​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 5 April 2012

சித்தன் அருள் - 66


அந்த நள்ளிரவிலும் எனக்குத் தைரியம் தந்த அகஸ்தியருக்கு நன்றி சொல்லி நான் திரும்பும் பொழுது இரவு மணி இரண்டு.


திரும்பி நடக்க வழி தெரிகிறதா என்று டார்ச் லைட்டை அடித்தேன்.  பளிச்சென்று எரிந்தது.

கொஞ்ச நேரத்திற்கு முன்பு எரியாத டார்ச் இப்பொழுது எரிந்தது எனக்கு மேலும் ஆச்சரியத்தைத் தந்தது.

அந்த டார்ச் ஒளியை வைத்து எதிரே நின்ற அமுதாவின் ஆவியின் மீது அடித்தேன்.  ஆனால் அங்கு ஆவியைக் காணவில்லை.  வெறும் சுவர் மட்டும்தான் தெரிந்தது.

சரி இனிமேல் இங்கிருப்பதில் பயனில்லை என்று அங்கிருந்து கிளம்பினேன்.

அந்தக் கட்டிடத்தை விட்டு வீதிக்கு வந்தபோது முதலில் எனக்கு வழிகாட்டிய அந்தக் கருப்பு நாய் நின்று கொண்டிருந்தது.  இடையில் காணாமல் போன அது இப்பொழுது எதற்காக அங்கு நிற்கிறது என்று தெரியவில்லை.

என்னைக் கண்டதும் அது முன்னே செல்ல அதன் வழியில் நானும் டார்ச்சை அடித்துக் கொண்டே சென்றேன்.

வேகமாக ரோட்டைக் கடந்து மெயின் ரோடுக்கு வரும்பொழுது இதுவரை குரைக்காத  அந்த நாய் திடீரென்று பயங்கரமாக குரைக்க ஆரம்பித்தது.  மேற்கொண்டு நகரவே இல்லை.

அதன் பின்னர் பத்தடி தூரத்தில் வந்து கொண்டிருந்த நான் இந்த எதிர்பாராத குரைக்கும் சப்தத்தைக் கேட்டு, லேசான அதிர்ச்சியோடு நின்றேன்.

நாய் மீதும் அதனைச் சுற்றிலும் டார்ச் லைட்டை அடித்துப் பார்த்த போது சுமார் எட்டு அல்லது ஒன்பது அடி நீளமுள்ள ஒரு நாகப் பாம்பு வாயில் எலியைக் கௌவிக் கொண்டு, நாங்கள் சென்று கொண்டிருந்த பாதையைத் தாண்டிச் சென்று கொண்டிருப்பதைக் கண்டேன்.

ஒரு சின்ன அதிர்ச்சி தான்.

இரண்டு நிமிடம் நான் தனியே முன்னால் சென்று கொண்டிருந்ததாலோ அல்லது அந்தக் கருப்பு நாய் எனக்கு எச்சரிக்கை விடுக்காமல் இருந்திருந்தாலோ அந்தப் பாம்பை நான் மிதித்திருக்கலாம். 

இதை நினைத்துப் பார்த்த பொழுது "இதெல்லாம் எனக்குத் தேவையா" பேசாமல் என் நண்பனை போல வீட்டில் இருந்திருந்தால் இந்த வம்பே தேவை இலையே என்று நினைக்கத்தான் தோன்றியது.

மிகவும் நிதானமாக பயமில்லாமல் அந்த நாகம் இந்தப் பக்கத்திலிருந்து அந்தப் பக்கம் தாண்டும்வரை பொறுமையாக நின்று கொண்டிருந்தேன்.

ஒருவேளை என்னை நோக்கி அந்தப் பாம்பு திரும்பி விட்டாலோ அல்லது அந்த நாய் குரைப்பதைக் கேட்டு அதனை நோக்கிச் சீறிவிட்டாலோ அல்லது இந்த நாய் ஏதாவது ஒரு ஆவேசத்தில் அந்தப் பாம்பைக் கடிக்கப் பாய்ந்து சென்று விட்டாலோ என் பாடு திண்டாட்டம்தான்.

என்னதான் கையில் ஜீவநாடி இருந்தாலும் இந்த அவஸ்த்தை எல்லாம் யார் படுவது?  நானும் மனிதன் தானே.

ஏதாவது ஒன்றுக்கொன்று இசகு பிசகாக மாறிவிட்டால் இவனுக்குப் பயித்தியம், நாடி பின்னால் சென்று மாடிக் கொண்டான்.  இந்தக் காலத்தில் இப்படிக் கூடப் படித்த பைத்தியம் உண்டா என்றுதான் மற்றவர்கள் பேசுவார்கள் என்பதும் எனக்குத் தெரியும்.

இந்த மனப் போராட்டங்கள் ஒரு ஐந்து நிமிடம் அங்கு நீடித்தன.

ஆறாவது நிமிடம் அந்தப் பாம்பு பாதை விட்டு விலகிப் பக்கத்து வயலுக்குள் வேகமாகச் சென்ற பின்புதான் அந்த நாயும் குரைப்பதை நிறுத்தியது.

இரவு மணி மூன்றுக்கு நான் மெயின் ரோட்டை அடைந்தேன்.

இதுவரை என்கூட, எனக்கு வழிகாட்டிய அந்தக் கருப்பு நாய், ரோட்டில் நின்ற அய்யனார் சிலைக்கருகே வந்த பின்பு காணவில்லை.  பத்து நிமிடம் தேடித் பார்த்தேன்.  அந்தக் கருப்பு நாயைக் காணவே இல்லை.

என் உடம்பெல்லாம் வியர்த்துக் கொட்டியிருந்தது.  இன்னும் சொல்லப்போனால் குளித்துவிட்டு அப்படியே உடை அணிந்து நிற்பது போன்று எனக்கே தென்பட்டது.  இது பயமா?  இல்லை.  நடக்காததை நினைத்து ஆச்சரியத்தால் ஏற்பட்ட விளைவா என்று தெரியவில்லை.

எப்படியும் பஸ் வர இன்னும் மூன்று மணி நேரம் ஆகும் என்பதால், மறுபடியும் அகஸ்தியரை த்யானித்து ஓலைச் சுவடியைப் படித்தேன்.

"அய்யனாருக்கு வணக்கம் செலுத்தி விட்டு உன்னைப் போகச் சொன்னேன்.  ஆனால் நீ அப்படிச் செய்யவில்லை.  அதன் விளைவுதான் அந்தக் கார்க்கோடகன் தரிசனம்.  உன்னை எச்சரிக்கவே வந்தது.  இன்னொன்று.  என்னையே நம்பாமல் அடிக்கடி எனக்கேன் இந்த வம்பு என்று மனதில் சொல்லிக் கொண்டிருக்கிறாய்.  இந்த அகத்தியனை முழுமையாக நம்பியிருந்தால் எத்தகைய சோதனையும் வராது.  நீயே என்னை நம்பாமல் மற்றவர்களைப் போல் நினைப்பதால் உனக்கொரு அதிர்ச்சியைத் தரவே அந்தக் கார்கோடகன் வந்தது" என்று எனக்கொரு குட்டு வைத்தார் அகஸ்தியர்.

அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டேன்.

பின்பு " அந்தக் கருப்பு நாயைப் பற்றி தாங்கள் முன்னமே குறிப்பிட்டிருக்கிறீர்கள்.ஆனால் அது யார் அய்யனரா?" என்று கேட்டேன்.

"இல்லை" அவர்தான் கால பைரவர்.  உனக்கு துணையாக அந்த நள்ளிரவில் வந்தவரும் அவர்தான்.  அந்தக் கால பைரவருக்கு நன்றி சொல்ல ஊருக்குச் சென்று அவர் சன்னதியில் ஒன்பதுநாள் விளக்கேற்றி வா" என்றார்.

இதைக் கேட்டதும், தெய்வமே எனக்கு அந்த இரவில் துணை நின்ற பெருமையை எண்ணிப் பூரிப்புக் கொண்டேன்.

மறுநாள் என் நண்பர்களிடமும் இந்தச் சம்பவத்தைச் சொல்லி விளக்கிய பொழுது ஆச்சரியமும் பட்டார்கள்.  அதே சமயம், "இது உண்மையாக இருக்குமா" என்று ஆராயவும் செய்தார்கள்.

நான் கால பைரவர் கோயிலுக்கு விளக்கு ஏற்றச் சென்ற பொழுது எனக்கு இன்னொரு அதிசயம் அங்கு காத்திருந்தது.

அந்தக் கோயிலின் அர்ச்சகர் "நீங்க இன்னிக்கு இங்கு வரப்போறீங்க, ஒன்பது நாளைக்கு பைரவர் சன்னதியில் விளக்கு ஏற்றவும், போறீங்கன்னு சொல்லி, ஒரு பெரியவர் இரண்டுபடி நல்ல எண்ணை, இரண்டு படி நெய் என்று அந்த இரண்டையும் இப்பத்தான் என்னிடம் கொடுத்து விட்டுச் சென்றார்" என்றார்.

எனக்கு தூக்கி வாரிப்போட்டது.

அந்தக் கோயிலின் கருவறையில் நெய்யும் எண்ணையும் திரியும் கொடுத்துவிட்டு சென்றவர் அகஸ்தியரைத் தவிர வேறு யாரும் இருக்க முடியாது என்று என் உள் மனம் சொல்லியது. 

ஏனெனில் இந்தக் கால பைரவர் விளக்கு விஷயம் என்னையும் அகஸ்தியரையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது.  ஏன் நண்பர்களுக்கு ஆவியைப் பற்றிய கதையைச் சொன்னேனே தவிர பாம்பு வந்ததற்கு காரணம் நான் அய்யனாரையும் அகத்தியர் மீது நம்பிக்கை இழந்ததையும் பற்றி ஒரு வார்த்தை கூட கூறவே இல்லை.

இனிமேலாவது அகஸ்தியர் வாக்கை அமுத வாக்காக எடுத்துக் கொள்ளவேண்டும்.  சந்தேகப்படவோ சஞ்சலப்படவோ கூடாது என்பதில் மிக மிகக் கவனமாக இருந்தேன்.

சில சமயம் அகஸ்தியரின் கூற்று, சிலருக்குச் சரியாக நடக்காது.  இதற்கு எதோ ஒரு காரணம் இருந்திருக்கும்.  அப்பொழுதெல்லாம் கூட நான் ஏன் இப்படி வாக்குப் பொய்யாகிறது, நாம் தான் தவறுதலாகச் சொல்லிவோட்டோமோ? என்று குழம்பிப் போவதும் அகஸ்தியரைப் பற்றி மனவருத்தப் பட்டதுமுண்டு.

அதெல்லாம் கூட தவறுதான் என்பதை அகஸ்தியர் இந்த நள்ளிரவு நாடகத்தில் எனக்கு எடுத்துக் காட்டிவிட்டார்.

என் நண்பர் ஒருவர் அமுதாவைப் பற்றி உண்மையானத் தகவலை அரிய, அதை காவல் நிலையத்திற்குச் சென்று விசாரித்து வந்தபோது அந்தத் தேதியில் "காணவில்லை" என்ற பெயரில் ஒருவர் அமுதாவைப் பற்றி "கம்ப்ளைன்ட்" கொடுத்திருப்பது தெரிய வந்தது.

அமுதாவும் கொல்லப்பட்டாள்.  அமுதாவைக் கொன்றவனும் தன் குடும்பத்தோடு விபத்தில் கொல்லப் பட்டான் என்பதால் இதைப் பற்றி மேலும் ஆராய நான் விரும்பவில்லை.

அப்படியே விட்டு விட்டேன்.  பின்னர் அந்த ஆவிக்கு மோட்சம் கிடைத்து விட்டதாக அகஸ்தியர் பல ஆண்டுகளுக்குப் பின் சம்பந்தமில்லாமல் ஒரு நாள் கூறினார்.  விபத்தில் பலியான அமுதாவைக் கெடுத்துக் கொன்ற குடும்பத்தினரும் உறவினரிடம் சென்று அவர்களது ஆத்மா சாந்தி அடைய 48 நாட்கள் மோட்ச்ச தீபம் ஏற்றும்படி அகஸ்தியர் சொல்லி இருந்தார்.  அதன்படியே ஆள் அனுப்பி அவர்களிடம் சொல்ல அவர்களும் மோட்ச தீபம் ஏற்றினர்.

எனவே அமுதாவுக்கும் ராஜகுரு குடும்பத்தினருக்கும் அகஸ்தியர் அருளால் மோட்சம் கிடைத்துவிட்டது என்பதில் எனக்கொரு திருப்தி.

அன்றைக்கு நான்காம் நாள்.

அமுதாவின் ஆவியைக் கண்ட பின் எனக்கு அடுத்த கட்டளை.

"மந்திராலயம்" செல்ல வேண்டும் என்பது தான்.

மந்திராலயா செல்ல ரயிலில் பயணமாக வேண்டி டிக்கெட் கவுண்டரில் போய் நின்றேன்.

டிக்கெட் கிடைக்கவில்லை.

ரிசர்வேஷன் இல்லாமல் பயணம் செல்ல வேண்டியதுதான் என்றெண்ணி பிளாட்பாரத்திற்கு வந்தேன்.  அங்குள்ள கூட்டத்தை பார்த்த பொழுது, இன்றைக்கு மட்டுமில்லை, இன்னும் ஒரு வாரத்திற்கு அந்த ரயிலில் ஏறவே முடியாது என்ற நம்பிக்கைதான் ஏற்பட்டது.

எல்லா பெட்டியிலும் ஆட்கள் நிரம்பியிருந்தனர்.  இந்த ரயிலை விட்டால் மந்திராலயா செல்ல வேறு ரயிலும் அன்றைக்கு இல்லை.  மறுநாள் வேண்டுமானால் வேறு ரயிலைப் பிடித்து வண்டி மாறி மாறி எப்படியும் மந்திராலயா சென்றுவிடலாம்.

ஆனால் இன்றைக்குத் தானே அகஸ்தியர் செல்லச் சொல்லியிருக்கிறார் என்று கிளம்பியதால் என்ன செய்வது என்று தெரியவில்லை.

எல்லா குறுக்கு வழியிலும் இறங்கிப் பார்த்தேன், எந்த டிக்கெட் கண்டக்டரும் என் வேண்டுகோளுக்குச் செவி சாய்க்கவில்லை.

ரிசர்வேஷன் இல்லாத பெட்டியில் பயணம் செய்யுங்கள்.  ஒவ்வொரு ஸ்டேஷனில் வந்து எண்ணப் பாருங்கள்.  அந்த ஸ்டேஷனில் யாராவது இறங்கினால் இடம் தருகிறோம், என்றார்களே தவிர ரிசர்வேஷன் கிடைக்கவில்லை.

ரயில் கிளம்ப இன்னும் ஐந்து நிமிடம் தான் இருந்தது.

ஒரு விதத்தில் வெறுப்பும் துக்கமும் அடைக்க கையிலிருந்த அகத்தியர் நாடியைப் பிரித்துப் பார்த்தேன்.

"அஞ்சற்க மைந்தா! தடையின்றி உன் பயணம் நடக்கும்"  என்றார் அகத்தியர்.

எனக்கோ கொஞ்சம்கூட நம்பிக்கை இல்லை.

அப்போதுதான் அந்த அதிசயம் நடந்தது.

என்னை நோக்கி வேகமாக ஓடிவந்த ஒருவர் "சார் நீங்கள் மந்த்ராலயம் தானே போகவேண்டும்.  இதோ இந்த கோச்சில் இரண்டு "சீட்" போட்டிருக்கிறேன்.  உடனே ஏறுங்கள்.  இந்த பெர்த்திர்க்குரிய கட்டணத்தை நானே கட்டிவிட்டேன்.  கிளம்புங்கள்" என்றார்.

எனக்கோ பேராச்சரியம்.

எப்படி இன்னொருவர் பெயரில் ரிசர்வேஷனில் பயணம் செய்வது.  இது குற்ரம் ஆயிற்றே என்று எண்ணினேன்.  வந்தவரோ என்னை வலுக்கட்டாயமாக அந்தக் பெட்டியில் ஏற்றி, என் பெட்டியையும் தூக்கி உள்ளே போட்டார்.  அடுத்த செகண்ட் அந்த ரயில் புறப்பட்டது.  அந்த நபரும் கண்ணிலிருந்து மறைந்தார்.  எப்படி இது சாத்தியம் என்று எண்ணிக் கொண்டிருக்கும் பொழுது அந்த டிக்கெட் கண்டக்டர் என்னிடம் வந்தார்.

நான் பயணம் செய்ய வாங்கியிருந்த டிக்கெட்டை அவரிடம் காண்பித்து நடந்த சம்பவத்தை விளக்கும்போது

அவர் சிரித்துக் கொண்டே என் டிக்கெட்டை என்னிடமே திருப்பிக் கொடுத்தார்.

"நீங்கள்"

என் பெயரை சொன்னேன்.

"அவசரப்பட்டு டிக்கெட் வாங்கிவிட்டீர்கள்.  உங்கள் பெயரில் நான்கு நாட்களுக்கு முன்பு இரண்டு "பெர்த்" பதிவு செய்யப்பட்டுவிட்டது" என்றார்.

"எப்படி? இருக்காதே"

"இதோ கொஞ்ச நேரத்திற்கு முன்னால் வந்த ஒருவர் உங்களைப் பற்றிக் கூறி அவரது டிக்கெட் என்னிடம் இருக்கிறது.  இதை நீங்கள் வைத்துக் கொள்ளுங்கள்.  இதோ நான் அவரை அரை நிமிடத்தில் அழைத்துக் கொண்டு வருகிறேன்" என்று சொல்லி நான் அதைக் சரி பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது அவர் வண்டியை விட்டுக் கீழே இறங்கி விட்டார்" என்றார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை.

"இப்பொழுது நீங்கள் வேறு டிக்கெட்டைக் காண்பிக்கிறீர்கள்.  சௌகரியமாக அமர்ந்து கொள்ளுங்கள்" என்று என்னை உட்கார வைத்தார்.

இது எப்படி நடந்தது என்று என்னால் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியவில்லை.

"யார் அவர்?" எதற்காக அன்றைக்கு மந்த்ராலயாவுக்கு டிக்கெட் எடுக்கணும்.  அதுவும் இன்றே எடுக்கணும்.  எப்படி அவருக்கு என் பெயர் தெரியும்?" என்றெல்லாம் வெகுநேரம் திகிலோடு யோசித்துக் கொண்டிருந்தேன்.

அவரவர்கள் ஒரு சீட்டிற்கு அலையும் போது என் பெயரில் இரண்டு பெர்த் எப்படிக் கிடைத்தது? எல்லாம் என்னைத் திக்கு முக்கட வைத்தது.  ஒரு பெர்த்தை வேறு யாருக்காவது கொடுத்துவிடலாமென்று நினைத்தேன்.  ஆனால் அதற்குப் பிறகு டிக்கெட் கண்டக்டரும் என்னிடம் வரவில்லை.  வேறு யாரும் வந்து அந்த இடத்தை ஆக்கிரமிப்பும் செய்யவில்லை.

மறுநாள் காலை பத்துமணி.

ரயில் மந்த்ராலயா ஸ்டேஷனில் நின்றது.  முதல் தடவையாக மந்த்ராலயா செல்வதால் மெதுவாக இறங்கினேன்.

அது சின்ன ரயில்வே நிலையம் என்பதால் விசேஷமான பிளாட்பாரம் அல்லது தாங்கும் வசதி எதுவும் அப்போது இல்லை.

இங்கிருந்து ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவசமாதிக்குச் செல்ல குறைந்த பட்சம் பதினைந்து கிலோ மீட்டர் தூரம் இருக்கும்.  ரயில்வே ஸ்டேஷனிலிருந்து மந்த்ராலயா ஜீவசமாதிக்குச் செல்ல அரசாங்க பஸ் ஒரு மணி நேரத்திற்கு ஒரு தடவையோ அல்லது ரயில் அங்கு வரும்போழுதோ ஸ்டேஷன் வாசலில் வந்து நிற்கும்.

அதுவரை வெறிச்சோடித்தான் காணப்படும்.

எப்படிடா அங்கு செல்லப் போகிறோம் என்று நினைத்து ஸ்டேஷனிலிருந்து வெளி வந்த போது

ஒரு அம்பாஸிடர் கார் என்னருகே வந்து நின்றது.

சித்தனருள்....... தொடரும்! 

2 comments:

  1. Ithu ellam unmaiya?. oru padam pakuru mathiriye iruke...

    ReplyDelete
  2. குரு வாழ்க! குருவே துணை!!

    ReplyDelete