வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
[கடந்த வியாழக்கிழமை, காலையிலேயே தொகுப்பை வழங்க முடியவில்லை. மாலை அகத்தியர் கோவில் சென்று குருநாதரிடம் முறையிட்டேன். "சரி! போனால் போகிறது நேரம் கிடைக்கும் பொழுது சித்தன் அருளை வெளியிடு" என்று அருள் புரிந்தார். வீடு வந்து சேர்ந்து, அவர் அருளியது உண்மை தானா என்ற சந்தேகம் வரவே (சாதாரண மனுஷனாயிட்டேன்) சோதித்து பார்க்கலாம் என்று ஒரு எண்ணம் வரவே (திருந்தவே மாட்டேன் போல) கோடகநல்லூர் நிகழ்ச்சிகளை நினைத்துப் பார்க்க, மடை திறந்த வெள்ளமென சிந்தனை உருண்டோடியது. ஓ! நடந்ததை சொல்ல வேண்டுமென்றாலும், அவர் அருளினால்தான் உண்டு. அடியேன் கையில் எதுவுமே இல்லை.
"ஓதியப்பரின் பால் கட்டி பிரசாதம்", முகவரி தந்தவர்களுக்கெல்லாம் அனுப்பியாகிவிட்டது. இன்னும் ஒரு 40 பேர் இருக்கிறார்கள். இந்த வாரம், அல்லது அடுத்த வாரம், அனுப்பிவைக்கப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். கையில் பிரசாத இருப்பு தீர்ந்துவிட்டபடியால், இந்த 40 பேருடன், பிரசாத விநியோகம் நிறைவு பெறுகிறது. அடுத்த முறை கிடைக்கிற பொழுது அனுப்பி வைக்கிறேன் என்று உறுதி கூறுகிறேன்.
மேலும் ஒரு விஷயம். தயவுசெய்து யாரும், மொபைல் எண், சுய விலாசத்தை சித்தன் அருள் தொகுப்பில் போடாதீர்கள். உங்களுக்கு தொடர்பு கொள்ள ஏற்கனவே agnilingamarunachalam@gmail.com தந்திருக்கிறேன். இதுவரை வெளியிட்ட அடியவர்கள் தொடர்பை, எடுத்துவிட்டேன் இனி, கோடகநல்லூர் நிகழ்ச்சிகளுக்கு செல்வோம்.]
எந்த வேஷ்டியை தெரிவு செய்வது என்பதை பெருமாளிடம் வேண்டி நின்ற அர்ச்சகருக்கு, பெருமாளிடம் இருந்து உத்தரவு வந்தது.
"என் குழந்தைகள் ஒன்று சேர்ந்து, அபிஷேக ஆராதனைகளை நடத்தி இன்றைய தினம், கோலாகலமாக கொண்டாடுகிறார்கள். ஆனால், இந்த தினம் எனதருமை கருடாழ்வாருக்கு உரியது. அவன் விஸ்வரூபம் எடுத்த ஒரே நிகழ்ச்சி நடந்த நாளில், அவனுக்கு மரியாதை செய்ய நான் விரும்புகிறேன். ஆதலால், என் பக்தனை யாமே தூண்டிவிட்டு வரவழைத்தோம். அவன் கொண்டு வந்ததை எனக்கு சார்த்து. எனக்கென என் குழந்தைகள் வாங்கிக்கொண்டு வந்த உடையை, கருடாழ்வானுக்கு சார்ந்து. அவன் அலங்காரம் தரித்து நிற்பதை நான் இங்கிருந்து கண்டு களிக்க விரும்புகிறேன்." என்றார்.
அடுத்த நொடியில், பக்தனின் வேஷ்டி பெருமாளிடமும், ஜரிகை போட்டு, சங்கு, சக்கரம், திருமண் போட்ட பெரிய வேஷ்டி, கருடர் விக்கிரகத்தையும் அலங்கரித்தது.
இப்படிப்பட்ட நிகழ்ச்சி, ஒரு கவனக்குறைவு அடியேன் பக்கம் மறுபடியும் வரக்கூடாது என்பதற்காக, இந்த முறை, பெருமாளுக்கும், கருடாழ்வாருக்கும் ஒரே போன்ற வஸ்திரங்களை வாங்கியிருந்தேன்.
இதில் புரிந்த ஒரு விஷயம் என்னவென்றால், அகத்தியப் பெருமான் பெருமாளுக்கு அபிஷேக ஆராதனைகளை செய்தாலும், பெருமாளோ, அத்தனை பெருமைகளையும், கருடாழ்வாரை சிறப்பிக்க கொடுக்கிறார் என்பதே உண்மை.
கோவிலை விட்டு வெளியே வரவும், நான்கு பேர்கள் ஒரு ஆட்டோவில் வந்து இறங்கினார்கள். அவைகளில் ஒருவர், சமையல்காரர்.
அடியேனை கண்டதும், ஓடி வந்து "அடியேன், வந்துட்டேன்!" என்று கை கூப்பி நின்றார்.
அடியேனும் கைகூப்பி வணக்கம் சொல்லிவிட்டு "இப்ப உடம்பு எப்படி இருக்கு!" என்று அர்த்தத்துடன் சிரித்த படி கேட்டேன்.
"இப்பொழுது பரவாயில்லை! நேற்று இரவு 11 மணி வரை உறங்கவே இல்லை! பின்னர் தான் உறங்கினேன். விடியற்காலை 4.30க்குத்தான் நினைவு வந்தது. உடல் பாதிப்புகள் எல்லாம் சரியாகிவிட்டது. அதான் ஓடி வந்திருக்கிறேன்!" என்றார்.
"ஹ்ம்ம்! சரி உங்கள் வேலையை தொடங்குங்கள்! அதற்கு முன், 9 மணிக்கு எல்லோருக்கும் பிரசாதமாக பொங்கல் போட்டுவிடுங்கள். பெருமாளுக்கு நிவேதனம் பண்ணிவிட்டு, பிறகு, வந்திருக்கும் அடியவர்களுக்கு காலை சிற்றுண்டியாக கொடுக்க வேண்டும்!" என்றேன்.
"சரி!" என்றபடி தன் பரிவாரத்துடன் கோவில் உள்ளே சென்றார்.
சக நண்பர்களுடன், தாமிரபரணிக் கரை அடைந்தோம். ஒரு நண்பரிடம், "நாம் இருவரும் ஒருமுறை நன்றாக முங்கி குளித்தபின், கரையேறி, வீட்டுக்கு சென்று லோபாமுத்திரை சமேத அகத்தியர் விக்கிரகத்தை கொண்டு வந்து படித்துறையில் வைத்து அபிஷேக ஆராதனைகளை செய்துவிடலாம்" என்றேன்.
சொன்னது போலவே, ஒரு முறை தாமிரபரணியில் மூழ்கி கரை ஏறி, அகத்தியர், லோபாமுத்திரை விக்கிரகங்களை கொண்டு வந்து ஒரு காவி துண்டை நீரில் நனைத்து, பின் படித்துறையில் விரித்து, அதன் மீது வைத்தோம்.
அபிஷேகத்துக்கான சாமான்கள் எதையும் கொண்டு வரவில்லை என்று அப்பொழுது புரிந்தது.
அப்பொழுது ஒரு ஆச்சரியமான நிகழ்ச்சி நடந்தது.
என்ன செய்வது, வெறும் தாமிரபரணி தீர்த்தத்தை விட்டு அபிஷகம் செய்து பூஜையை முடித்துக் கொள்ளலாமா என்று யோசிக்கும் பொழுது,
"அய்யா! என்று ஒரு குரல் கேட்டது.
நிமிர்ந்து பார்க்க, சென்னையிலிருந்து வந்த ஒரு அகத்தியர் அடியவர் தன் கரத்தில், ஒரு பீடத்தில், அகத்தியர், லோபாமுத்திரையின் விக்ரகங்களை சுமந்தபடி நின்றிருந்தார்.
"அய்யா! நீங்கள் அந்த விக்கிரகங்களுக்கு அபிஷேக பூசை செய்கிற பொழுது, இந்த விக்கிரகங்களையும் வைத்து செய்து விடுங்களேன்!" என்றார்.
"எந்தவிதமான அபிஷேக சாமான்களும் எங்களிடம் இல்லை. வெறும் தாமிரபரணி நீரைத்தான் உபயோகிக்கப்போகிறோம்." என்றேன்.
"அய்யா! அபிஷேக பொருட்கள் என்னிடம் உள்ளது! எடுத்துக்கொள்ளுங்கள்" என்றார்.
அவர் கொண்டு வந்த விக்கிரகங்களை முதலில் வந்த விக்கிரகங்கள் அருகில் வைத்து, அபிஷேகத்தை யார் செய்வது என்று யோசிக்கும் பொழுது, "நீங்களே, உங்கள் முறைப்படி அபிஷேக பூஜையை செய்து விடுங்கள்" என்றார் அவர்.
அவர் கொண்டு வந்த பால், மஞ்சள் பொடி போன்றவற்றை, தாமிரபரணி தீர்த்தத்துடன் மந்திர ஜபம் கலந்து, அகத்தியப் பெருமானுக்கும், லோபாமுத்திரை தாய்க்கும், அபிஷேகம் செய்து பின்னர் ஒவ்வொரு விக்கிரகத்தையும் ஒருவர் சுமந்து நதியின் உள்ளே சென்று ஸ்நானம் செய்தோம். யாருக்கெல்லாம், விக்கிரகங்களை சுமக்கும், அவைகளுடன் நதியில் மூழ்கும் வாய்ப்பு கொடுக்க முடியுமோ, அத்தனை பேருக்கும் வாய்ப்பை கொடுத்தார் அகத்தியர்.
அகத்தியர் விக்கிரகத்தை மார்பில் சுமந்தபடி, நீரினுள் மூழ்கிய பொழுது, "என் திருவடி உன் தலையில் படவேண்டும் என்று ஆசைப்பட்டாயே! அதை நிறைவேற்றிக்கொள்வதுதானே" என்று மிகத் தெளிவாக அவர் கூறியது அடியேனுக்கு கேட்டது! உணர்ந்தேன்!
அவ்வளவுதான், அடுத்த நிமிடம், அகத்தியர் விக்கிரகத்தை, தலையில், சஹஸ்ராரத்தில் இருத்தி, நீரில் மூழ்கினேன்.
மனம் "ஓம் அகத்தீசாய நமஹ!" என்று ஜெபித்துக்கொண்டிருக்க, எத்தனை முறை மூழ்கி எழுந்தேன் என தெரியவில்லை. அடியேனின் தீராத அவா, அன்று தீர்ந்தது.
பின்னர், இரு விக்கிரகங்களையும், கரையில் இருத்தி, மாலை சார்த்தி, பூக்களை சார்த்தி, திலகமிட்டு, சிறு நிவேதனத்தை அளித்து, தீபம் காட்டி பூசையை நிறைவு செய்தபின், அகத்தியர் அமர்ந்திருந்த காவி துணியில் சிந்தியிருந்த விபூதியை, அவர் பிரசாதமாக நெற்றிக்கு இட்டுக்கொள்ளவும், நிறைய அகத்திய அடியவர்கள் வந்து "எனக்கும் அந்த விபூதி வேண்டுமென" கேட்டு வாங்கிக்கொண்டனர்.
கூட வந்திருந்த நண்பரிடம் சைகை காட்டி "தாமிரபரணி தாய்க்கான" பூசை சாமான்களை கொண்டு வரச்சொன்னேன்.
அகத்தியர் அனுமதியுடன், தாமிரபரணி தாய்க்கு பூசை செய்து, நதியின் நடுவரை சென்று பிரார்த்தனையுடன் பூஜை தட்டை நீர் ஓட்டத்தில் சேர்த்தோம். அது ஆடி அசைந்து செல்வதை மனதாரக் கண்டுகளித்தபின், கரைக்கு திரும்பும் முன், "அம்மா! தாமிரபரணித்தாயே! எதோ தெரிந்தவரையில், அகத்தியர் அனுமதியுடன், உனக்கு தாம்பூலம் சமர்ப்பித்துவிட்டோம்! அதை ஏற்றுக்கொள். ஏற்றுக்கொண்டாய் என்பதற்கு ஏதேனும் ஒரு அறிகுறி கொடுக்க வேண்டும்" என மனதுள் வேண்டிக்கொண்டேன்.
நான் நின்றிருந்த இடத்தில் நதி நீரானது கழுத்துவரை சென்றது. அருகில் யாரும் இல்லை என்று சொல்லலாம்.
யாரோ ஒரு பூவை வீசி எரிந்து, நம் மீது பட்டால் வரும் உணர்வு வரவே, இடது பக்கம் திரும்பி பார்க்க, ஒரு ரோஜா பூ, அடியேன் முகத்தில் பட்டு தெறித்து நீரில் வீழ்ந்து, ஓட்டத்தில், அடியேனை நோக்கி வந்தது.
இரு கரம் சேர்த்து அதை நீரிலிருந்து எடுத்து, கரையை நோக்கி சந்தோஷமாக வர, இதை ஒன்றிரண்டு அகத்தியர் அடியவர்கள் பார்த்துவிட்டனர்.
ரோஜா பூவுடன் கரைக்கு அருகில் வர "என்ன! அம்மா பூ கொடுத்துவிட்டாளா! எனக்கு கொடுங்களேன் அதை" என இருகை நீட்டி நீரில் நின்று கொண்டிருந்தாள் என் மனைவி.
கரையில் நின்றிருந்த ஒரு அகத்தியர் அடியவரும் (பெண்மணி) முன்னரே கவனித்து விட்டிருந்ததால், அந்த பூவை வேண்டி கைநீட்டி நின்றிருந்தார்.
அவர் கையில் அதை கொடுக்கும் முன், திரும்பி மனைவியிடம் "உனக்கு அம்மாவிடம் கேட்டு வேறு பூ வாங்கித்தருகிறேன்" என்றுவிட்டு, கரையில் நின்ற அகத்தியர் அடியவர் கைகளில், அந்த பூவை கொடுத்தேன்.
மட்டற்ற மகிழ்ச்சியுடன், பூவை வாங்கி கண்களில் ஒற்றிக்கொண்டு, அந்த பெண்மணி தலையில் சூடிக்கொண்டார்.
அடியேன் மறுபடியும் நதிக்குள் இறங்கி சென்றேன், "ஒரு துண்டு பூ குடும்மா, தாமிரபரணித்தாயே!" என்று வேண்டியபடி.
சித்தன் அருள்.................... தொடரும்!