என்ன நடந்தாலும் உடனேயே, ஏன் எதற்கு என்கிற கேள்விகளை கேட்டு, அதற்கு அடியேனின் மனம் தெளிவு பெறுகிற பதில் கிடைக்கும் வரை, விடாமல் இறைவனிடம், சித்தர்களிடம் கேட்டு வந்த மனநிலை, அகத்தியர் நடத்திய வகுப்பில் படித்தபின் எங்கேயோ தொலைந்து போனது.
"நீ தெரிந்துகொள்ள வேண்டாம், அது தெய்வீக ரகசியம். முன் கர்மா வினை" என்றெல்லாம் பலமுறை பதில் வந்த பொழுது, நடக்கும் விஷயங்கள் எல்லாவற்றிற்கும் பதில் எதிர் பார்க்கக்கூடாது. ஏதோ போனால் போகிறது என்று இத்தனையாவது இந்த ஜென்மத்தில் அருளுகிறார்களே என்று அமைதியாகிவிட்டேன் என்பதே உண்மை. அது முதல், "இத்தனை பாக்கியத்தை கொடுத்தாய் இறைவா, அகத்திய பெருமானே" என மனதுள் நினைத்து, நன்றியை மௌனமாக சொல்லிவிட்டு விலகிவிடுவேன். இந்த வாழ்க்கையில் நல்லது செய்ய அடியேனிடம் வந்த வாய்ப்புகள் தான் மிகப் பெரிய சொத்து, என்பதே என் அடிப்படை எண்ணமாக மாறியது. இதை புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளட்டும். இல்லையேல் என் கர்மா அதற்கு இடம் கொடுப்பதில்லை என்று தீர்மானித்துவிடுவேன்.
"தன் அபிமான சிஷ்யனை அனுப்பி வைத்தார் தகவலுடன்" என்று முன் பதிவில் சொல்லியிருந்தாலும், சிஷ்யர் நேரடியாக வரவில்லை. தொலை பேசி மூலம் தொடர்பு கொண்டார்.
அவரை பற்றி சொல்வதென்றால், சித்தர்களின் அபிமான அடியவர். அதிகம் பேசவோ, உரைக்கவோ மாட்டார். அனைத்து மொழியும் பேசத்தெரிந்தவர். ஆனால் அதிகம் பேச விருப்பப்படமாட்டார். பொதுவாக பேசும் பொழுது எல்லா மொழியும் கலந்து பேசுவார். செந்தமிழ் என்பது அவர் வரையில் இல்லை என்பதே உண்மை. அவரை சந்திப்பது என்பதே மிக்க குறைவு. பேசுவது அதை விடக் குறைவு.
தொலைபேசி எண்னை தந்துவிட்டு "நீ கூப்பிடாதே! தேவை இருந்தால் நானே கூப்பிடுவேன்" என்று சென்றவர். அடியேன் அவரை அழைத்ததே கிடையாது. திடீரென்று ஒரு நாள் கூப்பிட்டு, கடலென விஷயங்களை கொட்டுவார். அனைத்தும் அகத்தியர், சித்தர்களை பற்றியது. பிறகு "நான் ஒரு மாதத்திற்கு த்யானத்தில் இருக்கப்போகிறேன். இது அவர்கள் உத்தரவு, பிறகு அழைக்கிறேன்" என்று கூறி வைத்துவிடுவார்.
இப்படிப்பட்டவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. இவ்வளவுக்கும், இவரிடம் என் தந்தை இறைவன் திருவடியை அடைந்தார் என்று கூட கூப்பிட்டு சொல்லவில்லை. இவருக்கும் எனக்கும் தொடர்பு உள்ளது என்று பிறர் அறியாத விஷயம். ஆதலால், வேறு யாரும் சொல்லியிருக்கவும் வாய்ப்பில்லை.
"திருச்சிற்றம்பலம்" என்கிற முகவுரையுடன் எப்போதும் போல பவ்யமாக பேசினேன்.
"திருச்சிற்றம்பலம்" என்று மறு முனையிலிருந்து மெலிதாக சன்னமாக குரல் வந்தது.
"என்ன குரல் மிக சன்னமாக உள்ளதே. நலம் தானே?" என்று விசாரித்தேன்.
"நலமாக இருக்கிறேன். இப்பொழுது தெளிவாக கேட்கிறதா?" என்று செந்தமிழுக்கு தாவினார்.
பேச்சில் வந்த மாற்றத்தை உடனடியாக கவனித்தேன்.
ஏன் எதற்கு என்று தெரியாததால், "சொல்லுங்கள் என்ன விஷயம்?" என்றேன்.
"என்ன? தகப்பனார் இறைவன் திருவடியை அடைந்துவிட்டார் போல!" என்றார்.
"ஆம்!" எனக் கூறி நடந்த விஷயங்களை விவரித்து, அவருக்கு தெரிவிக்காததற்கு மன்னிப்புக் கேட்டேன்.
"தகப்பனாரின் மரணம் மட்டும் தான் தெரிவிக்கப்படவில்லையோ?" என்று கொக்கி போட்டார்.
"இப்போதைக்கு இறைவன் தீர்மானத்தால் நடந்த நிகழ்ச்சி அது ஒன்று தானே. வேறு எதுவும் சொல்கிறமாதிரி நடக்கவில்லை" என்றேன்.
"ஓ! அப்படியா? வேறு எதற்கும் வேண்டுதல் சமர்ப்பிக்கவில்லையோ?" என்றார்.
"வேண்டுதல்" என்கிற வார்த்தையை கேட்டதும், என் மனம் விழித்துக் கொண்டது. அது எப்படி இவருக்கு தெரியும்? என்று மனதுள் எண்ணம் ஓடியது.
பேசுவது நண்பரா, அகத்தியரா என்கிற எண்ணம் ஓடியது என்னுள். ஏன் என்றால், அவர் பேச்சில் தமிழ் அப்படி சுத்தமாக விளையாடியது. இவர் இப்படி பேசுபவரும் அல்ல. நல்ல அதிகார தோரணை.
"சரி! பொறுமையாக இருந்து கூறுவதை கேட்போம்" என தீர்மானித்து, "சொல்லுங்கள்" என்றேன்.
"உன் தகப்பன் இறைவன் திருவடியை அடைந்தது இறைவனின் சித்தம். வந்தவர்கள் அனைவரும் திரும்பி சென்றுதான் ஆகவேண்டும் என பல முறை உரைத்திருக்கிறோம். யாருக்கு மோக்ஷம் கொடுக்க வேண்டும் என சித்தர்கள் தான் இறைவனிடம் சிபாரிசு செய்வார்கள். அதன் படி இறைவன் உத்தரவால் சில விஷயங்களை செய்ய உத்தரவாகும். உனக்குள் "மோக்ஷ தீபம்" போடவேண்டும் என்கிற எண்ணம் வந்தது ஒரு எண்ணம் மட்டுமே. யாருக்கு போடவேண்டும் என்று சித்தர்கள் உரைத்தால் அன்றி முறைப்படி போடுதல் கூடாது. மனிதருக்கு தோன்றினால், அது ஒரு வெறும் எண்ணம் மட்டுமே. திதி கூட நீங்கள் கொடுப்பது சித்தர் மரபு படி இல்லை. போகட்டும் என்று விட்டு வைத்திருக்கிறோம். போன ஆத்மாவை விட்டு விடவேண்டும். மனிதன் தன் செயலினால், அந்த ஆத்மாவை திரும்பி பார்க்க வைக்க கூடாது. மறு பிறவியோ, ஜென்மமோ எதுவாகினும், அந்த ஆத்மாவின் கர்மா வினையை பார்த்து, இறைவன் தீர்மானத்தால் நடப்பது. உன் தகப்பனாக இருந்த ஆத்மாவுக்கு அது தேவை இல்லை. புரியும் என்று நினைக்கிறேன். எண்ணங்கள் செயல் ஆக மாறவேண்டியது இறைவன் சேவைக்கு" என்றார்.
அடியேன், அப்படியே ஆடிப் போய்விட்டேன். நேரடியாக வந்து ரெண்டு சார்த்தியிருந்தால் கூட பரவாயில்லை என்று தோன்றியது. அவ்வளவு தூரத்துக்கு உள்ளே பதியும் படி, மனதுள் போட்டு வைத்திருந்த திட்டத்தை தவிடு பொடியாக்கிவிட்டார்.
என்னுள் எழுந்தது ஒரு எண்ணம் மட்டுமானால், அதை உடனேயே விட்டுவிடவேண்டும். அவர் சொல்வதில் ஒரு காரணம் இருக்கும். சோதனையே வேண்டாம். சரி மாற்றி அனுமதி கேட்போம், என தீர்மானித்து,
"சரி! மோக்ஷ தீப எண்ணத்தை கைவிட்டு விடுகிறேன். ஆனால் சனிக்கிழமை அன்று பெருமாளுக்கு சேவை செய்கிற விதமாக, லோக ஷேமத்துக்கு வேண்டிக்கொண்டு, கோடகநல்லூர் சென்று சுற்று விளக்கு போடலாமா? அதற்கு அனுமதி/உத்தரவு உண்டா?" என்று கேட்டேன்.
"அதை செய்! அதை இறைவன் ஏற்றுக்கொண்டு சில விஷயங்களை அருளுவார். அதை பெற்றுக்கொள்" என்று கூறியதும் தொலைபேசி தொடர்பு தானாக துண்டிக்கப்பட்டது.
அடியேன் எத்தனை முறை முயற்சி செய்தும், ஒரு முறை தொடர்பு போனதே ஒழிய அவருடன் பேச முடியவில்லை.
"சரி! வேண்டிய தகவல் வந்துவிட்டது. அவரை தொந்தரவு செய்ய வேண்டாம்" என நினைத்து விட்டுவிட்டேன்.
அவர் பேசிய தமிழ், அதன் நெடி என்னுள் உருத்திக் கொண்டே இருந்தது. இது அவர் இல்லையே. ஆனால் அவர் தான். இத்தனை தெளிவாக தமிழில் பேசுகிறாரே. இப்படி இதற்கு முன் இருந்ததில்லையே என்று ஒரு எண்ணம் என்னுள் ஓடிக் கொண்டே இருந்தது.
ஒரு முப்பது நிமிடம் கழிந்திருக்கும்.
அவர் தொடர்பு கொண்டார், மறுபடியும்.
இம்முறை அவரே முதலில் "திருச்சிற்றம்பலம்" என்றார்.
பதிலுக்கு கூறிவிட்டு, "என்ன விஷயம் என்றேன்!"
"இப்பொழுதுதான் என் செல்லை பார்த்தேன். அதில் உங்கள் மிஸ் கால் இருந்தது! என்ன விஷயம். ஏதேனும் அவசர தேவையா?" என்றார் எப்போதும் போல.
"என்ன மனுஷர் இவர்? இப்போது தான் பேசினார்! அதற்குள் மறந்து விட்டாரா?" என்று யோசித்தபடி,
"நீங்கள் தான் சற்று முன் என்னை அழைத்து சில விஷயங்களை கூறினீர்கள். நாமிருவரும் 20 நிமிடம் பேசிக்கொண்டிருந்தோம்." என்றேன்.
"நானா? உங்களுடனா? எப்போது பேசினேன். என்ன பேசினேன்?" என்றார்.
பேசிய அனைத்தையும் கூறிய பொழுது "என்ன சொல்றீங்க. நான் வெளியே போய் விட்டு இப்பொழுதுதான் வீடு திரும்பினேன். என் செல் என்னிடம் தான் உள்ளது. மேலும் நீங்கள் சொல்கிற "மோக்ஷ தீபம்" இறைவன் சித்தம் போன்றவை எனக்கு தெரியாத விஷயம். நான் எப்படி அதை பற்றி கூறியிருக்க முடியும்? இன்று வரை பிதுருக்கள் விஷயத்தை பற்றி நாம் இருவரும் ஏதேனும் பேசியிருக்கிறோமா? இல்லையே! இது வேரென்னவோ நடந்திருக்கிறது" என்று கூறினார்.
நான் சிரித்துக் கொண்டே " உங்கள் செல்லை பாருங்கள். அதில் ஒரு மணி நேரத்துக்கு முன் நீங்கள் என்னை அழைத்ததின் தெளிவு இருக்கும்" என்றேன்.
தொடர்பில் இருந்து கொண்டே "செல்லை" பரிசோதித்தவர், "அப்படி எதுவும் என் செல்லில் இல்லையே" என்றார்.
"நாம் பேசியதை நான் பதிவு செய்யவில்லை. இருப்பின் உங்களுக்கு இந்த நொடியே அனுப்பி வைத்திருப்பேன். என் வேண்டுதலுக்கு இறங்கி அகத்தியப் பெருமானே உங்களுள் இறங்கி, எனக்கு பதிலத்துள்ளார் என்று நினைக்கிறேன். போதும். இதை பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டாம். எனக்கான தகவல் வந்துவிட்டது. மிக்க நன்றி. ஆனால் அவர் சொன்ன படி இந்த வாரம் கோடகநல்லூர் சென்று பெருமாளுக்கு விளக்கு போடப் போகிறேன். கிடைப்பது எதுவாகினும் அது லோக ஷேமத்துக்காக மட்டும் என்று உறுதி கூறுகிறேன். போதுமா!" என்றேன்.
"என்னவோ போங்க! என்னென்னவோ நடக்கிறது. ஒன்றும் புரியவில்லை. ரொம்ப யோசித்தால், பைத்தியம் தான் பிடிக்கும். நடந்த வரையில் நல்லதாக நடந்திருக்கிறது. அது போதும். சரி விடை பெறுகிறேன்" என்று கூறி சென்றவர், இன்று வரை அதன் பின் கூப்பிடவில்லை என்பதே உண்மை.
விடைபெறும் முன் ஒரு கேள்வியை கேட்டேன்.
"இது போல வேறு எங்கேனும், யாரிடமாவது மாட்டிக் கொண்டீர்களா?" என்றேன்.
"ஆமாம்" என்று மட்டும் கூறினார்.
அவர் சொன்னது போல், இங்கே என்ன நடக்கிறது என்று ஆராய்ந்தால், பைத்தியம் தான் பிடிக்கும். கேட்ட கேள்விக்கு, வேண்டுதலுக்கு சரியான வழியை காட்டினார்கள், பெரியவர்கள் என்று மட்டும் எடுத்துக் கொள்ளவேண்டும்.
அந்த வார கடைசியில், பெரியவர்கள் அனுமதி அளித்ததின் பேரில், கோடகநல்லூர் கிளம்பி சென்று, பெருமாள் அனுமதியுடன் சுற்று பிரகாரத்தில், விளக்கு போட்டேன், மாலை 6 மணிக்கு. சுமார் ஒரு 20 கல் விளக்கு இருக்கிறது. அனைத்தையும் முடிந்த வரை சுத்தம் செய்து, விளக்கு போட ஒரு மணிநேரத்துக்கு மேல் ஆனது.
பெருமாள் முன்பு போய் நின்ற பொழுது எதுவும் கேட்க தோன்றவில்லை.
"இந்த தீப சுடரை, வெளிச்சத்தை ஏற்றுக் கொண்டு, பூமியை எட்டு திக்கிலிருந்தும் காப்பாற்றுங்கள். அனைத்து ஆத்மாவும் க்ஷேமமாக இருக்கட்டும்" என்று மனதுள் ஒரு பிரார்த்தனை வந்தது.
அதையே அவரிடம் சமர்ப்பித்தேன்.
"இன்னும் இது போல் உங்களுக்கு விளக்கு போட நிறைய வாய்ப்பை அளியுங்கள்" எனவும் ஒரு விண்ணப்பத்தை சமர்ப்பித்தேன்.
இன்றும் வாய்ப்பை அள்ளி வழங்குகிறார்.
சரி! பெருமாள் என்ன பரிசு தந்தார்?
அன்றைய தினம், கோவில் நடை சேர்த்தும் முன் எதேச்சையாக விளக்கு எரிகிறதா என்று எட்டி பார்க்க, கிடைத்த காட்சியை கீழே உங்களுக்கு சமர்ப்பிக்கிறேன். படத்தை பெரிதாக்கி பார்த்தால் என்ன தெரிகிறது என்று நீங்களே புரிந்து கொள்ளுங்கள்.
படத்தின் இடது பக்க விளக்கின் அருகில் உள்ள ஒரு மண்டபத்தில் தான் முதலில் பெருமாள் அமர்ந்திருந்தாராம். அங்கிருந்து தான் சித்தர்கள் வேண்டிக் கொண்டதற்கு இணங்க இப்போதைய சன்னதிக்கு வந்து அமர்ந்தாராம்.
இதை வாசிக்கும் அகத்தியர் அடியவர்கள் யாருக்கேனும், ஒரு வாய்ப்பு கிடைத்தால், சுற்று விளக்கு போடுங்கள். நம் வாழ்க்கையில் ஒரு தெளிவு ஏற்படும்.
இந்த அனுபவத்திலிருந்து அடியேன் புரிந்து கொண்டது ஒன்று தான். சித்தர்கள் வழியில் செல்பவர்களை மட்டுமல்ல, அவர்கள் எண்ண ஓட்டங்களையும் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள், திருத்தி வழி நடக்க விடுகிறார்கள்.
ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தியப் பெருமானுக்கு அனைத்தும் சமர்ப்பணம்!