[வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
இறைவன் அருளாலும், அகத்தியப் பெருமான் அனுமதியுடனும் இந்த தொகுப்பை/தொடரை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். இதில் என் செயல் என ஒன்றும் இல்லை. அனைத்துப் பெருமையையும் அவர் பாதத்தில் சமர்பித்து, பின் ஒரு சிறு வேண்டுதல்; தட்டச்சு பிழைகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளுங்கள். வாருங்கள் "சித்தன் அருளுக்கு" செல்வோம்.............]
தேவலோகமே கோனேரிக் கரையோரம் அமர்ந்து, திருமாலின் தெய்வீகத் தரிசனத்திற்கு காத்து நின்றாலும், அகஸ்திய மாமுனி மட்டும் அங்கு தென்படவில்லை. இதை யாரும் கண்டு கொள்ளவும் இல்லை. ஆனால், திருமாலுக்கு மாத்திரம் அகஸ்தியர் அங்கு இல்லை என்பது தெரியும். இதை நாரதர்க்கு நாசூக்காக உணர்த்தவே "அகஸ்தியரிடம் சொல் அவர் மற்றதைப் பார்த்துக் கொள்வார்" என்று திருவாய் மலர்ந்து அருளினார்.
நாரதர்க்கு இது ஒரு அதிர்ச்சிதான்!
"ரிஷிகளுக்கெல்லாம் மகரிஷியாக விளங்குகிற நான், ஒரு குறுமுனியிடம் சென்று திருமால் சொன்னதைச் சொல்லுவது தன்னை அகௌரவப்படுத்திக் கொள்கிற மாதிரி ஆகாதோ. அப்படி என்ன பெரிய சக்தியை அகஸ்தியர் பெற்றிருக்கிறார்? சித்தர் அதிலும் தலையாயச் சித்தர். இன்னும் சொல்லப்போனால், சிவபெருமானின் பக்தர். அவர் மைந்தர் முருகப் பெருமானின் தலையாயச் சீடர். அவ்வளவுதானே!" என்ற ஒருவகையான தாழ்வு மனப்பான்மை கொண்டு திருமாலிடம் விடை பெற்று சோர்வாக நடந்து போனார் நாரதர்!
மிக உற்ச்சாகததோடு காணப்பட்ட நாரதர் சட்டென்று ஏன் தன் செயல்பட்டை இழந்து மந்தமாகக் காணப்படுகிறார். அப்படி என்ன நேர்ந்தது அவருக்கு என்று திருமால் யோசித்தார்.
திருமாலின் ஞானக்கண்ணில் நாரதரின் உள்மனம் நன்கு தெரிந்தது. மெதுவாக தனக்குத்தானே சிரித்துக் கொண்டார்.
அகஸ்தியப் பெருமான் எங்கிருக்கிறார்? என்று கண்டுபிடிக்க நாரதர் பல இடங்களில் சுற்றிப் பார்த்தார். அவர் கண்ணில் அகஸ்த்தியப் பெருமான் தென்படவே இல்லை. திருமலை பக்கம் நாரதர் வந்த பொழுது, கோனேரிக் கரையில் பாரத தேசத்து அத்தனை மாமுனிவர்களும், ரிஷிகளும், வேத விற்பன்னர்களும், பக்தர்களும் நாழிகைக்கு நாழிகை அதிகமாக வரவே பூமாதேவி அத்தனை பேர் பாரத்தையும் தாங்கிக் கொண்டு மூச்சு விடமுடியாமல் தவிப்பது நாரதரின் கண்ணில் தென்பட்டது.
அகஸ்தியரிடம் நான் சொல்லி, அகஸ்தியர் புறப்பட்டு இங்கு வந்து பூமாதேவியைக் காப்பாற்றப் போகிறாரா, அதுவரைக்கும் பூமாதேவி பொறுமையுடன் இருக்க முடியுமா? என்று ஒரு வினாடி யோசித்தார்.
அதற்குள் பூமாதேவியே நாரதரை அழைத்தார்.
"என்ன வேண்டும் பூமாதேவி?" என்றார் நாரதர்.
"என்ன நாரதரே! என்னை இந்த நிலையில் கண்டுமோ என்ன வேண்டும் என்று கேட்கிறீர்கள்? திருமாலுக்கு என் நிலை தெரியுமா? என்னால் இந்தப் பளுவைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தவிக்கிறேனே. நீங்கள் வந்து தோள் கொடுத்து உதவக்கூடாதா?" என்றாள் முக்கி முனகிக் கொண்டு.
"தேவி! உங்கள் கஷ்டம் எனக்குத் தெரிகிறது. ஆனால் அகஸ்தியரிடம்தானே இந்தப் பொறுப்பை திருமால் ஒப்படைத்திருக்கிறார். இடையில் நான் புகுவது அவ்வளவு நல்லதல்லவே" என்றார்.
"நாரதரரே! நான் உங்களைக் கேட்கிறேன். எனக்காக சில நாழிகை உங்களால் உதவ முடியுமா? முடியாதா?" என்றாள் பூமாதேவி.
"அடடா! அதற்குள் பொறுமையின் சிகரமான பூமாதேவிக்கு கோபம் வந்து விட்டதே! நானா மறுக்கிறேன். இந்தப் பணியை திருமால் எனக்கு முதலிலே இட்டிருந்தால் என் தவ வலிமையால் தாங்கிக் கொண்டிருப்பேன். ம்ம்! திருமால் என்னை நம்பவில்லை. அகத்தியரைத்தானே நம்புகிறார்" என்றார் நாரதர்.
"அதெல்லாம் இருக்கட்டும். சற்று நேரம் எனக்கு உதவி செய்யுங்கள்.அதற்குள் அகஸ்தியரே இங்கு வந்தாலும் வந்துவிடுவார்" என்றாள் பூமாதேவி.
"தேவி! ஒரு சிறு விண்ணப்பம். என் சந்தேகத்திற்கு தாங்கள் பதில் சொன்னால் போதும். தங்கள் பொருட்டு எத்தனை காலமானாலும் இந்த பூமியை என் தவ வலிமையால் தாங்கி நிற்ப்பேன்" என்றார் நாரதர்.
"சொல்லுங்கள் நாரதரே!" என்றாள் பூமித்தாய்.
"என் நினைவு தெரிந்த நாள் முதலாய், ஆழி சூழ் இந்த பூலோகம் தோன்றிய நாள் முதல் கோடிக்கணக்கான மாந்தர்களையும், மரம், செடி. கொடி, மலை, கடல் இவற்றை எல்லாம் தாங்கிக் கொண்டு பொறுமையாக அருள் பாவித்து வருகிறீர்கள். ஆனால், இன்றைக்கு திருமலையில் பகவான் அவதாரம் எடுக்கப் போகும் பொழுது இங்கு குவிந்திருக்கும் கூட்டத்தை தாங்க அகஸ்தியர் வரட்டும்" என்று திருமால் விரும்புகிறார். அவரால் எப்படி இந்த பாரத்தை சுமக்க முடியும்?" என்றார் நாரதர்.
"நியாயம்தான் நாரதரே! அவரிடம் இந்த உலகத்தை மாத்திரம் அல்ல, மூன்று உலகத்தையும் தாங்கும் சக்தி உண்டு. உருவத்தைப் பார்த்து மாத்திரம் எடை போட்டு விடக்கூடாது அல்லவா?" என்றாள் பூமாதேவி.
"என்ன தேவி இது! எனக்குள்ள தவ வலிமையைப்பற்றி தாங்கள் அறிவீர்கள். என்னைப் போல் பல மகரிஷிகள் இன்னும் இங்கேயே இருக்கிறார்கள். அவர்களை விட்டு விட்டு "குறுமுனியை" பெருமாள் ஏன் தேர்ந்தெடுத்தார்? என்பதுதான் எனக்கு இன்னும் புரியவில்லை" என்றார் நாரதர்.
"சரி நாரதரே! நமக்குள் ஒரு ஒப்பந்தம் செய்து கொள்வோம். உங்கள் தவ வலிமை மிகவும் பலமானது. திருமாலோ புது அவதாரம் எடுப்பதில் தன் முழு கவனத்தையும் செலுத்திக் கொண்டிருக்கிறார். எனவே அவருக்கு இங்கு என்ன நடக்கிறது என்பதை அறிய வாய்ப்பில்லை" என்றாள் பூமாதேவி.
"உண்மைதான். நான் என்ன செய்ய வேண்டும்?" என்றார் நாரதர்.
நாரதரே! அகஸ்தியரைத் தேடிப்பார்த்து விட்டீர். உங்ககள் கண்ணில் அவர் இதுவரை தென்படவில்லை. அகஸ்தியர் இல்லாமலேயே இந்த திருமலை கூட்ட பாரத்தை நாரதர் தாங்கிக் காட்டவேண்டும், உங்கள் தவவலிமைதான் ஈடு இணை அற்றதாயிற்றே" என்று பொடி வைத்துப் பேசினாள் பூமாதேவி.
"ஆமாம்! அதை நிரூபித்துக் காட்ட இந்த சந்தர்ப்பம், பெரிதும் உபயோகப்படும். நீங்கள் சொல்வதை அப்படியே ஏற்றுக் கொள்கிறேன். ஒருவேளை இதற்கிடையில் அந்த குறுமுனி வந்து விட்டால்................" என்றார் நாரதர்.
"வரட்டுமே! பிறகு சமாளித்துக் கொள்வோம். இல்லை அவர் வந்தால் உங்கள் தவ வலிமையைக் கண்டு தானாகவே திரும்பிப் போய் விடட்டும்" என்றாள் பூமாதேவி.
"அதுவும் சரி" என்றார் நாரதர்.
பூமாதேவி தனது பாரத்தை நாரதரிடம் சில நாழிகைக்கு ஒப்படைத்தாள்.
தனது தெய்வீக வலிமையால் பூமாதேவியிடமிருந்து பாரத்தை வாங்கிக் கொண்ட நாரதருக்கு முதலில் பூமியின் பாரம் பெரியதாகத் தோன்றவில்லை.
"இந்த சின்ன விஷயத்திற்கெல்லாம் அகஸ்தியருக்கு முன்னுரிமை கொடுத்த திருமால் மீது நாரதருக்கு சற்று கசப்புணர்ச்சி ஏற்பட்டதும் உண்மை தான்."
பெற்றுக் கொண்ட திருமலையின் பாரத்தை தாங்கிக் கொண்டு நின்றிருந்தார். சிறிது இளைப்பாறிவிட்டு அங்கு வந்த பூமாதேவி "என்ன நாரதரே பாரமெல்லாம் எப்படி இருக்கிறது?" என்றாள்.
"தாங்கள் இன்னும் எவ்வளவு நாழிகை வேண்டுமானாலும் இளைப்பாறலாம். இதை சுமப்பது எனகொன்றும் அவ்வளவு கஷ்டமாகத் தோன்றவில்லை" என்றார் நாரதர்.
"அப்படி என்றால், நான் சற்று மேலே எழும்பி திருமாலின் திருப்பதி அவதாரத்தைக் கண்டு விட்டு வரலாமா?" என்றாள் பூமாதேவி.
"ஓ! தாராளமாக சென்று வாருங்கள்" என்று மகிழ்ச்சியில் கூறினார் நாரதர்.
பூமாதேவி, திருமாலின் திரு அவதாரத்தைக் காண மேலே வந்த பொழுது, நாரதருக்கு பூமியின் பாரத்தைத் தாங்க முடியவில்லை. பூமியின் பாரம் தாங்க முடியாமல் மிகவும் தத்தளித்தார்.
"அவசப்பட்டு வாக்கு கொடுத்துவிட்டோமோ" என எண்ணினார். அகஸ்தியரின் பெருமையை சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காகத்தான் இப்படியெல்லாம் நடந்து கொண்டோமோ" என்று லேசாக கலங்கவும் செய்தார்.
நாழிகை ஆக ஆக நாரதரால் பூமியின் பாரத்தை தாங்க முடியவில்லை! இப்பொழுது பூமாதேவியைக் கூப்பிடவும் முடியாது. அதே சமயம் தனது அவசரத் தனத்தால் திருமலையில் இன்னும் ஓரிரு நாழிகையில் அவதாரம் எடுக்கப் போகும் திருமாலின் தரிசனத்தையும் காணமுடியாது. அவசரப்பட்டு தவறு செய்து விட்டோமே" என்று நாரதர் முதன் முதலாக வருந்த ஆரம்பித்தார். லேசாக சோர்வும் ஏற்பட்டது.
நாரதரது தவ வலிமையால் இதுவரை நிலையாக நின்று மொண்டிருந்த பூமி, நாரதர் சோர்வடைய, சோர்வடைய, திருமலை மெல்ல மெல்ல கீழே இறங்க ஆரம்பித்தது. நன்றாக இருந்த பூமி லேசாக சரிவது போல் தோன்ற திருமலையில் கூடி நின்ற அத்தனை பேர்களும் அதிர்ச்சி அடைந்தனர். பகவான் அவதாரம் எடுப்பதற்கு முன் அவர் காட்டும் திருவிளயாடல் இது என்று பின்னர் அமைதியானார்கள்.
இனியும் தன்னால் இந்த பூமியைத் தாங்க முடியாது என்ற நிலை நாரதர்க்கு ஏற்பட்ட பொழுது, தன்னையும் அறியாமல் "நாராயணா" என்று கூறிவிட்டு "அகஸ்தியரே தாங்கள் எங்கிருந்தாலும் உடனே இங்கு வாரும். நாரதர் அழைக்கிறேன்" என்று கூப்பிய கரங்களுடன் மனதார அகஸ்தியரை வேண்டினார்.
மானசீகமாக நாரதர் அழைத்ததால் திருக்கையிலாய மலையில் தனியாக நின்று தவம் செய்து கொண்டிருந்த அகஸ்தியர் காதில் நாரதர் அழைத்தது விழுகிறது.
அடுத்த வினாடி.........
தன் ஞானக்கண் மூலம் என்ன நடக்கிறது என்பதை அறிந்த அகஸ்தியர் உடனே திருமலையோடு பூமி பாரத்தை கஷ்டப் பட்டு தூக்கி கொண்டு நிற்கும் நாரதரின் நிலையைக் கண்டு அவரைக் காப்பாற்ற விரைந்தார்.
தன் கண்முன் வந்து நின்ற அகஸ்தியரைக் கண்டு உர்ச்சாகமடைந்த நாரதர் "வரவேண்டும், வரவேண்டும்" என்று முகமன் கூறி வரவேற்றார்.
"அதெல்லாம் இருக்கட்டும். உங்களுக்கு எதற்கு இந்த வீண் வம்பு. எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன். அந்த பாரத்தை என்னிடம் ஒப்படையுங்கள் நாரதரே" என்று சொல்லி வலுக்கட்டாயமாக பிடுங்கிக் கொண்டு நாரதரை ஓய்வு கொள்ளச் செய்தார், அகஸ்தியர்.
அப்பாடி! என்று பெருமூச்சு விட்டபடி நாரதர் சுதந்திரமாக நின்றார்.
"நாரதரிஷியே! தாங்கள் திருமால் பக்தர். அவர் திருமலையில் கலி அவதாரம் எடுக்கும் அந்த கண்கொள்ளாக் காட்ச்சியைக் காண மேலே செல்லுங்கள். நான் எந்தவிதத் தொந்தரவும் இல்லாமல் பூமியின்பாரத்தை சுமந்து கொண்டிருக்கிறேன்" என்று நாரதருக்கு விடை கொடுத்தார்.
"இன்னும் மூன்று நாழிகை இருக்கிறது, திருமால் அவதாரம் எடுக்க. அதுவரை தாங்கள் இப்பாரத்தைத் தாங்கிக் கொள்ள முடியுமா? போதாற்குறைக்கு பூமாதேவியையும் திருமலைத் தரிசனத்திற்காக அனுப்பிவிட்டேன்" என்று நாரதர் கவலைப்பட்டு கூறினார்.
"அதனாலென்ன!, எல்லோரும் சென்று திருமாலின் அவதாரத்தைக் காணுவதுதானே சிறப்பு. இனியும் நேரம் கடத்த வேண்டாம், நாரதரே! பூமாதேவியிடமும் சொல்லுங்கள், மெதுவாக அவர்கள் வரட்டும். நான் பார்த்துக் கொள்கிறேன்" என்றார் அகத்தியர்.
அகத்தியர் பூமியின் பாரத்தைத் தாங்கிக் கொண்டதும், பாதாள லோகத்தை நோக்கி கொஞ்சம் கொஞ்சமாக இறங்கிக் கொண்டிருக்கிற பூமி மறுபடியும் மேலே எழுந்தது. நாரதர் ஆச்சரியப் பட்டு அகஸ்தியரை நோக்கி கையெடுத்து வணங்கி "மாமுனியே! தாங்கள் குருமுனியென்றும், சக்தியற்றவர் என்றும் தங்களைப் பற்றி தவறாக எண்ணம் கொண்டேன். எனவேதான், திருமால் கட்டளையிட்ட பிறகும் கூட தங்களை காண அத்துணை முயற்சியை எடுத்துக் கொள்ளவில்லை. என்னை மன்னித்தருள வேண்டும்" என்றார்.
"நாரதரே மண்ணுலகில் ஒருவொருகொருவர் காழ்ப்புணர்ச்சி கொள்வது இயல்பு. தேவலோகத்தார் இவ்வாறு செய்வது என்ன நியாயம்? தாங்கள் என் மீது கொண்டிருந்த தவறான எண்ணத்தை மாற்ற திருமால் செய்த சோதனைதான் இது. பூமாதேவியும் திருமாலும் செய்த திருவிளையாடல் இது. ஆரம்ப முதல் யாம் இதனை அறிவோம். இனியும் தாமதிக்க வேண்டாம். திருமால் அவதாரம் காணப் புறப்படுங்கள்" என்று துரிதப் படுத்தினார் அகத்தியப் பெருமான்.
"அகஸ்திய மாமுனியே! எல்லோருமே திருமால் கலி அவதாரத்தைக் காண மேலே சென்றிருக்க தாங்களும் அங்கு வரவேண்டாமா? தங்களை மாத்திரம் இங்கு தனியாக விட்டுவிட்டுச் செல்வது எனக்கு மனக்கஷ்டமாக இருக்கிறதே" என்று கவலைப்பட்டார் நாரதர்.
நீங்கள் புறப்படுங்கள் நாரதரே! அந்தக் கண்கொள்ளாக் கலி அவதாரக் காட்ச்சியை திருமால் எனக்கு இங்கேயே காட்டுவார்" என்று அகஸ்தியர் அமைதியாகச் சொன்னதைக் கேட்டு நாரதர் வியந்து போனார்.
சித்தன் அருள்.............. தொடரும்!