முன்பு -
அந்த மலைகோயிலில் மூன்று இரவுகள் நான் தங்கியபோழுது - "பாம்பு" எதுவும் என் கண்ணில் பட்டதில்லை. இப்பொழுதுதான் சுமார் எட்டடி நீளமுள்ள அந்தக் கருநாகத்தைப் பார்த்தேன்.
இது இரை தேடி வந்த பாம்பா அல்லது இரை எடுத்து உண்ட பாம்பா - என்று என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஏனெனில் இரைதேடி வந்த பாம்பென்றால் யார் குறுக்கே வந்தாலும் அல்லது நின்றாலும் அது பயங்கரமாகச் சீரும். பின்னர் பயந்து கொண்டே வெகு வேகமாக மறைவிடத்தை நோக்கி ஓடும்.
ஒரு வேளை நன்றாக இரையை உண்டு விட்டால் அது நிதானமாக ஊர்ந்து புதர், குழி அல்லது குளிர்ச்சியான இடத்தை நோக்கி நகரும். பெரும்பாலும் ஒன்றும் செய்யாது என்று கேள்வி.
ஒரு வேளை அந்தப் பாம்பு என்னை நோக்கி வந்தால் நான் வேகமாக ஓடியோ அல்லது அங்குள்ள கோயில் திண்ணையின் மீது ஏறியோ அல்லது கம்போ - குச்சியோ கொண்டு அதை விரட்டியடித்துத் தப்பித்துக் கொள்ள முடியும்.
ஆனால் இதற்கெல்லாம் மாறாக - அந்தக் கருநாகம் இப்பொழுது தூங்கிக் கொண்டிருக்கும் திக்கு வாய்க்காரனுக்கு கால் பக்கத்தில் வந்து கொண்டிருப்பதால் அது என்ன செய்யுமோ எது செய்யுமோ என்ற பயம் ஏற்பட்டது. நல்ல வேளை அவன் அசந்து தூங்கிக் கொண்டிருந்தான். ஒரு வேளை அவன் சட்டென்று புரண்டு அந்தப் பாம்பின் மீது சாய்ந்து விட்டால் அவன் கதி அதோ கதி தான். பாம்பும் அவனைத் தீண்டிவிடும். பின் எப்படி ஜமீனுக்குச் சொந்தமாவது? என்ற கற்பனையும் எனக்கு ஏற்பட்டது.
முன்பொரு சமயம், பாம்புக்கடியை மந்திரம் மூலம் குணப்படுத்த முடியுமா? என்று அகஸ்தியரிடம் நாடி மூலம் கேட்டபொழுது "முடியும்" என்று சொன்ன அகஸ்தியர் எனக்கு அந்த மூலமந்திரத்தை உபதேசித்தார். அது மட்டுமல்ல, தேள்கடி, நட்டுவாக்கள்ளி கடி, விஷ வண்டுகள் கடி தாக்கினால் அதிலிருந்து தப்பிக்க என்ன என்ன மந்திரம் உண்டு என்பதையும் சொன்னார்.
இந்த விஷக்கடியைப் போக்கும் மந்திரங்கள் நிலைத்துப் பலம் தர வேண்டுமானால் சில விதிகளைத் தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும். அப்படிச் செய்ய முடியாது போனால், மந்திரங்களுக்குப் பலன் இருக்காது. பின்னர் அகஸ்தியரைப் பழிப்பதில் அர்த்தமில்லை என்றும் அறிவுரை சொன்னதால் முதலில் அவர் சொன்னபடி சில விதிமுறைகளைக் கையாண்டேன்.
அவற்றில் ஒன்று தான் கிரகணத்தன்று முட்டியளவு நீரில் நின்று சில குறிப்பிட்ட மந்திரங்களை விடாமல் ஜபிப்பது. இதனைப் பின்னர் நான் தொடர்ந்து செய்ய முடியாது போயிற்று!
இப்பொழுது அந்த கருநாகம், திக்கு வாய்க்காரனை ஒரு வேளைத் தீண்டினால் அகஸ்தியர் அருளிய அந்தப் பாம்புக்கடி மந்திரம் பலிக்குமா? என்பது சந்தேகம் தான். இது வரையிலும் "பாம்புக்கடி" கடித்தவர்களுக்கு நான் மந்திரம் சொல்லக் கூடய சந்தர்ப்பமும் பாக்கியமும் ஏற்பட்டதில்லை.
இன்றைக்கு அப்படிப்பட்ட சம்பவம் இங்கு நடக்கப் போகிறதா? அதற்காகத்தான் அகஸ்தியப் பெருமான் என்னை இங்கு வரவழைத்து விட்டாரா? என்று கூடத் தோன்றியது. இதற்கிடையில்......
அந்தக் கருநாகம் திக்கு வாய்க்காரன் கால் பக்கத்திலிருந்து மெதுவாக ஊர்ந்து அவன் இடுப்பு வழியாக மேலேறியது. சுற்று முற்றும் ஒரு தடவை நன்றாகப் பார்த்து. பின் அவனது வயிற்று பக்கமாக விறுவிறு என்று இறங்கி - நேர் எதிரில் தெரிந்த கோயிற் கதவின் இடுக்கு வழியே கருவறைக்குள் புகுந்து விட்டது.
"அப்பாடா" என்று நிம்மதிப் பெருமூச்சை விட்டாலும், அந்தப் பாம்பு நேரிடையாகக் கோயில் கர்பக்ரகத்துக்குள் போயிருக்கலாம் - எதற்காக இவன் மீது ஏறி அவனை ஒன்றும் செய்யாமல் பின் இறங்கிச் சென்றது? - என்ற கேள்வி மட்டும் என் உள்மனதை உறுத்திக் கொண்டிருந்தது.
இத்தனை நடந்தும் கூட, அவன் ஆடாமல் - அசையாமல் தூங்கிக் கொண்டிருந்தான். அவனை எழுப்பினேன்.
என்னைக் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத அவனுக்கு - ஆச்சரியமும் ஆனந்தமும் தாங்க முடியவில்லை. அவனை ஆச்வாசப்படுத்தி "கருநாகம்" வந்து போன செய்தியைப் பற்றிச் சொன்னேன்.
பரவசப்பட்டுப் போனான். அதோடு தொடர்ந்து கோயிலில் விளகேற்றுவதாகவும் கூறினான்.
இனியும் அங்கு நேரத்தைக் கழிப்பதில் பயனில்லை என்றெண்ணி கிராம கர்ணத்திடம் உத்திரவு பெற்றுக் கிளம்பிக் கொண்டிருக்கும் சமயத்தில் புழுதியைக் கிளப்பிக் கொண்டு ஒரு கார் அங்கு வந்து நின்றது.
வந்திருப்பவர்களில் ஒருவர் மலயாளத்துக்காரர். மற்றவர்கள் அனைவரும் தமிழர்கள், ஆனால் கிராமத்து தோற்றம்.
"இங்கே கிராம அதிகாரியின் வீடு எதுங்க?" என்று கேட்டார் ஒருவர்.
"அதோ அந்த வீடுதான். ஆனா அவரு ஊர்ல இல்லீங்களே".
"எப்போ வருவாங்க?"
"சொல்ல முடியாது. இரண்டு, மூன்று நாள் ஆகலாம். நீங்க யாருங்க? நான் இந்தக் கிராமத்து கர்ணம், ஏதாவது வேணும்னா என்னைக் கேட்கலாம்".
"உங்க கிட்டே கொஞ்சம் தனியா பேசணும்".
"வாங்க திண்ணையிலே உட்கார்ந்து பேசலாம்" என்ற கர்ணம், அவர்களை அழைத்தார். என் பக்கத்தில் நின்று கொண்டிருந்த அந்தத் திக்கு வாய்க்காரனைக் கடைக்கு அனுப்பி "சோடா கலர் வாங்கி வா" என அனுப்பினார்.
"நாங்க, ராமையன்பட்டி ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவங்க. எங்க குடும்ப வாரிசுக்குப் பிறகு ஒரு ஆண் குழந்தையை பணத்துக்கு ஆசைப்பட்டுத் தூரத்துச் சொந்தக்காரங்க சிலர் பல வருஷங்களுக்கு முன்பு கடத்திட்டுப் போனாங்க. அப்புறம் அந்தப் பையனைப் பத்தி விவரம் கிடைக்கலீங்க. நாங்களும் தேடித் பார்த்து விட்டுட்டோம். ஒன்னரை மாசத்துக்கு முன்பு அந்தத் தூரத்துச் சொந்தக்காரங்கள்ல ஒருவன் ஒரு கடிதாசி போட்டிருந்தான். அதில் அந்தக் குழந்தையை ஈரோட்டிலே பிளாட் பாரத்திலே போட்டுட்டு ஓடிப் போயிட்டதாகவும், அது உயிரோடு தான் இந்தப் பக்கம் இருக்குன்னு எழுதி, தாங்கள் செய்த தவறுக்குத் தெய்வம் இப்போ வேறு விதமாகத் தண்டனை கொடுத்துட்டதாகவும் ஆயிரம் மன்னிப்புக் கேட்டு எழுதியிருந்தான். இப்போ அந்த ஜாமீனுக்கு வாரிசு இல்லை. அந்த ஜமீந்தார் தனது உயில்லே காணாம போன என் பையனைக் கண்டு பிடிச்சு அவங்ககிட்டே இந்த ஜமீனை ஒப்படைக்கவும், அப்படி அவனைக் கண்டுபிடிக்க முடியவில்லைனா திருப்பதி கோயிலுக்கோ அல்லது அரசாங்கத்திர்க்கோ சொத்தைக் கொடுத்து விடலாம்னு எழுதிட்டுச் செத்துப் போயிட்டாருங்க."
"எங்களுக்கு அந்த ஜமிந்தார் செத்துப் போன பத்து நாளுகளுக்குப் பிறகுதான் அவர் உயில் சமாச்சாரம் இதோ இருக்காரே இந்த வக்கீல் மூலம் தெரிய வந்தது. அதே நாள்லதான் அந்தத் தூரத்துச் சொந்தக்காரங்க கிட்டேயிருந்து பையனைப் பத்தி விவரம் கிடைச்சுது.
இதை தெய்வ பலமா நெனச்சு சந்தோஷப்பட்டோம். பத்து நாளைக்கு முன்னால இந்த ஈரோடு, சேலம், திருப்பூர் பக்கம் விசாரிச்சோம். அநாதை ஆஸ்ரமத்திலே போய்க் கேட்டோம். கிறிஸ்துவ பாதிரியார் கிட்டே, ஹோட்டல் நடத்தரவங்ககிட்டே, போலீஸ் காரங்கிட்டே எல்லாம் போய் கேட்டோம்.
அங்க அடையாளம் இல்லாம பையனைக் கண்டுபிடிக்க முடியாதுன்னு சொல்லிட்டாங்க" என்று சுவாரஸ்யமாக நடந்த கதையைச் சொல்லி நிறுத்தினார், வந்தவர்களில் ஒருவர். ஆஜானுபாகுவாக இருந்த அவர், ஜமீந்தாருக்கு வேண்டியவர்னு தெரிந்தது. சென்னைக்குக் கிளம்புவதர்காகத் தயாராக இருந்த எனக்கு இந்தத் தகவல் மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்தது. ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. இதற்குள் கிராம கர்ணம், "அய்யா.... வாங்க இப்படி உட்கார்ந்து நீங்களும் இவங்க சொல்றதைக் கேளுங்க" என்று உற்சாகமாக அழைத்ததால் அவருக்குப் பக்கத்தில் அமர்ந்தேன்.
மீண்டும் அவரே தொடர்ந்தார்.
"இதோ இருக்கிறாரே இவர் எர்ணாகுளத்தைச் சேர்ந்த மிகப் பெரிய ஜோஸ்யர். மகாப்ரச்னம் போட்டுப் பார்ப்பதில் வல்லவர். இவரை ஊருக்கு அழைத்து, எங்க ஊர் அங்காள பரமேஸ்வரி கோயில் சந்நிதியில் ஜாமீன் பையனைப் பற்றி பிரச்னம் கேட்டோம்.
இவர் சொன்னால், அந்த ஜாமீன் வாரிசு பையனை கண்டுபிடிச்சு ஜமீனை அவனிடம் கொடுப்பது, ஒரு வேளை கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் "பூ" கட்டி போட்டுப் பார்த்து இந்த ஜாமீன் சொத்தை திருப்பதி கோயிலுக்கோ அல்லது அரசாங்கத்திர்க்கோ கொடுத்துவிடலாம் என்று எல்லோர் முன்னிலையில் முடிவு கட்டினோம்.
இவர் வந்தார். பிரச்னம் போட்டுப் பார்த்தார். ஜாமீன் வாரிசு உயிரோடு ஈரோட்டிற்கு ஐம்பது மைல் தொலைவில் இருப்பதாகவும், அவன் திக்கி திக்கி பேசுவான் என்றும், ஒரு சாதாரண குடிசையில் ஊரார் ஜனங்களின் தயவால் வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறினார்.
இந்த ஜோதிடர் சொன்னது எங்கள் வயிற்றில் பாலை வார்த்தது. இருந்தாலும் அவரையும் அழைத்துக் கொண்டு இந்த இடங்களில் குக்க்ராமங்களில் தேடினோம். இப்பொழுதுதான் அப்படிப்பட்ட ஒருவன் உங்க கிராமத்துலே இருப்பதாகத் தகவல் கிடைச்சது. நாங்க சொன்ன தகவல் உண்மையாக இருந்தால் நீங்க அனுமதி கொடுத்தால், அந்தப் பையனை எங்களுக்கு அடையாளம் காட்டுங்கள். நாங்கள் முறைப்படி எல்லா வகையான அத்தாட்சியையும் கொடுக்கிறோம்" என்றார்.
நான் பதிலே பேசாமல் கிராம கரணத்தின் முகத்தையே பார்த்தேன்.
"நீங்கள் சொல்றது எல்லாம் சரிதான். அந்தப் பையன் இங்கே தான் இருக்கான். ஆனா - நீங்கள் ஜாமீனுக்கு வேண்டப்பட்டவங்களா - இல்லையா - எந்த உத்திரவாதத்தோடு நான் அனுப்புவதுன்னு குழப்பமா இருக்கு. அதோடு இந்த விஷயத்திலே நான் மட்டும் முடிவு செய்ய முடியாது. கிராம அதிகாரி, போலீஸ் அதிகாரிங்க முன்னால் தான் முடிவு செய்யணும். ஏன்னா நாளைக்கு ஏதாவது வில்லங்கம் வரப்படாது பாருங்கோ" என்று தன் முடிவைச் சொன்னார். அவர்களோ கிராம அதிகாரி எங்கிருந்தாலும் தாங்கள் அழைத்து வருவதாகவும் ஈரோட்டிர்க்குச் சென்று போலீஸ், வக்கீல் ஆகியோரையும் அழைத்து வருவதாகவும், உடனே அந்தப் பையனை தங்களோடு அழைத்துக் கொண்டு போகவேண்டும் என்றும் துடியாய்த் துடித்தனர். அந்த அவசரம் எதற்கு என்பது எனக்குத் தெரியவில்லை. கர்ணம் என்னைப் பார்த்தார்.
"இதில் நான் நேரடியாகத் தலையிட முடியாது. உங்க சட்டப்படி பார்த்து அமைதியாகச் செயல்படும்படி சொல்லிவிட்டு, எனக்கு நேரம் ஆகிறது விடை கொடுங்கள், பின்பு எப்படியாவது தொடர்பு கொள்கிறேன்" என்று சொல்லிவிட்டேன். ஆனாலும் கர்ணம், விடுவதாக இல்லை.
சற்று நேரத்திற்கெல்லாம் கிராமத்துப் பையன் ஒருவன் ஓடிவந்து "அய்யா, நம்ம கிராமத்து காளை, அதான் அந்தத் திக்குவாயன் ஈரோட்டிர்க்குப் போற பாதையிலே, துண்டைக் காணோம், துணியைக் காணோம்னு வேகமாகத் தலை தெறிக்க ஓடிக் கொண்டிருக்கிறான். என்ன விஷயம்னு தெரியல்லை" என்று சொன்னான். கிராம கர்ணம் இதைப் பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை. எனக்கோ ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போவது போல் தோன்றிற்று. சில மணி நேரம் பொறுத்துப் பார்த்து அங்கிருந்து நானும் கிளம்பினேன்.
அஷ்டமி, நவமி கழிந்த பின்னர் பிரம்ம முஹுர்த்தத்தில் அகஸ்தியரிடம் அந்தத் திக்குவாய்ப் பையனை பற்றிக் கேட்டேன்.
அகஸ்தியர் சொன்ன செய்தி இதுதான்.
ஜாமீன் சொத்தை அடைய வண்டிக்காரன் முயர்ச்சித்திருக்கிறான். அந்தத் திக்குவாயனை மலையிலிருந்து உருட்டி கீழே தள்ள - ஒரு நாள் திக்குவாயனோடு மலையில் ஏறும்பொழுது மலையுச்சியில் திடீரென்று தோன்றிய கருநாகம், அந்த வண்டிக்காரனை விரட்டியிருக்கிறது. பாம்புக்கு பயந்து மலையிலிருந்து கீழே குதித்தவன் எலும்பு நொறுங்கி குற்றுயிரும் கொலை உயிருமாக வீழ்ந்து கிடக்க - கிராமத்து மக்கள் அவனைத் தூக்கி புத்தூருக்குக் கொண்டு சென்று இருக்கின்றனர்.
அந்தக் கருநாகத்தை ஏவியவர் சிவபெருமான். திக்குவாயனை, தன் பக்தனைக் காக்கவே இப்படியொரு திருவிளையாடல் செய்திருக்கிறார். அது மட்டுமல்ல - அன்று முதல் திக்குவாயனுக்கு எந்த வித ஆபத்தும் வராமல் அந்தக் கரு நாகமும் அவனுக்குப் பாதுகாப்பாக மலையிலேயே வாழ்ந்து வந்து கொண்டிருக்கிறது. அந்தக் கரு நாகத்தை தான் நானும் பார்த்தேன்" என்றவர், அந்த திக்குவாயனுக்குத் தன்னை யாராவது கடத்திக் கொண்டு செல்வார்களோ என்ற பயம் தோன்றியது. அதற்கு ஏற்றார் போல் அந்தக் கிராமத்திற்கு காரில் வந்த ஆஜானுபாவர்களுக்கு கலர் சோடா வாங்கி வந்தவன் அவர்களுக்குத் தெரியாமல் அவர்கள் பேசுவதை ஒட்டுக் கேட்டான்.
அவர்கள் பேச்சில் போலீஸ் - வக்கீல் - தன் பெயரும் அடிபட்டவுடன் அவர்கள் தன்னைக் கடத்திக் கொண்டு போகப்போவதாக எண்ணி, வாங்கின கலர் சோடாவை அப்படியே ஓரத்தில் சாய்ந்துவிட்டு ஓடி - ஈரோட்டிருக்கு வந்தவன் அப்படியே ரயிலும் ஏறி இருக்கிறான்.
அதே ரயிலில் பயணம் செய்த ஒரு சந்நியாசி அவனைக் கண்டு விஷயத்தைக் கேட்டு தன்னுடைய உதவியாளனாக அவனை நியமித்து உதவி செய்திருக்கிறார். விரைவில் அவன் ராமய்யன் பட்டி ஜமீன்தாரராக ஆகும் நாள் தொலைவில் இல்லை. இதற்கு அந்த சந்நியாசியே உதவுவார்" என்று திவ்யமாகத் திக்குவாயனது கடந்தகால நிகழ்கால, எதிர்கால சரித்திரத்தைச் சுருக்கமாகச் சொன்னார்.
இதைப் படித்து முடித்ததும் "அப்பாடா" என்று பெருமூச்சு விட்டேன்.
மூன்று மாதம் வேறு பல அலுவல்கள் விஷயமாக இங்குமங்கும் அலைந்ததினால் அந்தத் திக்குவாயனைப் பற்றி நினைக்கவே இல்லை. பின்னர் ஒரு நாள் சேலம் கந்தாஸ்ரமத்தில் அந்த கிராம கர்ணம், கிராம நிர்வாக அதிகாரியை யதேச்சையாகச் சந்தித்த போது, ராமய்யன்பட்டி ஜமீன்தாராக அவன் மாறிவிட்டதாகவும், சில கோடிகளுக்கு அதிபதியாக இருப்பதாகவும் இப்போது அவனது நிலையே வேறு என்று சொன்னார்கள்.
அகஸ்தியருக்கு நான் நன்றி சொன்னேன். இதுபோல் பல நூறு சம்பவங்கள் நடந்திருக்கிறது. அதில் பலவற்றை அகஸ்தியர் அனுமதியோடு தொடர்ந்து எழுதலாமென எண்ணுகிறேன். அகஸ்தியருக்கு குஷி வந்து விட்டால் தொடர்ந்து பல அற்புதங்களை நிகழ்த்திக் காண்பிப்பார். இல்லையென்றால் நாடி பார்க்க வருகிறவர்களை வேண்டுமென்றே சோதனையும் செய்வார். ஆனால் முடிவு மிக அருமையாக இருக்கும்.