​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 13 September 2012

சித்தன் அருள் - 89

[வணக்கம்! இன்றைய சித்தன் அருள் தொகுப்பை வழங்க சற்று தாமதமாகிவிட்டது.  மன்னிக்கவும்.  அவனிடமிருந்து ஒரு தகவலையும் வாங்கி அதையும் சேர்த்து தரவேண்டி இருந்ததால் சற்று தாமதம். அவன் ஒதிமாலையில் ஓதியப்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக நண்பர்களுடன் சென்று இருந்தான்.  எனக்கு தகவலும் கிடைத்தது, அவன் பகிர்ந்து கொண்ட ஓதியப்பரின் பிறந்தநாள் படமும், எல்லோரும் நலமுடன் வாழ.............. இனி சித்தன் அருளை தொடருவோம்!]


மறுநாள் காலை மறுபடியும் தரிசனம் முடித்து பிரசாதம் வாங்கிக்கொண்டு, நன்றி சொல்லியபின், பக்தர், தலைவர் குழுவுடன் கீழே இறங்கி பூதிக்காடு சென்றனர்.  பூதிக்காட்டில் நிறுவப்பட்டிருக்கும் ஒரு கல் அப்படியே மலையின் ரூபத்தில் இருந்தது.  அது போகர் சித்தர் பூசை செய்த இடம்.  மௌனமாக நின்று த்யானித்துவிட்டு திரும்ப, பக்தர் அந்த கல்லின் அடிபாகத்திலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து அவன் நெற்றியில் இட்டு "மௌனமாக இருங்கள்! எல்லாம் வெற்றியாக அமையும்" என்றார்.  திடீரென்று அவர் அப்படி கூற அவனுக்குள் ஒரு எண்ணம் பிறந்தது.  தலைவர் இவரிடம் என்னவோ சொல்லி இருக்கிறார்.  அதன் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும் என்பதை அறிந்த பக்தர், "மௌனமாக இருங்கள்" என்று கூறினார் போலும். தலைவர் பக்தரிடம் "எல்லாத்துக்குமே காரணம் அவன் தான்" என்று சுருக்கமாக மொத்த வினைகளையும் அவன் தலையில் இறக்கி வைத்தார்.  அவனை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருந்த பக்தர் "மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும், நீங்கள் அதை நம்புகிறீர்களா?" என்று திருப்பி கேட்டார்.  தலைவர் மறுபேச்சின்றி இறங்கி போனார். மனிதரில் யாரை மலை போல் நம்பி இருந்து அத்தனை விஷயங்களையும் செய்தானோ, அவரே கை விட்டு பேசியபின் இனி யாரையும் நம்பி பயனில்லை என்று தீர்மானித்து ஒதிமலை ஓதியப்பரிடம் நிரந்தரமாக சரணடைந்தான், அவன்.  அவனுக்குள் ஒரு நம்பிக்கை - ஓதியப்பர் கனிந்தால், அவரால் மட்டும் தான் காப்பாற்ற முடியும் என்று.

ஓதியப்பர் முன் நடத்திய "சத்ரு சம்ஹார யாகம்" மிக வேகமாக பலன் கொடுக்க தொடங்கியது.  ஒரு வாரத்துக்குள் எதிரிகளாக இருந்தவர்கள் காணாமல் போனார்கள்.  அனைவரும் சதுரகிரியில் பிடித்து வைத்து ஆட்சி செய்துகொண்டிருந்த நிலையை இழந்தனர்.  மேலும் அவர்கள் அனைவரும் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டு பிரிய வேண்டிய நிலையில் தள்ளப்பட்டனர். என்னென்ன நடந்தது என்றால்

  1. மலை ஏறி வந்து அன்னதானத்தை முடிந்தவரை நன்றாக நடத்திக்கொண்டு வந்த எதிர் குழுவில் உள்ள ஒரு தலைவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போனது.  இன்று வரை அவரை தோளில் சுமந்து வந்து உட்காரவைத்து அன்னதானம் நடத்திக்கொண்டிருக்கிறனர்.  அவரும்  அவன் இருந்த குழுவின்  அன்னதானத்தை நிறுத்த தன்னால் ஆனா பண உதவியை செய்தார்.
  2. எதிர் குழுவுக்கு தவறு செய்ய வழிகாட்டிய ஒரு வக்கீல், அந்த குழுவின் தலைவராலேயே கீழே இறக்கிவிடப்பட்டார். அவர் தான் அத்தனை பிரச்சினைக்கும் காரணம்.
  3. எல்லோரும் போட்ட பணத்தை கொண்டு போய் குற்றச்சாட்டை சுமத்தி அந்த வழக்கை திரை மறைவில் நின்று நடத்திய ஒரு அன்னதான குழுவின் கணக்குபிள்ளை விபத்தில் மாட்டிக்கொண்டு தன் ஒரு காலும் கையும் உடைத்துக்கொண்டார். பிறகு மலை ஏற முடியாமல் போயிற்று.
  4. எதிரிகளாக நின்று அன்னதானத்தை தடை செய்ய காணரமாக இருந்த பலருக்கும், புது புது பிரச்சினைகளும், பல போலீஸ் நடவடிக்கைகளும் வந்து சேர்ந்தது.
  5. கோவில் அதிகாரிகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் பலருக்கும் கடுமையான சோதனைகளும், வியாதிகளும் வந்து வாட்டிட, பல இடங்களிலும் சென்று என்ன பிரச்சினை என்று பிரச்னம் வைத்து பார்க்க, அன்னதானத்தை நிறுத்த காரணமாக இருந்த தோஷம் தான் என்று வந்தது.

தலையாய சித்தர் நாடியில் வந்து சொன்ன படி போலீஸ் விசாரணைக்கு அவனை அழைத்தனர்.  இரண்டு நாட்கள் போய் இருந்து அத்தனை உண்மைகளையும் சொல்ல, தெளிவுகளை எடுத்துக்கொடுத்து நிரூபிக்க, இது பொய் வழக்கு என்று அவர்களால் தீர்மானிக்கப்பட்டு வழக்கு முடிவுக்கு வந்தது.  இதுவும் அகத்தியரின் அருளினால் தான் நடந்தது.

அகத்தியர் நாடியில் வந்து சொன்னபடி  சில நாட்களுக்கு அவன் அவமானங்களை சந்திக்க நேர்ந்தது.  அவன் நம்பி இருந்தவர்களே அவனை கை விட்டனர்.  அனைவருக்கும் அவர்கள் இருந்த நிலையை, பதவியை இழந்த கோபம், இவன் மேல் திரும்பியது.  அவனை பற்றிய பல அவதூறான வார்த்தைகளை பரப்பினர்.

  1.  "எல்லாத்துக்குமே அவன் தான் காரணம்" - இது தலைவர் 
  2. "அவன் பெரிய மந்திரவாதிங்க, இஷ்டத்துக்கு எங்க வேணும்னாலும் போவான், காட்டுக்குள்ளே எங்கேயோ போய் உட்கார்ந்து ஜபம் பண்ணுவான்.  அவனை நம்பாதீங்க" இது அவனை அழைத்து சென்ற பக்தரிடம், குழு உறுப்பினரால் சொல்லப்பட்டது.
  3. "எல்லாத்துக்குமே அவன் தான் காரணம்.  இனிமே இங்க இருக்கிறவங்க யாருமே அவனை மலைக்கு கூட்டிண்டு வரக்கூடாது" - இது பூசாரி, கோவில் அதிகாரிகளுடன் நடத்திய ஒரு ரகசிய சந்திப்பில், தலைவர் முன்னிலையில் கூறினார்.  தலைவர் மௌனமாக இருந்தார்.
  4. "அவன் விஷயத்தில் நடவடிக்கை எடுக்க போய், நாங்களும் எங்கள் குடும்பமும் வாங்கி கட்டிக்கொண்ட கஷ்டங்கள் போதுமுங்க.  நீங்க யார வேணா சேர்த்துண்டு அன்னதானம் பண்ணுங்க.  ஆனா அவன் மட்டும் வரக்கூடாது" - இது கோவில் அதிகாரிகள்.
  5. "அடி பட்டவன் கூட சேர்ந்தா, அவன் அடி பட்டதின் வலியை நீங்களும் சுமக்க வேண்டி வரும்.  ஆதலால், விலகிவிடுங்கள்" என்று தலைவர் அவன் நண்பர்களிடம் கூற அனைவரும் விலகினார்கள். அவனை தனி மரமாக்கி தவிக்க விட வேண்டும் என்பது தலைவரின் எதிர்பார்ப்பு என்று உணர்ந்தான்.
  6. "அவன் வீடு ஒரு சாக்கடை.  அவன் கூட யாராவது சேர்ந்து இருப்பார்களா" என்று தலைவர் ஒருவரிடம் கூற, அது இவன் காதுக்கு வந்து சேர்ந்தது.  அத்தனை நாட்களாக அவன் ஊருக்கு வரும் போதெல்லாம் அவன் வீட்டில் தங்கி தான் உணவருந்தியுள்ளோம் என்பதையும் மறந்து அவர் அடித்த கமென்ட்.
  7. "நீ உருப்படமாட்டே! இந்த வருஷம் கண்டிப்பாக தோற்றுபோவே! நீ எப்படி பாசாகிறேனு நான் பார்க்கிறேன்" என்று அவன் மீது இருந்த கோபத்தில், அவன் மகளிடம் மிக கடுமையாக ஆசிர்வாதம் செய்தார் தலைவர்.
  8. எத்தனையோ முறை எடுத்து சொல்லியும், அவன் நட்பை விட முடியாது என்று சொன்ன ஒரு நண்பரிடம் "அவனை பற்றி உனக்கு என்ன தெரியும்?  அவனுக்கு எத்தனை பெண்கள் கூட தொடர்பு இருக்கிறது என்று உனக்கு தெரியுமா?" என்று கூற இதுவும் அவன் காதுக்கு வந்து சேர்ந்தது.
  9. கடைசியாக தலைவர் அவனிடம் வந்து "உனக்கு யாரோ செய்வினை வெச்சிருக்கா! முடிஞ்ச உன்ன நீயே காபாத்திக்கோ" என்று கூறி கைவிட்டு சென்றார். (பயப்படாமல் விசாரிக்க, அகத்தியர் சித்தர் செய்வினையில் நம்புவதில்லை என்றும், இந்த மாதிரியான விஷயங்களுக்கு பயப்படவேண்டாம் என்று அவனுக்கு தெரிவிக்கப்பட்டது.)

அத்தனை அவமானங்களையும் அகத்தியரின் உத்திரவால் பொறுமையாக இருந்து கேட்டுக்கொண்டான்.  எதற்கும் பதில் கூறவும் இல்லை,  யாருக்கும் விளக்கம் அளிக்கவும் இல்லை.  மௌனத்தையே தவமாக கொண்டு தொண்ணூறு நாட்களை கழிக்க, சதுரகிரியில் பூசாரியின் தலைமையில் மறுபடியும் அன்னதானம் தொடங்கப்பட்டது.  அகத்தியர் அருளியதுபோல் மூன்று அமாவாசை கழிந்தபின் அது நிறைவேறியது.  ஓதியப்பர் எதிரிகளை அழிக்க, அகத்தியர் அருளினால் அன்னதானத்துக்கு உயிர் ஊட்டப்பட்டது.  அங்கு உறையும் பெருமானிடம் அவன் செய்து கொடுத்த சத்தியத்தின் படி அதன் பின் மலைக்கு செல்லவில்லை.

தலையாய சித்தர் அகத்தியரின் வாக்குக்கு அடி பணிந்து அந்த காலங்களில் நடந்து கொண்டதற்கு அவனுக்கு கிடைத்த பரிசுகள், வாய்ப்புகள் அளவிடமுடியாதது.  ஓதியப்பர் அருள் அவனுக்கு பரிபூரணமாக கிடைத்தது.  அனைத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி சொல்லும் விதமாக இரண்டாவது முறை நான்கு மாதங்களுக்கு பின் ஒதிமலைக்கு சென்ற போது யாகம் நடத்திய பூசாரிக்கும் அருளிய ஒதிப்பருக்கும் மனமார்ந்த நன்றியை சொன்னான்.  அபிஷேகம் தொடங்கும் முன் பூசாரி அவனிடம் வந்து "போய் குளித்து விட்டு மடி வஸ்திரம் உடுத்திவாருங்கள்.  உள்ளே அபிஷேகத்துக்கு உதவி பண்ணவேண்டும்" என்றார்.  அவன் அதிர்ந்து போனான்.  இப்படியும் ஓதியப்பர் அருளுவாரா?  முதன்முறையாக ஓதியப்பரை தொட்டு அபிஷேகம், அலங்காரம், பூசை செய்யும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது.  அபிஷேகத்துக்கு முன் எண்ணை காப்பு போட, எதேச்சையாக ஓதியப்பரின் இடது கன்னத்தில் கை வைக்க, எதோ ஒரு மின்சாரம் போல் ஒன்று அவன் கை வழியாக இறங்கி உடலுக்குள் சென்று அவனை நிலை குலையச் செய்தது.  அது ஒரு அபூர்வ தருணம்.  அதன் பின்னர் ஒதிமலை பற்றிய ரகசியங்கள் பலதும் அவனுக்கு தெரிவிக்கப்பட்டது, அல்லது அவனை மட்டும் தேடி வந்து அடைந்தது.  சாதாரண பக்தனாக அகத்தியர் கோயில் இருக்கும் இடத்திற்கெல்லாம் சென்ற போது நிறைய அனுபவங்கள், ஆசிர்வாதங்கள் அவனை தேடி வந்து அடைந்தது.

இறை திருவிளையாடல்களை புரிந்து கொள்வது என்பது மிக கடினம்.  சித்தர்கள் அதையும் மறைத்தே வைக்கிறார்கள்.  மறைத்து வைத்தது மறைந்தே இருக்கவேண்டும்.  அதை தேடி போனால், இது போல் ச்ரமங்களை அனுபவிக்க வேண்டி வரும் என்பதற்கு அவனுக்கு நடந்தது ஒரு சின்ன உதாரணம்.

சித்தன் அருள் ....................... தொடரும்!

3 comments:

  1. From morning onwards i'm refresh and open our page.At present in korea and stay with my wife. I said to parents, my wife family and we had fasting yesterday.

    உங்கள் பணி மென்மேலும் சிறக்க எங்களது வாழ்த்துக்கள்

    Thank you.
    swamirajan

    ReplyDelete
  2. _/\_ஓம் சிவசிவ ஓம்_/\_
    ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி!
    ஓம் கணேஷாய போற்றி!

    சித்தன் அருளை பகிர்வதை சித்தமாக கொண்டுள்ள தங்களுக்கும். உறவுகளுக்கும், நண்பர்களுக்கும் இனிய மனமார்ந்த விநாயகர் சதுர்த்தி தின வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்! வளர்க இறை அருளுடன்!

    ReplyDelete