​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 24 January 2013

சித்தன் அருள் - 108


எனது தாய் கோடிக்கணக்கில் ஸ்ரீராமஜயம் தினம் தினம் எழுதியதும், தினமும் தாமிரபரணி நதிக்கு விடியற்காலையில் குடத்தைத் தூக்கி பல மைல்கள் நடந்து அந்த ஜலத்தைக் கொண்டு பெருமாளுக்கு அபிஷேகத்திர்க்குக் கொடுத்த புண்ணியமும் தான் என் வாழ்க்கைக்குள் அகஸ்தியர் வந்திருக்கிறார் என எண்ணிக் கொள்வேன்.

முரட்டுத் தனமாகவும், தெய்வ நம்பிக்கை அற்றும், விதண்டா வாதங்களைப் பேசியும், எதெல்லாம் படிக்கக் கூடாதோ அதெல்லாம் படித்துப் பக்தி என்பதை அடியோடு தொலைத்து வாழ்ந்து கொண்டிருந்த எனக்கு அகஸ்தியர் நாடி கிடைத்த பிறகுதான் வாழ்க்கையின் திசை மாறியது.

இத்தனை நாட்களையும் அநியாயமாகப் பாழாக்கி விட்டோமோ என்று பதறிப் பதறித் துடித்தேன் என்பதெல்லாம் பழங்கதை.  ஆனால் அனுமனைத் தரிசனம் செய்தது, ராகவேந்திரரைத் தரிசனம் செய்தது, மலைக் கோயிலில் சிவபெருமானுக்கு அபிஷேகத்தை மறைமுகமாக காதில் கேட்டுச் சந்தோஷப்பட்டது, இன்னும் இது போல பல்வேறு, வெளியில் சொல்ல முடியாத சம்பவங்களைக் கண்டது, அனுபவித்தது எல்லாமே இதனைப் படித்து வருகின்ற ஒருவர் கூட முழுமையாக நம்ப மாட்டார்கள்.  அவ்வளவும் பொய் என்று எரிச்சல் படுவார்கள்.  பலருக்கு இதனைப் படிக்கவே பிடித்தமிருக்கது.  கலி காலத்தில் இதெல்லாம் நடக்குமா? இதென்ன "த்ரேதாயுகமா" என்று வெறுப்போடு கேள்வியும் கேட்பார்கள்.

இப்படியெல்லாம் நினைக்கிறவர்கள், பகுத்தறிவு இயக்கத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் ஆச்சரியமில்லை.  ஆனால் ஆன்மீகவாதிகள் தெய்வத்தையும் தானியங்களையும் அன்றாடம் வணங்குகிறவர்கள் தான் இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்கிறார்கள் அல்லது கேட்ப்பார்கள்.

பகுத்தறிவுவாதிகளை "சட்டென்று" நம்பிவிடலாம்.  ஆனால் ஆன்மீகத்தில் பற்று கொண்டிருப்பவர்களை மட்டும் நம்புவது கடினம்.  அவர்களைச் சமாதானப்படுத்தி என்னை நல்லவனாகக் காட்டிக் கொள்வது மிக மிகக் கஷ்டம்.

அன்றைக்கு அஹோபில மலையில் சென்ற பொது எனக்கு கிடைத்த அனுபவத்தை அப்படியே எல்லோர்கிட்டேயும் சொல்லவேண்டும் என்ற ஆசைதான்.  ஆனால் அகஸ்தியர் இதற்கு இடம் கொடுக்காமல் என்னைக் கட்டுப்படுத்தி வைத்திருந்தார்.  இதனால் நான் மெல்லவும் முடியாமல் சொல்லவும் முடியாமல் தவித்ததும் உண்மை.  இல்லையெனில் என் பெற்றோரே என் வார்த்தையை நம்பாமல் இருந்திருப்பார்களா?

லக்ஷ்மி நரசிம்மரின் தரிசனம் கோயிலில் கிடைக்கலாம்.  ஆனால் நேரிடையாகக் கிடைத்தால் நாம் ஓடிப் போய் விடுவோம்.  சிம்மத்தைச் ஸ்வப்னமாகக் கண்டாலே கெடுதல் என்று பயப்படுகின்ற நமக்கு உயிருள்ள சிங்கமாக எதிரில் வந்தால் அது லக்ஷ்மி நரசிம்மர் என்று எண்ணி, காலில் விழுந்து வணங்கவா தைரியம் வரும்?  இல்லை, நமக்கு என்ன ஞானக்கண்ணா? இவர் லக்ஷ்மி நரசிம்மர், நமக்கு அருள்பாலிக்க வந்திருக்கிறார் என்று கைக்கூப்பிட...

என்றெல்லாம் மலைக் கோயிலுக்குச் செல்லும் பாதையில் உட்கார்ந்து யோசித்தேன்.  ஒரு வேளை சதா சர்வ காலமும் அஹோபிலத்தையே நினைத்துக் கொண்டிருந்ததால் வருவோர், போவோர் எல்லோரும் என் கண்ணுக்கு லக்ஷ்மி நரசிம்மரே நேரடியாக மற்றவர் வடிவில் வந்திருக்கலாம்.  யாரோ, மனிதாபிமான உள்ளத்தோடு கொடுத்த பிரசாதம் பெருமாளே எனக்குக் கொடுத்தனுப்பிய பிரசாதமாகத் தோன்றி இருக்கலாம் என்றும் நினைக்கத் தோன்றியது.

அகஸ்தியர் ஜீவநாடி மூலம் சின்னச் சின்ன விஷயம் கூட எனக்குப் பெரிதாகப்பட்டது.  அதே சமயம் நாடி படித்த பலருக்கு நிறைய அதிசயங்களும் நடந்ததாக அவர்கள் சொல்லும் போது சந்தோஷமும் ஏற்பட்டது.  சிலருக்கு நாடி படித்தும் அதன் நற்பலன் சொல்லப்பட்ட காலத்தில் நடக்காமல் போனது கண்டு வருத்தப்பட்டதும் உண்டு.  எதற்காக "அகஸ்தியர்" என்னிடம் வந்தார்? என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் சரியாகக் கிடைக்கவில்லை.  சரி நல்லதோ கெட்டதோ, இதுவரை நாடி படித்ததும், மற்றவர்களுக்குச் சொன்னதும் போதும், இனிமேல் யாருக்கும் படிக்க வேண்டாம்.  பார்க்கவும் வேண்டாம்.  இதனால் கெட்ட பெயர் தான் அதிகமாகிறது.  எனக்கும் இதுதான் பிழைப்பு என்றில்லை.  ஆண்டவன் புண்ணியத்தில் வேறு வேலை இருக்கிறது.  இந்த அஹோபில யாத்திரையோடு தரிசனத்தை முடித்துக் கொள்வோம்.  அதோடு நாடியை அஹோபில மலையில் நரசிம்ம சுவாமியின் சன்னதியில் யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டு சொல்லாமல் கொள்ளாமல் ஊருக்கு வந்து விடுவோம் என்று உறுதியாக முடிவெடுத்தேன்.

சுமார் ஒன்றரை மணி நேரம் திரும்பத் திரும்ப யோசித்து கடைசியாக "நாடியை" உக்கிர நரசிம்மர் சன்னதியில் வைத்துவிட்டு ஓடி வந்து விடுவது என்று முடிவெடுத்த போது...

மலை மேல் ஏறிக் கொண்டிருந்த இரு வைஷ்ணவப் பெரியவர்கள் என்னைக் கடந்து செல்லும் போது "இந்த மாதிரி முடிவெடுப்பதே தப்பு.  எல்லாம் நரசிம்மர் பார்த்துக் கொள்வார்" என்று தங்களுக்குள் உரத்த குரலில் பேசிக் கொண்டு சென்றார்கள்.  இது எனக்கு "சுளீர்" என்று சாட்டை அடி விழுந்தது போல் இருந்தது.  இதை ஓர் அசரீரி வாக்கு போல் எடுத்துக் கொள்ளலாமா என்று சபலம் வந்தது.  இருந்தாலும் எடுத்த முடிவை மாற்றக் கூடாது என்று உறுதியாக இருந்தேன்.

கையிலிருந்த ஜீவநாடியை ஒருமுறை நன்றாக ஆசையோடும் பாசத்தோடும் பக்தியோடும் பார்த்து கண்ணில் ஒற்றிக் கொண்டேன்.

எப்படி அகஸ்தியர் எனக்கு வந்தாரோ அப்படியே அகஸ்தியரை லக்ஷ்மி நரசிம்மர் சன்னதியில் வைத்து விடுவோம் என்ற எண்ணத்தோடு ஒரு முக்கியமான காரியத்தைச் சாதிக்கப் போகிறோம் என்ற தைரியத்தில் மலை மீது ஏறினேன்.

மலை மீது நரசிம்மர் சன்னதியை அடைந்ததும் அர்ச்சகர் வெளியே வந்தார்.

அர்ச்சனை செய்யணும்.

"செஞ்சுட்டாப் போச்சு" என்றவர் "கையிலே என்ன வச்சுண்டிருக்கேள்"

"நாடியைப்" பற்றிச் சொன்னேன்.

"அப்படியா இதுபற்றி கேள்விப்பட்டிருக்கேன்.  எனக்கும் தமிழ்நாடுதான்.  ஜீவநாடி கிடைக்கிறது ரொம்பக் கஷ்டமாச்சே" என்றவர் "அதை கொடுங்கோ பெருமாள் பாதத்திலே வச்சு அர்ச்சனை பண்ணித் தரேன்" என்றார் தாமாக.

"உங்களுக்கு ஆட்ச்சேபனை இல்லையே!"

"நன்னாச் சொன்னேள் போங்கோ, இன்னிக்கு கூட்டமில்லை, எனகென்னவோ உள் மனசிலே தோணிடுத்து.  அதனால் கேட்டேன்" என்றவர் மிகுந்த சந்தோஷமாக வாங்கிக் கொண்டார்.

என் மனதில் புத்திசாலித்தனமான ஒரு கெட்ட எண்ணம்.

"பேசாம அஞ்சோ பத்தோ அர்ச்சகரிடம் கொடுத்து இந்த நாடியை அங்கே வைத்து விடுங்கள்.  நாளைக்கு வந்து வாங்கிக் கொள்கிறேன்" என்று நைசாகப் பேசி, தப்பித்தேன், பிழைத்தேன் என்று ஓடிப் போய் விடலாம் என்று எண்ணினேன்.  "இது தப்புத்தான், அப்படி செய்யக் கூடாது" என்று என் உள்மனம் எச்சரிக்கை விடுத்தது.  இதற்கெல்லாம் மதிப்பு கொடுத்தால் நம்மால் எந்த காரியமும் எதிர்காலத்தில் செய்ய முடியாது என்று மனத்தைக் கடுமையாக்கிக் கொண்டேன்.

அர்ச்சனையில் என் மனம் நாடவில்லை.

நாடியை அங்கே வைத்து விட்டுச் சென்னைக்குத் திரும்பிட வேண்டும்.  முதலில் அர்ச்சகர் இதற்கு ஒத்துக் கொள்ள வேண்டும் என்றுதான் பிரார்த்தனை செய்து கொண்டேன்.

அர்ச்சனையை முடித்துக் கொண்டு பிரசாதத்தோடு வெளியே வந்தார்.  இருபது ரூபாயைத் தட்டில் போட்டு விட்டு நான் வாய் திறக்கும் முன்பு அவரே வாய் திறந்தார்.

"இன்னும் எத்தனை நாளைக்கு இங்கிருப்பீர்"

"நாளைக்கு கிளம்பலாம்னு நெனைக்கிறேன் (ஏனெனில் இரண்டு நாளைக்கு அஹோபிலத்தில் தங்கியிரு என்று ஏற்கனவே அகஸ்தியர் சொல்லியிருந்ததால் அதை மறைக்க முடியவில்லை.  உண்மை வெளி வந்துவிட்டது).

"சென்னையிலே எங்கு தங்கியிருக்கேள்?

உண்மையான விலாசத்தை சொன்னேன்.  பொய் சொல்ல முடியவில்லை.

"அப்படியா சந்தோஷம்" என்றவர் நரசிம்மரின் பாதத்தில் வைத்திருந்த "நாடி" யை எடுக்கப் போனார்.

அர்ச்சகரை அழைத்து, "இந்த நாடியை இரண்டு நாளைக்குப் பெருமாள் பாதத்தில் வைக்க முடியுமா?  நாளைக்கு மதியம் வந்து வாங்கிக்கிறேனே" என்றேன்.

"தப்ப நெனச்சுக்காதீங்கோ.  இங்கெல்லாம் பெருமாள் பதத்தில் வைக்கவே மாட்டா.  அப்படியே வைச்சாலும் உடனே எடுத்துக் கொடுத்துடுவா.  நான் வைச்சுக்க முடியாது.  அப்படியே வைச்சுட்டாலும், பின்னால் வர்ற அர்ச்சகர் அதைத் தூக்கிப் போட்டுடுவா" என்றார் பவ்யமாக.

இது எனக்குத் திருடனுக்குத் தேள் கொட்டிய மாதிரி இருந்தது.  அசட்டுச் சிரிப்போடு அர்ச்சகரிடமிருந்து நாடியை வாங்கிக் கொண்டேன்.  முதல் காரியமே தோல்வியாகிவிட்டது என்றாலும் யாருக்கும் தெரியாமல் எங்கேயாவது நாடியை வைத்து விடலாம்.  அல்லது கோயில் உண்டியலில் போட்டு விடலாம் என்று எண்ணத்தை மாற்றிக் கொண்டேன்.

சன்னதியை விட்டு வெளியே வந்தேன்.

மலை மீது கண்ணைச் சுழலவிட்டேன்.  அந்த மலைக்கு மேலே தானே நேற்று மாலை சில அபூர்வ தரிசனம் கிடைத்தது என்று நினைத்து அந்தத் திசைக்கு ஒரு நமஸ்காரம் செய்தேன்.

இன்னிக்கும் ஏதோ அதிசயம் நடக்கும் என்றாரே.  ஒன்றுமே நடக்கவில்லையே என்று என் மனம் அசை போட்டது.  இப்போது தானே காலை விடிந்திருக்கிறது.  இன்னும் பன்னிரெண்டு மணி நேரம் இருக்கிறதே.  பார்த்துக் கொள்ளலாம் என்று தேற்றிக் கொண்டேன்.

கோயில் பிரசாதத்தை வாங்கிக் காலைப் பசியைத் தீர்த்துக் கொண்டு இப்படியே மலையைச் சுற்றி வரலாமே என்று ஏதேதோ சிந்தனையோடு கால் போன போக்கில் நடக்க ஆரம்பித்தேன்.  இயற்கை செழிப்பான அந்த அஹோபில மலையில் பெரும் பாறைகள் குவிந்து கிடந்தன.  செடி கொடிகள் சுதந்திரமாக மூச்சு விட்டுக் கொண்டிருந்ததால் மகிழ்ச்சியின் உச்சக் கட்டத்தில் அவை தலையாட்டிக் கொண்டிருந்தன.

கல்லும் முள்ளும் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.  ஜாக்கிரதையாகக் கால் வைத்து நடக்க வேண்டும்.  அதுமட்டுமல்ல, கூடுமானவரை தனியாகச் செல்வதை விட கூட்டத்தோடு செல்வதுதான் உத்தமம்.

நான் மெதுவாக நிதானமாக அக்கம் பக்கத்தில் ஏதாவது கண்ணுக்குத் தென்படுகிறதா அல்லது காதில் விழுகிறதா என்று கூர்மையாகப் பார்த்துக் கொண்டே சென்றதால் எனக்குப் பின்னால் வந்து கொண்டிருந்தவர்கள் என்னை வேடிக்கை பார்த்துக் கொண்டே சென்றனர்.

வேக வேகமாகவும் பயந்தும் கையை இறுக்கிப் பிடித்துக் கொண்டும் அவர்கள் சென்றது, ஆச்சர்யமாக இருந்தது.  எங்கு போகிறார்கள் எந்தத் தரிசனம் காணப் போகிறார்கள் என்பது எனக்குத் தெரியவில்லை.  அவர்களை அழைத்துக் கேட்கவும் துணிவில்லை.  அவர்கள் பின்னால் நாமும் போவோமே என்று சென்று கொண்டிருந்த போது சட்டென்று நின்று திரும்பிப் பார்த்தேன்.  எனக்கு முன்னால் கண்ணுக்கெட்டிய தூரத்தில் எந்த மனித நடமாட்டமும் இல்லை.  எனக்கு பின்னால் யாரும் வருகிற மாதிரியும் தெரியவில்லை.

சட்டென்று ஒரு பயம் திடீரென்று ஜுரம் வந்து குளிர்ந்து உடல் நடுங்கியது போல் வந்தது.

திரும்பி வேகமாகப் போய் விடலாமா என்று கூட எண்ணினேன்.

அப்போது

பக்கத்துப் பாறைக்குப் பின்னாலிருந்து "நரசிம்ம நரசிம்ம" என்ற குரல்மட்டும் என் காதில் கேட்டது.

சித்தன் அருள் .......... தொடரும்! 

5 comments:

  1. We are blessed to read Sidhdhan Arul on every wednesday morning.

    ReplyDelete
    Replies
    1. வணக்கம் சரவணன்!

      குருவுக்கு மரியாதையை செய்யும் விதமாக வியாழன் அன்று தொகுத்தளிக்கிறேன். புதன் அல்ல. நீங்கள் எங்கு இருக்கிறீர்கள் என்று தெரியவில்லை. மேலை நாட்டில் இருந்தால் அங்கு புதன் கிழமையாக இருக்குமோ! வலைபூவுக்கு வந்து அகத்தியர் உபதேசத்தை படித்துக் கொண்டு வருவதற்கு மிக்க நன்றி!

      கார்த்திகேயன்

      Delete
  2. thanks for sharing,
    ஸ்ரீ சிற்றம்பலேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக புகைப்படங்கள்
    http://www.spiritualcbe.blogspot.in/2013/01/blog-post.html

    ReplyDelete
  3. ஸ்ரீ சிற்றம்பலேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகத்தின் போது
    கருடலோக சித்தர்களின் சஞ்சாரம்
    http://www.spiritualcbe.blogspot.in/2013/01/blog-post.html

    ReplyDelete
  4. Vanakam ayya,
    Thaipoosam is here. How about a special article on that day?

    ReplyDelete