​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Thursday, 6 September 2012

சித்தன் அருள் - 88


மெதுவாக யாக குண்டம் உருவாகத் தொடங்கியது.  ஒவ்வொரு கல்லாக எடுத்து வைக்கும் போதும் அவனுள் ஏதோ ஒரு பாரம் குறைவது போல் உணர்ந்தான்.  இறுகிப்போயிருந்த மனது மிக மென்மையானது.  இதற்குள், பூசையை முடித்துவிட்டு வந்த பூசாரி, யாக குண்டத்தை பார்த்து சில திருத்தங்களை சொன்னார்.  அவையும் நிறைவேற்றப்பட்டது. 

கல் அடுக்கப்பட்டு, பசும் சாணம் கொண்டு யாக குண்டம் மொழுகப்பட்டது.  கற்களின் நடுவிலும் இரு முனைகளிலும் அரிசி மாவினால் கோலம் இடப்பட்டு, சந்தானம் குங்கும பொட்டு வைக்கப்பட்டது.  நடப்பவை எல்லாவற்றையும் தூரத்திலிருந்து பர்த்துக்கொண்டிருந்தவனுக்கு, உள்ளே ஒரு எண்ணம்.  யாக குண்டம் உருவாகுவது கூட, ஒரு கோவிலின் கும்பாபிஷேகத்துக்கு எத்தனை கவனமாக உருவாக்கப்படுமோ, அது போல் நேர்த்தியாக உருவாக்கப்பட்டது.  யாக குண்டத்தின் உயரம் சுமார் இரண்டடி இருந்தது.  இத்தனை பெரிய யாக குண்டம் தேவையா? என்ற கேள்வி அவனுக்குள் உதித்துக் கொண்டே இருந்தது.

அவன் மனதை படம் பிடித்த பக்தர் அருகில் வந்து, "இத்தனை உயரம் தேவை! அத்தனை பிரச்சினைகள் இருக்கு போல.  அதான் ஓதியப்பர் பூசாரியை விட்டு உயரத்தை கூட்ட வைத்தார் போல்" என்று கூறினார்.

சற்று வித்யாசமான சிந்தனையாக இருக்கிறதே என்று அவரை நிமிர்ந்து பார்க்க, அவரும் சிரித்தபடியே "என்ன பார்க்கறீங்க! அந்த அளவுக்கு ஓதியப்பரும், பூசாரியும் தோள் மேல் கை போட்டு குசலம் விசாரிக்கிற அளவுக்கு நெருங்கிய நண்பர்கள்.  சிலதெல்லாம் போக போகத்தான் புரியும்" என்று கூறி "வாருங்கள், யாகத்துக்கு தேவையான சமித்து, நவ தானியங்கள் போன்றவைகளை எடுத்து பிரித்து வைக்கலாம்" என்று கூறி அழைத்து சென்றார்.

எல்லா யாக சாமான்களையும் எடுத்து வைக்க, பூசாரி வந்து வரிசை கிராமமாக ஒவ்வொன்றையும் அடுக்க, மள மளவென யாக சூழ்நிலை உருவாகியது.  இதற்குள் மாலை நெருங்க, பூசாரி சந்த்யாகால பூசைக்கு சென்றார். 

பக்தர், அன்னதான குழுவின் தலைவருக்கும் அழைப்பு விடுத்திருந்ததால் அவரும் வந்து சேர்ந்திருந்தார்.  பூசை முடித்து வந்த பூசாரி, "சரி! இப்பொழுது சொல்லுங்கள்! என்ன பிரச்சினை" என்று விசாரிக்க, சுருக்கமாக ஆனால் முக்கியமான விஷயங்களை உட்படுத்தி அத்தனையும் விளக்கப்பட்டது.  அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த பூசாரி திடீரென்று உள்ளே எழுந்து சென்று ஓதியப்பர் முன் நின்று சற்று நேரம் த்யானத்தில் இருந்தார்.  சற்று நேரத்துக்கு பின் வெளியே வந்து "இருபத்தி ஐயாயிரம் ஆவர்த்தி ஜெபிக்க சொல்லி வருகிறது  யாகத்திற்கு நான்கு பேர் வேண்டும்" என்றார்.

இதை கேட்ட பக்தர், பூசாரி, அவர் சகோதரர், அவன் என்று மூன்று பேர் இருக்கவும், நான்காவது ஆளை தேட தொடங்க, தலைவர் இருப்பது ஞாபகம் வர, நான்காவதாக அவரை சேர்த்து நான்கு பேரை யாகத்துக்கு அமர்த்த முடிவு பண்ணினார்.

அவன் பக்தரிடம் சென்று, யாகத்தில் அமர்பவர்கள், சங்கல்பம் எடுத்துக்கொள்பவர்கள் அனைவரும் காப்பு கட்டிக்கொள்ள வேண்டும்,  அதன் பிறகு தான் உட்காரலாம் என்று கேட்டுக்கொண்டான்.  அதுவும் சரிதான் என்று தீர்மானித்து, பூசாரியிடம் சொல்லி அனைவருக்கும் காப்பு கட்டி விட முடிவு செய்யப்பட்டது. 

திடீரென "முதல் முறையாக இந்த மலை கோவிலில் ஒரு "சத்ரு சம்ஹார யாகம்" நடக்க போகிறது.  அவன் எதை நினைத்துக்கொண்டு இதை நடத்துகிறான் என்று தெரியவில்லை" என்று கூறிய பூசாரி சந்நிதியை பார்த்தார்.  ஒரு சில பூக்கள் முருகர் தலையிலிருந்து வலது பக்கமாக அவர் காலடியில் விழுவதை கண்டார்.

"சரி! உத்தரவு கொடுத்துட்டான், யாகத்தில் உட்காருபவர்கள் சென்று குளித்து விட்டு வாருங்கள்" என்று சொல்லிவிட்டு தானும் குளிக்க சென்றார்.

சுனை, குளம் என்று ஒன்று இல்லாவிடினும், தொட்டியில் பிடித்து வைக்கப்பட்ட தண்ணீரை ஊற்றி குளித்த உடன், அவன் மனமும் குளிர்ந்து ஒன்று பட்டது.  "சரி! இன்று என்னவோ நடக்க போகிறது.  முருகர் யாகத்தை ஏற்று வாங்கிக்கொண்டு, எல்லாவற்றையும் சரி பண்ணி கொடுத்தால் மட்டும் போதும்" என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு யாக குண்டத்தின் முன் சென்று நின்றான்.

மணி இரவு ஒன்பது.  பூசாரி உள் சென்று ஒதிப்பரிடம் உத்தரவு வாங்கி, அவர் சக்தியை கலசத்தில் ஆவாகனம் செய்து, கணபதி பூசை செய்து, கலச பூசை செய்து அடுத்ததாக யாக குண்டத்தில், யாக்கக்னியை சேர்த்தார்.  கிழக்கு பார்த்து நின்ற முருகனுக்கு நேர் எதிரில் அவன் அமர்ந்தான். அனைவருக்கும் காப்பு கட்டப்பட்டது.

யாகம் தொடங்கியது.  இரவு நேரமாகியதால், ஒவ்வொரு மணி ஓசையும், மந்திரமும் கணீர் என்று முழங்க சுற்றுப்புற சூழலே, வேள்வியாக உருவெடுத்தது.  கூட வந்திருந்த ஒரு நண்பர், யாகத்தை புகை படம் எடுக்க ஒவ்வொரு படத்திலும் விசித்திரமான ரூபங்கள் தெரிய ஆரம்பித்தது.  வெளியிலிருந்து அடித்த குளிர்ந்த காற்று யாகத்தில் அமர்ந்திருந்தவரின் முதுகு பாகத்தை குளிர்வித்தது.  முன்னே யாக குண்டத்தில் எரிந்து கொண்டிருந்த அக்னி உடலின் முன் பாகத்தை கொதிக்க வைத்தது.  அவனுக்கு இவை இரண்டும் ஒரு போலவே தோன்றியது.  வித்யாசமே தெரியவில்லை.  உடல் மட்டும் ஒரு நிலையில் கல் போல் இருந்தது.  எதுவுமே அவனை பாதிக்க வில்லை.

நவ தானியங்களை சேர்த்துவிட்டு மந்திர உபாசனயுடன் யாகம் தொடர அக்னி கொழுந்து விட்டு எரிந்தது.  சுருக்கமாக சொல்வதானால், யாகத்தில் அனைவரும் அமிழ்ந்திருக்க, காலம் என்பதே நின்று போனது போல் தான் அனைவரும் உணர்ந்தனர்.  படிப்படியாக யாகம் வளர, அதன் முடிவில், பட்டு வஸ்திரம், தாம்பூலம், கனி வகைகளை சேர்த்து அக்னி தேவனுக்கு ஆஹூதி கொடுக்கப்பட்டு யாகம் நிறைவு பெற்றது. 

யாகம் நிறைவு பெற்ற போது நடு இரவு மணி ஒன்று.  யாக குண்டத்தை விட்டு எழுந்த பூசாரி, மறுபடியும் முருகரை ஆவாகனம் செய்து, சன்னதிக்குள் கொண்டு சென்றார்.  கலசங்கள் ஒவ்வொன்றாக  மந்திர உச்சாடனத்துடன் சன்னதிக்குள் கொண்டு செல்லப்பட்டு, அபிஷேகம் தொடங்கியது.

அபிஷேகம் ஒரு கண் கொள்ளா காட்சி.  ஒவ்வொரு விதமான, வித்யாசமான முக பாவங்களை,  உணர்ச்சிகளை அந்த முருகர் முகத்தில் காண முடிந்தது.  புன்முறுவலுடன், அமைதியாக, அபிஷேகத்தை ஏற்றுக்கொள்கிற முருகரின் முக பாவம் எல்லாவற்றிலும் மேன்மையாக அவனுள் பதிந்தது. 

விதவிதமான அபிஷேகங்கள், ஐந்தடி உயர, ஐந்து முகம், எட்டு கை கொண்ட சிலைக்கு நடப்பதை முதன் முறையாக அவன் பார்த்த போது அவனுள் எதோ ஒரு மாற்றம் படர தொடங்கி இருந்தது.  எதையோ நெருங்கிவிட்டோம் என்று உணர முடிந்தது.  என்ன என்று பேதம் பிரித்து உணர முடியவில்லை.  ஆனால் யாரோ ஒரு கனமான பாரத்தை அவன் தலையிலிருந்து இறக்கி வைத்தார் போல் ஒரு உணர்வு.

அபிஷேகம் முடிந்து, அலங்காரத்துக்காக திரை இடப்பட்டது.  மொத்தம் ஒரு பதினைந்து பேர் இருந்தனர். 

களைப்பு மேலிட, உறங்கி விடுவோம் என்கிற நிலையில் இருந்த அவன், அருகில் இருந்த ஒரு தூணில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.  திரை விலக்கி தீபாராதனை காட்டியபோது, பெரும் காட்டாற்று வெள்ளமாய், முருகரின் அழகு அங்கு நின்ற அனைவரையும் தாக்கியது.  அவன் கூட தூக்கம் விலகி ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நிற்க, ஓதியப்பர் புன்னகை தவழவிட்டு வலக்கரம் தூக்கி ஆசிர்வதித்தபடி இருந்தார்.

"இனி உன் துயர் யாம் விலக்கினோம், யாமிருக்க பயமேன்" என்று அவன் புத்தியில் உரைத்தது.

பூசையின் அனைத்து அம்சமும் முடிந்து ஓதியப்பரின் தலையில் ஒரு கொத்து பூவை வைத்து தீபாராதனை காட்டி விட்டு, பூசாரி,

"யாருக்காவது உத்தரவு கேட்கவேண்டுமா?" என்றார்.

அவன் பக்தரை பார்க்க, அவர் கண் அசைக்க, "எனக்கு உத்தரவு கேட்கவேண்டும்" என்று பூசாரியிடம் கூறினான்.

"சரி! வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு முட்டி போட்டு அமருங்கள்" என்றார் பூசாரி.

இருந்த அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க, இரு கம்பிகளின் இடையில் நடந்து சன்னதியின் வெகு அருகில் சென்று நமஸ்காரம் செய்தான்.  அவர் சொன்ன படி முட்டி போட்டு அமர்ந்து மனதுள் கேள்விகளை தயார் செய்தான்.

"முருகா! எனக்கென்று எதுவும் வேண்டாம்.  இன்று நடந்த யாகத்தை, அபிஷேகத்தை, பூசையை நீ எற்றுக்கொண்டாயா?  குறை ஒன்றும் இல்லையே?  சதுரகிரியில் ஒரு சில பிரச்சினைகளால், அன்னதானம் செய்வது நின்று போய் விட்டது.  அது மறுபடியும் தொடங்கி நடக்க வேண்டும்.  நான் அங்கு இல்லாமல் போனாலும் சரி.  பொய் குற்றச்சாட்டு சொல்லி அதை நிறுத்தியவர்கள், விலகி விட வேண்டும்.  யாரையும் கொல்ல வேண்டாம்.  அவருக்குள் இருக்கும் சத்ரு தன்மையை விலக்கி விடு.  காவல் துறையால் பிரச்சினை வரக்கூடாது.  உனது அருள் என்றும் வேண்டும்.  பதில் சொல் ஓதியப்பா!" என்றான்.

ஓதியப்பர் பதில் சொல்லும் முறையே மிக வித்யாசமாக இருக்கும். நம் வேண்டுதலை சொன்ன பிறகு, அவர் தலையில் இருந்து பூ அவரின் வலது பக்கமாக விழ்ந்தால் "நல்லது நடக்கும்".  இடது பக்கமாக இருந்தால், "வேண்டுதலுக்கு அனுமதி இல்லை" என்று பொருள்.  வலம் இடம் அல்லாமல், நடுவாக விழ்ந்தால் "இப்போது இருக்கும் நிலை போதும்" வேறு மாற்றங்கள் தேவை இல்லை என்று பொருள்.  இது பக்தர் சொல்லி தெரியவந்தது.

அனைவரும் ஓதியப்பர் என்ன பதில் சொல்ல போகிறார் என்று காத்து நின்றனர். 

சற்று நேர மௌனத்துக்கு பின், அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க, ஓதியப்பரின் வலது பக்கத்திலிருந்து, அவருக்கு கழுத்தில் போடப்பட்டிருந்த மிக பெரிய மாலை ஒன்று அறுந்து வீழ்ந்தது.

பார்த்துக்கொண்டிருந்த பூசாரி முதல், பக்தர் வரை, அனைவரும் ஆச்சரியத்தால் வாய் பிளந்து அதிர்ச்சிக்குள்ளானார்கள்.  பூசாரி சட்டென்று திரும்பி அமர்ந்த நிலையில் இருந்த அவனை பார்த்தார்.  உடனே ஓதியப்பர் முகத்தை பார்த்தார்.

பக்தர் நடந்ததை புரிந்து கொண்டு அவனிடம் "எழுந்திருங்கள்! உங்களுக்கு பதில் தந்தாகிவிட்டது. எல்லாம் ஷேமமாக நடக்கும், பிரச்சனைகள் விலகிவிட்டது, அவ்வளவு தான். என்றார்!"

"சாமி இனிமேல் தான் நான் என் விஷயம் கேட்கலாம் என்று நினைக்கிறேன்!"

"மன்னிக்கவும்! இனிமேல் உங்களுக்கு உத்தரவு கேட்க முடியாது!  எழுந்திருங்கள்!  விட்டா எங்கள் முருகரை நீங்கள் சுருட்டிக்கொண்டு போய் விடுவீர்கள் போல இருக்கிறதே.  அவனும் நீங்கள் கேட்டதற்கு இப்படி எல்லாம் வரம் தருகிறான்!"

"நான் என்ன தப்பு பண்ணினேன் என்று நீங்கள் இத்தனை விரட்டு விரட்டுகிறீர்கள்?"

"சாமி! அவனவன் ஒரு பூ விழுவதற்கு அவர் காலில் கட்டிக்கொண்டு அழுவான். அப்படியும் அவன் வரம் கொடுக்கமாட்டான்.  உங்களுக்கு பூ மாலையையே அறுத்து கொடுத்திருக்கான்.  போய் ஆகிற வேலையை பாருங்க" என்று கூறி வந்து அவனை கையை பிடித்து அழைத்து சென்றார் பக்தர்.

ஒன்றும் பேச முடியாமல், நேராக யாக குண்டத்தை போய் பார்க்க, ஆஹூதியில் கொடுக்கப்பட்டதெல்லாம் நன்றாக எரிந்து அடங்கி ஒடுங்கி இருந்தது. அது ஒரு நல்ல சகுனம் என்று அவன் மனம் உரைத்தது.  அத்தனையும் அவர் ஏற்றுக்கொண்டுவிட்டார்.  இனி நம் கையில் எதுவுமே இல்லை என்று தீர்மானத்துக்கு வந்தவன், மறுபடியும் சன்னதியிர் சென்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான்.

அப்பொழுதும் பூசாரிக்கு அதிர்ச்சி விலகவில்லை.  சிரித்தபடியே அவனிடம் வந்து "என்னையா பண்ணறீங்க.  என் அப்பன எப்படி இந்த அளவுக்கு மயக்க முடிந்தது?" என்று கேட்டார்.

"எனக்கு என்ன சாமி தெரியும்! எல்லாம் அவன் செயல்" என்று கூறி "இனிமேல் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது" என்றான்.

ஓதியப்பரும், தலையாய சித்தர் அகத்தியரும்  உண்மையாகவே அனைத்து பிரச்சினைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார்கள் என்று அவனுக்கு பிறகுதான் புரிந்தது!


சித்தன் அருள்............. தொடரும்.

4 comments:

 1. கலியுகத்தில் கண் கண்ட தெய்வம் முருகபெருமான்.
  மற்ற எந்த தெய்வத்திடமும் அதிகம் இல்லாத ஒரு விஷேசம் முருகனிடம் உண்டு.

  அது தன் அன்பை பெற்ற பக்தர்களின் கனவில் சென்று அருள் புரிவதாகும்.இதை இன்று வரை சிவன்மலை முருகன் நிரூப்பித்து கொண்டுள்ளார்.

  ஓம் சரவணபவனே சரணம்

  ombhogar.blogspot.com

  ReplyDelete
 2. அடியேனுக்கும் அந்த அழகனை தரிசிக்க ஆசை . ஆலயம் திறந்து இருக்கும் நாள் மற்றும் நேரம் குறித்து தாங்கள் அறிந்தால் கொடுத்து உதவுங்களேன் . ப்ளீஸ்

  ReplyDelete
 3. Try this link for details

  https://sites.google.com/site/othimalai/

  ReplyDelete
 4. This comment has been removed by the author.

  ReplyDelete