​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 31 December 2015

சித்தன் அருள் - 266 - "பெருமாளும் அடியேனும்" - 35 - ஒரு மலைக்கு "கருடாத்ரி" என நாமகரணம்!


"இதற்குப் பெயர்தான் விதி, கருடாழ்வாரே! இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிற நாமே மற்ற மனிதர்களைப் போல் தவறு செய்யலாமா? சரி! சரி! அதையே நினைத்துக் கொண்டிருந்தால் நிம்மதி இருக்காது. வாருங்கள் நாமிருவரும் நேராகத் திருமலைக்குச் செல்வோம்" என்றார் ஆதிசேஷன். எல்லாமே மௌன பாஷை!

ஆதிசேஷன் அன்போடும், பாசத்தோடும் கருடாழ்வார் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு திருமலையை நோக்கி நடந்தார்.

திருமலை வாசலில்............

கலிபுருஷனும், சனிஸ்வரனும் வெகு நேரமாகக் காத்துக் கிடந்தனர். கருடாழ்வார் அங்கு வந்ததும், துவார பாலகர்கள் கருடனுக்கு அனுமதி அளிக்க மறுத்தால், கருடாழ்வார் கோபித்துக் ​கொண்டு போன செய்தி கிடைத்தது.

இதைக்கேட்டு கலிபுருஷனுக்கு ஆனந்தம் சொல்லி முடியவில்லை. "எப்படியோ நாம் போட்ட திட்டம் அற்புதமாகச் செயல்பட்டுவிட்டது. இனி கருடனுக்கும் திருமாலுக்கும் சம்பந்தமில்லாமல் போய் விட்டது. சனீஸ்வரன், கருடாழ்வார் நாக்கில் அமர்ந்து பேசியதால் திருமாலுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகிவிட்டது" என்று அளவுக்கு மீறிய கற்பனையில் துள்ளிக் குதித்தான்.

இருப்பினும் கோபித்துக் கொண்டு போன கருடன் எப்படியும் ஒருமுறை திருமலைக்கு வந்தால் அவனை தன்வாசம் வைத்து பின்னர், பெருமாளை ஆட்டுவிக்கவேண்டும், என்ற எண்ணம் கலிபுருஷனுக்கு இருந்தது.

முயற்சி கைக்கூடுவதற் காக சனீச்வரனையும் தன்னோடு கூடவே அழைத்துக் கொண்டு திருமலை வாசலில் காத்திருந்த பொழுதுதான், ஆதிசேஷனும், கருடாழ்வாரும் ஒன்றாக கைகோர்த்து, திருமலை வேங்கடவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தனர்.

திருமலை வாசலில் சனீச்வரன் நின்றதைக் கண்டு கருடாழ்வாரும், ஆதிசேஷனும் அவரை நமஸ்காரம் செய்தனர்.

"மங்களம் உண்டாகட்டும்" என்று சனீஸ்வரர் அவர்களை மனமார வாழ்த்தினார்.

சனீச்வரன் வாக்காலே "மங்களம் உண்டாகட்டும்" என்று வந்தபோது, "இது அற்புதமான சுபசகுனம்" என்று ஆதிசேஷன் மனம் மகிழ்ந்தார். அது மட்டுமல்ல. இதுவரை சனீச்வரன் யாருக்கும் "மங்களம் உண்டாகட்டும்" என்ற சொல்லை உபயோகப்படுத்தியதே இல்லை. அந்தப் பாக்கியத்தை தாங்கள் இருவரும் திருமலை வாசலிலே பெற்றோம் என்பதை நினைத்து அகமகிழ்ந்து போனார்கள், கருடாழ்வாரும், அதிசேஷனும்.

"இனி, எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று தோன்றியதால், ஆதிசேஷன் கருடாழ்வார் சகிதம் நேராகவே வேங்கடவன் முன்பு நின்றார். இப்போது அவர்களை துவார பாலகர்கள் தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

"என்ன கருடா! கோபமெல்லாம் தணிந்ததா?" என்று பெருமாள் திருவாய் மலர்ந்து கேட்டார்.

"என்னை மன்னித்து விடுங்கள் வேங்கடவா! தங்களை அவதூறாகப் பேசிவிட்டேன்" என்று பெருமாள் காலடியில் விழுந்தார் கருடாழ்வார்.

"எதற்காக உன்னை மன்னிக்க வேண்டும்? அன்றைக்கும் என் காலடியில் இருந்து சேவகம் செய்தாய். இன்றைக்கும் என் காலடியில் இருக்கிறாய். நீ ஒருபோதும் மாறவில்லை. நான்தான் உன்னை சோதித்துவிட்டேன்" என்றார் திருமலைவாசன்.

"அப்படி தாங்கள் ஒரு சோதனையும் செய்யவில்லையே! எல்லாம் கலிபுருஷனும், சனிஸ்வரனும் செய்த சதிதானே?" என்று ஆதிசேஷன் ஆச்சரியத்துடன் கேட்டார்.

"இல்லை! அன்றைக்கு என்னைத் தேடி வந்த பொது, துவாரபாலகர்களிடம் கருடாழ்வாரை உள்ளே விடாதே. ஏழரைச் சனி பிடித்திருக்கிறது. பொறுமையாக வரச்சொல்" என்றேன்.  அன்றே கருடாழ்வாரை நான் சந்தித்திருந்தால், கருடாழ்வார் கோபித்துக் கொண்டு வெளியே சென்றிருக்க மாட்டார்" என்ற பெருமாள் 

"இத்தனை நாளாக எனக்குச் சேவகம் செய்த கருடனுக்கு எந்தவித பரிசும் நான் இதுவரை தரவில்லை. அதுவும் என் தவறுதானே! எனவே, எழுமலையான இந்த திருத்தலத்தில் கருடன் பெயரை காலகாலமாக நிலைத்து நிற்க ஒரு மலைக்கு "கருடாத்ரி மலை" என்று கருடனுக்காக யாம் பரிசாக வழங்குவோம்" என்று ஒரு மலைக்கு "கருடாத்ரி" என்று பெயர் சூட்டினார்.

இதை சற்றும் எதிர்பார்க்காத கருடாழ்வார் ஆனந்தப் பெருமிதத்தால் வேங்கடவனின் திருப்பாதத்தைக் கெட்டியாக பிடித்து ஆனந்தக் கண்ணீரால் கழுவினார்.

ஆதிசேஷன் இந்த அற்புதக் காட்சியைக் கண்டு திருமாலின் கருணையை வியந்து கொண்டிருந்தார்.

திருமலை வாசலில் சனீச்வரன் மீது கோபம் கொண்ட கலிபுருஷன் "எப்படி ஆதிசேஷனையும் கருடனையும் வாழ்த்தலாம்? இதனால் பிரம்மாவுக்கு நம்பிக்கைத் துரோகியாக மாறிவிட்டாய்!" என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.

சித்தன் அருள்............... தொடரும்!

Thursday, 24 December 2015

சித்தன் அருள் - 265 - "பெருமாளும் அடியேனும்" - 34 - ஆதிசேஷனும் கருடாழ்வாரும் சந்திப்பு!


கருடாழ்வார் கடுமையாகச் சொல்லி விட்டுச் சென்றாலும், துவாரபாலகர்கள் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும், வேங்கடவன் அதைப் பொருட்படுத்தவே இல்லை.

"பாவம் கருடாழ்வார்! ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டு இப்படியெல்லாம் பேசுகிறான். என்ன இருந்தாலும்  ஆண்டுகாலமாக என்னைத் தூக்கிச் சுமந்தவன். இன்னும் சொல்லப்போனால் கருடன், எனக்குப் பெற்ற தாய் போல்  உள்ளவன். அவனை, சனியின் பிடியிலிருந்து விடுபட வைக்க வேண்டும்" என மனதார கருணையுள்ளத்துடன் எண்ணிக் கொண்டார்.

"பெருமாளை இப்படித் திட்டிவிட்டுப் போகிறாரே, இவருக்கு என்ன வந்தது? இது வரை இப்படி நடந்ததில்லையே" என்று அனைவரும் கருடாழ்வாரைப் பற்றிக் கவலைப்பட்டார்கள்.

"விநாச காலே, விபரீத புத்தி" என்ற பழமொழி மனிதர்களுக்கு மட்டுமின்றி இறைவனுக்கும், இறை அடியார்களுக்கும் உண்டு, என்பது உண்மைதான் என்பது போல் அமைந்துவிட்டது என்று வருந்திய ஆதிசேஷன், பெருமாளிடம் வந்தார்.

"தன்யனானேன்! அடியேன் ஒரு சின்ன விண்ணப்பம்!" என்றார் ஆதிசேஷன்.

"என்ன சொல்லப் போகிறாய் ஆதிசேஷா?" என்றார் பெருமாள்.

"தாங்கள் அனுமதியளித்தால் கருடாழ்வாரை நானே சமாதானம் செய்து தங்களிடம் அழைத்து வருகிறேன்" என்றார்.

இதைக் கேட்டு வேங்கடவன் புன்னகையோடு சொன்னார்.

"ஆதிசேஷா! கருடனின் கட்டுப்பாட்டில் நீ இருப்பதாக உலகம் எண்ணுகிறது.  நீயோ உன் பெருந்தன்மையால் கருடனை இங்கு அழைத்து ​வரப் பார்க்கிறாய். இது விநோதமாக இருக்கிறதல்லாவா?"

"பகவானே! இத்தனை ஆண்டுகாலம் தங்களைச் சுமந்து வந்த கருடன் இன்று முறைத்துக் கொண்டு போனது வினோதம் இல்லையா? இத்தனை ஆண்டுகளாக நட்போடு பழகிவந்த கருடாழ்வாரை நான் பிரிவது கூட விநோதமாக ஆகிவிடாதா?" என்றார் ஆதிசேஷன்.

"ஆதிசேஷா! நீ என்னை உடலாலும் தாகுகிறாய், குடையாகவும் மாறிப் பாதுகாக்கிறாய்! கருடனோ என்னை காலாகாலமாகச் சுமந்து கொண்டு சுற்றுகிறான். பொதுவாக கருடனும் பாம்பும் பகையென்றாலும் என்னைப் பொருத்தவரை நீங்கள் இரண்டு பெரும் என் இரு கண்கள். உங்களில் யாரை நான் இழந்தாலும் அது எனக்கு மனப்பாரம்தான்" என்ற திருமால் "ஆதிசேஷா! உனக்கு ஒன்று தெரியுமா? இது கலிபுருஷன் செய்கின்ற செயல். இதற்கு சனீஸ்வரனும் உடந்தையாக மாறியிருக்கிறார்" என்றார்.

"அப்படியா?"

"ஆமாம்! அது மட்டுமல்ல, கருடன் என்னை விட்டுப் பிரியவேண்டும். அப்படி அவன் பிரிந்து போனால், ஆதிசேஷனான நீயும் என்னை விட்டுப் பிரிந்து, இந்த பூலோகம் முழுவந்தும் உன்னுடைய ஆதிக்கம் அதிகமாகும். ஜனங்கள் விஷத்தால், விஷநோயால் பாதிக்கப் படுவார்கள். மக்கள் இதைக் கண்டு வெகுண்டெழுவார்கள். பக்தி குறையும், என்றெல்லாம் கலிபுருஷன் கணக்கிட்டுச் செயல் படுகிறான்."

"அநியாயமாக இருக்கிறதே! நான் என்றைக்கும் தங்கள் அடிமை சுவாமி! அப்படியொரு சம்பவம் நடக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்! தாங்கள் கொஞ்சம் கண் அசைத்தால் போதும். அந்தக் கலிபுருஷனை அப்படியே விழுங்கி விடுகிறேன்" என்று பயங்கரமாக ஆதிசேஷன் சீறினார்.

"என்ன ஆதிசேஷா! உன்னையும் சனி பிடித்துவிட்டாரா? என்ன? இத்தனை ஆண்டுகாலம் அமைதியாக இருந்த நீ, என் முன்னாலேயே இப்படி ஆவேசப் படுகிறாயே! சற்று பொறுமையாக இரு. இப்போது நேராக கருடனைத் தேடிச் சென்றால் கருடன் உன்னைச் சந்தேகப்படுவான்." என்றார் பெருமாள்.

"சந்தேகப் பட்டுவிட்டு போகட்டுமே!"

"இல்லை! ஏற்கனவே என் மீது கடுங்கோபம் கொண்டிருக்கிறான். நீ இப்போது அவனைத் தேடிப் போனால், நான்தான் அவனைப் பிடித்துக் கொண்டு வரும்படி சொன்னதாக எண்ணி பாய்வான். உனக்குத்தான் ரத்தக் காயங்கள் ஏற்படும்!" என்றார்.

"பரவாயில்லை வேங்கடநாதா. எனக்கு என்ன உபாதைகள் ஏற்ப்பட்டாலும் நீங்கள் என்னைக் காப்பாற்றி விடுவீர்கள். கருடாழ்வாரும் அவ்வளவு கடுமையாக ஒரு போதும் நடந்து கொள்ளமாட்டார் என்றே நம்புகிறேன்!" என்றார்.

"ஆதிசேஷா! சற்று பொறுத்திரு. கருடனே இன்னும் சற்று நேரத்தில் திரும்பி வருவான்" என்றார் வேங்கடவன்.

என்ன இருந்தாலும் ஆதிசேஷனுக்கு மனம் ஒப்பவில்லை. எனவே, வேங்கடவனுக்குத் தெரியாமல் கருடாழ்வாரை நோக்கி மாற்று உருவில் சென்றார்.

அங்கொரு நதிக் கரையோரம்.............

மன நிம்மதி இல்லாமல் கருடன் ஒரு  பாறை மீது அமர்ந்து கொண்டிருந்தார். தன்னை பார்க்க அனுமதி மறுத்த துவாரபாலகர்கள் மீதுள்ள கோபம், திருமலை நாதன் போட்ட உத்தரவு, வீட்டில் மனைவியுடன் போட்ட சண்டை, இதெல்லாம் எப்படி திடீரென்று ஏற்பட்டன? என்று நிதானமாக யோசித்தார்.

"அவசரப்பட்டு பேசிவிட்டோமோ?" என்று வருந்திக் கொண்டிருந்த பொழுது ஆதிசேஷன் கருடன் முன் வந்தமர்ந்தார். இதை கருடாழ்வார் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இருவரும் நட்போடு ஒருவருக்கொருவர் தழுவிக் கொண்டனர். அப்போது இருவரது கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

"தாங்கள் இப்படி கோபம் கொண்டு வேங்கடவனை விட்டு விட்டு வெளியே வரலாமா?' என்று பார்வையிலேயே ஆதிசேஷன் கேட்டார்.

"நானா வெளியே வந்தேன்? விதி அல்லவா என்னை அப்படிப் பேசச் செய்தது" என்றார் கருடாழ்வார் மௌனமாக.

"சரி! இதைப் பெரிதுபடுத்தவேண்டாம். இதெல்லாம் இயல்புதான். வாருங்கள், நாமிருவரும் வேங்கடவனை தரிசிக்கப் போவோம்" என்றார் ஆதிசேஷன்.

"எந்த முகத்தோடு வேங்கடவனை தரிசிப்பேன்? தகாத வார்த்தைகளை அல்லவா கூறிவிட்டு வந்திருக்கிறேன். இதை வேங்கடவன் மன்னித்தாலும், என் உள் மனம் அதை ஏற்க முடியாமல் துடிக்குமே" என்றார் கருடாழ்வார்.

"இதெல்லாம் சகஜம் கருடாழ்வாரே! எல்லாம் கலிபுருஷனும் சனிபகவானும் செய்கின்ற வேலை. நம்மை அறியாமல் அவர்கள் ஆட்டுவிக்கிறபடி ஆடுகிறோம். வேங்கடவனை சரண் அடைந்து விட்டால், மற்றவற்றை அவரே பார்த்துக் கொள்வார்" என்று சொன்னார் ஆதிசேஷன்.

"அப்போதே நான் இதை நினைத்திருந்தால், இப்படிப்பட்ட நிலை எனக்கேற்பட்டிருக்காது!" என்றார் கருடாழ்வார், மிகுந்த மனவருத்தத்துடன்.

சித்தன் அருள் ......................... தொடரும்!

Friday, 18 December 2015

சித்தன் அருள் - 264 - மார்கழி மாதம் - பாபநாசத்தில் நீராடவேண்டும்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

மார்கழி மாதம் பிறந்துவிட்டது. ஏதேனும் ஒரு நல்ல விஷயம் எல்லோருக்கும் தெரிவிக்க கிடைக்காதா  என்று நினைத்த பொழுது, அகத்தியப் பெருமான் அருளினால் ஒரு புண்ணிய தகவல் கிடைத்தது. அதை உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

தாமிரபரணி நதியின் ஆதி காலத்தில், அகத்தியப் பெருமான் உத்தரவுடன், ஸ்ரீ தாமிரபரணி தேவியானவள், சிவபெருமானை நோக்கி, பூசித்து, தவமிருந்தாள். அப்படி இருந்த இடம்  திருநெல்வேலியில் இன்றுள்ள பாபநாசம் என்கிற ஊர்.

ஸ்ரீ தாமிரபரணி தாயின் தவத்தில் மகிழ்ந்து, சிவபெருமான் காட்சி கொடுத்து தாமிரபரணித் தாய் கேட்டுக் கொண்டதற்கு இணங்கி பலவரங்களை கொடுத்து பின் அந்த கோவிலில் உள்ள சிவலிங்கத்தில் உறைந்து போனார்.

ஸ்ரீ தாமிரபரணித் தாய் நமக்காக கேட்டு வாங்கித் தந்த வரங்களில் ஒன்று ........

"மார்கழி மாதத்தில் இவ்விடத்தில் எனது தீர்த்தத்தில் ஸ்நானம் பண்ணி (நீராடி) தங்களை தரிசனம் பண்ணுவோர், மறுபடியும் இந்த பூமியிற் பிறக்ககூடாது" என்றாள்.

சிவபெருமானும் "அங்ஙனமே" என்று வரமளித்தார்.

பிறகு மலயகுமாரியான இம்மகா நதியானவள் சதாசிவத்தினிடமிருந்து இவ்விதம் அனுக்ரஹம் பெற்று அகஸ்திய மாமுனியுடன் அமர்ந்து அவருக்கு குருபூசை முதலியவை செய்து, பின்னர் மார்கழி மாதத்தில் தன் இருப்பிடம் ஏகினாள்.

இப்படிப்பட்ட தகவல் என்பது மிக மிக அரிதான ஒன்று. ஆதலால், இந்த வாய்ப்பை கைப்பற்றிக் கொண்டு, அகத்தியப் பெருமான், லோபா முத்திரை அருளுடன், அனைவரும் பாபநாசம் சென்று நீராடி, கோவிலில் சிவபெருமானை தரிசனம் செய்து, இப்பூமியில் மறுபிறவி இல்லாத நிலையை பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

மார்கழி மாதத்தில் எந்த நாளிலும் செல்லலாம்.

இந்த  வாய்ப்பை அனைவரும் உபயோகப்படுத்திக் கொள்ள வேண்டுகிறேன்.

ஸ்ரீ லோபாமுத்திரா தாய்க்கும், அகத்தியப் பெருமானுக்கும் நன்றியை, பணிவான வணக்கங்களை தெரிவித்துக் கொண்டு

வணக்கம்!

Thursday, 17 December 2015

சித்தன் அருள் - 263 - "பெருமாளும் அடியேனும்" - 33 - கருடாழ்வார் பெருமாளை விட்டு விலகுதல்!


​"சனிபகவான் துணை இல்லாமல் உன்னால் எதுவும் செய்ய முடியாது. எனவே, தேவைப் படும்பொழுது சனீச்வரனுடன் தொடர்பு கொள்" என்று சொன்னார் பிரம்மதேவன்.

இதை நினைவிர்க் கொண்டுதான்  கலிபுருஷன் சனீஸ்வரரை தேடி வந்தான். சனீஸ்வரர், கலிபுருஷனுக்கு ஆர்வத்துடன் உதவி செய்யத்தான் துடித்தார். ஆனால், வேங்கடவனுக்கே எதிரியாகச் செயல்பட வேண்டும் என்று கலிபுருஷன் சொன்னதும் கலக்கமடைந்தார்.

வருத்தம் கலந்த முகத்தோடு சனீச்வரன் அந்தபுர அறையிலிருந்து வெளிவந்ததைக் கண்டு கலிபுருஷனுக்கு கலக்கமேற்பட்டது.

"காயா-பழமா?" என்றான் கலிபுருஷன்.

"காயும் இல்லை, பழமும் இல்லை, உறைக்காய்" என்றார் சனீச்வரன்.

"அப்படியென்றால்?"என்று கலிபுருஷன் திகைக்கும் பொழுது,

நீளாதேவி யாரையும் மதிக்காமல் தன் தோழிகள் புடைசூழ சனீஸ்வரனை விட்டு விலகி, தன் தாய் வீட்டிற்கு புறப்பட்டுக் கொண்டிருந்தாள்.

சனீச்வரன் ஒரு வார்த்தை கூட நீளாதேவியுடன் பேசவே இல்லை. அதே சமயம் தன் கணவனைக் கெடுக்க வந்த கலிபுருஷனைக் கண்டு, எரிச்சலுடன் பொருமித் தீர்த்தாள் நீளாதேவி.

சில நாழிகைகள் கடந்தன.

மௌனமாக இருந்த சனீச்வரன் வாய் திறந்து பேசினார்.

"கலிபுருஷா! நான் மிகவும் தர்மசங்கடத்தில் இருக்கிறேன். என் மனநிலை சரியில்லை. ஒன்று செய். நீயே என் பொருட்டு பிரார்த்தனை செய். உன் பிரார்த்தனையில் நான் இருப்பேன். நிச்சயம் கருடாழ்வார் நாக்கில் நான் அமர்வேன். போதுமா?" என்றார்.

"அப்பாடி"என்று பெருமூச்சுவிட்ட கலிபுருஷன் "எப்படியோ, சற்று தாமதம் ஆனாலும், முயற்சி வெற்றிதான்" என்று மனதிற்குள் சந்தோஷப்பட்டான். பிறகு ஒன்றும் தெரியாத மாதிரி, "தங்களின் துணைவியார் ஏதோ கோபத்துடன் செல்வது போல் இருக்கிறதே! என்னால் ஒன்றும் பிரச்சினை இல்லையே" என்று கேட்டான்.

"அதெல்லாம் உனக்கெதற்கு கலியா? வந்தாய், உதவி கேட்டாய், நானும் தந்துவிட்டேன். எப்படியோ உன் வேலை முடிந்து விட்டது. பிறகென்ன?" என்று எரிந்து விழுந்தார், சனீச்வரன்.

 "தங்கள் உதவிக்கு நன்றி, இப்பொழுதே தங்களை நினைத்துக் கொண்டு பிரம்மாவிடம் பிரார்த்தனை செய்கிறேன். தாங்கள் என்னை விட்டுப் போய் விடக்கூடாது" என்று காலில் விழுந்தான் கலிபுருஷன்.

"ம்ம்..சீக்கிரம் புறப்படு. நாழிகை ஆக ஆக திருமலையில் நிலமை வேறுவிதமாக மாறி விடப்போகிறது" என்று கலிபுருஷனை விரட்டி அடித்தார் சனி பகவான்.

திருமலையில் வேங்கடவனுக்கும் கருடாழ்வாருக்கும் பிரிவு ஏற்பட்டதோ இல்லையோ, அதற்கு முன் சனீச்வரன் தம்பதியரிடையே பிரிவு ஏற்பட்டு விட்டது என்பது உண்மை.

இதை சனீச்வரன் ஆழமாகச் சிந்தித்தார்.

நீளாதேவி தன்னுடன் இருக்கும் வரை தர்ம வழியிலே பூலோகத்திற்கு மட்டுமின்றி மூவுலகிற்கும் நல்லதும், கெட்டதும் செய்து வந்தோம். கலிபுருஷன் எப்பொழுது தன் வீட்டில் காலடி எடுத்து வைத்தானோ, அந்த நாழிகையே தனக்கும் "கலி" பிடித்துவிட்டது. இனி எல்லா இடங்களிலும் அதர்மம் கொடி கட்டி கும்மாளம் அடிக்கப் போகிறது! வேறு வழியின்றி தானும் கலிபுருஷனோடு கைகோர்த்துக் கொள்ள வேண்டியதுதான். விதி மிக வலிமையானது. என்ன செய்ய? என்று முடிவெடுத்தார். இது, கலிபுருஷனுக்கு பெரும் தெம்பைக் கொடுத்தது.

இதற்கிடையில்................

கனவேகமாக திருமலையில் காலெடுத்து வைத்த கருடாழ்வார் வேங்கடவனை நேரிடையாக சந்திக்க முயன்றார்.

ஆனால், வாசலில் இருந்த துவார பாலகர்கள் சட்டென்று கருடாழ்வாரைத் தடுத்து நிறுத்தினார்கள். கருடாழ்வாருக்கு அசாத்திய கோபம் வந்தது.

"என்னை தடுக்க உங்களுக்கு யார் அதிகாரம் கொடுத்தது?' என்றார் கருடாழ்வார்.

"கருடாழ்வாரே! தயவுசெய்து சினம் காக்க! தாங்கள் சுமக்கும் வேங்கடவன்தான், இந்த உத்தரவைப் பிறப்பித்தார்." என்றனர் துவார பாலகர்கள்.

"எதற்கு?"

"தங்களுக்கு கிரகநிலை சரியில்லை. ஏழரைச் சனி பிடித்திருப்பதாகச் சொல்லி, சற்று அமைதியாகவே செயல்படுபடி உத்தரவிட்டிருக்கிறார்." என்றனர் த்வார பாலகர்கள்.

"அப்படியென்றால்?"

"பெருமாள் தங்களை உடனடியாகக் காணும் நிலையில் இல்லை" என்றனர்.

"அப்படியா?" என்ற கருடாழ்வார் "உங்கள் திருமலை வேங்கடவனுக்கு "கருடன்" சொன்னதாக இதையும் சொல்லும். இனிமேல் அவர் வேறு வாகனத்தில் உலா வரட்டும். கருடன் இனிமேல் பெருமாளுக்குப் பல்லக்குத் தூக்கத் தயாராக இல்லை" என்று கடுங்கோபத்தில் பேசிவிட்டு அப்படியே வெளியேறினார்.

துவார பாலகர் இதைக் கேட்டு அதிர்ச்சியால் உறைந்து போயினர்.

சித்தன் அருள் ................. தொடரும்!

Friday, 11 December 2015

சித்தன் அருள் - அகத்தியப் பெருமானின் "குருபூசை திருவிழா"


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

கல்லார் ஸ்ரீ அகத்தியர் ஞான பீடத்தில் இந்த மாதம் 29/12/2015 அன்று அகத்தியப் பெருமானின் உத்தரவால் "சர்வ தோஷ நிவாரண மகா யாகம்" நடத்த நிச்சயிக்கப் பட்டுள்ளது. அதன் அழைப்பிதழை, கீழே தருகிறேன்.

இயற்கையால் நிறையவே பாதிக்கப்பட்ட இந்த சூழ்நிலையில் இப்படிப்பட்ட மகா யாகத்தில் பங்கு பெற்று அனைவருக்காகவும் வேண்டிக் கொண்டு, எல்லோரும் சித்தர் அருள் பெற்று வாழ வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்.

சென்று பங்கு கொண்டு, அகத்தியர் அருள் பெற்று வரும்படி அனைவரையும் வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீஸ்வராய நமஹ!

Thursday, 10 December 2015

சித்தன் அருள் - 262 - "பெருமாளும் அடியேனும்" - 32 - சனீச்வரன் குடும்பத்தில் பிரச்சினை!


திருமலை வேங்கடவனை பலமிழக்க வைக்க கலிபுருஷன் ​போட்டிருந்த திட்டத்தைப் பற்றிக் கேள்விப்பட்ட சனீச்வரன், முதலில் அரண்டு போனார்.

தான் சனீச்வரனாக இருந்தாலும், இதுவரை ஒரு போதும் அதர்ம வழியாகச் சென்றதில்லை. அதுமட்டுமின்றி, அவரவருக்கு கர்ம வினைப்படி என்னென்ன தண்டனையை சாத்வீக வழிப்படி கொடுக்க வேண்டுமோ, அதை இதுவரை கொடுத்துக் கொண்டு வருகிறோம்.

அதில் இதுவரை எந்த விதப் பாகுபாடும் யாருக்கும் காட்டியதில்லை. அப்படி ஒரு நெறிவழியில் சென்று கொண்டிருக்கிற நேரத்தில்  கலிபுருஷன் புதிய "சனி" பகவானாக வந்துவிடுவான் போலிருக்கிறதே என்று மனதில் எண்ணிக் கொண்டார்.

இதுவரை சனீச்வரனான தனக்கு "சனி" பிடித்ததில்லை. இந்த கலிபுருஷன் பேசுவதைப் பார்த்தால் முதன் முறையாக தனக்கு ஏழரைச் சனியோ அஷ்டமத்துச் சனியோ வந்து விட்டது போல் தோன்றுகிறதே.  இதென்ன கொடுமை என்று மேலும் எண்ணும் பொழுதுதான், கலிபுருஷன் வலையில் தன் கணவர் வீழ்ந்து விடக்கூடாதே என்று பயந்தாள் சனீச்வரனுடய தர்மபத்னி நீளாதேவி.

திருமலை வேங்கடவனுக்கே "சதி" செய்யும் கலிபுருஷன், நாளைக்கு தன் வாழ்க்கையிலும் ஏன் குறுக்கிடமாட்டான்? எனவே தன் கணவரை அவனை விட்டுப் பிரிக்க வேண்டும், இல்லையெனில் இது பெரிய இடத்து வம்பாக மாறிவிடும் என்று நினைத்து நீளாதேவி, தன் கணவனை அந்தப்புர அறைக்கு அழைத்துச் சென்றாள்.

"திருமலை வேங்கடவனுக்கும் கருடாழ்வாருக்கும் நீங்கள் ஏன் பகையை உண்டாக்க வேண்டும்? யார் அந்த கலியன்? அவன் பேச்சை கேட்டு தவறேதும் செய்யாதீர்கள்" என்றாள் நீளாதேவி.

"மெதுவாக பேசு. அவன் காதில் விழுந்து விடப் போகிறது" என்று மௌனமாக எச்சரிக்கை விடுத்தான் சனீச்வரன்.

"எதற்காக இப்படி நடுங்கித் தவிக்கிறீர்கள்? யார் அவன்? உங்களைவிட பலசாலியா?"

"ஆம்!"

"ஆமாமா. அப்படியென்றால் அவன் பேச்சைக் கேட்டு திருமாலுக்கும் கருடனுக்கும் பிளவை உண்டாக்கப் போகிறீர்களா?"

"அதை இப்பொழுது சொல்ல இயலாது. எனினும் அப்படி ஒரு நிலை திருமாலுக்கும் கருடாழ்வாருக்கும் வருமேன்றிருந்தால் என்னால் அதைத் தடுக்க முடியாது.

"நாதா! தங்களது நெறி தவறாத தன்மையைக் கண்டு மூவுலகமும் மெய்மறந்து  பாராட்டுகிறது. சகல ஜீவன்களுக்கும் அடைக்கலம் தரும் திருமாலுக்கே தாங்கள் துரோகம் செய்யலாமா? அல்லது அந்த கருடாழ்வார்தான் தங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்? என்று நிதானமாகவே கேட்டாள் நீளாதேவி.

"நானும் முதலில் அப்படித்தான் நினைத்தேன்! ஆனால் பிரம்மா எனக்கொரு கட்டளை இட்டிருக்கிறார். அதன்படி என் மனதிற்குப் பிடித்தம் இல்லையென்றாலும் நான் கலிபுருஷனுக்குத் துணை போகத்தான் வேண்டும் போலிருக்கிறது" என்று வருத்தம் தோய்ந்த முகத்துடன் கூறினார் சனீஸ்வரர்.

"அதென்ன கட்டளை?"

"அது தெய்வ ரகசியம். உன்னிடம் சொல்ல இயலாது நீளாதேவி!" என்றார் சனீஸ்வரர்.

"நீங்கள் சொல்லாவிட்டால் என்ன? நானே படைப்புக் கடவுளான அந்த பிரம்மனிடம் போய்க் கேட்டுக் கொள்கிறேன்"

"கேட்டு என்ன பயன்? அவர் கட்டளையிட்டது, கட்டளையிட்டதுதான். நான் அவர் சொல்லுக்குக் கட்டுப்பட்டவன்."

"அப்படியென்றால்?"

"இனிமேல் பூலோகத்தில் கலிபுருஷனின் ஆட்சிதான் அமையப் போகிறது. அதர்மம் தலை தூக்கும். இது தெய்வங்களையும் கூட பாதிக்கும்!"

"தெய்வங்களையே பாதிக்கும் விஷயமென்றால் பிரம்மாவையும் கூட பாதிக்குமே! பின் எப்படி கலிபுருஷனைத் தோற்றுவித்தார்?"

"அதற்குப் பெயர் தான் பிரம்மா. இது காலத்தின் கட்டாயம். இதற்கு மூன்று தேவர்களும் ஒப்புதல் தந்திருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியத்திலும் ஆச்சரியம்."

"சரி! எப்படியும் போகட்டும். நீங்கள் இந்த பிளவுக்கு துணை போகவேண்டாம். அது கலிபுருஷன் பாடு, பிரம்மா பாடு. அவ்வளவுதான் நான் சொல்வேன்."

"தேவி! உன் ஆலோசனைக்கு நன்றி! இந்த விஷயத்தில் நீ தலையிடாதே. வெற்றி பெறுவது திருமலைத் தெய்வமா, அல்லது கலிபுருஷனா? என்று வேடிக்கை பார்"

"நான் வேடிக்கை பார்ப்பது இருக்கட்டும். இங்கே இப்பொழுது இன்னொரு வேடிக்கை நடக்கப் போகிறது. அதை பார்க்க வேண்டாமா?" என்று சூசகமாக ஒரு சொல்லை வீசினாள் நீளாதேவி!

"என்ன வேடிக்கை?"

"எப்போது நீங்கள் என் பேச்சை மீறி, செயல்படுவதாக தீர்மானித்து விட்டீர்களோ, இனிமேல் உங்களோடு நான் இணைந்து வாழ்வதில் அர்த்தமே இல்லை!"

"என்ன சொல்கிறாய்? நீளாதேவி!"

"ஆமாம். கலிபுருஷன் பேச்சைக் கேட்டும் பிரம்மாவின் பேச்சுக் கட்டுப்பட்டும் நீங்கள் திருமலை வேங்கடவனுக்கும் கருடாழ்வாருக்கும் பிளவை ஏற்படுத்தப் போகிறீர்கள். கேட்டால், அது காலத்தின் கட்டாயம் என்கிறீர்கள். இப்பொழுது நான் இதற்காக தங்களை விட்டுப் பிரியப் போகிறேன். இதை தடுக்க முடியுமா என்று பாருங்கள்!" என்றாள் நீளாதேவி.

சனிபகவான் இதைக் கேட்டு அதிர்ந்து போனார்.

நீளாதேவியுடன் உள்ளே சென்ற சனீச்வரன், வெகு நாழிகையாகியும் வெளியே வராததால், கலிபுருஷன் கலக்கமடைந்தான். ஏனெனில் என்னதான் தான் பலவாறு முயற்சி செய்தும், இதுவரை திருமலை வேங்கடவனை வெற்றி பெற முடியவில்லை.

வேறெங்கு சென்று தன் கலியுலக வேலைகளைச் செய்தாலும் தகும்? வேங்கடவன் ஏதேனும் வடிவில் வந்து கெடுத்துவிடுவான் என்ற பயம் இருந்ததால், முதலில் வேங்கடவனுக்கே சோதனையை உண்டாக்கிவிட்டால் பின்னர் பூலோகத்தில் தன் செல்வாக்கு அற்புதமாக மிளிரும் என்று கணக்கிட்ட கலிபுருஷனுக்கு..

முன்பு பிரம்மா தனக்கு கொடுத்த வாக்குறுதி நினைவுக்கு வந்தது.

சித்தன் அருள்..................... தொடரும்!

Thursday, 3 December 2015

சித்தன் அருள் - 261 - "பெருமாளும் அடியேனும்" - 31 - கலிபுருஷன் தன் திட்டத்தை சனீஸ்வரனிடம் விவரித்தல்!

"தாங்கள் இல்லாமல் என்னால் பூலோகத்தில் கலியுகத்தை சீராகச் செயல்படுத்த முடியாது, என்பதை இப்போதுதான் அறிந்தேன்.  தாங்கள் அனுக்ரகம் இல்லாமல் என்னால் ஓரடி கூட எடுத்து வைக்க முடியாது. தாங்கள் தான் எனக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து அருள வேண்டும்" என்று சொல்லி, மறுபடியும் சனீச்வரன் பாதத்தில் வீழ்ந்து எழுந்தான்.

"இப்போதாவது உணர்ந்தாயே, அது போதும். அதுசரி, இப்போது என்ன உதவி உனக்கு வேண்டும்?" என்றார் சனீச்வரன்.

"கருடாழ்வார், வேங்கடவன் சன்னதியை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார். அவருக்கும் வேங்கடவனுக்கும் பெரும் பகை ஏற்படவேண்டும். கருடாழ்வார் வேங்கடவனை விட்டு நிரந்தரமாகப் பிரியவேண்டும்!" என்றான் கலிபுருஷன்.

"இதில் உனக்கென்ன லாபம்?"

"என் தொழிலே நடப்பைப் பிரித்துப் பாழாக்குவதுதானே? கணவன்-மனைவியைப் பிரிப்பது, குழந்தையையும், பெற்றோர்களையும் பிரிப்பது, இப்படி பிரித்துப் பிரித்து அவர்களை ஒன்று சேரவிடாமல் தடுத்து என் ஆட்சியை நிலை நிறுத்துவது தானே!"

"சந்தோஷம். இதில் எனக்கும் உடன்பாடு உண்டு கலிபுருஷரே!" என்றார் சனீச்வரன்.

"அப்படியென்றால், கருடாழ்வார் திருமலை வேங்கடவனைத் தரிசனம் செய்யும் முன்பு கருடாழ்வார் நாக்கில் தாங்கள் அழுத்தமாக அமரவேண்டும்.  அப்படி தாங்கள் அமர்ந்துவிட்டால், "வாக்கில் சனி" என்ற நிலை ஏற்பட்டு, எதை எதையெல்லாம் பேசக்கூடாதோ அதையதை எல்லாம் கருடாழ்வார் பேசுவார்."

"ம்ம்!"

"பின்பு என்ன? வேங்கடவனுக்கு கோபம் வரும். அவர் கருடாழ்வாரை விரட்டி விடுவார்."

"கருடாழ்வார் போனால், வேறு எதையாவது ஒன்றை திருமால் வைத்துக் கொள்வார். பிறகு என்ன செய்வாய்?" என்றார் சனீச்வரன்.

"சனீஸ்வரரே! தாங்கள் அறியாதது ஏதுமில்லை. ஆனால் ஒன்றைத் தாங்கள் எண்ணவே இல்லை!" என்றான் கலிபுருஷன்.

"என்ன அது?"

கருடாழ்வார் இருப்பதால், ஆதிசேஷன் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்.இப்போது கருடாழ்வார், திருமாலை விட்டு விலகிவிட்டால் ஆதிசேஷன் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்று விடுவார்."

"அற்புதம், அற்புதம், மேற்கொண்டு சொல்லும் கலிபுருஷரே!" என்று சனீஸ்வரர் ஊக்கம் கொடுத்தார்.

"ஆதிசேஷனை இத்தனை காலமாய் "பெருமாள்" அடக்கி வைத்திருந்த கோபத்தால், ஆதிசேஷன் வெகுண்டு எழுவார். இதனால், பூலோகம் முழுவதும் விஷம் பரவும். பூலோகத்தில் விஷம் பரவினால், பூலோக மாந்தர்களுக்கு கெடுதல் விளையும்."

"எப்படி கெடுதல் விளையும்? விளக்கமாக சொல்லும் கலிபுருஷரே!"

"தன்யனானேன்! தாங்கள் என்னை அன்போடு அழைத்து என் வேண்டுகோளைக் கேட்பதற்கு நன்றி ஈஸ்வரா! நன்றி!" என்று சொல்லி ஆனந்தத்தின் மிகுதியால் தன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட கலிபுருஷன், கைகூப்பி மேலும் சனீஸ்வரனை வணங்கிச் சொல்லலானான்.

"ஆதிசேஷனது விஷம் பூலோக மாந்தர்களிடத்தில் அன்பைக் கெடுக்கும். குடும்பத்தில் பிளவை உண்டாக்கும். கூடப் பிறந்தவர்களை விஷம் போல் எண்ணவைக்கும். ரத்தக்களரியை ஏற்படுத்தும், பஞ்சமா பாதகங்களைச் செய்ய வைக்கும். பக்தியைக் கெடுக்கும். கோயிலைப் பாழாக்கும், சொத்து சுகத்திற்காக பெற்றோர்களை கொலை செய்யும் எண்ணத்தையும் உண்டாக்கும். இதுபோல் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு புதுப்புது விதமாக அதர்மத்தை உண்டாக்கிவிடும். இப்படி நடந்தால் அது எனக்கு வெற்றிதானே?" என்று முடித்தான்.

கலிபுருஷனின் எண்ணத்தைக் கண்டு சனீஸ்வரனே அரண்டு போய்விட்டார். தான் கூட, ஏதேதோ, இப்படிப்பட்ட தர்ம காரியக்ங்களை, அவரவர் முன் ஜென்ம கர்மவினைக்கேற்ப ஆட்டிப் படைத்துக் கொண்டு வந்தாலும், தன்னைவிட ஆயிரம் மடங்கு கொடுமைகளை செயல்படுத்தத் துடிக்கும் இவன், சாதாரணப் பட்டவனல்லன். இவனிடம் சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்!

இல்லையெனில்..............

இந்தக் கலிபுருஷன் தன்னையே கெடுத்துக் குட்டிசுவராக்கிவிடுவான், என்று எண்ணிக் கொண்டார்  சனீஸ்வரன்.

"சனீஸ்வரரே! என்ன மௌனம்? தாங்கள் தாமதமாக்கிக் கொண்டிருந்தால், அங்கே கருடாழ்வாரும், திருமலை வேங்கடவனும் சமாதானமாகி கை கோர்த்துக் கொண்டு விடுவார்கள்.  தாங்கள் அருள்கூர்ந்து, உடனடியாக கருடாழ்வார் நாக்கில் அமர்ந்து என் வேண்டுகோளை ஏற்க வேண்டும்" என்று கெஞ்சினான், கலிபுருஷன். அவன் பயம் அவனுக்கு.

இதையெல்லாம் அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சனீஸ்வரனின் மனைவியான நீளாதேவி "ஒரு வினாடி இங்கே வாருங்கள்" என்று தன் கணவனை அழைத்து அருகிலுள்ள அறைக்கு அழைத்துச் சென்றாள்.

மனைவி சொல்லே மந்திரம் என்றவாறு காலை விந்தி விந்தி நடந்து கொண்டு, நீளாதேவி பின்னால் சனீஸ்வரனும் செல்வதைக் கண்டு கலிபுருஷனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது!

சித்தன் அருள்....................... தொடரும்! 

Thursday, 26 November 2015

சித்தன் அருள் - 260 - "பெருமாளும் அடியேனும்" - 30 - சனீச்வர கலிபுருஷ சந்திப்பு!

ஒருவன் நல்லவனா அல்லது கெட்டவனா என்பதை அவனது செயல், பேச்சு மூலம் தெரிந்து கொள்ளலாம். அதேபோல் ஒருவருக்கு நல்லகாலம் வந்துவிட்டதா அல்லது கெட்டகாலம் வந்துவிட்டதா? என்பதையும் அவரது நடவடிக்கை எடுத்துக் காட்டிவிடும்.

இத்தனை ஆண்டு காலமாக பெருமாளுக்கு தேவையான கைங்கர்யங்களைச் செய்து வந்த கருடாழ்வாரை திருமாலிடமிருந்து பிரித்து விடவேண்டும் என்று திட்டம் தீட்டினான், கலிபுருஷன்.

கருடாழ்வாரின் மனைவி இதற்கு பலிகடா ஆனாள்.  கலிபுருஷன் சொன்னதை நம்பினாள்.  அதுவரை அமைதியாக அடக்கமாக குடும்பம் நடத்திக் கொண்டிருந்தவள், அதை அறவே மறந்தாள். கருடாழ்வாரின் மனதைப் புண்படுத்தும்படி நடந்துகொண்டாள்.

அப்படிச் சொன்னால் "கருடாழ்வார்" தன் தவற்றை ஒப்புக்கொள்வார் என்று எதிர்பார்த்தாள், பாவம் அவள். தவறு செய்தால் தானே கருடாழ்வார் அதை ஒப்புக்கொள்வதற்கு? கருடாழ்வார் அதை மறுத்தபோது, திருமலை வேங்கடவனை நாடிச் செல்லக் கூடாது என்று வழியையும் மறித்தாள்.

மற்ற எல்லாவற்றையும் கூட கருடாழ்வார் பொறுத்துக் கொண்டாலும் பொறுத்துக் கொள்வாரே தவிர, பெருமாள் தரிசனம் செய்யக் கூடாது என்று சொன்னதை மாத்திரம் அவரால் தாங்கிக் கொள்ள முடியாது.

எனவே, மனைவியின் கட்டுப்பாட்டை உதறித் தள்ளிவிட்டு, கருடாழ்வார் திருமலை வேங்கடவனைக் காணப் புறப்பட்டு விட்டார்.

வாழ்க்கையில் முதன் முதலாக நடந்த இந்த நிகழ்ச்சியைக் கண்டு கருடாழ்வாரின் மனைவி அதிர்ச்சி அடைந்தாள்.

கலிபுருஷனுக்கு ஒரு திருப்தி! "எப்படியோ நாம் போட்ட திட்டத்தில் ஒரு பகுதி வெற்றி அடைந்துவிட்டது. இன்னொரு பகுதி வெற்றி அடைய வேண்டுமானால் திருமலை வேங்கடவனுக்கும் கருடாழ்வாருக்கும் இடையே பகையை உண்டாக்க வேண்டும்" என எண்ணினான்.

எப்படி பகையை உண்டாக்குவது?

அவர்கள் இருவருக்கும் யுத்தத்தை ஏற்படுத்த முடியாது. வாக்குவாதம் ஏற்படவேண்டும். அந்த வாக்குவாதத்தில் கருடாழ்வார் மிகவும் தடித்த வார்த்தைகளைப் பிரயோகிக்கவேண்டும். அப்படி வார்த்தை தடித்துப் போனால், வேங்கடவன் வெகுண்டு எழுந்து கருடாழ்வாரை விரட்டி விடுவார்.

கருடாழ்வாருக்கோ மிகவும் ரோஷம் அதிகம். திருமாலிடம் கோபித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறிவிடுவார். அப்படி கருடாழ்வார், திருமலை வேங்கடவனிடமிருந்து பிரிந்து சென்றுவிட்டால், இனி பெருமாள் கருடாழ்வார் துணை இல்லாமல், வெளியே செல்ல வேண்டும்.

வேங்கடவன் தனித்து செல்லும் பொழுது, கலிபுருஷன் பெருமாளை வீழ்த்தி தன் அதர்ம செல்வாக்கை பூமியில் நிலை நிறுத்திவிடலாம் என்று கலிபுருஷன் ஆசையாக எண்ணி சந்தோஷப்பட்டான்.

அப்பொழுதுதான் கலிபுருஷனுக்கு சட்டென்று ஒன்று தோன்றியது.

சனிபகவான் துணையில்லாமல் கருடாழ்வாருக்கும் வேங்கடவனுக்கும் வாக்குவாதம் ஏற்பட முடியாது. ஏனெனில், வாக்கில் சனிபகவான் அமர்ந்துவிட்டால் போதும், எப்பேர் பட்டவர்களும் வீழ்ந்து விடுவார்கள் என்பதை உணர்ந்த கலிபுருஷன் சட்டென்று அங்கிருந்து சனிபகவான் இருப்பிடத்திற்கு வந்தான்.

நீளாதேவியோடு பக்தர்களுக்கு அருள் பாலித்துக் கொண்டிருந்த சனீஸ்வரனுக்கு ஏதோ ஒரு துஷ்டதேவதை மங்களமானஇடத்திற்குள் நுழைந்தால் என்ன அருவருப்பு ஏற்படுமோ, அதே போல் அவர் நாசியில் கெட்ட காற்று பட்டது.

ஒரு நாழிகை மௌனம் காத்து ஞானத்தால் பார்த்த பொழுது பூலோகத்தைக் கெடுக்க அவதாரம் எடுத்திருக்கும் கலிபுருஷன் தன் பக்கம் வந்திருப்பது தெரிந்தது.

கலிபுருஷனைப் பற்றிக் கேள்விப் பட்டிருந்த சனீச்வரன் இதுவரை கலிபுருஷனை நேரடியாகப் பார்த்ததில்லை. அவனைப் பார்க்க மனம் துடித்தது. சமீபகாலமாக திருமலையில் கலிபுருஷன் செய்து வரும் அட்டூழியங்களை அரசால் புரசலாக கேள்விப்பட்டிருந்தார்.

தன்னுடைய துணை இல்லாமல் எப்படி கலிபுருஷன் வெல்லமுடியும்? எல்லாக் கெடுதல்களுக்கும் தன்னை ஒரு சூத்திரதாரியாக பிரம்மன் படைத்த பொழுது கலிபுருஷனைத் தோற்றுவிக்க வேண்டிய அவசியமே இல்லை. என்னதான் அவன் ஆட்டம் போட்டாலும் வேங்கடவன் முன்பு நிற்க முடியவில்லை.

தோற்றுப் போனான்.

ஆனால்.......

"அன்றே கலிபுருஷன் என்னைத் தேடி வந்திருந்தால் அவனுக்குத் தோள்கொடுத்து தூக்கி விட்டிருப்பேன். பெருமாளும் அன்றே தோற்றுப் போய் திருமலையை விட்டே ஓடிப் போயிருப்பார். ம்ம்ம்! இதெல்லாம் கலிபுருஷனுக்கு எங்கே தெரியப் போகிறது? போதாதகாலம். சரியாக மாட்டிக் கொண்டான், போனது போகட்டும். இப்போதாவது கலிபுருஷனுக்கு புத்தி வந்ததே! அதுவரைக்கும் சந்தோஷம்!"

என்று தனக்குத் தானே சொல்லி சிரித்துக் கொண்டார். பிறகு தன் இரண்டு கண்களையும் அகல விரித்து கலிபுருஷனைப் பார்த்தார் சனீச்வரன்.

சனீச்வரன் பார்வை கலிபுருஷன் மீது பட்டதும் அவன் மெய் சிலிர்த்துப் போனான்.

"அடியேன் கலிபுருஷன்! ஈஸ்வரனுக்கும் ஈஸ்வரனாக விளங்கும் சனீஸ்வரனைத் தரிசனம் செய்ய வந்திருக்கிறேன். என்னை ஆசிர்வதிக்கவேண்டும்!" என்று சனீஸ்வரன் பாதத்தில் விழுந்தான்.

"ஆசிர்வாதம்தானே! தந்தோம்!" என்றவர் "எதற்காக என்னைக் காண வந்தாய்?" என்றார்.

"ஈஸ்வரா!"

"தவறு! சனீஸ்வரா என்று சொல்லும்" என்றார் சனீஸ்வரர்.

"அப்படியே ஆகட்டும் சனீஸ்வரரே! பிரம்மா என்னைப் படைத்து பூலோகத்திர்க்கு அனுப்பி கலியுகத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார். ஆனால் கலியுலகம் தோன்றக் கூடாது என்று பூலோகத்தில் திருமலையில் கல் தெய்வமாக மாறி திருமால் என்னைத் தடுக்கிறார்".

"அப்படியா?"

"ஆமாம் பிரபு! பிரம்மா என்னைப் படைத்திருக்காவிட்டால் நான் ஏன் பூலோகத்திற்குச் செல்ல வேண்டும்? என்னையும் படைத்துவிட்டு என் தொழிலைக் கெடுக்கும் திருமாலையும் ஏன் திருமலைக்கு அனுப்பவேண்டும்?

"அதெல்லாம் இருக்கட்டும். பிறகு இது பற்றி பேசிக்கொள்ளலாம். இப்போது எதற்காக என்னைத் தேடி இங்கு வந்தாய்?" என்றார் சனீஸ்வரன்.

கலிபுருஷன் வந்த விஷயத்தை விளக்கத் தொடங்கினான்.

சித்தன் அருள்............. தொடரும்!

Wednesday, 25 November 2015

சித்தன் அருள் - கார்த்திகை தீப நல்வாழ்த்துக்கள்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இன்று கார்த்திகை தீப திருவிழா நாள். தீப ஒளி உங்கள் உள்ளங்களில் பரவி இறைவனை உணர்த்தட்டும் என்ற அகத்தியப் பெருமானின் அருள் வாக்கினை உங்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன். எல்லா நலமும் பெற்று இனிதே வாழ்க! 

Thursday, 19 November 2015

சித்தன் அருள் - 259 - "பெருமாளும் அடியேனும்" - 29 - கருடாழ்வார் மனைவியை விட்டு விலகல்!


கருடாழ்வாருக்கும், அவர் மனைவிக்கும் சண்டை நடக்கும். இருவரும் அந்த வேங்கடவனிடம் சென்று முறையிடுவார்கள். தன்னிடம் பணிபுரியும் ​கருடாழ்வார் தவறு செய்ததால் பெருமாள் கருடாழ்வாரை நீக்கிவிடுவார். இதனால் கருடாழ்வார் வேங்கடவனுக்கு உதவி செய்ய முன் வரமாட்டார். வேங்கடவனும் கருடாழ்வார் விலகியதால் தனியே துன்புறுவர். வேறு யாரும் "கருடன்" இருக்கும் அந்தப் பதவிக்கு முன்வர மாட்டார்கள். வேங்கடவன் பாடு படு திண்டாட்டமாக இருக்கும் என்று பலவிதமாக கற்பனையில் மூழ்கியிருந்தான் கலிபுருஷன்.

விஷம் எங்கு பாய்ந்தாலும் அதன் பாதிப்பு ஓரளவு எல்லோருக்கும் இருக்கத்தான் செய்யும். இதில் கருடாழ்வாரும் தப்பவில்லை. மாட்டிக் கொண்டார்.

வெளியில் சென்றுவிட்டு வந்ததும் வராததுமாக வாசலில் வழிமறித்து நின்றாள் கருடாழ்வாரின் மனைவி. இதை சற்றும் எதிர்பாராத கருடாழ்வார் அதிர்ச்சி அடைந்தார்.

"உண்மையைச் சொல்லுங்கள். இப்போது எங்கிருந்து வருகிறீர்கள்?" என்று கோபத்துடன் கேட்டாள்.

"ஏன்? இந்திரலோகத்திலிருந்து" என்று நிதானமாகச் சொன்னார் கருடாழ்வார்.

"இல்லை. இந்திரலோகத்து அந்தப்புரத்திலிருந்து என்று சொல்லுங்கள்" என்றாள் அவர் மனைவி.

"ஆமாம்!" என்றார்.

"உங்களுக்கு அங்கு என்ன வேலை?" என்றாள்.

"இதென்ன கேள்வி? வழக்கம்போல் பெருமாளைத் தரிசனம் செய்து அவருக்கு வேண்டிய பணிவிடைகளைச் செய்து அந்தப்புரத்திற்கு அனுப்பி விட்டு வருகிறேன். இன்று அவருக்குப் பிறந்தநாள். எனவே அவருக்கு அலங்காரம் செய்யச் சிறிது நாழிகை ஆகிவிட்டது. அதுதான் வீட்டிற்கு வரத்தாமதம்" என்றார் கருடாழ்வார்.

"உடம்பெல்லாம் என்றைக்கும் இல்லாத அளவுக்கு "ஜவ்வாது" வாசனை மணக்கிறது. இதற்கு என்ன அர்த்தம்?" என்றாள் அவர் மனைவி.

"உனக்கு என்ன ஆயிற்று? ஏன் இப்படி கேள்வி கேட்கிறாய்? அந்த வைகுண்டபதியின் பிறந்த நாள் அல்லவா இன்று? அவருக்கு வாசனை திரவியங்களை அங்கமெல்லாம் தடவி ஆனந்தப் படுத்தியவர்களில் நானும் ஒருவன். அந்த ஜவ்வாது அத்தர் என்மீதும் பட்டிருக்கிறது. அதில் என்ன ஆச்சரியப் படவேண்டியிருக்கிறது?" என்று அலட்சியமாக பதில் வந்தது கருடாழ்வாரிடமிருந்து.

"என்னிடமே பொய் சொல்கிறீர்கள். இது நியாயமா? தர்மமா? இந்திரலோகத்து அந்தபுரத்தில், யுவராணியோடு பொழுதை ஆனந்தமாகக் கழித்துவிட்டு அவள் தடவிய ஜவ்வாது வாசனையில் மெய்மறந்து போனீர்களா இல்லையா?" என்று கருடாழ்வாரின் மனைவி குற்றம் சாட்டினாள்.

இதுவரை அன்போடும் மரியாதையோடும் பெண்களுக்கே இலக்கணமாகத் திகழ்ந்த தன் மனைவி, இப்படியொரு குற்றத்தைத் தம் மீது சுமத்தியதை கண்டு கருடாழ்வார் பெரிதும் அதிர்சியடைந்தார்.

இனி என்ன சொன்னாலும் நம்பப்போவதில்லை என்று முடிவெடுத்தவர் மேற்கொண்டு பதில் சொன்னால் விபரீதமாகிவிடும் என்பதால் மௌனமாக இருந்தார். அதோடு இவள் ஏன் இப்படி மாறினாள்? இவளது மனதை கெடுத்தவர் யார் என்று தீவிரமாக யோசிக்கவும் ஆரம்பித்தார்.

"என்ன பதிலே வரவில்லை? உண்மை சுடுகிறது போலிருக்கிறது?" என்று கிண்டல் செய்த கருடாழ்வாரின் மனைவி "இனிமேல் நீங்கள் இந்திர லோகத்திற்குச் செல்லக் கூடாது" என்று உத்தரவு போட்டாள்.

"நிதானத்தோடுதான் பேசுகிறாயா?" என்றார் கருடாழ்வார்.

"ஆமாம்! தெள்ளத் தெளிவாகப் பேசுகிறேன். இனிமேல் நீங்கள் அங்கு செல்லக் கூடாது" என்றாள்.

"அப்படியென்றால் வைகுண்டவாசனின் கதி?"

"அவர் பற்றி எனக்கு கவலை இல்லை! அவர் எப்படியும் தன்னைப் பார்த்துக் கொள்வார். அவருக்கு நீங்கள் இல்லாவிட்டால் இன்னொருவர் வருவார். ஆனால் நீங்கள் இனிமேல் இந்தக் குடிலைவிட்டு அங்கு செல்லக் கூடாது" என்றாள் மறுபடியும்.

ஏதோ ஒரு விபரீதம் நடந்திருக்கிறது. இல்லையென்றால் இப்படி இவள் பேசவே மாட்டாள். அதிலும், அந்த வேங்கடவன் மீது அளவு கடந்த மரியாதையும் பக்தியும், பாசமும் கொண்டிருக்கும் இவள் இப்படிப் பேசுவது விந்தையாக இருக்கறது. யார் இப்படி ஒரு குழப்பத்தை கிளப்பி இவள் மனதை மாற்றியிருப்பார்? என்று பெரிதும் குழம்பிப் போன கருடாழ்வார் "இது பற்றி வேங்கடவனிடம் நேரிடையாகச் சென்று முறையிடுவோம். அவரது பேச்சைக் கேட்டால் தன் மனைவி சமாதானமாகி விடுவாள்" என்று முடிவெடுத்தார்.

வாசல் தாண்டி உள்ளே நுழையும் முன்பே இப்படியொரு பீடிகையைப் போட்டதால் அப்படியே வேங்கடவனை தரிசனம் செய்து விஷயத்தைச் சொல்லி வரலாம் என்று திரும்பினார்.

"எங்கே போகிறீர்கள்?" என்று சட்டென்று குறுக்கே வந்து அவரை வெளியே செல்ல முடியாதவாறு வழியை மறித்தாள்.

"நன்றாக இருந்த நீ திடீரென்று மாறிவிட்டாய். என் மனம் சரியாக இல்லை. வேங்கடனாதனைச் சந்திக்கத் திருமலைக்குச் செல்கிறேன். வழியை விடு" என்றார் கோபத்தோடு, கருடாழ்வார்.

"அங்கேயும் போகக்கூடாது, இந்த இடத்தை விட்டு அசையவும் கூடாது" என்று உறுதியாகச் சொன்னாள்.

"என்னது? பெருமாளைத் தரிசனம் செய்யப் போகக் கூடாதா? எனக்கு அதை விட வேறு கைங்கர்யம் எதுவும் இல்லை. என்னை அங்கு செல்லாமல் தடுக்கும் உரிமையும் உனக்கில்லை. இன்னும் சொல்லப்போனால் இனி நீயும் எனக்குத் தேவை இல்லை" என்று கடுமையாகப் பேசிய கருடாழ்வார் அங்கிருந்து வெளியேறினார்.

இதை தூரத்தில் இருந்து கவனித்துக் கொண்டிருந்த கலிபுருஷன் "தன் திட்டம் பலித்துவிட்டது!" என்று ஆனந்தப் பட்டுக் கொண்டு, "இனி என்ன நடக்கப் போகிறது என்று பார்ப்போம்" என்று காத்திருந்தான்.

சித்தன் அருள்................ தொடரும்!

Tuesday, 17 November 2015

சித்தன் அருள் - 258 - சுவாமிமலை !


வணக்கம் அடியவர்களே!

அகத்தியர் அருளால், மகா சஷ்டியை நோக்கி நடந்து வந்த உங்களுக்கு அவர் அருளிய பல விஷயங்களை இதுவரை தெரிவித்துவிட்டேன்.

"மகாசஷ்டி"யான இன்று சுவாமிமலையில் அமர்ந்த முருகப் பெருமானின், திருத்தலத்தின் பெருமைகளை அவர் உரைப்பதை பார்ப்போம்.
  1.  பிரம்மதேவன் முதலான தேவர்கள், முனிவர்கள், சித்தர்கள் ஆகியோர் முருகன் வாழும் சுவாமிமலையில் எப்போதும் வசிக்க ஆசைப்படுகின்றனர்.
  2. குஹன் ஈஸ்வரனுக்கு பிரணவத்தை உபதேசித்த நிகழ்வை பூமியில் மனிதருக்கு உணர்த்த உருவாக்கப் பட்ட புண்ணிய ஸ்தலம். ஆதலால், இதை கைலையை விட உயர்ந்த ஸ்தானம் என்று பெரியோர் கூறுவார். 
  3. முருகனுடைய மூர்த்தி இங்கு ஆகாச கங்கையாக விளங்குகிறது.
  4. இம்மலையில் உள்ள அறுபது படிகளும், வருஷ தேவதைகள்.
  5. ஆறு ருதுக்களும் அடிவார மலைகள், கோபுரங்கள் சப்த மாத்ரு கணங்கள். கோவில் வாசற்படிகள் தேவ மகளிர்.
  6. மலை ஏறும் பொழுது முருகன் நினைவுடன் ஒவ்வொரு படிகளுக்குரிய வருஷ தேவதைகளுக்கு தேங்காய் நிவேதனம் செய்து கற்பூர ஆராதனையுடன் வழிபடவேண்டும்.
  7. முருகன் இருக்கும் விமானத்துக்கு "அசலானந்தம்" என்று பெயர். விமானத்திலுள்ள ஷண்முகனை வழிபடுபவர் மறுபடியும் இவ்வுலகில் பிறக்கமாட்டார்கள்.
  8. முதலில் சுவாமிநாதனை தரிசித்த பின்னரே அடிவாரத்தில் உள்ள பரமேஸ்வரனை தரிசிக்க வேண்டும்.
  9. கார்த்திகை மாதம் கிருத்திகை நக்ஷத்திரத்தில் முருகனை வழிபடுபவன், உலகின் தலைவனாக விளங்குவான்.
  10. ஸ்ரீ சுவாமிநாதனுக்கு அபிஷேகம் செய்கிறவன் சகல சம்பத்துக்களும் பெற்று வாழ்வான்.
  11. அங்கப்ரதக்ஷிணம் செய்பவன் கோரிய பொருளை பெறுவான்.
  12. சித்திரை, வைகாசி, தை மாத பௌர்ணமிகளில் சுவாமிமலையில் பிரதட்சிணம் செய்தால் பிரம்மஹத்தி முதலான தோஷங்களிலிருந்து விடுபடுவான்.
  13. பூச நட்சத்திரத்தில் சுவாமிநாதனை வழிபட்டு, பால், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், சந்தானம் ஆகியவைகளினால் அபிஷேகம் செய்தால், எல்லா விருப்பங்களும் நிறைவேறும். இது சத்தியம்.
  14. தை பூச நட்சத்திரத்தில் முருகனை வழிபாட்டு பிரம்மா முதலிய தேவர்கள் தாங்கள் கோரிய பலனைப் பெறுகிறார்கள்.
  15. எனவே, தை மாத பூச நட்சத்திரத்தில் யார் ஒருவர் சுவாமிநாதனை தரிசித்து அங்கப்ரதக்ஷிணம் செய்கின்றார்களோ, அவர்களுடைய முன்னோர்கள் மூன்று கோடி தலைமுறையினர் கரை ஏறுகின்றனர். முறைப்படி படி ஏற முடியாவிட்டால் முதல் படிக்கட்டுக்கும், கடைசிப் படிக்கட்டுக்கும் பூசை செய்துவிட்டு படி எறவேண்டும்.
  16. சண்டிகை முதலான தேவதைகள் மலையைச் சுற்றிலும் இருக்கிறார்கள். அவர்களை வணங்கிய பின்னரே மலை ஏறவேண்டும்.
  17. தைப் பூச நட்சத்திரத்தில் சுவாமிமலைக்குப் போகிறேன் என்று சொன்னாலே, முருகனுடைய அருள் கிடைத்துவிடும். அஸ்வமேத யாகப் பலன் கிடைக்கும்.
  18. பூச நட்சத்திரத்தில் சுவாமிமலைக்குப் புறப்படுகிறவன் குகனாகவே ஆகிவிடுகிறான்.
  19. பூச நட்சத்திரத்தில் சுவாமிநாதனை தரிசிப்பதற்கு முன்பாக தர்மம் செய்தால் அவன் குபேர சம்பத்தைப் பெறுவான்.
  20. மௌனத்துடன் சென்று தரிசனம் செய்தால் தேவர்களின் அதிபதியாவான்.
  21. அங்குள்ள குமாரதீர்த்தத்தில் நீராடினால் வம்சம் சிறப்புற்று விளங்கும்.
  22. குமார தீர்த்தத்தில் மண் எடுத்து படிக்கட்டுகள் கட்டி திருப்பணிகள் செய்பவன் வம்சம் சிறந்து விளங்கும்.
  23. ஸ்ரீ சுவாமிநாதனை வணங்கினாலோ, சன்னதியில் தீபம் ஏற்றி வைத்தாலோ, பில்வ தளங்களால் அர்ச்சனை செய்தாலோ, அவன் தெய்வாம்சம் பொருந்தியவனாகிறான்.
  24. பால் காவடியில் எல்லா தேவர்களும் வசிக்கின்றனர்.
  25. வேலைக் கையில் தாங்கிய குமாரனுடைய கோவில் விமானத்தை தூர நின்று தரிசித்தாலே எல்லா விருப்பங்களும் நிறைவேறும்.
குருநாதர்கள் ஓதியப்பர், அகத்தியப் பெருமான் காட்டிய அருளால், இந்த வருட மகா சஷ்டியின் பயணத்தை இனிதே நிறைவு செய்வோம்.

உங்கள் சேமிப்புக்காக "சுப்ரமண்ய மங்களாஷ்டகம்" ஸ்லோகம் கீழே உள்ள தொடுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.


அகத்தியர் அடியவர்கள் அனைவரும் இறை அருள் பெற்று, அகத்தியர் அருள், வழிநடத்தல் பெற்று வாழ வேண்டிக் கொள்கிறேன்.

இந்த சுப்ரமண்யரின் தொடர் இத்துடன் நிறைவு பெற்றது.

Monday, 16 November 2015

சித்தன் அருள் - 257 - முருகரின் தத்துவம்!


​வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

மகா சஷ்டி நோக்கிய பயணத்தின் 5வது நாளான இன்று அகத்தியர் அருளிய சில தகவல்களை பார்ப்போம்.

​இருதயம் என்பது ஒரு குளம். அதுவே "சரவணப் பொய்கை". இக்குளம் நாடிகளாகிய வாய்க்கால்கள் மூலமாகவே ரத்தத்தை உடல் முழுவதும் பரப்புகிறது. இந்த குளத்தின் நீரே ரத்தம். ஆசாபாசங்களும், ஆணவாதிகளும் இல்லாமல் பார்த்துக் கொண்டால் இக்குளம் தூய்மையாகவே இருக்கும். ஆசாபாசங்களே இக்குளத்தில் பாசியாகப் படர்ந்துள்ளது. இவைகளை நீக்கி தெய்வ பக்தியை இதயத்தில் ஏற்றிவிட்டால் அதுவே பேரின்ப வாழ்வு. அந்த இருதய சரவணப் பொய்கையில் விளையாடுபவன் முருகன்.

இக்குளத்தை சுத்தம் செய்து நல்ல எண்ணங்கள் மூலம் தன்னை நினைப்பவனை "தன்" வண்ணமாக்குவது தெய்வத்தின் இயல்பு. நம் நினைவு ரத்தத்தையே முதலில் சேருகிறது. நல்ல நினைவுள்ளவர்கள் ஆரோக்கியத்துடன் வாழ முடியும்.

இதையே ஒரு சித்தர் 
குறவன் குடிசை புகுந்தாண்டி
கோமாட்டி எச்சில் உமிழ்ந்தாண்டி 
என்கிறார்.

மானிட சரீரமே குறவன் குடிசை. குறப்பெண்ணை கைபிடித்த குறவனான முருகனை அழைத்தால் அவன் அதில் குடியேறுவான். ஆசாபாசங்களை, ஆணவத்தை அறுத்த உடல், நாமத்தை சொல்லும் நாவில் ஊரும் எச்சில் கங்கயாகிவிடுகிறது. அத்தகைய அன்பர்கள் நாவில் அவன் விளையாடுகிறான். நாமமே முருகனின் சரீரம். சப்தமே அவன் சரீரமானபடியால் நாமத்தை சொல்லும்பொழுது சப்தத்துடன் அவனை அனுபவிக்கிறோம்.

திருவடி என்பது நாதப்பிரம்மம். (நடராஜரின் இடது கை ஆள்காட்டி விரல் அவர் திருவடியை காட்டுவது, இந்த சூட்ச்சுமம் தான்). சப்த பிரம்மத்தால் (நாம ஜபம்) உலகினை கட்டி தன்னகத்தே வைத்தால் பிரம்மஞானம் உணர முடியும்.

தன் அன்பை எங்கு கொண்டுபோய் வைப்பதென்று முருகன் பதினான்கு உலகிலும் சுற்றிப் பார்த்தானாம். தொண்டர்கள் இருதயம்தான் தக்க இடம் என்று தீர்மானித்து நமது இருதயத்தில் புகுந்தானாம்.

"நான்" "எனது" என்கிற உணர்ச்சிகளை ஆண்டவனுடைய "நானாக" "உனதாக" மாற்றிவிட்டால் அது உலகம் முழுவதும் பரந்த "நான்" "உங்களுடையது" ஆக ஆகிவிடுகிறது.
ஒரு நிமிடம் கண்ணை மூடி முருகனை நினைத்து அகக்கண் திறக்கப் பெற்றால் அவர்களே மிகுந்த புண்ணியவான்கள்.

முருகன் நம் இருதயத்திலிருந்து எப்போதும் பிரம்ம ஞானம் பேசிக்கொண்டு இருக்கிறான். ஆனால், ஐவர் (பஞ்சேந்த்ரியங்கள்) அவன் பேச்சை கேட்க விடாமல் தாங்கள் பேசிக் கொண்டே இருக்கின்றனர். "முருகா" என்னும் சப்தத்தினால் அந்த ஐவரையும் (பஞ்சேந்த்ரியங்கள்) ஒடுக்கவேண்டும்.

ஜீவர்களிடமுள்ள கருணை காரணமாக தனக்கு நெற்றிக் கண் வேண்டாம் என்று தீர்மானித்துவிட்டாரம் முருகர்.

6 முகம், 12 ஆயுதம் ஏந்திய கைகள் :-

இவருடைய ஆறு முகங்கள் முற்றறிவு, அளவிலின்பம், வரம்பில் ஆற்றல் உடைமை, தன்வயமுடைமை, பேரருளுடைமை, இயற்கை அறிவு  என்ற ஆறு குணங்களாகும். அவர் திருமேனி அருள் உரு.

வேலாயுதம் தவிர மற்ற பதினோரு ஆயுதங்கள் ஏகாதச ருத்திரர்கள். வேல் ஞான உருவம். சேவல் கொடி நாத தத்துவம், மயில் விந்து தத்துவம். வள்ளி, தெய்வயானை இச்சா சக்தி, க்ரியா சக்தி தத்துவம்.

தேவசேனா, பக்தர்கள் பகவானை தேடி செல்லும் தத்துவம். மர்க்கட நியாயம். அதாவது குரங்குக் குட்டி தன் தாயின் வயிற்றை கெட்டியாக கட்டிக் கொள்வது.

வள்ளி நாயகி,, பகவானே பக்தர்களை நாடி வரும் தத்துவம். மார்ஜால நியாயம். தாய் பூனை தன் குட்டிகளை கவ்விச் சென்று பாதுகாப்பது போல.

வேல் இருப்பது ஆன்மாக்களுக்கு ஞானம் தர. அந்த ஞான அறிவை, இச்சையையும், கிரியையும் ஒழித்தால் அடையலாம்.

அகத்தியர் அடியவர்களே! அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி எல்லா அருளும் பெற்று வாழ்ந்திட பிரார்த்திக்கிறேன்!

உங்கள் சேமிப்பிற்காக "சுப்ரமண்ய கராவலம்பம்" என்கிற ஸ்லோகம் கீழே உள்ள தொடுப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. எடுத்துக் கொள்ளவும்.


Sunday, 15 November 2015

சித்தன் அருள் - 256 - சுப்ரமண்யம் சண்முகம்!

வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

"மகா சஷ்டியின்" நான்காவது தொகுப்பாக ஒரு சில விஷயங்களை பகிர்ந்து கொள்கிறேன்.
  1. நம் புருவ மத்தியில் ஆறு பட்டையாய் உருட்ச்சியுள்ள ஒரு மணி பிரகாசம் பொருந்தி இருக்கிறது. இந்த ஜோதி மணியை "சண்முகம்" என்பர் பெரியோர்.
  2. இதன்றி, நம் மூலாதாரத்திற்கு மேல் மூன்றிடம் தாண்டி அநாகதமாகிய இருதய ஸ்தானத்தில் இடது புறத்தில் ஆறு தலையுடைய ஒரு நாடி இருக்கிறது. இதை "சுப்ரமண்யம்" என்பார்கள்.
  3. இந்த தேகத்திலுள்ள ஆறறிவும், ஆறு ஆதாரங்களிலும் உள்ள ஆறு பிரகாசத்தையும் "சண்முகம்" என்பார்கள்.
  4. நம் மனம் ஒரு குகை போன்றது. குகை எப்போதும் இருந்திருக்கும். அந்த இருட்டில் ஒரு ஜோதியாக முருகன் விளங்குகிறான். அதனாலேயே அவனுக்கு "குகன்" என்ற பெயர் ஏற்பட்டது. "குஹ்யம்" என்ற சொல்லுக்கு "மிக ரகசியமானது" என்று பொருள். சாமானியர்களால் அறிய முடியாக ரகசியமாக அவன் இருப்பதால் "குகன்" என்ற பெயர் பெற்றான் என்றும் கூறுவார்.
  5. வள்ளி, தேவசேனா இருவரின் தத்துவத்தை; நம் பக்தி உண்மையாய் இருக்க, ஞானத்தை (இறைவனை) தேடி சென்றால் இறை தரிசனம் கிட்டும் என்பதை தேவசேனாவை மணந்தது வழியாகவும், எளிய உண்மை பக்தியுடன் இருந்தால் அவனே நம்மை தேடி வந்து அருள் புரிவான் என்பதற்கு வள்ளியை தேடி வந்து மணம்புரிந்த நிகழ்ச்சியையும் கூறுகிறார்கள்.
  6. தேவர்கள் வேண்டுதலின்படி, பரமேஸ்வரன், தனக்குள்ள ஐந்து முகத்துடன், அம்பிகை முகத்தையும் கொண்டு, ஆறுமுகமாக அவதரித்தார்.  
  7. மண்ணெல்லாம் ஒன்றாய் சேர்ந்து திரண்டு விண்ணில் சேரவேண்டுமென்று மேலே எழும்பியது மலை ஆனது. விண்ணாகிய தெய்வீக ஜோதியை காணவேண்டும் என்கிற உணர்ச்சியை எழுப்புவதே "மலையின்" தத்துவம். அதன் உச்சியில் இருக்கிற "ஞானமே முருகன்". அதனால் தான் குன்றிருக்கும் இடம் எல்லாம் குமரன் இருக்கும் இடம் என்றார்கள்.
  8. தேகத்தை சுத்தமாகச் செய்துவிட்டால், அதிலுள்ள ஆவியை தன் குடியாக்கிக் கொள்கிறான் முருகன். அதுவே திருவாவினன்குடி தத்துவம்.
  9. முருகா என்று வாயினால் மட்டும் சொன்னால் போதாது. அந்த நாமம் ரத்தாசயத்துடன் கலக்க வேண்டும். இப்படி செய்தால், நம் வாயிலிருந்து வரும் வாக்கே "சத்திய வாக்காகி" விடும்.
"சரவணபவ" என்கிற மந்திரத்துக்கு முன் 
  • "ஓம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் தானாகவே நாடிவரும் முக்தியை பெற்றுக் கொள்கின்றனர்.
  • "ஓம் ஹ்ரீம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் அறியாமை நீங்கப் பெறுவார்கள்.
  • "ஓம் க்லீம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் மன்மதனைப் போல விளங்குவார்கள்.
  • "ஓம் ஐம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் கவிதை இயற்றும் புலவர்களாவார்கள்.
  • "ஓம் ஸ்ரீம்" சேர்த்து ஜெபிப்பவர்கள் தாபங்கள் தீர்த்து இன்பக்கடலில் திளைப்பார்கள்.
உங்கள் சேமிப்புக்காக "சுப்ரமண்ய புஜங்கம்" என்கிற ஒலிநாடாவை கீழே உள்ள தொடுப்பில் தருகிறேன்.


எல்லா நலமும் பெற்று இந்த மகா சஷ்டி முதல் சுப்பிரமணியர் அகத்தியப் பெருமான் அருளால் நீங்கள் அனைவரும் இனிதே வாழ்க! 

Saturday, 14 November 2015

சித்தன் அருள் - 255 - உபதேச தத்துவம்!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

ஓதியப்பரின் மகா சஷ்டியை நோக்கி சென்று கொண்டிருக்கும் அடியவர்கள் அனைவருக்காகவும், குருநாதர் அகத்தியப் பெருமான் அவர்கள் காட்டித்தந்த நல்ல விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

முருகன், தந்தை சிவபெருமானுக்கு உபதேசித்ததன் தத்துவம் என்ன?

சிவபெருமான் முருகனிடம், "அப்பா முருகா! உலகிலுள்ள ஜீவராசிகள் எல்லாம் என் ஸ்வரூபமே. ஆகவே, நீ எனக்கு ஞான உபதேசம் செய்தால் உலகிலுள்ள ஜீவராசிகள் எல்லாம் கேட்டு உய்யும்" என்றார். அதன்படியே முருகன் சிவம் மூலம் ஜீவராசிகளுக்கு உபதேசம் செய்து கொண்டே இருக்கிறான். இதனால் சிவனின் உள்ளம் குளிர, ஜீவராசிகளின் உள்ளமும் குளிர்ந்ததாம்.

"சிவனார் மனம் குளிர உபதேச மந்திரம் இரு 
செவி மீதிலும் பகர் செய் குருநாதா" 

என்று பெரியவர்கள் எப்போதும் வேண்டிக் கொள்வார்கள்.

இந்த உபதேசத்தை ஜீவராசிகள் மனம் கொடுத்துக் கேட்டால் தானே, பகவான் உருவாக்கிய நந்தவனத்தில் ஆனந்தமாக விளையாடலாம்!

பகவான் விளையாடும் நிலமே நந்தவனம். தன்னுடன் விளையாடுவதற்காக பல ஜீவராசிகளைப் படைத்துள்ளான். இந்த ஜீவா ராசிகளுக்கு அவன் கொடுத்த "சுயேச்சை" (சுதந்திரம்) காரணமாக. இவைகள் அவன் உபதேசத்தை மறந்து, "நான்" என்ற பிசாசின் வயப்பட்டு அல்லல் படுகின்றன. இந்த சுயேச்சையை பகவானிடம் "இச்சையாக" மாற்றிவிட்டால் என்றும் பேரின்பமே.

ஐந்து பூதங்களிலும் மேலான அதிகன் முருகன். அதனால் அருணகிரிநாதர் அவரை "அதிகா" என்கிறார். "அனகா" என்றால் பாவமற்றவன். ஒருவன் மற்றொருவனை வைதால் (திட்டினால்), வையப்பட்டவனுடைய பாவத்தை வைதவன் வாங்கிக் கொள்கிறான். புகழ்ந்தால் புகழப்பட்டவனுடைய புண்ணியத்தை பங்கிட்டுக் கொள்கிறான். (இங்கே அகத்தியப் பெருமான் அடிக்கடி கூறுவது நினைவுக்கு வருகிறது. குருநாதர் சொல்வது இதுதான். பிறரை புகழ்வதில் எப்பொழுதும் தயங்காதீர்கள் என்கிறார். அதனால் பிறருடைய மனதை குளிர்விப்பதினால், நமக்கும் புண்ணியம் சேருகிறது என்று அர்த்தம்.]

சுப்ரமண்ய மூல மந்த்ர ஸ்தவம் என்கிற ஒலி நாடா உங்களுக்காக கீழே தரப்பட்டுள்ளது. எடுத்துக் கொண்டு அவர் அருள் பெற்று வாழ்க!


ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!