொண்டால் கருப்பை தோஷ நிவாரண மூலிகை கிடைக்கும்" என்று பதில் வந்தது.

நான்கு மாதம் கழிந்தது.

அந்தப் பெண், அவளுடைய பெற்றோர் இரட்டிப்பு மகிழ்ச்சியோடு ஒரு பாட்டிலில் அந்த மூலிகை தைலத்தை என்னிடம் எடுத்துக் காட்டினார்கள்.

இது தான் கருப்பை தோஷ நிவாரண தைலம் என்று அகத்தியர் அந்த தைலத்துக்கு உத்திரவாதம் கொடுத்தார்.

எப்படி இந்த மூலிகைச் சாற்றினை உட்கொள்ள வேண்டும் என்று ஏற்கனவே பொதிகை மலையிலுள்ள ஒரு சித்தர் அவர்களுக்குச் சொல்லியிருந்ததால் அகத்தியருக்கு வேலை சுலபமாக போயிற்று.

பல மாதங்கள் கடுமையாகப் போராடிப் பெற்ற அந்த மூலிகையை சந்தோஷமாக எடுத்துச் சென்றனர்.

கருப்பையே இல்லை என்றும், கருப்பை வளர்ச்சி இல்லை என்றும் சான்றிதழ் கொடுத்த இந்த டாக்டர்களையும் மீறி, இந்த  பெண்ணிற்கு கருப்பை  வளர்ச்சியுற்றால், விஞ்சான உலகத்தில் இது வியக்கத்தக்க சாதனை என்று எண்ணி நானும் பிரார்த்தனை செய்து கொண்டேன்.

எட்டு மாதம் கழிந்தது.

அந்தப் பெண்ணை மறுபடியும் பரிசோதித்த டாக்டர்கள், அவளுக்கு கருப்பை தோன்றி, வளர்ந்து கொண்டிருப்பதை அறிந்து வியந்து போயிருக்கின்றனர்.  தற்சமயம் மிகவும் பலவீனமாக கருப்பை காணப்பட்டாலும், இந்தப் பெண் பருவமடைய இன்னும் மூன்று மாதமாகும் என்று உறுதி கொடுத்ததே மிகப்பெரிய மகிழ்ச்சி அவர்களுக்கு.

இதுபற்றி என்னிடம் தகவலும் சொன்னார்கள்.

இருந்தாலும், இந்தப் பெண் பருவமடைய வேண்டும்.  அதற்குப் பிறகு திருமணம் நடக்க வேண்டும்.  அவளுக்கு வாரிசும் தோன்ற வேண்டுமே என்று அடுத்த கவலையும் ஏற்பட்டது.

"அகத்தியரை முழுமையாக நம்பி இருக்கிறோம்.  எது நடக்குமோ, அது நடக்கட்டும்" என்று அந்த குடும்பத்தினர் முழுமையாக நம்பிச் சென்றார்கள்.

ஆறு மாதம் கழிந்தது.

அந்தப் பெண் பூப்படைந்தாள்.  மருத்துவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, அவளுக்குத் திருமணம் செய்யலாம், "வாரிசு" பாக்கியம் உண்டு.  கருப்பை வலுவாக இருக்கிறது என்று சொன்னார்கள்.

இதை விட வேறு பாக்கியம் வேறு என்ன வேண்டும் என்று அக மகிழ்ந்து போனார்கள், அந்தப் பெண்ணும் அவளது பெற்றோரும்.

இன்றைக்கு....

அந்த பெண்ணுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்து நன்றாக படித்துக் கொண்டிருக்கிறார்கள்.

அகத்தியர் தன் வாக்கைக் காப்பாற்றிவிட்டார் என்று நினைப்பதைத் தவிர வேறு என்ன சொல்ல வேண்டியிருக்கிறது.

சித்தன் அருள் ..................... தொடரும்!

7 comments:

 1. ஓம் சிவசிவ ஒம்
  ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!
  ஓம் அகத்தீசாய நம!
  ஓம் அகத்தீசாய நம!
  ஓம் அகத்தீசாய நம!

  ReplyDelete
 2. Om Agathisaya Namaha
  Om Agathisaya Namaha
  Om Agathisaya Namaha

  ReplyDelete
 3. Good information for us. But i kindly requesting you to please specify your address for seeing naadi. It definitely useful for money people who they believed Siththa Medicine and the Maaga Rishi Agathiyar. In my area money people affected in diseases such as cancer and above problem.Please please its helpful for all.

  Ini Sivanin Siththam...

  ReplyDelete
  Replies
  1. Mr. J.Ganesan
   Siddhar Arut Kudil
   No. 33/56,2nd street
   co-operative colony
   opp. co-operative bus stop
   Thanjavur-7
   தொடர்பு எண் : 9443421627

   Delete
 4. Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha

  ReplyDelete
 5. Due to gathiyar vaakku, the jeeva naadi reading by Shri ganesan, Thanjavur, will be after December 2013. The jeeva naadi is kept in pooja. This is from sithar arut kudil- aranthanki sankar

  ReplyDelete
 6. Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  Om Agatheesaya Namaha
  HARI OM NAMO NAARAAYANAAYA .
  OM AGATHEESAAYA NAMAHA.

  ReplyDelete