"ஜ்வால நரசிம்மர் கோயில் வரும்" என்று தெலுங்கில் சொல்லிவிட்டுக் காணாமல் போன அந்த ஆட்டிடயனைப் பற்றிப் பின்னர் நான் கவலைப்படவில்லை.
எப்படியாவது அந்த இக்கட்டான நிலையிலிருந்து தப்பிவிட வேண்டும். நடுகாட்டில், துஷ்ட மிருகங்களுக்கு மத்தியில் மாட்டிக் கொண்டு பட்ட பாடு போதும்" என்ற எண்ணம்தான் துளிர் விட்டதே தவிர, அந்த ஆட்டிடையன் யாரோ என்று அப்படியே விட்டுவிட்டேன்.
கொஞ்ச தூரம் சென்றதும், ஜாவால நரசிம்மரின் கோயிலுக்கு செல்லும் பாதை தென்பட்டது.
"அப்பாடி" என்று பெருமூச்சு விட்டேன். என் கண்ணுக்கு எதிரே கூட்டம் கூட்டமாக ஜ்வாலா நரசிம்மரைத் தரிசிக்க பக்தர்கள் சென்று கொண்டிருந்தது தெரிந்தது. மிகவும் வேக வேகமாக நடந்த நான் இப்போது நிதானமாக நடக்கத் தொடங்கினேன்.
இந்த அகோபிலம் வந்த பிறகு சம்பந்தா சம்பந்தமில்லாத சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வந்தன. இதெல்லாம் அதிசயம் என்று எண்ணிக் கொள்வதா? இல்லை கர்மவினை என்று சமாதானம் செய்து கொள்வதா? என்று தெரியாமல் சர்வமும் லக்ஷ்மி நரசிம்மருக்கே சமர்ப்பணம் என்று வேறு சிந்தனை செய்யாமல் விட்டுவிட்டேன்.
அகோபிலம் வரும் வழியில் நள்ளிரவில் நான் ஆகாயத்தில் கண்ட "தூமகேது" இதனை ஒட்டி வெளிவந்த அகஸ்தியர் நாடி வாக்கியங்கள் எல்லாம் ஏதோ ஒன்று இந்தப் பாரத தேசத்தில் நிகழப் போகிறது என்பது மட்டும் உண்மை என்று உள் மனதில் உறுத்திக் கொண்டிருந்தது.
எப்படியோ திருப்பதியில் அகோபில மடத்து மானேஜரிடம் கொடுத்த வாக்குறுதியை இந்த அகோபில மட விஜயம் மூலம் காப்பாற்றியாகி விட்டது. இனி எது நடந்தாலும் அது நல்லபடியாகவே நடக்கும் என்ற தன்னம்பிக்கை ஜ்வாலாமுகி நரசிம்மர் சன்னதியில் நுழையும் போது மனதில் மிக ஆழமாக ஊன்றியது.
ஜ்வாலா என்றால் அக்னியின் வேகம். ஜ்வாலாமுகி நரசிம்மரின் தோற்றம். மற்ற நரசிம்ம மூர்த்தியின் முகங்களை விட அதிகமாக பெரியதாக இருப்பதுபோல் தென்பட்டது.
ஹிரண்யகசிபுவைக் கொல்வதற்கு முன்பு நரசிம்மர் முகத்தில் ஏற்பட்ட கோபம் எப்படியிருந்தது என்பதை ஜ்வாலாமுகி நரசிம்மர் உருவத்தை கண்டு தெரிந்து கொள்ளலாம். ஆனால் பக்தியோடு இந்தப் பெருமாளைத் தரிசித்தால் கருணையைக் காணலாம்.
அன்றைக்கு என்னவோ ஜ்வாலமுகி நரசிம்மர் எனக்குக் கருணை ததும்பும் தரிசனத்தைத் தந்தார் என்பது மட்டும் உண்மை.
பெருமாளைத் தீர்க்கமாகத் தரிசித்துக் கொண்டிருக்கும் பொழுது அந்தக் கோயிலின் கருவறையில் இருந்து வெளி வந்த பட்டாச்சாரியார், என் அருகில் வந்து என் கையில் சுற்றி வைக்கப்பட்டிருந்த அகஸ்தியரின் ஜீவ நாடியைப் பார்த்தார்.
"என்ன? ஏது?" என்று தமிழில் விசாரித்தார்.
அந்தக் கோயிலில் தமிழில் இதைக் கேட்ட பொழுது எனக்குப் பரமானந்தம். என்ன இருந்தாலும் அவரவர்க்குரிய தாய் மொழியில் வேற்றிடத்தில் பேசும் பொழுது ஏற்படுகிற சந்தோஷம் சொல்லிவிட முடியாது.
விஷயத்தைச் சுருக்கமாகச் சொன்னேன்.
"இந்தச் சன்னதியில் அமர்ந்து படிக்கலாமா?" என்று நிதானமாகக் கேட்டார்.
"நாடி படிக்கலாம். ஆனால் நான் சுத்தமாக இல்லை. கண்ட இடமெல்லாம் அலைந்து திரிந்து வியர்வை வழிய வந்திருக்கிறேன். அகஸ்தியர் நாடி படிக்க சில நியதிகள் இருக்கின்றன. அவற்றைக் கடைபிடித்தால் தான் அகஸ்தியரோடு பேசமுடியும்!"
"இது கோயில் சன்னதி தானே. சுத்தத்திற்கு குறையிருக்காதே"
"உண்மை. ஆனால் நான் ஸ்நானம் செய்துவிட்டு வந்து படிக்க வேண்டும்."
"அவ்வளவுதானே. அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன். அப்படியே மாற்று உடையும் தருகிறேன்" என்றார் அந்தப் பட்டாச்சாரியார்.
"அப்படியென்றால் சரி" என்றேன். அவர் வாக்குறுதி கொடுத்தாற்போல் சகவிதமான ஏற்பாடுகளையும் செய்தார். மாற்றுடை அணிந்து, சிறு பலகையில் அமர்ந்து அகஸ்தியரை வணங்கி, நாடியைப் பார்த்தேன்.
"நாடியில் ஒன்றும் வரவில்லை."
எனக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒரு முறையல்ல, பலமுறை முயற்சி செய்தும் அகஸ்தியர் நாடியில் தோன்றவில்லை. சரிதான். விக்ரமாதித்தன் கதையில் வேதாளம் மறுபடியும் முருங்கை மரத்தில் ஏறியது போல் என் விஷயத்திலும் வந்துவிட்டது போலும் என சங்கடப்பட்டேன்.
நாடி படிக்க வேண்டும் என்று என்னிடம் பணிவுடன் கேள்வி கேட்டு வேண்டி நின்ற அந்த பட்டாச்சாரியார் இன்னும் வந்து அமரவில்லை என்பதைக் கண்டு என் மனதில் ஒரு சந்தோஷம். அவர் வந்து என் முன் அமர்வதற்குள் அகஸ்தியர் நாடியில் தோன்ற வேண்டும் என்ற ஒரு கவலையும் ஏற்பட்டது. லக்ஷ்மி நரசிம்மரை மனதார வேண்டிக் கொண்டேன். என்னை எப்படியாவது இந்த நெருக்கடியான நிலையிலிருந்து காப்பாற்று என்று கண்ணீர் விட்டுக் கேட்டுக்கொண்டேன்.
பய பக்தியோடு மறுபடியும் அகஸ்தியர் நாடியைப் பிரித்தேன். சட்டென்று என் கண் முன் தோன்றும். அந்த ஒளி வார்த்தை தென்படவே இல்லை. ஏதோ மிகப் பெரிய தப்பு நடந்திருக்கிறது. இல்லை என்றால் இதுவரை ஏன் அகஸ்தியர் என் கண் முன் தோன்றவில்லை என்று பயம் பிடித்துக் கொண்டது.
சுத்தமாக குளித்து வந்தால் என்ன குளித்து வராவிட்டால் என்ன? இனி ஜீவநாடி படிக்க முடியாது என்று உறுதியாகி விட்டதால் பொறுமையிழந்த நான், "கட்டை" கயிறு கட்டி நன்கு இறுக்கி மூடி விட்டேன்.
அந்தப் பட்டாச்சாரியார் வந்தால் "நாடி வரவில்லை" என்று உண்மையைச் சொல்லிக் கொள்ளலாம். இதனால் அவர் என்னைத் தவறாகப் புரிந்து கொண்டாலும் பரவாயில்லை. மீறிப் பேசினால் இந்த நாடிக் கட்டை அவரிடமே கொடுத்து விட்டு கையை வீசிக் கொண்டு ஊர் போய்ச் சேரலாம் என்று முடிவெடுத்தேன்.
எனக்குரிய உடைகளை அணிந்து கொண்டு பட்டாச்சாரியார் கொடுத்த உடைகளை மீண்டும் எடுத்து மடித்து அவரிடம் கொடுக்கக் காத்திருந்தேன்.
ஆனால் அவர் வரவே இல்லை.
ஆட்டிடையன் வந்தான். ஏதோ உதவி செய்தான். சட்டென்று காணாமல் போனான். இங்கு பட்டாச்சாரியார் வந்தார். நாடியைப் படிக்கச் சொன்னார், "இதோ வருகிறேன்" என்று சொன்னவர் ஒரு மணி நேரம் வரை ஆகிவிட்டது. ஆனால் காணவில்லை.
எனக்கும் மலைக் கோவிலுக்கும் என்ன தொடர்பு? எதற்காக இங்குச் சோதனை நடக்கிறது? என்று புரியவில்லை. இதுபற்றி அகஸ்தியரிடம் கேட்கலாம் என்றால் அவரும் ஜீவ நாடியில் வரவில்லை. இதெல்லாம் எண்ணி "இனி நாடியும் வேண்டாம், எதுவும் வேண்டாம்" என்று முடிவெடுத்து ஜ்வாலா நரசிம்மரிடம் மனதார வேண்டி "பட்டாச்சாரியார் கொடுத்த வேஷ்டியில்" அகஸ்தியர் ஜீவ நாடியை உள்ளே வைத்து யார் கண்ணிலும் படாமல் நன்றாகச் சுற்றி ஓரிடத்தில் அதனை மறைத்து வைத்தேன்.
"நல்ல வேளை யாரும் பார்க்கவில்லை" என்று எண்ணி அங்கிருந்து தப்பித்தேன், பிழைத்தேன் என்று பதுங்கிப் பதுங்கி வெளியே வந்தேன்! பட்டாச்சாரியார் கண்களில் பட்டுவிடக் கூடாதே என்ற பயத்தில் அந்த ஜ்வாலாமுகி நரசிம்மார் சன்னதிக்கு அனந்த கோடி நமஸ்காரங்களைச் சொல்லி விட்டு மிக வேகமாகப் படியிறங்கினேன்.
வரும் வழியில் எந்த நபரைக் கண்டாலும் அது ஜ்வாலாமுகி நரசிம்மர் கோயில் பட்டாச்சாரியார் போலவே தோன்றியது. எதற்காக இவரைக் கண்டு பயந்து நடுங்க வேண்டும் என்றும் தெரியவில்லை. ஆனால் என்னையும் அறியாமல் ஒரு தவறு செய்துவிட்டோம் என்ற உணர்வு, விடாமல் தொடர்ந்து வந்தது என்பது மட்டும் உண்மை.
"அகஸ்தியர் நாடியை நான் அவ்வாறு அங்கு விட்டு விட்டு வந்திருக்கக் கூடாது" ஏன் அப்படிச் செய்தேன்? என்பது புரியவில்லை.
இந்த நினைப்போடு கடந்த கால நிகழ்வுகளை அசைபோட்டு எப்படியோ கீழ் அகோபிலத்திற்கு வந்து சேர்ந்தேன்.
யாரும் என்னைப் பார்க்கவில்லை. எதுவும் கேட்கவில்லை என்று ஒரு சந்தோஷம் இருந்தது.
இருந்தாலும் அந்தத் தூமகேதுவைப் பற்றி முழுமையாக அகஸ்தியரிடம் கேட்டிருக்கலாம். அவரும் இதுபற்றி விளக்கமாகச் சொல்லவும் இல்லை, எல்லாம் நன்மைக்கே என்று எண்ணிக் கொண்டேன்.
இனியும் இங்கிருப்பதில் அர்த்தமில்லை என்று எண்ணிய நான் அறையைக் காலி செய்து விட்டு என் பெட்டியோடு வெளியே வந்தேன்.
பெற்றோரிடம் சொல்லிக் கொள்ளாமல் வெளியே வந்தது மற்றும் அலுவகத்தில் முன் அனுமதி பெறாமல் அகோபிலம் வந்தது பெருந் தவறு போல் தோன்றியது.
இப்போது நாடி கட்டு கையில் இல்லை. இனிமேல் அகத்தியர் அருள் கிட்டுமோ, கிட்டாதோ? நிம்மதியாக உலா வரலாம். இதனால் எனக்கு குடும்பப் பொறுப்பு ஏற்பட்டு விடும். பெற்றோர் மனதும் ஆறுதல் அடையும், ஒரு நல்ல பிள்ளையாக மாறி விடலாம் என்ற சந்தோஷம் உந்தித் தள்ள அருகிலுள்ள பஸ் ஸ்டாண்டிற்கு வந்து சேர்ந்தேன்.
பஸ் ஸ்டாண்டில் என் கண்ணில் தென்பட்டார் ஜ்வாலாமுகி நரசிம்மார் கோயில் பட்டாச்சாரியார்.
யாரைப் பார்க்கக் கூடாது என்று பயந்துக் கொண்டிருந்தேனோ, அவரே என் நாடிக்கட்டுடன் என்னை எதிர்நோக்கிக் காத்திருந்தது என் அடி வயிற்றைப் பகீர் என்றது.
சிரித்த முகத்துடன் என் அருகே வந்தவர் "அவசரத்தில் இந்த அகஸ்தியர் நாடியை மேலே மறைத்து வைத்து விட்டீர்கள் போலிருக்கிறது. இந்தாருங்கள்" என்று என் கையில் ஜீவ நாடியைக் கொடுத்தார். வேறு ஒன்றும் சொல்லவே இல்லை. "இல்லை வந்து ..........." என்று ஏதேதோ பிதற்றினேன். நான் சொன்னது அத்தனையும் "பொய்" என்று அவருக்குத் தெரிந்தது. ஆனால் "வாக்குவாதம்" செய்யாமல் பெருந்தன்மையுடன் நடந்து கொண்டார்.
எனக்கு குற்ற உணர்ச்சி என்பதால் வெட்கித் தலைகுனிந்தேன்.
"நாடியில் ஒன்றும் வரவில்லயாக்கும்" என்று யாரையோ பார்த்துச் சொல்வது போல் சொன்னவர், "இப்போது இந்த இடத்தில் பிரித்துப் படித்தால் நாடியில் செய்தி வரும். ஆனால் வேண்டாம். பஸ்சில் ஏறி அமர்ந்து படித்தால் அகஸ்தியர் நிறைய செய்திகளைச் சொல்வார்" என்று தெய்வ வாக்கை அந்தப் பட்டாச்சாரியார் சொன்னார். (என்னவெல்லாம் சொன்னார் என்பதை அந்தப் பெரியவர் மறைத்துவிட்டார். உண்மையாகவே இதை தட்டச்சு செய்தபோது என் உடல் அனைத்தும் "சிலிர்த்துவிட்டது" என்பது உண்மை. பல முறை படித்துப் பார்த்தேன், அதே உணர்வுதான். எல்லோரும் படித்து இன்புறுங்கள்!).
நான் மறுமொழி பேசாமல் அந்த நாடியை எடுத்து பஸ் வரும் வரை படிப்போமே என்று பிரித்தேன். படிக்க ஆரம்பித்தேன். ஏகப்பட்ட அதிர்ச்சித் தகவலை அகஸ்தியர் தந்தார். படித்து முடித்து நிமிர்ந்து பார்த்தேன். அந்தப் பட்டாச்சாரியாரை காணவில்லை. (வந்தது அகத்தியராகத்தான் இருக்கவேண்டும் என்று என் மனது சொல்கிறது)
அகோபில நிகழ்ச்சிகள் இத்துடன் நிறைவு பெற்றது!
சித்தன் அருள்................. தொடரும்!
அப்படி என்றால் அந்த ஆட்டிடையன் யார் என்பதையும், "நரசிம்மா" என்று குரல் யாருடையது என்பதையும், பட்டாச்சாரியார் யார் என்பதையும் பெரியவர் கூறவில்லையா?
ReplyDeleteதெரிவிக்கவில்லை என்பதே உண்மை. என் வரையில், இத்தனை விஷயங்கள் நமக்கு கிடைத்ததே என்று திருப்திப் படுகிறேன்.
Deleteஅன்பு கார்த்தி வணக்கம்
ReplyDeleteநீங்களும் படித்து இன்புறுங்கள் என்று எழுதிவிட்டு
தொடரும் போட்டு விட்டீர்களே ஒரு வாரம் காத்திருக்க்
வேண்டுமா ?
அகத்திய மாமுனி போற்றி
அன்புடன் வெங்கட்
படித்து இன்புறுங்கள் என்று சொன்னது பட்டச்சாரியர் சொன்னதை. என்னிடம் இதற்குமேல் வேறு தகவல் கிடையாது. அனைத்து ரகசியங்களையும் அவர் மறைத்துவிட்டார்.
Deleteமதிப்பிற்குரிய கார்த்தி அவர்களுக்கு வணக்கம் , தங்கள் பதிவு செய்த அகத்தியர் ஜீவநாடி பகிர்வுகள் அனைத்தும் அற்புதம். படிகின்றவர்களை மெய் சிலிர்க்க வைக்கும் அனுபவங்கள். நன்றி கார்த்தி... எனக்கு ஜீவநாடி பார்க்க ஆவலாக உள்ளது .தங்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் இருந்தால் தெரிவித்து வழிகாட்ட வேண்டும் நண்பரே...
Deleteஇப்படிக்கு,
சாய் ராம் செல்லப்பன்
Try the address and phone number given in this link
Deletehttp://siththanarul.blogspot.in/2012/03/blog-post.html
திரு.கார்த்திகேயன் அவர்களுக்கு வணக்கம். நலமா! எனக்கு அனுதினமும் நமது சித்தன் அருளை பார்த்துவிட்டு தான் வேலை நடக்கும்.நரசிம்மர் கோயில் நிறைய திருப்பங்கள், நிறைய அனுபவங்கள் எங்களுக்கு தந்தீர்கள் நன்றி.நாங்களே அங்க போனது போல இருந்தது. நிறைய விடை தெரியல, அது பற்றி மேலும் விளக்கம் கேக்காமல் எல்லாத்துக்கும் காரணம் இருக்கும் "சித்தன் விளையாட்டை புரிந்துகொள்ள நமக்கு/எனக்கு பக்குவம் இல்லை, அவர்களுக்கு எல்லாம் தெரியும்".
ReplyDeleteஇந்த சுட்டியில், பொதிகை மலையில் தலையாய சித்தர் அகத்தியருக்கு நடந்த பூஜையின் காணொளி.
http://copiedpost.blogspot.kr/2012/11/blog-post_7020.html
முடிந்தால் நமது பக்கத்தின் வலப்புறத்தில் இந்த காணொளி இருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும் என்று எண்ணுகிறேன். மேற்கொண்டு சித்தன் அருள்.
வரும் வியாழன் அன்று புதிதாக வரும் பகுதியை படிக்க ஆவலாக காத்திருக்கும் சாமிராஜன்.
அகோபிலம் என்ற இந்த திவ்ய தேசம்
ReplyDeleteசகல பாவ சாப தோஷ நிவர்த்தி ஸ்தலம் அகோ பலம் அகோபிலம்:
ஆந்திர மாநிலத்தில் உள்ள இரண்டு திவ்ய தேசங்களுள் ஒன்று இந்த அஹோபிலம். மற்றொன்று கண்கண்ட தெய்வமாய் கலியுக வரதனாய் திருமலையாய் எழுந்தருளி சேவை சாதிக்கும் திருப்பதி .
அகோபிலம் என்ற இந்த திவ்ய தேசம் ஆந்திரா மாநிலத்தில் கர்னூல் மாவட்டத்தில் அமைந்துள்ளது. "அஹோ' என்றால் "சிங்கம்'. "பிலம்' என்றால் "குகை'.
கிழக்கு தொடர்ச்சி மலையில் அமைந்துள்ள கருப்பு மலையிலுள்ள அஹோபிலத்தில் ஒன்பது நவ கிரகங்களின் அம்சமாக ஒன்பது நரசிம்ம மூர்த்தியாக சேவை சாதிக்கின்றார் பெருமாள்.இது நரசிம்ம அவதாரம் நிகழ்ந்த தலமாக கருதப்படுகிறது.
இங்கு பிரகலாதனுக்கு காட்சி கொடுத்ததால் மூலவர் பிரகலாத வரதன் எனப்படுகிறார். மலைக்கோயிலில் பிரகலாதனுக்காக நரசிம்மர் வெளிப்பட்ட "உக்கிர ஸ்தம்பம்' (தூண்) உள்ளது.திருமாலின் நரசிம்ம அவதாரத்தைத் தரிசிக்க விரும்புவதாக கருடன் கேட்க, பகவான் அகோபிலத்தில் ஒன்பது நரசிம்ம வடிவங்களில் கருடனுக்குக் காட்சி கொடுத்தார்.
கருட பகவான் அந்த நரசிம்ம மூர்த்தங்களைப் பூஜித்து வழிபட்டதாக தல புராணம் கூறுகிறது.இங்குள்ள அகோபில மடம் ஆதிவண் சடகோப மகாதேசிகரால் நிறுவப்பட்டது. இதுவே தென்னிந்தியாவின் மிகப்பெரிய வைணவ மடமாகும். இந்த மடத்தின் முதல் ஜீயரான இவருக்கு ‘அழகிய சிங்கர்’ என்ற பட்டம் உண்டு.
அகோபிலம் என்னும் திவ்ய தேசத்தில் நரசிம்மர், அகோ பலம் என்று சிறப்பித்து சொல்லும் விதத்தில் சேவை சாதிக்கிறார்.
இரண்யனை சம்ஹாரம் செய்த போது, நரசிம்மரைப் பணிந்து நின்ற தேவர்கள் எல்லாரும் அகோ பலம்! அகோ பலம்! என்று சொல்லி வணங்கினர். அகோபிலம் என்பதற்கு சிங்க குகை என்பது பொருள். அகோ பலம் என்றால் ஆச்சரியம் மிக்க பலம் கொண்டவர் என்று பொருள். இரண்டு தளங்களாக அமைந்துள்ளது அஹோபில ஷேத்திரம்.
கீழ் அஹோபிலத்தில் பிரகலாத வரதர் ஆலயமும், மேல் அஹோபிலத்தில் அகோர ந்ருஸிமஹர் ஆல்யமும் அமைந்துள்ளன. மலையடிவாரம் கீழ் அஹோபிலம் என்று அழைக்கப்படுகின்றது.
அடிவாரத்திலிருந்து எட்டு கி.மீ தூரத்தில் சுமார் 3000 அடி உயரத்தில் உள்ள மலைப்பகுதி மேல் அஹோபிலம் என்று அழைப்படுகின்றது. மற்ற நவ நரசிம்மர் ஆலயங்கள் சுற்றிலும் பல்வேறு இடங்களில் அமைந்துள்ளன.
மலையேற்றம் மற்றும் நடைப்பயணம் அவசியம் என்பதால் அந்த எம்பெருமானின் அருளும் உண்மையான உடல் உறுதியும் இருந்தால் மட்டுமே நவநரசிம்மர்களையும் சேவிக்க முடியும். எனவே தான் திருமங்கை ஆழ்வார் தமது பாசுரத்தில்
"தெய்வங்களால் மட்டுமே சென்று தரிசிக்க முடியும்!" என்று பாடியுள்ளார்.
Nalla thagaval Abitha ....
DeleteNandreenga..