இல்லறத்தில் "திருமண வாழ்க்கை" என்பது இறைவனால் பலவித விஷயங்களை கருத்தில் கொண்டு ஆசிர்வதிக்கப் படுகிறது. திருமணம் செய்து கொள்ளப் போகிறவர்களின் முன்ஜென்ம, இந்த ஜென்ம கர்மா, அவர்களின் பெற்றோர்களின் கர்மா என்பதை பொறுத்து அவர்களுக்கு வாழ்க்கை அமையும். அவர்களை சூழ்ந்து நிற்பது நல்ல கர்மாவானால் இனிய வாழ்க்கையும், கெட்ட கர்மாவானால் அல்லல் நிறைந்த வாழ்க்கையும் அமையும். பிறர் வாழ்க்கையை அபகரித்துவிட்டு நம் சந்ததி மட்டும் நிறைவாக இருக்கவேண்டும் என்று செய்கிற செயல்கள் ஒரு போதும்நிம்மதியை தராது. மேலும் நேர்வழியில் சம்பாதித்த செல்வத்தைக் கொண்டு திருமணம் நடத்தினால் மட்டுமே அவர்களுக்கு வாழ்க்கை இனிமையாக அமையும்.
இன்றைய தொகுப்பில் அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சியை பார்ப்போம்.
ஒரு நாள் என் முன் வந்து நாடி வாசிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டு அமர்ந்தனர் ஒரு தம்பதியினர். அவர்கள் நேரடியாகவே விஷயத்துக்கு வந்தனர்.
"இந்தத் திருமணம் நடக்கக் கூடாது, இதை எப்படியாவது அகத்தியர் தான் தடுத்து நிறுத்த வேண்டும்" என்று கோபத்தோடும், ஆத்திரத்தோடும் தங்கள் பெண்ணைப் பற்றி பொருமிய படியே வேண்டுகோள் வைத்தனர் என்னிடம் , ஒரு பெற்றோர்.
வந்த வேகத்தில் பேசியதால் அவர்கள் தங்கள் பெண் மீது கடும் கோபம் கொண்டிருப்பது தெரிந்தது. அவர்களது ஆத்திரம் அடங்கட்டும் என்று சில நிமிடம் பொறுமையாக இருந்தேன்.
"பொதுவாக அகத்தியர், திருமணத்தை நடத்தி வைக்கத்தான் முன் வருவாரே தவிர, தம்பதிகளை பிரித்து வைக்கும் வழக்கம் இல்லையே. தவறான நோக்குடன் வந்திருக்கிறீர்கள். வேறு இடம் சென்று கேட்டுக் கொள்ளுங்கள்" என்றேன்.
"அகத்தியருக்குத் தெரியும். அவரிடம் கேட்டுப் பாருங்களேன்" என்றார்கள் விடாப்பிடியாக.
நாடியைப் பிரித்தேன்.
"இந்தத் திருமணம் நடக்கக் கூடாது என்பதில் அகத்தியனுக்கும் உடன்பாடுதான்" என்றதும் அவர்கள் முகத்தில் ஏகப்பட்ட சந்தோஷம்.
"ஆனால், இந்த திருமணம் நடக்கும்" என்று அடுத்த வரி சொன்னதும் அவர்கள் முகம் சுருங்கி விட்டது.
"இது அருள்வாக்கு போல் தெரியவில்லை. நீங்களாக இட்டுக் கட்டிச் சொல்வதுபோல் இருக்கிறதே" என்றவர்கள், "வேறு வழியே இல்லையா?" என்றார்கள்.
"வேறு வழி இல்லை. எனினும் உங்களுக்கு வேண்டியது அந்த பையனோடு உங்கள் பெண்ணிற்கு திருமணம் நடக்கக் கூடாது. உங்கள் பெண் உங்கள் விருப்பப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும், அவ்வளவுதானே?" என்று கேட்டார் அகத்தியர்.
"ஆமாம்"
"அப்படியென்றால், நான்கு நிலைகளை நீங்கள் கடக்க வேண்டும். ஒன்று சில பிரார்த்தனைகளைச் செய்ய வேண்டும். இரண்டாவது அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வந்து விடக்கூடாது. மூன்றாவது இந்த ப் பையனுக்கும் உங்கள் பெண்ணிற்கும் திருமணம் நடக்கும். இதை தடுக்க முடியாது. நான்காவது உங்கள் பெண் உங்கள் வீட்டிற்க்கே திரும்பி வந்து விடுவாள்" என்றார் அகத்தியர்.
"இவை எல்லாம் ஒன்றுகொன்று நேர்மாறாக இருக்கிறதே. சரியாக வெட்டொன்று துண்டு ரெண்டாக இருக்க வேண்டாமா? திருமணம் நடக்கும் என்றாலே, நாங்கள் இங்கு வந்ததற்கு சரியான பதில் கிடைக்கவில்லை என்றுதானே அர்த்தம். பிறகு அவள் வீ ட்டிற்கு வந்தால் என்ன? வராமல் போனால் என்ன?" என்று கோபத்தோடு கேட்டார்கள்.
"அம்மணி நீங்கள் கேள்வி கேட்டீர்கள். அகத்தியரிடமிருந்து பதில் வாங்கித் தந்திருக்கிறேன். ஏற்றுக் கொள்வதும், இதை மறுப்பதும் உங்கள் இஷ்டம்" என்றேன்.
"இல்லை சார். என் பெண்ணிற்கும் அந்தப் பையனுக்கும் இன்னும் இருபத்தேழு நாளில் திருமணம். இருவரும் அமெரிக்காவில் இருக்கிறார்கள். எங்களை கேட்காமலேயே திருமண எற்பாடுகளைச்செய்து விட்டார்கள். இது எங்களுக்குப் பிடிக்கவில்லை. அதனால் தான் இதை தடுத்து நிறுத்த அகத்தியரை நாடி வந்திருக்கிறோம்" என்றார்கள்.
"காலம் கடந்து கடைசி நேரத்தில் வந்திருக்கிறபடியால் அகத்தியரால் எதுவும் செய்ய இயலாது. ஆனால் சூட்சுமமாக சில செய்திகளை சொல்லியிருக்கிறார். இதில் ஏதோ காரணம் இருக்கும்" என்று சமாதானம் கூறினேன்.
"அகத்தியரை நாடி வந்தால், அத்தனையும் உடனே நடக்கும் என்றார்கள். அதனால் தான் நாங்கள் இங்கு வந்தோம். ஆனால் சொல்வதைப் பார்த்தால் ஏதோ எங்களை சமாதானப்படுத்துவதற்காக கதை விடுவது போல் தோன்றுகிறது" என்றார் கணவர்.
"நீங்கள் மட்டுமல்ல இந்த நாடியை படிக்கிறவர்களும், நாடிக் கட்டுரையை படிக்கிறவர்களுக்கும் இதை ஒரு கற்பனைக் கதையாகத்தான் எண்ணுகிறார்கள். அது அவரவர்கள் இஷ்டம்" என்று சொல்லிவிட்டு அமர்ந்தேன்.
"பரிகாரங்கள் சொல்லுங்கள் செய்து பார்க்கிறோம்" என்றார்கள் கடைசியில்.
"சத்ரு சம்ஹார யாகம் ஒன்றை செய்ய வேண்டும். அதன் பின்னர் நாகத்தோடு கார்கோடக யந்திரத்தை முறையாக பூசித்து வைக்க வேண்டும்" என்று அகத்தியர் சொன்னார்.
அரைகுறை நம்பிக்கையோடு எழுதிக் கொண்டு போனார்கள்.
பதினெட்டு நாட்கள் கழிந்திருக்கும்.
"சார். அகத்தியர் சொன்ன பரிகாரங்களைச் செய்து விட்டோம். இன்னும் காரியம் வெற்றி பெறவில்லை. அவர்கள் இருவருக்கும் திருமணம் நடந்துவிடும் போலிருக்கிறதே" என்றார்கள் நேரில் வந்து.
"திருமணம் நடக்கட்டுமே" என்றார், அகத்தியர்.
"இப்படிச் சொன்னால் எப்படி?"
"திருமணம் நடக்கும், பின்பு உங்கள் விருப்பப்படியே உங்கள் மகளுக்கு முறைப்படி உங்க ஜாதியிலேயே திருமணம் அமோகமாக நடக்கும்" என்று அருள்வாக்கு கூறினார்.
ஆனால், அவர்களுக்கு இதில் உடன்பாடில்லை. மனமுடைந்து சட்டென்று வெளியே சென்று விட்டார்கள்.
நானும் அதை பெரிதுபடுத்தவில்லை, விட்டுவிட்டேன்.
பத்து நாட்கள் கழிந்தது. மீண்டும் அதே தம்பதிகள் என்னிடம் வந்தார்கள். முகத்தில் சோகம் கொப்பளித்துக் கொண்டிருந்தது.
"சார்! அகத்தியர் சொன்னபடியே அவர்கள் திருமணம் செய்து கொண்டு விட்டார்கள். இப்பொழுது அவள் கணவன் அஸ்பத்ரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறான்" என்றனர்.
"அடப் பாவமே! எப்படி? என்ன நடந்தது?" என்றேன்.
"திருமணத்தை பதிவு செய்து முடித்து திரும்பிக் கொண்டிருக்கும் போது, கார் விபத்தில் அவனுக்கு இடுப்பிற்கு கீழ் சரியான அடி. நல்ல வேளை என் மகள் உயிர் பிழைத்துக் கொண்டாள்" என்றார்.
"உங்கள் மகள் உயிர் பிழைத்துக் கொண்டது சந்தோஷம். அவன் நிலை எப்படி?"
"அவனுக்கு ஆயுள் கெட்டி. இடுப்பிற்கு கீழ் எந்த உறுப்பும் செயல்படவில்லை. இன்னும் மூணு மாதம் கழித்து வெளியே வந்து விடுவான். ஆனால் அவனால் தாம்பத்திய வாழ்க்கையில் ஈடுபட முடியாது என்று அமெரிக்க டாக்டர்களே சொல்லி விட்டார்களாம்".
"அப்படி என்றால்"
"இவன் பெயருக்கு தான் கணவன்."
"ஆமாம். இப்படியிருக்க உங்கள் மகளால் எப்படி அவனோடு குடித்தனம் நடத்த முடியும்?"
"அதைத்தான் நாங்களும் யோசிக்கிறோம். இந்த விஷயத்தில் என் மகள் என்ன முடிவு எடுக்கப் போகிறாள் என்பதைப் பற்றி தெரியவில்லை." என்றனர்.
நான் ஒன்றும் சொல்லவில்லை. மவுனம் காத்தேன்.
"அகத்தியர் தான் அன்றைக்கே சொல்லிவிட்டாரே, திருமணம் நடக்கும், அதைத் தடுக்க முடியாது என்றார். அதன்படி நடந்து விட்டது. இப்பொழுது தாம்பத்திய வாழ்க்கை அவர்களுக்கு இல்லை என்பது தெரிந்துவிட்டது. இனி அடுத்தபடி அவள் அவனை விட்டு பிரிந்து வர வேண்டியது தான் பாக்கி" என்று எண்ணிக் கொண்டேன்,
ஒருவேளை திருமணமான கணவனை விட்டு விட மனமில்லாமல் கடைசிவரை அவனுக்கு தொண்டு செய்தே வாழப்போகிறேன் என்று அந்தப் பெண் புதிய முடிவும் எடுக்கலாமே":, என்று கூட எனக்குத் தோன்றிற்று.
எதற்கும் நாடியை பார்க்கலாமே என்று பிரித்துப் பார்த்தேன்.
"மருத்துவமனையில் இருந்து வெளியே வரும் அவன், தன மனைவிக்கு தானே வேறொருவனை விரும்பி மணமுடித்து வைப்பான். இவளுக்கு வரும் இரண்டாவது கணவன், அவளது ஜாதியைச் சேர்ந்தவனாக இருப்பான். ஒரே கல்லில் இரண்டு மாங்காய். பெற்றோர் விருப்பபடி அவளுக்கு பெற்றோர் வழி ஜாதியிலே திருமணம் நடக்கும். அந்தப் பையனும் அமெரி க்காவிலே குடியிருப்பதால் பிரச்சினை எதுவும் பின்னால் வராது" என்று அருள் வாக்கு சொன்னார்.
இதைக் கேட்டதும்தான் அந்தப் பெற்றோருக்கு பெரு மூச்சு வந்தது. அகத்தியர் மீது நம்பிக்கையும் பிறந்தது.
"எல்லாம் சரி! ஆனால் ஏன் இவளுக்கு இப்படியொரு திருமணம் நடந்தது? அகத்தியர் நினைத்திருந்தால் இந்த திருமணத்தை தடுத்து நிறுத்தி இருக்கலாமே" என்று பயந்தபடியே கேட்டேன்.
"அந்தப் பெண் இரண்டாவது திருமணம் செய்து கொண்ட பிறகு இதற்கு விளக்கம் சொல்கிறேன்" என்று முடித்துக் கொண்டார் அகத்தியர்.
ஒன்பது மாதம் கழிந்தது.
அகத்தியர் சொன்னபடியே அந்தப் பெண்ணிற்கு அவளது கணவனே வேறொருவனுக்குத் திருமணம் செய்து வைத்தான். இந்த இரண்டாவது கணவன், அவளுக்குத் தூரத்து சொந்தமாகவும் அமைந்து விட்டது மிகப் பெரிய சந்தோஷம்.
இந்த இரண்டாவது திருமணத்திற்குச் சென்றுவிட்டு அமெரிக்காவில் இருந்து திரும்பிய அந்த பெண்ணின் பெற்றோர்கள், பிறகு ஒரு நாள் என்னைச் சந்தித்தனர்.
"என் பெண்ணின் திருமண வாழ்கையைப் பற்றி அகத்தியர் பின்னர் சொல்கிறேன் என்று சொன்னாரே. இப்போது சொல்வாரா?" என்று கேட்டனர்.
படிக்க ஆரம்பித்தேன். படிக்க படிக்க அந்த பெற்றோரின் முகம் வெளுத்துப் போயிற்று. கை-கால்கள் நடுங்கின.
அந்த செய்தி இதுதான்.
"கோவிலுக்கு கொடுத்த பணத்தை கோவிலுக்குச் செலவழிக்காமல் அதை பொய் கணக்கெழுதி உன் பெண்ணிற்கு செலவழித்து படிக்க வைத்தாய். கூடப் பிறந்த சகோதரியை ஏமாற்றி அவளுக்கு சேர வேண்டிய நியாயமான சொத்தை அபகரித்து அந்தப் பணத்தைக் கொண்டு வெளிநாட்டிற்கு உன் பெண்ணை அனுப்பி படிக்கவும், வேலைக்காகவும் பணத்தை தாறுமாறாக செலவழித்தாய்.
அதே சமயம், சகோதரி தனது குழந்தையைப் படிக்க வைக்க உதவிக் கேட்ட பொழுது பணம் கொடுக்க மறுத்ததோடு, அந்தக் குழந்தை பெரியவளாகி, திருமணம் செய்ய நினைத்த பொது, அந்த திருமணத்திற்கு லஞ்சம் பெற்ற, பாவப்பட்ட பணத்தைக் கொடுத்து அரைகுறை மனதோடு திருமணத்தை நடத்தியதோடு அந்தத் தம்பதிகளையும் பிரித்தாய்.
பின் எப்படியடா உன் பெண்ணின் திருமண வாழ்க்கை நல்லபடியாக நீடிக்கும். குறுக்கு வழியில் பணத்தைச் சேர்த்து அந்த பாவப்பட்ட பணத்தைக் கொண்டு சொந்தக் குழந்தைக்கு ஊட்டி வளர்த்தால், இது பாவத்தை ஊட்டி வளர்ப்பதாகும். அதனால் தான் இத்தனை சோகம் உன் பெண் வாழ்க்கையில் நடந்தது.
இந்த இரண்டாவது மணவாழ்க்கையும் நல்ல படியாக நீடிக்க இனியாவது பாவத்தைச் செய்யாதே. அவரவர் பொருளை அவரவர்களுக்கே திருப்பிக் கொடு. இல்லையேல், அவளது எதிர்காலம் கேள்விக்குறி தான்" என்றார் அகத்தியர்.
அன்று அகத்தியப் பெருமானின் அருள் வாக்கை வாங்கிக்கொண்டு சென்றவர்கள் பிறகு வரவே இல்லை. அவர் சொல்படி நல்லது செய்து தன் மகளின் வாழ்க்கையை சமன் செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன்.
ஊட்டும் உணவும், வாழ்க்கையும், நல்ல கர்மாவை சுமந்த தாக இருந்தால் தான் வாழ்க்கையே அமைதியாக இருக்கும். இதை எல்லோரும் புரிந்துகொண்டால் சரி. யாரும் உணரவில்லை, யாரும் பார்க்கவில்லை என்று நினைத்து மனதில் தோன்றியதை எல்லாம் செய்து, அதுவே தவறான வழியில் சம்பாதித்த செல்வமாக இருந்தால், யாருக்கும் நிம்மதியான இல்லற வாழ்க்கை என்பது கானல் நீராகத்தான் அமையும்.
உணர்ந்து விலகி நின்று அனைவரும் வாழ்வது நல்லது.
சித்தன் அருள்................... தொடரும்!