தலையாய சித்தர் அகத்தியரின் அருள் வாக்கையும் அதன் தொடர்பாக நடக்கும் நிகழ்ச்சிகளையும் புரிந்து கொள்வது சில வேளை கடினமாக இருக்கும். பாருங்கள். அந்த மலை கோவிலில் எனக்கு கிடைத்த தரிசனத்தை சொல்லப் போக, அது எங்கே என்று தேடி இறங்கிய "அவன்" எவ்வளவு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வந்தது. அதுவும் ஓர் நாடகம் என்று நாம் எடுத்துக்கொண்டாலும், அது நடக்கும் போது இருக்கும் பிரச்சினைகளும், மன அழுத்தமும் தாங்க முடியாததாக இருக்கும். அவன் விஷயத்தில் நடந்தது முன் அறிவிப்பின்றி. கண்டிப்பாக அது இறைவன் திருவிளையாடல் தான். ஒரு சிலர் விஷயத்தில் முன் அறிவிப்பாக எடுத்து சொல்லியும் திருந்தாத அல்லது திருந்த விரும்பாத மனிதர்கள், வாழ்க்கையை அல்லது உயிரை இழந்து நின்ற தருணங்கள் உண்டு.
அப்படித்தான், ஒருநாள்..........
இது நடந்தது பல வருடங்களுக்கு முன்னால். அன்று வந்தவர்களுக்கு நாடி படித்து முடிக்கும் போது மணி இரவு ஒன்பதாகிவிட்டது. மிகவும் அசதியாக இருந்ததால், இனி நாடி வாசிக்க இருந்தவர்களை மறுநாள் காலை வர சொல்லிவிட்டு, நாடியை மூடி பூசை அறையில் வைத்துவிட்டு இரவு போஜனத்துக்கு சென்றேன். சாப்பிட தொடங்கும் முன் ஒருமுறை அகத்தியரை மனதார நினைத்துவிட்டு சாப்பாட்டில் கை வைக்க, யாரோ மிக அருகில் வந்து எனக்கு மட்டும் கேட்கும் விதத்தில் காதுக்குள் "சீக்கிரம் சாப்பாட்டை முடித்துவிட்டு, நாடியை படி" என்று உத்தரவு கொடுத்ததுபோல் கேட்டது.
இப்படியெல்லாம் இதற்கு முன் நடந்ததில்லையே, இன்று மட்டும் ஏன் இப்படி? என்று திகைத்துப்போய் கேட்டு விட்டு வேகமாக சாப்பாட்டை முடித்து, கை கால் முகம் சுத்தம் செய்து பூசை அறைக்குள் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு நாடியை எடுத்து படித்தேன்.
அதில் வந்த செய்திகள் அதிர வைத்தது. ஒரு குறிப்பிட்ட பெறும் புள்ளியின் பெயரை சொல்லிவிட்டு,
"இன்று இரவு ரகசியமாக கங்கை கரையில் ஒரு யாகம் நடத்தப் போகிறார்கள். இந்த யாகம், அதர்வண வேதத்தை பயிற்சி செய்யும் ஒரு சிலரின் துர் போதனையால் ஒருவரின் ஆயுளுக்கு பங்கம் இருக்கிறது என்று, ஆயுளை நீட்டி அவர் உயிரை காப்பாற்ற வேண்டி செய்கிறார்கள். இதுவரை அதர்வண வேதத்தை பிரயோகம் செய்து அப்படிப்பட்ட ஒரு யாகத்தை இந்த தரணியில் யாரும் செய்தது கிடையாது. அதை செய்வது அவர் குடும்பத்துக்கும், நாட்டுக்கும் கெடுதலை தான் விளைவிக்கும். யாரை காப்பாற்ற இதை செய்கிறார்களோ அவருக்கு ஆயுள் முடிந்துவிட்டது. அவரை காப்பாற்றவும் முடியாது, மேலும் இதை செய்தால் அதன் பலனாக நாட்டில் பல இடங்களில் உயிர் சேதம் ஏற்படும். அந்த குடும்பமும் மொத்தமாக அழிந்துவிடும். அதை தடுத்து நிறுத்த சொல். அகத்தியன் கூறியதாக சொல். இது பெரிய இடத்து விஷயம் ஆனதால், என் பெயரை சொல். உனக்கு எந்த கெடுதலும் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்."
அவர் சொன்ன பிரமுகரோ மிகப் பெரிய இடத்துக்காரர். அவரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும். அகத்தியர் சொன்னதாக சொல்ல போய் கடைசியில் எனக்கு மிகப்பெரிய பிரச்சினை வந்து விடாமல் இருக்கவேண்டுமே என்ற பயம் வேறு. அகத்தியர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று வேறு சொல்லிவிட்டார். கண்டிப்பாக அதற்கு ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்று தீர்மானித்து, மனதை ஒருநிலை படுத்தி, செய்தியை உரியவரிடம் சொல்ல தயாரானேன்.
அந்த காலங்களில், இன்று போல் தொலைபேசி தொடர்பு என்பது அத்தனை தூரம் விரிவடையவில்லை. பிரமுகரிடம் போன் இருந்தாலும், என்னிடம் கிடையாது. அப்படி இருந்தாலும் அவரது தனிப்பட்ட நம்பர் கிடைப்பது என்பது மிக அரிதான விஷயம். என்ன செய்வது என்று யோசித்து, தபால் தந்தி நிலையத்திற்கு சென்று அவர் பெயருக்கு "மின்னல் வேக தந்தி" கொடுக்கலாம் என்று தீர்மானித்தேன். மணி பதினொன்றை நெருங்கி விட்டது.
ஸ்கூட்டர் வைத்திருக்கும் ஒரு நண்பரை அவசரமாக வரவழைத்து, விஷயத்தை சொல்லாமல், உடனடியாக தபால் தந்தி நிலையத்துக்கு வண்டியை ஓட்டச்சொன்னேன்.
போய் சேர்ந்ததும் மணி பதினொன்று முப்பது. பன்னிரண்டு மணிக்கு யாகம் தொடங்கிவிடும். அதற்கு முன் தகவல் அவர்களை போய் சேரவேண்டும். அவசராவசரமாக விண்ணப்பத்தை வாங்கி எழுதி கொடுத்து, பெறுனர் முகவரியை எழுதிய உடன், அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த நண்பர் அதை பார்த்து விட்டு அரண்டு போனார்.
"என்ன நீ! இந்த விஷயத்துக்காக எங்கே எந்த இடத்தில் கை வைக்கிறாய் என்று புரிந்து தான் செய்கிறாயா? அவர் நினைத்தால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எதற்கும் ஒரு முறை யோசித்துக்கொள் என்றார்."
நான் தைரியமாக "இது அகத்தியர் சித்தரின் உத்தரவு. என்னை அவர் காப்பாற்றுவார். இதை அவர் உத்தரவின் படி தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்" என்று கூறி கை ஒப்பம் இட்டேன்.
அந்த விண்ணப்பத்தை வாங்கி படித்து, பெறுநரின் விலாசத்தை படித்த அந்த ஆபிசில் வேலை பார்த்த ஊழியர், என்னை நிமிர்ந்து பார்த்தார். அவர் பார்த்த பார்வையில் ஆச்சரியம், அதிர்ச்சி எல்லாம் கலந்திருந்தது.
"சார்! தப்ப எடுத்துக்காதீங்க! இந்த தந்தி தேவையா!" என்றார்.
இப்படி கேட்ப்பார் என்று தெரிந்தே "தம்பி! கவலை படாதீங்க! அதை உரியவருக்கு உடனே அனுப்புங்க. என் விலாசத்தை முழுமையாக எழுதி இருக்கிறேன். ஏதாவது உங்களை விசாரித்தால், என் விலாசத்தை கொடுங்க. நான் பார்த்துக்கொள்கிறேன்." என்றேன்.
இருந்தாலும், அவர் அந்த விண்ணப்பத்தை தன் மேல் அதிகாரியிடம் கொண்டு காட்டி நான் சொன்னதை சொல்லவும், அந்த மேல் அதிகாரி என்னை ஆபீசிற்குள் அழைத்தார்.
உள்ளே சென்ற என்னிடம் எல்லாவற்றையும் விசாரித்த பின், "ஏதோ நீங்கள் சொல்கிறீர்கள். நாங்கள் தந்தியை அனுப்புகிறோம். நாளை ஏதாவது பிரச்சினை என்றால், நீங்கள் தான் பொறுப்பு. விசாரித்தால், உங்கள் விலாசத்தை கொடுத்துவிடுவோம்" என்றார்.
"தாராளமாக செய்யுங்கள். ஆனால், இந்த தந்தி மட்டும் இப்பொழுதே செல்லவேண்டும். அது போவதை பார்த்த பின் தான் நான் இங்கிருந்து போவேன்" என்றேன்.
மேல் அதிகாரியின் அனுமதியுடன், அந்த ஊழியர் என் கண் முன்னே அந்த தந்தியை உரியவருக்கு தட்டச்சு செய்தார். அது அந்த பக்கம் போய் சேர்ந்தது என்ற உறுதியும் எனக்கு தந்தார்.
நண்பரை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவுடன் அவருக்கு நன்றி சொல்லி, "நீ தைரியமாக போய் வா. உனக்கு ஒரு பிரச்சினையும் வராது. உன் பெயரை வெளியிடவே மாட்டேன்" என்று உறுதி கூறியவுடன் தான் அவர் புறப்பட்டு சென்றார்.
வீட்டிற்குள் சென்று பூசை அறையில் நின்று அகத்தியரை மானசீகமாக வேண்டிய பின் "உங்கள் வார்த்தைகள் யாரிடம் சென்று சேரவேண்டுமோ அவரிடம் இப்பொழுது சென்று சேர்ந்திருக்கும். பிரச்சினை வராமல் காப்பாற்றுங்கள்" என்று வேண்டிய பின் உறங்க சென்றேன்.
நள்ளிரவில், நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னை, யாரோ கதவை தட்டும் சத்தம் உணர்த்தியது. எழுந்து மணியை பார்க்க கடிகாரம் காலை நான்கு மணி என்று காட்டியது.
இந்த நேரத்தில் யார் வந்து கூப்பிடுகிறார்கள்? சரி! கதவை திறந்து பார்ப்போம் என்று தீர்மானித்து கதவின் அருகில் செல்லும் முன் இரண்டாவது முறை வாசல் கதவு தட்டப்பட்டது. வேகமாக சென்று திறந்து பார்க்க..........
வாசலில் இரண்டு போலீஸ் உயர் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்.
சித்தன் அருள்.................. தொடரும்!
அகத்தியரின் அருள் தொடரட்டும்.
ReplyDeleteநீங்கள் சொல்லுவது முற்றிலும் உண்மை. ஏனென்றால் அந்த அனுபவம் எனக்கு உண்டு. தங்களின் அடுத்த பதிவிற்கு இன்னும் ஏழு நாட்கள் இருப்பதற்கு பதிலாக, குருவாரத்திற்கு அடுத்த நாள் சுக்கிரவாரத்திற்கு பதில் குருவாரமாகவே இருந்துவிட்டால் தேவலாம் என்று எண்ணத் தோன்றுகிறது. (எல்லாம் சுயநலம்தான்). மீண்டும் அடுத்த குருவாரத்திற்காக காத்துக் கொண்டிருக்கும் - அகத்தியனடிமை - சிவஹரிஹரன்
ReplyDeleteசிவா எனக்கு தங்கள் மின்னஞ்சல் முகவரி கிடைக்குமா? எனது முகவரி kmkumar31@gmail.com
ReplyDelete