அந்த அம்பாஸிடர் காரில் என் நண்பர் ஒருவர் இருந்தார்.
அவரைக் கண்டதும் எனக்கு மகிழ்ச்சி. முன்பின் தெரியாத இடத்தில் வசதிகள் பொருந்திய நண்பர், அதுவும் காரில் வந்து நிற்கிறார் என்பதை நினைக்கும் போது சந்தோஷமாக இருந்தது. அவருடன் காரில் ஏறி மந்திராலயா ஊருக்குப் பயணமானேன். அவர் இறை வழிபாட்டில் மட்டுமல்ல, நான்கு கோயில்களுக்கு செல்ல வேண்டும், நான்கு பேருக்கு உதவ வேண்டும் என்ற நல்ல எண்ணம் கொண்டவர். இன்னும் சொல்லப்போனால் என் கையில் இருக்கும் நாடி உண்மைதானா? நான் சொல்வதெல்லாம் கதையா அல்லது கற்பனையா என்று கூட எனக்குத் தெரியாமல் ஆராய்ந்து பார்த்தவர்.
முதன் முதலில் அவருக்கு நாடி படித்த போது ஆயிரம் கேள்விகளைக் கேட்டார். "அதெப்படி பெருவிரல் ரேகையில்லாமல் நாடி படிக்க முடியும்? எப்பொழுது கேள்வி கேட்டாலும் அகஸ்தியர் எப்படி பதில் சொல்வார்? இதுவரைக்கும் அகஸ்தியர் நாடி சொல்லி எல்லோருக்கும் எல்லாமே நடக்கவில்லையே? பணத்தை வைத்துதானே பரிகாரம் செய்ய வேண்டியிருக்கிறது! அது மட்டுமின்றி எதற்கெடுத்தாலும் எல்லாம் முன் செய்த வினை என்றுதானே எல்லா நாடிகளும் சொல்கிறது! பிறகு எதற்கு நாடி பார்க்க வேண்டும்? நாடி என்பது உண்மையா அல்லது பொய்யா, இதற்கு பதில் என்ன? இந்த இருபதாம் நூற்றாண்டில் இப்படியொரு அதிசயம் நாடியில் நடக்கிறது என்றால், பின் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க போலீஸ்காரர்களே தேவை இல்லையே. போலீஸ் ஸ்டேஷனும் தேவை இல்லையே. நாடியைப் படித்தே குற்றவாளி யார் என்று சொல்லிவிடலாமே. அதை ஏன் அகஸ்தியர் சொல்லுவதில்ல?" என்று இதுபோன்று நூற்றுக் கணக்கான கேள்விகளை என்னிடம் கேட்டவர்தான் என் நண்பர்.
இவரது கேள்விகள், இன்னும் சொல்லப்போனால், பகுத்தறிவு வாதிகளைவிட மிக அதிகமாகவும், இருந்தன. உண்மையில் நண்பர் கேட்டது அத்தனையும் நியாயமானதுதான். அதற்கு என்னால் அப்போது பதில் சொல்ல முடியவில்லை. சாதாரணமாக என் கைக்கு இந்த ஜீவநாடி கிடைக்காமலிருந்திருந்தால் இப்படித்தான் நானும் நாடி படிக்கிறவர்களைப் பார்த்து கேட்டிருப்பேன். நண்பர் தெய்வ பக்தி கொண்டவர். பழைய கால சம்பிரதாயப்படி நடப்பவர். நானோ எதிலும் பொறுப்பில்லாமல் மற்றவர்களை கேலி கிண்டல் செய்து, பெரியோர்களை மதிக்காமல், தெய்வபக்தியை நிந்தனை செய்ததினால் தான் மற்றவர்களுக்கு தெய்வ நெறிப்படி வழிகட்டும்படி அகஸ்தியர் எனக்கு கட்டளை இட்டிருக்கவேண்டும் என்று என் நண்பர் பின்னர் எனக்கு விளக்கம் சொன்னதும் உண்டு.
நண்பர் கேட்ட அத்தனை கேள்விகளுக்கும் உடனடியாக அப்போது அகஸ்தியரிடமிருந்து பதில் வரவில்லை. உடனடியாக பதில் வராததால் இந்த நாடியெல்லாம் போலி, தெய்வமாவது நாடி மூலம் பேசுவதாவது, எல்லாம் ஏமாற்றுவேலை. இப்படி ஏமாற்றுகின்ற இந்த நாடிக்காரரான உன்னை இந்தியன் பீனல் கோடு நூற்றி இருபதின்படி உள்ளே போடவேண்டும் என்று கூட விளையாட்டாக சொன்னது உண்டு.
ஆனால் காலம் செல்ல செல்ல அகஸ்தியர் நாடியை தொடர்ந்து விடாமல் பார்த்ததின் விளைவு, நண்பர் வியந்து போகும் அளவுக்கு சில உதாரணங்களையும், அவர் வாழ்க்கையில் நடக்கப் போகும் சில சம்பவங்களையும் அகஸ்தியர் சொல்லி, அது நடந்த பிறகு தான் "நாடி ஜோதிடம் நல்ல ஜோதிடம். அது சொல்பவரின் நன்னடத்தை, ஜபம், பிரார்த்தனை, நம்பிக்கை, ஒழுங்கு, எல்லாம் நல்லபடியாக இருந்தால் நடப்பதும் நன்றாக நடக்கும் என்பது மட்டுமல்ல, நாடி ஜோதிடத்தின் தத்துவமே" என்பதையும் உணர்ந்தார்.
விதியை மாற்ற முனிவர் நமக்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்து இறைவன் கட்டளையிட்ட பின் அதை முனிவர் நமக்கு முன்கூட்டியே தருகிறார். இதற்கு முதலில் பொறுமையும் நம்பிக்கையும் தேவை, நமக்கு எல்லாமே உடனே நடக்க வேண்டும் என்று ஆசை, இல்லாவிட்டால் தூற்றுகிறோம். இதனால் தான் நாமும் ஏமாந்து போகிறோம். நம்பிக்கை குறைவதால் எல்லாருமே கற்பனையாகக் கூடத் தோன்றுகிறது. இதை என் நண்பர் போன்றோர் பின்னால் தான் உணர்ந்தனர்.
இந்த நினைவுகளுடன் நண்பர் ஏதேதோ பேச்சுக் கொண்டுத்துக் கொண்டு துங்கபத்ரா நதியின் அழகைப் பார்த்துக் கொண்டே மந்திராலயாவில், அவர் தங்கி இருக்கும் அறையை அடைந்தேன்.
உள்ளே நுழைந்ததும் நான் கேட்ட கேள்வி இதுதான்.
"நான் இங்கே வரப்போறேன்னு உனக்கு எப்படித் தெரியும்? உன்னை நான் கொஞ்சம் கூட ரயில்வே ஸ்டேஷனில் எதிர்பார்க்கவே இல்லை" என்றேன்.
"எனக்கு தெரியும். நீ இங்கே வரப்போறேன்னு" என்றான் பதிலுக்கு.
"எப்படி?"
"அகஸ்தியர் உனக்கு மட்டும்தான் அருள் புரிவாரா என்ன? எனக்கும் அருள் புரிந்திருக்கிறார்" என்று சொல்லி சிரித்தார்.
"நேரத்தை வீணாகாதே. சட்டென்று விஷயத்திற்கு வா" என்றேன்.
"நான் சொல்றதுக்கு முன்னாள் ஒரு கேள்வி. கால பைரவருக்கு ஒன்பது நாளுக்கு விளக்கு ஏற்றச் சொன்னார் அகஸ்தியர். ஆனால் நான்கு நாள்தான் விளக்கு ஏற்றி இருக்கிறாய். பாக்கி நாள் விளக்கை யார் ஏற்றுவது?
எனக்கு பகீர் என்றது. இது எப்படி இவனுக்குத் தெரியும் என்று என் உள்மனம் அலைபாய்ந்தது.
மீண்டும் அவனே தொடர்ந்தான்.
"பரவாயில்லை. உன் சார்பில் தொடர்ந்து விளகேற்ற நானே அங்கு ஏற்பாடு செய்துவிட்டேன். அதை விடு. இன்னொரு சமாச்சாரம். உனக்கு ரயிலில் டிக்கெட் எடுக்க ஏற்பாடு செய்ததும் நான்தான். அது தெரியாதா உனக்கு?" என்றான்.
எனக்கு கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. எப்படி இந்த விஷயமெல்லாம் தெரிந்தது. ஏனெனில் நான் நண்பனை பார்க்கவும் இல்லை. இது விஷயமாக பேசவும் இல்லையே என்று யோசித்தேன்.
"எனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்னு நினைக்கிறாயா? சொல்கிறேன் கேள். போனவாரம், திருவண்ணமலையில் நான் சப்தரிஷி நாடி பார்த்துக்கொண்டிருக்கும் பொழுது உன்னுடன் மந்த்ராலயா பயணம் செய்யுமாறு உத்திரவு வந்தது. சப்தரிஷி நாடி சொன்னதின் பேரில் நேற்றைய தினம் உனக்கும் எனக்கும் இரண்டு டிகேடுகளை நான்கு நாட்களுக்கு முன்பே ரிசர்வ் செய்தேன். இதை ரகசியமாக வைத்திருந்தேன். ரயில்வே ஸ்டேஷனில் உன்னை ஆச்சரியப்படுத்தலாம் என்று நினைத்தேன். அதற்குள் என் கம்பனி விஷயமாக ரணமண்டலம் வரை வர அவசர வேலை ஒன்று வந்துவிட்டது. நேற்றே ரணமண்டலம் வரவேண்டும் என்பதால், காரில் புறப்பட்டு வர வேண்டியதாயிற்று. இதற்கு முன்பு மறுபடியும் நான் திருவண்ணமலையில் இருக்கும் சப்தரிஷி நாடி படிப்பவரிடம் இந்தச் சூழ்நிலையைச் சொன்னபோது கால பைரவர் கோயிலில் விளகேற்ற பாக்கி ஐந்து நாளுக்கும் ஏற்பாடு செய்துவிட்டு விநாயகருக்கு சூரைத் தேங்காய் உடைத்துவிட்டு, ரிஷி சொன்ன சொல்லை தட்டிய பாவத்திற்கு காணிக்கையை அகஸ்தியர் கோயிலில் செலுத்திவிட்டு புறப்படச் சொன்னதின் பேரில் எல்லா ஏற்பாடுகளையும் செய்துவிட்டு காரில் புறப்பட்டு நேற்றே வந்தேன், என்றான் என் நண்பன்.
இது கேட்க ஆச்சரியமாக இருந்தது. ஆனால் நம்புவதற்கு பலமணி நேரம் பிடித்தது. ரயில் நிலையத்தில் நான் பட்ட கஷ்டத்தைச் சொல்லி "அது சரி எனக்கு டிக்கெட் கொடுத்த நபர் யார்?" என்றேன்.
"என் கம்பனியில் பணிபுரியும் நபரின் உறவினர். அவருக்கு உன்னைத் தெரியாது. இரண்டு டிக்கெட்டுகளையும் கொடுத்து உன் அங்க அடையாளத்தைச் சொன்னேன். வீட்டு விலாசத்தை கொடுத்தேன். அதன்படி டிக்கெட்டைக் கொடுப்பதற்குப் பதிலாக ஸ்டேஷனுக்கு வந்து திண்டாடி அப்புறம் கடைசி நேரத்தில் கஷ்டப்பட்டுக் கொடுத்திருக்கிறான். வீட்டில் வந்து கொடுத்திருந்தால் நீயும் டென்ஷனாகி இருக்க மாட்டாய்" என்றான் என் நண்பன், சர்வ சாதாரணமாக.
"இதுவரை அகஸ்தியர் தான் அரூபமாக ஓளி வடிவில் ஜீவநாடி மூலம் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார் என்று நினைத்திருந்த எனக்கு திருவண்ணாமலை சப்தரிஷி நாடியிலும் இப்படி வருகிறது என்பது மிகப் பெரிய சந்தோஷத்தையும் ஆச்சரியத்தையும் தந்தது.
இது எப்படி சாத்தியமாயிற்று என்று ஆராய நான் முற்படவில்லை. நதி மூலம், ரிஷி மூலம் பார்க்கக் கூடாது என்பது போல் நான் சப்தரிஷி நாடி மூலம் பார்க்க விரும்பவில்லை.
மந்திராலயத்தில் மூன்று நாட்கள் தங்க வேண்டும். மூன்றாம் நாள் பகலிலோ அல்லது இரவிலோ கனவிலோ அல்லது நனவிலோ ஸ்ரீ ராகவேந்திரர் தரிசனம் கிடைக்கும் என்பது அகஸ்தியரின் அருள் வாக்கு.
ஆவியைக் காட்டியவர் ஆண்டவனின் அருள்பெற்ற அவதார புருஷரான ராகவேந்திரரையும் காட்ட விரும்பிகிறார் என்பது எனது நினைப்பு.
ஜீவசமாதியின் முன்பு விழுந்து விழுந்து வணங்கினேன். முதல் இரண்டு நாட்கள் ஒன்றுமே நடக்கவில்லை. நண்பரும் மூன்று நாட்கள் என்னதான் தங்கினார். ஒவ்வொரு சமயத்திலும் "என்ன தரிசனம் கிடைத்தது?" என்று கேட்டான்.
என் கண்ணுக்கு, மந்திராலயா கோயிலில் உள்ள அத்தனை பேர்களும் "ஸ்ரீ ராகவேந்திரர் தான் என்றுதான் தெரிந்தது. அங்கு காணப்பட்ட பெரும்பாலான மனிதர்களின் உருவ மைப்பு, சந்தன கீற்று. மாத்வர் உடை, சிவப்பு நிறம், ஆரஞ்சு நிற உடைகள் அத்தனையும் பார்க்கும் பொழுது ஸ்ரீ ராகவேந்திரர் போல்தான் தோன்றியது. நல்ல சாப்பாடு, மூன்று வேளை துங்கபத்ராவில் குளியல். ராகவேந்திரர் பிருந்தாவனத்தில் எட்டு திசைக்கும் பதினெட்டு நமஸ்காரங்களைச் செய்து ராகவேந்திரரின் மூல மந்திரத்தைச் சொல்லிக் கழித்தாயிற்று.
என் கண்ணுக்கு ஸ்ரீ ராகவேந்திரரின் தரிசனம் கிடைக்கவில்லை. என்னைவிட என் நண்பனுக்கு மிகவும் வருத்தம். இன்னும் பத்து மணி நேரம் தான் இருந்தது. பொழுதும் போகவில்லை. வேறு என்ன செய்வது என்றும் தெரியவில்லை.
"துங்கபத்ரா நதிக்கு அக்கரையில் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயில் உண்டு சென்று பார்க்கலாம்" என்று நண்பர் வற்புறுத்த பரிசிலில் கடந்து அக்கரைக்குச் சென்றோம். அப்படியாவது சில மணி நேரம் கழியட்டும் என்ற எண்ணம் தான்.
சாதரணமாக முட்டியளவு ஜாலம் தான் இருக்கும். நடந்தே சென்று விடலாம். ஆனால் ஆங்காங்கே முதலைகள் இருப்பதால் சற்று ஜாக்கிரதையாக நதியைக் கடக்க வேண்டும் என்று எல்லோரும் முதலில் சொன்னார்கள்.
இப்படி ஒரு பயத்தோடு பஞ்ச முக ஆஞ்சநேயரைத் தரிசிக்க போவதை விட பேசாமல் ராகவேந்திரர் ப்ருந்தவனத்திலேயே தங்கிப் பிரார்த்தனை செய்து விடலாம் என்ற என் எண்ணத்தை அடியோடு விரட்டிவிட்டு வலுக்கட்டாயமாக பரிசிலில் அக்கரைக்கு அழைத்து சென்ற நண்பரின் துணிச்சலைப் பாராட்ட வேண்டியதுதான்.
அக்கரையில் இறங்கி அப்படியே ஒரு ஒற்றையடிப் பாதையில் சென்று கொண்டிருந்தோம். எங்கள் இருவரைத் தவிர வேறு எந்த ஜீவராசியும் அப்போது அந்த இடத்தில் இல்லை.
நேரம் மதியம் மூணு அல்லது மூன்று நாற்பது இருக்கலாம். திடீரென்று யாரோ கனைப்பது போல் சப்தம். திரும்பி பார்த்தோம்.
சித்தனருள்.............. தொடரும்!
Hello sir,
ReplyDeleteDoes anyone has info on " திருவண்ணாமலை சப்தரிஷி நாடி " ? where to find ? Any address/ phone number ?? Your guidance most appreciated.
Thanks!
Bala
குரு வாழ்க! குருவே துணை!!
ReplyDeletefollowing.....
ReplyDelete