​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 27 September 2012

சித்தன் அருள் - 91

வாசலில் வந்து நின்ற இருவரும் உயர்ந்த பதவியை வகிக்கும் போலீஸ் அதிகாரிகள் என்று பார்த்த போதே புரிந்தது.  அவர்களின் மிடுக்கும், பார்வையும், அவர்கள் அணிந்துள்ள உடையில் குத்தப்பட்டிருக்கும் நட்ச்சத்திரங்களும் அனைத்தையும் தெரிவித்தது.

என் பெயரை குறிப்பிட்டு "எங்கே அவர்?" என்ற அதிகார தோரணையில் கேள்வி கேட்க தொடங்கினார் அவர்களில் ஒருவர்.

நான் தான் அவர்கள் கேட்கும் ஆள் என்று அறிமுகப்படுத்தி கொண்டவுடன்

"நீங்கள் தான் நேற்று இரவு இந்த தந்தியை கொடுத்ததா?" என்று கேட்டனர்.

"ஆம்" என்றதும்,

"யாருய்யா நீ? யாருக்கு தந்தி அடித்திருக்கிறாய் என்று தெரியுமா? என்ன தைரியம் இருந்தால் நேரடியாக இப்படி ஒரு தந்தியை அடித்திருப்பாய்?  அது சரி! மிக ரகசியமாக வைக்கப்பட்டு நடத்த தீர்மானித்திருந்த அந்த யாகம் உனக்கு எப்படி தெரியும்?  யாரெல்லாம் உன் கூட இருக்கா? எப்படி உள்ளே நுழைஞ்சு இந்த தகவலை பெற்றீர்கள்? என்னென்ன விஷயங்கள் உங்களுக்கு தெரியும்?" என்று அவர்களில் ஒருவர் பதில் சொல்ல விடாமல் கேள்விகளை அடுக்கி கொண்டே போனார்.

அவர்கள் கேள்விகளின் தாக்கத்தை பார்த்தபோது, என்னை ஒரு தீவிரவாதியை பார்ப்பது போல் இருந்தது.  அவர்கள் சரமாரியாக கேள்விகளை கேட்க தொடங்க, அது வரை வெளியே நின்று பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்த நான் "உள்ளே வாருங்களேன், அமர்ந்து பேசுவோமே" என்று அழைத்தேன்.

உள்ளே வந்தவர்கள், வீட்டை ஒரு நோட்டம் போட்டனர்.  எங்கும் சுவாமியின் படங்கள். என்ன நினைத்திருப்பார்களோ, கேள்வியின் தொனியை சற்று தளர்த்தினார்கள்.  நானோ தலையாய சித்தர் அகத்தியரிடம் "அய்யா! நீங்கள் சொன்ன படி தான் நடந்து கொண்டேன்.  எதிர் பார்த்தது போலவே, பிரச்சினை வீட்டுக்குள் வந்து உட்கார்ந்திருக்கிறது.  எப்படி எதை சொல்வது என்று கூறுங்கள்" என்று மனதார பிரார்த்தித்துக் கொண்டேன்.

"வீட்டுல யாரெல்லாம் இருக்கீங்க?" அவரில் ஒருவர்.

"நானும், மனைவியும் என் குழந்தைகளும்"

"எங்க வேலை பார்க்கறீங்க?"

பதில் சொல்லிவிட்டு " நீங்க என்ன தெரிஞ்சுக்க இத்தனை விசாரிப்புகள் பண்றீங்க?" என்றேன் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

"ரகசியமாக வைக்கப்பட்டிருந்த யாகத்தை பற்றிய தகவல் உங்களுக்கு எப்படி தெரிய வந்தது? அது முதல்ல எங்களுக்கு தெரியவேண்டும்.  நீங்கள் இருப்பதோ இங்கு, யாகம் நடத்த நிச்சயித்த இடமோ கங்கை கரை.  உங்க ஆளுங்க யாராவது அந்த கூட்டத்தில இருக்காங்களா? உண்மைய சொல்லுங்க" என்று அதிகார தோரணையில் கேட்கத்தொடங்கினார்.

அவர்கள் கேள்வி நியாயமானது.  ரகசியமாக வைத்திருந்த தகவல், இந்தியாவின் கடை கோடியில் இருக்கும் ஒரு ஊரில் எப்படி தெரியவந்திருக்கும்?  யாகம் நடத்த தீர்மானித்திருப்பவரோ மிக சர்ச்சைக்குள்ளாகி உயர்ந்த பதவியில் இருப்பவர்.  அவரது பாதுகாப்பு வளையத்தில் எங்கேனும் ஒரு ஓட்டை விழுந்து விட்டதோ என்று அவர்களுக்கு சந்தேகம்.

அவர்களுக்கு தெரிந்திருக்கலாம், இருந்தாலும் நான் என்னை பற்றி கூறத் தொடங்கினேன்.  

"அகத்தியர் ஜீவ நாடியில் வந்ததை அவர் உத்தரவின் பேரில் தான் அறிவித்தேன்.  அதில் அகத்தியர் கூறியதெல்லாம் இன்றுவரை அப்படியே நடந்துள்ளது.  பாரத கண்டத்துக்கு எப்பொழுதேனும் ஒரு தீங்கு வருமானால், அதற்கு முன்னரே அறிவிப்பு தந்து, பிரார்த்தனைகள் வழியும், யாகாதி கர்மங்கள் வழியும் பரிகாரம் பண்ணி வருகின்ற ஆபத்தின் பாதிப்பை இல்லாமல் செய்ய நினைக்கிற ஒரு சித்தர்.  என்னிடம் இருப்பது ஜீவ நாடி. அதில் எழுத்துக்கள் இருக்காது.  கேட்கிற கேள்விக்கோ அல்லது தானாக உத்தரவின் பேரில் செய்தி வரும் போது ஸ்வர்ண நிறத்தில் எழுத்துக்கள் தோன்றும்."

"அப்படியா?  அது இப்போ எங்க இருக்கு?"

"அய்யா! அது என் பூசை அறையில் தான் இருக்கிறது."

"பார்க்கவேண்டுமே"

"அய்யா பூசை அறைக்குள் வெளி ஆட்கள் யாரையும் வர விடுவதில்லை"

"அப்படியானால், நீங்கள் போய் எடுத்து வந்து காட்டுங்கள்."

"தாராளமாக!  ஆனால் நீங்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கவேண்டும்.  நான் போய் குளித்து த்யானம், பூசை முடித்தபின் அவரது உத்தரவு இருந்தால் தான் வெளியே கொண்டு வரமுடியும்.  உங்களுக்கு அதில் ஆட்சேபணை இல்லை என்றால், நானும் போய் வருகிறேன்."

"எப்படி நீங்கள் சொல்வதை நம்புவது?" அதில் ஒருவர் திடீரென்று கேட்டார்.

"நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்! எனக்கு வேற வழி தெரியவில்லை.  நான் ஒன்றும் ஓடி போய் விட போவதில்லை.  எனக்கும் கடமைகள் இருக்கிறது.  குடும்பம் இருக்கிறது.  நான் செய்வதில் தவறு இருந்தால் அந்த தந்தியில் அனுப்புனர் இடத்தில் பொய் விலாசம் இருந்திருக்கும்.  இல்லையே! என் முழு விலாசத்தை தானே கொடுத்திருந்தேன்.  ஏன்! நீங்கள் தபால் தந்தி அலுவலகத்தில் விசாரித்த போது இப்பொழுது நான் கூறியதை, அவர்கள் விசாரித்ததை தானே சொல்லி இருப்பார்கள்.  இரண்டுமே பொருந்தி இருக்குமே. மேலும் நீங்கள் வரும்போது நான் இங்கு தானே இருக்கிறேன்.  தலை மறைவாகவில்லையே. இதற்குமேல் உங்களுக்கு என்ன தெளிவு வேண்டும்?" என்றேன். 

ஒரு நிமிட அமைதி நிலவியது.  நான் சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்று ஓரளவுக்கு நம்ப தொடங்கினார்கள்.  அந்த ஒரு நிமிட அமைதிக்குள் என் காதில் மட்டும் கேட்க்கும் படி வேறு ஒரு முக்கிய பிரமுகரின் பெயரை சொல்லி, "அவர் பெயரை கூறி விசாரித்துக்கொள்ள சொல்!" என்றார் அகத்தியர்.

அந்த முக்கிய மனிதர், அகத்தியரின் பக்தர்.  இங்கு வரும்போதெல்லாம் நாடி பார்த்து தன் வாழ்வை செம்மை படுத்திக் கொண்டவர்.  அந்த முதல் முக்கிய பிரமுகருக்கு இந்த மனிதர் மிக நெருக்கம்.

"சரி! உங்களது நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை", என்று கூறி அந்த மனிதரின் பெயரை கூறி, அவரிடம் என்னை பற்றி விசாரித்துக்கொள்ளுங்கள் என்றேன்.

"அவர் அகத்தியரிடம் தான் நாடி படிக்கிறார்.  அவருக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். முயற்சி செய்து பாருங்களேன்" என்றேன்.

அந்த மனிதரின் பெயரை கூறியவுடன், அவர்கள் இருவர் முகத்திலும் ஆச்சரியம்.  அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர்,

"நீங்கள் சொல்வதும் ரொம்ப பெரிய இடமாக இருக்கிறதே.  சரி விசாரிக்கிறோம்" என்று கூறி ஒருவர் மட்டும் வெளியே சென்று போலீஸ் வண்டியில் இருக்கும் தொலை தொடர்பு வசதியை உபயோகித்து செய்தியை யாரிடமோ சொன்னார்.

"விசாரிக்க சொல்லிவிட்டேன்.  நீங்கள் சொல்வது மட்டும் தவறாக இருந்தால், உங்களை நாங்கள் எங்கள் இருப்பிடத்திருக்கு அழைத்து சென்று தனியாக கவனிக்க வேண்டி வரும்.  நினைவிருக்கட்டும்" என்றார்.

ஒரு பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.  அதுவரை அவர்கள் நாடியை பற்றி தீர் விசாரித்தறிய தொடங்கினார்கள்.  எல்லா உண்மைகளையும் உரைக்க தொடங்கினேன்.  இந்த யாகத்தை ஏன் அகத்தியர் நடத்த கூடாது என்று உரைத்தார் என்பதையும் அவர்களிடம் உரைத்தேன்.  அவர்கள் முகம் வெளிறிவிட்டது.

பதினைந்து நிமிடம் கழிந்தவுடன், ஒருவருக்கு செய்தி வந்தது. செய்தியை வாங்கியவர், என் முன்னே அதை கூறினார்.

"இவரை தொந்தரவு செய்யாமல் திரும்பி செல்க.  நான் முக்கிய பிரமுகரிடம் பேசிக் கொள்கிறேன்" என்று.

அவர்கள் இருவரும் என்னை ஒரு விதமாக பார்த்தனர்.

"நாங்கள் தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும்.  எங்கள் வேலையை தான் செய்ய முயற்சி செய்தோம்.  உங்களிடமும், அகத்தியரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறி கிளம்ப தொடங்கினார்கள்.

"அய்யா ஒரு விஷயம்" என்றேன் நான்.

"சொல்லுங்கள்" என்றனர் ஒருவித பணிவுடன்.

"இந்த விஷயம் தயவு செய்து வெளியே தெரிய வேண்டாம்.  அது பின்னர் பல பிரச்சினைகளை உருவாக்கும் என்பது தலையாய சித்தர் அகத்தியரின் வாக்கு.  உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள் " என்றேன்.

"நாங்கள் எங்கள் பணி நிமித்தமாக இதை உபயோகபடுத்தி தான் ஆகா வேண்டும்.  அது இன்றி இந்த விஷயம் வெளியே கசியாது.  நாங்கள் வருகிறோம்" என்று கூறி இறங்கி சென்றனர்.

பதினைந்து நாட்களுக்கு பின் அந்த முக்கிய மனிதர் என்னை பார்க்க வந்தார்.

உற்சாகமாக வரவேற்று முதலில் அவருக்கு நன்றியை கூறினேன்.

"நீங்கள் மட்டும் அன்று உதவி செய்யவில்லை என்றால், நான் இன்று என்ன நிலைமையில் இருப்பேனோ தெரியாது.  அன்று குறிப்பாக அகத்தியர் உங்கள் பெயரை கூறி விசாரிக்க சொல்ல சொன்னார்.  அதனால் தான் அந்த காலை வேளையிலும் உங்களை தொந்தரவு செய்திருப்பார்கள்" என்றேன்.

என் நன்றியை ஏற்றுக்கொண்டாலும், அவர் முகத்தில் சந்தோஷ களை காணப்படவில்லை.  என்ன நடந்தது என்பதை தீர விசாரித்தார்.  அனைத்தையும் கூறினேன்.  பொறுமையாக கேட்டு கொண்டு இருந்தவர், சற்று நேர அமைதிக்கு பின்,

"இனிமேல் அகத்தியர் சித்தர் தான் நம்மை எல்லாம் காப்பாற்ற வேண்டும்" என்றார்.

"எப்பொழுதுமே அவர் தானே நம்மை வழி நடத்துகிறார், அதில் என்ன சந்தேகம்?" என்றேன்.

"இல்லை.  அந்த யாகம், தீர்மானித்தபடி அந்த நேரத்துக்கு நடத்தப்பட்டுவிட்டது." என்ற பேரிடியை தூக்கி போட்டார்.

சித்தன் அருள்.............. தொடரும்!

3 comments:

 1. விதி யாரை விட்டது. தொடருங்கள் அடுத்த பதிவுக்கு ஆவலுடன் காத்திருக்கிறென்.

  ReplyDelete
 2. விருப்பம் இருந்தால் தயவு செய்து இந்த தகவலையும் பதிவிடுங்களேன்

  கோவையின் அருகில் இருக்கும் வெள்ளாடை சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கும் திருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலய வளாகத்தில்(கேரளாவில்) சித்தர்களின் தலைவர் அகத்தியருக்கு ஒரு கோவில் கட்டத் துவங்கியிருக்கின்றனர்.இந்தக் கோவிலை சற்று வித்தியாசமாக கட்டும் திட்டம் இருக்கிறது.கோவில் அஸ்திவாரமாக ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதப்பட்ட ஒரு கோடி மந்திர லிகிதங்களை பயன்படுத்தும் திட்டமே அது!!!
  இந்த ஒரு கோடி மந்திர லிகிதங்களை யார் எழுதுவது?எப்படி ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதுவது? ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே முடியும்.
  ஒரு நாளுக்கு நூற்றி எட்டு முறை ஓம் அகத்தீசாய நமஹ என்று ஒரு மாதமோ,இரண்டு மாதமோ ,மூன்று மாதமோ,நூற்றி எட்டு நாட்களோ எழுதி அனுப்பி வைக்கலாம்;

  இந்த அகத்தியர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடி ஜோதிடம் பார்த்ததில் “அகத்தியரின் சீடர் போகர் நாடியில் வருகை தந்து மகிழ்ச்சியோடும்,பெருமிதத்தோடும் ஆசி வழங்கியிருக்கிறார்;ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுத தாம் பக்கபலமாக இருப்பதாக” என்பதைக் கேள்விப்படும்போது மெய்சிலிர்த்துப் போனேன்.
  15.12.2012 (கார்த்திகை மாதத்தின் கடைசி நாள்) வரை இவ்வாறு ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்பலாம்.எழுதும் நாட்களில் அசைவம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;எந்த தாளிலும்,நோட்டிலும் எழுதி அனுப்பி வைக்கலாம்; நாமும்,நமது குழந்தைகளையும் இவ்வாறு எழுதி அனுப்புவோமா?
  அனுப்ப வேண்டிய முகவரி:கி.முரளிதரன்,டோடல் ஆயில் இந்தியா பிரைவேட் லிமிடெட்,3,முதல் தளம்,பாரதி பூங்கா வீதி 2,சாய்பாபா காலனி,கோயம்புத்தூர் 11.
  PROPER ADDRESS:= in English:Mr.K.MURALIDARAN,TOTAL OIL INDIA P LTD,3,First Floor, Bharathi Park Cross Road-2,Saibaba Colony,COIMBATORE-11.

  http://www.aanmigakkadal.com/2012/09/151212_27.html

  ReplyDelete
 3. வணக்கம் விவேகனந்தர் ரசிகன் அவர்களே! அகத்தியருக்கு சேவை செய்ய நாம் மிகவும் கொடுத்து வைக்கவேண்டும். அதிலும் அவர் பக்க பலமாக நிற்க அவரது நாமத்தை எழுதுவது என்பது ஒரு வேள்வி செய்வது போன்றது. இந்த தகவலை படிக்கும் அகத்தியர் அடியவர்கள், ஆன்மீக அன்பர்கள் தங்களால் ஆனா பங்கை கொடுப்பார்கள் என்று நம்புகிறேன். இந்த தகவலை என்னால் முடிந்த அளவுக்கு பரப்ப முயற்சி செய்கிறேன். நன்றி.

  கார்த்திகேயன்

  ReplyDelete