​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Monday, 31 October 2011

சித்தன் அருள் - 54

நொண்டி, நொண்டி நடந்து வந்த அந்தப் பெரியவருக்கு வயது எழுபது இருக்கும். கூடவே முப்பது வயதுடைய ஒரு பையனையும் அழைத்து வந்தார்.

பெரியவர் முகத்திலும் சரி, கூட அழைத்து வந்த அந்த பையனுடைய முகத்திலும் சரி. ஒரு சோக ‘இழை’ ஓடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

ஆஸ்பத்திரிக்கு வருகிறவர்கள் பட்டுப் புடவையும், பட்டு வேஷ்டியுமாக கட்டிக் கொண்டா வருவார்கள்? அதே போல் நாடி பார்க்க வருகிறவர்கள் புன்னகை பூத்துக் கொண்டா வருவார்கள்? ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதால் தானே அகத்தியரை நோக்கி வருவார்கள். அதே மாதிரி ஏதாவது பெரிய பிரச்சினை இவர்களுக்கு இருக்கலாம்… என்று எண்ணிக் கொண்டேன்.

‘இவன் என்னுடைய ஒரே பையன். நீண்ட நாட்கள் கழித்து பிறந்தான். மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறான். இவனை அகத்தியர்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று நாதழுக்க கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டார் பெரியவர்.

பையனைப் பார்த்தேன். படித்த களை நெற்றியில் இருந்தது. ஆனால் தாடியும், மீசையுமாக தூங்கி வெகு நாள் ஆனது போல் சோர்வாகக் காணப்பட்டான்.

‘என்ன பிரச்சனை?’ என்று பையனைப் பார்த்துக் கேட்டேன்.

மெல்லச் சிரித்தானே தவிர வாய் திறந்து எதுவும் சொல்ல மறுத்து விட்டான்.

‘நீங்களே அகத்தியரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்றார் அந்தப் பையனின் தந்தை.
‘நான் அகத்தியரைக் கேட்டுத் தெரிந்து கொள்வது இருக்கட்டும். அதனால் எனக்கென்ன லாபம்? வந்தவர் நீங்கள். ஏதோ பிரச்சினை தீர வேண்டும் என்று வந்திருக்கிறீர்கள். அதைச் சொன்னால் அகத்தியரிடமிருந்து பதில் வாங்கித் தருகிறேன். அவ்வளவுதான் என்னால் முடியும்.”

‘நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால் எனக்குக் கிடைத்த தகவல்படி எல்லாமே அகத்தியர் முன் கூட்டியே சொல்லி விடுவார். வாய் திறக்க வேண்டாம் என்றார்களே…”

‘யாருக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறதோ அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!’

இது வருகிறவர்களது நடத்தை, உண்மை, தன்னம்பிக்கையைப் பொறுத்திருக்கிறது. நீங்கள் பொய் சொன்னால், அகத்தியரும் உங்களைச் சோதிக்க ‘பொய்’ சொல்லுவார். அவரைச் சோதிக்க நினைத்தால், அவரும் உங்களைச் சோதிப்பார்’ என்றேன்.

சற்று நேரம் மவுனமாக இருந்தார்.

‘இவன் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறான். அதிலிருந்து விடுதலை பெற வேண்டும். அவ்வளவுதான்’ என்றார் அந்தப் பெரியவர்.

நான் ஒன்றும் சொல்லாமல் நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

‘நாற்பத்தெட்டு நாட்கள் கழித்து இவன் அகத்தியனை வந்து சந்திக்கட்டும்’ என்று ஒரே வரியில் அகத்தியரிடமிருந்து பதில் வந்தது.

‘என்ன சார் இது! எந்தப் பதிலும் வரவில்லையே?’ என்றார் அந்தப் பெரியவர்.

‘காரணமில்லாமல் அகத்தியர் எதுவும் சொல்ல மாட்டார். நீங்கள் சென்று விட்டு, நாற்பத்தெட்டு நாட்கள் கழித்து வாருங்கள்’ என்றேன்.

இதைக் கேட்டதும் சட்டென்று அவருக்கு என் மீது கோபம் வந்தது!

‘உங்களை தெய்வமாக நம்பி நான் இங்கே வந்தது மிகப் பெரிய தப்பு. எங்களிடமிருந்து தகவல் வாங்கி, எங்களுக்கே பதில் சொல்வீர்கள் போலும். நான் எந்த பிரச்சினை என்று சொல்லாததால் உங்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. நாற்பத்தெட்டு நாட்கள் கழித்து வாருங்கள் என்று விரட்டி விட்டீர்கள். இது போன்ற மோசடி உலகில் வேறு எதுவும் இல்லை. சுத்த பிராடு” என்று ஆவேசமாக வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு போனார் அவர்.

ஆனால் அந்த பையன் தலைகுனிந்தபடியே அவர் பின் சென்றானே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை!

எனக்கு மனது நொறுங்கிவிட்டது! இருந்தாலும் அகத்தியர் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று எண்ணியபடி அமைதி காத்தேன்.

அடுத்தாற்போல் ஒருவர் வந்தார். நாடி பார்க்கவும், அகத்தியர் அருள் வாக்கை அப்படியே எழுதிக் கொள்ளவும் ‘பேப்பரோடு’ வந்தமர்ந்தார்.

அவர் யார், எவர் என்று விசாரிக்காமல், அரை குறை மனதோடு நாடி பார்க்க ஆரம்பித்தேன். சம்பந்தம் சம்பந்தமில்லாமல் அகத்தியர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

‘போதை மருந்துக்கு அடிமையாகி, பெரும் பணம் சேர்க்க மிலேச்சன் நாட்டிற்குச் சென்ற களவாணிப் பையன் அவன். நிர்வாணமாக திரையில் தோன்றி வக்கிரமாக வாத்ஸாயனாரின் சாஸ்திரத்தை மிலேச்ச நாட்டு வேசிகளோடு செயல்படுத்தி, நீலப்படத்தில் நிஜமாக நடித்தவன். செய்திட்ட பாவத்திற்கு பெரும் பணம் பெற்று தாய் நாடு திரும்பினாலும் மகாராஷ்டிரா மாவீரன் மண்ணில் கால் பதித்ததும், தான் கொண்டு வந்த நீலநிறப் படங்களோடு காவல் துறையில் மாட்டிக் கொண்டவன். எப்படியோ காவல் துறைக்குத் தெரியாமல் தப்பித்து, தாய் மண்ணாம் தமிழ்நாட்டில் இன்று காலையில் தான் கால் வைத்தான்.

இவனைத் தேடி காவல் துறை அலைந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் பிடிபடுவான். சிறைக் கம்பிக்குள் சில நாட்கள் வாசம் செய்துவிட்டு, நாற்பத்தெட்டு நாளில், தற்காலிக பொறுப்பு  விடுதலை வாங்கி அகத்தியனை நோக்கித்தான் வருவான். அகத்தியனை பழித்த அந்த மகனின் தந்தைக்கோ பக்கவாதம் நோய் உண்டாகும். அகத்தியனை வணங்கிய பின் உயிர் தப்புவான்’ என்று விறுவிறுப்பாக வந்தது.

சுருங்கச் சொன்னால், சற்று முன் வெளியே சென்ற அந்த பெரியவரின் மகன், பெரும் பணம் சம்பாதிக்க வெளிநாடு சென்று நிர்வாணப் படங்களில் நடித்து, போதை மருந்துக்கு அடிமையாகி இந்தியாவில் அந்த படங்களை கள்ளத் தனமாக கடத்தி வந்து விற்க வந்தபோது, மும்பை விமான நிலையத்தில், காவல் துறையினரால், சுங்கத் துறையினரால் பிடிபட்டு, எப்படியோ வந்திருக்கிறான். இது அவனது தந்தைக்கும் தெரியும். மூடிமறைத்து விட்டு நாடி கேட்டு வந்திருக்கிறார் என்பதுதான் அகத்தியர் சொன்ன வாக்கு.

வாசகர்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

எல்லாம் சரி, இந்த வாக்கினை அந்த பெரியவரிடமே அகத்தியர் ஏன் சொல்லவில்லை? 
சம்பந்தமில்லாத மனிதரிடம் ஏன் இதைச் சொல்கிறார் என்பது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.
ஒருவருக்கு வரவேண்டிய தகவல், இன்னொருவருக்கு தவறாக போய்க் கொண்டிருக்கிறது என்பதை நினைத்து அதிர்ந்து போனேன். வந்த அந்த நபரோ சலனமில்லாமல் அகத்தியர் சொன்னதை அப்படியே எழுதிக் கொண்டிருக்கிறார், என்பதுகூட எனக்கு மனதை சங்கடப்படுத்தியது.
ஐயா, ‘தவறான தகவல் வந்திருக்கிறது. இந்த வாக்கு உங்களுக்கு வந்தது அல்ல. உங்களுக்கு முன்னால் வந்தவருக்கு சொன்ன தகவல். தயவு செய்து இதைக் கிழித்து போட்டு விடுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள். அகத்தியரிடமிருந்து அருள்வாக்கு வாங்கித் தருகிறேன்’ என்றேன்.

ஆனால் அவரோ குலுங்கி குலுங்கி அழுதாரே தவிர நான் சொன்னதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை. எழுதிய அந்த வாசகத்தைக் கிழித்தும் போடவில்லை.

சட்டென்று காலில் பொத்தென்று விழுந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“சார், அகத்தியர் சொன்னதெல்லாம் உண்மை. முன்னால் சென்றாரே அவர் எனது தந்தை. அவருடன் சென்றவன் என் தம்பி. ‘பி.இ.’ படித்து ஒரு பொறுப்புள்ள என்ஜினியராக இருந்தான். அவனுக்கு இளமை கோளாறு. பார்க்கவும் மிகவும் நன்றாக இருப்பதால், பெண் வேட்கையால் தள்ளப்பட்டான்.
வெளிநாட்டிற்குச் சென்று நீலப்படங்களில் நடித்தால் பெரும் பணம் கிடைக்கும் என்று யாரோ ஆசை காட்டியதால், எப்படியோ வெளிநாட்டிற்குச் சென்றவன் சரியாக அந்த மோசமான கும்பலில் மாட்டிக் கொண்டான். அதே சமயம் பல லட்சம் சம்பாதித்து இந்தியாவுக்கு திரும்பும் போது மாட்டிக் கொண்டான். அவனை போலீஸ் தேடுவதும் தெரியும்.” என்றார் அவர்.

‘உங்கள் தந்தைக்கு நாடியில் நம்பிக்கை இல்லையா?’

‘இல்லை.’

‘உங்கள் தம்பிக்கு….’

‘அவன்தான் போதைக்கு அடிமையாகிவிட்டானே. நான் தான் அவர்களை உங்களிடம் வரச்சொன்னேன். என் தந்தை ஏடாகூடாமாகப் பேசுவார் என்பது எனக்குத் தெரியும். எனவே என் தந்தையை பின்தொடர்ந்து வந்தேன். இப்பொழுது நான் என்ன பரிகாரம் செய்தால் தம்பியைக் காப்பாற்ற முடியும்? என் தந்தையை பக்க வாதத்தில் இருந்து காப்பாற் முடியுமா?’ என்று கேட்டார் அந்த நபர்.

‘அகத்தியனைப் பழித்ததால் அதற்குரிய தண்டனை உன் தந்தைக்கு உண்டு. மீதமுள்ள கேள்விக்கு நாற்பத்து எட்டு நாட்கள் ஆகட்டும் வா. இனிமேல் நம்பிக்கை இல்லாதவர்களை அகத்தியனிடம் அனுப்பாதே’, என்று உத்தரவிட்டார் அகத்தியர்.

நேரடியாக இவரே தம்பியைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம். ‘நாடி’ மீது நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் வர வேண்டும் என்று வருத்தப்பட்டேன்.

நாற்பத்தி ஒன்பதாம் நாள்.

அந்த பெரியவரும், போதை மைந்தனும் என்னிடம் வந்தனர். பெரியவருக்கு எதுவும் பேச முடியவில்லை. நடக்க முடியாமல் நடந்து வந்தார். அவருக்குக் கைத்தாங்கலாக யாரோ இருவர். காலை நீட்டி மடக்க முடியாத நிலை. பேச்சிலும் வழவழ கொழ கொழ. கண்ணீரில் கண்கள் மூடியிருந்தது. அவரால் கைதூக்கி கும்பிடக் கூட முடியவில்லை.

நடந்த கதையைக் கேட்டேன்.

அன்னைக்கு வந்துவிட்டுப் போன ஆறு மணி நேரத்தில் அந்த போதை மைந்தனை ஆபாச பட வழக்கில் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். விசாரணைக் கைதியாக இருந்திருக்கிறான். ஜாமீன் இரண்டு நாளைக்கு முன்பு தான் கிடைத்திருக்கிறது.

அவன் தந்தைக்கோ இதையெல்லாம் கேட்டு, பிளட் பிரஷர் அதிகமாகி, அது லேசான வாதத்தில் வந்து முடிந்திருக்கிறது. மருத்துவ வசதியைக் கொண்டு உயிர் தப்பியிருக்கிறார். பையன் ஜாமீனில் விடுதலையானதும் என்னைப் பார்க்க நம்பிக்கையோடு வந்திருக்கிறார்.

மொத்தத்தில் அகத்தியர் வாக்கு அவர்களைப் பொறுத்தளவில் உண்மையாகி விட்டது. எதிர் காலம் எப்படி இருக்கும்? என்று நம்பிக்கையோடு கேட்டான் அந்த போதை மைந்தன்.

‘வெளிநாட்டில் நீலபடத்தில் நடித்திருப்பதால், இப்போது தப்பித்தாலும் தவறான முறையில் நீலப்படங்களைக் கொண்டு வந்தால் அதற்குரிய தண்டனையை முறைப்படி பெற வேண்டும்’ என்று சொன்ன அகத்தியர், போதைப் பழக்கத்திற்குள்ளான அவனுக்கு – அந்தப் பழக்கம் போக சில மூலிகைப் பொடிகளை உபயோகிக்கச் சொன்னார். பக்கவாதம் நோய் தாக்கிய அவனது தந்தைக்கும் பொதிகை மலையில் மட்டுமே விளையக்கூடிய மூலிகைகளைச் சொல்லி உண்டு வரச் சொன்னார்.
பி.இ. படித்திருந்தும் இப்படிப்பட்ட சமூக விரோத குற்றம் செய்ததினால், அவனுக்கு வேலை போயிற்று. சிறிது காலம் சிறைத் தண்டனையும் அனுபவித்தான். இப்போது சொந்தமாக இறை பணிக்குரிய பொருட்களை விற்பனை செய்து ஆன்மிகப் பணியில் ஈடுபட்டிருக்கிறான். போதைப் பழக்கமும் அவனை விட்டு விலகிவிட்டது. அவன் தந்தையும் யார் தயவும் இல்லாமல் நடக்கிறார். அவரை நெற்றியில் விபூதி, கழுத்தில் உத்திராட்சத்தோடு இன்றும் பார்க்கலாம்!

No comments:

Post a Comment