​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா வியாழனன்றும் அகத்தியர் வகுப்பில் படிக்கலாம்!

Sunday, 30 October 2011

சித்தன் அருள் - 51


“முன் ஜென்ம பாவம் என்று மட்டும் சொல்லி எங்களை பரிகாரம் செய் சொல்லாதீர்கள். அப்படிச் செய்து செய்து அலுத்துப் போய் விட்டோம். வேறு ஏதாவது சொல்லுங்கள். நாங்கள் செய்கிறோம். எப்படியாவது எங்கள் கஷ்டம் விடிந்தால் போதும்” என்று மிகுந்த வேதனையோடு சொல்லி என் முன்பு அமர்ந்தார் ஒரு நடுத்தர வர்க்கப் பெண்!

“அப்படி என்ன கஷ்டம் உங்களுக்கு?’

“நல்ல உத்தியோகத்தில் இருந்த என் கணவருக்கு திடீரென்று உத்யோகம் பறிபோயிற்று. இரண்டாவது – நன்றாக படித்துக் கொண்டிருந்த என் பையன் ஏதோ பித்து பிடித்த மாதிரி வீட்டிலே உட்கார்ந்து எதையோ வெறித்து வெறித்துப் பார்த்து தனக்கத் தானே சிரித்துக் கொண்டிருக்கிறான். காலேஜுக்குப் போவதே இல்லை.

‘அப்புறம்?’

எனது ஒரே மகள் பவித்ரா, நன்றாக இருந்தாள். புத்திசாலிப் பெண். வீட்டில் இருந்து வேலைக்குச் செல்லமாட்டேன். தனியாக ஹாஸ்டலில் இருநதுதான் வேலைக்குச் செல்வேன் என்று சொல்லி, வீட்டை விட்டு தனியாகச் சென்று விட்டாள். நான் பித்துப் பிடித்த மாதிரி இருக்கிறேன். எங்களுக்குண்டான சொத்து, தோட்டம், வீடு எல்லாம் திடீரென்று ஏற்பட்ட கடனுக்காக குறைந்த விலைக்கு விற்க வேண்டியதாயிற்று. அப்படியிருந்தும் இன்னும் கடன் அடையவே இல்லை, என்று மூச்சுவிடாமல் சொல்லி, கொதித்து கொதித்து அழுதாள்.

பார்க்க பரிதாபமாக இருந்தது. கேட்கவும் சங்கடமாக இருந்தது.

‘என் வினை தீர இதுவரையிலும் கடன் வாங்கியே பல லட்சம் ஜோதிடத்திற்காக, பரிகாரத்திற்காகச் செலவழித்துவிட்டேன். இனிமேல் என்னிடம் விற்பதற்கு ஒன்றுமே இல்லை’ என்றாள்.

‘கணவருக்கு எப்படி வேலை போயிற்று?’

‘யாரோ செய்த தவறு இவர் மீது பழியாக விழுந்தது. பணம் கையாடினார் என்று சொல்லி வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள்’ இதுதான் எங்கள் குடும்பத்தில் விழுந்த முதல் அடி.

‘உங்கள் பையனுக்கு என்ன ஆயிற்று?’

‘காலேஜுக்குப் போயிட்டு வந்தான். அவ்வளவுதான் தெரியும். மறுநாள் முதல் அவன் காலேஜூக்குப் போகவே இல்லை. பைத்தியம் போல் தனக்குத் தானே பேசிக் கொண்டான். சாப்பிடுவதும் இல்லை. குளிக்கவும் மாட்டான். போட்ட டிரஸ்ஸை மாற்றவும் இல்லை. எதைக் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டான். எவ்வளவோ வைத்தியம் பண்ணிப் பார்த்தேன். நாளையோட எட்டு மாசம் ஆகப் போகிறது. காலேஜூக்கு போய் அவனுக்கு என்ன வந்தது, ஏன் எங்களுக்கு இந்தக் கஷ்டம்? என்று மீண்டும் அழுதாள். சிறிது நேரம் பொறுமையாக இருந்தேன்.

ஏன் பொண்ணு கை நிறைய சம்பாதிக்கிறா. அவளை வைச்சுதான் என் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. கூட இருந்து குடும்ப பொறுப்பை ஏற்பாள் என்று எண்ணினேன். ஆனால் அவளோ, இந்த வீட்டில் இருந்தால் நிம்மதியே இல்லை என்று தனியாகப் போய் ஆறு மாதம் ஆகிறது. என் குடும்பத்திற்கு யாராவது ஏதாவது பில்லி – சூனியம் வைச்சிருக்காங்களா? என்றார் அந்த பெண்மணி!

அகத்தியர் பொதுவாக பில்லி, சூன்யத்தை நம்புவதில்லை. அதற்காக அதர்வண வேதத்திலுள்ள சக்திகளைக் குறை சொல்ல மாட்டார். ஆனால் இந்த அம்மாள் சொன்னதை வைத்துப் பார்க்கும்பொழுது இது மாந்திரீகம் என்று கூட எனக்கு எண்ணத் தோன்றியது. பதினைந்து நிமிடம் அகத்தியரை நோக்கி பலமாகப் பிரார்த்தனை செய்தேன். பிறது நாடியைப் புரட்டினேன்.

‘சட்டென்று கிளம்பட்டும் இவள் தன் வீடு நோக்கி. இரு நாள்கள் கழித்து காலையில் அகத்தியரை வந்து பார்க்கட்டும்’ என்று தான் மாறி மாறி வந்ததே தவிர வேறு புதிய செய்திகள் எதுவும் என் கண்ணில் தென்படவே இல்லை.

‘அம்மா உங்களுக்கு இன்றைக்கு அகத்தியர் வாக்கு எதுவும் வரவில்லை. ஆனால் கால தாமதம் செய்யாமல் உடனே வீட்டிற்குக் கிளம்பச் சொல்கிறார். இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள். அகத்தியர் நிச்சயம் பதில் தருவார்.’ என்று அவளைக் கிளப்ப முயன்றேன்.

ஆனால் அவளோ நகரவே மறுத்தாள். வீட்டிலே போய் நான் என்ன செய்யப் போகிறேன். இங்கேயே எத்தனை நேரமானாலும் இருந்து ‘நாடி’ பார்த்துவிட்டுத்தான் செல்வேன் என்று அடம் பிடித்தாள்.

‘அகத்தியர் சொன்னால் அதற்கு என்னவோ ஓர் காரணம் இருக்கும். தயவு செய்து வீட்டிற்குக் கிளம்புங்கள். வேறு எங்கேயும் செல்லாமல் நேராக வீட்டிற்கே செல்லுங்கள்.’ என்று மிகவும் கட்டாயப்படுத்தினேன். இது எனக்கே சங்கடமாகத்தான் இருந்தது.

‘ஆனால் அந்தப் பெண்ணோ வாய்க்கு வந்தபடி பேசினார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அகத்தியர் மீது தான் எனக்கு கோபம் வந்தது. எனக்கெதற்கு இந்த வீண் பழி. எதற்காக இந்த கேவலமான பேச்சு என்று மனம் நொந்து போனேன்.

அந்த பெண்மணி மிகுந்த வருத்தத்தோடும் கோபத்தோடும் போனது மட்டும் எல்லோரும் பார்த்த உண்மை! இதற்குப் பிறகு என்னைப் பார்க்க வந்திருந்த மற்றவர்களுக்கு நாடி படிக்க மனமே இல்லை.

நான்கு மணி நேரம் கழிந்தது.

அந்தப் பெண்மணியிடமிருந்து எனக்கு டெலிபோன் வந்தது! நேரில் திட்டியது இல்லாமல் டெலிபோனில் வேறு திட்டப் போகிறாள் போலும் என எண்ணிக் கொண்டே டெலிபோனைக் கையில் எடுத்தேன்.

ஐயா, என்னை மன்னிச்சிடுங்க. தெரியாத்தனமா உங்களையும் திட்டினேன். அகத்தியரையும் திட்டினேன். நல்ல வேளை நான் உடனே வீட்டிற்குப் போகவில்லையென்றால், தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த என் மகனைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கும். இதற்கு நான் அகத்தியருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றாள்.

அவளது பேச்சிலிருந்து அவள் மிகப் பெரிய அதிர்ச்சியிலிருந்து தப்பிய சந்தோஷம் இருப்பதை அறிந்து கொண்டேன்.

‘பையன் ஏதோ விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு தூக்க மாத்திரையை அளவுக்கு மீறிச் சாப்பிட்டு, மயங்கிக் கிடப்பதை அகத்தியர் அறிந்து, அவனது உயிரைக் காப்பாற்ற அவனது தாயை உடனடியாக அனுப்பியிருக்கிறார். இருந்தாலும் அவன் நல்லபடியாக குணமாக டாக்டர்கள் 48 மணி நேரம் ஆகும் என்றதால், இரண்டு நாட்கள் கழித்து பையனை அழைத்துக் கொண்டு வருவதாக அந்த அம்மணி சொல்ல நான் அறிந்து கொண்டேன்.

அகத்தியருக்கு நானும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லிக் கொண்டேன்.
மூன்று நாள் கழிந்தது.

அந்த பெண்மணி தன் பையனோடு மறுபடியும் என்னைப் பார்க்க வந்தாள். காலில் விழுந்து அவளது மகன் ஆசீர்வாதம் பெற்றான். எதற்காக இந்த கஷ்டகாலம். அது எப்போது  நிவர்த்தியாகும் என்பதை மட்டும் அகத்தியர் சொன்னால் போதும். அதற்காக என்ன பிரார்த்தனை வேண்டுமானாலும் செய்யத் தயார் என்றாள் அந்தப் பெண். அகத்தியரிடம் அனுமதி கேட்டு படிக்க ஆரம்பித்தேன்.

‘அவளது கணவர் லஞ்சம் வாங்கியே பழக்கப்பட்டு போனவர். அவருக்கு ஒரு நாளாவது ஒரு ரூபாயாவது லஞ்சம் வாங்கவில்லை என்றால் வீட்டிற்குத் திரும்ப மனதே வராது. இவ்வளவுக்கும் மிகப்பெரிய கம்பெனியில் அன்றைக்கு எந்த லஞ்சமும் கிடைக்கவில்லை என்றால் அலுவலகத்தில் உள்ள எதையாவது ஒரு பொருளை, குறைந்தபட்சம் குண்டூசி பாக்கெட்டையாவது எடுத்து சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்வார். அப்படிப்பட்ட மனிதருக்கு ஒரு முக்கியமான நபர் முக்கியமான காரியத்தை முடித்து கொடுக்க விலை உயர்ந்த ‘நீலக்கல்’ வைரம் பதித்த ஒரு மோதிரத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

சாதாரண குண்டூசியையே விடாமல் கொண்டு வரும் அந்த மனிதனுக்கு ‘புளூ ஜாகர்’ வைர மோதிரம் கிடைத்தால் விட்டு விடுவாரா? சந்தோஷத்துடன் வாங்கி தன் கால் சட்டைக்குள் மறைத்துக் கொண்டார். அந்த ‘புளூ ஜாகர் வைரம்’ எவ்வளவு கொடுமையான பலன் தரும் என்பதை அவர் அறியவில்லை. அறிந்திருந்தால் அதனைக் கொடுத்தவரிடமே திருப்பிக் கொடுத்திருப்பார். அல்லது தூர எறிந்திருப்பார். அந்த வைர மோதிரத்தை எப்பொழுது கையை நீட்டி வாங்கினாரோ, அந்த நிமிடத்திலிருந்து அவருக்குக் கெட்ட காலம் ஆரம்பித்து விட்டது.

அந்த வைர மோதிரம் கொடுத்த நபருக்காக தவறான முயற்சியில் இறங்கி மாட்டிக் கொண்டார். ‘பதவி’ பறிபோயிற்று. அப்பொழுதாவது ‘அவர்’ யோசித்திருக்க வேண்டும். எதற்காக இந்த பதவி போயிற்று என்று யோசிக்கவில்லை. விதியும் அவரை யோசிக்க விடவில்லை.

வீட்டில் வைத்திருந்த அந்த புளூஜாகர் மோதிரத்தை அவரது மகன் ஒரு நாள் அணிந்து கொண்டான். அன்று முதல் அவனுக்கு சட்டென்று புத்தி பேதலித்து விட்டது.

பைத்தியக்காரன் போல் ஆனான். அதன் உச்சக்கட்டம் தான் அவனை தற்கொலைக்குத் தூண்டியது.  நன்றாக, வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த இநத்ப் பெண்மணிக்குரியச் சொத்து, வீடு, மனை, வாகனம அத்தனையும் அந்த வைர மோதிரத்தால் பறி போயிற்று. இப்பொழுது அவனது மகளையும் வீட்டில் இருக்க விடாமல் குடும்பத்தை விட்டே வெளியே துரத்தி இருக்கிறது என்று சொன்ன அகத்தியர், அந்த புளூ ஜாகர் வைர மோதிரத்தை தலை சுற்றி தூக்கி எறி. வாழ்க்கை மீண்டும் வசந்தமாகும் என்றவர், இது முன் ஜென்ம கர்மாவா இல்லை இந்த ஜென்மத்தில் செய்த தவறா? என்பதை இந்த பெண்ணே முடிவு செய்து கொள்ளட்டும் என்று ஒரு வைர மோதிரக் கதையை அற்புதமாகச் சொன்னார்.

அகத்தியர் சொன்னது அத்தனையும் உண்மை என்று பின்னர் என்னிடம் வந்த அந்த பெண்மணியும் அவளது கணவரும் ஒப்புக் கொண்டார்கள். பீரோவில் வைக்கப்பட்ட அந்த வைர மோதிரத்தின் விலை ‘நான்கு லட்சம்’ என்றாலும் அது நாற்பது லட்ச ரூபாய் குடும்பச் சொத்தை பாழடித்து விட்டது. இப்போது அது எங்கேயோ குப்பை மேட்டில் கிடக்கிறது.

ஆனால், அந்த மோதிரத்தை தூக்கி எறிந்த பின்னர் வீழ்ந்த அந்த குடும்பம் இன்றைக்கு மீண்டும் சந்தோஷத்தில மிதந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.

3 comments:

  1. அய்யா தங்களை சந்திக்க இயலுமா. தங்கள் தொலைபேசி எண்

    ReplyDelete
  2. அகத்தியர் அருளால் வாழ்வில் நலமாக இருக்க வேண்டுகிறேன்

    ReplyDelete