​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 4 June 2015

சித்தன் அருள் - 225 - "பெருமாளும் அடியேனும் - 9 - சரஸ்வதியும் ஹயக்ரீவரும்!


கலைவாணியைக் கண்டதும் ஹயக்ரீவருக்கு ஆச்சரியம் தாங்கவில்லை. மரியாதைக்கு நமஸ்காரம் சொன்னார்.

"யாருமில்லாத இந்தக் கோனேரிக் கானகத்தில் தாங்கள் மட்டும் எப்படி தனியாக வந்தீர்கள்?" என்று கேட்டார்.

"ஏன்! ஹயக்ரீவரே! நீங்கள் இல்லையா? பின் எனக்கென்ன பயம்?"

"நான்தான் இந்தக் காட்டில் காலம் காலமாக இருக்கிறேனே! ஆனால் இன்றுதான் தங்களை முதன் முதலாகச் சந்திக்கிறேன்." என்றார் ஹயக்ரீவர்.

"ஏன்? பெருமாள் இங்கு அவதாரம் எடுத்து கல்யாண குணத்தோடு காட்சி தந்து கொண்டிருக்கிறாரே, அவரைக் காணவில்லையா?" என்றாள் சரஸ்வதி தேவி.

"இல்லை தேவி! அங்கு ஏதோ கல்லில் படம் வரைந்தாற்போல் பகவான் சொரூபம் இருந்தது. அதன் முகத்தை சரியாகப் பார்க்க முடியவில்லை. முகமெல்லாம் மறைத்துக் கொண்டு திருநாமம் இருந்தது. நீங்கள் சொல்வதைப் பார்த்தால் அவர்தான் திருமால் என்று இப்போது நினைக்கிறேன். சரிதானா?" என்றார் ஹயக்ரீவர்.

"ஹயக்ரீவர் சொன்னதால் அது சரியாகத்தானிருக்கும். அதுசரி, தங்களைப் பார்த்தால் முகத்தில் இயல்பான சாந்தகுணம் இல்லை, பரபரப்புடனும் உக்கிரமாகவும் காணப்படுகிறீர்கள். யாரையாவது தேடிக் கொண்டு வெகுவேகமாகப் போகிறீர்களா?" என்று ஒன்றும் தெரியாதமாதிரி கலைவாணி கேட்டாள்.

"ஆமாம் தேவி! தங்களுக்குத் தெரியும். பிரம்மாவுக்கும் தெரியும். இந்தக் கோனேரிக் காட்டில் ஆண்டாண்டு காலமாக அரசாட்சி செய்து வருகிறேன். இப்பொழுது என் அனுமதியின்றி யாரோ இங்கு வந்து இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்து விட்டாராம். யார் அது என்பதைக் கண்டுபிடிக்கவே இங்கு வந்தேன்" என்றார்.

"யார் சொன்னார்கள், இந்த இடத்தில் ஆக்கிரமிப்பு செய்ததாக?"

"கலிபுருஷன்!"

"ஓ! அப்படியா? அவர் சொன்னதை அப்படியே நம்பி விட்டீர்களோ. அது சரி, அவர் சொன்னது உண்மையாக இருந்தாலும் யார் இங்கு ஆக்கிரமிப்பு செய்தார் என்பதையும் கலி புருஷனே சொல்லியிருக்கலாமே!" என்றாள் கலைவாணி.

"சொன்னாலும், சொல்லாவிட்டாலும் என் ராஜாங்கத்தில் யார் ஆக்கிரமிப்பு செய்தாலும் தவறுதானே?" என்றார் ஹயக்ரீவர்.

"அது திருமாலாக இருந்தால்?"

"தவறுதான்"

"அப்படி என்றால் அவரை என்ன செய்வதாக உத்தேசம்?"

"இந்த இடத்தை விட்டு வெளியேறச் சொல்வேன்"

""மறுத்தால்?"

"அவரோடு போர் புரிவேன்".

"திருமாலோடு, திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் தாங்கள் போர் புரிவதா?"

"ஒரே ரத்தத்தில் பிறந்த அண்ணன்-தம்பிகள் போர் புரிவதில்லையா? இதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது தேவி?"

"போரிடலாம். தவறில்லை. அதில் வெற்றி தோல்வியை பற்றி முதலில் சிந்திக்கவேண்டும். தோற்றால் எப்படி? ஜெயித்தால் எப்படி? என்று முன் கூட்டியே திட்டமிடவேண்டும்.

"நான் அதைப்பற்றி என்றைக்குமே சிந்தித்ததே இல்லை. இனியும் சிந்திக்க போவதும் இல்லை." என்றார்.

"அப்படி என்றால் உங்களுக்கு தோல்விதான் நிச்சயம்" என்றாள் கலைவாணி.

"அதெப்படி முன் கூட்டியே தாங்கள் கணிக்க முடியும்?"

"பிரம்மாதான் சொன்னார்!"

"என்னவென்று?"

"இப்படி வாரும் ஹயக்ரீவரே! தாங்கள் பொறுமையாகக் கேட்பதாக இருந்தால் சொல்கிறேன். தங்களுக்கு கலிபுருஷன் சொன்ன தகவலால் தாங்கள் கோபப்படுவீர்கள். கலி அவதாரம் எடுத்த திருமாலோடு போர்புரிய ஆக்ரோஷமாகப் போவீர்கள். அப்படி சென்றால் நீங்கள் திருமலையில் குடிகொண்டிருக்கும் வேங்கடநாதனால் தோற்கடிக்கப் படுவீர்கள். ஆகவே, பிரம்மா இதனை என்னிடம் சொல்லி ஹயக்ரீவருக்கு அறிவுரையும் நல்லவழியும் காட்டிவிட்டுவா" என்று சொல்லி அனுப்பினார். அதனால்தான் நான் இங்கு தங்களைத் தேடிவந்தேன்" என்றார் கலைவாணி.

"தேவி! தாங்கள் சொல்வது எதையும் நான் நம்பவில்லை. என்னை ஏமாற்றவே இப்படி ஒரு நாடகம் நடக்கிறது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது" என்று அட்டகாசமாகச் சிரித்தார் ஹயக்ரீவர்.

"பிறகு தங்கள் இஷ்டம். பிரம்மா என்னிடம் சொன்னதை தங்களிடம் சொல்லிவிட்டேன். வருகிறேன் வராஹமித்ரரே" என்றாள் கலைவாணி.

"என்னது? வராஹமித்ரரா? புதுப் பெயராக இருகிறதே" என்றார் ஹயக்ரீவர்.

"ஆமாம், தாங்கள் தான் வராஹமித்ரராக இந்தத் திருமலையில் கொடியேற்றி காலா காலமாக வாழப் போகிறீர்கள். இதையும் பிரம்மா என்னிடம் சொன்னார்": என்றார் கலைவாணி.

"இன்னும் என்னவெல்லாம் பிரம்மா சொன்னார்? அதை மொத்தமாக் இப்போதே என்னிடம் சொல்லிவிடுங்கள் தேவி!" என்றார் ஹயக்ரீவர்.

"தாங்கள் தான் எதைச் சொன்னாலும் கேட்கப் போவதில்லை. தங்களுக்கு புஜபல பராக்கிரமம் இருக்கிறது. எல்லோரையும் அடக்கி ஆளும் திறமையும் இருக்கிறது. கொடிய விலங்குகளையும் விரட்டியடிக்கும் மகாசக்தி இருக்கிறது. தாங்கள் நான்குகால் பாய்ச்சலில் பாய்ந்தால் எழுகின்ற புழிதிப்படலம் விண்ணை முட்டும் வரையும் எழும்புகிறது.......... ஆனால்........"

"புத்தி மட்டும் இலை, என்கிறார்களா?" என்று கோபத்தோடு பூமியைக் கிளறியபடியே ஹயக்ரீவர் கேட்டார்.

"பார்த்தீர்களா? இதைக் கேட்கவே தங்களுக்குப் பொறுமை இல்லை. இதற்குத்தான், அறிவு, ஞானம் வேண்டும் என்பது" என்று நாசூக்காக சொல்லி, ஹயக்ரீவரின் மன நிலையைச் சோதித்தாள் கலைவாணி.

"ஏதோ எல்லா அறிவும் தங்களிடம் இருப்பதாகவும், எங்களுக்கெல்லாம் சிறிதும் ஞானம் எதுவும் இல்லை என்பது போலவும் பேசுகிறீர்கள் தேவி! இதை நான் ஒரு போதும் ஏற்க மாட்டேன்" என்றார் ஹயக்ரீவர்.

"சரி! அது உங்கள் இஷ்டம். பிரம்மா என்னிடம் சொன்னதை தங்களிடம் சொல்லி விட்டேன். திருமால் அவதாரமான வேங்கடவனுடன் சண்டை போட்டு ஜெயிப்பது எளிதல்ல. அதற்கு சாமர்த்தியம் வேண்டும். அந்த சாமர்த்தியத்தை சொல்லிக் கொடுக்கும்படி பிரம்மா என்னிடம் சொன்னார். அதை சொல்லிக் கொடுக்கும் பொறுப்பை ஏற்றுத்தான் இங்கு வந்தேன். தங்களிடம் தோற்றுப்போனேன்" என்று சொல்லி திரும்பிய கலைவாணி 

"ஹயக்ரீவரே! எப்போதாவது என் உதவி தங்களுக்குத் தேவைப்பட்டால் வராஹன் அழைக்கிறேன் என்று மூன்று முறை இங்கு வந்து என்னை கூப்பிடுங்கள். ஓடி வந்து உதவுகிறேன்" என்று சொல்லிவிட்டு மெதுவாக திரும்பினாள்.

ஒரு வினாடி யோசித்த ஹயக்ரீவர், "ச்சே! ச்சே.. இந்த பெண்மணியின் பேச்சை எல்லாம் நம்ப முடியாது. திருமாலே இப்படிப்பட்ட லீலைகளை எல்லாம் செய்தாலும் செய்திருப்பார். எது எப்படியிருந்தாலும் அந்தக் கலி அவதாரத் திருமாலை முட்டி மோதி, இங்கிருந்து நகர்த்தி தூர எறிந்துவிட வேண்டியதுதான். கலிபுருஷன் நமக்கு நல்வழியைக் காட்டியிருக்கிறான். அவன் சொன்னதுதான் உண்மை" என்று எண்ணி, நேராக கல் அவதாரமான வேங்கடவனை நோக்கி மறுபடியும் நான்குகால் பாய்ச்சலில் சென்றார்.

சித்தன் அருள்....................... தொடரும்!

6 comments:

  1. It is believed that both Sri Hayagriva and Saraswati Devi are present as 'arupa' in Varaha swami temple in Tirumala.

    ReplyDelete
  2. ODHINGIRIVELA SARANAM,IYANDHUMUGA PERUMANE SARANAM

    ReplyDelete
  3. எல்லாம் வல்ல இறைவன் செயல்

    ReplyDelete
  4. Om Agateesaya Namaha. Story is getting very interesting. The drawings are very good especially the looks of Agastiar Peruman.

    ReplyDelete