[ அருள் சுகம் தந்த சுந்தரகாண்டம் தொகுப்பு அடுத்த வாரம் தொடரும்.]
வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அந்த நாள் >> இந்த வருடம் என்கிற தலைப்பில் முன்னரே, பல புண்ணிய தலங்களில், புண்ணிய திதி, தியதி போன்றவை சித்தன் அருளில் குறிப்பிடப்பட்டிருந்ததை படித்திருப்பீர்கள். அதில் ஒரு சிலர், அந்த நாட்களில் அந்தந்த இடங்களுக்கு சென்று அருள் பெற்றதும் அடியேன் அறிந்தேன். இனி, இந்த வருடத்தில், கடைசியாக வருவது
கோடகநல்லூர்.
ஆம்! 02-11-2017, வியாழக்கிழமை அன்று வருகிறது. அந்த தினத்தை அகத்தியர் அருள், வழி நடத்துதலுடன் நம்மால் இயன்ற அளவு, சிறப்பாக நடத்திட ஒரு சில அகத்தியர் அடியவர்கள் ஒன்று சேர்ந்து ஏற்பாடு செய்துள்ளனர். திருக்கோவில் நிர்வாகத்திடம் அனுமதி கேட்டபொழுது, அதையும் அளித்து, வேண்டிக்கொண்டபடி, அன்றைய தினம் காலை 10.30க்கு பெருமாளுக்கு திருமஞ்சனம் (அபிஷேகம்) பூசைகள் செய்யலாம் என்று ஒப்புக்கொண்டுள்ளனர் என்கிற விவரத்தை தெரிவித்துக் கொள்கிறேன். தூரத்திலிருந்து வரும் அகத்தியர் அடியவர்களும், அன்றைய தினம் நலமாக வந்து சேர்ந்து, நதியில் நீராடி பின்னர், திருமஞ்சன பூசைகளை பார்த்து பெருமாளின் அருளை பெற வேண்டும் என்கிற எண்ணத்தில் காலை 10.30 என்கிற நேரம் குறிக்கப்பட்டுள்ளது. அன்று வியாழக்கிழமை ஆக இருப்பதால், அது ஒரு முகூர்த்த நேரம் கூட. எல்லாம் அகத்தியர் அருளால் அமைந்துள்ளது. அந்த நாளின் முக்கியத்துவத்தை நீங்கள் உணர்ந்து கொள்ள, இறைவன், அகத்தியர் அருளை பெற, அன்றைய தினத்தை பற்றி அகத்தியர் அருளியதை (சித்தன் அருளில் முன்னரே திரு.கார்த்திகேயன் அவர்கள் தந்ததை) கீழே தருகிறேன்.
- 6000ம் வருடம் இந்த கோவில் இருக்கும் இடத்தை அகத்திய பெருமான் சுற்றி சுற்றி வந்திருக்கிறார்.
- தாமிரபரணியை உருவாக்கிய பெருமை அகத்தியரைச் சேரும். அதில் அன்றைய தினம் நீராடி, கங்கை, நதி தேவியானவள், தன் பாபத்தை கரைத்துக் கொண்டதாக அகத்தியர் கூறுகிறார். கங்கை புனிதநீராடிய இடங்களில், கோடகநல்லூரும் ஒன்று.
- 1800 வருடங்களுக்கு முன் இங்கு ஒரு நந்தவனம் அமைத்து, அகத்தியர் எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்த புண்ணிய நாள். அவர் வார்த்தைபடி "அகத்தியனே இந்த பெருமாளுக்கு, அங்கமெல்லாம் பால் அபிஷேகம், 14 வகை அபிஷேகம் செய்து குளிரவைத்த அற்புதமான நாள் இதே நாள் தான்!"
- விஷத்தை விஷத்தால் எடுக்கவேண்டும் என்கிற பழ மொழியையும் தாண்டி, விஷத்தை "கருடன்" முறித்தார் என்கிற நிகழ்ச்சி இங்குதான் நடந்திருக்கிறது. அது நடந்த நாளும் இதுவே.
- பச்சை என்பது பசுமை. பச்சை என்பதற்கு விஷத்தை முறிக்கும் சக்தி உண்டு. ஆக, யார் யார் பச்சைக்கல் நவரத்னத்தை மோதிரமாக அணிந்து கொள்கிறார்களோ, அவர்களுக்கு ஆரோக்கியம் கெடாது, வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதற்காகத்தான், பச்சை தான் புதன், புதன் தான் விஷ்ணு. ஆகவே பச்சைக்கும், விஷ்ணுவுக்கும் மிகப் பெரிய சம்பந்தம் உண்டு. அதை எல்லாம் எடுத்துக்காட்டிய அற்புதமான நாள் இது தான்.
- 1547 ஆண்டுகளுக்கு முன் கருடப் பெருமான் விஸ்வரூபம் எடுத்த இடம். ஆகவேதான் கருட ஆழ்வாருக்கு இங்கு மிகப் பெரிய மரியாதை உண்டு.
- ஐப்பசி மாதம், கார்த்திகை மாதம், ஆக இரண்டு மாதங்கள் அத்தனை தெய்வங்களும் இங்கு கூடி, ஒன்றாக ஆனந்தப்பட்டு, அழகாக சமைத்த அமுதத்தை ஒரு கவளம் உட்கொண்டு ஆனந்தப்பட்ட அற்புதமான நாள் இது.
- இந்த நதிக் கரை ஓரத்தில் அத்தனை பேர்களும் ஒன்று சேர்ந்து அந்த ஆடி தோறும், அந்த ஆடி அமாவாசையோ, ஆடி பெருக்கன்றோ, கை ஊட்டி சாப்பிடுவார்களே, கை பிசைந்து சாப்பிடுவார்களே, அந்தப் பழக்கம் ஏற்பட்ட நாளும், இதே நாள் தான்.
- புனிதமான இடம் கார்கோடக நல்லூர். கார்கோடகம் என்றால் விஷம். அந்த கார்கோடகனையே நல்லவனாக மாற்றிய நாளும் இதே நாள் தான்.
- ஏற்கனவே, முன் ஜென்மத்து தோஷங்கள் இருந்தால், அதன் காரணமாக மனதாலோ, உடலாலோ வருத்தப்பட்டுக் கொண்டு இருந்தால், குடும்பம் செழிக்காமல் இருந்தால், வாழ்க்கையில் நொந்து நூலாகிக்கொண்டிருந்தால், அத்தனை வியாதிகளும் தோலிலோ, உடலிலோ இருந்தால், அவை அத்தனையும் போகக்கூடிய நல்ல நாள் இந்த நாள்.
- "4000 ஆண்டுகளாக அகத்தியன் தவமிருந்த காலம். பல பிரளயங்களை கண்டவன் நான். இன்று வரை பிரளயம் கண்டவர்கள் இரண்டே இரண்டு பேர்கள் தான். ஒருவர் காக புசுண்டர், மற்றொருவர் அகத்தியர். அகத்தியனுக்கு சர்வ வல்லமை உண்டடா. அகத்தியன் ஏதோ சிவ மைந்தன் என்று, சிவனை சேர்ந்தவன் என்றோ மட்டும் எண்ணக் கூடாது. முருகப்பெருமான் அவதாரம் என் குருவாக என்றாலும் கூட, அவரை குருவாக நானாக ஏற்றுக்கொண்டேன். சிவபெருமான் அவரின் 75 விழுக்காடு அதிகாரத்தை எனக்கு தாரை வார்த்துக் கொடுத்திருக்கிறார். விஷ்ணுவோ, கேட்கவே வேண்டாம். பஞ்சணையில் அமர்ந்தபடி, பாற்கடலில் படுத்தபடியே, மஹாலக்ஷ்மியின் கையை பிடித்து தன் கை மீது வைத்து, பால் ஊற்றி அத்தனை பொறுப்பையும் எனக்கு கொடுத்து விட்டிருக்கிறார். விஷ்ணு என்ன கார்யம் செய்வாரோ, அதை என்னால் செய்ய முடியும். ஏன் என்றால் அவரிடமிருந்து முழ பொறுப்பையும் நான் வாங்கிக்கொண்டிருக்கிறேன். எனக்கு தாரை வார்த்துக் கொடுத்த அந்த நல்ல நாளும் இந்த நாள்தாண்டா. எத்தனை காரணங்கள் இங்கு நடந்திருக்கிறது. எத்தனை அதிசயங்கள் இந்த மண்ணில் நடந்திருக்கிறது. இவையெல்லாம் எத்தனை பேருக்குத் தெரியுமாடா. வரலாறு தெரியாமல் பேசுவதை நான் பார்க்கிறேன். வரலாற்றை 4000 ஆண்டுகளாக கண்டவன் நான். அதனால் தான் சொல்கிறேன், விஷ்ணு, மகாலக்ஷ்மியின் கையை பிடித்து,பாற்கடலில் உறையும் அமுதத்தை ஊற்றி தாரை வார்த்து "எனது சகல விதமான சௌபாக்கியங்களையும், நீ யாருக்கு விரும்புகிறாயோ எப்படிவேண்டுமானாலும் கொடு. நான் ஒருபோதும் உன் விஷயத்தில் தலையிடமாட்டேன். நீ எதை செய்தாலும் சரியாகத்தான் இருக்கும்" என்று சொல்லி தாரை வார்த்துக் கொடுத்தார்." அந்த நாளும் இந்த நாள்.
- பிரம்மாவும் சரஸ்வதியும் ஓடோடி வந்து, "எங்களின் சார்பாக, மண்ணில் வாழும் மனிதர்களுக்கு ஏதேனும் கல்வியில் மோசமாகவோ, ஆரோக்கியத்தில் குறைவாக இருந்தால், ஆக இன்னும் பல விதிகளில் ஏதேனும் தவறு செய்திருந்தால், மூளை வளர்ச்சி குறைகள் இருந்தால், உடல் நடக்க முடியாமல், கை கால் விளங்காமல் இருந்தால், அது மட்டுமல்ல வாய் பேசாமல் இருந்தால், கண் பார்வை இல்லாமல் இருந்தால், இது போல் அங்க அவயவங்கள் இருந்து பிரயோசனம் இன்றி இருந்தால், அவர்களுகெல்லாம் எங்கள் சார்பாக, நான் படைத்தவன், படைத்ததற்கு காரணம் உண்டு.ஏன் அப்படி படைத்தேன் என்று யாரும் கேட்க முடியாது. ஆனால் என்னுடைய படைப்பின் ரகசியத்தை எல்லாம் உனக்கு தருகிறேன். நீ விரும்பினால் அவர்களின் தலை விதியை மாற்று" என்று சொன்ன நல்ல நாளும் இந்நாள் தாண்டா. ஆகவே எவ்வளவு பெரிய நல்ல சம்பவங்கள் இந்த பூமியில் நடை பெற்று இருக்கிறது என்பதற்கு இதை விட வேறு என்ன அத்தாட்சி வேண்டும்."
- "இந்த சுற்றுப்புற சூழ்நிலைகள் எல்லாம் அருமையான இடம். அவ்வளவு தெய்வ அம்சம் பொருந்திய இடம். தெய்வங்கள் நடமாடிய இடம். இன்றைக்கும் விண்ணவர்களை நோக்கி வணங்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த புனிதமான இடத்தில் வந்து புரண்டு எழுந்தாலே போதும் உனது தோஷம் போய் விடும், ஏன் என்றால் இந்த மண்ணுக்கு அவ்வளவு வாசனை உண்டு. நதிக்கு அத்தனை சிறப்பு உண்டு. இந்த தாமிரபரணி நதியை அத்தனை சாதாரணமாக நினைக்கக் கூடாது.
- ஒரு சமயத்தில்,ஆஞ்சநேயர் வந்து ராமபிரானோடு இந்த தாமிரபரணி நதிக்கரையில் நீராடி, அமர்ந்து, மனம் விட்டு பேசி, நீண்ட நாட்களுக்குப் பின் ஆனந்தமாக இருந்த இடம்.
- அகத்தியர் ஆசிர்வதித்த பொழுது கூறலானார். " எல்லா தெய்வங்களும், எல்லா மனிதர்களும் ஒன்று சேரும் நல்ல நாள் இது. யாருக்கு இந்த பாக்கியம் கிடைக்கும்? முன் ஜென்மத்தில் யார் யார் அகத்தியனை வணங்கி வந்தார்களோ, எவர் எவர், இந்த பச்சை வண்ணனை வணங்கி சேவை செய்தார்களோ, அவர்களுக்குத்தாண்டா இந்த கோடகநல்லூர்ருக்கு அகத்தியன் வரவேற்று, அவர்கள் செய்த பாபங்களில் 33 விழுக்காடுகளை விலக்கியிருக்கிறேன். ஏற்கனவே புண்ணியத்தையும் தந்திருக்கிறேன். இப்பொழுது கடைசியாக, அவர்கள் செய்த பாபங்கள், தெரிந்தோ தெரியாமலோ, அறிந்தோ, அறியாமலோ, கோபத்திலோ, ஆத்திரத்திலோ செய்த பாபங்கள், விதியின் செயலால் எது வேண்டுமானாலும் நடந்திருக்கலாம். மனிதர்கள் தானே, சற்று நிறம் மாறியிருப்பார்கள். குணம் மாறியிருப்பார்கள். வாக்கில், நாக்கில் நரம்பில்லை. எது வேண்டுமானாலும் பேசியிருக்கலாம். புண்பட நடந்து கொண்டு இருக்கலாம். ஆனால் அது அத்தனையும் தாண்டி இவர்களுக்கு, இன்றைய தினம் மிகப்பெரிய புண்ணியத்தை, 33 சதவிகித புண்ணியத்தை என் அருமை தாமிரபரணி நதியே அவள் சார்பாக அவர்களுக்கு வழங்குகிறாள். அந்த பாக்கியம் பெற்றவர்கள் நீங்கள். தாமிரபரணி நதி எப்படிப்பட்ட நதி என்று சொல்லியிருக்கிறேன், கங்கையின் பாபம் போன நதி. அவளே தன் கைப்பட சொல்லுகிறாள், "என்னால் ஆனதை இங்குள்ள அனைவருக்கும் 33 விழுக்காடுகள் தருகிறேன்". இன்று முதல் நீ எடுத்துப்பார். உதிரத்தை கூட எடுத்து விஞ்சான ரீதியில் சோதனை செய்து பார். அங்கொரு வெற்றிடம் இருக்கும். அந்த வெற்றிடம் தான் இந்த தாமிரபரணி நதிக்கரை. ஆசியோடு உங்களுக்கு கொடுத்த புண்ணியம். அந்த புண்ணியத்தை வாங்கிக்கொள். இன்று முதல் இங்குள்ள அனைவருக்கும் எல்லா க்ஷேமமும் கிடைக்கட்டும். நல்லதொரு வாழ்க்கை அமையட்டும். கடந்தகால வாழ்க்கையை தூக்கி எறிந்து விட்டு, ஒரு புதிய வாழ்க்கை தொடங்கட்டும், என்று இந்த கோடகநல்லூர் விஷ்ணுவின் சார்பில் ஆசி கூறுகிறேன்."
- அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.
இப்படிப்பட்ட கோடகநல்லூர் புண்ணிய பூமியில், அந்த புண்ணிய திதி 02-11-2017 வியாழக்கிழமை அன்று வருகிறது.
இதை படிக்கும் அகத்தியர் அடியவர் அனைவரும், அன்றைய தினம் கோடகநல்லூர் சென்று, நதியில் நீராடி, இறைவனை வணங்கி, திருமஞ்சன சேவையில் பங்கு கொண்டு, இறைவன், சித்தர்கள் அருள் பெற்று க்ஷேமமாக வாழ்ந்திட வேண்டுகிறேன்.
கோடகநல்லூர் செல்லும் வழி - திருநெல்வேலியிலிருந்து சேரன்மாதேவி பாதையில், நடுக்கல்லூரில் இறங்கி 1 1/2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
அனைவரும் சென்று, அருள் பெறுக!
அக்னிலிங்கம்!