​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 17 January 2013

சித்தன் அருள் - 107



எத்தனை முறைகள் பிரார்த்தனை செய்தும் அகஸ்தியரிடமிருந்து எந்தச் செய்தியும் கிடைக்கவில்லை.  அகஸ்தியர் கோபமாக இருக்கிறார்.  அவரது கோபம் தணியட்டும் என்று நானும் அதோடு விட்டுவிட்டேன்.

சீக்கிரம் எழுந்துவிட்டதால் மலை மீதேறி நடந்தேன்.  போகும் பொழுதே லக்ஷ்மி நரசிம்மரைப் பற்றி எனக்குத் தெரிந்த ஸ்லோகங்களை எல்லாம் சொல்லிக் கொண்டே போனேன்.  பயத்தில் என்ன ஸ்லோகம் சொன்னேன்.  அதில் எத்தனை தப்பிதம் இருந்தது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியவில்லை.

மூலவர் சன்னதியை அடைந்தேன்.

திருப்பதியில் என் தங்கைகளுக்குத் திருமணம் நடத்தி வைப்பதாக பகவான் முன்பு வேண்டிக்கொண்டேன்.  வெள்ளிக்கிழமை அன்றும் அல்லது சுவாதி நட்சத்திரம் அன்றும் லக்ஷ்மி நரசிம்ஹர் சன்னதியில் பானகம் நைவேத்யம் செய்வதாக வேண்டிக் கொண்டேன்.  இனிமேல் ஆன்மீக விஷயத்தில் அகஸ்தியர் ஜீவநாடியில் என்ன சொன்னாலும் அதைக் கூடுமானவரை யாரிடமும் வெளியே சொல்லமாட்டேன் என்றும் சன்னதியின் முன்பு உறுதியெடுத்துக் கொண்டேன்.

இவையெல்லாம் என்னையும் அறியாமல் வெளியே வந்தன.  அத்தனையும் சொல்லி ஆனந்தமாகப் பிரார்த்தனையைச் செய்து முடித்து சாஷ்டாங்கமாகச் சேவித்து விட்டுச் சன்னதியை விட்டு வெளியே வந்த போது நேற்று எனக்குத் துணையாக வந்தவரைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும் என்று ஆசை வந்தது.

அங்குள்ள அர்ச்சகரிடம் மாலோல நரசிம்மாச்சாரியைப் பற்றி அடையாளம் சொல்லி "அவர் மடப்பள்ளியில் இருக்கிறாரா?" என்று கேட்டேன்.

"அந்த மாதிரி யாரும் இங்கு இல்லை.  மடப்பள்ளியிலும் வேலைப் பார்க்கவில்லை" என்று பதில் கிடைத்தது.  அங்கிருந்த பலரும் இதே பதிலைத்தான் சொன்னார்கள்.

"யார் அவர் எனக்காக ஏன் உதவி செய்யணும்?" என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன்.  ஒரு வேளை பெருமானே மனித வடிவில் வந்து உதவி செய்தாரா?

சரி! அதுதான் போகட்டும்.  வானத்தில் தூம கேது தோன்றியதே.  அதை பற்றியாவது அகஸ்தியரிடம் அருள் வாக்கு கேட்க வேண்டும் என்றெண்ணி தீர்க்கமாகப் பிரார்த்தனை செய்து கையோடு கொண்டு வந்திருந்த ஜீவ நாடியைப் புரட்டினேன்.

"ஒளிமறை விண்மீன் சுவாதி உதித்திட்ட வேளையிதில் விலையில்லா வேதத்தின் பெருமைதனைத் தன்னுள்ளே அடக்கி வைத்திருக்கும் சிங்கமுகன் குடிலின் கருவறை முன்பு நாட்டின் எதிர்கால நிகழ்வுகளை யாம் விளக்குவோம்.  முடியுடைய விதவைப் பெண்ணவள் முடியிழந்து மூலையில் அமருங்காலம், நெருங்கியதே.  தலை பல உருளும்.  தலைமை மாறும்.  பேதமில்லாத கூட்டணியே பின்னர் நாட்டை ஆளும்.  பின் அங்கொரு பிளவு வரும்  பேதை மைந்தனால். இன்னவளே இந்நாட்டின் முதல் அமைச்சராகப் பதவி ஏற்பாள்" என்று அகஸ்தியர் "விண்ணிலே தோன்றிய அந்த தூம கேதுவுக்கும் ஓர் காரணமுண்டு பொறுத்திரு.  அகஸ்தியன் யாம் விளக்கும்வரை ஜெபித்திரு எண்ணி முடிப்பார் கரும் புள்ளியோடு " என்று அரையும் குறையுமாகச் சொல்லி முடித்தார் அகஸ்தியர்.

ஏதோ இந்த மட்டிலுமாவது அகஸ்தியர் வாய் திறந்து சொன்னாரே என்று நான் சந்தோஷப்பட்டேன்.  காலையில் வாய் திறக்காத அகஸ்தியரின் கோபம் தணிந்து விட்டதாக எண்ணிக் கொண்டேன்.

அகஸ்தியர் சொன்ன விஷயத்தை என்னால் கொஞ்சம் கிரகிக்க முடிந்தது.  ஆனால் முழுமையாக எதையும் தெரிந்துகொள்ள இயலவில்லை.  மேலும் மண்டையைப் போட்டுக் குழப்பிக் கொள்ள வேண்டாம் என்று அதோடு விட்டுவிட்டேன்.

எல்லா நரசிம்ம மூர்த்திகளையும் நிதானமாகத் தரிசனம் செய்து விட்டு மெதுவாக மலையிலிருந்து கீழே இறங்கிக் கொண்டிருந்த போது என் உள் மனதில் ஏதோ ஒரு சிறு குறை இருப்பது போல் தென்பட்டது.

ஹிரண்ய கசிபுவைக் கொல்லக் கல் தூணிலிருந்து வெளிப்பட்ட நரசிம்ம சுவாமியின் இடத்தில் வைக்கப்பட்ட அந்த ஸ்தம்பத்திற்கு சென்றேன்.  அகஸ்தியர் நாடியை அந்த இடத்தில் வைத்துப் பிரார்த்தனை செய்து எதேச்சையாக நாடியைப் புரட்டிய பொழுது,

"இரு நாள்கள் இங்கிருந்து சிங்கமுகத்தோனை தரிசனம் செய்.  சில வியத்தகு சம்பவங்கள் நடக்கும்.  கண்டு பின் ஏகு இருப்பிடம் நோக்கி" என்று எனக்குக் கட்டளையிட்டார்.

அன்றிரவே சென்னைக்குத் திரும்பவேண்டும் என்று திட்டமிட்டிருந்த நான் அங்கேயே மேலும் இரண்டு நாள்களுக்குத் தங்கிவிட்டேன்.  கீழே இறங்காமல் அன்று சாயங்காலம் வரை மலையைச் சுற்றி வந்தேன்.

மலைக்கு மேல் பிரம்மாண்டமாய் ஒரு மரம்.  கிளைகள் நெருக்கமாகவும் இலைகள் மிக அதிகமாக நெருக்கமாகவும் இருந்தது. மரத்தின் அடியில் வெயிலே தெரியவில்லை.  போதாகுறைக்கு ஜிலு ஜிலுவென்று காற்று அவ்வப்போது வீசியதால் மனதிற்கு மிகவும் தெம்பாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.

ஒரு துண்டை விரித்து மரத்திற்கடியில் போட்டுக் கொஞ்சநேரம் கண் அயரலாம் என்று படுத்துவிட்டேன்.  அதிகமாக எதுவும் சாப்பிடாததினாலும், உடல் அசதி காரணமாகவும் நன்றாகத் தூங்கிவிட்டேன் போலும்.

கண் விழித்துப் பார்க்கும் பொழுது வானத்தில் சந்திரன் மெல்ல எழும்பிக் கொண்டிருந்தான்.  கையில் கட்டிய வாட்சில் மணி ஏழு என்று காட்டியது.  சுற்றும் முற்றும் பார்த்தேன்.  மனித நடமாட்டமே தென்படவில்லை.  மூலவர் சன்னதியைத் தாண்டி தனியாக நான் மட்டும் மேலும் சென்றதினால் யாரும் என்னைக் கண்டு கொள்ளவும் இல்லை, தட்டி எழுப்பவும் இல்லை.

அந்த அமைதியான சூழ்நிலை மனதிற்குப் பிடித்திருந்ததாலும் பக்கத்து மலையில் எங்கோ மிருகங்களின் சப்தம் அப்போது காதில் விழுந்ததினால் சட்டென்று அடிவயிற்றில் கிலி பிடித்தது.  நேற்றாவது யாரோ ஒரு புண்ணியவான் கொடிய விலங்கின் பிடியிலிருந்து காப்பாற்றினான்.  அது தெய்வச் செயல் தான், இல்லையெனில் என் பெற்றோர் செய்த புண்ணியம் தான்.

ஆனால்,

இன்றைக்கு யார் எனக்குத் துணை வருவார்?  அகால நேரத்தில் தன்னந்தனியாக எப்படி மலையிலிருந்து கீழே இறங்குவது என்ற பயம், நிமிடத்திற்கு நிமிடம் அதிகரித்தது.  வேறு வழியில்லை.  இறங்கித்தான் ஆகவேண்டும் என்று எண்ணிச் சுதாரித்தபோது.

என் கண்ணெதிரில் சுமார் இருநூறு அடி தூரத்தில் ஒரு சிங்கம் தன் நாலைந்து குட்டிகளோடு விளையாடிக் கொண்டிருப்பது போல் ஒரு தோற்றம்.  அது உண்மையில் சிங்கம் தானா? இல்லை என்னுடைய மனப் பிரம்மையா அல்லது எதையோ ஒன்றை நினைத்து நானே செய்து கொண்டிருக்கும் கற்பனையா? என்று எனக்கே தெரியவில்லை.

அது என்னை நோக்கி வந்தால் அதனிடமிருந்து எப்படித் தப்பித்துக் கொள்வது என்றும் அவசர அவசரமாக யோசித்தேன்.  விறு விறுவென்று என்னால் மரத்தின் மீதேரவும் முடியாது.  அப்படி ஏறுகின்றபடி மரத்தில் எந்தவித முண்டோ அல்லது கிளைகளோ கிடையாது.

பத்து நிமிஷம் ஜீவமரணப் போராட்டம் நிகழ்ந்தது.  என்ன நடக்கும் என்று தெரிய அகஸ்தியர் நாடி பார்க்கவும் மனம் விரும்பவில்லை.  அதன் கண்ணுக்குத் தெரியாமல் வேகமாகப் படி இறங்கிட வேண்டியதுதான் என்று அதற்காக நான் தயாராக இருக்கும் பொழுது இன்னொரு அதிசய நிகழ்ச்சி நடந்தது.

ஒரு எட்டு வயது பாலகன் தைரியமாக அந்தச் சிங்கத்தை நோக்கிச் செல்கிறான்.  எந்தவித ஆயுதமும் இன்றி.  அவனை கண்டதும் பாய்ந்து வர வேண்டிய அந்தச் சிங்கம் எந்தவித சப்தமும் இல்லாமல் அமைதியாகக் காலை நீட்டிப் படுத்து விடுகிறது.  அதன் சிங்கக் குட்டிகளைத் தடவிக் கொடுக்கிறான்.  நாய் குட்டி போல் அவனிடம் விளையாடுகிறது.

சிறிது நாழிகைக்குப் பின் அந்தச் சிங்கத்தின் நெற்றியில் கழுத்தில் முதுகில் அந்தச் சிறுவன் தடவிக் கொடுக்கிறான்.  அது பேசாமல் இருக்கிறது.  இரண்டு நிமிடம் இந்தக் காட்சி.

பின்பு அந்தச் சிங்கத்தையும் காணோம்.  குட்டிகளையும் காணோம்.  அதனைத் தடவிக் கொடுத்த அந்தப் பாலகனையும் காணோம்.  ஒரு மௌன நாடகம் நடந்தது போல் இந்தக் காட்சி வெகுநேரம் மனதில் நின்றது.  கண்ணை மிக நன்றாகக் கசக்கிக் கொண்டு அந்த இடத்தை மீண்டும் பார்த்தேன்.

பௌர்ணமி நிலவின் அந்த வெளிச்சத்தில் வெறும் மரங்களும் அதன் நிழல்களும் தான் மீதமிருந்தது.  அப்படியானால் நான் இதுவரை கண்டது எல்லாம் வெறும் சாயங்கால பீதியினால் ஏற்பட்ட கனவு என்று தெரிந்தது.  நேற்றைக்கு "ஓநாய்" இன்றைக்கு சிங்கம்.  நாளைக்கு என்ன? என்று யோசித்துப் பார்த்தேன்.  என் கண்ணிற்கு ஒன்றும் தெரியவில்லை.

இது உண்மையா அல்லது பயத்தினால் நான் கண்ட கனவா? என்பதைப் பின்னர் அகஸ்தியரிடம் கேட்டுக் கொள்ளலாம் என மலையிலிருந்து மனதை திடப்படுத்திக் கொண்டு இறங்க ஆரம்பித்தேன்.  இன்றைக்குக் கூட்டம் அதிகமாக இருந்தது.  எல்லோருமே பெருமாளைச் சேவித்து விட்டுக் கூட்டம் கூட்டமாக கீழே இறங்கிக் கொண்டிருந்ததால் நேற்றைக்கு மாதிரி பயம் இல்லை.  ஒன்றுமே சாப்பிடாமல், காலையில் இரண்டு பழத்தை மாத்திரம் சாப்பிட்டிருந்ததால் பசி மட்டும் வயிற்றைக் கிள்ளியது.

நேற்றிரவு கிடைத்த பிரசாதம் இன்றைக்கும் கிடைத்தால் ஒரு வெட்டு வெட்டலாம் என்று நினைத்தேன்.  ஆனால் பிரசாதம் கிடைக்கவில்லை.  கீழ் அஹோபிலத்தில் உள்ள ஒரு அய்யங்கார் ஓட்டலில் கிடைத்ததை உண்டுவிட்டு அறைக்கு சென்றேன்.

மறுநாள் விடியற்காலையில் வழக்கம் போல் எழுந்து சுத்தம் செய்து கொண்டு அகஸ்தியர் ஜீவ நாடியைப் பிரித்து நேற்று கண்ட சிங்கக் காட்சியைப் பற்றிக் கேட்டேன்.  இதற்கு அகஸ்தியர் ஒரு நீண்ட வரலாற்றையே சொன்னார்.

"நேற்று நாள் மிகவும் முக்கிய நாள்.  நட்சத்திரம் விண்மீன் சுவாதி.  பௌர்ணமி நேரம்.  இதே நட்சத்திரம் பௌர்ணமியன்று மாலை நேரத்தில் தான் நரசிங்கப் பெருமாள் அவதாரம் எடுத்து ஹிரண்ய கசிபுவை முக்தி அடையச் செய்த நாள்.

எனது மைந்தனாக நீ இருப்பதால் அத்தகைய அரிய  காட்சியைத் தூரத்தில் இருந்து பார்க்க வைத்தோம்.  நேற்று உன் கண்ணில் கண்ட சிங்கத்திலே பெருமாள் திருநாராயணன் உறைந்திருக்கிறார்.

அவரோடு விளையாடிய சிங்கக் குட்டிகள் எல்லாம் நான்கு வேதங்கள்.  அந்தச் சிங்கத்தை நோக்கி சென்ற பாலகன் வேறு யாருமில்லை.  ஹிரண்ய கசிபுவின் குமாரனான அந்தப் பிரஹலாதன் தான்; முகத்தை நீ பார்க்க முடியாது.  காரணம் இறைவனை நேரிடையாகக் கண்ணில் காணுகின்ற பாக்கியம் மனிதர்கள் எல்லோருக்கும் கிடைக்காது.  அப்படிப்பட்ட காட்ச்சியைப் பெற்ற மனிதர்கள், மறுவினாடி பூஉலகில் உயிரோடு இருக்கமாட்டார்கள்.  ஒன்று மோட்சத்திற்கு சென்று இருக்க வேண்டும்.  இல்லையெனில் கண் பார்வையை இழந்து தன வாழ்நாட்கள் முடியும் வரை கண்ணிழந்து கபோதியாகத்தான் வாழவேண்டி இருக்கும்.

என் மைந்தன் என்பதால் யாம் பெற்ற பேற்றினை நீயும் பெறுக என்று உன்னைச் சுற்றி அரண்போல் "காப்பு" வைத்து திருமாலிடம் வேண்டி இத்தகைய தரிசனத்தை கனவில் நடப்பது போல் காட்டச் சொன்னோம்.  திருமாலும் என் வேண்டுகோளுக்கு மனம் இறங்கினார்.  அதனால் தான் அத்தகையதொரு தரிசனம் உனக்கு மறை முகமாகக் கிடைத்தது.

எல்லாத் தேவர்களும் லக்ஷ்மி நரசிம்மரிடம் "ஹிரண்ய வதம்" எப்படி நடந்தது என்று அடிக்கடி கேட்பதும், லக்ஷ்மி நரசிம்மரும் அதைப் பின்னர் தேவர்களுக்கு நடித்துக் காட்டுவதும் வழக்கம்.  ஆனால் அகத்தியன் அத்தகைய காட்சியைக் காண விரும்பவில்லை.  அதனால் கண்ணாடி வழியாகக் காட்ச்சிப் பொருளைக் காட்டுவது போல் லக்ஷ்மி நரசிம்மர் அருள் பாலித்தார்.  இந்தக் காட்ச்சியை நீ யாரிடம் சொன்னாலும் யாரும் நம்பமாட்டார்கள்.  உனக்குப் பைத்தியம் பிடித்து விட்டதாக முத்திரைக் குத்தலாம்.  அல்லது அளவுக்கு மீறி கற்பனையைக் கதையாகத் திரிக்கிறான் என்று உன்னைக் கேலி செய்வார்கள்.  எனவே இதைப் பற்றி யாரிடமும் இப்போதைக்குச் சொல்ல வேண்டாம்.  சமயம் வரும் பொழுது இதை யாமே அறிவிக்க வைப்போம்" என்ற நீண்ட கதையைச் சொல்லி "இன்னும் இரண்டு நாட்களும் இரண்டு விதமான அதிசயங்கள் இந்த மலையில் நிகழும்.  அதையும் கண்டுவிட்ட பின் ஏகுக தாய்க்குடில் நோக்கி" என்றார். நான் அகத்தியரைக் கைகூப்பித் தொழுதேன்.

அடுத்த சில மணி நேரத்தில் மேல் அஹோபிலம் மலையில் ஏறிக் கொண்டிருந்தேன்.  என்ன அதிசயம் இன்றைக்கு, நடக்கப் போகிறதோ என்ற ஆசையில்.

சித்தன் அருள் ............. தொடரும்!

4 comments:

  1. ஒவ்வொரு முறை படிக்கும் பொழுதும் என் மனதானது ஈடில்லா மகிழ்ச்சி அடைகிறது. பிரமிப்பில் ஆழ்கிறது.
    அகத்தியர் அடி போற்றி !

    என்னிடம் சில கேள்விகள் .
    நீங்கள் யார்? எங்கு இருக்கிறீரகள்?
    திரு அனுமத்தாசன் கட்டுரைகளை எங்கிருந்து பெறுகிறீர்கள்?

    அகஸ்தியர் அருள் பெற என் மனம் துடிக்கிறது.
    தயவு செய்து உதவுங்கள்!

    நன்றி
    சுபி

    ReplyDelete
    Replies
    1. வணக்கம்!

      என் நண்பர் பகிர்ந்துகொண்டதை உங்கள் அனைவருடன் பகிர்ந்துகொள்கிறேன். என் பெயர் கார்த்திகேயன். திருநெல்வேலியிலும் கொயம்பத்தூரிலும் வசிப்பவன்.

      நீங்கள் அகத்தியர் அருள் பெற நான் என்ன செய்ய முடியும்? நீங்கள் தான் அவரை நினைத்து த்யானத்தில் இருக்க வேண்டும். அவர் அருளால் என்வரையில் முடிந்தது என்பது அவர் அருளை தொகுப்பது மட்டும் தான்.

      நன்றி
      கார்த்திகேயன்

      Delete
  2. Siramam paramal thoguthu engalukku vazhainghi kondirukkum ungalukku nandrigal pala pala. Agathiyar arul pooranamai kidaikkattum - M.S.Ravi

    ReplyDelete
  3. Sir, Please give your Address and Phone No.....my mail id ramesh.chin@gmail.com

    ReplyDelete