வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
நேற்றைய பதிவில், அகத்தியப்பெருமானுக்கு நன்றி கூறிவிட்டு வந்து கோடகநல்லூர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குகிறேன், என கூறிவிட்டு சென்றது நினைவிருக்கும். உண்மையாகவே அகத்தியப்பெருமானுக்கு நன்றி சொல்வதுடன், கோடகநல்லூர் பூசை விஷயமாக, அவரது அருள் வாக்கு, என்ன என்று தெரியவேண்டும் என்பதே அடியேனின் விருப்பமாக இருந்தது. கோவிலில் சென்றடைந்ததும், பலமுறை அகத்தியர் அடியவர்கள் சார்பாக, பூசையை மிகச்சிறப்பாக நடத்தி தந்தமைக்கு, "நன்றியை" அகத்தியப் பெருமானுக்கு தெரிவித்தேன். பூசாரி வந்து "பூஜை முடிந்து நடை சார்த்தும் பொழுதுதானே செல்வீர்கள்! அப்பொழுது பிரசாதம் தருகிறேன் என்றார்".
"நீங்கள் எங்களுக்காக எதையும் விட்டு வைக்கக்கூடாது. எது எப்படியோ அப்படியே நடக்கட்டும். அவரிடமிருந்து ஏதேனும் தகவல் உண்டா? என விசாரித்து சொல்லுங்கள்" என பொதுப்படையாக கூறிவிட்டு பூஜை நிறைவு பெற காத்திருந்தேன். "நிவேதனம்" நேரத்தில் எல்லோரும் ரொம்ப விலகி இருக்க வேண்டும் என்பது இந்த கோவிலின் கட்டுப்பாடு. ஆதலால், ஒரு கயிறை கட்டியிருந்தார்கள். அகத்தியப்பெருமானுக்கு எதிரில், குறுகலாக கட்டிய கயிருக்கு பின்னால், தரையில் பத்மாசனத்தில் அமர்ந்து, பூசை முடியும் வரை "அகத்தியர் அருளிய ஆதித்ய ஹ்ருதயம்" ஸ்லோகத்தை கூறி, சித்த மார்க்க முறையில் அவருக்கு காணிக்கையாக சமர்ப்பித்தேன்.
பூசை முடித்து வெளியே வந்த பூசாரி, தீபாராதனை தட்டை வைத்துவிட்டு, எல்லார் மீதும் தீர்த்தம் தெளித்தார். மனம் அமைதியாக இருந்தது. என்ன தகவல் வரப்போகிறதோ, என்ற எண்ணத்துடன் காத்திருந்தேன். உள்ளே சென்று அகத்தியர் முன் சற்று நேரம் கண் மூடி நின்ற பூசாரி, பிரசாதத்தை, ஒரு முழம் பூவை, ஒரு இலையில் வைத்து, அடியேனை அழைத்தார். அருகில் சென்ற அடியேனிடம், பிரசாத இலையை தந்துவிட்டு, "பெருமாளும், அடியேனும், மிக சந்தோஷமாக, திருப்தியாக இருக்கிறோம். அனைத்து சேய்களுக்கும் எங்களது ஆசியை வழங்கியுள்ளோம். மிக சிறப்பு, என்று கூறினார்", என மலையாள மொழியில் தெரிவித்தார்.
நடந்த நிகழ்ச்சிகள் ஒன்றும் பூசாரிக்கு தெரியாததினால், அவர் வினவிய பொழுது, "கோடகநல்லூர்" பற்றி சுருக்கமாக தெரிவிக்க வேண்டி வந்தது. அவருக்கு ஒரே ஆச்சரியம். நிறைய தெரிந்து கொள்ள விரும்பினார். கோடகநல்லூர் பிரசாதத்தை அவருக்கு கொடுத்துவிட்டு, பிறகு பேசுவோம், அடியேன் உடனேயே இல்லம் சென்று சேர வேண்டியுள்ளது" என கூறிவிட்டு, மீண்டும் ஒரு முறை நம் குருநாதருக்கு நன்றியை தெரிவித்து உத்தரவு வாங்கி வீடு வந்து சேர்ந்தேன்.
இந்த நிகழ்ச்சியை இங்கு கூற காரணம், இத்தனை வருடம் இல்லாத ஒரு ஆசை, இந்த முறை வந்தது. பெருமாளும், அகத்தியரும், அடியவர்களின் பூசையை ஏற்றுக் கொண்டார்களா, ஏதேனும் குறை அடியவர்கள் செயலில் இருந்ததா என தெரிந்துகொள்ளும், ஆவல் உந்தியது. அது கேள்வியாகியது.
அகத்தியரின் சேய்கள், அன்று அங்கு வந்து, ஆத்மார்த்தமாக செய்த செயல்கள் அனைத்தும், பெருமாளாலும், அகத்தியராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது, என்பதை இதனால் தெரிவித்துக் கொண்டு, இருவரின் ஆசியும், உங்கள் வசம் என்பதையும் கூறிக்கொள்கிறேன்.
இனி கோடகநல்லூர் நிகழ்ச்சிகளுக்கு செல்வோம்.
எல்லையில்லா அருளை வழங்கும் பெருமாளும், கனிவான தகப்பனும், போன வருடம் போலவே, இந்த முறையும், அடியேனை தனியாக ஓடவிட்டு, ஒரு வழி பண்ணிவிடுவார்களோ என்கிற எண்ணத்தில், ஓதியப்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்குப் பின் தான் கோடகநல்லூரை பற்றி நினைப்பது, விண்ணப்பம் கொடுப்பது என்று தீர்மானித்துவிட்டேன். அதன்படி, கோடகநல்லூர் "அந்த நாளுக்கு" மூன்று வாரங்களுக்கு முன், அங்கே சென்று விளக்கு போட்டுவிட்டு பெருமாளிடம் "இந்த முறையும் தங்களுக்கான அகத்திய பெருமானின் பூசை மிகச்சிறப்பாக நடக்கவேண்டும். வருகிறவர்களுக்கும், வர முடியாமல் போனவர்களுக்கும் எந்த பாரபட்சமும் இன்றி தாங்கள் அருளவேண்டும். அகத்திய பெருமான் வந்திருந்து அந்த நாள் பூசையை மிகச்சிறப்பாக நடத்தி தரவேண்டும்!" என பிரார்த்தித்து விண்ணப்பித்தேன்.
அன்றிரவு, பள்ளியறை பால் பிரசாதம் கொடுக்க வந்த அர்ச்சகர், மெதுவாக, அடியேனிடம் வினவினார்.
"ஏதாவது விண்ணப்பம், பெருமாளிடம் போட்டீர்களா?" என்றார்.
அடியேன் சிரித்துக்கொண்டே, "என்ன பதில் சொன்னார்" என வினவினேன்.
"இந்த முறை தாமிரபரணி புஷ்கரமும் இந்த பூசையினூடே வருவதால், மிகச்சிறப்பாக அகத்தியரின் பூசை அமையும். எதற்கும் கவலை வேண்டாம் என வாக்குரைத்தார்" என்றார்.
"இது போதும். இனி முழு வேகத்தில் ஏற்பாடுகளை கவனிக்கலாம்!" என்றேன்.
"இன்னொரு தகவலும் கூட. அகத்தியர் அடியவர்கள் அனைவருக்கும், உங்களுக்கு கிடைக்கிற வாய்ப்பை, விட்டுக்கொடுக்கச் சொன்னார்" என்றார்.
"என்ன! பெருமாள் இப்படிச் சொல்லிவிட்டார்! என்று அடியேன் நான் மட்டும் என்று நினைத்திருக்கிறேன். போன வருடம் "நீ மட்டும்தான் எனக்காக ஓடுவாய்" என முன்னரே பெருமாள் உரைத்தது போலவே நடந்ததால், அனைத்தும் கவனிக்க வேண்டி வந்தது. சரி! எனக்கு எதுவும் வேண்டாம். ஏற்பாடுகளை பிரித்துக் கொடுத்துவிடுகிறேன்." என அவர் சன்னதி முன் நின்று சத்தியம் செய்துவிட்டு, வந்துவிட்டேன்.
அன்றைய தினத்தின் நிகழ்ச்சிகளுக்கு தேவையான விஷயங்களை, பட்டியலிட்டு, பலருக்கும் பிரித்து கொடுத்து, விவரித்த பின், ஒரு சில விஷயங்களை அடியேன் ஏற்றுக்கொண்டேன்.
உள்மனதுள் என்னவோ ஒருசிந்தனை. சரியான நேரத்துக்கு, பிரச்சனையை கிளப்பிவிட்டு, பெருமாள் எங்கேனும் தடங்கல் ஏற்படுத்துவாரோ என்ற எண்ணம், மெல்லிய நூலிழையாக உள்ளே அசைந்து கொண்டிருந்தது.
"சரி! பிரச்சினையை, அதுவாக வரும்பொழுது பார்த்துக்கொள்ளலாம்" என்ற என் பழைய மனநிலைக்கு, திரும்பினேன்.
சித்தன் அருள்.................... தொடரும்!