​அகத்தியர் அறிவுரை!

​அகத்தியர்அறிவுரை! "பொறுத்திரு! எல்லாவற்றுக்கும் காரணம் உண்டு. அதைப் புரிந்து கொள்ளும் சக்தி உனக்கேதடா. பாவத்தை செய்தவன் சந்தோஷமாக இருக்கிறான் என்று எண்ணாதே. அவனுக்கு பகவான் எந்தசமயத்தில் எப்படி தண்டனை தருவார் என்பது யாருக்கும் தெரியாது. சித்தர்களும், முனிவர்களும் தான் இதனை முன் கூட்டியே அறிவார்கள்.ஒரு நல்லவனை, ஒரு தீயவன் ஏமாற்றுகிறான் என்றால், நல்லவனின் பாபத்தை எடுத்துக் கொண்டு, தீயது செய்கின்றவன் தன்னிடம் இருக்கின்ற சிறிதளவு புண்ணியத்தை அந்த நல்லவனிடம் ஒப்படைகின்றான் என்று பொருள். இந்த கருத்தை மனதில் வைத்துக்கொண்டு உலகில் அனைத்தையும் பார்க்க​ப் பழகிவிட்டால், அனைத்தும் மிக எளிதாக, மிக நீதியாக தோன்றும்." சித்தன் அருளால் நடந்த திருவிளையாடல்கள் இந்த தொகுப்பு! எல்லா அகத்தியர் வகுப்பிலும் படிக்கலாம்!

Thursday, 26 March 2020

சித்தன் அருள் - 854 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


நம் குருநாதர் அகத்தியப் பெருமானின் அருளால், இந்த தொடரை பதிவு செய்து வருகையில், பலவித கேள்விகள் அடியேனுக்குள் உருவானது. அவற்றை யாரிடம் கேட்பது? என யோசித்து, அகத்தியரிடமே கேட்டுவிடுவோம் என்ற எண்ணத்துடன், அவர் பாதத்தில் சமர்ப்பித்தேன்.

"தொடர்ந்து செல், உரிய காலத்தில் ஒரு அனுபவம் வழி இதற்கான பதில் கிடைக்கும்" என உத்தரவு வந்தது.

அமைதியாய் இருப்பதே உசிதம் என்றுணர்ந்து, விதிக்கப்பட்ட வேலையை செய்து வந்தேன்.

அடியேனுக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவர் விரும்பியவர்களுக்கு யோகா பயிற்றுவித்து வருகிறார். நாங்கள் இருவரும் தனியாக அமர்ந்து பல விஷயங்களை/அனுபவங்களை பகிர்ந்து கொள்வோம். அவரை அந்த நாளில் சந்தித்தே ஒன்பது மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. அவருக்கு நேரமின்மையே காரணம். வரும்பொழுது, வரட்டும்; அனாவசியமாக தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைக்காமல்/அழைக்காமல் இருந்தேன்.

ஒரு நாள், அவரிடம் ஒரு விஷயத்தை பற்றி பேச வேண்டும் என தோன்றியது. "எங்க போய்விட்டார் இவர்? வந்து பார்க்கக்கூடாதா! வாருங்கள்! பேச வேண்டியுள்ளது" என என்னறியாமல் மனதுள் நினைத்துவிட்டேன். இது நடந்தது காலையில்.

பொதுவாக மூச்சு பயிற்சி, ஆதார சக்கரங்களை தொடுபவர்களுக்கு, அவர்கள் யாருடன் தொடர்பில் உள்ளார்களோ, அந்த அவர்கள் என்ன நினைத்தாலும், எங்கிருந்தாலும், தெரிந்துவிடும்.

அன்று இரவு ஏழு மணிக்கு அவர், அடியேன் வீட்டுக்கு வந்துவிட்டார்.

"என்ன! நிறைய நாட்களாகிவிட்டதே! அவ்வளவுக்கு நேரமின்மையா?" என்றேன்.

"உண்மைதான். வருவதற்கான அவகாசமே கிடைக்கவில்லை. ஓடிக்கொண்டிருக்கிறேன். காலையில் ஏழு மணிக்கு வீட்டை விட்டு இறங்கினால், இரவு 11 மணிக்குத்தான் வீட்டுக்குப்போய் குடும்பத்தை பார்க்க முடிகிறது. அவ்ளோ பிஸி" என்றார்.

அந்த பதிலில், ஒரே நிமிடத்தில் எல்லாம் புரிந்தது.

"சரி! வாருங்கள்! மாடியில் போய் அமர்ந்து பேசலாம்" என்று அழைத்துக் கொண்டு போனேன்.

"அமருங்கள்! ஒரு சில விஷயங்களை கூற வேண்டும் என தோன்றியது! அதான் இங்கு நீங்கள் வருவதற்காக மனதுள் அழைத்தேன்" என்றேன்.

"இன்று மதியம் உங்கள் வீட்டு பக்கமாக வரவேண்டி இருந்தது. பார்த்தேன். உங்கள் விண்ணப்பம் இருந்தது கண்டேன். சரி வரலாம் என்று தீர்மானித்து இப்பொழுது வந்தேன்" என்றார்.

அன்றைய தினம் மாலை அலுவலகம் விட்டு வீட்டுக்கு வந்ததும், தலைக்கு குளித்துவிட்டு, பூசையறையில் அமர்ந்து, 9 முறை "ஆதித்ய ஹ்ருதயம்" ஜெபிக்க உத்தரவு வந்தது, அடியேனுக்கு. ஏன் எதற்கு என்றறியாமலே, ஒன்பது முறை ஜெபித்து முடித்தவுடன், தலை முதல் கால் வரை, வியர்வையில் குளித்துவிட்டேன். ஆனால் இவர் வரும் முன் சுதாகரித்துவிட்டேன்.

"என்ன! உள்ளுக்குள் இவ்வளவு கொதிப்பாக இருக்கிறீர்கள்?" என்றார்.

"அது ஒன்றுமில்லை. ஒரு குறிப்பிட்ட அளவுக்கு ஜபம் பண்ணினேன். அதன் விளைவுதான். சரி அதெல்லாம் இருக்கட்டும்! என்ன, சமீபத்தில், பிறருக்கு இறைவன் விதித்த விதியில் நிறையவே கை வைக்கிறீர்கள் போல உள்ளதே" என்றேன்.

"உண்மை! முடியாது என்று மறுக்க முடியாத சூழ்நிலையில் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது." என்றார்.

"தவிர்க்க முடியாத மூன்று உதாரணங்களை கூறுங்கள்" என்றேன்.

"ஒரு கண்டமாலை நோயாளி, ஒரு இருதய நோயாளி, ஒருவருக்கு சிறுநீரக பிரச்சினை" என்றார்.

"உங்களுக்கு குடும்பம் என ஒன்றிருக்கிறது, என்ற எண்ணம் இருக்கிறதா?" என்றேன்.

"ஆம். அதற்காக எல்லா பாதுகாப்பு முறைகளையும் எடுத்துக் கொள்கிறேன். சக்கர வளையம், ஆதார சக்கரங்களை உருவேற்றி பாதுகாப்பு போன்றவை அணிந்து கொள்கிறேன்." என்றார்.

"எப்பொழுதுமா?" என்றேன்.

அவருக்கு புரிந்துவிட்டது.

"இல்லை அந்த கண்டமாலை நோயாளிக்கு பிராணாயாமம் வகுப்பு எடுக்கும் பொழுது, கவசங்கள் அனைத்தையும் கழட்டி வைக்கத்தான் வேண்டியுள்ளது. இல்லை என்றால், அவரால் விழித்து இருக்க முடியவில்லை, உறங்கிவிடுகிறார். பிறகு இரவு வீட்டிற்கு வந்து நாடி சுத்தி செய்தபின் என் ஆதாரங்களை பூட்டிக்கொள்கிறேன்" என்ற உண்மையை கூறினார்.

"ஹ்ம்ம்! கவசமின்றி பிறர் கர்மாவை தொடுவது மிகுந்த ஆபத்து. வேறு வழி இல்லை என்று சொல்வதால், சரி! தினமும் சுத்தி செய்ய மறந்துவிடாதீர்கள்" என்றேன்.

அவராகவே, கண்டமாலை நோயாளியை பற்றி, அவருக்கு எடுக்கும் வகுப்பு முறையை பற்றி கூறத் தொடங்கினார்.

"இதை தொடர்ந்தால் கிடைக்கும் அனுபவம், உன் கேள்விக்கு பதிலாக அமையும்" என்று சன்னமாக யாரோ கூறுவது கேட்டது.

சித்தன் அருள்................ தொடரும்!

Monday, 23 March 2020

சித்தன் அருள் - 853 - அகத்தியப் பெருமானின் அருள் வாக்கு!


வணக்கம் அகத்தியர் அடியவர்களே!

இந்த ஒரு கிருமியின் பரவலால், உலகமே அடிப்போயுள்ள இந்த நிலைமையில், அகத்திய பெருமான், ஒவ்வொருவரும், தன்னையும், குடும்பத்தாரையும் பாதுகாத்துக்கொள்ள, ஒரு சுத்தி செய்துகொள்ளும் முறையை, ஒரு அடியவருக்கு அருளினார். அவர், அந்த முறையை சித்தன் அருள் வலைப்பூ வழி உங்கள் அனைவருடனும் பகிர்ந்து கொள்ள கூறினார். அந்த முறையை உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்.

வீட்டினருகில் இருக்கும் ஏதாவது ஒரு கோவிலில் இருந்து, அதிகாலையில் அபிஷேகம் செய்த தீர்த்தத்தை வாங்கிக் கொண்டு வந்து அதனுடன், மஞ்சள் பொடி, சிறிது துளசி, கோமியம் சேர்த்து, வீட்டிற்கு உள்ளும் வெளியேயும் நன்றாக தெளிக்கவும்.

தீர்த்தத்துடன் மற்ற பொருட்களை சேர்க்க முடியாதவர்கள், அபிஷேக தீர்த்த பாத்திரத்தை கிழக்கு நோக்கி அமர்ந்து, கையில் வைத்து, கீழ் வரும் ஸ்லோகத்தை 108 முறை ஜெபித்து பின்னர் அந்த தீர்த்தத்தை தெளிக்கவும்.

த்ரயம்பகம் யஜா மகே சுகந்திம் புஷ்டி வர்த்தனம் 
உர்வாருக மிவ பந்தனான் ம்ரித்யோர் முக்ஷி யமாமிர்தாது !

இதை நான்கு நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும்.

இன்னொரு அகத்தியர் அடியவர் இந்த கிருமிக்கான மருந்தை, அகத்தியரின் சிஷ்யரான தேரையரின் பாடலிலிருந்து மேற்கோள் காட்டியுள்ளார்.

நமது குருநாதரின் சீடரான தேரையரின் மருந்து,

மாற்று மண்டத்தி னுள்ளித் தைலமும்
சேர்த்து லிங்கமும் சித்திர மூலமும்
பார்த்து முருங்கையின் பட்டை ரசங்களும்
கோர்த்து வந்தையுங் கூட்டும் சமாதியே

பொருள்; அண்ட தைலம், உள்ளி தைலம் , சித்திர மூலம் , முருங்கை பட்டை சாறும் , இத்துடன் சுத்தி செய்த சாதி லிங்கம் சேர்த்து கொடுக்க எப்பேர்ப்பட்ட வைரஸையும் கொல்லும். வைரஸால் வந்த வியாதி குணமடையும்

மேலும் அகத்தியரின் ஒரு வாக்கு:-

உலகின் அனைத்துப் பொருட்களும் பஞ்ச பூத சக்திகளால் (நிலம், நீர், காற்று, நெருப்பு, ஆகாயம்) ஆனவையே! மனித உடலும் இத்தகைத்தே! ஆனால், மனித குலம் பஞ்ச பூத சக்திகளுக்கான நன்றி வழிபாட்டை முறையாக ஆற்றுவதில்லை!காலை, மதியம், மாலையில் எட்டு அகல் விளக்கு தீபங்களை ஒரு தாம்பாளத்தில் வைத்து, வானத்தை நோக்கிக் காட்டி, பூமியைத் தாங்கும் அஷ்ட திக்குப் பாலக தேவர்களை நினைந்து,

தீபப் பிரகாசம், ஜோதிப் பிரகாசம், சிவப் பிரகாசம்,
அருட் பிரகாசம், க்ஷேமப் பிரகாசம், திவ்யப் பிரகாசம்,
அமுதப் பிரகாசம், ஆனந்தப் பிரகாசம், ஆதிமூலப் பிரகாசம்
முக்திப் பிரகாசம், மோட்சப் பிரகாசம் வாழிய வாழியவே!

என 12 முறை குடும்பத்தாருடன் சேர்ந்து ஓதி, தன்னையே ஆத்மப் பிரதட்சிணமாக வலம் வந்து, இதன் பலாபலன்கள் உலகெங்கும் ஜாதி, மத, ஜீவன்கள் பேதமின்றி யாவரையும் சென்றடைய ஸ்ரீஅகஸ்திய மாமுனியின் ஆசியை நாடி வேண்டி எண் முறை எட்டுத் திக்குகளிலும் சாஷ்டாங்கமாகப் பூமியில் வீழ்ந்து வணங்கிடுக

வேதியர்கள் செய்ய வேண்டியது....

யம பயம், மரண பயம் இந்த இரண்டும் தணிய வேண்டுமானால், காலை, மதியம், மாலை மூன்று சந்தியா நேரங்களிலும், யம வந்தன, யமத் தர்ப்பண பூஜையை ஆற்றி வருதல் நல்லது

மேலும் ஒரு கவச முறை:-

நல்லெண்ணை, வேப்பெண்ணை கலந்து இரு அகல் விளக்கு ஏற்றி, காலை, மாலை இருவேளை அல்லது மாலையேனும், சிறிது உப்பை தூவி, அதன்மேல் அகல்விளக்கை வீட்டின் வாசல் படிக்கு பக்கத்தில் வைத்து அகத்தியரை, இறைவனை தியானித்து அனைத்து உயிர்களையும் காப்பாற்ற வேண்டி வழிபடுக. தினமும் வீட்டில் காலை, மாலை இரு நேரமும், சாம்பிராணி புகை போட்டு, சுத்தம் செய்து கொள்ளுங்கள்.

அகத்தியர் அடியவர்கள் அனைவரும் மேற்சொன்ன வழிகளை கடைப்பிடித்து, ஆரோக்கியத்தை அடைந்து, கிருமி பாதிப்பிலிருந்து, தப்பித்துக் கொள்ளுமாறு வேண்டிக் கொள்கிறேன்.

ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தியர் திருவடிகளில் சமர்ப்பணம்!

சித்தன் அருள்............. தொடரும்!

Thursday, 19 March 2020

சித்தன் அருள் - 852 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


பஞ்சாக்ஷர மந்திரங்களை உரக்க கூறி ஓதுவதை வாசகம் என்றும், தனக்கு மட்டும் கேட்பதுபோல், மென்மையாக கூறுவதை உபாஞ்சு என்றும் மனதில் வைத்து ஓதுவதை, பச்யந்தி என்றும் சித்தர்கள் கூறுகிறார்கள். ஸ்தூல, சூக்ஷும பஞ்சாட்சரங்களை வாசகம், உபாஞ்சு முறையிலும், அதி சூக்ஷும, காரண, மகாகாரண பஞ்சாக்ஷரங்களை பச்யந்தி முறையில் மட்டும் ஓதவேண்டும் என்கிற குறிப்பு, சித்தர்கள் இலக்கியத்தில் காணப்படுகிறது. "சிவயவசி" அல்லது "சிவயசிவ" என்பதில், எது சூக்ஷும பஞ்சாட்சரம் என்பதில் சித்தர்களிடையே, கருத்து வேறுபாடு உள்ளது. சிவவாக்கியர் சித்தர் "சிவயவசி" என்பதே சூக்ஷும பஞ்சாட்சரம் என்கிறார்.

பஞ்சாக்ஷ்ரத்தில் உள்ள ஐந்து எழுத்துக்களும் சிவபெருமானின் ஐந்து முகங்களான வாமதேவம் (வடக்கு நோக்கிய முகம்), தத்புருஷம் (கிழக்கு நோக்கிய முகம்), சத்யோஜாதம் (மேற்கு நோக்கிய முகம்), அகோரம் (தெற்கு நோக்கிய முகம்), ஈசானம் (மேல் நோக்கிய முகம்) போன்றவற்றை குறிக்கிறது. ஆறாவதாக ஒரு முகம், அதோ முகம், என்பதும் சிவபெருமானுக்கு உண்டு. இது உள்நோக்கிய முகம் எனப்படும். இதற்கு திசை என்பதில்லை.இதையே சித்தர்கள், உள்பூசை எனவும், உள் த்யான நிலை எனவும் விவரித்தனர். ஒருவர் உள்ளுக்குள், த்யானத்தில் இறையை சுயமாக கண்டு தெளிகிற முறை அது. இந்த முறையில் இறங்கி த்யானம் செய்பவர்களுக்கு, சித்தர்கள் உபதேசம், வழி நடத்தல் போன்ற நிகழ்ச்சிகள், எளிதாக அமையும்.

நமசிவய என்கிற மந்திரத்தை பிற பீஜ மந்திரங்களுடன் சேர்த்து த்யானத்தில் ஜெபம் செய்பவருக்கு பலவித நிலைகளும் உருவாகும் என அகத்தியப் பெருமான் உரைக்கிறார்.

தத்புருஷ முகத்தை சார்ந்த 25 மந்திரங்கள்:-

1.  நங்-சிவயநம  - விரும்பிய புத்திர பாக்கியம் கிட்டும்.

2.  அங்-சிவயநம - இயல்பாக தேக நோய் தீரும்.

3.  வங்-சிவயநம - யோக சித்தி காணலாகும்.

4.  உங்-சிவயநம - ஆயுள் விருத்தி ஏற்படும்.

5.  ஓம்-அங்-சிவய - ஐம்பூதங்கள் மேல் கட்டுப்பாடு உண்டாகும்.

6. கிலி-நமசிவய - உலக வசியம் உண்டாகும்.

7.  ஹிரீம்-நமசிவய - நினைத்தது நடக்கும்.

8.  ஐ-உம்-நமசிவய - புத்தி, வித்தை நல்கும்.

9.  கிலி-உம்-நமசிவய - பிறப்பின்மை நல்கும்.

10. நமசிவய - அமுதம் கிடைக்கும்.

11. நமசிவய=உங்-நமசிவய - நாட்டிலுள்ள வியாதி, சுரம் தீரும்.

12. நமசிவய-சிங்-உங்-நமசிவய - அறுபத்து நான்கு பிறவிகள் தீரும்.

13. நமசிவய-வங் - வெற்றி கிடைக்கும்.

14. சவ்-உம்-சிவய - சந்தானம் உண்டாகும்.

15. சிங்-க்ரீம்-(சிவய) - வேதாந்த ஞானி ஆவார்.

16. உங்-றீம்-சிவயநம - மோட்சம் கிட்டும்.

17. அங்-நங்-சிவயநம - தேக சித்தி உண்டாகும்.

18. அவ்-உம்-சிவயநம - கையிலை வாழ் குருவை காணலாகும்.

19. ஓம்-நமசிவய - இறப்பை வெல்லலாம்.

20. லங்-றீ-றீ-உங்-நமசிவய - தானியங்கள் கொழிக்கும்.

21. நமசிவய ஓம் - வாணிபம் செழிக்கும்.

22. ஓம்-அங்-உங்-சிவயநம - சாத்வீக குணம் உண்டாகும்.

23. ஓம்-ஸ்ரீ-உம்-சிவயநம - தனவான்கள் வசியமாவார்கள்.

24. உங்-ஓம்-நமசிவய - சிரசு ரோகம் நிற்கும்.

25. ஓம்-அங்-சிவயநம - நெருப்பினில் பிரவேசிக்கலாம்.

மேலே கூறப்பட்ட பீஜாக்ஷர மூல மந்திரங்களை எவனொருவன், பொறுமையை கடைப்பிடித்து, பொதுநலம் கருதி, நம்பிக்கையுடன் இறைவனை மனதில் தரித்து, சித்தம் நிலைத்து த்யான ஜபம் செய்கிறானோ, அவனுக்கு இறையருளினால் அந்த மந்திரத்தின் சக்தி கைவல்யமாகும் என்கிறார் அகத்தியப் பெருமான்.

சித்தன் அருள்............................. தொடரும்!  

Thursday, 12 March 2020

சித்தன் அருள் - 851 - அதிர்வலைகளும் தசவாயுக்களும்!


குண்டலினி யோகத்தை கடந்து செல்லும் ஒருவன், அந்த நிலையில் ஐம்பத்தோறு அட்சரங்களை ஒலிவடிவில் பல்வேறு நிலைகளில் கேட்கிறான். இந்த ஐம்பத்தோறு அட்சரங்கள் ஐந்து அட்சரங்களான "நமசிவய" என்பதில் அடங்கும் என்கிறார் திருமூலர்.

ஐந்தெழுத்து மந்திரமாகிய "நமசிவய"  என்பதை அனைத்து சித்தர்களும் "பேசா எழுத்து" என்கிறார்கள். ஒரு சிலர் இதை "சுரியதோர்" எழுத்து என்றும் கூறுகின்றனர். திருமூலரோ, "'ஓம் என்பது ஓரெழுத்து, அதுவே சிவஸ்வரூபம்" என்கிறார். ஓம் என்பது மிகப்பெரிய மந்திரத்தை, தனக்குள் குறுக்கி, மறைத்து வைத்துக் கொண்டிருக்கிற ஒரு மகா மந்திரம் என்கிறார்.

ஓம் என்பது அதிசூக்ஷும பஞ்சாக்ஷரம் எனப்படுகிறது. ஐந்தெழுத்து மந்திரமாகிய அகாரம், உகாரம், மகாரம், நாதம், பிந்து என்கிற ஐந்து நிலைகளை உட்கொண்டது, என்கிறார் சிவவாக்கியர் சித்தர்.   சிவமே இம்மந்திரமாக வந்தமர்ந்தது; இதை அறிந்தவனுக்கு மறுபிறப்பு இல்லை என்கிறார்.

கறந்தபால் முலைப்புகா கடைந்த வெண்ணை மோர்புகா
உடைந்துபோன சங்கினோசை உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்தகாயும் மீண்டுபோய் மரம்புகா 
இறந்தவர் பிறப்பதில்லை இல்லையில்லை இல்லையே 

என்ற பாடலில் சிவவாக்கியார் மறுபிறப்பை மறுக்கிறார் என்று எடுத்துக் கொள்வதை விட்டு, முக்திநிலை அடைந்தவர்கள் மீண்டும் பிறப்பை தவிர்த்துக் கொள்வார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். ஐந்தெழுத்து மந்திரம் பிறப்பறுக்க உதவும் என்று திருமூலரும் உரைக்கிறார்.

  1. "சிவயநம" என்கிற ஐந்தெழுத்தில், "சி" என்பது - காண்பதெல்லாம் சிவமாக காணப்படவேண்டும் என்று உரைப்பதாகும்.
  2. "சிவயநம" என்கிற மந்திரத்தை தொடர்ந்து ஜெபிக்கிறவன், முதுமை நீங்கி இளைஞ்சனாகிறான், தாமிரத்தை பொன்னாக்கும் நிலையறிவான்.
  3. எட்டெழுத்து மந்திரம் என்பது அ,உ,ம,ந,ம,சி,வா,ய, எனப்படுகிறது.
  4. ஐந்தெழுத்து மந்திரம் என்பது சி,வ,ய,ந,ம எனப்படுகிறது.

இந்த ஐந்தெழுத்து மந்திரத்தில்  "சிவ" என்பது "அது" என்றும், "நம" என்பது "நீயே" என்றும், "அய" என்பது "ஆகிறாய்" என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. எனவே "சிவயநம" என்பது "அது நீயே ஆகிறாய்" என்றாகிறது. இதையே வடமொழியில் "தத் த்வம் அசி" என்று கூறுகிறார்கள்.

சில சித்தர் பாடல்களில் இந்த ஐந்தெழுத்து மந்திரம் "சிவயவசி" என்று கூறப்படுகிறது. இதை முன்னிருந்து பின்னாலும், பின்னிருந்து முன்னால் வாசித்தாலும் ஒரே மாதிரி உச்சரிப்பு வரும். இதனை சிவவாக்கியர் இருதலைத்தீ என்கிறார். இதனால் மெய் உணர்வை பெற்றவர்களை திருமூலர், "நமச்சிவாயப்பழம் தின்று கிடக்கும் நிலை" என்கிறார்.

இந்த ஐந்தெழுத்து மந்திரத்தை சைவ தலைமுறை ஐந்தாக கூறுகிறார்கள்.

1. நமசிவய - ஸ்தூல பஞ்சாக்ஷரம்.
2. சிவயநம - சூக்ஷும பஞ்சாக்ஷரம்.
3. சிவயவசி - அதிசூக்ஷும பஞ்சாக்ஷரம்.
4. சிவ - காரண பஞ்சாக்ஷரம்.
5. சி - மகாகாரண பஞ்சாக்ஷரம்.

இவ்வுலக இன்பத்தை துய்க்க நினைப்பவர்கள் "ஸ்தூல பஞ்சாக்ஷரத்தையும்", மறு உலக இன்பத்தை துய்க்க நினைப்பவர்கள் சூக்ஷும பஞ்சாக்ஷரத்தையும், மோட்சத்தை நாடுபவர்கள் அதிசூக்ஷும, காரண, மகா காரண பஞ்சாக்ஷரத்தையும் மனதில் ஓத வேண்டும் என்று சித்தர்கள் உரைக்கிறார்கள்.

மனித பிறப்புக்கு மட்டும், தேர்ந்தெடுக்கிற நிலையை இறைவன் அளித்துள்ளார். ஐம்புலன்கள் வழி நுகர்ந்து, வாசனைகளை சேர்த்துக்கொள்கிற பொழுது, இகபர உலக வாசனைகளை புலன்களுக்கு கொடுக்காமல், அதிர்வலைகள் வழி "பஞ்சாக்ஷரத்தை" மட்டும் உள்வாங்க ஒருவன் தீர்மானித்துவிட்டால், சித்தர்களே அந்த ஒருவனை சித்தமார்கத்துக்குள் இழுத்து வந்து, வலது காதில் மூச்சு காற்றினால், "ஓம் நமசிவாய" என்றும், இடது காதில் "ஓம் சிவயநம" என்றும் பஞ்சாட்சர மந்திரம் ஓதி, வாசியோக பாதையில் நடக்கவிடுவார்கள்.

இது ஒரு நிமிடத்திலும் நடக்கலாம், ஒரு ஜென்மத்திலும் நடக்கலாம். இப்படி நடப்பது, அவரவர் விதி விலகி எப்படி வழி விடுகிறது என்பதை பொறுத்து அமையும்.

இதனால் தான், விதி விலகி வழிவிட வேண்டி, கர்மாவை குறைக்க, பலவித தான/தர்மங்களை ஆத்மார்த்தமாக செய்யவைத்து, பல புண்ணிய ஸ்தலங்களுக்கும் செல்ல வைத்து, நிறைய இழப்புகளை ஏற்படுத்தி மெருகேற்றுவார்கள்.

இவற்றை தெளிவாக புரிந்து கொள்பவனுக்கு, வருத்தம் என்பதே அமையாது.

சித்தன் அருள்................ தொடரும்!

Thursday, 5 March 2020

சித்தன் அருள் - 850 - அந்தநாள் >> இந்த வருடம் - [2020-21]


அகத்தியர் அடியவர்களுக்கு வணக்கம்!

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமஹ!

அகத்தியப் பெருமானின் "சித்தன் அருளை" வாசித்து வரும் அடியவர்கள், அகத்தியப் பெருமான் குறிப்பிட்ட தினங்களில், நாடி வாசித்த மைந்தனை, கோடகநல்லூர், நம்பிமலை, பாபநாசம், கரும்குளம், திருச்செந்தூர் என்று பல இடங்களுக்கு அழைத்துச் சென்று, இறை, சித்த அனுபவங்களையும், ஆசிர்வாதங்களையும் பெற்றுக் கொடுத்ததை, நாம் அனைவரும் அறிவோம். அதில் மறைமுகமாக "அந்த நாள்/இந்தநாள்" என்று அகத்தியப் பெருமான் பல இடங்களில், குறிப்பிட்டதை கவனித்திருக்கலாம். 2019ம் ஆண்டு பல அகத்தியர் அடியவர்களும், அந்தப் புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று அருள் பெற்றது நினைவிருக்கும்.

நம் அனைவருக்குமே, "அந்த நாள்" இந்த வருடம், எப்போது வருகிறதோ, அன்று, அங்கு சென்று இருந்து அவர்களின் அருள், ஆசிர்வாதம், செம்மையான வாழ்க்கைக்காக பெற்றுக்கொள்ள வேண்டும், என்கிற எண்ணம், ஒவ்வொரு அகத்தியர் அடியவரின் மனதுள் இருக்கும். உங்களின் அந்த இனிய எண்ணைத்தை பூர்த்தி செய்வதற்காக, இந்த வருடம் "அந்த நாட்களை" தெரிவு செய்து இங்கே தருகிறேன். குறித்து வைத்துக்கொண்டு, அங்கெல்லாம் சென்று, அவர் அருள் பெற்று வருமாறு, வேண்டிக் கொள்கிறேன்.

ஸ்ரீ போகர் திருநட்சத்திரம்:- 

21/05/2020 - வியாழக்கிழமை வைகாசி மாதம் - பரணி நட்சத்திரம் - சதுர்தசி திதி.

நம்பிமலை:- (இறைவனும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருக்க, அகத்தியப் பெருமான் நம்பிமலை பெருமாளுக்கு 200 வருடங்களுக்கு ஒருமுறை செய்கிற பூசையை செய்த நாள்)

30/07/2020 - ஆடி மாதம் - வியாழக்கிழமை - சுக்லபக்ஷ ஏகாதசி திதி, அனுஷம் நக்ஷத்திரம் 

பாபநாசம்:- (நதிகள் எல்லாம் அகத்தியப் பெருமானுடன் இருந்து அன்று தீர்த்தமாடியவர்கள் அனைவருக்கும், அவர்கள் குடும்பத்திற்கும், நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் புண்ணியம் கொடுத்த நாள். நவகிரக தம்பதிகள் ஆசிர்வதித்த நாள்)

31/07/2020 - ஆடி மாதம் - வெள்ளிக்கிழமை - சுக்லபக்ஷ துவாதசி திதி - கேட்டை நட்சத்திரம்.

திருச்செந்தூர்:- (ஓதியப்பர், அகத்தியர், அனுமன் ஆகிய மூவரும் சேர்ந்து இருந்த நாள். அதில், முருகர் அனுமனுக்கு அன்று அனுமனின் நட்சத்திரம் ஆனதால், அவரை ஆரத்தழுவி, நல்வாழ்த்து தெரிவித்த நாள். இன்றும் எல்லா மாதமும் அனுமன், அவரது நட்சத்திரத்தன்று திருசெந்தூரில் அன்று மாலை வந்து முருகரின் அருள் பெற்று செல்கிறாராம்.)

01/08/2020 - ஆடி மாதம் - சனிக்கிழமை  - சுக்லபக்ஷ திரயோதசி திதி, மூலம் நட்சத்திரம்.

ஓதியப்பர் பிறந்த நாள்:- போகர் கூற்றின் படி, ஓதியப்பர் ஆவணி மாதம் பூசம் நட்சத்திரத்தில் பிறந்தார். ஓதியப்பரின் பிறந்த நாளை அபிஷேக ஆராதனைகளுடன் கொண்டாடுகிற நாள். சித்தர்கள் அனைவரும் அன்று அங்கே ஒன்று கூடி, ஓதியப்பரை தரிசனம் செய்து, பின்னர் 90 நாட்களுக்கு அங்கேயே தங்கி இருக்க தொடங்குகிற நாள்.

17/08/2020 -ஆவணி மாதம் - திங்கள் கிழமை - திரயோதசி திதி பூசம் நட்சத்திரம்

கோடகநல்லூர்:- எல்லா தெய்வங்களும், சித்தர்களும், முனிவர்களும், தேவர்களும் ஒன்று கூடி இருந்து, அகத்தியருக்கு தங்கள் உரிமையை பகிர்ந்து கொடுத்த நாள். தாமிரபரணியின் பெருமையை அகத்தியப் பெருமான் உலகுக்கு உணர்த்திய நாள். அன்று அங்கு வரும் பக்தர்களுக்கு அவர்கள் வேண்டுதலை, குறைந்தது, திருப்தியை பெருமாள் அருளுகிற நாள்.

29/10/2020 - வியாழக் கிழமை - ஐப்பசி மாதம் சுக்லபக்ஷ த்ரயோதசி திதி - உத்திரட்டாதி நட்சத்திரம். 

பாபநாச ஸ்நானம்:- தாமிரபரணி புராணத்தில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சிவபெருமானை லிங்க ரூபத்தில் பிரதிஷ்டை செய்து, தாமிரபரணி தேவியானவள், அகத்திய பெருமான் முன்னிலையில் தவமிருந்து, இறைவனிடமிருந்து நம் மனித குலத்திற்காக ஒரு வரத்தை பெற்றாள். எவர் இந்த இடத்தில், மார்கழி மாதத்தில் எம் தீர்த்தத்தில் நீராடி, உம்மை கண்டு வணங்குகின்றனரோ, அவர்களுக்கு இந்த பூமியில் இனிமேல் பிறவி என்பதே இருக்கக்கூடாது. சிவபெருமானும் தாமிரபரணியின் பூசை, தவத்தில் மகிழ்ந்து "அப்படியே ஆகட்டும்" என்று கூறி பாபநாத சுவாமி கோவில் லிங்கத்தினுள் மறைந்தார். அந்த நாட்கள் இந்த வருடம் 16/12/2020 முதல் 13/01/2021க்குள் வருகிறது. 

அகத்தியப் பெருமானின் திரு நட்சத்திரம்:-

02/01/2021 - சனிக்கிழமை - மார்கழி மாதம், த்ரிதியை திதி - ஆயில்யம் நட்சத்திரம்.

அகத்தியர் அடியவர்களே! மேல் சொன்ன இந்த நாட்களை குறித்து வைத்துக் கொண்டு, இங்கு தெரிவிக்கப்பட்ட இடங்களுக்கு சென்று, இறை அருள், அகத்தியர் அருள் பெற்று நலமாக வாழ்ந்திட வேண்டிக் கொள்கிறேன்.

ஓம் ஸ்ரீ லோபாமுத்திரா சமேத அகதீசாய நமஹ!

சித்தன் அருள்............. தொடரும்!