ஹயக்ரீவரின் கோபத்தால் சற்றும் தளராத அகத்தியப் பெருமான் "ஹயக்ரீவரே! விநாசகாலே விபரீத புத்தி; என்ற பழமொழி தங்களுக்குத் தெரியாததா? தாங்கள் என்மேல் வருத்தப்படுவதில் அர்த்தமே இல்லை. ம்ம்... முடிந்தால் நீங்கள் அடுத்த அடி வைக்கலாம். ஏன் நான்கு கால் பாய்ச்சலில் கூட பாய்ந்து செல்லலாம். நான் ஒன்றும் நிற்க மாட்டேன் அய்யனே" என்றார்.
"என்ன முனிவரே, வேடம் போடுகிறீர்? செய்வதையும் செய்துவிட்டு என்ன வேடிக்கையும் பார்க்கிறீர்களே! முதலில் என்னை இங்கிருந்து போகவிட வழிகாட்டும்" என்றார் ஹயக்ரீவர்.
"எங்கே போகிறீர்கள்?" என்றார் அகத்தியர்.
"என் அனுமதியின்றி குடிபுகுந்த அந்த கலஅவதாரமான வேங்கடவனை இங்கிருந்து விரட்டப் போகிறேன்." என்றார் ஹயக்ரீவர்.
"அது ஒன்றும் பெரிய விஷயமே இல்லை. திருமால், யாருக்கும் எந்த விதத் தீங்கும் இழைக்க மாட்டார். அதுமட்டுமன்றி - யார் என்ன பிரார்த்தனை, எங்கு செய்தாலும் அதை சட்டென்று நிறைவேற்றியும் காட்டுவார்." என்றார் அகத்தியர்.
"ஓ! அப்படியா செய்தி! அப்படியென்றால் அவரோடு நான் மோதவேண்டாம். நான் சொன்னால் அவர் அப்படியே கேட்டுவிட்டு இங்கிருந்து சென்று விடுவாராக்கும்?"
"ஆமாம்! ஆனால் ஒரு சிறு திருத்தம். தாங்கள் "சொன்னால்" என்பதை விட அவரிடம் மனமுருகப் பிரார்த்தனை செய்து கொண்டு கேட்டால் என்று மாற்றிக் கொள்ள வேண்டும். அவர்தான், கேட்டவர்களுக்கு கேட்டதெல்லாம் தரும் கருணை வள்ளலாயிற்றே!"
"இப்போது என்னதான் சொல்கிறீர்கள்?"
"திருமலையில் குடிகொண்டிருக்கும் திருமாலிடம் தாங்கள் விவேகத்தோடு மனதாரப் பிரார்த்தனை செய்தால் போதும். அவர் தங்கள் வேண்டுகோளை நிச்சயம் ஏற்பார்."
"அப்படியும் அவர் அங்கிருந்து நகர மறுத்தால்?"
"தங்கள் ப்ரார்த்தனையில்தான் குற்றம் இருக்கும் என்பேன்."
"எப்படி பிரார்த்தனை செய்வது, எங்கிருந்து செய்வது?"
"அப்படி கேளுங்கள். எனக்கு முழுமையாக எதுவும் தெரியாது. பிரார்த்தனையை எப்படிச் செய்ய வேண்டும், என்பதை கலைவாணி சரஸ்வதி தேவிதான் மிக நன்றாக அறிவாள். அந்த சரஸ்வதி தேவியை நோக்கி கைகூப்பி நமஸ்கரித்துக் கேளுங்கள்" என்றார்.
"கலைவாணி வருவாளா?"
"கண்டிப்பாக வருவாள். பிரார்த்தனை சொல்லித்தருவாள். திருமலை வேங்கடவனும் உங்கள் பிரார்த்தனையை கேட்டு செவி மடுப்பார். பிறகென்ன? சண்டை போடாமல், காயம்படாமல் நீங்கள் நினைத்ததை அடைந்து விடுவீர்கள்" என்று பவ்யமாக சொன்னார் அகத்தியர்.
அகத்தியப் பெருமானுக்கு உற்ச்சாகம் தாங்கமுடியவில்லை. எப்படியோ ஹயக்ரீவரின் வேகத்தை தடுத்து நிறுத்தி அவருக்கு நல்வழி காட்டிவிட்டோம் என்ற நம்பிக்கையில் அங்கிருந்து நகன்றார்.
அதெப்படி சண்டைபோடாமல் ஜெயிக்க முடியும்னு குறுமுனி சொல்கிறாரே, அதையும்தான் பார்ப்போமே என்று ஹயக்ரீவர் யோசித்து கலைவாணியை நோக்கி "சரஸ்வதி தேவியே இங்கு வா" என்று பலமுறை அழைத்தார். பலமுறை அழைத்தும் கலைவாணி வராததால், ஹயக்ரீவருக்கு கோபம் வந்தது.
அதே சமயம் இதுவரை மறைந்து இருந்த கலிபுருஷன் ஹயக்ரீவரிடம் வந்தான். என்ன இது அநியாயமாக இருக்கிறது. வேகமாக அசுரவேகத்தில் நான்குகால் பாய்ச்சலில் திருமாலையும் அவன் அடியாட்களையும் தாக்க வந்த ஹயக்ரீவர் இப்போது அமைதியாக அமர்ந்து "கலைவாணியை" அழைக்கிறாரே. இது நியாயமில்லையே. அப்படியென்றால் ஹயக்ரீவர் மாறிவிட்டாரா? அப்படியென்றால் இந்த பூலோகத்தில் நமக்கு வேலையே இருக்காது போலிருக்கிறது என்று பயந்து ஹயக்ரீவரை சரஸ்வதிதேவியை சந்திக்காமல் தடுக்க வேண்டும் என்று முடிவெடுத்தான், கலிபுருஷன்.
"என்ன ஹயக்ரீவரே என்ன ஆச்சு உங்களுக்கு? திருமாலிடம் தோற்றுவிட்டீரா?" என ஏளனமாகக் கேட்டான், கலிபுருஷன்.
"என்னது? நானாவது திருமாலிடம் தோற்பதாவது. சண்டை போடாமல் திருமாலை திருமலையிலிருந்து விரட்ட முயற்சி செய்கிறேன்."
"அப்படியொன்றும் செய்வதாக தோன்றவில்லை. மாறாக பிரார்த்தனை செய்யப் போவதாகத் தெரிகிறது!"
"ஆம்! அதற்காகத்தான் கலைவாணியை அழைத்தேன். ஆனால் அவள் வரவில்லை."
இதெல்லாம் உங்கள் அறியாமையால்தான். அகத்தியன் பொல்லாதவன். உனக்கும் திருமாலுக்கும் சந்திப்பு ஏற்படக்கூடாது. திருமாலிடம் நீ சரண் அடைய வைக்கவேண்டும் என்று கூறியது ராஜ தந்திரம்." என்றான்.
"என்ன சொல்கிறாய் கலிபுருஷா?" என்றார் ஹயக்ரீவர்.
"உண்மையைத்தான் கூறுகிறேன். அகத்தியன் பேச்சைக் கேட்டால் நீ ஏமாந்து போவாய். நான் சொன்னபடி செய். நேரிடையாக அந்த கல் அவதாரியாகிய வேங்கடவனிடம் மோது, அவனை இந்த இடத்திலிருந்து விரட்டி அடி. திருமால் கதி கலங்க ஓடுவார். அவர்பின்னே இந்த ஆதி சேஷனும் பயந்தபடி கலக்கத்துடன் ஓடுவான். இதன் பிறகு பாரேன், நீ தான் இந்த கோனேரிக்குத் தலைவனாக வரப்போகிறாய்" என்று தூண்டிவிட்டான்.
"என்னால் எதையும் நம்பமுடியவில்லை. ஒரே குழப்பமாக இருக்கிறது" என்றார் ஹயக்ரீவர்.
"இது, அகத்தியர் செய்த சூழ்ச்சி. இல்லையென்றால் நீ கூப்பிட்ட குரலுக்கு சரஸ்வதி தேவி இங்கு வந்து காத்திருக்கவேண்டும். வரவில்லையே. எனவே இனிமேலாவது என்னை நம்பு. ஜெய் விஜயீபவ!" என்றான் கலிபுருஷன்.
"இப்போது என்ன செய்ய வேண்டும் கலிபுருஷா?" என்றார் ஹயக்ரீவர்.
"ஒரே பாய்ச்சலில், அசுர வேகத்தில் அதோ அந்த கல் அவதாரமாக எடுத்திருக்கும் வேங்கடவன் மீது பாய்ந்து கீழே தள்ளு" என்றான்.
கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையாதோ என்ற பழமொழிக்கு ஏற்ப கலிபுருஷன் வார்த்தைகளைக் கேட்டு, ஒரே பாய்ச்சலில் வேங்கடவன் மீது பாய்ந்தான், ஹயக்ரீவன்.
சித்தன் அருள்................ தொடரும்!
ஓம் அகத்தீசாய நம..
ReplyDeleteஓம் அகத்தீசாய நம..
ஓம் அகத்தீசாய நம..
நன்றி திரு. அக்னிலிங்கம் அருணாச்சலம் ஐயா & திரு. வேலாயுதம் கார்த்திகேயன் ஐயா அவர்களுக்கும்...
ஓம் நமச்சிவாய...
Aum Aga.teesaya Namo Namaha
ReplyDeleteஓம் அகத்தீசாய நம:
ReplyDeleteOm Agasthiyar loba mudra thaaye potri potri
ReplyDeleteGood
ReplyDeleteஓம் அகத்தீசாய நம
ReplyDelete