​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 3 December 2015

சித்தன் அருள் - 261 - "பெருமாளும் அடியேனும்" - 31 - கலிபுருஷன் தன் திட்டத்தை சனீஸ்வரனிடம் விவரித்தல்!

"தாங்கள் இல்லாமல் என்னால் பூலோகத்தில் கலியுகத்தை சீராகச் செயல்படுத்த முடியாது, என்பதை இப்போதுதான் அறிந்தேன்.  தாங்கள் அனுக்ரகம் இல்லாமல் என்னால் ஓரடி கூட எடுத்து வைக்க முடியாது. தாங்கள் தான் எனக்கு தந்தை ஸ்தானத்தில் இருந்து அருள வேண்டும்" என்று சொல்லி, மறுபடியும் சனீச்வரன் பாதத்தில் வீழ்ந்து எழுந்தான்.

"இப்போதாவது உணர்ந்தாயே, அது போதும். அதுசரி, இப்போது என்ன உதவி உனக்கு வேண்டும்?" என்றார் சனீச்வரன்.

"கருடாழ்வார், வேங்கடவன் சன்னதியை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறார். அவருக்கும் வேங்கடவனுக்கும் பெரும் பகை ஏற்படவேண்டும். கருடாழ்வார் வேங்கடவனை விட்டு நிரந்தரமாகப் பிரியவேண்டும்!" என்றான் கலிபுருஷன்.

"இதில் உனக்கென்ன லாபம்?"

"என் தொழிலே நடப்பைப் பிரித்துப் பாழாக்குவதுதானே? கணவன்-மனைவியைப் பிரிப்பது, குழந்தையையும், பெற்றோர்களையும் பிரிப்பது, இப்படி பிரித்துப் பிரித்து அவர்களை ஒன்று சேரவிடாமல் தடுத்து என் ஆட்சியை நிலை நிறுத்துவது தானே!"

"சந்தோஷம். இதில் எனக்கும் உடன்பாடு உண்டு கலிபுருஷரே!" என்றார் சனீச்வரன்.

"அப்படியென்றால், கருடாழ்வார் திருமலை வேங்கடவனைத் தரிசனம் செய்யும் முன்பு கருடாழ்வார் நாக்கில் தாங்கள் அழுத்தமாக அமரவேண்டும்.  அப்படி தாங்கள் அமர்ந்துவிட்டால், "வாக்கில் சனி" என்ற நிலை ஏற்பட்டு, எதை எதையெல்லாம் பேசக்கூடாதோ அதையதை எல்லாம் கருடாழ்வார் பேசுவார்."

"ம்ம்!"

"பின்பு என்ன? வேங்கடவனுக்கு கோபம் வரும். அவர் கருடாழ்வாரை விரட்டி விடுவார்."

"கருடாழ்வார் போனால், வேறு எதையாவது ஒன்றை திருமால் வைத்துக் கொள்வார். பிறகு என்ன செய்வாய்?" என்றார் சனீச்வரன்.

"சனீஸ்வரரே! தாங்கள் அறியாதது ஏதுமில்லை. ஆனால் ஒன்றைத் தாங்கள் எண்ணவே இல்லை!" என்றான் கலிபுருஷன்.

"என்ன அது?"

கருடாழ்வார் இருப்பதால், ஆதிசேஷன் பயந்து நடுங்கிக் கொண்டிருக்கிறார்.இப்போது கருடாழ்வார், திருமாலை விட்டு விலகிவிட்டால் ஆதிசேஷன் அடிமைத் தளையிலிருந்து விடுதலை பெற்று விடுவார்."

"அற்புதம், அற்புதம், மேற்கொண்டு சொல்லும் கலிபுருஷரே!" என்று சனீஸ்வரர் ஊக்கம் கொடுத்தார்.

"ஆதிசேஷனை இத்தனை காலமாய் "பெருமாள்" அடக்கி வைத்திருந்த கோபத்தால், ஆதிசேஷன் வெகுண்டு எழுவார். இதனால், பூலோகம் முழுவதும் விஷம் பரவும். பூலோகத்தில் விஷம் பரவினால், பூலோக மாந்தர்களுக்கு கெடுதல் விளையும்."

"எப்படி கெடுதல் விளையும்? விளக்கமாக சொல்லும் கலிபுருஷரே!"

"தன்யனானேன்! தாங்கள் என்னை அன்போடு அழைத்து என் வேண்டுகோளைக் கேட்பதற்கு நன்றி ஈஸ்வரா! நன்றி!" என்று சொல்லி ஆனந்தத்தின் மிகுதியால் தன் கண்களிலிருந்து வழிந்த கண்ணீரைத் துடைத்துக் கொண்ட கலிபுருஷன், கைகூப்பி மேலும் சனீஸ்வரனை வணங்கிச் சொல்லலானான்.

"ஆதிசேஷனது விஷம் பூலோக மாந்தர்களிடத்தில் அன்பைக் கெடுக்கும். குடும்பத்தில் பிளவை உண்டாக்கும். கூடப் பிறந்தவர்களை விஷம் போல் எண்ணவைக்கும். ரத்தக்களரியை ஏற்படுத்தும், பஞ்சமா பாதகங்களைச் செய்ய வைக்கும். பக்தியைக் கெடுக்கும். கோயிலைப் பாழாக்கும், சொத்து சுகத்திற்காக பெற்றோர்களை கொலை செய்யும் எண்ணத்தையும் உண்டாக்கும். இதுபோல் ஒவ்வொரு நாளைக்கும் ஒவ்வொரு புதுப்புது விதமாக அதர்மத்தை உண்டாக்கிவிடும். இப்படி நடந்தால் அது எனக்கு வெற்றிதானே?" என்று முடித்தான்.

கலிபுருஷனின் எண்ணத்தைக் கண்டு சனீஸ்வரனே அரண்டு போய்விட்டார். தான் கூட, ஏதேதோ, இப்படிப்பட்ட தர்ம காரியக்ங்களை, அவரவர் முன் ஜென்ம கர்மவினைக்கேற்ப ஆட்டிப் படைத்துக் கொண்டு வந்தாலும், தன்னைவிட ஆயிரம் மடங்கு கொடுமைகளை செயல்படுத்தத் துடிக்கும் இவன், சாதாரணப் பட்டவனல்லன். இவனிடம் சற்று எச்சரிக்கையாக நடந்து கொள்ள வேண்டும்!

இல்லையெனில்..............

இந்தக் கலிபுருஷன் தன்னையே கெடுத்துக் குட்டிசுவராக்கிவிடுவான், என்று எண்ணிக் கொண்டார்  சனீஸ்வரன்.

"சனீஸ்வரரே! என்ன மௌனம்? தாங்கள் தாமதமாக்கிக் கொண்டிருந்தால், அங்கே கருடாழ்வாரும், திருமலை வேங்கடவனும் சமாதானமாகி கை கோர்த்துக் கொண்டு விடுவார்கள்.  தாங்கள் அருள்கூர்ந்து, உடனடியாக கருடாழ்வார் நாக்கில் அமர்ந்து என் வேண்டுகோளை ஏற்க வேண்டும்" என்று கெஞ்சினான், கலிபுருஷன். அவன் பயம் அவனுக்கு.

இதையெல்லாம் அருகிலிருந்து கேட்டுக் கொண்டிருந்த சனீஸ்வரனின் மனைவியான நீளாதேவி "ஒரு வினாடி இங்கே வாருங்கள்" என்று தன் கணவனை அழைத்து அருகிலுள்ள அறைக்கு அழைத்துச் சென்றாள்.

மனைவி சொல்லே மந்திரம் என்றவாறு காலை விந்தி விந்தி நடந்து கொண்டு, நீளாதேவி பின்னால் சனீஸ்வரனும் செல்வதைக் கண்டு கலிபுருஷனுக்கு ஆத்திரம் ஏற்பட்டது!

சித்தன் அருள்....................... தொடரும்! 

No comments:

Post a Comment