​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Saturday, 29 September 2012

அகத்தியர் லிகித ஜபம் - நாடி பற்றிய தகவலும்!



வணக்கம்!

சித்தன் அருளை வாசித்துவரும் ஒரு அன்பர் ஒரு வேண்டுகோளை என்னிடம் தந்தார்.  மிக உன்னதமான எண்ணமானதால் அதை கீழே உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.  அனைவரும் பங்கு பெற வேண்டுகிறேன்.

தகவல்:- 1

கோவையின் அருகில் இருக்கும் வெள்ளாடை சுவாமிகளின் ஜீவசமாதி அமைந்திருக்கும் திருச்சிற்றம்பலேஸ்வரர் ஆலய வளாகத்தில்(கேரளாவில்) சித்தர்களின் தலைவர் அகத்தியருக்கு ஒரு கோவில் கட்டத் துவங்கியிருக்கின்றனர்.இந்தக் கோவிலை சற்று வித்தியாசமாக கட்டும் திட்டம் இருக்கிறது.கோவில் அஸ்திவாரமாக ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதப்பட்ட ஒரு கோடி மந்திர லிகிதங்களை பயன்படுத்தும் திட்டமே அது!!!

இந்த ஒரு கோடி மந்திர லிகிதங்களை யார் எழுதுவது?எப்படி ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதுவது? ஆன்மீகக்கடல் வாசக,வாசகிகளின் கூட்டு முயற்சியால் மட்டுமே முடியும்.

ஒரு நாளுக்கு நூற்றி எட்டு முறை ஓம் அகத்தீசாய நமஹ என்று ஒரு மாதமோ,இரண்டு மாதமோ ,மூன்று மாதமோ,நூற்றி எட்டு நாட்களோ எழுதி அனுப்பி வைக்கலாம்;

இந்த அகத்தியர் கோவில் கட்டுவது தொடர்பாக நாடி ஜோதிடம் பார்த்ததில் “அகத்தியரின் சீடர் போகர் நாடியில் வருகை தந்து மகிழ்ச்சியோடும்,பெருமிதத்தோடும் ஆசி வழங்கியிருக்கிறார்;ஒரு கோடி தடவை ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுத தாம் பக்கபலமாக இருப்பதாக” என்பதைக் கேள்விப்படும்போது மெய்சிலிர்த்துப் போனேன்.

15.12.2012 (கார்த்திகை மாதத்தின் கடைசி நாள்) வரை இவ்வாறு ஓம் அகத்தீசாய நமஹ என்று எழுதி அனுப்பலாம்.எழுதும் நாட்களில் அசைவம் சாப்பிடுவதை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;எந்த தாளிலும்,நோட்டிலும் எழுதி அனுப்பி வைக்கலாம்; நாமும்,நமது குழந்தைகளையும் இவ்வாறு எழுதி அனுப்புவோமா?

அனுப்ப வேண்டிய முகவரி:கி.முரளிதரன்,டோடல் ஆயில் இந்தியா பிரைவேட் லிமிடெட்,3,முதல் தளம்,பாரதி பூங்கா வீதி 2,சாய்பாபா காலனி,கோயம்புத்தூர் 11. 

PROPER ADDRESS:= in English:Mr.K.MURALIDARAN,TOTAL OIL INDIA P LTD,3,First Floor, Bharathi Park Cross Road-2,Saibaba Colony,COIMBATORE-11.


தகவல்:- 2

சற்று நாட்களுக்கு முன் "எல்லோரும் அகத்தியரிடம் மனமுருகி பிரார்த்தனை செய்யுங்கள்.  நல்ல ஒரு மனிதரை தெரிவு செய்து அந்த நாடியை வாசிக்க வேண்டும்" என்று கேட்டுக்கொண்டேன்.  அனைவரின் பிரார்த்தனைக்கும் தலையாய சித்தர் ஒப்புக்கொண்டுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.  கூடிய விரைவில் அந்த நாடி சென்று சேர்ந்து அவர் வாசிக்க தொடங்கிய பின் அவர் அனுமதியுடன் முழு விலாசத்தையும் உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன்.

அகத்தியர் திருவடி சரணம்!

Thursday, 27 September 2012

சித்தன் அருள் - 91

வாசலில் வந்து நின்ற இருவரும் உயர்ந்த பதவியை வகிக்கும் போலீஸ் அதிகாரிகள் என்று பார்த்த போதே புரிந்தது.  அவர்களின் மிடுக்கும், பார்வையும், அவர்கள் அணிந்துள்ள உடையில் குத்தப்பட்டிருக்கும் நட்ச்சத்திரங்களும் அனைத்தையும் தெரிவித்தது.

என் பெயரை குறிப்பிட்டு "எங்கே அவர்?" என்ற அதிகார தோரணையில் கேள்வி கேட்க தொடங்கினார் அவர்களில் ஒருவர்.

நான் தான் அவர்கள் கேட்கும் ஆள் என்று அறிமுகப்படுத்தி கொண்டவுடன்

"நீங்கள் தான் நேற்று இரவு இந்த தந்தியை கொடுத்ததா?" என்று கேட்டனர்.

"ஆம்" என்றதும்,

"யாருய்யா நீ? யாருக்கு தந்தி அடித்திருக்கிறாய் என்று தெரியுமா? என்ன தைரியம் இருந்தால் நேரடியாக இப்படி ஒரு தந்தியை அடித்திருப்பாய்?  அது சரி! மிக ரகசியமாக வைக்கப்பட்டு நடத்த தீர்மானித்திருந்த அந்த யாகம் உனக்கு எப்படி தெரியும்?  யாரெல்லாம் உன் கூட இருக்கா? எப்படி உள்ளே நுழைஞ்சு இந்த தகவலை பெற்றீர்கள்? என்னென்ன விஷயங்கள் உங்களுக்கு தெரியும்?" என்று அவர்களில் ஒருவர் பதில் சொல்ல விடாமல் கேள்விகளை அடுக்கி கொண்டே போனார்.

அவர்கள் கேள்விகளின் தாக்கத்தை பார்த்தபோது, என்னை ஒரு தீவிரவாதியை பார்ப்பது போல் இருந்தது.  அவர்கள் சரமாரியாக கேள்விகளை கேட்க தொடங்க, அது வரை வெளியே நின்று பேசிக்கொண்டிருந்ததை உணர்ந்த நான் "உள்ளே வாருங்களேன், அமர்ந்து பேசுவோமே" என்று அழைத்தேன்.

உள்ளே வந்தவர்கள், வீட்டை ஒரு நோட்டம் போட்டனர்.  எங்கும் சுவாமியின் படங்கள். என்ன நினைத்திருப்பார்களோ, கேள்வியின் தொனியை சற்று தளர்த்தினார்கள்.  நானோ தலையாய சித்தர் அகத்தியரிடம் "அய்யா! நீங்கள் சொன்ன படி தான் நடந்து கொண்டேன்.  எதிர் பார்த்தது போலவே, பிரச்சினை வீட்டுக்குள் வந்து உட்கார்ந்திருக்கிறது.  எப்படி எதை சொல்வது என்று கூறுங்கள்" என்று மனதார பிரார்த்தித்துக் கொண்டேன்.

"வீட்டுல யாரெல்லாம் இருக்கீங்க?" அவரில் ஒருவர்.

"நானும், மனைவியும் என் குழந்தைகளும்"

"எங்க வேலை பார்க்கறீங்க?"

பதில் சொல்லிவிட்டு " நீங்க என்ன தெரிஞ்சுக்க இத்தனை விசாரிப்புகள் பண்றீங்க?" என்றேன் சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு.

"ரகசியமாக வைக்கப்பட்டிருந்த யாகத்தை பற்றிய தகவல் உங்களுக்கு எப்படி தெரிய வந்தது? அது முதல்ல எங்களுக்கு தெரியவேண்டும்.  நீங்கள் இருப்பதோ இங்கு, யாகம் நடத்த நிச்சயித்த இடமோ கங்கை கரை.  உங்க ஆளுங்க யாராவது அந்த கூட்டத்தில இருக்காங்களா? உண்மைய சொல்லுங்க" என்று அதிகார தோரணையில் கேட்கத்தொடங்கினார்.

அவர்கள் கேள்வி நியாயமானது.  ரகசியமாக வைத்திருந்த தகவல், இந்தியாவின் கடை கோடியில் இருக்கும் ஒரு ஊரில் எப்படி தெரியவந்திருக்கும்?  யாகம் நடத்த தீர்மானித்திருப்பவரோ மிக சர்ச்சைக்குள்ளாகி உயர்ந்த பதவியில் இருப்பவர்.  அவரது பாதுகாப்பு வளையத்தில் எங்கேனும் ஒரு ஓட்டை விழுந்து விட்டதோ என்று அவர்களுக்கு சந்தேகம்.

அவர்களுக்கு தெரிந்திருக்கலாம், இருந்தாலும் நான் என்னை பற்றி கூறத் தொடங்கினேன்.  

"அகத்தியர் ஜீவ நாடியில் வந்ததை அவர் உத்தரவின் பேரில் தான் அறிவித்தேன்.  அதில் அகத்தியர் கூறியதெல்லாம் இன்றுவரை அப்படியே நடந்துள்ளது.  பாரத கண்டத்துக்கு எப்பொழுதேனும் ஒரு தீங்கு வருமானால், அதற்கு முன்னரே அறிவிப்பு தந்து, பிரார்த்தனைகள் வழியும், யாகாதி கர்மங்கள் வழியும் பரிகாரம் பண்ணி வருகின்ற ஆபத்தின் பாதிப்பை இல்லாமல் செய்ய நினைக்கிற ஒரு சித்தர்.  என்னிடம் இருப்பது ஜீவ நாடி. அதில் எழுத்துக்கள் இருக்காது.  கேட்கிற கேள்விக்கோ அல்லது தானாக உத்தரவின் பேரில் செய்தி வரும் போது ஸ்வர்ண நிறத்தில் எழுத்துக்கள் தோன்றும்."

"அப்படியா?  அது இப்போ எங்க இருக்கு?"

"அய்யா! அது என் பூசை அறையில் தான் இருக்கிறது."

"பார்க்கவேண்டுமே"

"அய்யா பூசை அறைக்குள் வெளி ஆட்கள் யாரையும் வர விடுவதில்லை"

"அப்படியானால், நீங்கள் போய் எடுத்து வந்து காட்டுங்கள்."

"தாராளமாக!  ஆனால் நீங்கள் ஒரு மணி நேரத்துக்கு மேல் காத்திருக்கவேண்டும்.  நான் போய் குளித்து த்யானம், பூசை முடித்தபின் அவரது உத்தரவு இருந்தால் தான் வெளியே கொண்டு வரமுடியும்.  உங்களுக்கு அதில் ஆட்சேபணை இல்லை என்றால், நானும் போய் வருகிறேன்."

"எப்படி நீங்கள் சொல்வதை நம்புவது?" அதில் ஒருவர் திடீரென்று கேட்டார்.

"நீங்கள் நம்பித்தான் ஆகவேண்டும்! எனக்கு வேற வழி தெரியவில்லை.  நான் ஒன்றும் ஓடி போய் விட போவதில்லை.  எனக்கும் கடமைகள் இருக்கிறது.  குடும்பம் இருக்கிறது.  நான் செய்வதில் தவறு இருந்தால் அந்த தந்தியில் அனுப்புனர் இடத்தில் பொய் விலாசம் இருந்திருக்கும்.  இல்லையே! என் முழு விலாசத்தை தானே கொடுத்திருந்தேன்.  ஏன்! நீங்கள் தபால் தந்தி அலுவலகத்தில் விசாரித்த போது இப்பொழுது நான் கூறியதை, அவர்கள் விசாரித்ததை தானே சொல்லி இருப்பார்கள்.  இரண்டுமே பொருந்தி இருக்குமே. மேலும் நீங்கள் வரும்போது நான் இங்கு தானே இருக்கிறேன்.  தலை மறைவாகவில்லையே. இதற்குமேல் உங்களுக்கு என்ன தெளிவு வேண்டும்?" என்றேன். 

ஒரு நிமிட அமைதி நிலவியது.  நான் சொல்வதிலும் உண்மை இருக்கிறது என்று ஓரளவுக்கு நம்ப தொடங்கினார்கள்.  அந்த ஒரு நிமிட அமைதிக்குள் என் காதில் மட்டும் கேட்க்கும் படி வேறு ஒரு முக்கிய பிரமுகரின் பெயரை சொல்லி, "அவர் பெயரை கூறி விசாரித்துக்கொள்ள சொல்!" என்றார் அகத்தியர்.

அந்த முக்கிய மனிதர், அகத்தியரின் பக்தர்.  இங்கு வரும்போதெல்லாம் நாடி பார்த்து தன் வாழ்வை செம்மை படுத்திக் கொண்டவர்.  அந்த முதல் முக்கிய பிரமுகருக்கு இந்த மனிதர் மிக நெருக்கம்.

"சரி! உங்களது நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை", என்று கூறி அந்த மனிதரின் பெயரை கூறி, அவரிடம் என்னை பற்றி விசாரித்துக்கொள்ளுங்கள் என்றேன்.

"அவர் அகத்தியரிடம் தான் நாடி படிக்கிறார்.  அவருக்கு என்னை பற்றி நன்றாக தெரியும். முயற்சி செய்து பாருங்களேன்" என்றேன்.

அந்த மனிதரின் பெயரை கூறியவுடன், அவர்கள் இருவர் முகத்திலும் ஆச்சரியம்.  அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். பின்னர்,

"நீங்கள் சொல்வதும் ரொம்ப பெரிய இடமாக இருக்கிறதே.  சரி விசாரிக்கிறோம்" என்று கூறி ஒருவர் மட்டும் வெளியே சென்று போலீஸ் வண்டியில் இருக்கும் தொலை தொடர்பு வசதியை உபயோகித்து செய்தியை யாரிடமோ சொன்னார்.

"விசாரிக்க சொல்லிவிட்டேன்.  நீங்கள் சொல்வது மட்டும் தவறாக இருந்தால், உங்களை நாங்கள் எங்கள் இருப்பிடத்திருக்கு அழைத்து சென்று தனியாக கவனிக்க வேண்டி வரும்.  நினைவிருக்கட்டும்" என்றார்.

ஒரு பதினைந்து நிமிடங்கள் கழிந்திருக்கும்.  அதுவரை அவர்கள் நாடியை பற்றி தீர் விசாரித்தறிய தொடங்கினார்கள்.  எல்லா உண்மைகளையும் உரைக்க தொடங்கினேன்.  இந்த யாகத்தை ஏன் அகத்தியர் நடத்த கூடாது என்று உரைத்தார் என்பதையும் அவர்களிடம் உரைத்தேன்.  அவர்கள் முகம் வெளிறிவிட்டது.

பதினைந்து நிமிடம் கழிந்தவுடன், ஒருவருக்கு செய்தி வந்தது. செய்தியை வாங்கியவர், என் முன்னே அதை கூறினார்.

"இவரை தொந்தரவு செய்யாமல் திரும்பி செல்க.  நான் முக்கிய பிரமுகரிடம் பேசிக் கொள்கிறேன்" என்று.

அவர்கள் இருவரும் என்னை ஒரு விதமாக பார்த்தனர்.

"நாங்கள் தொந்தரவு செய்திருந்தால் மன்னிக்கவும்.  எங்கள் வேலையை தான் செய்ய முயற்சி செய்தோம்.  உங்களிடமும், அகத்தியரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறோம்" என்று கூறி கிளம்ப தொடங்கினார்கள்.

"அய்யா ஒரு விஷயம்" என்றேன் நான்.

"சொல்லுங்கள்" என்றனர் ஒருவித பணிவுடன்.

"இந்த விஷயம் தயவு செய்து வெளியே தெரிய வேண்டாம்.  அது பின்னர் பல பிரச்சினைகளை உருவாக்கும் என்பது தலையாய சித்தர் அகத்தியரின் வாக்கு.  உங்களுக்குள்ளேயே வைத்துக் கொள்ளுங்கள் " என்றேன்.

"நாங்கள் எங்கள் பணி நிமித்தமாக இதை உபயோகபடுத்தி தான் ஆகா வேண்டும்.  அது இன்றி இந்த விஷயம் வெளியே கசியாது.  நாங்கள் வருகிறோம்" என்று கூறி இறங்கி சென்றனர்.

பதினைந்து நாட்களுக்கு பின் அந்த முக்கிய மனிதர் என்னை பார்க்க வந்தார்.

உற்சாகமாக வரவேற்று முதலில் அவருக்கு நன்றியை கூறினேன்.

"நீங்கள் மட்டும் அன்று உதவி செய்யவில்லை என்றால், நான் இன்று என்ன நிலைமையில் இருப்பேனோ தெரியாது.  அன்று குறிப்பாக அகத்தியர் உங்கள் பெயரை கூறி விசாரிக்க சொல்ல சொன்னார்.  அதனால் தான் அந்த காலை வேளையிலும் உங்களை தொந்தரவு செய்திருப்பார்கள்" என்றேன்.

என் நன்றியை ஏற்றுக்கொண்டாலும், அவர் முகத்தில் சந்தோஷ களை காணப்படவில்லை.  என்ன நடந்தது என்பதை தீர விசாரித்தார்.  அனைத்தையும் கூறினேன்.  பொறுமையாக கேட்டு கொண்டு இருந்தவர், சற்று நேர அமைதிக்கு பின்,

"இனிமேல் அகத்தியர் சித்தர் தான் நம்மை எல்லாம் காப்பாற்ற வேண்டும்" என்றார்.

"எப்பொழுதுமே அவர் தானே நம்மை வழி நடத்துகிறார், அதில் என்ன சந்தேகம்?" என்றேன்.

"இல்லை.  அந்த யாகம், தீர்மானித்தபடி அந்த நேரத்துக்கு நடத்தப்பட்டுவிட்டது." என்ற பேரிடியை தூக்கி போட்டார்.

சித்தன் அருள்.............. தொடரும்!

Thursday, 20 September 2012

சித்தன் அருள் - 90


தலையாய சித்தர் அகத்தியரின் அருள் வாக்கையும் அதன் தொடர்பாக நடக்கும் நிகழ்ச்சிகளையும் புரிந்து கொள்வது சில வேளை கடினமாக இருக்கும்.  பாருங்கள்.  அந்த மலை கோவிலில் எனக்கு கிடைத்த தரிசனத்தை சொல்லப் போக, அது எங்கே என்று தேடி இறங்கிய "அவன்" எவ்வளவு பிரச்சினைகளை சந்திக்க வேண்டி வந்தது.  அதுவும் ஓர் நாடகம் என்று நாம் எடுத்துக்கொண்டாலும், அது நடக்கும் போது இருக்கும் பிரச்சினைகளும், மன அழுத்தமும் தாங்க முடியாததாக இருக்கும்.  அவன் விஷயத்தில் நடந்தது முன் அறிவிப்பின்றி.  கண்டிப்பாக அது இறைவன் திருவிளையாடல் தான்.  ஒரு சிலர் விஷயத்தில் முன் அறிவிப்பாக எடுத்து சொல்லியும் திருந்தாத அல்லது திருந்த விரும்பாத மனிதர்கள், வாழ்க்கையை அல்லது உயிரை இழந்து நின்ற தருணங்கள் உண்டு.

அப்படித்தான், ஒருநாள்..........

இது நடந்தது பல வருடங்களுக்கு முன்னால்.  அன்று வந்தவர்களுக்கு நாடி படித்து முடிக்கும் போது மணி இரவு ஒன்பதாகிவிட்டது.  மிகவும் அசதியாக இருந்ததால், இனி நாடி வாசிக்க இருந்தவர்களை மறுநாள் காலை வர சொல்லிவிட்டு, நாடியை மூடி பூசை அறையில் வைத்துவிட்டு இரவு போஜனத்துக்கு சென்றேன்.  சாப்பிட தொடங்கும் முன் ஒருமுறை அகத்தியரை மனதார நினைத்துவிட்டு சாப்பாட்டில் கை வைக்க, யாரோ மிக அருகில் வந்து எனக்கு மட்டும் கேட்கும் விதத்தில் காதுக்குள் "சீக்கிரம் சாப்பாட்டை முடித்துவிட்டு, நாடியை படி" என்று உத்தரவு கொடுத்ததுபோல் கேட்டது.

இப்படியெல்லாம் இதற்கு முன் நடந்ததில்லையே, இன்று மட்டும் ஏன் இப்படி? என்று திகைத்துப்போய் கேட்டு விட்டு வேகமாக சாப்பாட்டை முடித்து, கை கால் முகம் சுத்தம் செய்து பூசை அறைக்குள் சென்று பிரார்த்தனை செய்துவிட்டு நாடியை எடுத்து படித்தேன்.

அதில் வந்த செய்திகள் அதிர வைத்தது.  ஒரு குறிப்பிட்ட பெறும் புள்ளியின் பெயரை சொல்லிவிட்டு,

"இன்று இரவு ரகசியமாக கங்கை கரையில் ஒரு யாகம் நடத்தப் போகிறார்கள்.  இந்த யாகம், அதர்வண வேதத்தை பயிற்சி செய்யும் ஒரு சிலரின் துர் போதனையால் ஒருவரின் ஆயுளுக்கு பங்கம் இருக்கிறது என்று, ஆயுளை நீட்டி அவர் உயிரை காப்பாற்ற வேண்டி செய்கிறார்கள்.  இதுவரை அதர்வண வேதத்தை பிரயோகம் செய்து அப்படிப்பட்ட ஒரு யாகத்தை இந்த தரணியில் யாரும் செய்தது கிடையாது.  அதை செய்வது அவர் குடும்பத்துக்கும், நாட்டுக்கும் கெடுதலை தான் விளைவிக்கும். யாரை காப்பாற்ற இதை செய்கிறார்களோ அவருக்கு ஆயுள் முடிந்துவிட்டது.  அவரை காப்பாற்றவும் முடியாது, மேலும் இதை செய்தால் அதன் பலனாக நாட்டில் பல இடங்களில் உயிர் சேதம் ஏற்படும்.  அந்த குடும்பமும் மொத்தமாக அழிந்துவிடும்.  அதை தடுத்து நிறுத்த சொல்.  அகத்தியன் கூறியதாக சொல். இது பெரிய இடத்து விஷயம் ஆனதால், என் பெயரை சொல்.  உனக்கு எந்த கெடுதலும் வராமல் நான் பார்த்துக்கொள்கிறேன்."

அவர் சொன்ன பிரமுகரோ மிகப் பெரிய இடத்துக்காரர்.  அவரால் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும்.  அகத்தியர் சொன்னதாக சொல்ல போய் கடைசியில் எனக்கு மிகப்பெரிய பிரச்சினை வந்து விடாமல் இருக்கவேண்டுமே என்ற பயம் வேறு.  அகத்தியர் நான் பார்த்துக்கொள்கிறேன் என்று வேறு சொல்லிவிட்டார்.  கண்டிப்பாக அதற்கு ஏதாவது ஒரு வழி பிறக்கும் என்று தீர்மானித்து, மனதை ஒருநிலை படுத்தி, செய்தியை உரியவரிடம் சொல்ல தயாரானேன். 

அந்த காலங்களில், இன்று போல் தொலைபேசி தொடர்பு என்பது அத்தனை தூரம் விரிவடையவில்லை.  பிரமுகரிடம் போன் இருந்தாலும், என்னிடம் கிடையாது.  அப்படி இருந்தாலும் அவரது தனிப்பட்ட நம்பர் கிடைப்பது என்பது மிக அரிதான விஷயம்.  என்ன செய்வது என்று யோசித்து, தபால் தந்தி நிலையத்திற்கு சென்று அவர் பெயருக்கு "மின்னல் வேக தந்தி" கொடுக்கலாம் என்று தீர்மானித்தேன்.  மணி பதினொன்றை நெருங்கி விட்டது.

ஸ்கூட்டர் வைத்திருக்கும் ஒரு நண்பரை அவசரமாக வரவழைத்து, விஷயத்தை சொல்லாமல், உடனடியாக தபால் தந்தி நிலையத்துக்கு வண்டியை ஓட்டச்சொன்னேன்.

போய் சேர்ந்ததும் மணி பதினொன்று முப்பது.  பன்னிரண்டு மணிக்கு யாகம் தொடங்கிவிடும்.  அதற்கு முன் தகவல் அவர்களை போய் சேரவேண்டும்.  அவசராவசரமாக விண்ணப்பத்தை வாங்கி எழுதி கொடுத்து, பெறுனர் முகவரியை எழுதிய உடன், அருகில் நின்று பார்த்துக்கொண்டிருந்த நண்பர் அதை பார்த்து விட்டு அரண்டு போனார்.

"என்ன நீ! இந்த விஷயத்துக்காக எங்கே எந்த இடத்தில் கை வைக்கிறாய் என்று புரிந்து தான் செய்கிறாயா?  அவர் நினைத்தால் உன்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.  எதற்கும் ஒரு முறை யோசித்துக்கொள் என்றார்."

நான் தைரியமாக "இது அகத்தியர் சித்தரின் உத்தரவு. என்னை அவர் காப்பாற்றுவார். இதை அவர் உத்தரவின் படி தடுத்து நிறுத்தியே ஆக வேண்டும்" என்று கூறி கை ஒப்பம் இட்டேன்.

அந்த விண்ணப்பத்தை வாங்கி படித்து, பெறுநரின் விலாசத்தை படித்த அந்த ஆபிசில் வேலை பார்த்த ஊழியர், என்னை நிமிர்ந்து பார்த்தார்.  அவர் பார்த்த பார்வையில் ஆச்சரியம், அதிர்ச்சி எல்லாம் கலந்திருந்தது.

"சார்! தப்ப எடுத்துக்காதீங்க!  இந்த தந்தி தேவையா!" என்றார்.

இப்படி கேட்ப்பார் என்று தெரிந்தே "தம்பி! கவலை படாதீங்க! அதை உரியவருக்கு உடனே அனுப்புங்க. என் விலாசத்தை முழுமையாக எழுதி இருக்கிறேன்.  ஏதாவது உங்களை விசாரித்தால், என் விலாசத்தை கொடுங்க.  நான் பார்த்துக்கொள்கிறேன்." என்றேன்.

இருந்தாலும், அவர் அந்த விண்ணப்பத்தை தன் மேல் அதிகாரியிடம் கொண்டு காட்டி நான் சொன்னதை சொல்லவும், அந்த மேல் அதிகாரி என்னை ஆபீசிற்குள் அழைத்தார். 

உள்ளே சென்ற என்னிடம் எல்லாவற்றையும் விசாரித்த பின், "ஏதோ நீங்கள் சொல்கிறீர்கள். நாங்கள் தந்தியை அனுப்புகிறோம்.  நாளை ஏதாவது பிரச்சினை என்றால், நீங்கள் தான் பொறுப்பு.  விசாரித்தால், உங்கள் விலாசத்தை கொடுத்துவிடுவோம்" என்றார்.

"தாராளமாக செய்யுங்கள்.  ஆனால், இந்த தந்தி மட்டும் இப்பொழுதே செல்லவேண்டும்.  அது போவதை பார்த்த பின் தான் நான் இங்கிருந்து போவேன்" என்றேன்.

மேல் அதிகாரியின் அனுமதியுடன், அந்த ஊழியர் என் கண் முன்னே அந்த தந்தியை உரியவருக்கு தட்டச்சு செய்தார்.  அது அந்த பக்கம் போய் சேர்ந்தது என்ற உறுதியும் எனக்கு தந்தார்.

நண்பரை அழைத்துக்கொண்டு வீடு வந்து சேர்ந்தவுடன் அவருக்கு நன்றி சொல்லி, "நீ தைரியமாக போய் வா.  உனக்கு ஒரு பிரச்சினையும் வராது.  உன் பெயரை வெளியிடவே மாட்டேன்" என்று உறுதி கூறியவுடன் தான் அவர் புறப்பட்டு சென்றார்.

வீட்டிற்குள் சென்று பூசை அறையில் நின்று அகத்தியரை மானசீகமாக வேண்டிய பின் "உங்கள் வார்த்தைகள் யாரிடம் சென்று சேரவேண்டுமோ அவரிடம் இப்பொழுது சென்று சேர்ந்திருக்கும்.  பிரச்சினை வராமல் காப்பாற்றுங்கள்" என்று வேண்டிய பின் உறங்க சென்றேன்.

நள்ளிரவில், நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த என்னை, யாரோ கதவை தட்டும் சத்தம் உணர்த்தியது. எழுந்து மணியை பார்க்க கடிகாரம் காலை நான்கு மணி என்று காட்டியது.

இந்த நேரத்தில் யார் வந்து கூப்பிடுகிறார்கள்? சரி! கதவை திறந்து பார்ப்போம் என்று தீர்மானித்து கதவின் அருகில் செல்லும் முன் இரண்டாவது முறை வாசல் கதவு தட்டப்பட்டது.  வேகமாக சென்று திறந்து பார்க்க..........

வாசலில் இரண்டு போலீஸ் உயர் அதிகாரிகள் நின்று கொண்டிருந்தனர்.

சித்தன் அருள்.................. தொடரும்!

Thursday, 13 September 2012

சித்தன் அருள் - 89

[வணக்கம்! இன்றைய சித்தன் அருள் தொகுப்பை வழங்க சற்று தாமதமாகிவிட்டது.  மன்னிக்கவும்.  அவனிடமிருந்து ஒரு தகவலையும் வாங்கி அதையும் சேர்த்து தரவேண்டி இருந்ததால் சற்று தாமதம். அவன் ஒதிமாலையில் ஓதியப்பரின் பிறந்தநாள் கொண்டாட்டத்துக்காக நண்பர்களுடன் சென்று இருந்தான்.  எனக்கு தகவலும் கிடைத்தது, அவன் பகிர்ந்து கொண்ட ஓதியப்பரின் பிறந்தநாள் படமும், எல்லோரும் நலமுடன் வாழ.............. இனி சித்தன் அருளை தொடருவோம்!]


மறுநாள் காலை மறுபடியும் தரிசனம் முடித்து பிரசாதம் வாங்கிக்கொண்டு, நன்றி சொல்லியபின், பக்தர், தலைவர் குழுவுடன் கீழே இறங்கி பூதிக்காடு சென்றனர்.  பூதிக்காட்டில் நிறுவப்பட்டிருக்கும் ஒரு கல் அப்படியே மலையின் ரூபத்தில் இருந்தது.  அது போகர் சித்தர் பூசை செய்த இடம்.  மௌனமாக நின்று த்யானித்துவிட்டு திரும்ப, பக்தர் அந்த கல்லின் அடிபாகத்திலிருந்து கொஞ்சம் மண்ணை எடுத்து அவன் நெற்றியில் இட்டு "மௌனமாக இருங்கள்! எல்லாம் வெற்றியாக அமையும்" என்றார்.  திடீரென்று அவர் அப்படி கூற அவனுக்குள் ஒரு எண்ணம் பிறந்தது.  தலைவர் இவரிடம் என்னவோ சொல்லி இருக்கிறார்.  அதன் அழுத்தம் மிக அதிகமாக இருக்கும் என்பதை அறிந்த பக்தர், "மௌனமாக இருங்கள்" என்று கூறினார் போலும். தலைவர் பக்தரிடம் "எல்லாத்துக்குமே காரணம் அவன் தான்" என்று சுருக்கமாக மொத்த வினைகளையும் அவன் தலையில் இறக்கி வைத்தார்.  அவனை பற்றி நன்றாக தெரிந்து வைத்திருந்த பக்தர் "மற்றவர்கள் சொல்வது இருக்கட்டும், நீங்கள் அதை நம்புகிறீர்களா?" என்று திருப்பி கேட்டார்.  தலைவர் மறுபேச்சின்றி இறங்கி போனார். மனிதரில் யாரை மலை போல் நம்பி இருந்து அத்தனை விஷயங்களையும் செய்தானோ, அவரே கை விட்டு பேசியபின் இனி யாரையும் நம்பி பயனில்லை என்று தீர்மானித்து ஒதிமலை ஓதியப்பரிடம் நிரந்தரமாக சரணடைந்தான், அவன்.  அவனுக்குள் ஒரு நம்பிக்கை - ஓதியப்பர் கனிந்தால், அவரால் மட்டும் தான் காப்பாற்ற முடியும் என்று.

ஓதியப்பர் முன் நடத்திய "சத்ரு சம்ஹார யாகம்" மிக வேகமாக பலன் கொடுக்க தொடங்கியது.  ஒரு வாரத்துக்குள் எதிரிகளாக இருந்தவர்கள் காணாமல் போனார்கள்.  அனைவரும் சதுரகிரியில் பிடித்து வைத்து ஆட்சி செய்துகொண்டிருந்த நிலையை இழந்தனர்.  மேலும் அவர்கள் அனைவரும் தங்களுக்குள்ளேயே சண்டை போட்டு பிரிய வேண்டிய நிலையில் தள்ளப்பட்டனர். என்னென்ன நடந்தது என்றால்

  1. மலை ஏறி வந்து அன்னதானத்தை முடிந்தவரை நன்றாக நடத்திக்கொண்டு வந்த எதிர் குழுவில் உள்ள ஒரு தலைவருக்கு உடல் நிலை பாதிக்கப்பட்டு நடக்க முடியாமல் போனது.  இன்று வரை அவரை தோளில் சுமந்து வந்து உட்காரவைத்து அன்னதானம் நடத்திக்கொண்டிருக்கிறனர்.  அவரும்  அவன் இருந்த குழுவின்  அன்னதானத்தை நிறுத்த தன்னால் ஆனா பண உதவியை செய்தார்.
  2. எதிர் குழுவுக்கு தவறு செய்ய வழிகாட்டிய ஒரு வக்கீல், அந்த குழுவின் தலைவராலேயே கீழே இறக்கிவிடப்பட்டார். அவர் தான் அத்தனை பிரச்சினைக்கும் காரணம்.
  3. எல்லோரும் போட்ட பணத்தை கொண்டு போய் குற்றச்சாட்டை சுமத்தி அந்த வழக்கை திரை மறைவில் நின்று நடத்திய ஒரு அன்னதான குழுவின் கணக்குபிள்ளை விபத்தில் மாட்டிக்கொண்டு தன் ஒரு காலும் கையும் உடைத்துக்கொண்டார். பிறகு மலை ஏற முடியாமல் போயிற்று.
  4. எதிரிகளாக நின்று அன்னதானத்தை தடை செய்ய காணரமாக இருந்த பலருக்கும், புது புது பிரச்சினைகளும், பல போலீஸ் நடவடிக்கைகளும் வந்து சேர்ந்தது.
  5. கோவில் அதிகாரிகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் பலருக்கும் கடுமையான சோதனைகளும், வியாதிகளும் வந்து வாட்டிட, பல இடங்களிலும் சென்று என்ன பிரச்சினை என்று பிரச்னம் வைத்து பார்க்க, அன்னதானத்தை நிறுத்த காரணமாக இருந்த தோஷம் தான் என்று வந்தது.

தலையாய சித்தர் நாடியில் வந்து சொன்ன படி போலீஸ் விசாரணைக்கு அவனை அழைத்தனர்.  இரண்டு நாட்கள் போய் இருந்து அத்தனை உண்மைகளையும் சொல்ல, தெளிவுகளை எடுத்துக்கொடுத்து நிரூபிக்க, இது பொய் வழக்கு என்று அவர்களால் தீர்மானிக்கப்பட்டு வழக்கு முடிவுக்கு வந்தது.  இதுவும் அகத்தியரின் அருளினால் தான் நடந்தது.

அகத்தியர் நாடியில் வந்து சொன்னபடி  சில நாட்களுக்கு அவன் அவமானங்களை சந்திக்க நேர்ந்தது.  அவன் நம்பி இருந்தவர்களே அவனை கை விட்டனர்.  அனைவருக்கும் அவர்கள் இருந்த நிலையை, பதவியை இழந்த கோபம், இவன் மேல் திரும்பியது.  அவனை பற்றிய பல அவதூறான வார்த்தைகளை பரப்பினர்.

  1.  "எல்லாத்துக்குமே அவன் தான் காரணம்" - இது தலைவர் 
  2. "அவன் பெரிய மந்திரவாதிங்க, இஷ்டத்துக்கு எங்க வேணும்னாலும் போவான், காட்டுக்குள்ளே எங்கேயோ போய் உட்கார்ந்து ஜபம் பண்ணுவான்.  அவனை நம்பாதீங்க" இது அவனை அழைத்து சென்ற பக்தரிடம், குழு உறுப்பினரால் சொல்லப்பட்டது.
  3. "எல்லாத்துக்குமே அவன் தான் காரணம்.  இனிமே இங்க இருக்கிறவங்க யாருமே அவனை மலைக்கு கூட்டிண்டு வரக்கூடாது" - இது பூசாரி, கோவில் அதிகாரிகளுடன் நடத்திய ஒரு ரகசிய சந்திப்பில், தலைவர் முன்னிலையில் கூறினார்.  தலைவர் மௌனமாக இருந்தார்.
  4. "அவன் விஷயத்தில் நடவடிக்கை எடுக்க போய், நாங்களும் எங்கள் குடும்பமும் வாங்கி கட்டிக்கொண்ட கஷ்டங்கள் போதுமுங்க.  நீங்க யார வேணா சேர்த்துண்டு அன்னதானம் பண்ணுங்க.  ஆனா அவன் மட்டும் வரக்கூடாது" - இது கோவில் அதிகாரிகள்.
  5. "அடி பட்டவன் கூட சேர்ந்தா, அவன் அடி பட்டதின் வலியை நீங்களும் சுமக்க வேண்டி வரும்.  ஆதலால், விலகிவிடுங்கள்" என்று தலைவர் அவன் நண்பர்களிடம் கூற அனைவரும் விலகினார்கள். அவனை தனி மரமாக்கி தவிக்க விட வேண்டும் என்பது தலைவரின் எதிர்பார்ப்பு என்று உணர்ந்தான்.
  6. "அவன் வீடு ஒரு சாக்கடை.  அவன் கூட யாராவது சேர்ந்து இருப்பார்களா" என்று தலைவர் ஒருவரிடம் கூற, அது இவன் காதுக்கு வந்து சேர்ந்தது.  அத்தனை நாட்களாக அவன் ஊருக்கு வரும் போதெல்லாம் அவன் வீட்டில் தங்கி தான் உணவருந்தியுள்ளோம் என்பதையும் மறந்து அவர் அடித்த கமென்ட்.
  7. "நீ உருப்படமாட்டே! இந்த வருஷம் கண்டிப்பாக தோற்றுபோவே! நீ எப்படி பாசாகிறேனு நான் பார்க்கிறேன்" என்று அவன் மீது இருந்த கோபத்தில், அவன் மகளிடம் மிக கடுமையாக ஆசிர்வாதம் செய்தார் தலைவர்.
  8. எத்தனையோ முறை எடுத்து சொல்லியும், அவன் நட்பை விட முடியாது என்று சொன்ன ஒரு நண்பரிடம் "அவனை பற்றி உனக்கு என்ன தெரியும்?  அவனுக்கு எத்தனை பெண்கள் கூட தொடர்பு இருக்கிறது என்று உனக்கு தெரியுமா?" என்று கூற இதுவும் அவன் காதுக்கு வந்து சேர்ந்தது.
  9. கடைசியாக தலைவர் அவனிடம் வந்து "உனக்கு யாரோ செய்வினை வெச்சிருக்கா! முடிஞ்ச உன்ன நீயே காபாத்திக்கோ" என்று கூறி கைவிட்டு சென்றார். (பயப்படாமல் விசாரிக்க, அகத்தியர் சித்தர் செய்வினையில் நம்புவதில்லை என்றும், இந்த மாதிரியான விஷயங்களுக்கு பயப்படவேண்டாம் என்று அவனுக்கு தெரிவிக்கப்பட்டது.)

அத்தனை அவமானங்களையும் அகத்தியரின் உத்திரவால் பொறுமையாக இருந்து கேட்டுக்கொண்டான்.  எதற்கும் பதில் கூறவும் இல்லை,  யாருக்கும் விளக்கம் அளிக்கவும் இல்லை.  மௌனத்தையே தவமாக கொண்டு தொண்ணூறு நாட்களை கழிக்க, சதுரகிரியில் பூசாரியின் தலைமையில் மறுபடியும் அன்னதானம் தொடங்கப்பட்டது.  அகத்தியர் அருளியதுபோல் மூன்று அமாவாசை கழிந்தபின் அது நிறைவேறியது.  ஓதியப்பர் எதிரிகளை அழிக்க, அகத்தியர் அருளினால் அன்னதானத்துக்கு உயிர் ஊட்டப்பட்டது.  அங்கு உறையும் பெருமானிடம் அவன் செய்து கொடுத்த சத்தியத்தின் படி அதன் பின் மலைக்கு செல்லவில்லை.

தலையாய சித்தர் அகத்தியரின் வாக்குக்கு அடி பணிந்து அந்த காலங்களில் நடந்து கொண்டதற்கு அவனுக்கு கிடைத்த பரிசுகள், வாய்ப்புகள் அளவிடமுடியாதது.  ஓதியப்பர் அருள் அவனுக்கு பரிபூரணமாக கிடைத்தது.  அனைத்தையும் ஒரு முடிவுக்கு கொண்டு வந்ததற்கு நன்றி சொல்லும் விதமாக இரண்டாவது முறை நான்கு மாதங்களுக்கு பின் ஒதிமலைக்கு சென்ற போது யாகம் நடத்திய பூசாரிக்கும் அருளிய ஒதிப்பருக்கும் மனமார்ந்த நன்றியை சொன்னான்.  அபிஷேகம் தொடங்கும் முன் பூசாரி அவனிடம் வந்து "போய் குளித்து விட்டு மடி வஸ்திரம் உடுத்திவாருங்கள்.  உள்ளே அபிஷேகத்துக்கு உதவி பண்ணவேண்டும்" என்றார்.  அவன் அதிர்ந்து போனான்.  இப்படியும் ஓதியப்பர் அருளுவாரா?  முதன்முறையாக ஓதியப்பரை தொட்டு அபிஷேகம், அலங்காரம், பூசை செய்யும் வாய்ப்பு அவனுக்கு கிடைத்தது.  அபிஷேகத்துக்கு முன் எண்ணை காப்பு போட, எதேச்சையாக ஓதியப்பரின் இடது கன்னத்தில் கை வைக்க, எதோ ஒரு மின்சாரம் போல் ஒன்று அவன் கை வழியாக இறங்கி உடலுக்குள் சென்று அவனை நிலை குலையச் செய்தது.  அது ஒரு அபூர்வ தருணம்.  அதன் பின்னர் ஒதிமலை பற்றிய ரகசியங்கள் பலதும் அவனுக்கு தெரிவிக்கப்பட்டது, அல்லது அவனை மட்டும் தேடி வந்து அடைந்தது.  சாதாரண பக்தனாக அகத்தியர் கோயில் இருக்கும் இடத்திற்கெல்லாம் சென்ற போது நிறைய அனுபவங்கள், ஆசிர்வாதங்கள் அவனை தேடி வந்து அடைந்தது.

இறை திருவிளையாடல்களை புரிந்து கொள்வது என்பது மிக கடினம்.  சித்தர்கள் அதையும் மறைத்தே வைக்கிறார்கள்.  மறைத்து வைத்தது மறைந்தே இருக்கவேண்டும்.  அதை தேடி போனால், இது போல் ச்ரமங்களை அனுபவிக்க வேண்டி வரும் என்பதற்கு அவனுக்கு நடந்தது ஒரு சின்ன உதாரணம்.

சித்தன் அருள் ....................... தொடரும்!

Thursday, 6 September 2012

ஓதியப்பர் (முருகர்) பிறந்தநாள் இந்த வருடம் - 12/09/2012

போகர் சித்தரின் வாக்கின்படி முருகர் பிறந்தது "ஆவணி மாதம் பூசம் முதற் காலில், திங்கள் கிழமை அன்று"..  அப்படியானால் இந்த வருடம் செப்டம்பர் மாதம் (இந்த மாதம்) பன்னிரெண்டாம் தியதி அன்று பூசம் நட்சத்திரம் வருகிறது.  அடியவர்களே அன்று முருகர் கோவிலுக்கு போய் அவரை தரிசனம் செய்யலாமே.  எங்கே? ஓதிமலையிலேயா?

ஓதிமலை எங்கிருக்குன்னு கோயம்புத்தூர் போய் விசாரிக்காதீங்க. அங்கிருப்பவர்கள் நிறைய பேருக்கு தெரியாது.  இன்டெர் நெட்டை துழாவுங்கள்.

சித்தன் அருள் - 88


மெதுவாக யாக குண்டம் உருவாகத் தொடங்கியது.  ஒவ்வொரு கல்லாக எடுத்து வைக்கும் போதும் அவனுள் ஏதோ ஒரு பாரம் குறைவது போல் உணர்ந்தான்.  இறுகிப்போயிருந்த மனது மிக மென்மையானது.  இதற்குள், பூசையை முடித்துவிட்டு வந்த பூசாரி, யாக குண்டத்தை பார்த்து சில திருத்தங்களை சொன்னார்.  அவையும் நிறைவேற்றப்பட்டது. 

கல் அடுக்கப்பட்டு, பசும் சாணம் கொண்டு யாக குண்டம் மொழுகப்பட்டது.  கற்களின் நடுவிலும் இரு முனைகளிலும் அரிசி மாவினால் கோலம் இடப்பட்டு, சந்தானம் குங்கும பொட்டு வைக்கப்பட்டது.  நடப்பவை எல்லாவற்றையும் தூரத்திலிருந்து பர்த்துக்கொண்டிருந்தவனுக்கு, உள்ளே ஒரு எண்ணம்.  யாக குண்டம் உருவாகுவது கூட, ஒரு கோவிலின் கும்பாபிஷேகத்துக்கு எத்தனை கவனமாக உருவாக்கப்படுமோ, அது போல் நேர்த்தியாக உருவாக்கப்பட்டது.  யாக குண்டத்தின் உயரம் சுமார் இரண்டடி இருந்தது.  இத்தனை பெரிய யாக குண்டம் தேவையா? என்ற கேள்வி அவனுக்குள் உதித்துக் கொண்டே இருந்தது.

அவன் மனதை படம் பிடித்த பக்தர் அருகில் வந்து, "இத்தனை உயரம் தேவை! அத்தனை பிரச்சினைகள் இருக்கு போல.  அதான் ஓதியப்பர் பூசாரியை விட்டு உயரத்தை கூட்ட வைத்தார் போல்" என்று கூறினார்.

சற்று வித்யாசமான சிந்தனையாக இருக்கிறதே என்று அவரை நிமிர்ந்து பார்க்க, அவரும் சிரித்தபடியே "என்ன பார்க்கறீங்க! அந்த அளவுக்கு ஓதியப்பரும், பூசாரியும் தோள் மேல் கை போட்டு குசலம் விசாரிக்கிற அளவுக்கு நெருங்கிய நண்பர்கள்.  சிலதெல்லாம் போக போகத்தான் புரியும்" என்று கூறி "வாருங்கள், யாகத்துக்கு தேவையான சமித்து, நவ தானியங்கள் போன்றவைகளை எடுத்து பிரித்து வைக்கலாம்" என்று கூறி அழைத்து சென்றார்.

எல்லா யாக சாமான்களையும் எடுத்து வைக்க, பூசாரி வந்து வரிசை கிராமமாக ஒவ்வொன்றையும் அடுக்க, மள மளவென யாக சூழ்நிலை உருவாகியது.  இதற்குள் மாலை நெருங்க, பூசாரி சந்த்யாகால பூசைக்கு சென்றார். 

பக்தர், அன்னதான குழுவின் தலைவருக்கும் அழைப்பு விடுத்திருந்ததால் அவரும் வந்து சேர்ந்திருந்தார்.  பூசை முடித்து வந்த பூசாரி, "சரி! இப்பொழுது சொல்லுங்கள்! என்ன பிரச்சினை" என்று விசாரிக்க, சுருக்கமாக ஆனால் முக்கியமான விஷயங்களை உட்படுத்தி அத்தனையும் விளக்கப்பட்டது.  அனைத்தையும் கேட்டுக்கொண்டிருந்த பூசாரி திடீரென்று உள்ளே எழுந்து சென்று ஓதியப்பர் முன் நின்று சற்று நேரம் த்யானத்தில் இருந்தார்.  சற்று நேரத்துக்கு பின் வெளியே வந்து "இருபத்தி ஐயாயிரம் ஆவர்த்தி ஜெபிக்க சொல்லி வருகிறது  யாகத்திற்கு நான்கு பேர் வேண்டும்" என்றார்.

இதை கேட்ட பக்தர், பூசாரி, அவர் சகோதரர், அவன் என்று மூன்று பேர் இருக்கவும், நான்காவது ஆளை தேட தொடங்க, தலைவர் இருப்பது ஞாபகம் வர, நான்காவதாக அவரை சேர்த்து நான்கு பேரை யாகத்துக்கு அமர்த்த முடிவு பண்ணினார்.

அவன் பக்தரிடம் சென்று, யாகத்தில் அமர்பவர்கள், சங்கல்பம் எடுத்துக்கொள்பவர்கள் அனைவரும் காப்பு கட்டிக்கொள்ள வேண்டும்,  அதன் பிறகு தான் உட்காரலாம் என்று கேட்டுக்கொண்டான்.  அதுவும் சரிதான் என்று தீர்மானித்து, பூசாரியிடம் சொல்லி அனைவருக்கும் காப்பு கட்டி விட முடிவு செய்யப்பட்டது. 

திடீரென "முதல் முறையாக இந்த மலை கோவிலில் ஒரு "சத்ரு சம்ஹார யாகம்" நடக்க போகிறது.  அவன் எதை நினைத்துக்கொண்டு இதை நடத்துகிறான் என்று தெரியவில்லை" என்று கூறிய பூசாரி சந்நிதியை பார்த்தார்.  ஒரு சில பூக்கள் முருகர் தலையிலிருந்து வலது பக்கமாக அவர் காலடியில் விழுவதை கண்டார்.

"சரி! உத்தரவு கொடுத்துட்டான், யாகத்தில் உட்காருபவர்கள் சென்று குளித்து விட்டு வாருங்கள்" என்று சொல்லிவிட்டு தானும் குளிக்க சென்றார்.

சுனை, குளம் என்று ஒன்று இல்லாவிடினும், தொட்டியில் பிடித்து வைக்கப்பட்ட தண்ணீரை ஊற்றி குளித்த உடன், அவன் மனமும் குளிர்ந்து ஒன்று பட்டது.  "சரி! இன்று என்னவோ நடக்க போகிறது.  முருகர் யாகத்தை ஏற்று வாங்கிக்கொண்டு, எல்லாவற்றையும் சரி பண்ணி கொடுத்தால் மட்டும் போதும்" என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டு யாக குண்டத்தின் முன் சென்று நின்றான்.

மணி இரவு ஒன்பது.  பூசாரி உள் சென்று ஒதிப்பரிடம் உத்தரவு வாங்கி, அவர் சக்தியை கலசத்தில் ஆவாகனம் செய்து, கணபதி பூசை செய்து, கலச பூசை செய்து அடுத்ததாக யாக குண்டத்தில், யாக்கக்னியை சேர்த்தார்.  கிழக்கு பார்த்து நின்ற முருகனுக்கு நேர் எதிரில் அவன் அமர்ந்தான். அனைவருக்கும் காப்பு கட்டப்பட்டது.

யாகம் தொடங்கியது.  இரவு நேரமாகியதால், ஒவ்வொரு மணி ஓசையும், மந்திரமும் கணீர் என்று முழங்க சுற்றுப்புற சூழலே, வேள்வியாக உருவெடுத்தது.  கூட வந்திருந்த ஒரு நண்பர், யாகத்தை புகை படம் எடுக்க ஒவ்வொரு படத்திலும் விசித்திரமான ரூபங்கள் தெரிய ஆரம்பித்தது.  வெளியிலிருந்து அடித்த குளிர்ந்த காற்று யாகத்தில் அமர்ந்திருந்தவரின் முதுகு பாகத்தை குளிர்வித்தது.  முன்னே யாக குண்டத்தில் எரிந்து கொண்டிருந்த அக்னி உடலின் முன் பாகத்தை கொதிக்க வைத்தது.  அவனுக்கு இவை இரண்டும் ஒரு போலவே தோன்றியது.  வித்யாசமே தெரியவில்லை.  உடல் மட்டும் ஒரு நிலையில் கல் போல் இருந்தது.  எதுவுமே அவனை பாதிக்க வில்லை.

நவ தானியங்களை சேர்த்துவிட்டு மந்திர உபாசனயுடன் யாகம் தொடர அக்னி கொழுந்து விட்டு எரிந்தது.  சுருக்கமாக சொல்வதானால், யாகத்தில் அனைவரும் அமிழ்ந்திருக்க, காலம் என்பதே நின்று போனது போல் தான் அனைவரும் உணர்ந்தனர்.  படிப்படியாக யாகம் வளர, அதன் முடிவில், பட்டு வஸ்திரம், தாம்பூலம், கனி வகைகளை சேர்த்து அக்னி தேவனுக்கு ஆஹூதி கொடுக்கப்பட்டு யாகம் நிறைவு பெற்றது. 

யாகம் நிறைவு பெற்ற போது நடு இரவு மணி ஒன்று.  யாக குண்டத்தை விட்டு எழுந்த பூசாரி, மறுபடியும் முருகரை ஆவாகனம் செய்து, சன்னதிக்குள் கொண்டு சென்றார்.  கலசங்கள் ஒவ்வொன்றாக  மந்திர உச்சாடனத்துடன் சன்னதிக்குள் கொண்டு செல்லப்பட்டு, அபிஷேகம் தொடங்கியது.

அபிஷேகம் ஒரு கண் கொள்ளா காட்சி.  ஒவ்வொரு விதமான, வித்யாசமான முக பாவங்களை,  உணர்ச்சிகளை அந்த முருகர் முகத்தில் காண முடிந்தது.  புன்முறுவலுடன், அமைதியாக, அபிஷேகத்தை ஏற்றுக்கொள்கிற முருகரின் முக பாவம் எல்லாவற்றிலும் மேன்மையாக அவனுள் பதிந்தது. 

விதவிதமான அபிஷேகங்கள், ஐந்தடி உயர, ஐந்து முகம், எட்டு கை கொண்ட சிலைக்கு நடப்பதை முதன் முறையாக அவன் பார்த்த போது அவனுள் எதோ ஒரு மாற்றம் படர தொடங்கி இருந்தது.  எதையோ நெருங்கிவிட்டோம் என்று உணர முடிந்தது.  என்ன என்று பேதம் பிரித்து உணர முடியவில்லை.  ஆனால் யாரோ ஒரு கனமான பாரத்தை அவன் தலையிலிருந்து இறக்கி வைத்தார் போல் ஒரு உணர்வு.

அபிஷேகம் முடிந்து, அலங்காரத்துக்காக திரை இடப்பட்டது.  மொத்தம் ஒரு பதினைந்து பேர் இருந்தனர். 

களைப்பு மேலிட, உறங்கி விடுவோம் என்கிற நிலையில் இருந்த அவன், அருகில் இருந்த ஒரு தூணில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான்.  திரை விலக்கி தீபாராதனை காட்டியபோது, பெரும் காட்டாற்று வெள்ளமாய், முருகரின் அழகு அங்கு நின்ற அனைவரையும் தாக்கியது.  அவன் கூட தூக்கம் விலகி ஒரு நிமிடம் ஸ்தம்பித்து நிற்க, ஓதியப்பர் புன்னகை தவழவிட்டு வலக்கரம் தூக்கி ஆசிர்வதித்தபடி இருந்தார்.

"இனி உன் துயர் யாம் விலக்கினோம், யாமிருக்க பயமேன்" என்று அவன் புத்தியில் உரைத்தது.

பூசையின் அனைத்து அம்சமும் முடிந்து ஓதியப்பரின் தலையில் ஒரு கொத்து பூவை வைத்து தீபாராதனை காட்டி விட்டு, பூசாரி,

"யாருக்காவது உத்தரவு கேட்கவேண்டுமா?" என்றார்.

அவன் பக்தரை பார்க்க, அவர் கண் அசைக்க, "எனக்கு உத்தரவு கேட்கவேண்டும்" என்று பூசாரியிடம் கூறினான்.

"சரி! வந்து நமஸ்காரம் பண்ணிவிட்டு முட்டி போட்டு அமருங்கள்" என்றார் பூசாரி.

இருந்த அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க, இரு கம்பிகளின் இடையில் நடந்து சன்னதியின் வெகு அருகில் சென்று நமஸ்காரம் செய்தான்.  அவர் சொன்ன படி முட்டி போட்டு அமர்ந்து மனதுள் கேள்விகளை தயார் செய்தான்.

"முருகா! எனக்கென்று எதுவும் வேண்டாம்.  இன்று நடந்த யாகத்தை, அபிஷேகத்தை, பூசையை நீ எற்றுக்கொண்டாயா?  குறை ஒன்றும் இல்லையே?  சதுரகிரியில் ஒரு சில பிரச்சினைகளால், அன்னதானம் செய்வது நின்று போய் விட்டது.  அது மறுபடியும் தொடங்கி நடக்க வேண்டும்.  நான் அங்கு இல்லாமல் போனாலும் சரி.  பொய் குற்றச்சாட்டு சொல்லி அதை நிறுத்தியவர்கள், விலகி விட வேண்டும்.  யாரையும் கொல்ல வேண்டாம்.  அவருக்குள் இருக்கும் சத்ரு தன்மையை விலக்கி விடு.  காவல் துறையால் பிரச்சினை வரக்கூடாது.  உனது அருள் என்றும் வேண்டும்.  பதில் சொல் ஓதியப்பா!" என்றான்.

ஓதியப்பர் பதில் சொல்லும் முறையே மிக வித்யாசமாக இருக்கும். நம் வேண்டுதலை சொன்ன பிறகு, அவர் தலையில் இருந்து பூ அவரின் வலது பக்கமாக விழ்ந்தால் "நல்லது நடக்கும்".  இடது பக்கமாக இருந்தால், "வேண்டுதலுக்கு அனுமதி இல்லை" என்று பொருள்.  வலம் இடம் அல்லாமல், நடுவாக விழ்ந்தால் "இப்போது இருக்கும் நிலை போதும்" வேறு மாற்றங்கள் தேவை இல்லை என்று பொருள்.  இது பக்தர் சொல்லி தெரியவந்தது.

அனைவரும் ஓதியப்பர் என்ன பதில் சொல்ல போகிறார் என்று காத்து நின்றனர். 

சற்று நேர மௌனத்துக்கு பின், அனைவரும் பார்த்துக்கொண்டிருக்க, ஓதியப்பரின் வலது பக்கத்திலிருந்து, அவருக்கு கழுத்தில் போடப்பட்டிருந்த மிக பெரிய மாலை ஒன்று அறுந்து வீழ்ந்தது.

பார்த்துக்கொண்டிருந்த பூசாரி முதல், பக்தர் வரை, அனைவரும் ஆச்சரியத்தால் வாய் பிளந்து அதிர்ச்சிக்குள்ளானார்கள்.  பூசாரி சட்டென்று திரும்பி அமர்ந்த நிலையில் இருந்த அவனை பார்த்தார்.  உடனே ஓதியப்பர் முகத்தை பார்த்தார்.

பக்தர் நடந்ததை புரிந்து கொண்டு அவனிடம் "எழுந்திருங்கள்! உங்களுக்கு பதில் தந்தாகிவிட்டது. எல்லாம் ஷேமமாக நடக்கும், பிரச்சனைகள் விலகிவிட்டது, அவ்வளவு தான். என்றார்!"

"சாமி இனிமேல் தான் நான் என் விஷயம் கேட்கலாம் என்று நினைக்கிறேன்!"

"மன்னிக்கவும்! இனிமேல் உங்களுக்கு உத்தரவு கேட்க முடியாது!  எழுந்திருங்கள்!  விட்டா எங்கள் முருகரை நீங்கள் சுருட்டிக்கொண்டு போய் விடுவீர்கள் போல இருக்கிறதே.  அவனும் நீங்கள் கேட்டதற்கு இப்படி எல்லாம் வரம் தருகிறான்!"

"நான் என்ன தப்பு பண்ணினேன் என்று நீங்கள் இத்தனை விரட்டு விரட்டுகிறீர்கள்?"

"சாமி! அவனவன் ஒரு பூ விழுவதற்கு அவர் காலில் கட்டிக்கொண்டு அழுவான். அப்படியும் அவன் வரம் கொடுக்கமாட்டான்.  உங்களுக்கு பூ மாலையையே அறுத்து கொடுத்திருக்கான்.  போய் ஆகிற வேலையை பாருங்க" என்று கூறி வந்து அவனை கையை பிடித்து அழைத்து சென்றார் பக்தர்.

ஒன்றும் பேச முடியாமல், நேராக யாக குண்டத்தை போய் பார்க்க, ஆஹூதியில் கொடுக்கப்பட்டதெல்லாம் நன்றாக எரிந்து அடங்கி ஒடுங்கி இருந்தது. அது ஒரு நல்ல சகுனம் என்று அவன் மனம் உரைத்தது.  அத்தனையும் அவர் ஏற்றுக்கொண்டுவிட்டார்.  இனி நம் கையில் எதுவுமே இல்லை என்று தீர்மானத்துக்கு வந்தவன், மறுபடியும் சன்னதியிர் சென்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தான்.

அப்பொழுதும் பூசாரிக்கு அதிர்ச்சி விலகவில்லை.  சிரித்தபடியே அவனிடம் வந்து "என்னையா பண்ணறீங்க.  என் அப்பன எப்படி இந்த அளவுக்கு மயக்க முடிந்தது?" என்று கேட்டார்.

"எனக்கு என்ன சாமி தெரியும்! எல்லாம் அவன் செயல்" என்று கூறி "இனிமேல் எல்லாம் சரியாகிவிடும் என்கிற நம்பிக்கை எனக்கு வந்து விட்டது" என்றான்.

ஓதியப்பரும், தலையாய சித்தர் அகத்தியரும்  உண்மையாகவே அனைத்து பிரச்சினைகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டார்கள் என்று அவனுக்கு பிறகுதான் புரிந்தது!


சித்தன் அருள்............. தொடரும்.