​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Monday, 31 October 2011

சித்தன் அருள் - 54

நொண்டி, நொண்டி நடந்து வந்த அந்தப் பெரியவருக்கு வயது எழுபது இருக்கும். கூடவே முப்பது வயதுடைய ஒரு பையனையும் அழைத்து வந்தார்.

பெரியவர் முகத்திலும் சரி, கூட அழைத்து வந்த அந்த பையனுடைய முகத்திலும் சரி. ஒரு சோக ‘இழை’ ஓடிக் கொண்டிருப்பது தெரிந்தது.

ஆஸ்பத்திரிக்கு வருகிறவர்கள் பட்டுப் புடவையும், பட்டு வேஷ்டியுமாக கட்டிக் கொண்டா வருவார்கள்? அதே போல் நாடி பார்க்க வருகிறவர்கள் புன்னகை பூத்துக் கொண்டா வருவார்கள்? ஏதோ ஒரு பிரச்சினை இருப்பதால் தானே அகத்தியரை நோக்கி வருவார்கள். அதே மாதிரி ஏதாவது பெரிய பிரச்சினை இவர்களுக்கு இருக்கலாம்… என்று எண்ணிக் கொண்டேன்.

‘இவன் என்னுடைய ஒரே பையன். நீண்ட நாட்கள் கழித்து பிறந்தான். மிகப் பெரிய சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறான். இவனை அகத்தியர்தான் காப்பாற்ற வேண்டும்’ என்று நாதழுக்க கையெடுத்துக் கும்பிட்டுக் கேட்டார் பெரியவர்.

பையனைப் பார்த்தேன். படித்த களை நெற்றியில் இருந்தது. ஆனால் தாடியும், மீசையுமாக தூங்கி வெகு நாள் ஆனது போல் சோர்வாகக் காணப்பட்டான்.

‘என்ன பிரச்சனை?’ என்று பையனைப் பார்த்துக் கேட்டேன்.

மெல்லச் சிரித்தானே தவிர வாய் திறந்து எதுவும் சொல்ல மறுத்து விட்டான்.

‘நீங்களே அகத்தியரைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்’ என்றார் அந்தப் பையனின் தந்தை.
‘நான் அகத்தியரைக் கேட்டுத் தெரிந்து கொள்வது இருக்கட்டும். அதனால் எனக்கென்ன லாபம்? வந்தவர் நீங்கள். ஏதோ பிரச்சினை தீர வேண்டும் என்று வந்திருக்கிறீர்கள். அதைச் சொன்னால் அகத்தியரிடமிருந்து பதில் வாங்கித் தருகிறேன். அவ்வளவுதான் என்னால் முடியும்.”

‘நீங்கள் இப்படிச் சொல்கிறீர்கள். ஆனால் எனக்குக் கிடைத்த தகவல்படி எல்லாமே அகத்தியர் முன் கூட்டியே சொல்லி விடுவார். வாய் திறக்க வேண்டாம் என்றார்களே…”

‘யாருக்கு அந்த பாக்கியம் கிடைக்கிறதோ அவர்கள் அதிர்ஷ்டசாலிகள்!’

இது வருகிறவர்களது நடத்தை, உண்மை, தன்னம்பிக்கையைப் பொறுத்திருக்கிறது. நீங்கள் பொய் சொன்னால், அகத்தியரும் உங்களைச் சோதிக்க ‘பொய்’ சொல்லுவார். அவரைச் சோதிக்க நினைத்தால், அவரும் உங்களைச் சோதிப்பார்’ என்றேன்.

சற்று நேரம் மவுனமாக இருந்தார்.

‘இவன் பெரும் சிக்கலில் மாட்டிக் கொண்டிருக்கிறான். அதிலிருந்து விடுதலை பெற வேண்டும். அவ்வளவுதான்’ என்றார் அந்தப் பெரியவர்.

நான் ஒன்றும் சொல்லாமல் நாடியைப் படிக்க ஆரம்பித்தேன்.

‘நாற்பத்தெட்டு நாட்கள் கழித்து இவன் அகத்தியனை வந்து சந்திக்கட்டும்’ என்று ஒரே வரியில் அகத்தியரிடமிருந்து பதில் வந்தது.

‘என்ன சார் இது! எந்தப் பதிலும் வரவில்லையே?’ என்றார் அந்தப் பெரியவர்.

‘காரணமில்லாமல் அகத்தியர் எதுவும் சொல்ல மாட்டார். நீங்கள் சென்று விட்டு, நாற்பத்தெட்டு நாட்கள் கழித்து வாருங்கள்’ என்றேன்.

இதைக் கேட்டதும் சட்டென்று அவருக்கு என் மீது கோபம் வந்தது!

‘உங்களை தெய்வமாக நம்பி நான் இங்கே வந்தது மிகப் பெரிய தப்பு. எங்களிடமிருந்து தகவல் வாங்கி, எங்களுக்கே பதில் சொல்வீர்கள் போலும். நான் எந்த பிரச்சினை என்று சொல்லாததால் உங்களால் எதுவும் சொல்ல முடியவில்லை. நாற்பத்தெட்டு நாட்கள் கழித்து வாருங்கள் என்று விரட்டி விட்டீர்கள். இது போன்ற மோசடி உலகில் வேறு எதுவும் இல்லை. சுத்த பிராடு” என்று ஆவேசமாக வாய்க்கு வந்தபடி திட்டிவிட்டு போனார் அவர்.

ஆனால் அந்த பையன் தலைகுனிந்தபடியே அவர் பின் சென்றானே தவிர ஒரு வார்த்தை பேசவில்லை!

எனக்கு மனது நொறுங்கிவிட்டது! இருந்தாலும் அகத்தியர் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று எண்ணியபடி அமைதி காத்தேன்.

அடுத்தாற்போல் ஒருவர் வந்தார். நாடி பார்க்கவும், அகத்தியர் அருள் வாக்கை அப்படியே எழுதிக் கொள்ளவும் ‘பேப்பரோடு’ வந்தமர்ந்தார்.

அவர் யார், எவர் என்று விசாரிக்காமல், அரை குறை மனதோடு நாடி பார்க்க ஆரம்பித்தேன். சம்பந்தம் சம்பந்தமில்லாமல் அகத்தியர் பதில் சொல்ல ஆரம்பித்தார்.

‘போதை மருந்துக்கு அடிமையாகி, பெரும் பணம் சேர்க்க மிலேச்சன் நாட்டிற்குச் சென்ற களவாணிப் பையன் அவன். நிர்வாணமாக திரையில் தோன்றி வக்கிரமாக வாத்ஸாயனாரின் சாஸ்திரத்தை மிலேச்ச நாட்டு வேசிகளோடு செயல்படுத்தி, நீலப்படத்தில் நிஜமாக நடித்தவன். செய்திட்ட பாவத்திற்கு பெரும் பணம் பெற்று தாய் நாடு திரும்பினாலும் மகாராஷ்டிரா மாவீரன் மண்ணில் கால் பதித்ததும், தான் கொண்டு வந்த நீலநிறப் படங்களோடு காவல் துறையில் மாட்டிக் கொண்டவன். எப்படியோ காவல் துறைக்குத் தெரியாமல் தப்பித்து, தாய் மண்ணாம் தமிழ்நாட்டில் இன்று காலையில் தான் கால் வைத்தான்.

இவனைத் தேடி காவல் துறை அலைந்து கொண்டிருக்கிறது. இன்னும் சில மணி நேரங்களில் பிடிபடுவான். சிறைக் கம்பிக்குள் சில நாட்கள் வாசம் செய்துவிட்டு, நாற்பத்தெட்டு நாளில், தற்காலிக பொறுப்பு  விடுதலை வாங்கி அகத்தியனை நோக்கித்தான் வருவான். அகத்தியனை பழித்த அந்த மகனின் தந்தைக்கோ பக்கவாதம் நோய் உண்டாகும். அகத்தியனை வணங்கிய பின் உயிர் தப்புவான்’ என்று விறுவிறுப்பாக வந்தது.

சுருங்கச் சொன்னால், சற்று முன் வெளியே சென்ற அந்த பெரியவரின் மகன், பெரும் பணம் சம்பாதிக்க வெளிநாடு சென்று நிர்வாணப் படங்களில் நடித்து, போதை மருந்துக்கு அடிமையாகி இந்தியாவில் அந்த படங்களை கள்ளத் தனமாக கடத்தி வந்து விற்க வந்தபோது, மும்பை விமான நிலையத்தில், காவல் துறையினரால், சுங்கத் துறையினரால் பிடிபட்டு, எப்படியோ வந்திருக்கிறான். இது அவனது தந்தைக்கும் தெரியும். மூடிமறைத்து விட்டு நாடி கேட்டு வந்திருக்கிறார் என்பதுதான் அகத்தியர் சொன்ன வாக்கு.

வாசகர்களுக்கு இப்பொழுது புரிந்திருக்கும் என்று நம்புகிறேன்.

எல்லாம் சரி, இந்த வாக்கினை அந்த பெரியவரிடமே அகத்தியர் ஏன் சொல்லவில்லை? 
சம்பந்தமில்லாத மனிதரிடம் ஏன் இதைச் சொல்கிறார் என்பது எனக்கு சுத்தமாகப் புரியவில்லை.
ஒருவருக்கு வரவேண்டிய தகவல், இன்னொருவருக்கு தவறாக போய்க் கொண்டிருக்கிறது என்பதை நினைத்து அதிர்ந்து போனேன். வந்த அந்த நபரோ சலனமில்லாமல் அகத்தியர் சொன்னதை அப்படியே எழுதிக் கொண்டிருக்கிறார், என்பதுகூட எனக்கு மனதை சங்கடப்படுத்தியது.
ஐயா, ‘தவறான தகவல் வந்திருக்கிறது. இந்த வாக்கு உங்களுக்கு வந்தது அல்ல. உங்களுக்கு முன்னால் வந்தவருக்கு சொன்ன தகவல். தயவு செய்து இதைக் கிழித்து போட்டு விடுங்கள். உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேளுங்கள். அகத்தியரிடமிருந்து அருள்வாக்கு வாங்கித் தருகிறேன்’ என்றேன்.

ஆனால் அவரோ குலுங்கி குலுங்கி அழுதாரே தவிர நான் சொன்னதற்கு மறுப்பும் தெரிவிக்கவில்லை. எழுதிய அந்த வாசகத்தைக் கிழித்தும் போடவில்லை.

சட்டென்று காலில் பொத்தென்று விழுந்தார். எனக்கு ஒன்றும் புரியவில்லை.

“சார், அகத்தியர் சொன்னதெல்லாம் உண்மை. முன்னால் சென்றாரே அவர் எனது தந்தை. அவருடன் சென்றவன் என் தம்பி. ‘பி.இ.’ படித்து ஒரு பொறுப்புள்ள என்ஜினியராக இருந்தான். அவனுக்கு இளமை கோளாறு. பார்க்கவும் மிகவும் நன்றாக இருப்பதால், பெண் வேட்கையால் தள்ளப்பட்டான்.
வெளிநாட்டிற்குச் சென்று நீலப்படங்களில் நடித்தால் பெரும் பணம் கிடைக்கும் என்று யாரோ ஆசை காட்டியதால், எப்படியோ வெளிநாட்டிற்குச் சென்றவன் சரியாக அந்த மோசமான கும்பலில் மாட்டிக் கொண்டான். அதே சமயம் பல லட்சம் சம்பாதித்து இந்தியாவுக்கு திரும்பும் போது மாட்டிக் கொண்டான். அவனை போலீஸ் தேடுவதும் தெரியும்.” என்றார் அவர்.

‘உங்கள் தந்தைக்கு நாடியில் நம்பிக்கை இல்லையா?’

‘இல்லை.’

‘உங்கள் தம்பிக்கு….’

‘அவன்தான் போதைக்கு அடிமையாகிவிட்டானே. நான் தான் அவர்களை உங்களிடம் வரச்சொன்னேன். என் தந்தை ஏடாகூடாமாகப் பேசுவார் என்பது எனக்குத் தெரியும். எனவே என் தந்தையை பின்தொடர்ந்து வந்தேன். இப்பொழுது நான் என்ன பரிகாரம் செய்தால் தம்பியைக் காப்பாற்ற முடியும்? என் தந்தையை பக்க வாதத்தில் இருந்து காப்பாற் முடியுமா?’ என்று கேட்டார் அந்த நபர்.

‘அகத்தியனைப் பழித்ததால் அதற்குரிய தண்டனை உன் தந்தைக்கு உண்டு. மீதமுள்ள கேள்விக்கு நாற்பத்து எட்டு நாட்கள் ஆகட்டும் வா. இனிமேல் நம்பிக்கை இல்லாதவர்களை அகத்தியனிடம் அனுப்பாதே’, என்று உத்தரவிட்டார் அகத்தியர்.

நேரடியாக இவரே தம்பியைக் கூட்டிக் கொண்டு வந்திருக்கலாம். ‘நாடி’ மீது நம்பிக்கை இல்லாதவர்கள் ஏன் வர வேண்டும் என்று வருத்தப்பட்டேன்.

நாற்பத்தி ஒன்பதாம் நாள்.

அந்த பெரியவரும், போதை மைந்தனும் என்னிடம் வந்தனர். பெரியவருக்கு எதுவும் பேச முடியவில்லை. நடக்க முடியாமல் நடந்து வந்தார். அவருக்குக் கைத்தாங்கலாக யாரோ இருவர். காலை நீட்டி மடக்க முடியாத நிலை. பேச்சிலும் வழவழ கொழ கொழ. கண்ணீரில் கண்கள் மூடியிருந்தது. அவரால் கைதூக்கி கும்பிடக் கூட முடியவில்லை.

நடந்த கதையைக் கேட்டேன்.

அன்னைக்கு வந்துவிட்டுப் போன ஆறு மணி நேரத்தில் அந்த போதை மைந்தனை ஆபாச பட வழக்கில் போலீசார் கைது செய்திருக்கிறார்கள். விசாரணைக் கைதியாக இருந்திருக்கிறான். ஜாமீன் இரண்டு நாளைக்கு முன்பு தான் கிடைத்திருக்கிறது.

அவன் தந்தைக்கோ இதையெல்லாம் கேட்டு, பிளட் பிரஷர் அதிகமாகி, அது லேசான வாதத்தில் வந்து முடிந்திருக்கிறது. மருத்துவ வசதியைக் கொண்டு உயிர் தப்பியிருக்கிறார். பையன் ஜாமீனில் விடுதலையானதும் என்னைப் பார்க்க நம்பிக்கையோடு வந்திருக்கிறார்.

மொத்தத்தில் அகத்தியர் வாக்கு அவர்களைப் பொறுத்தளவில் உண்மையாகி விட்டது. எதிர் காலம் எப்படி இருக்கும்? என்று நம்பிக்கையோடு கேட்டான் அந்த போதை மைந்தன்.

‘வெளிநாட்டில் நீலபடத்தில் நடித்திருப்பதால், இப்போது தப்பித்தாலும் தவறான முறையில் நீலப்படங்களைக் கொண்டு வந்தால் அதற்குரிய தண்டனையை முறைப்படி பெற வேண்டும்’ என்று சொன்ன அகத்தியர், போதைப் பழக்கத்திற்குள்ளான அவனுக்கு – அந்தப் பழக்கம் போக சில மூலிகைப் பொடிகளை உபயோகிக்கச் சொன்னார். பக்கவாதம் நோய் தாக்கிய அவனது தந்தைக்கும் பொதிகை மலையில் மட்டுமே விளையக்கூடிய மூலிகைகளைச் சொல்லி உண்டு வரச் சொன்னார்.
பி.இ. படித்திருந்தும் இப்படிப்பட்ட சமூக விரோத குற்றம் செய்ததினால், அவனுக்கு வேலை போயிற்று. சிறிது காலம் சிறைத் தண்டனையும் அனுபவித்தான். இப்போது சொந்தமாக இறை பணிக்குரிய பொருட்களை விற்பனை செய்து ஆன்மிகப் பணியில் ஈடுபட்டிருக்கிறான். போதைப் பழக்கமும் அவனை விட்டு விலகிவிட்டது. அவன் தந்தையும் யார் தயவும் இல்லாமல் நடக்கிறார். அவரை நெற்றியில் விபூதி, கழுத்தில் உத்திராட்சத்தோடு இன்றும் பார்க்கலாம்!

Sunday, 30 October 2011

சித்தன் அருள் - 53


நாடி பார்க்க வருகிறவர்களில் பெரும்பாலானோர் தாங்கள் செய்த தவறுகளைச் சொல்லி பரிகாரம் கேட்பதில்லை. அதை அப்படியே மறைத்து விட்டு ஓலைச் சுவடியில் ஏதாவது புதியதாக செய்தி வராதா? அகத்தியர் ஏதேனும் ஒரு ஆச்சரியத்தை நிகழ்த்த மாட்டாரா? என்று தான் கேள்விகள் கேட்பதுண்டு.

இன்னும் சிலர் என் பெயர் என்ன? என் மனைவி தற்சமயம் எங்கிருக்கிறாள்? என்றும் கேட்பதும் உண்டு.  இவர்கள் அகத்தியரை சோதிக்க இப்படிப்பட்ட கேள்விகள் கேட்பதால், அகத்தியரும் அவர்களுக்காக நையாண்டியாக அதே மாதிரி பதில் சொல்வதுண்டு.

அகத்தியர் கூறுகின்ற இந்த பதில் உண்மைக்கு மாறாக இருக்கும். ஆனால் அவர்களை மட்டம் தட்டுவது போலிருக்கும். அவர்கள் அகத்தியர் மீதோ அல்லது என் மீதோ கோபம் கொள்ள முடியாது. அப்படியே கோபப்பட்டாலும் அகத்தியர் இடுகின்ற சில கட்டளைகளால் அவர்கள் அடிபட்டு, பின்னர் எழுந்திருக்கிற முடியாத நிலைக்கும் ஆளானதுண்டு.

அன்றைக்கு என்னைப் பார்க்க வந்திருந்த ஒரு பெண்மணி மிகவும் நிதானமாக கேட்டார். ‘என் கணவரை கடந்த 2 ஆண்டு காலமாக காணவில்லை. அவர் எங்கிருக்கிறார் என்பதைக் கண்டுபிடித்துத் தாருங்கள்? என்று.

இப்படிச் சொல்லும் பொழுது அவள் முகத்தில் எந்தவிதமான பதட்டமோ, பயமோ இல்லை. எனக்கு இது சங்கடத்தை உண்டு பண்ணியது.

‘என்ன முயற்சியெல்லாம் எடுத்தீர்கள்?’

‘எல்லா முயற்சியையும் எடுத்துப் பார்த்து விட்டேன். ஒன்றும் பயனில்லாமல் போய்விட்டது. அகத்தியர் தான் என் கணவரைக் கண்டுபிடித்து தர வேண்டும்’ என்றாள் மறுபடியும் நிதானமாக.

கணவனைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் அலைந்து திரிந்து மனம் நொந்து விரக்தியின் உச்சத்திற்கே வந்துவிட்டதால் ஏற்பட்ட விளைவுதான் இது. அதனால்தான் இப்படி பற்றற்ற முறையில் பேசுகிறாள்…. என்று எனக்குள் நானே எண்ணிக் கொண்டேன்.

அகத்தியர் நாடியைப் பிரித்துப் பார்த்தேன்.

‘எதிரில் இருக்கும்   இப்பெண்மணியால் அகத்தியனுக்கு ‘தீட்டு’ பட்டுவிட்டது. எனவே 13 நாட்கள் கழித்து அகத்தியனை வந்து பார்க்கச் சொல்’ என்று தான் உத்தரவு வந்ததே தவிர, மற்றபடி எந்த தகவலும் அகத்தியரிடமிருந்து வரவே இல்லை.

இந்த ‘தீட்டு’ விஷயத்தை அந்தப் பெண்மணியிடம் கூறாமல் ‘இன்றைக்கு நேரம் சரியில்லை. 13 நாட்கள் கழித்து வாருங்கள். அகத்தியர் என்ன சொல்கிறார் என்பதைக் கேட்டுச் சொல்கிறேன்.’ என்று நாசூக்காக சொல்லி அனுப்பி வைத்தேன்.

13 நாட்கள் ‘தீட்டு’ ஏற்பட்டதால், யாருக்கும் அகத்தியர் அருள் கிடைக்காமல் போயிற்று. எனக்கும் சிறிது ஓய்வு கிடைத்ததே என்று எண்ணி, சந்தோஷப்பட்டேன்.

நண்பர்கள் சிலர் அழைததால் திருப்பதிக்கு சென்ற பொழுது, அங்கு இதே பெண்மணியை ஒரு நபரோடு கண்டேன். பூ பொட்டோடு அமர்க்களமாக சிரித்துப் பேசிக் கொண்டே போனார்கள். நல்லவேளை அந்த பெண்மணி என்னைக் கண்டு கொள்ளவில்லை. எனக்கு உள்ளூற சந்தோஷம். எப்படியோ காணாமல் போன கணவர், கண் எதிரே கிடைத்து விட்டார். அவர்கள் வாழ்க்கை நல்லபடியாக இருக்கட்டும் என்று மனதுக்குள் வாழ்த்தினேன். அதே சமயம் எனக்குள் ஒரு சந்தேகம். ‘எதற்காக அகத்தியர், இந்தப் பெண்ணால் தீட்டுப்பட்டு 13 நாட்கள் அருள்வாக்கு தரவில்லை?’ என்பதுதான். வந்திருந்த அந்த பெண்ணால் தீட்டுப்பட்டிருக்கிறது என்றால் அவளது கணவன் அல்லது தந்தை அல்லது தாய் மரணமடைந்து இருக்க வேண்டும். அவளுக்கு திருமணமாகி விட்டதால் அவளது பெற்றோர் இறந்திருந்தால் மூன்று நாட்கள் தான் தீட்டு இருக்கும். கணவன் இறந்திருந்தால் தான் பதிமூன்று நாட்கள் தீட்டு உண்டு.
அப்படியென்றால் திருப்பதி மலையில் பூவோடும், பொட்டோடும் கலகலவென்று சிரித்துக் கொண்டு போனால்…. இதற்கு என்ன அர்த்தம்? எது நிஜம்? எது பொய்? என்று குழப்பிக் கொண்டேன். காரணமில்லாமல் அகத்தியர் எதையும் செய்ய மாட்டார், சொல்ல மாட்டார் என்று மட்டும் எண்ணிக் கொண்டேன்.

பதினைந்து நாட்கள் கழிந்த பின்னர்….

அதே பெண்மணி, என்னிடம் வந்தாள். ‘பதிமூன்று நாட்கள் கழித்து வரச் சொன்னீர்களே, அதுதான் வந்தேன். எப்படியாவது என் கணவரைக் கண்டுபிடித்துத் தாருங்கள்’ என்றாள்.

இதைக் கேட்டதும் எனக்கு அடி வயிறு பற்றி எரிந்தது. திருப்பதியில் கண்ட காட்சி கண்ணில் அடிக்கடி வந்தது. என் கண்ணால் கண்டது பொய்யா? இல்லை இவள் சொல்வது பொய்யா? இல்லை, அவசரத்தில் இவளைப் போன்ற ஒரு பெண்ணைக் கண்டு தவறுதலாக இவள் தான் அவள் என்று எண்ணிக் கொண்டேனா?’ என்று குழம்பிக் கொண்டேன்.

சில நிமிடப் போராட்டத்திற்குப் பிறகு அகத்தியரிடம் என் குழப்பத்திற்கு மன்னிப்புக் கேட்டுக் கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

‘இன்னவளின் கணவன், இவளை விட்டு விலகிச் சென்று ஒன்றரை ஆண்டுகள் ஆனது என்னவோ உண்மைதான். வியாபார நிமித்தமாக வெளிநாடு சென்ற அவன், வேற்று நாட்டு அரசால் கைது செய்யப்பட்டான். தகாத தப்பு செய்ததாக!
பதினைந்து நாட்களுக்கு முன்பு அகத்தியனை நாடி இந்த பெண்மணி வந்த அதே நேரத்தில் வெளிநாட்டில் கார் விபத்தில் இவளது கணவன் உயிரிழந்து விட்டான். அது இவளுக்கு இன்னமும் தெரியாது. அந்த அரசாங்கமும் இவளுக்கு முறைப்படி தகவல் சொல்லவில்லை.

அகத்தியனை நோக்கிவந்த நேரத்தில் இவளது கணவர் இறந்து போனதால் இவளது தீட்டு எமக்கு பட்டு, அதனால் யாம் இவளை பின்னர் வரச் சொன்னோம்.

இந்நிலையில் இவளுக்கும், பக்கத்து வீட்டு ஆண்மகனுக்கும் இடையே நீண்ட கால தொடர்பு இருந்தது. இதை இவளது கணவனும் அறிவான். அவர்கள் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்ததும் உண்மை. சில நாட்களுக்கு முன்பு வேங்கடவன் சன்னிதியில் காதலனின் வற்புறுத்தலுக்காக கட்டாய தாலி அணிந்து கொண்டு வந்தாள்.

எனவே இன்றைக்கு ‘சுமங்கலி’ என்பதால், இவளைப் பற்றி யாம் சொன்னோம். இவளை எப்படிச் சொல்லி சமாளிக்க முடியுமோ, அப்படிச் சொல்லி அனுப்பி விடு’,  என்று அகத்தியர் எனக்குக் கட்டளையிட்டார்.

இது எனக்கு மிகப்பெரிய தர்மசங்கடமாகிப் போயிற்று. அகத்தியர் ஏன் என்னை இப்படிப்பட்ட சோதனைகளில் இறக்கி விடுகிறார் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை.

இப்பொழுது எனக்குள்ள கேள்வி இரண்டு. ஒன்று இந்தப் பெண்ணின் உண்மையான கணவர் வெளிநாட்டில் இறந்திருக்கிறார். அவரது உடல் இந்தியாவுக்கு வர இன்னும் சில நாட்கள் ஆகும். இந்த நிமிடம் வரை  இவளுக்கு இந்த உண்மை தெரியாது. இதன்படி பார்த்தால் இவள் விதவை.

சில நாட்களுக்கு முன்பு காதலனால் திருப்பதி சன்னிதானத்தில் கட்டாயத்தாலி கட்டிக் கொண்டு, தாம்பத்திய சுகம் அனுபவித்துக் கொண்டு வருவதால் இவள் சுமங்கலி. இப்படியிருக்கும் பொழுது அவள் ஒன்றும் தெரியாதது போல் தன் கணவனைப் பற்றி கேட்கிறாளா? இவளுக்கு என்ன பதில் சொல்வது என்று யோசித்தேன்.

‘அம்மணி, நீங்கள் உங்கள் முகவரியைக் கொடுத்து விட்டு போங்கள். நான் ஒரு நல்ல நாளில் தங்களுக்கு பதில் கடிதம் அனுப்புகிறேன்’ என்று சொல்லி அவளது முகவரியை தவறாமல் வாங்கிக் கொண்டேன்.

முகவரி வாங்கிக் கொண்டாலும் நான் எந்தவிதக் கடிதமும் அந்தப் பெண்மணிக்கு எழுதவே இல்லை. அதே சமயம் அகத்தியர் சொன்ன அத்தனையையும் ஒன்று விடாமல் எழுதி அவள் கடித முகவரியும் எழுதி, கவரை நன்றாக ஒட்டி என் அறையிலேயே வைத்து விட்டேன்.
ஒன்றரை மாதம் கழித்து திடீரென்று அவள் வந்தாள். என்னிடம் சண்டையோ வாக்குவாதமோ செய்யவில்லை. நான் சட்டென்று அவளுக்கு எழுதிய அகத்தியர் வாக்கு கடிதத்தை அப்படியே கொடுத்தேன்.

அதை சப்தமில்லாமல் பிரித்து படித்து விட்டு, ‘இதை அன்றைக்கே என்னிடம் நேரடியாகவே சொல்லி இருக்கலாமே’ என்று ஒரு வார்த்தை மட்டும் கேட்டாள்.

‘நியாயம் தான். அகத்தியர் சொன்னதை அப்படியே சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அன்றைய சூழ்நிலையில் இந்த செய்தி தங்களுக்கு மிகப் பெரிய அதிர்ச்சியை உண்டு பண்ணியிருக்கும். அதைத் தவிர்க்கவே இப்படிச் செய்தேன்’ என்றேன்.

அவள் ஒன்றும் பேசவில்லை. சில நிமிடம் மவுனமாக இருந்தாள். ‘வெளிநாட்டிலிருந்து பத்து நாளைக்கு முன்புதான் எனக்கு செய்தி வந்தது. அங்கேயே எல்லா காரியங்களையும் செய்யச் சொல்லி விட்டேன். அதுவும் நேற்றைக்கு முடிந்து விட்டது’ என்றாள்.

பெயருக்கு நானும் வருத்தம் தெரிவித்து விட்டு, ‘உங்களுக்கு உதவத்தான் புதுக் கணவர் கிடைத்திருக்கிறாரே. கவலையை விடுங்கள்’ என்றேன்.

‘இருக்கலாம். இருந்தாலும் எனக்கென்னவோ நான் செய்தது மிகப் பெரிய தவறு என்றே தோன்றுகிறது. ஆசையோடு கட்டிய தாலிக்கும், மிகவும் கட்டாயமாகக் கட்டிய தாலிக்கும் வித்தியாசம் உண்டு. எனக்கு இந்த இரண்டாவது திருமணம் பிடிக்கவில்லை. தவிர அவருக்கும் மனைவி, குழந்தை உண்டு. வருமானமும் கிடையாது. எனவே அவரை விட்டு விலகுவதாக முடிவு செய்து விட்டேன்’ என்றாள்.

நான் மவுனமாக அந்தப் பெண்மணியையே பார்த்துக் கொண்டிருந்தேன். ‘என்ன செய்யப் போவதாக உத்தேசம்?’ என்று கேட்டேன்.

‘என்னிடமிருக்கும் பணத்தைக் கொண்டு அகத்தியர் பெயரால் ஏதேனும் சமூகத் தொண்டு செய்யலாம் என்று எண்ணுகிறேன்’ என்றாள் அவள்.

நல்ல முடிவு என்று வாழ்த்தினேன்.

அதன்பிறகு அந்தப் பெண்மணியை நான் பார்க்கவில்லை. ஆனால் நிச்சயமாக ஏதேனும் சமூகத் தொண்டு செய்து கொண்டிருப்பாள் என்பது மட்டும் எனக்கு உறுதியாக தெரிகிறது.

சித்தன் அருள் - 52


‘நன்றாக இருந்த பையன், இப்போ பித்து பிடித்த மாதிரி ஆகிவிட்டான். என்ன நடந்தது என்று தெரியவில்லை. இவன் குணம் ஆவானா மாட்டானா?’ என்று 22 வயது மகனை அழைத்து வந்து என்னிடம் கேட்டாள் அவனது தாய்.

பையனைப் பார்த்தேன். சாதாரணமாகத்தான் இருந்தான். அவன் தாய் சொல்கிற அளவுக்கு எந்தவிதப் பாதிப்புக்கும் ஆளானதாகத் தெரியவில்லை.
‘என்ன நடந்தது?’

‘ஒன்றுமில்லை. ஒண்ணறை வருஷத்திற்கு முன்பு சேத்துப்பட்டு பாலத்திலே ராத்திரி ஒரு மணிக்கு தனியாக வண்டி ஓட்டிக் கொண்டு வந்திருக்கான். பாலத்தை விட்டு இறங்கியதும், ஏதோ ஜில்லுன்னு உடம்பிலே பட்டிருக்கு. அதற்கு பிறகு இவன், இவனாக இல்லை….’

‘இது எப்படி உங்களுக்கு தெரியும்?’

‘அதுவரைக்கும் நடந்ததை இவன் நண்பர்கள்  என் கிட்டே சொன்னார்கள். இது உண்மையா, பொய்யா என்று தெரியாது. ஆனால் அதுவரை பிரண்ட்ஸ் கூட சேர்ந்து டிபன் சாப்பிட்டிருக்கான். சினிமாவுக்கும் போயிருக்கான். ஜாலியாக அரட்டையும் அடிச்சிருக்கான்.’

‘டாக்டரிடம் கொண்டு போய் காண்பிச்சீங்களா?’

‘காட்டினோம். என்னவெல்லாமோ மருந்து கொடுத்தாங்க. ஒண்ணும் குணமாகல. நீங்க தான் அகத்தியரிடம் அருள்வாக்கு கேட்டு தரணும்.
‘அது சரி… நீங்க என்ன நெனக்கிறீங்க?’

‘யாரோ செய்வினை வைச்சிட்ட மாதிரி தெரியுது.’

‘எதுக்காக வைக்கணும்…?’

‘அது தெரியாதுங்க. அக்கம் பக்கத்திலே இருக்கிறவங்க சொல்றதைத்தான் உங்க கிட்டே சொல்றேன்.’

‘சரி இதுக்கு ஏதாவது பரிகாரம் செய்திருப்பீங்களே?’

‘சோட்டாணிக்கரை பகவதி கோயிலுக்கு இவனை அழைச்சிட்டு போனோம். 45 நாட்கள் அங்கேயே தங்கி, பூஜை பரிகாரங்களையும் செய்து பார்த்து விட்டோம். எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை.

இவ்வளவு சொல்லிக் கொண்டிருந்த போது அந்த பையன் மவுனமாகவே இருந்தான். வாய் திறந்து பேசவே இல்லை. நானும் அந்த பையனிடம் எந்தக் கேள்வியும் கேட்கவே இல்லை.

என்னதான் இருக்கும் என்பதை அறிய எனக்கு ஆவல் இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் அகத்தியரை வணங்கி, ஜீவநாடியைப் பிரித்தேன்.

ஜீவநாடியிலிருந்து எந்த விதமான பதிலும் வரவில்லை. முதலில் எனக்கு இது அதிர்ச்சியைத் தந்தது. மறுபடியும் பிரார்த்தனை செய்து கொண்டு படிக்க ஆரம்பித்தேன்.

மறுபடியும் எந்த பதிலும் அகத்தியர் சொல்லவே இல்லை.

தன்னம்பிக்கையோடு மறுபடியும் மறுபடியும் பிரித்துப் படித்தேன்.
ஒன்பதாவது தடவையாகத்தான் அகத்தியரிடமிருந்து பதில் வந்தது.
‘இவனுக்கு பதில் சொல்ல இந்த இடம் ஏற்றதல்ல. செய்வினையை அகத்தியன் நம்பவில்லை என்றாலும், ஒரு துர்தேவதை இவனுக்குள் புகுந்திருப்பதால் அந்த தேவதையோடு அகத்தியன் பேச விரும்பவில்லை. எனவே ஒரு அஷ்டமி தினத்தில் இரவு ஆரம்பிக்கும் நேரத்தில் சென்னை நகரின் பிரசித்திப் பெற்ற தேவாலயத்தில் இதுபற்றி விளக்குவோம்’ என்றார்.

பிறகு என்னிடம், ‘உன்னைச் சுற்றி ஒரு பாதுகாப்பு வளையம் போட்டுக் கொள். அதற்குரிய மந்திரம் இது.’ என்று சொல்லி சில மந்திரங்களை உபதேசித்தார்.

அந்த மந்திரங்கள் இது வரை நான் கேள்விப்படாதது. படிக்க கஷ்டமாகத்தான் இருந்தது. பொறுமையாகவும், நிதானமாகவும் நான் மூன்று தடவை அப்போதே சொல்லி முடித்தேன்.

இந்த மந்திரங்களைச் சொல்லி முடித்ததும் அதுவரை பொறுமையாக இருந்த அந்தப் பையனின் முகத்தோற்றம் மாறியது. திடீரென்று விழுந்து விழுந்து சிரித்தான்.

அந்த சிரிப்பு அவனுடையதாக இல்லை. பெண்ணின் இனிமையான காதல் சிரிப்பு போல் இருந்தது. ஒரு ஆண் மகனிடமிருந்து திடீரென்று பெண் குரலில் பேச்சு வந்ததால் நான் உட்பட அந்த பையனின் தாயும் சேர்ந்து வெலவெலத்துப் போனோம்.

என்னதான் எனக்கு அகத்தியர் பாதுகாப்பு மந்திரத்தைச் சொன்னாலும் திடீரென்று இப்படி அவன் பெண் குரலில் பேசுவான் என்பதை கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை.

அந்த தாய் தன் பையனுடைய இந்த நிலையைக் கண்டு பொங்கி பொங்கி அழுதாள். தாங்கிக் கொள்ள முடியவில்லை. தொடர்ந்து அவன் ஒரு பெண் போல சிரித்துக் கொண்டிருந்தான்.

நான் அவனை முழுமையாக எடை போட்டேன். இதற்கு கொஞ்சம் மனதைரியமும் தேவைப்பட்டது. அதோடு அகத்தியர் எனக்கு கொடுத்த அந்த பாதுகாப்பு மந்திரமும் கை கொடுத்திருக்க வேண்டும்.

இல்லையென்றால் அந்த சூழ்நிலையில் அவனோடு நான், என் அறையில் ஒரு நிமிடம் கூட இருந்திருக்க முடியாது.

பத்து நிமிடங்களுக்குப் பிறகு அந்த பையன் லேசாக மயக்கமடைந்து தரையிலேயே படுத்துவிட்டான். சிரிப்பும் நின்று விட்டது.

சிறிது நேரத்திற்குப் பின்பு அவனது தாயாரிடம் அகத்தியர் சொன்னதைச் சொல்லி, எதிர்வரும் அஷ்டமி தினத்தன்று மாலை வேளையில் குறிப்பிட்ட அந்த தேவாலயத்திற்கு பையனை அழைத்து வரச் சொன்னேன்.

அங்கும் இப்போது நடந்தது போல் ஏதேனும் நடந்தாலும் நடக்கலாம் என்று மனதிற்குத் தோன்றியதால், மேலும் சில நபர்களோடு தக்கத் துணையோடு வரும்படி அந்த பையனின் தாயாரிடம் கேட்டுக் கொண்டேன்.

அந்த தேவாலயத்தின் முன்பு அஷ்டமி நேரத்தில் மாலை வேளையில் அகத்தியர் ஜீவநாடியோடு காத்துக் கிடந்தேன். அவர்கள் வரும் வரை அகத்தியர் சொன்ன பாதுகாக்கும் மந்திரத்தையும் சற்று பயத்துடன் சொல்லிக் கொண்டிருந்தேன்.

சற்று நேரத்தில் அந்தப் பையனும்,  அவனைச் சேர்ந்தவர்களும் வந்தார்கள். பையன் முகத்தில் களை இருந்தது. சுறுசுறுப்புகூட அபாரமாக இருந்தது. மற்றவர்கள் முகத்தில் மட்டும் சற்று பயம் தெரிந்தது.

என் முன் வந்து அமர்ந்த அவனை மேற்கு பார்த்து உட்காரச் சொன்ன அகத்தியர், அவனைப் பற்றிச் சொல்ல ஆரம்பித்தார்.

‘இவன் ஒரு பெண் மீது காதல் கொண்டிருந்தான். முதலில் இவனது வேண்டுகோளுக்கு செவி சாய்க்காத அந்தப் பெண் பின்பு இரட்டிப்பு மடங்கு இவன் மீது ஆசை கொண்டாள். பிறப்பில் அவள் கிறிஸ்தவ சமுதாயத்தைச் சேர்ந்தவள். இருந்தாலும் திருமணம் செய்தால் இவனைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று மனதில் உறுதி பூண்டாள்.

திருமண விஷயமாக அவள் பெற்றோர் முயற்சித்தபோது, பெற்றோரிடம் தன் எண்ணத்தை வெளியிட்டாள். வழக்கம் போல் எல்லாப் பெற்றோர்களும் சொல்வது போல் அவளது பெற்றோர்களும் சொன்னார்கள். பெற்றோர் இந்தத் திருமணத்திற்கு தடைவிதித்தாலும் இதையும் மீறி தான் இந்தப் பையனை துணிந்து மணந்து கொள்ளலாம் என்று நினைத்தாள் அந்தப் பெண். அதன்படி இவனைத் தேடி ஓடி வந்திருக்கிறாள்.

ஆனால் இந்தப் பையன் சட்டென்று  பேச்சு மாறி இரண்டாண்டுக்குப் பின் திருமணம் செய்யலாம் என்று மழுப்பியிருக்கிறான். இதை சற்றும் எதிர்பார்க்காத அவள் சட்டென்று ‘சேத்துப்பட்டு (சென்னை) ரெயில் நிலையத்திற்கு வந்து ரெயில் முன்பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள்.

நல்லவேளை அவள் யாரையும் காட்டிக் கொடுக்கவில்லை. கடிதமும் எழுதி வைக்கவில்லை.

தன்னால் தான் அவள் தற்கொலை செய்து கொண்டாள் என்பதை உணர்ந்த இவன், தினமும், நள்ளிரவில் அந்த ‘சேத்துப்பட்டு’ மேம்பாலத்தில் நின்று அவளுக்காக கண்ணீர் சிந்துவது  வழக்கம். அந்தப் பெண்ணும் அவன் நினைப்பிலே இறந்து போனதாலும், இறந்து போன அந்த ஆவி சட்டென்று இவனுக்குள் புகுந்து கொண்டது. ஆகவே அன்று முதல் இன்று வரை இவனை ஆட்டிக் கொண்டிருப்பது அந்த பெண்ணின் ஆவிதான்….’
இவ்வாறு ஒரு நீண்ட கதையை சுருக்கமாகச் சொல்லிமுடித்தார்.

அகத்தியர். இந்த உண்மை அந்தப் பையனின் தாயார் உட்பட அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. ஆனால் என்னிடம் சொல்லாமல் மறைத்து விட்டார்கள்.

“இப்போது அவனுள் புகுந்த ஆவியைப் போக்குவது எப்படி?’ என்று கேட்டாள் அவனது தாய். இதற்கு அகத்தியர் விளக்கம் அளித்தார்.

‘இது அதர்வண வேதத்தை சேர்ந்த பரிகாரம் தொடர்புடையது. சோடாணிக்கரை பகவதி கோவிலுக்கு சென்றிருக்கும் பொழுதே இந்த பரிகாரம் செய்திருக்க வேண்டும். எனினும் இப்பொழுது இந்த தேவாலயத்திற்குச் சென்று பாதிரியார் கையில் சிலுவை ஒன்றை ஆசிர்வாதம் பெற்று அதனை இவன் கழுத்தில் அணியட்டும்.  இல்லையெனில் வேறு எங்கேயாவது சென்று தினமும் பைபிளை முதலிலிருந்து கடைசி வரை இந்த பையனுக்காக மற்றவர்கள் முப்பது நாட்கள் படிக்கட்டும். இல்லையெனில் வேளாங்கண்ணி கோவிலுக்குச் சென்று பதினெட்டு நாட்கள் பிரார்த்தனை செய்து வரட்டும்.  இறந்த அந்தப் பெண் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவளாக இருப்பதால் இதைச் செய்யச் சொன்னேன். அந்த ‘பெண்’ணின் தொந்தரவு இனிமேல் இவனுக்கு இருக்காது. அதற்காகத்தான் உங்களை இந்த புனிதமிகு தேவாலயத்திற்கு வரச் சொன்னேன்.’  இவ்வாறு அகத்தியர் கூறினார்.

அந்தப் பையனின் சொந்தக்காரர்களுக்கு அகத்தியர் சொன்னதில் சிறிதும் உடன்பாடில்லை. வேறு மதத்தைச் சேர்ந்த தாங்கள் பைபிள் படிப்பதா? என்று கடுங்கோபம் அடைந்தாள். என்னிடமும் வாக்குவாதம் செய்தனர்.

‘ஒன்றே ஒன்று மட்டும் சொல்கிறேன். நான் அகத்தியர் சொன்னதை சொன்னேன். மற்றவை உங்கள் இஷ்டம். நான் எதுவும் வற்புறுத்த வில்லை’ என்று சொல்லி விட்டுக் கிளம்பி விட்டேன்.

ஒண்ணறை மாதம் கழித்து அந்தப் பையனும், அவனுடைய தாயும் என்னைத்தேடி வந்தனர்.

அகத்தியர் சொன்னபடியே அத்தனை பிரார்த்தனைகளையும் ஒன்று விடாமல் செய்து விட்டதாகவும், இப்பொழுது அவன் முற்றிலும் நல்லபடியாக மாறி விட்டதாகவும் மகிழ்ச்சியுடன் கூறினார்.

அகத்தியருக்கு நன்றி கூறிய நான், ஒன்றை மட்டும் அவரிடம் மன்றாடிக் கேட்டுக் கொண்டேன், ‘இனிமேல் இப்படிப்பட்ட ஆவி, மதம் விஷயத்தில் என்னை மாட்டி விடாதீர்கள்’ என்றேன்.

இது வரை அப்படிப்பட்ட தொந்தரவுகள் வரவில்லை.

சித்தன் அருள் - 51


“முன் ஜென்ம பாவம் என்று மட்டும் சொல்லி எங்களை பரிகாரம் செய் சொல்லாதீர்கள். அப்படிச் செய்து செய்து அலுத்துப் போய் விட்டோம். வேறு ஏதாவது சொல்லுங்கள். நாங்கள் செய்கிறோம். எப்படியாவது எங்கள் கஷ்டம் விடிந்தால் போதும்” என்று மிகுந்த வேதனையோடு சொல்லி என் முன்பு அமர்ந்தார் ஒரு நடுத்தர வர்க்கப் பெண்!

“அப்படி என்ன கஷ்டம் உங்களுக்கு?’

“நல்ல உத்தியோகத்தில் இருந்த என் கணவருக்கு திடீரென்று உத்யோகம் பறிபோயிற்று. இரண்டாவது – நன்றாக படித்துக் கொண்டிருந்த என் பையன் ஏதோ பித்து பிடித்த மாதிரி வீட்டிலே உட்கார்ந்து எதையோ வெறித்து வெறித்துப் பார்த்து தனக்கத் தானே சிரித்துக் கொண்டிருக்கிறான். காலேஜுக்குப் போவதே இல்லை.

‘அப்புறம்?’

எனது ஒரே மகள் பவித்ரா, நன்றாக இருந்தாள். புத்திசாலிப் பெண். வீட்டில் இருந்து வேலைக்குச் செல்லமாட்டேன். தனியாக ஹாஸ்டலில் இருநதுதான் வேலைக்குச் செல்வேன் என்று சொல்லி, வீட்டை விட்டு தனியாகச் சென்று விட்டாள். நான் பித்துப் பிடித்த மாதிரி இருக்கிறேன். எங்களுக்குண்டான சொத்து, தோட்டம், வீடு எல்லாம் திடீரென்று ஏற்பட்ட கடனுக்காக குறைந்த விலைக்கு விற்க வேண்டியதாயிற்று. அப்படியிருந்தும் இன்னும் கடன் அடையவே இல்லை, என்று மூச்சுவிடாமல் சொல்லி, கொதித்து கொதித்து அழுதாள்.

பார்க்க பரிதாபமாக இருந்தது. கேட்கவும் சங்கடமாக இருந்தது.

‘என் வினை தீர இதுவரையிலும் கடன் வாங்கியே பல லட்சம் ஜோதிடத்திற்காக, பரிகாரத்திற்காகச் செலவழித்துவிட்டேன். இனிமேல் என்னிடம் விற்பதற்கு ஒன்றுமே இல்லை’ என்றாள்.

‘கணவருக்கு எப்படி வேலை போயிற்று?’

‘யாரோ செய்த தவறு இவர் மீது பழியாக விழுந்தது. பணம் கையாடினார் என்று சொல்லி வேலையை விட்டு நீக்கிவிட்டார்கள்’ இதுதான் எங்கள் குடும்பத்தில் விழுந்த முதல் அடி.

‘உங்கள் பையனுக்கு என்ன ஆயிற்று?’

‘காலேஜுக்குப் போயிட்டு வந்தான். அவ்வளவுதான் தெரியும். மறுநாள் முதல் அவன் காலேஜூக்குப் போகவே இல்லை. பைத்தியம் போல் தனக்குத் தானே பேசிக் கொண்டான். சாப்பிடுவதும் இல்லை. குளிக்கவும் மாட்டான். போட்ட டிரஸ்ஸை மாற்றவும் இல்லை. எதைக் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டான். எவ்வளவோ வைத்தியம் பண்ணிப் பார்த்தேன். நாளையோட எட்டு மாசம் ஆகப் போகிறது. காலேஜூக்கு போய் அவனுக்கு என்ன வந்தது, ஏன் எங்களுக்கு இந்தக் கஷ்டம்? என்று மீண்டும் அழுதாள். சிறிது நேரம் பொறுமையாக இருந்தேன்.

ஏன் பொண்ணு கை நிறைய சம்பாதிக்கிறா. அவளை வைச்சுதான் என் குடும்பம் ஓடிக் கொண்டிருக்கிறது. கூட இருந்து குடும்ப பொறுப்பை ஏற்பாள் என்று எண்ணினேன். ஆனால் அவளோ, இந்த வீட்டில் இருந்தால் நிம்மதியே இல்லை என்று தனியாகப் போய் ஆறு மாதம் ஆகிறது. என் குடும்பத்திற்கு யாராவது ஏதாவது பில்லி – சூனியம் வைச்சிருக்காங்களா? என்றார் அந்த பெண்மணி!

அகத்தியர் பொதுவாக பில்லி, சூன்யத்தை நம்புவதில்லை. அதற்காக அதர்வண வேதத்திலுள்ள சக்திகளைக் குறை சொல்ல மாட்டார். ஆனால் இந்த அம்மாள் சொன்னதை வைத்துப் பார்க்கும்பொழுது இது மாந்திரீகம் என்று கூட எனக்கு எண்ணத் தோன்றியது. பதினைந்து நிமிடம் அகத்தியரை நோக்கி பலமாகப் பிரார்த்தனை செய்தேன். பிறது நாடியைப் புரட்டினேன்.

‘சட்டென்று கிளம்பட்டும் இவள் தன் வீடு நோக்கி. இரு நாள்கள் கழித்து காலையில் அகத்தியரை வந்து பார்க்கட்டும்’ என்று தான் மாறி மாறி வந்ததே தவிர வேறு புதிய செய்திகள் எதுவும் என் கண்ணில் தென்படவே இல்லை.

‘அம்மா உங்களுக்கு இன்றைக்கு அகத்தியர் வாக்கு எதுவும் வரவில்லை. ஆனால் கால தாமதம் செய்யாமல் உடனே வீட்டிற்குக் கிளம்பச் சொல்கிறார். இரண்டு நாட்கள் கழித்து வாருங்கள். அகத்தியர் நிச்சயம் பதில் தருவார்.’ என்று அவளைக் கிளப்ப முயன்றேன்.

ஆனால் அவளோ நகரவே மறுத்தாள். வீட்டிலே போய் நான் என்ன செய்யப் போகிறேன். இங்கேயே எத்தனை நேரமானாலும் இருந்து ‘நாடி’ பார்த்துவிட்டுத்தான் செல்வேன் என்று அடம் பிடித்தாள்.

‘அகத்தியர் சொன்னால் அதற்கு என்னவோ ஓர் காரணம் இருக்கும். தயவு செய்து வீட்டிற்குக் கிளம்புங்கள். வேறு எங்கேயும் செல்லாமல் நேராக வீட்டிற்கே செல்லுங்கள்.’ என்று மிகவும் கட்டாயப்படுத்தினேன். இது எனக்கே சங்கடமாகத்தான் இருந்தது.

‘ஆனால் அந்தப் பெண்ணோ வாய்க்கு வந்தபடி பேசினார். எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை.

அகத்தியர் மீது தான் எனக்கு கோபம் வந்தது. எனக்கெதற்கு இந்த வீண் பழி. எதற்காக இந்த கேவலமான பேச்சு என்று மனம் நொந்து போனேன்.

அந்த பெண்மணி மிகுந்த வருத்தத்தோடும் கோபத்தோடும் போனது மட்டும் எல்லோரும் பார்த்த உண்மை! இதற்குப் பிறகு என்னைப் பார்க்க வந்திருந்த மற்றவர்களுக்கு நாடி படிக்க மனமே இல்லை.

நான்கு மணி நேரம் கழிந்தது.

அந்தப் பெண்மணியிடமிருந்து எனக்கு டெலிபோன் வந்தது! நேரில் திட்டியது இல்லாமல் டெலிபோனில் வேறு திட்டப் போகிறாள் போலும் என எண்ணிக் கொண்டே டெலிபோனைக் கையில் எடுத்தேன்.

ஐயா, என்னை மன்னிச்சிடுங்க. தெரியாத்தனமா உங்களையும் திட்டினேன். அகத்தியரையும் திட்டினேன். நல்ல வேளை நான் உடனே வீட்டிற்குப் போகவில்லையென்றால், தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த என் மகனைக் காப்பாற்ற முடியாமல் போயிருக்கும். இதற்கு நான் அகத்தியருக்கு நன்றி சொல்ல வேண்டும் என்றாள்.

அவளது பேச்சிலிருந்து அவள் மிகப் பெரிய அதிர்ச்சியிலிருந்து தப்பிய சந்தோஷம் இருப்பதை அறிந்து கொண்டேன்.

‘பையன் ஏதோ விரக்தியில் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தோடு தூக்க மாத்திரையை அளவுக்கு மீறிச் சாப்பிட்டு, மயங்கிக் கிடப்பதை அகத்தியர் அறிந்து, அவனது உயிரைக் காப்பாற்ற அவனது தாயை உடனடியாக அனுப்பியிருக்கிறார். இருந்தாலும் அவன் நல்லபடியாக குணமாக டாக்டர்கள் 48 மணி நேரம் ஆகும் என்றதால், இரண்டு நாட்கள் கழித்து பையனை அழைத்துக் கொண்டு வருவதாக அந்த அம்மணி சொல்ல நான் அறிந்து கொண்டேன்.

அகத்தியருக்கு நானும் தனிப்பட்ட முறையில் நன்றி சொல்லிக் கொண்டேன்.
மூன்று நாள் கழிந்தது.

அந்த பெண்மணி தன் பையனோடு மறுபடியும் என்னைப் பார்க்க வந்தாள். காலில் விழுந்து அவளது மகன் ஆசீர்வாதம் பெற்றான். எதற்காக இந்த கஷ்டகாலம். அது எப்போது  நிவர்த்தியாகும் என்பதை மட்டும் அகத்தியர் சொன்னால் போதும். அதற்காக என்ன பிரார்த்தனை வேண்டுமானாலும் செய்யத் தயார் என்றாள் அந்தப் பெண். அகத்தியரிடம் அனுமதி கேட்டு படிக்க ஆரம்பித்தேன்.

‘அவளது கணவர் லஞ்சம் வாங்கியே பழக்கப்பட்டு போனவர். அவருக்கு ஒரு நாளாவது ஒரு ரூபாயாவது லஞ்சம் வாங்கவில்லை என்றால் வீட்டிற்குத் திரும்ப மனதே வராது. இவ்வளவுக்கும் மிகப்பெரிய கம்பெனியில் அன்றைக்கு எந்த லஞ்சமும் கிடைக்கவில்லை என்றால் அலுவலகத்தில் உள்ள எதையாவது ஒரு பொருளை, குறைந்தபட்சம் குண்டூசி பாக்கெட்டையாவது எடுத்து சட்டைப் பைக்குள் போட்டுக் கொள்வார். அப்படிப்பட்ட மனிதருக்கு ஒரு முக்கியமான நபர் முக்கியமான காரியத்தை முடித்து கொடுக்க விலை உயர்ந்த ‘நீலக்கல்’ வைரம் பதித்த ஒரு மோதிரத்தை அன்பளிப்பாகக் கொடுத்தார்.

சாதாரண குண்டூசியையே விடாமல் கொண்டு வரும் அந்த மனிதனுக்கு ‘புளூ ஜாகர்’ வைர மோதிரம் கிடைத்தால் விட்டு விடுவாரா? சந்தோஷத்துடன் வாங்கி தன் கால் சட்டைக்குள் மறைத்துக் கொண்டார். அந்த ‘புளூ ஜாகர் வைரம்’ எவ்வளவு கொடுமையான பலன் தரும் என்பதை அவர் அறியவில்லை. அறிந்திருந்தால் அதனைக் கொடுத்தவரிடமே திருப்பிக் கொடுத்திருப்பார். அல்லது தூர எறிந்திருப்பார். அந்த வைர மோதிரத்தை எப்பொழுது கையை நீட்டி வாங்கினாரோ, அந்த நிமிடத்திலிருந்து அவருக்குக் கெட்ட காலம் ஆரம்பித்து விட்டது.

அந்த வைர மோதிரம் கொடுத்த நபருக்காக தவறான முயற்சியில் இறங்கி மாட்டிக் கொண்டார். ‘பதவி’ பறிபோயிற்று. அப்பொழுதாவது ‘அவர்’ யோசித்திருக்க வேண்டும். எதற்காக இந்த பதவி போயிற்று என்று யோசிக்கவில்லை. விதியும் அவரை யோசிக்க விடவில்லை.

வீட்டில் வைத்திருந்த அந்த புளூஜாகர் மோதிரத்தை அவரது மகன் ஒரு நாள் அணிந்து கொண்டான். அன்று முதல் அவனுக்கு சட்டென்று புத்தி பேதலித்து விட்டது.

பைத்தியக்காரன் போல் ஆனான். அதன் உச்சக்கட்டம் தான் அவனை தற்கொலைக்குத் தூண்டியது.  நன்றாக, வசதியாக வாழ்ந்து கொண்டிருந்த இநத்ப் பெண்மணிக்குரியச் சொத்து, வீடு, மனை, வாகனம அத்தனையும் அந்த வைர மோதிரத்தால் பறி போயிற்று. இப்பொழுது அவனது மகளையும் வீட்டில் இருக்க விடாமல் குடும்பத்தை விட்டே வெளியே துரத்தி இருக்கிறது என்று சொன்ன அகத்தியர், அந்த புளூ ஜாகர் வைர மோதிரத்தை தலை சுற்றி தூக்கி எறி. வாழ்க்கை மீண்டும் வசந்தமாகும் என்றவர், இது முன் ஜென்ம கர்மாவா இல்லை இந்த ஜென்மத்தில் செய்த தவறா? என்பதை இந்த பெண்ணே முடிவு செய்து கொள்ளட்டும் என்று ஒரு வைர மோதிரக் கதையை அற்புதமாகச் சொன்னார்.

அகத்தியர் சொன்னது அத்தனையும் உண்மை என்று பின்னர் என்னிடம் வந்த அந்த பெண்மணியும் அவளது கணவரும் ஒப்புக் கொண்டார்கள். பீரோவில் வைக்கப்பட்ட அந்த வைர மோதிரத்தின் விலை ‘நான்கு லட்சம்’ என்றாலும் அது நாற்பது லட்ச ரூபாய் குடும்பச் சொத்தை பாழடித்து விட்டது. இப்போது அது எங்கேயோ குப்பை மேட்டில் கிடக்கிறது.

ஆனால், அந்த மோதிரத்தை தூக்கி எறிந்த பின்னர் வீழ்ந்த அந்த குடும்பம் இன்றைக்கு மீண்டும் சந்தோஷத்தில மிதந்து கொண்டிருக்கிறது என்பது மட்டும் உண்மை.