தசவாயுக்களும் உடலுக்குள் பரவி நின்றாலும், அவற்றின் இயக்கத்தை சரியானபடி முடுக்கிவிட்டு தேவையான அளவுக்கு அசைவு பெற வைக்க சப்தம் மிகத்தேவை என்றுணர்ந்ததினால்தான், த்யானத்தில், பூஜையில், ஜபத்தில் இத்தனை மந்திரங்களை பெரியவர்கள் புகுத்தினர்.
அனைத்து தெய்வங்களின் மூல மந்திரம், காயத்ரி மந்திரம் போன்றவை உருவாக்கப்பட்டதே, அவற்றின் சப்த அதிர்வலைகள் உடலுள் என்ன மாறுதலை உருவாக்கும், எப்படி ஒரு சூழ்நிலைக்கு எதிர் சக்தியை உருவாக்கி அவ்வுடலை காக்கும் என்று சோதித்து பார்த்த பின் தான் பெரியவர்கள் இவ்வுலகுக்கு அதை வாய் வழி செய்தியாக விட்டு சென்றனர்.
இந்த தச வாயுக்கள் உடலுக்குள் என்ன வேலை செய்கிறதென பார்க்கலாம்.
- பிராணன்:- மூலாதரத்தில் ஆரம்பித்து இதயத்தில் நின்று மூக்கு வழியாக மூச்சு விடல். இது மேல் நோக்கி இயங்கும். மற்ற ஒன்பது வகை வாயுவிற்கும் இதுவே மூலாதாரம்.
- அபானன்:- சுவாதிட்டானத்தில் இருந்து வெளிப்பட்டு மலம், சிறுநீறு போன்றவைகளை கீழ் நோக்கி தள்ளும், ஆசனவாயை சுருக்கும். அன்னத்தை சேர்க்க வேண்டிய இடத்தில் சேர்க்கும். இது கீழ் நோக்கி இயங்கும்.
- வியானன்"- இது தொழில் காற்று மூளையின் கட்டளைகளை அனைத்து உறுப்புகளுக்கும் கொண்டு செல்லும். தோளிலிருந்து எல்லா நரம்பிலும் அசையும் அசையா பொருளில் உறுப்புக்களை நீட்ட, மடக்க உணர்ச்சிகளை அறியவும், உணவின் சாரத்தை கொடுத்து உடலைக் காக்கும்.
- உதானன்:- உணவின் சாரத்தை கொண்டு செல்லும். உடலை எழுந்து நிற்க உதவும். மேல் நோக்கி இயங்கும் வாயு. தொண்டையில் குரல் நரம்புகளை அதிரச் செய்து ஒலியை எழுப்புகிறது.
- சமானன்:- நாம் உண்ணும் உணவை ஜீரணிக்க உதவுகிறது. இந்த வாயு. நாபியிலிருந்து கால் வரை பரவும். வாயுக்களை அதிகப்படாமல் சரி செய்யும், உண்ட உணவு செரித்தவுடன் ரத்தத்திற்கும் எல்லா உறுப்புகளுக்கும் பகிர்ந்து கொடுக்கும் வேலையை செய்கிறது.
- நாகன்:- உடம்பில் சேர்ந்த நச்சுக்களை வெளியேற்றுவது நாகன். இது அறிவை வளர்க்கும், கண்களை திறப்பதற்கும், இமைகள் மூட வேலை செய்யும். வாந்தி குமட்டல் போன்ற உணர்வுகளுக்கு காரணமாகிறது.
- கூர்மன்:- கண்ணில் நிற்கும் வாயு. கொட்டாவி, வாய் மூட, கண் இமைக்க, கண்ணீர் வரவழைக்கும்.
- கிருகரன்:- இது தும்மலுக்கு காரணமான காற்று. நம் உடம்பில் எந்த தூசியும் மாசுவும் நுழைய விடாது. தும்மல், இருமலை உண்டு பண்ண உதவும் வாயு இது. நாக்கில் கசிவு, நாசி கசிவு உண்டு பண்ணும், பசியை கிளப்பி விடும்.
- தேவதத்தன்:- கொட்டாவி, விக்கல் போன்றவை ஏற்பட காரணமே இந்த வாயுதான். மூளைக்கு போகும் வாயுவை குறைத்தல், ரத்தத்தில் பிராண வாயுவின் அளவு குறைவது, உடலை ஓய்வு நிலைக்கு தள்ளுவது, சோம்பல், தூங்கி எழும்போது ஒரு வித சோர்வை தருவது இந்த வாயுதான்.
- தனஞ்செயன்:- ஒருவர் உயிரோடு இருக்கும் பொழுது, தோலுக்கு கீழே தனஞ்சயன் இருந்து உடலுக்கு ஏற்படும் எந்த வித பாதிப்பையும் தாங்க வைக்கும், காப்பாற்றும். ஒருவர் உயிரோடு இருக்கும் போது மேற்சொன்ன ஒன்பது வாயுக்களும் நன்றாக வேலை செய்யும். உயிர் பிரிந்த பின்னர் ஒன்பது வாயுக்களும் செயல்பாட்டை நிறுத்திய பின்னர் இந்த தனஞ்செயன் வாயு செயல்படத் தொடங்கும். இதனை வீங்கல் காற்று என்றும் சொல்வார்கள். மூக்கிலிருந்து உடல் முழுதும் வீக்கத்தை ஏற்படுத்தும். நுண்ணியிரிகள் மூலம் உடலை அழுகச் செய்யும்.
மேலும் 'தனஞ்செயனை" வாயுக்களுக்கு தலைவன் என்றிடலாம். ஏன் என்றால், உயிர் பிரியும் முன்பாக நமது அனைத்து உறுப்புகளையும் அவற்றின் செயல்பாடுகளையும் ஒவ்வொன்றாக நிறுத்தி, நமது நடு நெஞ்சுக்கு கொண்டு வந்து வைத்து உயிர் வெளியேற வழி வகுத்து கொடுக்கும். உயிரானது சிலருக்கு கண்களின் வழியாகவும், சிலருக்கு வாயின் வழியாகவும், வேறு சிலருக்கு உச்சி மண்டையின் வழியாகவும், இன்னும் சிலருக்கு ஆசன துவாரத்தின் வழியாகவும், சிறுநீர் பாதை வழியாகவும், காதின் வழியாகவும் , மூக்கின் வழியாகவும், தொப்புள் குழி வழியாகவும் வெளியேறும். தசவாயுக்களில் ஒன்பது வாயுக்களும் நிறுத்தப்பட்டு, அது செயல்படுத்தும் உறுப்புக்களும் முழு நிறுத்தம் கண்டு, எந்த வழியாக உடலைவிட்டு உயிர் வெளியேற வேண்டுமோ, அந்த வழியாக தனஞ்செயன் என்ற அந்த வாயு மற்ற வாயுக்களையும் வெளியே அழைத்து செல்லும். அதன் பின்னரே உயிர் பிரியும். மீண்டும் பிறப்பெடுக்கும் காலம் வரும்போது அதற்கென குறிப்பிட்ட தாயின் கர்ப்பத்தில் மற்ற வாயுக்களை சேர்ப்பிக்கும்.
நம் உடலின் பல இயக்கங்களை சரிவர கட்டுப்படுத்தி, உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தி, சிறப்பான வாழ்வை மனிதர்கள் பெறவே, பெரியவர்கள், த்யானம், தவம், உச்சாடனம், மந்திரம், யோகமுறைகள், பிராணாயாமம் என பல வழி முறைகள் வழி, சப்தத்தை உடலுள் நுழைத்து வாயுக்களின் இயக்கத்தை தூண்டிவிட்டனர்.
வழுக்கைக்கும், பேராசைக்கும் மருந்தே கிடையாது என நம்மிடையே ஒரு கூற்று உண்டு. அது தவறு. சரியான முறையில் பிராணாயாமத்தை தொடர்ந்து வந்தால், ஆசையே அறுந்துவிடும், தலையில் முடி முளைக்கும்.
சித்தன் அருள்....................... தொடரும்!