​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 18 June 2020

சித்தன் அருள் - 871 - தாவர விதி!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

சமீபத்தில், சித்த மார்க்கத்திலும், சித்த மருத்துவத்திலும் சிறந்து விளங்கும் ஒரு சித்தர் அடியவரிடம் சில விஷயங்களை பேசிக் கொண்டிருந்தேன். அவர் பகிர்ந்து கொண்ட. "தாவர விதி" என்கிற தலைப்பிலிருந்து சில முக்கியமான விஷயங்களை, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

நகரத்து மனிதர் வீட்டை சுற்றியும், விலங்கினங்கள் உறையும் காட்டில் எங்கும், தாவரங்களை படைத்த இறைவனின் கைவண்ணம் எப்போதும் என்னை ஆச்சரியப் படுத்தும். மொத்தமாக ஒரு வீட்டை சுற்றி சிமெண்ட் போட்டு மூடினாலும், எங்கேனும் இருக்கும் ஒரு சிறு துளை வழியாக தாவரம் முளைத்து வருவது, ஆச்சரியமாக தோன்றும். மனிதன், எவ்வளவோ தாவரங்களை/மரங்களை அழித்து, தனக்கு இருப்பிடம், வசதிகளை செய்து கொள்ளும் பொழுது, ஒரு விஷயத்தை மறந்துவிடுகிறான். அது,

நம்மைப்போல், தாவரங்களுக்கும்/மரங்களுக்கும் உயிர் உண்டு, அவைகளும் ஒரு கர்மாவுக்கு உட்பட்டு இங்கு வாழ வந்தவைதான். அவைகளும் தழைத்திட ஒரு மனிதன், தன்னால் இயன்றதை செய்துவிட்டு, பின்னர் தான் வாழ வழி வகுத்துக் கொள்ள வேண்டும், என்று ஒரு பொழுதும் யோசிப்பதில்லை.

மனிதனின் கர்மா இன்னென்ன விதங்களில் வளரும் பொழுது, ஏதேனும் ஒரு சூழ்நிலையில், அல்லது காலத்தில், அவனுக்கு மருந்தாக இருக்கட்டும் என்றும், பிற உயிரினங்களுக்கு உணவாகவும், உடல் குறைகளை நிவர்த்தி செய்வதற்காகவும்தான், இறைவன், தாவரங்களை படைத்தான்.  அவை பற்றிய அறிவை, சித்த மருத்துவம்/ஆயுர்வேத மருத்துவத்துக்குள் வைத்தான்.

ஆனால் நாம் என்ன செய்கிறோம்? தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்கிற எண்ணம் இல்லாமல், சிறியவர் முதல் பெரியவர் வரை, தோன்றியபடி எல்லாம் தாவரங்களை பறித்தும், அழித்தும் வருகிறோம். சித்த மருத்துவத்துக்கு முதுகெலும்பே, தாவரங்கள்தான். அவற்றை, மென்மையாக கையாள வேண்டும்.

மருந்துக்காக ஒரு இலையை பறிப்பதாயினும், அதற்கு ஒரு முறை உண்டு. ஒன்றும் அறியாதவர்கள் கூட, ஒரு தாவரத்தை, இலையை, மருந்துக்காக பறிப்பதற்கு முன், அந்த தாவரத்தின் முன் நின்று மனதால், போகர் சித்தரை வணங்கி, மூலிகை தேவதையை வணங்கி, வேண்டுதலை கீழ்கண்டவாறு கூறி, முதலில் சமர்ப்பிக்க வேண்டும்.

"போகர் சித்த பெருமானுக்கு வணக்கம், மூலிகை தேவதைக்கு நமஸ்காரம். உங்கள் அனுமதியுடன், இந்த தாவர மூலிகையை, இலையை, பூவை, காயை, நோய் தீர்க்கும் மருந்தாக பாவித்து எடுத்துக்கொள்கிறேன். அதற்கு உங்கள் அனுமதி வேண்டும்" என்று பிரார்த்தித்து, எவ்வளவு மருந்துக்கு தேவையோ, அவ்வளவே எடுக்க வேண்டும். இது மிக எளிய முறை. கூடவே, இன்னொரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். இலை. பூ, காய் என பறிக்கும் பொழுது, நம் கை விரல் நகம் படாமல், கிள்ளாமல், வேறு எந்த ஆயுதமும், இரும்பு, கத்தி போன்றவை படாமல் பறிக்க வேண்டும். கத்தியால் வெட்டப்பட்ட மூலிகை மருத்துவ குணத்தை இழக்கும். மனித நகம் பட்ட மூலிகையும், முழு பலன் தராது.

ஒரு செடியிலிருந்து மருந்துக்காக, இலையை பறிக்கும் பொழுது, முழுவதையும் பறித்து விடாமல், அந்த தாவரம் மேலும் துளிர/தழைத்து வளர மிச்சம் வைத்து, வழி வகுத்துத்தான், தேவையான விஷயங்களை, தேவையான அளவுக்கு, பறிக்க வேண்டும்.

அந்த செடியோ/தாவரமோ மிக சிறியதாக இருந்தால், அதை விட்டு, அதை விட பெரிய செடி எங்கு இருக்கிறது, என தேட வேண்டும். அப்படி கிடைக்கவில்லை என்றால் எப்பொழுதும் போல் பிரார்த்தனை செய்துவிட்டு, கீழே அமர்ந்து. இடது கையால் செடியின் தண்டு பாகத்தை பிடித்துக்கொண்டு, வலது கையால் தேவையான இலைகளை பறிக்கலாம். அப்படி பறிக்கும் பொழுது, அந்த செடியின் ஆணிவேர் அசையாமல் இருக்க பார்த்துக் கொள்ள வேண்டும்.

மிருகங்கள் நடந்து ஓடியும் புல் கூட துளிர்க்கும். மனிதன் நடந்தால் அந்த புல்லோ, தாவரமோ தழைக்காது. வாடிப்போகும். இதுவும், தாவர விதி.

தாவரங்களின் மொழி புரிய வேண்டும். அது புரிய, மனிதனுக்கு கனிவு இருந்து, அந்த கனிவுடன் தாவரங்கள் தழைக்க, நீர் ஊற்றி, மண் கிளறி, மேற்கூறிய விஷயங்களையும் கடைபிடித்தால், நிறைய உண்மைகளை அவைகள் உணர்த்தும்.

ஒன்றுமறியாத சிறு குழந்தைகள், இலைகளை கிள்ளிப்போடுவதை கண்டால், அவர்களுக்கு, உண்மையை உணர்த்த வேண்டும். பின்னர் அவர்கள் அப்படி செய்யாமல் இருக்க பார்த்துக் கொள்ளவும் வேண்டும். இந்த இயற்கை விதிக்கு முரண்பட்டு மனிதன் நடந்து கொள்ளும் பொழுது, இயற்கை பல நேரங்களில் திருப்பி அடிக்கிறது. பல தலைமுறைகளுக்கு, பல ஜென்மங்களுக்கு "தாவர, மூலிகை சாபம்" தொடர்ந்து வந்து வருத்துகிறது.

தாவரங்கள் செழிப்பாக வளருமிடங்களில், சித்தர்கள் நடமாட்டம், அருள் அதிகமிருக்கும். சற்று வாடி அசந்து இருக்கும் ஒரு செடிகூட, நன்றாக துளிர்க, சித்தர்களை வேண்டிக்கொண்டால், மறுநாள் முதல் நன்றாக மாறுகிற அதிசயத்தை ஒரு மனிதன் காண வேண்டும். இதை என்றாவது ஒருநாள் பரீட்சித்து பார்த்தால், பல உண்மைகளை புரிந்து கொள்ளலாம்.

ஒரு சில மூலிகைகளை தவிர, அனைத்து மூலிகைகளையும் சூரிய உதயத்துக்கு பின், சூரிய அஸ்தமனத்துக்குள்தான் பறிக்கலாம். குறிப்பிட்ட மூலிகைகளை, இரவில், அமாவாசை அல்லது பௌர்ணமியில் பறிக்கிற சித்த மருத்துவர்கள், அதற்கு முறையாக பூசை போட்டு பின்னர்தான் பறிப்பார்கள். அப்பொழுதுதான் அந்த தாவரம், தன் மருத்துவ குணத்தை, மருந்து வழி கொடுக்கும். இல்லையேல், தாவர சாபம்தான் மிஞ்சும். இது வைத்தியர்களுக்கு தெரியும்.

அதேபோல் எல்லா வருடமும் வரும் அக்னி நட்சத்திர காலத்தில் (24 நாட்கள்) எந்த ஒரு தாவரத்தையும். மரத்தையும் வெட்டுவதோ, அழிப்பதோ கூடாது. மேலும்,மேலும் நிறைய நீர் ஊற்றி, அவைகள் நலமாய் வாழ மனிதர் வழி வகுக்க வேண்டும்.

மனிதரின் அத்தனை உணர்வுகளும், தாவரங்களுக்கு உண்டு. மனிதனின் பேராசை, பிறரை அழித்து, தான் மட்டும் வாழ்ந்தால் போதும் என்கிற உணர்வு மட்டும் , அவைகளுக்கு இல்லை. இதில் யார் உயர்ந்தவர்?

சித்தன் அருள்................ தொடரும்!

8 comments:

 1. How to contact you rearding nadi reading?

  ReplyDelete
 2. OM LOBAMUDRA SAMETHAY AGATHEESAYA NAMAHA
  OM LOBAMUDRA SAMETHAY AGATHEESAYA NAMAHA
  OM LOBAMUDRA SAMETHAY AGATHEESAYA NAMAHA
  OM LOBAMUDRA SAMETHAY AGATHEESWARAR THIRUVADIGALAY SARANAM

  ReplyDelete
 3. For Nadi Reading please follow the link below published earlier

  https://siththanarul.blogspot.com/2015/11/to-read-naadi-palm-leaf.html

  Aum Agatheesaya Namah

  ReplyDelete
 4. ஓம் அருள்மிகு அகத்தியர் அய்யன் துணை
  நல்ல பதிவு நன்றி ஐயா

  ReplyDelete
 5. ஓம் அகத்திய குருவே சரணம்

  ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

  Reply

  ReplyDelete
 6. அன்பு வணக்கம் ஐயா. தாங்கள் கூறுவது உண்மை ஐயா. தாவரங்கள் இல்லை என்றால் மனித சமுதாயமே இல்லை ஐயா. இனி தங்கள் கூறியதை பின்பற்று கிறோம் ஐயா. குரு பிரான் கூறுவதை போல் சித்தர்கள் மூலிகை கொண்டு உடலை காயகற்பம் ஆக்கி பல ஆயிரம் வருடம் வாழ்கிறார்கள். மனிதர்கள் தாவரங்கள் உண்டு நோய் வராமல் தடுத்து கொள்ள அவற்றுக்கான பாதுகாப்பை தரவேண்டும். அப்போது தான் மனிதனில் சத்வம் வளரும். மிக்க நன்றி ஐயா.

  ReplyDelete
 7. ஓம் அகத்தியரே போற்றி போற்றி
  ஓம் அகத்தியரே போற்றி போற்றி
  ஓம் அகத்தியரே போற்றி போற்றி
  ஓம் லூபாமுத்ரை அம்மா போற்றி போற்றி
  ஓம் நம குமாராய
  ஓம் சரவண பவ
  ஓம் சேஷாத்ரி சுவாமிகள் போற்றி போற்றி
  ஓம் உமா மகேஸ்வரி அம்மா போற்றி போற்றி

  ReplyDelete
 8. ஒம் ஈஸ்வராய நமக

  https://www.youtube.com/watch?v=OQ27ECUfHhs&feature=youtu.be

  ReplyDelete