"அகத்தியரே! ஏதாவது எங்களுக்கும் சொல்லேன்" என்று சித்தர்கள் என்னை கேட்கிறார்கள். சித்தர்களுக்கே அகத்தியன் சில பாடம் நடத்த வேண்டி இருக்கிறது. சில சமயம் சித்தர்களே தலைக்கு மீறிப் போய்விடுகிறார்கள். அமைதியாக இருந்து விடுகிறார்கள். சித்தர்களுக்கு எல்லாம் ஒன்றை சொல்வேன்.
"என்னைத் தேடி வருகின்ற அத்தனை மானிடர்களுக்கும் நல்லதொரு வாழ்க்கையை கொடுத்து அவர்களுக்கு எந்த துன்பமும் ஏற்படாமல் காப்பாற்ற வேண்டும். அது தான் அகத்தியன் உங்களுக்கு இடுகின்ற கட்டளை" என்று சொல்லியிருக்கிறேன்.
ஆக, அந்தச் சித்தர்களை யார் யார் எந்த தேசத்தில் வணங்கினாலும். எந்த ரூபத்தில் வணங்கினாலும், அவர்களுகெல்லாம் எந்த வித துன்பமும் இல்லாமல், அவர்கள் வாழ்க்கைக்கு எந்த வித குறைகளும் இல்லாமல், எடுத்த காரியங்களை திண்ணமாக செய்து வைக்க, அகத்தியன் நான் பார்த்துக் கொள்வேன். அவர்களும் உங்களுக்கு பக்க பலமாக இருப்பார்கள். ஆக, எங்கள் சித்தர்களுக்குள் பேதமில்லை. இவர்களில் யாரை வணங்கினாலும் அதுஅகத்தியனுக்கு வந்து சேரும்".
இந்த புனிதமான இடத்தில் எத்தனையோ விழாக்கள் நடந்திருக்கிறது. எத்தனையோ யாகங்களை அகத்தியன் கண்டிருக்கிறேன். இங்கிருந்து 12வது காததூரம் சென்று விட்டால் அற்புதமான குகை இருக்கிறது. அந்த குகைக்குள்ளே மிகப்பெரிய, பயங்கரமான புலிகள் காவல் காத்து வருகிறது. அதற்குள்ளேதான், அத்தனை சித்தர்களும் அமர்ந்திருக்கிறார்கள். எப்பொழுது வேண்டுமானாலும் அங்கு தங்கும் இடம் வாங்கலாம். பொதிகை மலையிலே எத்தனையோ அதிசயங்கள் இருக்கிறது என்று அகத்தியன் ஏற்கனவே சொன்னேன்.
என் இடது பக்கத்தில் அமர்ந்திருக்கிற ஒருவனுக்கு கூட, அந்த குகைக்கு சென்று பார், சில ஆச்சரியங்கள் நடக்கும் என்று சொல்லியிருக்கிறேன். ஆனால், அந்த குகைக்கு வழி காட்டவில்லை என்கிற குறை மனிதர்களுக்கு உண்டு. மனிதன் தானே, எதிர்பார்ப்பதில் தவறில்லை. அகத்தியன் சொன்னான். சொன்னபடி அகத்தியன் நடக்கவில்லை என்று பழியை சுமத்தலாம். பழியை சுமத்துவதில் தவறில்லை. அகத்தியன் இப்படித்தான் சிலவேளை ஏதாவது ஏடாகூடமாக பேசிவிடுகிறேன். அதன் பிறகு அகத்தியனே திருத்திக் கொள்வதும் உண்டு. சிலவேளை, சில காரணங்களால் சொன்னது நடக்க முடியாமல் போவது உண்டு.
இப்பொழுது கூட என் அருகில் ஒரு அருமை சித்தன் இருக்கிறான். கோபப்பட்டு, நான் எழுதிய 5000 ஓலைச் சுவடிகளை கடலில் தூக்கி ஏறிந்து விட்ட கதை உங்களுக்குத் தெரியாது. அந்தச் சுவடிகள் எல்லாம் மிதந்து கொண்டு இருக்கிறது நாகப்பட்டினம் கடற்கரையிலே, என்று சொல்லி, அங்கு சென்று கண்டு வரலாம் என்று சொன்னேன். பல நாட்களுக்கு முன் சொன்னேன் "நாகப்பட்டினம் ஏகு. அங்கு வடகிழக்கு திசை பக்கமாக அமரு. அலைகளை எண்ணிக்கொண்டுவா. 89வது அலையிலே கையை நீட்டு. உனக்கு அகத்தியனின் ஓலைச்சுவடி கையில் விழும் என்று கூட சொல்லியிருக்கிறேன். அது உண்மை." அதை இவனிடம் விட்டுவிடுகிறேன். அகத்தியன் எழுதிய 5000 ஓலைச்சுவடியும் இருக்கிறது.
அதில் இல்லற சூட்சுமங்கள் எதுவுமே இல்லை. அற்புதமான சூட்சுமங்கள். ஒருமுறை அதை யாராவது ஒரு மனிதன் படித்துவிட்டால் போதும், இந்த உலகத்துக்கே விழிப்புணர்வு ஏற்பட்டுவிடும். அவன் குடும்பத்துக்கு 333 ஆண்டுகளுக்கு எந்தவித தோஷமும் வராது. அவன் பரம்பரை முதல், பரம்பரை பரம்பரையாக அந்த குடும்பம் செழிக்கும். உலகமே அழிந்து போனாலும், அவர்கள் குடும்பம் அழியாதடா! பிரளயமே வந்து அவர்களை அழித்தெடுத்தாலும், அவர்கள் தலை நிமிர்ந்து நிற்பார்கள். அத்தகைய விஷயங்களை ஓலைச் சுவடியில் சொல்லியிருக்கிறேன். அது கிடைத்தால், யார் ஒருவன் படித்தால், அதை பதிவு செய்துகொண்டால் போதும். வாழ்க்கை, அமைதியாக, ஆனந்தமாக இருக்கும். உயிர் காக்கும் மந்திரம் கூட அதில் சொல்லியிருக்கிறேன்.
உயிர் காக்கும் மந்திரம் பற்றி சொல்லும் போது, இங்கொருவன் தன குழந்தை, எப்பொழுது உயிர்காத்து நடக்கும் என்று ஆசைப்பட்டு, அகத்தியன் சொன்னபடி தானங்கள் எல்லாம் செய்துவிட்டு, அன்றாடம் அகத்தியனை மன்றாடிக் கொண்டிருப்பதெல்லாம் அகத்தியன் யாம் அறிவேன். எப்படிப்பட்டவன், எந்த திசையில் சென்று கொண்டிருந்தவன் எல்லாம், அகத்தியனை நோக்கி வந்தது, அகத்தியனுக்கு பெருமை அல்ல. அந்த உயிர் காப்பாற்றப் பட்டு, அந்த குழந்தை எழுந்து சர்வ சாதாரணமாக நடக்கவேண்டும், குதிக்க வேண்டும், ஆடவேண்டும், பாடவேண்டும் என்பது தான் அகத்தியன் கணக்கு. அந்த உயிரின் பொல்லாத விதி தன்னை மாற்றி எழுதுகிறேன். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் நடந்த கதை வேறு. அந்த உயிரை காப்பாற்றியது அகத்தியன் என்று பெருமையாக அகத்தியன் தம்பட்டம் அடித்துக் கொள்ளவில்லை. இவன் செய்த புண்ணியம், இவன் அகத்தியனை நாடினான். அகத்தியன் விதியை நாடினான். விதி பிரம்மாவை நாடியது. விதி அவனுக்கு உயிர் கொடுத்தது. இன்னும் சில குறைகள் இருக்கிறது. முன் ஜென்ம கர்ம வினைகள். அது கழிந்து கொடிருப்பதால் தான் சற்று காலம். அதுமட்டும் ஒழுங்காக இருந்து விட்டால் இவன் வாழ்க்கை வேறு விதமாக ஆகிவிடும். இப்படி ஒரு சிறு துன்பத்தை கொடுத்து அவனை இந்தப் பக்கம் திருப்பி வைத்திருக்கிறேன். இது அகத்தியன் கொடுக்கிற தண்டனை என்று எண்ணிவிடக்கூடாது. அந்த குழந்தை நல்லபடியாக இருந்திருந்தால், இவன் வாழ்க்கை வேறு விதமாக வித்யாசமாக போயிருக்கும். ஆகவே, அவனை நல்ல வழியில் திருப்பி, முன் ஜென்மத்தில் செய்த புண்ணியங்கள் எல்லாம் அவனுக்கு பலனளிக்க.
அன்றைக்கே சொல்லியிருக்கிறேன். கொடுமுடியில் அன்று காவிரி நதிக்கரை ஓரத்திலே சொன்னேன், அதை இப்போது ஞாபக படுத்திப் பார்க்கிறேன். காவிரி நதி கங்கை நதியில் குளித்து நீராடி தன் பாபத்தை போக்கிக் கொண்டாள். கங்கையோ, இந்த நம்பி மலையில் வந்து மஞ்சள் தேய்த்து நீராடி தாமிரபரணியில் தன் பாபத்தை போக்கிக்கொண்டாள். அன்று முதல் இன்று வரை காவிரியும், கங்கையும், அந்த புனிதம் கெடாமல் இருக்கிறது. ஆண்டுகள் ஆயிரமானாலும் இந்த நதிகள் புனிதம் கெடுவதில்லை. அதற்கு மூல காரணமே தாமிரபரணி நதிக்கரை தான். எல்லோரும் பாபத்தை தொலைக்க கங்கைக்கு போவார்கள். கங்கையே அற்புதமாக ஆனந்தப் பட்டு மஞ்சள் தேய்த்து நீராடிய நதி இது. மஞ்சள் தேய்த்து நீராடிய பாறை கூட இங்கு இருக்கிறது. அகத்தியன் தெளிவாக சொன்னால், பாறையை பெயர்த்துக் கொண்டு போய்விடுவார்கள் என்பதால், அகத்தியன் சுட்டிக் காட்ட மாட்டேன். அகத்தியன் மைந்தனுக்கு சொல்லியிருக்கிறேன். ஏன் என்றால், அங்கு தான் அற்புதமான வரளி மஞ்சளை எடுத்து தேய்த்து நீராடிய புனிதமான இடமடா! அந்த இடத்தில் அமர்ந்து கொண்டுதான் அகத்தியன் இந்த வாக்கை உரைக்கிறேன். அதனால் தான் என்னவோ, அந்த அகோபிலத்து நாயகன் கூட காது கொடுத்து கேட்கிறான் பார். என்ன ஆசை அவனுக்கு. எல்லோரும் போல சொல்ல வேண்டியது தானே, கேட்கவேண்டியதுதானே. ஆசை! இப்படி எத்தனையோ அற்புதமான சம்பவங்கள் நடக்கிறது.
இன்னும் எத்தனையோ சொல்ல மனம் துடிக்கிறது.
நான் போய் தீபாராதனை காட்டிவிட்டு வந்து விடுகிறேன். ஒரு அரை நாழிகை காக்க. அங்குள்ள நம்பிக்கும் மற்றவர்களுக்கும் தீபாராதனை காட்டிவிட்டு வந்துவிடுகிறேன். பிறகு உரைக்கிறேன் நான்.
[நானும் போய் தீபாராதனை பார்த்து, ஆசி வாங்கிக்கொண்டு (உங்கள் சார்பாக), எல்லோரையும் அடுத்தவாரம் சந்திக்கிறேன்!|
எல்லோருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள். ஓம் அகத்தீசாய நமஹ!
சித்தன் அருள்................. தொடரும்