​அகத்தியர்அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 31 January 2013

சித்தன் அருள் - 109


அகோபிலம் சென்று நரசிம்ம சுவாமியைத் தரிசனம் செய்தவர்களுக்கு அங்குள்ள பதிமூன்று சன்னதிகளைப் பற்றித் தெரிந்திருக்கும்.  கீழ் அகோபிலத்தில் ஐந்து நரசிம்மர் சன்னதிகளும், மேல் அகோபிலத்தில் எட்டு நரசிம்மர் சன்னதிகளும் உண்டு.

இதில் பன்னிரண்டு சன்னதிகள் நரசிம்மருக்கு உரியது.  கடைசியில் உள்ள சன்னதி ஸ்ரீ பிரகலாதர் குகை சன்னதி.  இந்தப் பதிமூன்று சந்நதிகளையும் முழுமையாகத் தரிசனம் செய்பவர்கள் குறைவாகத் தான் இருப்பார்கள்.  இந்த அருமையான மலைக் கோயில்களில் தரிசனம் செய்ய விரும்புபவர்கள் தனியாகச் செல்வதைக் கூடுமானவரை தவிர்ப்பது நன்று.  தகுந்த வழிகாட்டியோடுதான் செல்ல வேண்டும்.  இல்லையெனில் நான் மாட்டிக் கொண்டு தவித்தது போல் தான் தவித்து அவதிப்பட வேண்டியிருக்கும்.

அகஸ்தியர் துணையிருக்கிறார் என்ற நம்பிக்கையில் அசட்டுத்தனமாக நான் தனியாக சென்றது மிகப் பெரிய தவறு.  நீரிலும் நெருப்பிலும் விளையாடக் கூடாது என்று ஒரு பழமொழி உண்டு.  இதை மறந்து நான் தனியாக என் இஷ்டப்படி, நடந்து சென்று பயந்து நடுங்கிப் போனதற்கு என் தலையிலே பலமுறை நானே குட்டிக் கொண்டேன்.  இது உண்மை!  ஏனெனில் அகோபிலத்தில் எல்லா சந்நதிகளையும் கூட தனியாக பகல் பொழுதில் தரிசனம் செய்து கொள்ளலாம்.  ஆனால் ஜ்வால நரசிம்ம சன்னதிக்கும், ஸ்ரீ பாவன நரசிம்மர் சன்னதிக்கும் உகிர ஸ்தம்பம் செல்வதற்கு மட்டும் நிச்சயம் வழிகாட்டவேண்டும்.

"நரசிம்ம நரசிம்ம" என்ற சப்தம் வந்ததைக் கண்டு எங்கிருந்து வருகிறது, யார் அங்கே இருந்து இப்படி ஜெபிப்பது என்ற பயம், அதிர்ச்சி என் மனதில் ஏற்பட்டதால் அந்தச் சப்தம் வந்த பாறையை நோக்கித் தனியாக நடந்தேன்.  என்னைத் தவிர வேறு நடமாட்டம் எதுவும் இல்லை.

என்னதான் நடக்கிறது, அதையும் பார்த்து விடுவோமே என்ற தைரியம் என்னைப் பிடித்து இழுத்துச் செல்ல மெதுவாக அதை நோக்கி நடந்தால், அந்தச் சப்தம் என்னை விட்டுத் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது.  முதலில் அருகில் இருந்து வந்த சப்தம் நான் ஒவ்வொரு அடியாக வைக்க வைக்க அந்த "நரசிம்ம நரசிம்ம" என்ற சப்தம் அதுவும் ஒவ்வொரு அடியாகப் பின்னோக்கிச் சென்று கொண்டிருந்ததது.

நானும் நூற்றைம்பது அடியைத் தாண்டி அதன் பின்னே சென்றேன்.  திடீரென்று ஒரு பயம்.  தொடர்ந்து செல்வதை அப்படியே விட்டு விட்டுத் திரும்பி விடலாம் என்று முடிவெடுத்தேன்.  ஏனெனில் என் ஒருவனைத் தவிர வேறு யாரும் அந்த மலைப் பகுதியில் இல்லை.

கண்ணுக்கெட்டிய தூரம் ஒரே மலைப்பாறைகள். சப்தம் போட்டு அழைத்தால் சத்தியமாக ஒரு "ஈ காக்காய்" கூட உதவிக்கு ஓடிவராது என்பது மட்டும் நன்றாகத் தெரிந்தது.

மனித நடமாட்டம் இருந்த அந்தப் பாதையை நோக்கிக் கண் பார்வையைச் செலுத்தினேன்.  பாதையே என் கண்ணுக்குத் தென்படவே இல்லை.  இதெல்லாம் எண்ணும் பொழுது "அவசரப்பட்டு விட்டேனோ என்றும் திக்குத் தெரியாத காட்டில் நடுவில் மாட்டிக் கொண்டு விட்டேன் போலும்" என்றும் மனம் பதை பதைத்தது.

அப்போதுள்ள சூழ்நிலையில் கையிலிருந்த அகஸ்தியர் நாடியைப் படிக்கத் தோன்றவில்லை.  "தப்பித்தோம் பிழைத்தோம்" என்று ஓடத்தான் தோன்றியது.  எதற்கெடுத்தாலும் நாடியைப் பார்ப்பது நல்லதல்ல என எண்ணினேன்.

வந்த பாதையை நோக்கி, பயந்து மூச்சிரைக்க வியர்த்துக் கொட்ட, வேகமாக வரும்பொழுது அந்த "நரசிம்ம" சப்தமும் என் பின்னால் தொடர்ந்து காதில் கேட்டுக் கொண்டிருந்தது.  "இதென்ன வம்பாகப் போயிற்று" என்று கலக்கத்தோடு மூச்சிரைக்க ஓடி வந்த நான், என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஒரு நிமிஷம் நின்ற பொது அந்த "நரசிம்ம நரசிம்ம" சப்தமும் ஓரிடத்தில் அப்படியே நின்று சொல்லிக் கொண்டிருந்தது.

ஏதோ ஒரு நிகழ்ச்சி நடக்கப் போகிறது என்று என் உள்மனம் சொன்னாலும், "இதெல்லாம் நமக்கு தேவையா? எத்தனை தடவை அடி பட்டாலும் இன்னமும் புத்தி நமக்கு வரவில்லையே" என்று  நொந்து போனேன்.  துணைக்கென்று யாராவது ஒருவர் வந்திருந்தால் இப்படிப்பட்டத் தொல்லை வந்திருக்காதே என என்னவெல்லாமோ, தோன்றியது.

"பிரசவ வைராக்கியமும், ஆலய தரிசனமும் அப்போதைக்கப்போது என்பது போல நமக்கும் இந்த விஷயத்தில் இப்படித்தான் போலிருக்கு" என என்னை நானே சமாதானம் செய்து கொண்டு மிக வேகமாக "தம்" பிடித்துக் கொண்டு வந்த வழியை நோக்கி ஓட ஆரம்பித்த பொழுது சட்டென்று ஓர் ஆட்டிடையர் போல் ஒருவன், அருகிலிருந்த சிறு மலைக் குன்றிலிருந்து வெளிப்பட்டான்.

திடீரென்று ஒரு ஆட்டிடையன் சட்டென்று என் முன் வந்து நின்றபோது, அவன் யார் எதற்காக என் முன் வந்து நிற்கிறான் என்ற ஓர் அதிர்ச்சி ஏற்பட்டது.  அவன் தெலுங்கில் கேட்டான்.  "ஏன் இங்கு வந்தாய்.  இந்த இடத்திற்குத் தனிமையில் வரக்கூடாது என்று தெரியுமா?  நீ வந்த இடம் ஏறத்தாழ ஐந்து மைல் தள்ளி வந்திருக்கிறாய்"

"ஐந்து மைல் தள்ளியா வந்திருக்கிறேன்?  இருக்காதே" என்று தமிழில் சொன்னேன்.

"இல்லை மேல் நரசிம்மர் கோயிலுக்குச் செல்லும் பாதையிலிருந்து இந்த இடம் ஐந்து மைல் இருக்கிறது.  வழி தவறி வந்துவிட்டாய்.  இந்த இடம் பாவனா நரசிம்மர் சன்னதிக்குப் போகிற வழி.  மோசமான மலைப்பாதை.  செந்நாய்கள் ஜாஸ்தி, அதோடு கரடி கூட்டமும் உண்டு.  நேத்திக்குக் கூட இரண்டு கரடிக் குட்டிகளைப் பார்த்தேன்.  குட்டிகள் இருந்தால் தாய் கரடியும் அந்தக் கூட்டமும் இங்குதான் இருக்கும் என்றவன், கையில் எந்தவித ஆயுதமும் எடுத்துக் கொள்ளாமல் எப்படித்தான் இங்கு வந்தாயோ" என்று அவன் தன் தலையில் அடித்துக் கொண்டதோடு என்னையும் பரிதாபமாகப் பார்த்தான்.

அவன் பேசிய பேச்சு தெலுங்காக இருந்தாலும் ஓரளவு அரைகுறையாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.  பார்ப்பதற்கு நல்லவன் போல் தோன்றியதால் இவனிடம் நரசிம்மர் சப்தத்தைப் பற்றி விளக்கம் கேட்கலாம் என்று ஆசைப்பட்டு அரைகுறையாக அது பற்றிய விளக்கம் கேட்டேன்.

தமிழில் நான் சொன்னதை எப்படியோ அவன் புரிந்து கொண்டான் போலும்.  "நல்லவேளை நீ தப்பித்தாய்.  அப்படிப்பட்ட சப்தம் இங்கு தினமும் அடிக்கடி கேட்கும்.  அதுவும் அமாவாசை பௌர்ணமியிலும் சில திதிகளிலும் சர்வ சாதாரணமாகக் கேட்கும்.  அதை நம்பியா இங்கு வந்தாய்?  யார் செய்த புண்ணியமோ தப்பித்தாய்.  வா, உன்னை வேறு வழியில் கொண்டு போய் சரியான பாதையில் சேர்க்கிறேன்" என்று சொன்னதை, மிகவும் கஷ்டப்பட்டு புரிந்து கொண்டேன்.

"எல்லாம் சரி! இவன் ஏன் என்னை இப்படி பயமுறுத்துகிறான்.  உண்மையில் இவன் ஆட்டிடையன் தானா?  அல்லது வேறு யாரோவா?  ஆட்டிடையன் என்றால் ஆடுகள் இங்குமங்கும் மேய்ந்திருக்க வேண்டும்! அல்லது குறைந்த பட்சம் மாடுகள் ஒன்று இரண்டாவது அங்கு காணப் படவேண்டும்.  ஆனால் எதுவும் என் கண்ணில் தட்டுப்படவில்லை.  ஆனால் பார்ப்பதர்க்குக் கையில் கம்புடன், இடுப்பில் துண்டு கட்டிக் கொண்டு மேல் சட்டை எதுவும் இல்லாமல், குளித்து மூன்று நாள்களாக இருப்பது போன்ற தோற்றம் கொண்டிருந்தான்.

தமிழ் அவனுக்கு சுத்தமாகத் தெரியவில்லை.  ஆனால் ஓரளவு எல்லோருக்கும் புரியும் வண்ணம் சாதாரண தெலுங்கில் பேசினான்.  இப்படி அவனை நான் எடை போட்டுப் பார்த்துக் கொண்டிருந்தாலும், அந்த நரசிம்ம நரசிம்ம சப்தத்திற்கு மட்டும் என்ன காரணம் என்று அவனால் சொல்ல முடியவில்லை, அல்லது அவன் சொல்லி இருப்பான், என்னால் புரிந்து கொள்ள முடியவில்லையோ என்னவோ?

"இவனை நம்பி கூடவே செல்லலாமா? கூடாதா என்று அடுத்த நிமிஷம் புத்தி தடுமாறியது.  சரி! போய்த்தான் பார்ப்போமே என்று அகஸ்தியர் ஜீவநாடி தூண்டியது.  இருப்பது ஓர் உயிர்.  அது போகப் போவதும் ஒரு தடவை, போனால் போகட்டுமே.  அப்படி இங்குதான் என் முடிவு இருக்குமென்றால் அதைத் தடுக்க யாரால் முடியும்? லக்ஷ்மி நரசிம்மர்க்கே அர்ப்பணம்" என்று முடிவெடுத்தேன்.

"சரி! வா. போகலாம்!" என்று அவனை அழைத்ததேன்.  என் சைகையைப் புரிந்து கொண்ட அவன் பின்னால் நடந்தேன்.  இடையில் என் மனதில் ஒரு கேவிக்குறி.  சரியான பாதையை விட்டு ஐந்து மைல் தூரமா நாம் திசை மாறி வந்திருப்போம்.  இருக்காது.  இவன் படிப்பறிவு இல்லாதவன்.  வாய்க்கு வந்தபடி உளறியிருக்கிறான் என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டேன்.

சின்னஞ்சிறு ஆறுகள், அங்கும் இங்குமாகச் சிறு சிறு நீர்வீழ்ச்சிகள்.  சுகமான சுத்தமான காற்று, திடீர் திடீரென்று காற்றோடு கலந்த நறுமணப் பூக்களின் நறுமணம்.

இவற்றை எல்லாம் ஆனந்தமாக அனுபவித்துக் கொண்டே அந்த ஆட்டிடயனுடன் மௌனமாக நடந்து சென்றேன். கொஞ்ச தூரம் சென்றபின் சிறு பெரும் பாறைகளை தாண்டியதும் அவன் சட்டென்று என் கையைப் பிடித்து உதட்டில் விரல் வைத்து "உஷ்" என்று ஜாடை காட்டினான்.

பேசாமலே வந்து கொண்டிருந்த நான் அவன் செய்கைகளைக் கண்டு திகைத்தாலும் அவன் அடையாளம் காட்டிய திசையை நோக்கிப் பார்த்தேன்.  நல்ல உயரமான ஏழெட்டு செந்நாய்கள் அங்கு இருந்தன.

செந்நாய்கள் மிக ஆக்ரோஷம் கொண்டவை.  புலியை கூட விரட்டி விடும் ஆற்றல் கொண்டவை.  ஒரு காட்டு மரத்தின் நிழலில் சில படுத்துக் கொண்டிருந்தன.  சில இங்குமங்கும் மோப்பம் பிடித்து ஓடிக் கொண்டிருந்தன.  எனக்கு அடி வயிற்றில் பயம் பற்றிக் கொண்டது.  இந்த நாய்களில் ஏதாவது ஒன்று வந்து எங்களைக் கௌவிக் கொண்டால் என்று கற்பனையாக நினைக்கும் பொழுதே சப்தநாடியும் ஒடுங்கின.

எதற்காக இவனை நம்பி இவன் கூட வந்தோம்.  அப்போதே வந்த வழியைப் பார்த்துத் திரும்பியிருக்கலாமே.  எதற்காகவோ இவன் என்னை இழுத்துக் கொண்டு போகிறான்.  அவ்வளவுதான் நம்ம கதி என்று கதிகலங்கி எல்லா தெய்வங்களையும் வேண்டிக் கொண்டேன்.

"கொஞ்சம் பொறு அந்தச் சென்நாய்க் கூட்டம் போனதும் பத்தே நிமிஷத்தில் மெயின் பாதையை அடைந்து விடுவோம்.  அங்கிருந்து கொஞ்ச தூரம் பொடி நடையாக நடந்தால், ஸ்ரீ வராஹா நரசிம்மர் சன்னதியை அடைந்துவிடலாம்.  பிறகு பயமே இல்லை" என்று சர்வ சாதாரணமாக சொல்லிவிட்டு, ஒரு பாறையின் இடுக்கில் என்னை உட்கார வைத்தான்.

அந்தச் செந்நாய்கள் எப்போது அங்கிருந்து போகும்?  நாம் எப்போது மெயின் ரோட்டிற்குப் போய்ச் சேர்வது? ஏதோ சந்தனக் காட்டில் முன்பு மாட்டிக் கொண்டு விட்டது போல் ஓர் அளப்பரிய கற்பனையில் தேவயில்லாமல் நொந்து போய்க் கொண்டிருந்தேன்.
 
அந்தச் சமயத்தில் கூட என் கையிலிருந்த அகஸ்தியர் ஜீவ நாடியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றவில்லை.  இன்னும் உண்மையைச் சொல்லப் போனால் அகத்தியரால் தானே எனக்கு இவ்வளவு தர்மசங்கடங்களும் ஏற்பட்டது என்று அவர் மீது தீராத கோபம் கலந்த வருத்தம் இருந்ததால் மனது, நாடியைப் படிக்க லயிக்கவில்லை.

என்னைப் பாறையிடுக்கில் உட்கார வைத்துவிட்டு, அவன் மட்டும் அருகிலிருந்த சிறு மரத்தின் மீது விறு விறு என்று ஏறினான்.  சுற்றும் முற்றும் பார்த்தான்.  அவனுக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை.  திடீரென்று நாய் ஊளை இடுவதுபோல் கத்தினான்.   இந்த "கத்தல்" இனிமையாக எனக்கு தென்படவில்லை.  ஏதோ ஒரு அபாயத்தைக் கைதட்டிப் பக்கத்தில் கூப்பிடுவது போல் இருந்தது.  சரியான காட்டுவாசியிடம் மாட்டிக்கொண்ட நாகரீகமான மனிதன் போல் சினிமாவில் காட்டுவார்களே அந்த நிலையில் அப்போது நானிருந்தேன் என்பது தான் உண்மை.

திரும்ப திரும்ப அதே ஊளைக் குரலை விட்டு விட்டுக் கத்திக் கொண்டிருந்தான் அவன்.  இதற்கு என்ன அர்த்தம் என்று எனக்குப் புரியவில்லை.  அவன் சென்நாயைத் தன் பக்கம் கூப்பிட்டு வசியபபடுத்துகிறானா? இல்லை விரட்டுகிறானா, இல்லை அந்த நாய்களின் பரிபாஷயோடு போகிறானா என்று சுத்தமாகத் தெரியவில்லை.

இவன் ஆட்டிடயனா? இல்லை செந்நாய் இடையனா? என்று பயம் வந்துவிட்டது.

இதெல்லாம் அகத்தியரிடம் கேட்டுவிடுவதுதான் உத்தமம் என்றெண்ணி கைப் பையிலுள்ள "ஜிப்பை" த் திறந்து அகஸ்தியர் ஜீவ நாடியைப் பிரிக்க முயன்றேன்.

சட்டென்று என் முன், அந்தச் சிறு மரத்திலிருந்து குதித்த அந்த ஆட்டிடையன் என் கையைப் பிடித்துத் தர தரவென்று இழுத்துக் கொண்டு ஓடினான்.  என்ன நடந்தது என்பதை நான் புரிந்து கொள்ளும் முன்பே, அந்தச் செந்நாய் இருந்த இடத்தைத் தாண்டிவிட்டோம்.  ஒரு குறிப்பிட்ட தூரம் வந்த பின்னர் "நீ இப்படிப் போ.  ஐம்பது அடி தூரத்தில் பாதை வரும்.  அந்தப் பாதை வழியே நேராக மலை மேல் ஏறினால் ஸ்ரீ ஜ்வால நரசிம்ம கோயில் வரும்" என்று தெலுங்கில் சொன்னவன், பின்பு வேகமாக எங்கோ ஓடினான்! அதன் பின்னர் அவனைக் காணவில்லை.

சித்தன் அருள்.............. தொடரும்!

3 comments:

 1. அந்த ஆட்டிடையன் அகஸ்தியரரா இல்லை சாட்சாத் அந்த நரசிம்மமூர்த்தியா?.
  விடையை அறிய ஆவலுடன் காத்து இருக்கிறோம் அடுத்த வியாழன் வரை!!!
  ***ஓம் அகத்திசாய நமஹ***

  ReplyDelete
 2. வந்தவர் நரசிம்ஹரோ, அல்லது சித்தரோ !!!!!!!!!!!

  ReplyDelete
 3. எனக்கு வேறு ஏதோ ஒரு தனிப்பட்ட உலகத்திற்கு இட்டுச் செல்வது போல் உள்ளது. அசாதாரண உலகம் அப்பா இது என தோன்றுகிறது.

  ReplyDelete