​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Sunday 30 October 2011

சித்தன் அருள் - 53


நாடி பார்க்க வருகிறவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் செய்த தவறுகளைச் சொல்லி பரிகாரம் கேட்பதில்லை. அதை அப்படியே மறைத்து விட்டு ஓலைச் சுவடியில் ஏதாவது புதியதாக செய்தி வராதா? அகத்தியர் ஏதேனும் ஒரு ஆச்சரியத்தை நிகழ்த்த மாட்டாரா? என்று தான் கேள்விகள் கேட்பதுண்டு.

இன்னும் சிலர் என் பெயர் என்ன? என் மனைவி தற்சமயம் எங்கிருக்கிறாள்? என்றும் கேட்பதும் உண்டு.  இவர்கள் அகத்தியரை சோதிக்க இப்படிப்பட்ட கேள்விகள் கேட்பதால், அகத்தியரும் அவர்களுக்காக நையாண்டியாக அதே மாதிரி பதில் சொல்வதுண்டு.

அகத்தியர் கூறுகின்ற இந்த பதில் உண்மைக்கு மாறாக இருக்கும். ஆனால் அவர்களை மட்டம் தட்டுவது போலிருக்கும். அவர்கள் அகத்தியர் மீதோ அல்லது என் மீதோ கோபம் கொள்ள முடியாது. அப்படியே கோபப்பட்டாலும் அகத்தியர் இடுகின்ற சில கட்டளைகளால் அவர்கள் அடிபட்டு, பின்னர் எழுந்திருக்கிற முடியாத நிலைக்கும் ஆளானதுண்டு.

அன்றைக்கு என்னைப் பார்க்க வந்திருந்த ஒரு பெண்மணி மிகவும் நிதானமாக கேட்டார். ‘என் கணவரை கடந்த 2 ஆண்டு காலமாக காணவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்துத் தாருங்கள்? என்று.

இப்படிச் சொல்லும் பொழுது அவள் முகத்தில் எந்தவிதமான பதட்டமோ, பயமோ இல்லை. எனக்கு இது சங்கடத்தை உண்டு பண்ணியது.

‘என்ன முயற்சியெல்லாம் எடுத்தீர்கள்?’

‘எல்லா முயற்சியையும் எடுத்துப் பார்த்து விட்டேன். ஒன்றும் பயனில்லாமல் போய்விட்டது. அகத்தியர் தான் என் கணவரைக் கண்டுபிடித்து தர வேண்டும்’ என்றாள் மறுபடியும் நிதானமாக.

கணவனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அலைந்து திரிந்து மனம் நொந்து விரக்தியின் உச்சத்திற்கே வந்துவிட்டதால் ஏற்பட்ட விளைவுதான் இது. அதனால்தான் இப்படி பற்றற்ற முறையில் பேசுகிறாள்…. என்று எனக்குள் நானே எண்ணிக் கொண்டேன்.

அகத்தியர் நாடியைப் பிரித்துப் பார்த்தேன்.

‘எதிரில் இருக்கும்   இப்பெண்மணியால் அகத்தியனுக்கு ‘தீட்டு’ பட்டுவிட்டது. எனவே 13 நாட்கள் கழித்து அகத்தியனை வந்து பார்க்கச் சொல்’ என்று தான் உத்தரவு வந்ததே தவிர, மற்றபடி எந்த தகவலும் அகத்தியரிடமிருந்து வரவே இல்லை.

இந்த ‘தீட்டு’ விஷயத்தை அந்தப் பெண்மணியிடம் கூறாமல் ‘இன்றைக்கு நேரம் சரியில்லை. 13 நாட்கள் கழித்து வாருங்கள். அகத்தியர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுச் சொல்கிறேன்.’ என்று நாசூக்காக சொல்லி அனுப்பி வைத்தேன்.

13 நாட்கள் ‘தீட்டு’ ஏற்பட்டதால், யாருக்கும் அகத்தியர் அருள் கிடைக்காமல் போயிற்று. எனக்கும் சிறிது ஓய்வு கிடைத்ததே என்று எண்ணி, சந்தோஷப்பட்டேன்.

நண்பர்கள் சிலர் அழைததால் திருப்பதிக்கு சென்ற பொழுது, அங்கு இதே பெண்மணியை ஒரு நபரோடு கண்டேன். பூ பொட்டோடு அமர்க்களமாக சிரித்துப் பேசிக் கொண்டே போனார்கள். நல்லவேளை அந்த பெண்மணி என்னைக் கண்டு கொள்ளவில்லை. எனக்கு உள்ளூற சந்தோஷம். எப்படியோ காணாமல் போன கணவர், கண் எதிரே கிடைத்து விட்டார். அவர்கள் வாழ்க்கை நல்லபடியாக இருக்கட்டும் என்று மனதுக்குள் வாழ்த்தினேன். அதே சமயம் எனக்குள் ஒரு சந்தேகம். ‘எதற்காக அகத்தியர், இந்தப் பெண்ணால் தீட்டுப்பட்டு 13 நாட்கள் அருள்வாக்கு தரவில்லை?’ என்பதுதான். வந்திருந்த அந்த பெண்ணால் தீட்டுப்பட்டிருக்கிறது என்றால் அவளது கணவன் அல்லது தந்தை அல்லது தாய் மரணமடைந்து இருக்க வேண்டும். அவளுக்கு திருமணமாகி விட்டதால் அவளது பெற்றோர் இறந்திருந்தால் மூன்று நாட்கள் தான் தீட்டு இருக்கும். கணவன் இறந்திருந்தால் தான் பதிமூன்று நாட்கள் தீட்டு உண்டு.
அப்படியென்றால் திருப்பதி மலையில் பூவோடும், பொட்டோடும் கலகலவென்று சிரித்துக் கொண்டு போனால்…. இதற்கு என்ன அர்த்தம்? எது நிஜம்? எது பொய்? என்று குழப்பிக் கொண்டேன். காரணமில்லாமல் அகத்தியர் எதையும் செய்ய மாட்டார், சொல்ல மாட்டார் என்று மட்டும் எண்ணிக் கொண்டேன்.

பதினைந்து நாட்கள் கழிந்த பின்னர்….

அதே பெண்மணி, என்னிடம் வந்தாள். ‘பதிமூன்று நாட்கள் கழித்து வரச் சொன்னீர்களே, அதுதான் வந்தேன். எப்படியாவது என் கணவரைக் கண்டுபிடித்துத் தாருங்கள்’ என்றாள்.

இதைக் கேட்டதும் எனக்கு அடி வயிறு பற்றி எரிந்தது. திருப்பதியில் கண்ட காட்சி கண்ணில் அடிக்கடி வந்தது. என் கண்ணால் கண்டது பொய்யா? இல்லை இவள் சொல்வது பொய்யா? இல்லை, அவசரத்தில் இவளைப் போன்ற ஒரு பெண்ணைக் கண்டு தவறுதலாக இவள் தான் அவள் என்று எண்ணிக் கொண்டேனா?’ என்று குழம்பிக் கொண்டேன்.

சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு அகத்தியரிடம் என் குழப்பத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

‘இன்னவளின் கணவன், இவளை விட்டு விலகிச் சென்று ஒன்றரை ஆண்டுகள் ஆனது என்னவோ உண்மைதான். வியாபார நிமித்தமாக வெளிநாடு சென்ற அவன், வேற்று நாட்டு அரசால் கைது செய்யப்பட்டான். தகாத தப்பு செய்ததாக!
பதினைந்து நாட்களுக்கு முன்பு அகத்தியனை நாடி இந்த பெண்மணி வந்த அதே நேரத்தில் வெளிநாட்டில் கார் விபத்தில் இவளது கணவன் உயிரிழந்து விட்டான். அது இவளுக்கு இன்னமும் தெரியாது. அந்த அரசாங்கமும் இவளுக்கு முறைப்படி தகவல் சொல்லவில்லை.

அகத்தியனை நோக்கிவந்த நேரத்தில் இவளது கணவர் இறந்து போனதால் இவளது தீட்டு எமக்கு பட்டு, அதனால் யாம் இவளை பின்னர் வரச் சொன்னோம்.

இந்நிலையில் இவளுக்கும், பக்கத்து வீட்டு ஆண்மகனுக்கும் இடையே நீண்ட கால தொடர்பு இருந்தது. இதை இவளது கணவனும் அறிவான். அவர்கள் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்ததும் உண்மை. சில நாட்களுக்கு முன்பு வேங்கடவன் சன்னிதியில் காதலனின் வற்புறுத்தலுக்காக கட்டாய தாலி அணிந்து கொண்டு வந்தாள்.

எனவே இன்றைக்கு ‘சுமங்கலி’ என்பதால், இவளைப் பற்றி யாம் சொன்னோம். இவளை எப்படிச் சொல்லி சமாளிக்க முடியுமோ, அப்படிச் சொல்லி அனுப்பி விடு’,  என்று அகத்தியர் எனக்குக் கட்டளையிட்டார்.

இது எனக்கு மிகப்பெரிய தர்மசங்கடமாகிப் போயிற்று. அகத்தியர் ஏன் என்னை இப்படிப்பட்ட சோதனைகளில் இறக்கி விடுகிறார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

இப்பொழுது எனக்குள்ள கேள்வி இரண்டு. ஒன்று இந்தப் பெண்ணின் உண்மையான கணவர் வெளிநாட்டில் இறந்திருக்கிறார். அவரது உடல் இந்தியாவுக்கு வர இன்னும் சில நாட்கள் ஆகும். இந்த நிமிடம் வரை  இவளுக்கு இந்த உண்மை தெரியாது. இதன்படி பார்த்தால் இவள் விதவை.

சில நாட்களுக்கு முன்பு காதலனால் திருப்பதி சன்னிதானத்தில் கட்டாயத்தாலி கட்டிக் கொண்டு, தாம்பத்திய சுகம் அனுபவித்துக் கொண்டு வருவதால் இவள் சுமங்கலி. இப்படியிருக்கும் பொழுது அவள் ஒன்றும் தெரியாதது போல் தன் கணவனைப் பற்றி கேட்கிறாளா? இவளுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தேன்.

‘அம்மணி, நீங்கள் உங்கள் முகவரியைக் கொடுத்து விட்டு போங்கள். நான் ஒரு நல்ல நாளில் தங்களுக்கு பதில் கடிதம் அனுப்புகிறேன்’ என்று சொல்லி அவளது முகவரியை தவறாமல் வாங்கிக் கொண்டேன்.

முகவரி வாங்கிக் கொண்டாலும் நான் எந்தவிதக் கடிதமும் அந்தப் பெண்மணிக்கு எழுதவே இல்லை. அதே சமயம் அகத்தியர் சொன்ன அத்தனையையும் ஒன்று விடாமல் எழுதி அவள் கடித முகவரியும் எழுதி, கவரை நன்றாக ஒட்டி என் அறையிலேயே வைத்து விட்டேன்.
ஒன்றரை மாதம் கழித்து திடீரென்று அவள் வந்தாள். என்னிடம் சண்டையோ வாக்குவாதமோ செய்யவில்லை. நான் சட்டென்று அவளுக்கு எழுதிய அகத்தியர் வாக்கு கடிதத்தை அப்படியே கொடுத்தேன்.

அதை சப்தமில்லாமல் பிரித்து படித்து விட்டு, ‘இதை அன்றைக்கே என்னிடம் நேரடியாகவே சொல்லி இருக்கலாமே’ என்று ஒரு வார்த்தை மட்டும் கேட்டாள்.

‘நியாயம் தான். அகத்தியர் சொன்னதை அப்படியே சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அன்றைய சூழ்நிலையில் இந்த செய்தி தங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கும். அதைத் தவிர்க்கவே இப்படிச் செய்தேன்’ என்றேன்.

அவள் ஒன்றும் பேசவில்லை. சில நிமிடம் மவுனமாக இருந்தாள். ‘வெளிநாட்டிலிருந்து பத்து நாளைக்கு முன்புதான் எனக்கு செய்தி வந்தது. அங்கேயே எல்லா காரியங்களையும் செய்யச் சொல்லி விட்டேன். அதுவும் நேற்றைக்கு முடிந்து விட்டது’ என்றாள்.

பெயருக்கு நானும் வருத்தம் தெரிவித்து விட்டு, ‘உங்களுக்கு உதவத்தான் புதுக் கணவர் கிடைத்திருக்கிறாரே. கவலையை விடுங்கள்’ என்றேன்.

‘இருக்கலாம். இருந்தாலும் எனக்கென்னவோ நான் செய்தது மிகப் பெரிய தவறு என்றே தோன்றுகிறது. ஆசையோடு கட்டிய தாலிக்கும், மிகவும் கட்டாயமாகக் கட்டிய தாலிக்கும் வித்தியாசம் உண்டு. எனக்கு இந்த இரண்டாவது திருமணம் பிடிக்கவில்லை. தவிர அவருக்கும் மனைவி, குழந்தை உண்டு. வருமானமும் கிடையாது. எனவே அவரை விட்டு விலகுவதாக முடிவு செய்து விட்டேன்’ என்றாள்.

நான் மவுனமாக அந்தப் பெண்மணியையே பார்த்துக் கொண்டிருந்தேன். ‘என்ன செய்யப் போவதாக உத்தேசம்?’ என்று கேட்டேன்.

‘என்னிடமிருக்கும் பணத்தைக் கொண்டு அகத்தியர் பெயரால் ஏதேனும் சமூகத் தொண்டு செய்யலாம் என்று எண்ணுகிறேன்’ என்றாள் அவள்.

நல்ல முடிவு என்று வாழ்த்தினேன்.

அதன்பிறகு அந்தப் பெண்மணியை நான் பார்க்கவில்லை. ஆனால் நிச்சயமாக ஏதேனும் சமூகத் தொண்டு செய்து கொண்டிருப்பாள் என்பது மட்டும் எனக்கு உறுதியாக தெரிகிறது.

No comments:

Post a Comment