வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
796வது தொகுப்பில் அகத்தியரின் பாதுகையை தரிசித்திருப்பீர்கள். இதுவும், சென்ற ஒரு சில பதிவுகளில் கூறப்பட்ட "ருத்ராக்ஷ ஸ்படிக லிங்க" மாலையின் தொடர் நிகழ்ச்சியாக நடந்த விஷயம். அதை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.
ருத்திராக்ஷ மாலைக்கு உத்தரவு வாங்கித் தந்த பூஜாரி, அன்றைய தினம் இல்லாமல் போகவே, வேறு ஒருவர் வாங்கி அகத்தியரிடம் சேர்த்தார் என்று கூறியிருந்தேன். ஓரிரு நாளில் திரும்பி வந்த அவர் (உத்தரவு வாங்கித்தந்த பூஜாரி) அடியேனை தொடர்பு கொண்டார்.
"இதை இந்த முறையில் தரக்கூடாது. வரக்கூடிய வியாழக்கிழமை கோவிலுக்கு வரும் பொழுது, அதை தருகிறேன். நீங்கள் உங்கள் கையால் அவர் திருநடை [திருச்சன்னதி] முன் சமர்ப்பிக்க வேண்டும். அதை அணிவித்து பூஜை தீபாராதனை செய்ய வேண்டும். அதற்கு முன், அகத்தியருக்கு சமர்ப்பிப்பதாக கோவில் நிர்வாகத்திடம் கூறி, அதற்கான ரசீதை வாங்கிக் கொள்ள வேண்டும். இது உங்கள் பெயரால் கொடுப்பதாக இருக்கவேண்டும். ஆதலால், இந்த வாரம் வியாழக்கிழமை வாருங்கள். முறையாக செய்துவிடலாம்" என்றார்.
இது தான் அடியேனை சோதனைக்குள்ளாக்கிற்று. ஏன் என்றால், அந்த வியாழக்கிழமைதான், உறவில் ஒரு திருமணத்திற்காக வெளியூர் செல்ல எல்லா ஏற்பாடும் செய்தாகிவிட்டது. கோவிலுக்கு செல்ல முடியாது. என்ன செய்வது? என யோசித்தவுடன், நண்பர்கள் செல்வார்களே, என்ற யோசனை வந்தது.
இரு நண்பர்களை அழைத்து, விஷயத்தை கூறி, கண்டிப்பாக அன்று மாலை கோவிலுக்கு சென்று அடியேனுக்கு பதிலாக, செய்ய வேண்டியதை செய்து விடுங்கள் என்று கூறினேன். அகத்தியரின் திருஆபரணமாக மாற்ற ரசீது போடும் பொழுது அதில் நம் யார் பெயரும் இருக்கக்கூடாது. அதற்கு பதிலாக "ஓதியப்பர், பூசம்" என போட்டுவிடுங்கள், என கூறிவிட்டேன்.
பின்னர், அடியேன் ஊருக்கு கிளம்பி சென்று விட்டேன்.
மிகச்சிறப்பான முறையில், அகத்தியப் பெருமான், அந்த நாள் விஷயத்தை நடத்திக்கொடுத்து தன் கழுத்தில் மீண்டும் அணிந்து கொண்டார்.
அந்த கோவிலில் "தேவனின்" திருஆபரணமாக ஒரு பொருளை சமர்ப்பித்துவிட்டால், அது தனியாக வைக்கப்பட்டு, பின்னர் முக்கியமான தினங்களில், வெள்ளி கவசம் சார்த்துகிற பொழுது மட்டும் அணிவிக்கப்படும். முக்கியமான தினங்கள் மட்டும்தான் இது நடக்கும். ஒரு மாதத்தில் வரும் பௌர்ணமி, மாத பிறப்பு, அமாவாசை, ஆயில்யம் நட்சத்திர தினத்தன்று மட்டும்.
ஊருக்கு போய்விட்டு வந்த அடியேனுக்கு, எங்கோ சாப்பிட்ட உணவானது, விஷமாக மாறிப்போய், வாந்தி, பேதி என உடலை வருத்தியது. இரண்டு நாட்கள் பொறுத்துப் பார்த்தேன். அடங்குவதாக தெரியவில்லை. மூன்றாவது நாள் (புதன் கிழமை) காலை எழுந்தவுடன் தள்ளாடியது. மூச்சு விடமுடியவில்லை, பேச முடியவில்லை. உடல் உருகி உள்ளுக்குள்ளே செல்வது போல் ஒரு உணர்வு. அன்றைய தினம் காலையில் அடியேனை பார்க்க வந்த நண்பரிடம், எல்லாம் நல்லபடியாக, அகத்தியர் விருப்பப்படி நடந்ததா? என விசாரித்து முடிக்கும் முன் தலை சுற்றி, கீழே அமர்ந்தேன்.
என் நிலை மோசமாவதை கண்ட நண்பர், உடனேயே, அவர் வாகனத்தில் அடியேனை அழைத்துக் கொண்டு போய். ஒரு மருத்துவமனையில் அனுமதித்தார்.
அடியேன் உடலை பரிசோதித்த மருத்துவர், உடனேயே படுக்கப்போட்டு, உடலில் நீர் சத்து, உப்பு சத்து குறைந்து விட்டது என கண்டு பிடித்து, அதற்கான சிகிர்சை முறையை தொடங்கினார்.
மருந்து உள்ளே செல்லத் தொடங்கியதும் சுய நினைவு மங்கத் தொடங்கியது.
எதையுமே கவனிக்காமல் வாழ்ந்து வந்தேன் என தோன்றியதால், உடனேயே "என்ன நடக்கிறது? எது நடக்கக்கூடாது என்று நினைத்தேனோ, அந்த சூழ்நிலையில் மாட்டிவிட்டீர்களே! அடியேன் என்ன தவறு செய்தேன். சற்று தெளிவு படுத்துங்களேன், அகத்தியப் பெருமானே!" என வேண்டிக்கொண்டேன்.
உடன் பதில் கூறினார், குருநாதர்.
"கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, யாம் உன்னை காப்பாற்றிக் கொண்டு வந்திருக்கிறோம். கர்மாவை மொத்தமாக அறுக்க முடியாது. ஓரளவிற்கு முடிகிற வரை அனுபவித்தும் தீர்க்க வேண்டும். ஆதலால், கர்மா வினையின் வீரியத்தை குறைத்து, அனுபவித்து விடு என விட்டுவிட்டேன். இருப்பினும், யாம் துணைக்கு உள்ளோம். கலக்கம் வேண்டாம். முடிந்தால், இன்றைய தினம் என்ன நடக்கிறது என்று பின்னர் பார்த்து தெரிந்துகொள்!" என்று பதில் வந்தது.
பதிலை கேட்டு முடித்ததும், உள் சென்ற மருந்தின் வீரியத்தால், முழு நினைவும் அடியேனை விட்டு போனது.
இரண்டு மணி நேரத்துக்குப்பின், தானாகவே நினைவு வந்ததும், முதலில் நினைவுக்கு வந்தது அகத்தியப் பெருமானின் வார்த்தைகள் "முடிந்தால், இன்றைய தினம் என்ன நடக்கிறது என்று பின்னர் பார்த்து தெரிந்துகொள்!"
மருத்துவமனையில் படுத்திருக்கும் அடியேனுக்கு எப்படி இதை இப்பொழுதே பார்க்க முடியும்? என்ற உணர்வுடன், மொபைல் போனை துழாவினேன். அதில் நாள்காட்டி பார்க்கும் சாப்ட்வேர் இருந்தது. அதை முடுக்கி பார்த்தால் "இன்று மதியம் -- மணிக்கு, ராகு, கேது பெயர்ச்சி!" என்றிருந்தது.
அதை பார்த்த அந்த நொடியில், அனைத்தும் புரிந்து போனது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாகவே, "அடியேன் உடலில் விஷம் உள்ளே செல்ல வேண்டுமே, அது எப்பொழுது நடக்கப்போகிறது" என்ற எண்ணத்துடன் வாழ்ந்து வந்தேன். இருப்பினும், ஓதியப்பரிடமும், அகத்தியப் பெருமானிடமும் மட்டும், நீங்கள் கவனித்துக்கொள்ளுங்கள் என்று கூறி வந்திருந்தேன். கடைசி நிலையில், மூன்று நாட்களுக்கு அனுபவிக்க விட்டு கர்மாவை கரைய வைத்து விட்டார்கள், என்று உணர்ந்தேன்.
"அகத்தியப் பெருமானின் கோவிலுக்கு சென்று நன்றி கூற வேண்டும்!" என தீர்மானித்தேன்.
எழுந்திருக்க முயல, முடியவில்லை. அப்படியே கட்டிலில் கிடந்து அகத்தியரிடம் ஒரு பிரார்த்தனையை வைத்தேன்.
"அய்யனே! எழுந்து அமர்ந்து கொள்கிற அளவுக்கு உதவி செய்தால் போதும்! உங்களை தேடி ஓடி வந்துவிடுகிறேன். நாளை, வியாழக்கிழமை உங்கள் தரிசனம் கிடைக்க வேண்டும்" என்றேன்.
மருத்துவருக்கு என்ன தோன்றியதோ, அல்லது நம் குருநாதர் என்ன தோன்ற வைத்தாரோ தெரியவில்லை. மருத்துவர் அடியேனை பரிசோதிக்காமலேயே, வீட்டுக்கு போய் விடு. எழுதி தந்த மருந்துகளை சாப்பிட்டுக்கொள், எனக் கூறினார்.
"அடடா! இது தானே வேண்டும்" என்று நினைத்து, அவருக்கு நன்றி கூறிவிட்டு வீடு வந்து சேர்ந்தேன்.
மறுநாள், வியாழக்கிழமை, காலையில் ஒரு நண்பர் பார்க்க வந்தார்.
"உடல் இருக்கிற நிலைக்கு, அடியேனால் இன்று கோவிலுக்கு வர முடியுமா என்று தெரியவில்லை. எதற்கும், நீ சென்று வர தயாராக இரு" என்று கூறி அனுப்பிவைத்தேன்.
அன்றைய தினம் தர வேண்டிய "சித்தன் அருள் தொகுப்பை" மாலை நன்கு மணிக்கு தட்டச்சு செய்ய தொடங்கினேன். நேரம் சென்று கொண்டே இருந்தது. மணி ஐந்து ஆகியும் பாதி தொகுப்பு கூட முடியவில்லை.
தட்டச்சை நிறுத்திவிட்டு அகத்தியப் பெருமானை நிமிர்ந்து பார்த்தேன்.
"அய்யா! தொகுப்பை வேகமாக முடித்து கொடுக்க உதவி செய்யுங்கள். ஆறு மணிக்கு முன் முடித்துவிட்டேனால், உங்களை வந்து சரணடைகிறேன்!" என வேண்டிக்கொண்டேன்.
அதற்குப்பின் ராக்கெட் வேகத்தில் தட்டச்சு சென்றது. எல்லாம் முடித்து, தொகுத்து வழங்கிய பொழுது மணி 5.58 என்று காட்டியது.
நேராக சென்று குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வண்டியை எடுத்துக்கொண்டு கிளம்பிவிட்டேன். உடலுக்குள் ஏதோ ஒரு புது சக்தி இருந்து உந்திக் கொண்டிருந்தது. கவனித்தேன்.
அகத்தியர் கோவிலை அடைந்தவுடன், மணி 7.30. உடனேயே தீபாராதனை நடந்தது.
தீர்த்தம் தெளிக்கப்பட்டது. ஆனந்தமாக இருந்தது. கண் மூடி பரவசமாக நிற்க, "தீர்த்தத்தை கேட்டு வாங்கிக்கொள். தருவான். அது உனக்கு உள்மருந்தாக மாறும்" என அகத்தியர் உரைத்தார்.
உள்ளே திரும்பி செல்ல இருந்த பூஜாரியிடம் கைநீட்டி, "அந்த தீர்த்தத்தை கொடுங்கள்" என்றேன்.
மாலை நேர பூசையின் பொழுது, தீர்த்தம் யாருக்கும் வழங்கப்படமாட்டாது. அடியேனும் அதை கேட்பதில்லை. சற்றே அதிசயித்துப்போன பூஜாரி, ஏதோ இங்கு நடக்கிறது என்று உணர்ந்து சிரித்தபடியே தீர்த்தத்தை, நீட்டிய கைகளில் விட்டார். அகத்தியப்பெருமானை ஒருமுறை கூர்ந்து பார்த்து, மனதுள் நன்றி கூறிவிட்டு, தீர்த்தத்தை அருந்தினேன்.
உள்ளேபோய் தீர்த்த சங்கை அவர் பாதத்தில் வைத்துவிட்டு வந்த பூசாரியிடம், "இந்த விபூதி வாசனாதி திரவியத்தை குருநாதருக்கும், லோபாமுத்திரை தாய்க்கும் பூசிவிடுங்கள். நாளை காலை வரை அவர் விபூதியின் மணத்தில் திளைக்கவேண்டும். முடிந்தால் ஒரு சிறிதளவு அவருக்கு சார்த்தியத்திலிருந்து பிரசாதமாக கொடுங்கள்" என்று கூறிவிட்டு விநாயகர், கிருஷ்ணர், ஓதியப்பர் சன்னதிக்கு சென்று தரிசனம் செய்துவிட்டு மறுபடியும் குருநாதர் சன்னதி முன் வந்தேன்.
வாசனாதி திரவியத்தை இருவருக்கும் சார்த்திய பின் சிறு துளியை அடியேனுக்கு பிரசாதமாக திருப்பி தந்தார்.
"நடந்ததெல்லாம் திருப்தி தானே. பெரியவர் என்ன சொன்னார்" என்று பேச்சை தொடங்கினேன், பூஜாரியிடம்.
நடந்த நிகழ்ச்சிகளை அவர் கூறிவிட்டு "இத்தனை வேகமாக அவருக்கு இது நடக்கும் என்று நான் நினைக்கவே இல்லை. அவர் எங்கேயோ எல்லாவற்றையும் முன்னரே ஏற்பாடு செய்துவிட்டுத்தான், இங்கு உத்தரவை தருகிறார்" என்றார்.
அடியேன் சுருட்டப்பள்ளி சென்று இறைவனை தரிசித்துவிட்டு வந்ததையும், "கண் திறந்த பெருமாள்" கோவிலையும் பற்றி அவருக்கு கூறிவிட்டு, "ஒருமுறை நீங்கள் அங்கு சென்று நிச்சயமாக தரிசனம் செய்ய வேண்டும்" என்றேன்.
"கண் திறந்த பெருமாள்" கோவிலை பற்றி விரிவாக கேட்டார்.
"அன்று வீட்டிலிருந்து தரிசனத்துக்கு செல்லும் பொழுது, பெருமாளிடம், "எனக்கு எதுவும் வேண்டாம். உங்கள் தரிசனம், அதன் பின் உங்கள் திருவடி அடியேன் தலையில் படவேண்டும் என வேண்டிச் சென்றேன். தீபாராதனையின் பொழுது, பெருமாள் கண்திறந்த பொழுதும் எதுவும் கேட்கவில்லை. அந்த நேரத்தில் வேண்டிக்கொண்டால், வேண்டுதல் நிறைவேறும் என்பார்கள். தீபாராதனை முடித்த பின் அர்ச்சகர், ஒரு சிறு தவழ்ந்த கிருஷ்ணர் விக்கிரகத்தை கையில் தந்து, தாலாட்டிவிட்டு கொடுங்கள் என்றார். எனக்கு தாலாட்டத் தெரியாது. ஆனால் ஒன்று செய்கிறேன். இன்று இங்கு வரும் முன் இறைவனிடம் உங்கள் திருவடி அடியேன் சிரசில் படவேண்டும் என வேண்டிக்கொண்டேன். ஆதலால், அவரை தலையில் வைத்து கண்மூடி அவர் திருப்பாதம் அடியேன் தலையில் பதிந்ததை ஆத்மார்த்தமாக உணர்ந்தேன். இப்படிப்பட்ட அதிசய கோவிலை நீங்கள் பார்க்க வேண்டும்" என்றேன்.
கேட்டுக்கொண்டிருந்த பூஜாரி, சற்றே அதிசயத்துடன் சிரித்தபடி, "பிரசாதம் தருகிறேன்" என்று அகத்தியர் சன்னதிக்குள் சென்றார்.
இரு நிமிடம் ஆகியும் அவர் உள்ளே இருந்து வரவில்லை. அகத்தியர் முன் த்யானத்தில் அமர்ந்திருந்தார்.
"இன்று இவருக்கு என்ன ஆயிற்று? பிரசாதம் தருகிறேன் என்று உள்ளே சென்றவர், ஏதோ உத்தரவு கேட்கிற மாதிரி த்யானத்தில் அமர்ந்து இருக்கிறாரே" என்று யோசித்தபடி அகத்தியரை பார்த்தபடி நின்றிருந்தேன்.
மேலும் ஒரு நிமிடம் சென்றதும், பூஜாரி எழுந்தார்.
ஒரு நுனி இலையில் பிரசாதத்தை ஏந்தி, வலது கையில் பாதுகைகளை சுமந்து வெளியே வந்தார். இந்தாருங்கள் என்றார்.
நான் வெலவெலத்துப் போனேன்.
"என்ன இது! இது எனக்கெதற்கு? ஓ! பெருமாள் திருவடி சிரசில் பட்ட நிகழ்ச்சியை கூறியதால், அகத்தியர் பாதுகையை தருகிறீர்களா? சரி! தலையில் வைத்துவிட்டு, திருப்பி தருகிறேன்" என்று கூறி, கண் மூடி தலையில் வைத்துக்கொண்டேன்.
"திருப்பி எல்லாம் தரவேண்டாம்! அது உங்களுக்கு கொடுக்கச் சொன்னார். ஏன் எதற்கு என்று கேள்வி கேட்காமல், அப்படியே அவர் உத்தரவை சிரமேற்கொண்டு, உங்களிடம் சேர்ப்பித்து விட்டேன்" என்றாரே பார்க்கலாம்.
"இல்லேங்க! இங்க என்ன நடக்கிறது? எதுவுமே புரியவில்லையே. அடியேனுக்கு இதை பூஜை பண்ணத்தெரியாது. நான் இதை வைத்து என்ன செய்ய? இல்லை தெரியாமத்தான் கேட்கிறேன், ஒரு ருத்ராக்ஷ மாலையை கொடுத்துவிட்டு, ஊர் முழுக்க கொட்டடம் அடிச்சிண்டிருக்கான், இதை குடுத்து அவன் வாயை மூடுன்னு சொன்னாரா? இல்ல, சித்த மார்கத்துக்குள் நுழைனோ, சன்யாசியா போகச்சொல்லுனு, சொன்னாரா?" என்றேன்.
இந்த கேள்வியை அவர் எதிர் பார்க்கவில்லை போலும்.
சிரித்தபடியே "அதெல்லாம் இல்லீங்க! இந்த பாதுகை ஒரு வருடத்துக்கு முன்னரே அவரிடம் சமர்ப்பிக்கப்பட்டது. இங்குள்ள அனைவரும், அதை எனக்கு கொடுத்து விட்டேன் என்றனர். அவரோ "அது அங்கேயே இருக்கட்டும். நேரம் வரும் பொழுது சொல்கிறேன். அது வரை என் பாதத்தில் பூசையில் வைத்துவிடு என்றார். இன்று உங்களுக்கு பிரசாதம் எடுக்க உள்ளே சென்றதும், என்னை அழைத்து "இந்த பாதுகையை அவனுக்கு கொடு. கொண்டு செல்லட்டும்" என்றார். அதான் உங்களிடம் சேர்ப்பித்து விட்டேன்" என்றார் பூஜாரி.
அந்த பாதுகைக்காக ஆசைப்பட்டவர்கள் அதிசயமாக கோவிலுக்குள் வந்து பார்த்துக் கொண்டிருக்க, அதை அடியேன் கொண்டு சென்ற பையில் பூவுடன் வைத்தேன்.
பூஜாரி கூறியது அனைத்தையும் கேட்டுவிட்டு, அமைதியாக அகத்தியரை பார்த்தபடி நின்றிருந்தேன். இரு நிமிட அமைதிக்குப்பின், அகத்தியருக்கு நன்றி கூறிவிட்டு, உத்தரவு வாங்கிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தேன். வரும் வழியில் நண்பர்களும், வீட்டில் குடும்பத்தார்களும், பின்னர் வீட்டுக்கு வந்த அகத்தியர் அடியவர்களும், அந்த பாதுகையை விரும்பிக்கேட்டு, அவர்கள் தலையிலும் வைத்து அகத்தியர் ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் அந்த பாதுகை, பூசை அறையில் அகத்தியர் முன் வைக்கப்பட்டது.
அடியேனின் மனைவி அதற்கு சந்தானம், குங்குமம் வைத்து விளக்கேற்றுகிறாள். ஒரு பூவும் வைக்கிறாள்.
இதற்குப்பின், அடியேனின் வாயையும், மனதையும் அகத்தியப்பெருமான் கட்டிப்போட்டுவிட்டார். எதற்காக பாதுகையை கொடுத்தார் என இன்றுவரை தெளிவாகவில்லை.
கேள்வியை கேட்பது நம் கடமை. பதில் கூறுவது அவர் உரிமை. ஆதலால், பதிலுக்காக காத்திருப்போம். வரும்பொழுது வரட்டும்!
ருத்திராக்ஷ ஸ்படிகலிங்க மாலையின் தொடர் நிகழ்ச்சிகளை, அகத்தியப் பெருமான் இத்துடன் நிறைவு செய்தார் என அடியேன் நம்புகிறேன்.
அனைத்தும் ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்.
சித்தன் அருள்...................... தொடரும்!