​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 12 April 2012

சித்தன் அருள் - 68 - மகான் ராகவேந்திரர் தரிசனம்!

அந்த இயற்கையான, ரம்மியமான சூழ்நிலையில், மரம் செடி புஷ்பங்களுக்கு அருகில் ஒரு பன்னிரண்டு வயது பாலகன் சிறு பாறையில் அமர்ந்திருந்தான்.  முகத்தில் தெய்வீகக் களை.  கண்களில் அபாரமான காந்த சக்தி.  செந்நிற மேனி.  எப்பொழுதும் சிரித்துக் கொண்டே இருக்கும் தீர்க்கமான உதடுகள். நெற்றியில் யு வடிவமான சந்தனக் கீற்று.  பாகவதர் "கிராப்" உடம்பில் பட்டும் படாததுமான மெல்லிய பூணூல்.  இடுப்பில் ஆரஞ்சு நிறத்தில் மெல்லிய வேஷ்டியுடன் இருந்தான் அவன்.  எங்கேயோ சினிமாவில் பார்த்தது போல் என் கண்ணுக்குத் தென்பட்டது.


யாருமே இல்லாத அந்த அற்புதமான இயற்கைச் சூழ்நிலையில் ஒரு சிறு பையன் அங்குள்ள மரத்தடியில் சம்மணம் போட்டு அமர்ந்திருந்தது ஆச்சரியமாக இருந்தது.


என்னைப் பார்த்ததும் சிரித்தான்.


நண்பரும் நானும் அந்தச் சிறுவனின் பக்கத்தில் சென்றோம்.


"பஞ்சமுக ஆஞ்சநேயரைப் பார்க்கப் போறேளா?" என்றான் சுத்தத் தமிழில்.


"ஆமாம்" என்றேன்.  "இவ்வளவு அழகாக தமிழ் பேசுகிறாயே, உனக்கு தமிழ்நாடா?" என்றேன்.


"கும்பகோணம் பக்கத்தில்"


"இங்கேயே தங்கிவிட்டாயா?"


"ஆமாம்!"


"கூட யாராவது வந்திருகிரார்களா?  தனியே இங்கிருப்பதால் தான் கேட்டேன்!"


"தனியாகத்தான் இருக்கிறேன்.  கூடப் பிறந்தவர்களோ, பெற்றோரோ யாரும் கடைசி வரை கூட வருவதில்லையே" என்று சொன்னான்.


இதைக் கேட்டதும் எனக்கு மட்டுமல்ல, என் கூட நின்று கொண்டிருந்த நண்பருக்கும் அதிர்ச்சியாக இருந்தது.


"இங்கு வேதம் படிக்க வந்திருக்கிறான் போலிருக்கிறது.  அதான் இப்படிப் பேசுகிறான்" என்றார் என் நண்பர்.


"இல்லை.  வேதம் சொல்லிக் கொடுக்க வந்திருக்கிறேன்" என்று சிரித்துக்கொண்டே சொன்னான்.


இது எனக்கு அதிகப் பிரசன்கித்தனமாகவே இருந்தது.  "வேதம் என்ன அவ்வளவு எளிதா? அதைப் படித்து தர்க்கம் வாதம் செய்ய குறைந்த பட்சம் பதினெட்டு வருஷமாவது ஆகுமே.  இவன் என்ன இப்படிப் போடு போடுகிறான்" என்று நினைத்துக் கொண்டேன்.


"என்ன அளவுக்கு மீறிப் பேசுகிறேன் என்று நினைக்கிறீர்களாக்கும்.  அது சரி. நீங்கள் ராகவேந்திரரைத் தரிசனம் பண்ணியாகிவிட்டதா?" என்றான்.


"ராகவேந்திரரின் ப்ரிந்தாவனத்தை தரிசனம் செய்து விட்டோம்.  இன்றைக்கு ஊருக்குக் கிளம்புகிறோம்" என்றார் நண்பர்.


"நான் கேட்டதற்குப் பதில் சொல்லவில்லையே" என்று அர்த்த புஷ்டியோடு பார்த்த பொழுது என் உள்மனது ஏதோ உறுத்தியது.


"இவன் பேசுவதையும், கேட்பதையும் பார்த்தால் சாதாரண சின்னப் பையனாகத் தெரியவில்லை.  தன்னைப் பற்றி எதையும் அதிகம் சொல்லாமல், எங்களைப் பற்றியே கேள்வி கேட்கிறான்.  இவனிடம் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமகேதர்க்கு?  நான் ராகவேந்திரரைத் தரிசனம் பண்ணினால் என்ன, பண்ணாமல் போனால் இவனுக்கென்ன?  தவிரவும் மந்திரலயத்திர்க்கு வருகிறவர்கள், ராகவேந்திரரை தரிசனம் செய்யாமல் வேறு எதற்கு வருவார்களாம்?"


இப்படி எண்ணி யோசித்தபொழுது நண்பர் என்னைக் கை பிடித்து "வா போகலாம்" என்று கண்ணால் ஜாடை காண்பித்தான்.


"இன்னும் நான் கேட்டதற்குப் பதிலே சொல்ல வில்லையே" என்று அந்தப் பையன் கேட்டது என் காதில் மறுபடியும் மறுபடியும் ரீங்காரம் இட்டுக் கொண்டே இருந்தது.


"சரி வருகிறோம் தம்பி" என்று சொல்லிவிட்டு " சாரி! உன் பெயர் என்னவென்று சொல்லவே இல்லையே" என்று பெயருக்கு கேட்டு வைத்தேன்.


"பாலா ராகவேந்திரன்" என்று பதில் கிடைத்தது.


"என்னது பால ராகவேந்திரனா?"


"ஆமாம்! அங்கே ஜீவ சமாதியில் பெரிய ராகவேந்திரர்.  இங்கே உயிருடன் இருப்பது பால ராகவேந்திரன்" என்று சொல்லிச் சிரித்தான்.


இன்னமும் இவனுக்குக் குறும்புத்தனம் போகவில்லை என்பது தெரிந்தது.


பொதுவாக மாத்வாகுலத்தைச் சேர்ந்தவர்கள் எல்லோரும் ராகவேந்திரர் என்று பெயர் வைத்துக் கொள்வது வழக்கம்.  அதன்படி இவனும் தன்னைப் பால ராகவேந்திரன் என்று பெயர் வைத்துக் கொண்டதில் ஆச்சரியமில்லை என்று விட்டு விட்டேன்.


நண்பர் என்னை மேலும் அவசரப்படுத்தினான்.


"கொஞ்சம் பொறுங்கள்.  நீங்கள் ராகவேந்திர ப்ரிந்தாவனத்தைத் தரிசனம் செய்தாலும் ராகவேந்திரரைத் தரிசனம் செய்யவில்லை.  இதற்கு ராகவேந்திரரின் மூல மந்திரத்தை ஜபம் செய்தால் அவரது தரிசனம் கிடைக்கும், செய்து பாருங்களேன்" என்று கூறி மெதுவாக எழுந்தான்.


எனக்குச் "சுரீர்" என்று உரைத்தது.


அடடா! ராகஹ்வேந்திரரைத் தரிசிக்கும் முன்பு ராகவேந்திரரின் மந்திரமான


"பூஜ்யாய ராகவேந்திராய சத்யா தர்ம ரதாயசா
பஜதாம் கல்ப வ்ரிக்க்ஷாய நமதாம் காமதேனவே!"


இதை மனதிற்குள் தினமும் சொல்லச் சொல்லி அகஸ்தியர் எனக்கு ஆணையிட்டிருந்தார்.


ஆனால் நான் அதை அடியோடு மறந்துவிட்டேன்.


பொதுவாக நாடி பார்க்கும் முன்பு சில மூல மந்திரங்களை அகஸ்தியர் சொல்லி "இதை விடாமல் ஜபித்துக் கொண்டிரு.  இதை உன் மனதிற்குள் ஜெபி. வெளியே தெரியும்படி ஜெபிக்கதே" என்று ரகசியமாகச் சொல்வது உண்டு.


அப்படி நான் ஜெபிக்காமல் மற்றவர்களுக்கு நாடி படித்தால் ஒன்று நாடியில் எந்தச் செய்தியும் வராது, அல்லது ஒன்றுக்குப் பதிலாக வேறொன்று வரும்.  சரியாக அமையாது.


சில சமயம், "இதை உன் மனதிற்குள்ளேயே இருக்கட்டும்.  காரியம் நடக்கும் வரை வெளியே சொல்லாதே என்று சில செய்திகளை முன் கூடியே எனக்குச் சொல்வதும் உண்டு.  இதையும் மீறி நான் அவசரப்பட்டோ அல்லது உற்சாகத்தோடோ  வெளியே சொன்னால் நான் சொல்வதற்கும், நடப்பதற்கும் நேர் எதிர்மறையாக மாறிவிடும்.


இதெல்லாம் ஜீவ நாடியின் சூட்சுமங்கள்.  இருந்தாலும் இதுவே என்னைத் தர்ம சங்கடத்தில் ஆழ்த்தி விடுவதும் உண்டு.


ராகவேந்திரரின் இந்த மூல மந்திரத்தை அகஸ்தியர் என்னக்குச் சொல்லியும், நான் மறந்து போனதை எப்படி இந்தச் சிறுவன் எனக்கு எடுத்துக் காட்டினான் என்பதுதான் என் மனதில் விழுந்த சம்மட்டி அடி.


நண்பரிடம் சொன்னேன்.


"இந்த சிறுவன் தெய்வீகத் தன்மையுடையவன்.  ராகவேந்திரரின் மூல மந்திரத்தைச் சொல்லச் சொல்கிறான்.  இங்கேயே இவன் கண் முன்னே நாம் இருவரும் அந்த மந்திரத்தைச் சொல்வோம்" என்றேன்.


நண்பரும் தனது அவசரத்தை மறந்துவிட்டு, கொண்டு வந்த பையைக் கீழே வைத்துவிட்டு கண்ணை மூடிக்கொண்டான். அந்த ஜபத்தை இருவரும் தொடர்ந்து சொன்னோம்.


சில நிமிடங்கள் கழித்துக் கண்ணைத் திறந்து பார்த்த பொழுது, அந்தப்  பையன் மெல்ல நடந்து கொண்டிருந்தான்.  பத்தடி தூரத்தில் சிறுவனாகத் தோன்றியவன், பதினைந்து அடி தூரத்தில் பகவான் குரு ராகவேந்திரராக என் கண்ணுக்குக் காட்ச்சியளித்துக் கொண்டே சென்றார்.  ஆகாய ஜோதி பூமியில் தவழ்ந்து போவது போல இருந்தது.
உடம்பெல்லாம் புல்லரித்தது.  (உண்மையாகவே இதை தட்டச்சு செய்கிற பொழுது, எனக்குள் ஒரு குளிர்ச்சி பரவி, உடலில் ரோமங்கள் எல்லாம் எழுந்து நிற்க, ஒரு மின்சாரம் என்னுள் பாதம் முதல் தலை வரை ஓடியது உண்மை.  கண்ணை மூடினால் அவர் நடந்து செல்வதும் தெரிகிறது.  ஒன்றும் பேசவே தோன்றவில்லை!)


இதற்கு பிறகு எனக்கு மந்திரமே வாயில் வரவில்லை.  இனம் புரியாத சக்தியினால் பீடிக்கப்பட்டது போல் இருந்தேன்.  தெய்வ தரிசனம் என்பது இதுதானோ? என்று நினைத்து நினைத்து புளங்கிதம் அடைந்தேன்.


இப்படிப்பட்ட அனுபவம் கிடைத்தது என்பது, எனக்கு கிடைத்த மிகப் பெரிய புண்ணியம்! (உண்மை).  இதை என் உள்ளுணர்வு இன்றைக்கும் எண்ணி எண்ணி சந்தோஷம் அடைகிறது.


இப்படிப்பட்ட ஒரு பாக்கியத்தை எனக்கருளிய அகத்தியருக்கு நன்றியைச் செலுத்தினேன்.


நான் என் சுய நினைவுக்கு வந்த போது என்னருகில் இருந்த நண்பரைப் பார்த்தேன்.


அவர் இன்னமும் கண்ணை மூடிக் கொண்டு ஜபித்துக் கொண்டிருந்தார்.


பத்து நிமிஷம் கழிந்தது.  "அந்தப் பையனை காணவில்லையே" என்று சுற்றும் முற்றும் தேடினார்.


"நண்பா! உனக்கு நான் எப்படி நன்றி சொல்வது என்று தெரியவில்லை.  நமக்கு காட்ச்சியளித்த அந்தச் சிறுபையன் பால ராகஹ்வேந்திரன் இல்லை.  சாட்சாத் ராகவேந்திர சுவாமிகள் தான்.  மூல மந்திரத்தை நான் ஜெபிக்க மறந்து போனதை ஞாபகபடுத்தி எனக்கு ராகவேந்திரராகத் தரிசனம் கொடுத்து அப்படியே செடி கொடிக்கிடையில் மறைந்தும் போனார்" என்றேன்.


"அப்படியா?"


"அதுமட்டுமில்லை! என் கண்ணில் பாலகனாக தோன்றியவன், பதினைந்து அடி தூரத்தில் வயதான ராகவேந்திரராகக் காட்சியளித்து அப்படியே மறைந்து போனதை நான் உணர்ந்து கொண்டேன்.  உனக்கு எதுவும் தோன்றவில்லையா?" என்று கேட்டேன்.


மகிழம் பூவின் வாசமும், பவள மல்லியின் வாசமும் திடீரென்று எனக்குத் தெரிந்தது.  எப்படி அந்த வாசனை வந்தது என்று யோசித்தேன். அருகில் அதற்குரிய மரமே இல்லை.  எனவே லேசாகக் கண் திறந்து பார்த்த பொழுது அதோ அந்தச் செடி, கொடிக்கிடையில், வயதான முக்காடு போட்ட ஒருவர் மெதுவாகச் சென்று கொண்டிருந்தார்.  அவரது பின்புறம் தெரிந்தது.  மற்ற படி உன் அளவுக்கு பகவான் ராகவேந்திரர் என் கண்ணில் தென்படவில்லை.  எனக்கு கொடுத்து வைத்தது அவ்வளவுதான்" என்றான் என் நண்பன்.


"அப்படிச்சொல்லதே.  உன்னால்தான் எனக்கு ராகவேந்திரர் தரிசனம் இங்குக் கிடைத்திருக்கிறது.  நீதானே பஞ்சமுக அனுமானைத் தரிசனம் செய்யலாம் என்று கூடிக் கொண்டு வந்தாய்.  இல்லையென்றால் ஒன்றுமே கிட்டாமல், சோர்வுடன் ஊர் திரும்பி இருப்போம்" என்றேன்.


"ஆமாம்.  நாம் இரண்டு பெறும் இந்தத் தெய்வீக அனுபவத்தை பெற்று இருக்கிறோமே.  இதைச் சொன்னால் யாராவது நம்புவார்களா?" என்றான்.


"மற்றவர்கள் நம்பினால் நம்பட்டும்.  நம்பாவிட்டால் போகட்டும்.  உனக்கும் எனக்கும் இந்தத் தரிசனப் பாக்கியம், கிடைத்தது உண்மை தானே?" என்றேன் உற்ச்சாகத்துடன்.


அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது.


கீழே வைத்திருந்த பையை நாங்கள் கையில் எடுக்கும் பொழுது அந்தப் பையின் மீது குங்குமத்தால் பிசைந்து தடவப்பட்டது போன்ற ராகவேந்திரரின் ப்ரிந்தாவனத்தில் கொடுக்கப் படும் மந்திராட்சதையும், ரோஸ் நிறத்தில் சிறு சிறு துண்டுகளாக அல்வா போல் அழகாக வெட்டப்பட்டு கொடுக்கும் இனிப்பும், பூவோடு காணப் பட்டது.


நன்றாக "ஜிப்" வைத்து மூடிக்கொண்டு வந்த எங்கள் இருவரது பையின் மீது இந்த மந்திராட்ச்சதையும் இனிப்பான நைவேத்தியத்தையும், புஷ்பத்தோடு வைத்தவர் யார்?


எங்களைத் தவிர வேறு யாரும் அந்தப் பிற்பகல் பொழுதில் அங்கு இல்லை.


அப்படியானால் சாட்சாத் ராகவேந்திரரின் கருணையில்லாமல், இது நடந்திருக்காதே.  ஆகா! அப்படிஎன்றால் உண்மையில் நாங்கள் இருவரும் கொடுத்து வைத்தவர்கள் தான் என்று ஆனந்த மகிழ்ச்சியில் ஒருவருக்கொருவர் ஆனந்தக் கண்ணீரைச் சொறிந்தோம்.


இதற்குப் பிறகு பஞ்சமுக ஆஞ்சநேயரைத் தரிசிக்கவா, இல்லை இந்த சந்தோஷத்தோடு அக்கரைக்குச் சென்று ஊருக்குத் திரும்பி விடலாமா? என்று ஒரு சந்தோஷ சஞ்சலம் ஏற்பட்டது.


உடனே நண்பர் சொன்னார் " நாம் இங்கு வந்ததே பஞ்ச முக ஆஞ்சநேயரைத் தரிச்க்கத்தான்.  அதை மறந்துவிட்டுப் போவது நல்லதல்ல.  வா போகலாம்" என்று சொல்ல,


ராகவேந்திரர் தரிசனம் கொடுத்த அந்த மண்ணில் புரண்டு புரண்டு விழுந்து அவருக்கு நமஸ்காரம் செய்துவிட்டு தெய்வீகச் சந்தோஷத்தோடு பஞ்ச முக அனுமானை தரிசிக்கக் கிளம்பினோம்.


ஒரு பாறை வடிக்கப்பட்டது போல பஞ்ச முக ஆஞ்சநேயர் கம்பீரமாகத் தரிசனம் கொடுத்தார்.  ஆனந்தமாகத் தரிசனம் செய்தோம்.


அந்த திவ்யமான அனுமன் தரிசனத்தை நல்லபடியாக முடித்துவிட்டுத் திரும்பும் பொழுது அங்குள்ள ஒரு அர்ச்சகர் விறு விறு என்று என்னை நோக்கி வந்தார்.


கை நிறைய அனுமன் பிரசாதத்தை கொடுத்துவிட்டு "நீங்க யார் எங்கிருந்து வருகிறீர்கள் என்று எனக்குத் தெரியாது.  நீங்க "ரணமண்டலம்" சென்று விட்டு ஊருக்குப் போங்கள் என்று எனக்கு சொல்லச் சொல்லி உத்திரவு ஆகியிருக்கிறது" என்றார்.


"ரணமண்டலமா? அது எங்கே இருக்கிறது?" என்று நான் கேட்கும்பொழுது நண்பர் இடை மறித்தார்.


பக்கத்தில் தான் இருக்கிறது.  அங்கு தான் நான் ஆபிஸ் வேலையாக வந்தேன்.  அதற்குள் மறந்துவிட்டதா? என்று கேட்டுவிட்டு "ரணமண்டலத்தில் எங்குச் செல்லவேண்டும்? என்ன பார்க்க வேண்டும்?  எப்பொழுது செல்ல வேண்டும்? என்று கேட்டான்.


"ரண மண்டலத்தில் ஒரு பெரிய மலை இருக்கிறது.  அந்த மலையில் ஏறிவிட்டு வாருங்களேன்" என்று சொன்னாரே தவிர முழுமையாக எதையும் சொல்லவில்லை.


"சரி" என்று பெயருக்கு சொல்லிவிட்டு நண்பருடன் கலந்து ஆலோசித்தேன்.


"எதோ அசரீரி சொன்ன மாதிரி இந்த அர்ச்சகர் பிரசாதத்தைக் கொடுத்துவிட்டு உத்தரவு போடுகிறார்" என்றவன், "அந்த அர்ச்சகர் முகத்தை பார்த்தாயா?" என்றான்.


"சரியாகப் பார்க்கவில்லை"


"எனகென்னவோ கொஞ்ச நேரத்திற்கு முன்பு பின்புற தரிசனம் கொடுத்த ராகவேந்திரர் எனக்கு இப்போது அர்ச்சகர் ரூபத்தில் முன்புறமாகத் தரிசனம் கொடுத்து அருள்வாக்குச் சொன்னதுபோல் தெரிகிறது" என்றவன் "சரி... சரி!.  நமக்கும் மீறி ஏதோ சில சக்திகள் நம்மை எங்கேயோ கொண்டு செல்கின்றன.  நான் உன்னை ரணமண்டலத்தில் காரில் இறக்கிவிட்டுச் செல்கின்றேன்,  எனக்கு ஆபிசில் வேறு வேலை இருப்பதால் நான் ஊருக்குச் செல்கிறேன்.  நீ ரணமண்டலத்தில் தங்கி மலைக்குச் சென்று வா.  அங்கு ஆஞ்சநேயர் இருப்பதாகச் சொல்கிறார்கள்.  எனக்கும் சேர்த்து தரிசனம் பண்ணிவிட்டு வா" என்றான் என் நண்பன்.


(நண்பர்களே! இந்த தொகுப்பை தட்டச்சு செய்த பின் என்னுள் என்னவோ இனம் புரியாத மாற்றம்!  அதை சில நாட்கள் இருந்து அனுபவித்த பின் மறுபடியும் சித்தன் அருளில் உங்களை சந்திக்கிறேன்!  அதுவரை விடை கொடுங்கள்!)

11 comments:

  1. இந்த பாக்கியசாலி யாரென்று தான், சொல்ல மாட்டேன் என்கிறீர்கள். தயவு செய்து அகத்தியரை வழிபடும் முறைகளையாவது கூறுங்கள். Thank you. Valli.

    ReplyDelete
    Replies
    1. தங்கள் வருகைக்கு நன்றி. அகத்தியர் தரிசன விதி என்று இதற்க்கு முன்னே போட்டிருந்தேன். அதில் மிக தெளிவாக விஷயங்கள் எழுதப்பட்டுள்ளது. தொடுப்பை கீழே தருகிறேன். படித்து உபயோகப்படுத்திக்கொள்ளுங்கள்.

      http://siththanarul.blogspot.in/2011/08/blog-post_06.html

      Delete
    2. அன்புள்ள அய்யா,
      பதில் தந்தமைக்கு மிக்க நன்றி. தாங்கள் பல இடங்களில் "தீட்டு கலந்த பக்தி" என்று அகத்தியர் சொல்வதாக எழுதுகிறீர்கள். அப்படி என்றால் என்ன? சொன்னால் தெரிந்து கொள்ளுவோம். மிகவும் நன்றி.
      Valli.

      Delete
    3. தீட்டு என்று அகத்தியர் பெருமான் கூறுவது பல விதங்களில் உள்ளது. அவை யாவன,

      மரணத்தினால் வருகிற தீட்டு
      பிறப்பினால் (பிரசவ காலத்தில்) வருகிற தீட்டு
      பெண்களுக்கு ஏற்ப்படும் மாத விலக்கினால் வரும் தீட்டு
      சுத்தம் இல்லாமல் இருப்பதால் வரும் தீட்டு
      தீய கொடிய எண்ணங்களால் வரும் தீட்டு
      கேட்ட செய்கைகளால் வரும் தீட்டு

      இப்படிப்பட்ட நிலைகளில் பக்தி செய்வதை "தீட்டு கலந்த பக்தி" என்று அகத்தியர் குறிப்பிடுகிறார்.

      Delete
    4. அடுத்து ஆஞ்சநேயர் தரிசனத்தை எதிர் பார்த்து காத்து இருக்கிறோம்.

      Delete
  2. படிக்கும் போது எனக்கே உடம்பு சிலிர்த்தது...உங்களுக்கு எப்படி இருந்து இருக்கும்...நினைக்கும் போதே பரவசமாக இருக்கிறது....சீக்கிரம் அந்த பரவச நிலையை அனுபவித்து விட்டு வெகு சீக்கிரமாக வரும்மாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் - நன்றி சாமிராஜன்

    ReplyDelete
    Replies
    1. நன்றி! நான் இன்னும் அந்த குளிர்ந்துபோன நிலையை விட்டு இன்னும் வெளியே வரவில்லை.

      Delete
  3. நன்றி அய்யா...நீங்க எனக்கு பதில் சொன்னதே எனக்கு அதிர்ஷ்டம் நினைக்கிறன்...மீண்டும் வந்துவிட்டீர்கள்...நிறைய எழுந்துங்கள்...நாங்களும் உங்களுடன் பயணிக்கிறோம்...நன்றி சாமிராஜன்

    ReplyDelete
  4. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete
  5. உடம்பெல்லாம் புல்லரித்தது. (உண்மையாகவே இதை தட்டச்சு செய்கிற பொழுது, எனக்குள் ஒரு குளிர்ச்சி பரவி, உடலில் ரோமங்கள் எல்லாம் எழுந்து நிற்க, ஒரு மின்சாரம் என்னுள் பாதம் முதல் தலை வரை ஓடியது உண்மை. கண்ணை மூடினால் அவர் நடந்து செல்வதும் தெரிகிறது. ஒன்றும் பேசவே தோன்றவில்லை!)

    Unmaiyagave Idhai Padikum Boludhu Udambellam Pullarithu Oru Kulirchinilai Paravukiradhu...

    Aasan Agatheesar Karunai...

    Ragavenderar Swamy Padhangal Potri...

    ReplyDelete