ஒரு முக்கிய விஷயமாக ரெயிலில் பயணம் செய்து கொண்டிருந்தேன். வழக்கம் போல் அகத்தியர் ஜீவ நாடியும் என்னிடம் இருந்தது.
ஏன் எதிரே இரு பெண்கள் அமர்ந்திருந்தனர். அவர்களில் பர்தா அணிந்தபடி ஜன்னல் ஓரம் வெளியே விரக்தியோடு பார்த்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண் அடிக்கடி தனது கண்களை துடைத்துக் கொண்டே இருந்தார். அருகில் தலையில் முக்காடு போட்டிருந்த நடுத்தர வயது பெண் முதுகில் தட்டி ஆறுதல் கூறியபடி இருந்தாலும், அந்தப் பெண்ணின் கண்களிலும் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
அவர்களது நிலையைப் பார்க்கும்பொழுது, ஏதோ ஒரு பெரும் துக்கத்தில் மாட்டிக் கொண்டிருப்பவர்கள் போல் தோன்றிற்று. இவர்களுக்கு அப்படி என்ன துக்கம் என்று தெரிந்து கொண்டு அகத்தியர் மூலம் உதவலாமே என்று நினைத்தேன்.
இது வீண் வம்பா? அல்லது வேண்டாத வேலையா? எதற்காக எனக்கு இப்படியொரு எண்ணம் ஏற்ப்பட்டது? என்று கூட ஒரு சமயம் தோன்றிற்று. அந்தப் பெண்மணியுடன் யாராவது ஆண் மகன் இருந்தாலும் பரவாயில்லை. அப்படி யாரும் இருப்பதாகத் தெரிய வில்லை. அப்படியிருக்க நாம் ஏதாவது ஒன்றைப் படித்து அதை இந்தப் பெண்மணிகளிடம் சொல்லி அது விலைக்கு வாங்குகிற வீண் வம்பாகப் போய் விடுமோ என்ற பயமும் ஏற்பட்டது.
வேறு மதத்தைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் அகத்தியர் மீது பற்றுக் கொண்டு பலர் வந்து நாடிக் கேட்டுப் போவதால் தவறாக எண்ண மாட்டார்கள் என்ற நம்பிக்கையும் அடி மனதில் இருந்தது.
பொதுவாக இப்போடியொரு எண்ணம் எனக்குத் தோன்றினால் அது அகத்தியரே என்னைத் தூண்டி விடுகிறார் என்றுதான் அர்த்தம்.. இதற்கு பிறகு அந்த நபர்களுக்கு நல்லதே நடந்திருக்கிறது.
எதற்கும் இந்தப் பெண்களுக்காக நாடியைப் பார்ப்பது, இவர்களாக வாய் திறந்து கேட்டால் மட்டும் பதில் சொல்வது. இல்லையெனில் அமைதி காப்பது, என்ற முடிவோடு நாடியை எடுத்துப் புரட்டினேன்.
"எதிரே இருப்பவர்கள் தாய் - மகள். இஸ்லாம் மதத்தைச் சேர்ந்தவர்கள். சூழ்நிலையின் காரணமாக இவளது கணவன், இவர்களை கைவிட்டு வேறொரு பெண்ணோடு வெளிநாட்டிற்கு ஓடிவிட்டான். நான்கு ஆண்டுகளாக அவன், இவர்களைத் திரும்பிக் கூட பார்க்கவில்லை. வறுமையின் கொடுமையும், சொந்தக்காரர்களது உதவியின்மையும் இவர்களது மனதை பெரும் பழிக்கு உள்ளாகி இருப்பதால், தாயும் மகளும் தற்கொலை செய்யும் எண்ணத்தோடு சென்று கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு அருமையான ஆனந்தமான வாழ்வு இருக்கிறது. வாழ்க்கையை முடித்துக் கொள்ள வேண்டாம் என்று தைரியமாகச் சொல். அப்படியே நாகூர் சென்று தர்க்காவில் பிரார்த்தனை பண்ணச் சொல் . அங்கு தான் இவர்களுக்கு ஒரு திருப்புமுனையே காத்திருக்கிறது" என்று சொல்லி முடித்தார் அகத்தியர்.
இதை படித்து முடித்ததும் இந்த தகவல்களை எப்படி இவர்களுக்கு சொல்வது என்று தெரியாமல் முழித்தேன். முதலில் இவர்களுக்கு நாடியைப் பற்றியும், அகத்தியரின் ஜீவ நாடியைப் பற்றியும் தெரிந்தால்தானே நாம் ஏதாவது சொல்ல முடியும்? என்று வித விதமாக கற்பனை செய்து கொண்டேன்.
அப்போது என் எதிரில் இருந்த பெண்மணி "அய்யா, இப்போது நீங்கள் ஏதோ ஓலைச் சுவடியில் படித்தீர்களே அது என்ன?" என்று வாய் திறந்து கேட்டாள்.
நான், அகத்தியர் ஜீவ நாடியைப் பற்றி ஓரளவு விவரமாக எடுத்துச் சொன்னேன்.
"இதிலே அகத்தியர் எல்லா விஷயத்தையும் சொல்வாரா சாமி?"
"சொல்வார். ஆனால் அவரவருக்குரிய அதிஷ்டத்தைப் பொறுத்தது".
"எங்களுக்கு சொல்வாரா?"
"சொல்லுவார்".
"அப்படின்னா கொஞ்சம் கேட்டுச் சொல்லுங்க அய்யா!" என பணிவோடு கேட்டாள்.
"இப்பொழுது உங்களுக்குத் தான் நான் அகத்தியரிடம் கேட்டேன். நீங்கள் தற்கொலை செய்யும் எண்ணத்தை விட்டு விட்டு நாகூர் தர்காவுக்கு போங்கள். அங்கு தான் உங்கள் வாழ்க்கையே மலரப் போகிறது என்று அகத்தியர் சொன்னார்" என்று தைரியமாகச் சொல்லி விட்டேன்.
இதைச் சொன்னதும் அந்த தாயும் - மகளும் அதிர்ச்சியால் அரண்டே போனார்கள். சில நிமிடங்கள் வரை என்னிடம் பேசவே இல்லை. பின் என்ன தோன்றியதோ தெரியவில்லை, "நாங்கள் நாகூர் சென்று விட்டு பின்னர் உங்களை சந்திக்கிறோம்" என்ற அந்த பெண்மணி என் முகவரியை மட்டும் வாங்கிக் கொண்டாரே தவிர, வேறு எதுவும் பேசவே இல்லை.
ஒன்றரை மாதம் கழிந்திருக்கும்.
எனக்கு ஒரு கடிதம் வந்தது. அந்தக் கடிதத்தை சாயிராபானு என்கிற பெண்மணி எழுதியிருந்தார்.
"அன்றைக்கு ரெயிலில் தாங்கள் அகத்தியர் நாடியைப் பார்த்து சொன்னது எங்களுக்குத்தான்" என்று தன்னை அறிமுகம் செய்து இருந்தார். "அன்றைய தினம் நாங்கள் தற்கொலை செய்யும் மனநிலையில் தான் இருந்தோம். அப்போது அகத்தியர் கூறியதாக நீங்கள் கூறியது அத்தனையும் உண்மை நதியில் விழுந்து தற்கொலை செய்யப் போன எங்களுக்கு நீங்கள் சொன்ன தகவல் யோசிக்கவைத்தது. இதன் மூலம் எங்களது தற்கொலை எண்ணத்தை மாற்றிக்கொண்டு நாகூர் சென்றோம். இன்றைக்கு மிகப் பெரிய வயதான வசதிமிக்க "ஹாஜி" ஒருவரது கருணையால் சவுகரியமாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம்" என்று எழுதப்பட்டிருந்தது.
ஆனால் நாகூரில் என்ன அதிசயம் நடந்தது என்று எழுதவில்லை. ஏதோ ஒரு நல்ல காரியம் நடந்திருக்கிறது என்று மட்டும் தெரிந்தது. அகத்தியருக்கு நன்றி சொன்னேன்.
இரண்டு மாதம் கழிந்தது.
ஒரு நாள் மாலையில் அந்த பெண்மணியே என்னைத் தேடி வந்தார்.
"அய்யா! நாங்கள் யாரோ? நீங்கள் யாரோ? அன்றைக்கு தற்கொலை எண்ணத்தை மாற்றி எங்கள் உயிரை காப்பாற்றினீர்கள்." என்றவர் குலுங்கி குலுங்கி அழ ஆரம்பித்தார்.
"என்ன விஷயம்?"
"நிறைய இருக்கிறது! அன்றைக்கு நாகூர் தர்காவுக்கு நாங்கள் சென்றபோது இறை அருளால், மிகப் பெரிய கோடீஸ்வரர் கருணை கிட்டியது. வயதான அவருக்கு நானும், என் மகளும் துணையாக நின்றோம். வறுமையில் நான்காண்டு காலமாக துடித்த எங்களுக்கு அந்தப் பெரியவர் மூலம் புதிய வாழ்வு கிடைத்தது. எங்களை சொந்த பிள்ளை போல் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்.
நாகூர் சென்றால் அதிசயம் நடக்கும் என்று அன்றைக்கே நீங்கள் சொன்னீர்கள். அந்த அதிசயம் தான் அந்த நல்லவரை எனக்கு அடையாளம் காட்டியது. அந்த சந்தோசம் இப்போது குறைந்து விட்டது" என்றார்.
"என்ன விஷயமாக இருக்கும்?" என்று எண்ணியபடி நாடிக் கட்டைப் பிரித்தேன்.
"இந்த பெண்மணியின் கணவன், இவளைக் கைவிட்டு விட்டுப் போனவன், வெளிநாட்டில் இருந்து வெறும் கையேடு திரும்பி வந்திருக்கிறான். எந்தப் பெண்ணை அழைத்துக் கொண்டு வெளிநாடு போனானோ, அந்தப் பெண் இவனை கைவிட்டு விட்டாள்.
எல்லாவற்றையும் இழந்து ஒரு பைசாக்கூட இல்லாமல் மனம் நொந்து தாய் மண்ணை மிதித்தான்.மனைவி-குழந்தைகளை தேடி அலைந்தபோது அவர்கள் நாகூரில் இருப்பதாக தெரிந்து கொண்டு அங்கே வந்தான். பணக்கார வீட்டில் செல்லப் பெண்ணாக தன மனைவி வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை அறிந்து அங்கு சென்று பணத்தைக் கொடு என்று தொல்லை செய்து கொண்டிருக்கிறான்.
இவளுக்கோ தன கணவனைப் பிடிக்கவில்லை. போதாதக் குறைக்கு பொல்லாத நோயும் அவனுக்கு வந்திருக்கிறது. இந்த பிரச்சினை ஒரு புறம் இருக்க -
இவளது திருமகளோ - இஸ்லாம் மதத்திற்கு மாறாக வேறொரு மதத்தைச் சேர்ந்த ஒரு பையனோடு காதல் கொண்டு விட்டாள். அவளை மாற்ற முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கிறாள். இது தான் பிரச்சினை" என்று விவரமாக அகத்தியர் எடுத்துரைத்தார்.
இதைச் சொன்னதும் அதை ஆமோதித்தபடி அந்தப் பெண் பேசினார்.
"என் பிரச்சினைக்கு முடிவே கிடையாதா? இப்பொழுதுதானே நான் சந்தோஷமாக இருக்கிறேன். இதையும் என் கணவர் கெடுக்கிறார். கஷ்டப்பட்ட என் பெண்ணும், வசதி வாய்ப்புகளை பெற்றதும் புத்தி மாறிப் போகிறது" என்றார் அந்த பெண்மணி.
இதைக் கேட்டதும் எனக்கு சங்கடமான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டோமோ என்ற எண்ணம்தான் ஏற்பட்டது.
எது இருந்தாலும் இது அகத்தியர் கட்டளை என்றெண்ணி நாடியை அந்த பெண்மணிக்காக படிக்க ஆரம்பித்தேன்.
"எல்லாம் வல்ல இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தால் போதும். இவளது பிரச்சினைக்கு நல்ல முடிவை இன்னும் ஆறு மாதத்தில் கொண்டு தரும்" என்று பரிகாரம் சொன்னார். மேலும் இந்த பெண்மணிக்காக நீயும் ஒரு யாகம் செய் என்று எனக்கு சில விஷயங்களை, மந்திரங்களை தனியாகச் சொல்லி, அதுபடி செய்யுமாறு ஆணையிட்டார்.
அந்த பெண்மணியும் மகிழ்வோடு சென்று விட்டார்.
நான்கு மாதம் கழிந்திருக்கும். ஒரு நாள் அந்த பெண்மணி தன கணவன், பெண் இவர்களை அழைத்துக் கொண்டு சந்தோஷமாக என்னிடம் வந்தார்.
"இப்பொழுது என் கணவரும் திருந்தி விட்டார். அவருக்கு வந்த நோயும் குறைந்து விட்டது. இது மிகப் பெரிய அதிசயம்.
வேற்று மதத்தைச் சேர்ந்த ஒரு பையனை என் மகள் விரும்புகிறாள் என்று அன்றைக்குச் சொல்லி இருந்தேன். பொதுவாக எங்கள் மதத்தில் உள்ள பெண், வேறொரு மதத்தைச் சேர்ந்தவனை விரும்பி மணந்து கொண்டால் - அந்த வீட்டாரை எங்கள் ஊரில், யாரும் சேர்ப்பதில்லை. அந்த நிலைக்கு ஆளாகிவிடுவோமோ என்று பயந்தேன். இதற்காக இறைவனிடம் மனமுருகி பிரார்த்தனை செய்தோம். குர்ரானை முறைப்படி ஓதினோம். இறைவன் காப்பாற்றி விட்டான். என் பெண்ணும் மனம் மாறி விட்டாள். இது அடுத்த அதிசயம்.
இந்த இரண்டை விட மிகப் பெரிய அதிசயம் ஒன்று நடந்திருக்கிறது. வறுமைக் கோட்டில் இருந்து தற்கொலை செய்யப் போன எங்களை அகத்தியர் காப்பாற்றி,கோடீஸ்வரன் வீட்டுப் பெண்ணாக மாற்றினார். இப்பொழுது என் கணவருக்கும் பணம் கொடுத்து வியாபாரம் செய்யச் சொல்லியிருக்கிறார் அந்த கோடீஸ்வரர். இதைவிட பாக்கியம் வேறு என்ன வேண்டும் எங்களுக்கு? எல்லாப்புகழும் இறைவனுக்கே" என்றபடி விரிவாக பேசினார், அந்த பெண்மணி.
கேட்க சந்தோஷமாக இருந்தது. இதுபோல் அதிசயங்களை அகத்தியர் எல்லோருக்கும் நடத்திக் காட்டட்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
சித்தன் அருள்.................... தொடரும்!
நம்பிகையோட செயல்ப்பட்டால் அகத்தியர் அருள் நிச்சியமாக இருக்கும்.
ReplyDeleteஓம் அகத்தீசாய நமக
ஓம் அகத்தீசாய நமஹ .....
ReplyDeleteஆன்மீக வாழ்க்கை மூளையில் ஏற்படுத்தும் அதிசய மாற்றங்கள்!
http://spiritualcbe.blogspot.in/2013/02/blog-post.html
Hello Sir can you please share your address and phone number to my email id : balakumar75@gmail.com. thanks in advance
ReplyDeleteஓம் அகத்தீசாய நமஹ ....
ReplyDelete