​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday 3 January 2013

சித்தன் அருள் - 105

வணக்கம்!  சித்தன் அருளை மறுபடியும் தொடருவோம்!

கேது என்றால் கெடுதல் செய்து கொண்டு ஞானத்தை ஓட்டுபவன் என்பது பொருள்.  தூம கேது என்றால் தேசத்திற்கு ஒரு கஷ்டத்தைக் கொடுத்துப் பின்னர் சந்தோஷமான சூழ்நிலையை உண்டாக்கும் என்பது பொருள்.

பழங்கால ஓலைச் சுவடிகளில் வான சாஸ்திரத்தைப் பற்றி முனிபுங்கவர்கள் சொன்ன இந்த அமுதமான வாக்கியம் இன்றளவும் நடைமுறையில் வந்து கொண்டிருக்கிறது.  நம்பாதவர்களைக் கூட நம்ப வைக்கும் இந்த இயற்கையின் முன் அறிவிப்பை நமது பண்டைய புராணங்களிலும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அப்படி என்ன தான் தேசத்திற்கு ஆபத்து வந்துவிடப் போகிறது என்று யோசித்தேன்.  பாகிஸ்த்தான் நம் மீது படை எடுக்கும் அல்லது சைனா வாலை ஆட்டி ஏதேனும் உபத்திரவத்தைத் தரும் அல்லது இயற்க்கை சீற்றம் பொங்கி மக்களை வறுமையால் வாட்டி எடுக்கும்.  பூகம்பம் தோன்றலாம்.  பயிர்கள் மழையால் நாசமடயலாம்.  ஆன்மீகப் பக்தி குறையும்.  நாட்டில் ஒழுக்கமின்மை கொடி கட்டிப் பறக்கும்.  கற்பழிப்பு, கொலை, கொள்ளை அடிக்கடி நடக்கும்.  இதைத்தவிர வேறு என்ன நடந்துவிடப் போகிறது என்று என் சிந்தையில் தோன்றியது.

ஆனால் ...........

அகஸ்தியரோ வானத்தில் வடகிழக்குத் திசையை அசையாது பார் தூம கேது பளிச்சென்று தெரியும் என்று சொல்லிவிட்டு முடித்துக் கொண்டார்.  நானும் வானத்தின் வடகிழக்குத் திசையைப் பார்த்தேன்.

சற்று முன்பு தோன்றியது போல் அதே வால் நட்சத்திரம் மறுபடியும் தோன்றியது.  இது முன்பு தெரிந்ததை விட சற்றுப் பெரியதாகவும் ஆனால் வெகு சீக்கிரத்தில் கண்ணில் தென்பட்டு மறைந்து விட்டது.

பிறகு பலமுறை முயற்சி செய்து பார்த்தும் கண்ணில் தென்படவே இல்லை.  அப்படியே விட்டுவிட்டேன்.

காலைப் பொழுதில் ரம்மியமானக் காட்ச்சிகள் பல தெரிந்தாலும் என் மனதில் அந்த வால் நட்சத்திரம் பற்றியச் சிந்தனைகள் அரித்துக் கொண்டிருந்தது.  ரயில் அடுத்த பிளாட்பாரத்தில் நின்றதும் ஆங்கில பத்திரிகை ஒன்றை வாங்கிப் பார்த்தேன்.  அதில் வால் நட்சத்திரத்தைப் பற்றி வானிலைச் செய்தியாக சிறு குறிப்பு ஒன்று வெளியாகி இருந்தது.  மாலை செய்தித் தாளில் விளக்கமாகவும் வந்திருந்தது.

இதில் ஒரு திருப்தி.

நேற்றிரவு நான் கண்டது கனவல்ல.  அது உண்மைதான் என்பதால் இனிமேல் தைரியமாய் இதை வெளியில் சொல்லலாம் என்பதில் ஒரு சந்தோஷம்.  அகஸ்தியர் ஜீவநாடியில் இதுப்பற்றிக் கேட்டபொழுது "சிங்கமாய் குடிலில் யாம் விளக்குவோம்" என்று சட்டென்று முடித்துக் கொண்டார்.  அதாவது நரசிம்மப் பெருமாளான அஹோபிலக் கோயில் சன்னதியில் விளக்கமாகச் சொல்கிறேன் என்பது அர்த்தம்.

ஒரு வழியாக அஹோபில மடம் போய்ச் சேர்ந்தேன்.

அஹோபிலம்.

இந்தப் புண்ணிய பூமியில் எத்தனையோ அற்புதங்கள் நிகழ்ந்துள்ளது.  கடல் மட்டத்திலிருந்து சுமார் இரண்டாயிரத்து எண்ணூறு அடி உயரத்தில் அஹோபிலம்.   ஏகப்பட்ட ஆச்சரியங்களைத் தன்னுள் அடக்கி இன்றைக்கும் லக்ஷ்மி நரசிம்மர் இரவு நேரத்தில் மட்டுமல்ல பலசமயம் பகலில் கூட நடமாடிக் கொண்டிருக்கும் புண்ணியமான தலம்.

பரந்து விரிந்த பசுமையான மலைகள், வானத்தை முட்டும் அந்த மலையின் மீது கண்ணிற்கு எட்டியதூரம் செடி கொடிகளால் போர்த்தப் பட்டு இயற்கையின் செழிப்பு இதுதான் என்று அனைவருக்கும் எடுத்துக் காட்டும் விதத்தில் அஹோபிலம் விளங்குகிறது.

இந்த அஹோபிலத்தில் நவ நரசிம்மர் தரிசனம் காணலாம்.  கீழ் அஹோபிலம் ஐந்து வகை நரசிம்மர்ரைக் கொண்டது.  பிரஹலாத வரத லக்ஷ்மி நரசிம்மர், பார்கவா நரசிம்மர், ஸ்ரீ சத்ரவட நரசிம்மர், யோகானந்த நரசிம்மர், காராஞ்ச நரசிம்மர் என்று ஐந்து வாகான நரசிம்மர் சன்னதி உண்டு.

கீழ் மலையிலிருந்து மேல் அஹோபிலம் என்பது சுமார் பத்து கிலோ மீட்டர் உயரத்தில் உள்ளது.  இந்த இடம் இன்றைக்கும் பிரபலமாக விளங்குவதற்கு காரணம் ஸ்ரீ உக்ர நரசிம்ஹ சுவாமி சுயம்புவாகக் குகையில் தோன்றி அருள் பாலிப்பதாகவும், ஸ்ரீ கருடன், மகாலட்சுமி, பிரகலாதர் போன்றோர் ஆண்டாண்டுகளாக இங்கு கடும் தவம் செய்து நரசிம்ம சுவாமியை நேரில் தரிசனம் கண்டதாகவும் உள்ள புண்ணிய குகை.

இந்த மேல் அஹோபிலத்தில் உக்ர நரசிம்மர், ஸ்ரீ பாவனா நரசிம்மர், ஸ்ரீ வராஹ நரசிம்மர், ஸ்ரீ ஜ்வால நரசிம்மர், பவ நாசினி உற்பத்தி ஸ்தலம், உக்ர ஸ்தம்பம், ஸ்ரீ மாலோல நரசிம்மர், ஸ்ரீ ப்ரஹலாதர் குகை என்பது மிகவும் முக்கியமான இடம்.

அஹோபிலத்திற்கு அகஸ்தியர் என்னைப் போகச் சொன்னாரே தவிர இந்தப் புனிதமான இடத்தில் நின்று பிரார்த்தனை செய்தால் நன்மைகள் கிடைக்கும் என்று ஒரு போதும் சொல்லவில்லை.

அஹோபிலம் சென்றால் அங்குள்ள பதிமூன்று புண்ணிய இடத்தையும் கண்டுவிட்ட பிறகுதான், பின்னர் தன ஜீவநாடியில் நல்வாக்கு தருவார் என்று தோன்றியது.  மிகவும் பயபக்தியோடு முறைப்படி ஒவ்வொரு சந்நிதிக்குள் சென்று லக்ஷ்மி நரசிம்மரைப் பிரார்த்தனை செய்து வந்தேன்.

மலை மீது ஏற ஏற எனக்கு ஒரு திடீர் பயம் ஏற்பட்டது.

கூட்டம் அதிகம் இல்லை.  தற்காத்துக் கொள்ள எந்த ஆயுதமும் இல்லை.  துணைக்கு என்னுடன் எவரும் வரவில்லை.  இந்த மாதிரியான மலைகளுக்குச் செல்லும் பொழுது துணை இல்லாமல் செல்வது என்பது சரியல்ல என்று பின்பு தான் தோன்றியது.

மலை மீது நடக்கும் பொழுது ஜாக்கிரதையாக அழுத்தமாகக் கால்களைப் பதிக்க வேண்டும்.  பாறைகளில் வழுக்கிவிட்டால் அவ்வளவுதான், அதோகதி.  அதிர்ஷ்டம் இருந்தால் தப்பிக்கலாம்.

அந்த மலைகள், செடிகளால் நெருக்கமான மரங்களால் உண்டாக்கப் பட்டது.  எனவே துஷ்டமிருகங்கள் பல இங்கு சுதந்திரமாக உலாவிக் கொண்டு வருவதால் மிகவும் எச்சரிக்கையாகப் பயணத்தை மேற்கொள்ள வேண்டி இருந்தது.

இந்த அஹோபிலத்திற்கும் திருப்பதிக்கும் மிகப் பெரிய ஒற்றுமை இருக்கிறது.  அதி சேஷனின் தலையாகத் திருப்பதியும், ஆதி சேஷனின் வாலாக ஸ்ரீ சைலமும், அஹோபிலம் ஆதிசேஷனின் மத்தியப் பகுதியாகவும் இருக்கிறது என்பதால் தான் அன்றே எனக்குத் திருப்பதியில் அஹோபிலம் சென்று வா! என்று உத்திரவு வந்தது என்று எண்ணிக் கொண்டேன்.

ஹிரண்ய கசிபுவின் வயிற்றைக் கிழித்த பகுதி ஆதி சேஷனின் அமைப்பில் இருக்கும்.  மலையின் வயிற்றுப் பகுதி என்பதால் அந்த ஜ்வால நரசிம்மர் சன்னதியில் மிகவும் பக்தி ஸ்ரத்தையோடு அமர்ந்து அகத்தியரின் ஜீவ நாடியைப் பிரித்துப் படிக்க ஆரம்பித்தேன்.

ஏகப்பட்ட விஷயங்களை ஒன்றன் பின் ஒன்றாகத் திரைக் கதையிலே வருவது போல் அப்படியே வரிக்கு வரி அகஸ்தியர் எடுத்துக் காட்டிவிட்டு "இது யுத்தம் நடந்த இடம்.  இங்கு எதையும் உன் பொருட்டு உரைக்க மாட்டேன்.  இங்கிருந்து சில அடி தூரத்தில் உகிர ஸ்தம்பம் ஒன்று உண்டு.  அந்த ஸ்தம்பத்தின் அருகில் நரசிம்மரின் இரண்டு பதங்கள் இருக்கும்.  அந்த பாதத்தை தொடு.  ஏதோ ஒரு இனம் புரியாத ஈர்ப்புத் தன்மை உன் கைக்குக் கிடைக்கும்.  அங்கு அமர்ந்து அகத்தியனை நோக்கி வணங்கு.  நீ கேட்க்கும் அத்தனை கேள்விகளுக்கும் நரசிம்மர் சுவாமியின் பாதத்திலேயே யாம் பதில் உரைப்போம்" என்றார்.

அகத்தியர் சொன்னபடியே உக்ர ஸ்தம்பத்திலிருந்து கீழே பார்த்தேன்.  ஒரு இரும்பினால் ஆன கம்பம் இருந்தது.  அதனடியில் ஸ்ரீ நரசிம்மரின் இரண்டு பாதங்களும் இருந்தன.

அந்த இடத்திற்கு வந்து பவ்யமாக அந்தப் பாதத்தை தொட்டு வணங்கிவிட்டு நாடியைப் பிரித்து பார்க்கும் முன் திடீரென்று ஒரு இனம் புரியாத மிருகத்தின் சப்தம் என் காதில் கேட்ட்து.

வியர்த்து வெலவெலத்துப் போனேன்.  ஆட்கள் நடமாட்டம் வேறு பக்கம்.  நான் அமர்ந்திருக்கும் இடத்தின் பக்கம் ஒருவர் கூட இல்லை.  துஷ்ட மிருகங்கள் அந்த இடத்தில் எப்போது வேண்டுமானாலும் வரும் போகும் என்று ஏற்கனவே பலர் சொல்லி இருந்ததால் பயம் அளவுக்கு மீறி அதிகரித்தது.

அப்படி ஏதேனும் வந்துவிட்டால் எப்படித் தப்பி ஓடுவது என்று அச்சம் ஏற்பட்டது.  சுற்று முற்றும் பார்த்தேன். எந்த வழியும் எனக்குத் தோன்றவில்லை.  அப்படியொரு துர்பாக்கியம் ஏற்பட்டால் இதற்கு வேறு எதுவும் செய்யமுடியாது.  அப்படித்தான் என் விதி முடிய வேண்டும் என்று இருந்தால், அகத்தியர் தான் இதற்கு முழுப் பொறுப்பு என்று பயத்தின் காரணமாக அகத்தியரைச் சபிக்கவும் செய்தேன்.

சுமார் அரை மணி நேரம் அந்தக் கொடிய மிருகத்தின் சப்தம் விட்டு விட்டு எனக்குக் கேட்டுக் கொண்டிருந்தது.  சுற்றும் முற்றும் பார்த்தேன்.  ஒருவர் கூட என் கண்ணில் தென்படவே இல்லை.  ஒரு வேளை அவர்களுக்கு விஷயம் தெரிந்து பாதுக்காப்பான இடத்திற்குச் சென்று விட்டார்களோ என எண்ணிக் கொண்டேன்.

அந்த இடத்தில் நான் வந்த நேரம் சற்று இருள் கவ்வும் நேரம்.  காடுகளில் மலைகளில் இந்த இருள் கவ்வும் நேரத்தில் தான் இரைத் தேடி மிருகங்கள் புறப்படும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  இங்கும் அப்படி இரையைத் தேடி துஷ்ட மிருகம் ஏதாவது வந்துவிட்டதா? என்ற கிலி என்னைப் பலமாகப் பிடித்துக் கொண்டு விட்டது.

என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று ஒரு வழியாக மனதைத் திடப்படுத்திக் கொண்டு நாடி படிக்க ஆரம்பித்தேன்.

முதல் பத்து நிமிடம் நாடியிலிருந்து எந்த பதிலும் வரவில்லை.  சரிதான் அகத்தியரும் என்னை விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் என்று "லக்ஷ்மி நரசிம்மா என்னைக்  காப்பாற்று" என்று அந்த இரும்பினால் மூடப்பட்டிருந்த கம்பத்தை மிகப் பலமாகப் பிடித்துக் கொண்டேன்.

நான் படிக்க இருந்த ஜீவநாடி அந்த நரசிம்மரின் பாதத்தின் மீது கன்னா - பின்னாவாக விழுந்து கிடந்தது.  எவ்வளவு நேரம் நான் அப்படி அந்தக் கம்பத்தைப் பிடித்துக் கொண்டிருந்தேனோ எனக்குத் தெரியாது.  யாரோ ஒருவர் என்னைத் தட்டி எழுப்பிய பின்பு தான் சுய நினைவுக்கு வந்தேன்.

தெலுங்கில் கேட்டார், நான் யார் என்று!

நான் எல்லா விஷயத்தையும் தமிழில் சொன்னேன்.  நான் தமிழில் பேசிய பின்பு அவரும் தமிழில் பேச ஆரம்பித்தார்.  எனக்கு பெரும்பலம் கிடைத்தது போன்று இருந்தது.  "அந்த மிருகம் என்ன மிருகம்? அதன் சப்தம் கொடூரமாக இருந்ததே" என்றேன்.  நடந்த கதையைச் சொல்லி "அது காட்டு ஓநாய் சப்தம்.  சில நாட்களாக இங்கே நடமாடிக் கொண்டிருக்கிறது.  நீங்கள் தப்பித்தீர்களா?" என்றார் அவர்.

"ஓநாயா?" என்றேன்.

"ஆமாம். பெரும்பாலும் ஓநாய் பயங்கரமான துஷ்ட மிருகம்.  சிங்கம், புலிக்கு முன்னால் தைரியமாகச் செல்லும்.  பயம் கிடையாது.  பொதுவாக அவை கூட்டம் கூட்டமாகத் தான் செல்லும்.  அவற்றில் ஏதோ ஒன்று கூட்டத்தை விட்டுப் பிரிந்து தனியாக வந்து விட்டது போலும்.  நான்கு நாட்களாக அதற்கு தீனி கிடைக்கவில்லை.  கோபத்தில் இங்கு வருகிற போவோரைக் கண்டால் கடித்துக் குதறிவிடுகிறது.  "பசி" வந்தால் ஓநாயகளுக்குக் கொஞ்சமும் தாங்காது.  அதனைப் பிடித்து உள் காட்டு மலைக்குள் கொண்டு விட முயற்சி செய்தும் பயனில்லாமல் போய் விட்டது" என்று ஒரு கதையை சொல்லி முடித்தார்.

"நல்ல வேளை தப்பித்தோம்" என்று இறைவனுக்கு நன்றி சொல்லி எனக்குத் துணையாக வந்தவரிடம் "பக்கத் துணையாக கீழ் அஹோபில மடம் வரை வரமுடியுமா?" என்று கேட்டேன்.

"எந்த துஷ்ட மிருகமும் இனி இங்கு வராது.  கோயிலைச் சேர்ந்தவர்கள் இந்நேரம் அதனை தீபந்தத் துணை கொண்டு விரட்டியிருப்பார்கள்.  இனி நீங்கள் மிகத் தைரியமாகக் கீழ் மலைக்குச் செல்லலாம்" என்று தைரியம் கொடுத்து செல்ல முயற்சித்தார்.

அவரைத் தடுத்து நிறுத்தி "இங்கிருந்து தனியே செல்ல பயமாக இருக்கிறது.  மனிதக் கூட்டம் யாதேனும் வந்தால் அவர்களோடு சென்று விடுகிறேன்.  அதுவரை எனக்குத் துணையாக இருக்கும்படி" காலில் விழாக் குறையாக வேண்டிக் கொண்டேன்.

அரை குறை மனதோடு ஒப்புக் கொண்ட அவர், அந்த உக்கிர ஸ்தம்பத்தின் கற் பாதத்தில் விழுந்து கிடந்த அகத்தியர் நாடியைக் காட்டி "இதை இங்கேயே விட்டு விட்டுப் போகிறீர்களே.  இதைப் படித்துவிட்டு தானே இங்கிருந்து செல்ல வேண்டும்.  அதை முதலில் அழகாக எடுத்துப் படியுங்கள், பின்பு நான் வருகிறேன்" என்று சொன்னதும் எனக்குத் தூக்கி வாரிப்போட்டது.

பயத்தின் காரணமாக நான் ஜீவநாடியை அடியோடு மறந்து போனேன்.  சுட்டிக் காட்டி நாடியைப் படிக்கச் சொன்ன இவர் யார்? என்று பிரமித்து நின்றேன்.

சித்தன் அருள் .............. தொடரும்!

5 comments:

  1. சுட்டிக் காட்டி நாடியைப் படிக்கச் சொன்ன இவர் யார்?

    நரசிம்மரோ ?? அகத்திய்ரோ !!??

    ReplyDelete
  2. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரிம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    நன்றி! தெலுங்கில் பேசிய அவர், நிச்சயமாக நரசிம்ம சுவாமியாகத்தான் இருக்க வேண்டும்.

    எல்லாம் அவன் செயல்..

    _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரிம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!

    ReplyDelete
  3. இறைவனுக்கே ஐடென்டிடி கார்ட் மொழியா? இறைவனை மொழியை வைத்து அடயாளம் கண்டுபிடிக்கலாமா! அட சூப்பர் அருண்! உண்மை நீங்கள் சொன்னது! அது நரசிம்மர்தான்!

    என்ன! அடுத்தவாரம் சொல்ல வேண்டிய ரகசியத்தை இப்போதே போட்டு உடைத்து விட்டேன் என்று பார்க்கிறீர்களா? ........... அகத்தியரின் ஒரு வழிநடத்தல் உத்தரவு உள்ளது. பொறுத்திருங்கள், வரும் வியாழன் வரை!

    karthikeyan

    ReplyDelete
  4. காத்துகொண்டு இருக்கிறோம்

    ReplyDelete
  5. Sir, Kindly give Your Phone Number and Address

    ReplyDelete