​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 8 August 2013

சித்தன் அருள் - 136

"இவனைப் பார்த்தால் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?" என்று ஓர் அழகான இளஞ்சன் ஒருவனை என் முன்னால் காட்டி ஒருவர் கேட்டார்.  அந்த இளைஞ்சனை கண்களால் அளவேடுத்தேன்.

நல்ல செக்கச் சிவந்த மேனி, குறுந்தாடியுடன் நடிகர் மாதிரி அரை குறையாக சீவப்பட்ட தலையுடன் காணப்பட்டார்.  இறுகலான பாண்ட், டி சர்ட் அணிந்திருந்தார். உடம்பெங்கும் வாசனை வரும் அளவுக்கு வாசனை திரவியங்களை தூவியிருந்தது தெரிந்தது.  ஆனால், கண்களில் மட்டும் ஏனோ ஒரு மிரட்சி.

வலது கையில் பல சுற்றுக்களால் சுற்றப்பட்ட சாயம் போன சிவப்புக் கயிறு இருந்தது.  ஆனால் 'வாட்ச்" இல்லை. டி ஷர்டை நன்றாக "இன்" பண்ணியிருந்தான்.  மற்ற படி, அவனிடம் எந்த குற்றமும் இருப்பதாக என் கண்ணிற்கு தெரியவில்லை.

"நமஸ்தே" என்று அவன் என்னிடம் சொல்லி, ஒருகையால் என் காலைத் தொட்டுக் கும்பிட்டது வட இந்தியப் பாணியை நினைவுப்படுத்தியது.  முகத்தில் அபாரமான களை தென்பட்டதால் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவனாக, நல்ல படிப்பு படித்தவனாகவும் இருப்பான் என்று என் அறிவுக்குத் தோன்றியது.

அவனை உட்காரச் சொல்லிவிட்டு, அவனுடன் வந்தவரிடம் "என்ன விசேஷம்?" என்று சாதாரணமாகக் கேட்டேன்.

"இவனைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" மீண்டும் கேட்டார் அவர்.

"எதுவும் கேடுதலாகத் தோன்றவில்லை.  அவ்வளவுதான்!"

"இவன் குணத்தைப் பற்றி......"

"பார்க்க சாத்வீகமாக இருக்கிறான்.  மற்றவற்றை அகத்தியரிடம் தான் கேட்டுச் சொல்ல வேண்டும்" என்றேன்.

நான் சொன்னதை அந்தப் பெரியவர் ஏற்பதாகத் தெரியவில்லை.  நான் அதைப் பற்றி கவலைப்படாமல் நாடியைப் பிரித்தேன்.

"ஈன்றோர் செய்த தவறால் இவன் இப்போது தண்டனையை அனுபவிக்கிறான்.  ஒன்றரை ஆண்டு முன்பு சிறு விபத்தால் இவனது சிறு மூளையின் ஒரு பகுதி லேசாகப் பாதிக்கப்பட்டது.  யார் செய்த புண்ணியமோ இவனைக் காப்பாற்றி இருக்கிறது.  உயர் தொழில் நுட்பக் கலையில் வல்லவனாகத் திகழ்ந்த இவன், புத்தி சுவாதீனம் இல்லாமல் இருக்கிறான்" என்று மிகச் சுருக்கமாக முடித்தார் அகத்தியப் பெருமான்.

விஷயத்தை வந்தவரிடம் லேசாக எடுத்துக் காட்டிவிட்டு "என்ன நடந்தது" எனக் கேட்டேன்.

"அகத்தியர் ஒன்றும் சொல்லவில்லையா?" என்று அலட்ச்சியமாக கேட்டவர், என்ன நடந்தது என்பதை கூறினார்.

"இவன் எம்.டெக். படித்தவன்.  கல்லூரியில் விளையாடும் பொழுது ஒரு சிறு அடி தலையின் பின்புறம் ஏற்பட்டது.  அதை அப்போது பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை.  இப்பொழுது வேலைக்குச் செல்கிறான்.  ஆனால் அங்கே அடிக்கடி மயக்கம் போட்டு விழுகிறான். தான் யார் என்பதே தெரியவில்லை.  நினைத்தால் வேலைக்குப் போகிறான்.  இல்லையேல் தூங்கு தூங்கு என்று தூங்குகிறான்.  இவன் மன நிலை பாதித்திருக்கிறது.  யாராவது செய்வினை செய்து விட்டார்களோ என்று தோன்றுகிறது.  இதை அகத்தியரிடம் கேட்டச் சொல்லுங்கள்" என்றார் அந்தப் பெரியவர்/

"செய்வினையை அகத்தியர் நம்பவில்லை.  எனவே அதை விட்டு விடுங்கள்" என்று சொன்ன நான், "வேறு என்ன தான் பாதிப்பு இருக்கிறது" என்று கேட்டேன்.

"என்னைப் போட்டு அடிக்கிறான்.  அவன் அம்மாவை கத்தியால் கீறுகிறான்.  கூடப் பிறந்தவர்களையும் எட்டி  உதைக்கிறான்,   தகாதவாறு நடந்து கொள்கிறான்."

"அப்புறம்?"

இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை குளிக்கிறான்.  பல்லை தேயப்பதே இல்லை.  பழைய சட்டையை கழற்ற மறுக்கிறான்.  ராத்திரி முழுவதும் விழித்திருக்கிறான்.  அடிக்கடி ரெயில் தண்டவாளத்தில் ரெயில் என்ஜின் செயல்படுவதைப் போல் செயல்பட்டுக் காட்டுகிறான்."

"டாக்டரிடம் அழைத்துச் சென்றீர்களா?"

"அதை ஏன் கேட்கிறீர்கள்?  நாங்கள் பார்க்காத டாக்டரே இல்லை. கொடுக்காத மருந்தும் கிடையாது.  எதிலும் குணமாகவில்லை. கடைசி முயற்சியாக அகத்தியரிடம் அழைத்துக் கொண்டு வந்திருக்கிறேன்" என்றார் அந்தப் பெரியவர்.

நிதானமாக அந்தப் பையனைப் பார்த்தேன்.  லேசாக புன்னகை புரிந்தான் அவன்.

அகத்தியர் இந்தப் பையனை எப்படி குணப்படுத்தப் போகிறார் என்பது எனக்குத் தெரியாது.  ஆனால் ஏதோ ஒரு பெரும் பாதிப்பு இவனை கடுமையாக பாதித்திருக்கிறது என்பது மட்டும் தெரிந்தது.

நாடியைப் புரட்டினேன்.

"இன்னவனுக்கு சிறு மூளையின் சிறிய நரம்ப்யுகள் பாதிக்கப்பட்டிருக்கிறது.  ரத்த ஒட்டம் சிறப்பாக இல்லை.  சிறு மூளையில் கீறல் அறுவைச் சிகிர்ச்சை ஒன்றை செய்தால் பையன் பிழைத்துக் கொள்வான்" என்றவர், பல்வேறு மூலிகைகளை சொல்லி, "இவற்றை பக்குவமாகப் பொடி செய்து காலையிலும், மாலையிலும் தேன் கலந்து கொடுத்து வந்தால் 90 நாட்களில் தெளிவான நிலைக்கு வந்து விடுவான்.  இப்பொழுது கட்டுப்படுத்தாவிட்டால் எல்லோரையும் கடிக்கத் தோன்றும்.  இவன் தன்னைத் தானே கடித்து புண்ணாக்கிக் கொள்வான்.  இது செய்வினைக் கோளாறு அல்ல" என்று சுருக்கமான அருள் வாக்கைத் தந்தார் அகத்தியப் பெருமான்.

நான் இதைப் படித்து முடித்ததும், அந்தப் பெரியவர் சட்டென்று எழுந்து விட்டார், முகத்தையும் சுருக்கிக் கொண்டார்.

"நான் எதையோ நினைத்து இங்கே வந்தேன்.  இது அருள்வாக்கு தருவதாகத் தெரியவில்லையே.  இந்த நோய் எப்பொழுது குணமாகும்? எப்படி குணமாகும்? என்று சொல்லாமல் வழ வழவென்று பரிகாரம் மட்டும் சொல்கிறாரே" என்று கோபித்துக் கொண்டார் அவர்.

நான் சொன்னேன்..

"இப்படி கோபித்துக் கொண்டு போவது நல்லதில்லை.  எனக்கு நாடி படிக்க வேண்டும் என்ற வசியமும் இல்லை.  இரண்டாவது, அகத்தியர் பெருமான் அருமை தெரியாமல் ஏதேதோ பேசுவதும் நல்லதில்லை. எனவே, தாங்கள் அருள் கூர்ந்து எழுந்து போகலாம்!" என்றதும் பதைபதைத்துப் போனார்.

"நான் அப்படிச் சொல்லவில்லை.  அகத்தியரிடம் வந்தால் உடனே சரி செய்து விடுவார் என்று எல்லோரும் சொன்னார்கள்.  அதனால் அப்படி பேசிவிட்டேன்" என்றார்.

எனக்கு அந்தப் பெரியவர் மீது வருத்தம் இருந்தாலும், அந்தப் பையனைப் பார்க்கும் பொழுது ஏதாவது ஒரு விதத்தில் அவனுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஏனோ தோன்றியது.

அகத்தியரிடம் வேண்டி மீண்டும் நாடியைப் புரட்ட ஆரம்பித்தேன்.

"இந்த பாதிப்பு ஏற்பட்டதற்கு அருகில் இருக்கும் அவனது தந்தையே காரணம்.  சிறு வயதில் ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து வரும் போது, கூட வந்த நண்பனை ரயில் முன் தள்ளினான். நல்ல வேளையாக அந்த நண்பன் உயிர் பிழைத்துக் கொண்டான். ஆனால் ரெயில் எஞ்சினின்ஒரு பகுதி, அவனது தலையில் லேசாக உரசியதால் பிற்காலத்தில் அவனது சிறு மூளை பாதித்து இன்று வரை பைத்தியம் போல் நடமாடிக் கொண்டிருக்கிறான்.

அந்தப் பையன் இட்ட சாபம், இப்பொழுது இந்த நபரின் பையனை பாதித்திருக்கிறது.  இப்பொழுதெல்லாம் முன் ஜென்ம பாபம், புண்ணியம் என்று சொல்வதை விட, இந்த ஜென்மத்திலேயே அவரவர்கள் செய்த பாபத்தை அனுபவிக்கிறார்கள்.  அதனால் தான் வசதியிருந்தும், அழகிருந்தும் இந்த நபருக்கு சித்த பிரம்மை பிடித்த நிலையில் மகன் அமைந்து விட்டான்" என்று அகத்தியர் சொன்ன போது அந்தப் பெரியவருக்கு முகம் அஷ்ட கோணலாக மாறியது.

ஏதோ சொல்ல நினைத்தவர், வாயை மூடிக் கொண்டார்.

கவுரவ குறைச்சல் காரணமாக அந்தப் பெரியவர் அகத்தியர் சொன்னதை முழுமையாக ஏற்றுக் கொள்ளவில்லை என்று எனக்குத் தோன்றியது.

சில நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் அகத்தியரை வேண்டி நாடியைப் புரட்டினேன்.

"இந்த அகத்தியன் இவ்வளவு தூரம் கடந்த கால நிகழ்ச்சியை எடுத்துச் சொல்லியும் இவன், தன தவறை உணர்வதாகத் தெரியவில்லை. இன்னொன்றையும் சொல்கிறேன் கேள்.  இந்த வாலிபனுடைய தாத்தா, அதாவது இந்த நபரின் தந்தை முன்னொரு காலத்தில் ரெயில் எஞ்சின் ஓட்டுனராக இருந்தார்.  இவர் ரெயிலை இயக்கி ஓட்டும் பொழுது, தெரிந்தோ, தெரியாமலோ ஏகப்பட்ட மனித உயிர்கள் கொல்லப்பட்டிருக்கிறது.  இதில் பாதி தற்கொலையாக இருக்கலாம். சில கவனக் குறைவாக கூட இருந்திருக்கலாம்.  எப்படி இருந்த போதிலும் இவனது தந்தைக்கு பல உயிரைக் கொன்ற தோஷம் ஏற்பட்டிருக்கிறது.

இதற்கு என்ன செய்திருக்க வேண்டும்? உடனடியாக அந்த உயிர்கள் சாந்தி அடைய மோட்ச்ச தீபம் ஏற்றியிருக்க வேண்டும்.  அல்லது ராமேஸ்வரம் சென்று தில சாந்தி யாகம், பீடாபரிஹார யாகம், யம தர்ப்பணம் போன்ற ஒன்பது வகை தர்ப்பணங்களை செய்திருக்க வேண்டும்.  ஒவ்வொரு தடவையும் ஒவ்வொரு உயிரும் ரெயிலில் அடிபட்டு இறந்தால், அந்த ரெயிலை இயக்குபவர் இதனைக் கண்டிப்பாக செய்தாக வேண்டும்.

இல்லாவிட்டால், அவர்களது குடும்பத்தின் மூன்றாவது தலைமுறை இப்படித்தான் சித்த பிரம்மையில் பாதிக்கும்.  இந்த பரிகாரத்திற்கு வேறு மாற்று பரிகாரமும் கிடையாது.  இப்படிப்பட்ட பாவத்தை இந்த இளைஞ்சனின் தந்தை அகத்தியனிடம் ஒத்துக் கொள்கிறாரா இல்லையா?" என்று அகத்தியர் நேரடியாகவே கேட்டுவிட்டார்.

ஐந்து நிமிடம் மவுனமாக இருந்த அந்த இளைஞ்சனின் தந்தை, அதை கடைசியாக ஒத்துக் கொண்டார்.

"அகத்தியரை ஒரு ஜோதிடராக எண்ணித்தான் நான் இங்கு வந்தேன். என் தந்தையைப் பற்றியும் என்னைப் பற்றியும் இப்படி புட்டுப் புட்டு வைப்பார் என எண்ணவில்லை.  ஒரு முனிவரை நான் தரக் குறைவாகப் பேசியதற்கு வருந்துகிறேன்.  அகத்தியர் சொன்னது எல்லாம் உண்மை.  இப்பொழுது நான் என்ன செய்தால் என் மகனுக்குரிய சித்த சுவாதீனம் நீங்கும்?" என்று பரிதாபமாகக் கேட்டார்.

"ஏற்கனவே நான் சொன்ன மூலிகைகளை முறைப்படி பதப்படுத்தி தினமும் உண்டு வரட்டும்.  ராமேஸ்வரம் சென்று ஒன்பது வகையான தோஷ பரிகாரங்களை முழு நம்பிக்கையோடு செய்யட்டும்.  பிறகு சோளிங்கருக்கும், குணசீலப் பெருமாள் கோவிலுக்கும் சென்று மூன்று நாட்கள் தங்கி வரட்டும். இத்தனை பிரார்த்தனைகள் செய்யும் பொழுது தடங்கல் வரலாம், எரிச்சல் வரலாம், அகத்தியர் மீது கோபமும் வரலாம்.

ஆனால்.....

பக்தியோடு பிரார்த்தனை செய்தால் மூன்று ஜென்மமாக இருந்த "தோஷம்" விலகுவதோடு, இன்னும் ஒன்பது வருடத்தில் இவன் சித்த ப்ரம்மயிலிருந்து விடுபடுவான்.  இவன் சித்த பிரம்மை நீங்கியதும் திருமணம் நடக்கும்.  நல்ல தொழிலொன்றையும் தொடங்குவான். ஒரு விஷயம், இந்த பிரார்த்தனை செய்யும் பொழுது "தீட்டு" படக் கூடாது. கவனமுடன் செய்யட்டும். ஏதேனும் தவறு நடந்தால் பின்பு அகத்தியனை பழிக்கக் கூடாது" என்றும் எச்சரித்து அனுப்பினார்.

ஆறு மாதம் கழிந்திருக்கும்.

அகத்தியர் சொன்னபடி எல்லா பரிகாரங்களையும் முழுமையாக, நம்பிக்கையோடு செய்து விட்டதாகவும், இப்பொழுது அந்த இளைஞ்சனுக்கு கொஞ்சம் மாற்றம் ஏற்ப்பட்டிருக்கிறது என்றும் சொன்னார், அந்தப் பெரியவர்.

மகிழ்ச்சியாக இருந்தது.

சரியாக ஒன்பது ஆண்டுகள் கழிந்தது.

"என் பையன் இப்பொழுது மிக நன்றாகத் தேறிவிட்டான்.  திருமணமும் நிச்சயிக்கப் பட்டுவிட்டது. சொந்தத் தொழில் ஒன்றையும் ஆரம்பிக்கப் போவதாகச் சொன்னான்.  சரளமாக ஆங்கிலத்தில் பேசி, எல்லோரையும் வியக்க வைக்கும் அவன், தினமும் விடியற்காலை வேளையில் ஆழ்ந்த பக்தியோடு பிரார்த்தனைகளையும் செய்து வருகிறான்" என்று அந்தப் பையனின் தந்தை ஆனந்தமாக என்னிடம் சொன்ன போது அகத்தியர் எப்படியெல்லாம் அருள் பாலிக்கிறார் என்று மனம் நெகிழ்ந்து போனேன்.

"வாகன ஓட்டுனர்கள் யாராக இருந்தாலும் சரி, அவர்கள் வண்டியில் யாரேனும் விழுந்து அடிபட்டு இறந்திருந்தால் நீதி மன்றத்திலிருந்து வேண்டுமானால் தப்பி விடலாம்.  ஆனால் தெய்வ சன்னதியில் அவர்களுக்கு மன்னிப்பு கிடைக்க வேண்டுமானால் அவர்கள், மேல் சொன்னதுபோல் பரிகாரம் ஒன்றை தகுந்த சித்தர் மூலம் செய்து கொள்வது நல்லது, நம்பிக்கை இருந்தால்!" 

"இல்லையெனில், அவர்கள் கண்ணெதிரேயே அவர்களது "வம்சம்" சித்தப் ப்ரம்மையால் பாதிக்கப்படலாம்.  இதை தவிர்க்கலாமே!"


சித்தன் அருள்........... தொடரும்!

8 comments:

  1. குற்றங்களை உணர்ந்து, இறையிடம் மன்னிப்பு கேட்டு, மீண்டும் அந்த தவறை செய்யாதிருந்தால் நிச்சயம் அவன் நம்மை மன்னித்து அருள்வான் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. நன்றி அய்யா.

    ReplyDelete
  2. ஓம் அகத்தீசாய நம!

    ReplyDelete
  3. another good lesson for all

    ReplyDelete
  4. ஓம் அகத்தீசாய நமக...
    ஓம் அகத்தீசாய நமக...
    ஓம் அகத்தீசாய நமக...

    ReplyDelete
  5. om agatheesaya namaha. Vanakam iyya

    ReplyDelete
  6. திரு வே.கார்த்திகேயன் அவர்களுக்கு வணக்கம். மோக்ஷ தீபம் பற்றியும் அதை எவ்வாறு, எங்கு, எந்த சூழ்நிலைக்கு ஏற்றனும் என்ற குறிப்பை விரிவாக தந்தால் நன்றாக இருக்கும். இப்படிக்கு தாழ்மையுடன் வேண்டி கொள்கிறேன்!

    ReplyDelete