​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 24 December 2015

சித்தன் அருள் - 265 - "பெருமாளும் அடியேனும்" - 34 - ஆதிசேஷனும் கருடாழ்வாரும் சந்திப்பு!


கருடாழ்வார் கடுமையாகச் சொல்லி விட்டுச் சென்றாலும், துவாரபாலகர்கள் அதை கேட்டு அதிர்ச்சி அடைந்தாலும், வேங்கடவன் அதைப் பொருட்படுத்தவே இல்லை.

"பாவம் கருடாழ்வார்! ஏழரைச் சனியால் பாதிக்கப்பட்டு இப்படியெல்லாம் பேசுகிறான். என்ன இருந்தாலும்  ஆண்டுகாலமாக என்னைத் தூக்கிச் சுமந்தவன். இன்னும் சொல்லப்போனால் கருடன், எனக்குப் பெற்ற தாய் போல்  உள்ளவன். அவனை, சனியின் பிடியிலிருந்து விடுபட வைக்க வேண்டும்" என மனதார கருணையுள்ளத்துடன் எண்ணிக் கொண்டார்.

"பெருமாளை இப்படித் திட்டிவிட்டுப் போகிறாரே, இவருக்கு என்ன வந்தது? இது வரை இப்படி நடந்ததில்லையே" என்று அனைவரும் கருடாழ்வாரைப் பற்றிக் கவலைப்பட்டார்கள்.

"விநாச காலே, விபரீத புத்தி" என்ற பழமொழி மனிதர்களுக்கு மட்டுமின்றி இறைவனுக்கும், இறை அடியார்களுக்கும் உண்டு, என்பது உண்மைதான் என்பது போல் அமைந்துவிட்டது என்று வருந்திய ஆதிசேஷன், பெருமாளிடம் வந்தார்.

"தன்யனானேன்! அடியேன் ஒரு சின்ன விண்ணப்பம்!" என்றார் ஆதிசேஷன்.

"என்ன சொல்லப் போகிறாய் ஆதிசேஷா?" என்றார் பெருமாள்.

"தாங்கள் அனுமதியளித்தால் கருடாழ்வாரை நானே சமாதானம் செய்து தங்களிடம் அழைத்து வருகிறேன்" என்றார்.

இதைக் கேட்டு வேங்கடவன் புன்னகையோடு சொன்னார்.

"ஆதிசேஷா! கருடனின் கட்டுப்பாட்டில் நீ இருப்பதாக உலகம் எண்ணுகிறது.  நீயோ உன் பெருந்தன்மையால் கருடனை இங்கு அழைத்து ​வரப் பார்க்கிறாய். இது விநோதமாக இருக்கிறதல்லாவா?"

"பகவானே! இத்தனை ஆண்டுகாலம் தங்களைச் சுமந்து வந்த கருடன் இன்று முறைத்துக் கொண்டு போனது வினோதம் இல்லையா? இத்தனை ஆண்டுகளாக நட்போடு பழகிவந்த கருடாழ்வாரை நான் பிரிவது கூட விநோதமாக ஆகிவிடாதா?" என்றார் ஆதிசேஷன்.

"ஆதிசேஷா! நீ என்னை உடலாலும் தாகுகிறாய், குடையாகவும் மாறிப் பாதுகாக்கிறாய்! கருடனோ என்னை காலாகாலமாகச் சுமந்து கொண்டு சுற்றுகிறான். பொதுவாக கருடனும் பாம்பும் பகையென்றாலும் என்னைப் பொருத்தவரை நீங்கள் இரண்டு பெரும் என் இரு கண்கள். உங்களில் யாரை நான் இழந்தாலும் அது எனக்கு மனப்பாரம்தான்" என்ற திருமால் "ஆதிசேஷா! உனக்கு ஒன்று தெரியுமா? இது கலிபுருஷன் செய்கின்ற செயல். இதற்கு சனீஸ்வரனும் உடந்தையாக மாறியிருக்கிறார்" என்றார்.

"அப்படியா?"

"ஆமாம்! அது மட்டுமல்ல, கருடன் என்னை விட்டுப் பிரியவேண்டும். அப்படி அவன் பிரிந்து போனால், ஆதிசேஷனான நீயும் என்னை விட்டுப் பிரிந்து, இந்த பூலோகம் முழுவந்தும் உன்னுடைய ஆதிக்கம் அதிகமாகும். ஜனங்கள் விஷத்தால், விஷநோயால் பாதிக்கப் படுவார்கள். மக்கள் இதைக் கண்டு வெகுண்டெழுவார்கள். பக்தி குறையும், என்றெல்லாம் கலிபுருஷன் கணக்கிட்டுச் செயல் படுகிறான்."

"அநியாயமாக இருக்கிறதே! நான் என்றைக்கும் தங்கள் அடிமை சுவாமி! அப்படியொரு சம்பவம் நடக்க ஒருபோதும் அனுமதிக்க மாட்டேன்! தாங்கள் கொஞ்சம் கண் அசைத்தால் போதும். அந்தக் கலிபுருஷனை அப்படியே விழுங்கி விடுகிறேன்" என்று பயங்கரமாக ஆதிசேஷன் சீறினார்.

"என்ன ஆதிசேஷா! உன்னையும் சனி பிடித்துவிட்டாரா? என்ன? இத்தனை ஆண்டுகாலம் அமைதியாக இருந்த நீ, என் முன்னாலேயே இப்படி ஆவேசப் படுகிறாயே! சற்று பொறுமையாக இரு. இப்போது நேராக கருடனைத் தேடிச் சென்றால் கருடன் உன்னைச் சந்தேகப்படுவான்." என்றார் பெருமாள்.

"சந்தேகப் பட்டுவிட்டு போகட்டுமே!"

"இல்லை! ஏற்கனவே என் மீது கடுங்கோபம் கொண்டிருக்கிறான். நீ இப்போது அவனைத் தேடிப் போனால், நான்தான் அவனைப் பிடித்துக் கொண்டு வரும்படி சொன்னதாக எண்ணி பாய்வான். உனக்குத்தான் ரத்தக் காயங்கள் ஏற்படும்!" என்றார்.

"பரவாயில்லை வேங்கடநாதா. எனக்கு என்ன உபாதைகள் ஏற்ப்பட்டாலும் நீங்கள் என்னைக் காப்பாற்றி விடுவீர்கள். கருடாழ்வாரும் அவ்வளவு கடுமையாக ஒரு போதும் நடந்து கொள்ளமாட்டார் என்றே நம்புகிறேன்!" என்றார்.

"ஆதிசேஷா! சற்று பொறுத்திரு. கருடனே இன்னும் சற்று நேரத்தில் திரும்பி வருவான்" என்றார் வேங்கடவன்.

என்ன இருந்தாலும் ஆதிசேஷனுக்கு மனம் ஒப்பவில்லை. எனவே, வேங்கடவனுக்குத் தெரியாமல் கருடாழ்வாரை நோக்கி மாற்று உருவில் சென்றார்.

அங்கொரு நதிக் கரையோரம்.............

மன நிம்மதி இல்லாமல் கருடன் ஒரு  பாறை மீது அமர்ந்து கொண்டிருந்தார். தன்னை பார்க்க அனுமதி மறுத்த துவாரபாலகர்கள் மீதுள்ள கோபம், திருமலை நாதன் போட்ட உத்தரவு, வீட்டில் மனைவியுடன் போட்ட சண்டை, இதெல்லாம் எப்படி திடீரென்று ஏற்பட்டன? என்று நிதானமாக யோசித்தார்.

"அவசரப்பட்டு பேசிவிட்டோமோ?" என்று வருந்திக் கொண்டிருந்த பொழுது ஆதிசேஷன் கருடன் முன் வந்தமர்ந்தார். இதை கருடாழ்வார் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

இருவரும் நட்போடு ஒருவருக்கொருவர் தழுவிக் கொண்டனர். அப்போது இருவரது கண்களிலும் ஆனந்தக் கண்ணீர் வழிந்தது.

"தாங்கள் இப்படி கோபம் கொண்டு வேங்கடவனை விட்டு விட்டு வெளியே வரலாமா?' என்று பார்வையிலேயே ஆதிசேஷன் கேட்டார்.

"நானா வெளியே வந்தேன்? விதி அல்லவா என்னை அப்படிப் பேசச் செய்தது" என்றார் கருடாழ்வார் மௌனமாக.

"சரி! இதைப் பெரிதுபடுத்தவேண்டாம். இதெல்லாம் இயல்புதான். வாருங்கள், நாமிருவரும் வேங்கடவனை தரிசிக்கப் போவோம்" என்றார் ஆதிசேஷன்.

"எந்த முகத்தோடு வேங்கடவனை தரிசிப்பேன்? தகாத வார்த்தைகளை அல்லவா கூறிவிட்டு வந்திருக்கிறேன். இதை வேங்கடவன் மன்னித்தாலும், என் உள் மனம் அதை ஏற்க முடியாமல் துடிக்குமே" என்றார் கருடாழ்வார்.

"இதெல்லாம் சகஜம் கருடாழ்வாரே! எல்லாம் கலிபுருஷனும் சனிபகவானும் செய்கின்ற வேலை. நம்மை அறியாமல் அவர்கள் ஆட்டுவிக்கிறபடி ஆடுகிறோம். வேங்கடவனை சரண் அடைந்து விட்டால், மற்றவற்றை அவரே பார்த்துக் கொள்வார்" என்று சொன்னார் ஆதிசேஷன்.

"அப்போதே நான் இதை நினைத்திருந்தால், இப்படிப்பட்ட நிலை எனக்கேற்பட்டிருக்காது!" என்றார் கருடாழ்வார், மிகுந்த மனவருத்தத்துடன்.

சித்தன் அருள் ......................... தொடரும்!

No comments:

Post a Comment