வணக்கம் அகத்தியர் அடியவர்களே!
அகத்தியப் பெருமானின் சித்தன் அருளில், அவர் கூறியதை, உங்கள் முன், அவர் அனுமதியுடன் தொகுத்து வழங்குகிற பாக்கியத்தை அடியேனுக்கு அளித்துள்ளார்.
இந்த வலைப்பூவின் நிறுவனர் திரு.கார்த்திகேயன், அடியேனிடம் அகத்தியர் அருளியதை தொகுத்து வழங்குகிற பொறுப்பை ஒப்படைத்த பொழுது, இது என்னால் முடியுமா என்ற எண்ணம் இருந்தது என்னவோ உண்மை. இருப்பினும், அனைத்தையும் அகத்தியர் பாதத்தில் சமர்ப்பித்து இன்று வரை நடந்து வந்துவிட்டேன்.
கடந்து வந்த நாட்களில், பல அகத்தியர் அடியவர்களும் இந்த தொகுப்பை பற்றி பல கேள்விகள் கேட்டனர்.
"இவை எல்லாம் அகத்தியர் கூறியதா? அகத்தியர் நாடியில் வந்ததா? உண்மையிலேயே நடந்த நிகழ்ச்சிகள் தானா? பெருமாளுக்கு, அகத்தியர் மீது அத்தனை அன்பா? அதெப்படி ஒரு சிவனடியாரை பெருமாள் தன் திருவிளையாடல்களுக்கு உபயோகப் படுத்திக் கொண்டார்? இவற்றை எல்லாம் நாங்கள் எப்படி நம்புவது?" என்று பலவிதமான கேள்விகள்.
சமீபத்தில், ஒரு அகத்தியர் அடியவர் வேறு ஒரு கேள்வி கேட்டிருந்தார். அதை கீழே தருகிறேன்.
"ஓம் அகத்தீசாய நமஹ. ஐயா, வணக்கம்.எனக்குள் பல நாட்களாகவே ஒரு கேள்வி. நீங்கள் இதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம். 'பெருமாளும் அடியேனும்' என்கிற இந்த தொகுப்பு யாருக்கேனும் ஜீவநாடியில் வந்த விஷயங்களா (நம்பிமலை, கோடகநல்லூர் போல்) அல்லது ஏதேனும் புராணங்கள்/ உப புராணங்கள் - இவைகளில் உள்ளனவையா அல்லது ............. இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் நிகழ்வுகளா?!.............. கொஞ்சம் தெளிவு படுத்துங்கள் ஐயா. இன்னமும் சுவாரஸ்யமாக இருக்கும்."
தட்டச்சு செய்பவனான என்னிடம் இந்த கேள்விகளுக்கு பதில் இல்லாததால், இதை தொகுத்து வழங்குகிற பணியை தந்த திரு.காத்திகேயனிடமே ஒப்படைத்துவிட்டேன். அவரது விளக்கத்தை கேட்டு ஒரே பதிலாக அதை கீழே தொகுத்து தருகிறேன்.
"நாடியானது, திருப்பதியில் ஒரு பைத்தியத்தினால் (போகர் பெருமான்) என் நண்பரிடமிருந்து திருடப்பட்டு பின்னர் அது ஒரு துளசி மாலை கூடையில் பெருமாள் பாதத்தில் போய் சேர்ந்து, மறுபடியும் பேஷ்கார் உதவியுடன் திரும்பி கிடைத்ததை நீங்கள் எல்லோரும் சித்தன் அருளில் படித்திருப்பீர்களே. அந்த நாடி திரும்பி கிடைத்த உடன் அன்று இரவு அஹோபில மடத்தில் அவர் தங்கி, நள்ளிரவில் நரசிம்மரின் உலாவை உணர்ந்து சிலிர்த்ததையும் படித்திருப்பீர்கள். அந்த நள்ளிரவிலேயே, நரசிம்மர் உலா வந்து போகட்டும் என்று காத்திருந்து, பின்னர் இரவில் ஓடி வந்த அர்ச்சகர் ஒரு விஷயத்தை சொன்னார்.
அர்ச்சகர் கனவில் பெருமாள் தோன்றி "அகத்தியன் எனக்கு ரொம்ப வேண்டப்பட்டவன்! அவனை துச்சாடனம் பண்ணக்கூடாது" என்று கூறினார். இதை அந்த அர்ச்சகரே என் நண்பரிடம் கூறினார்.
இங்கு தான் என் நண்பருக்கு, அகத்தியப் பெருமானிடம் ஒரு கேள்வி கேட்க வேண்டும் என்று தோன்றியது. உடனே கேட்காவிட்டாலும் பின்னர் ஒருநாள் தனிமையில் இருக்கும் பொழுது அந்த கேள்வியை கேட்டார்.
"அய்யனே! பெருமாள் உங்களை ரொம்ப வேண்டப்பட்டவன் என்றார். அப்படியானால், தாங்கள் அருள் கூர்ந்து, திருப்பதி பெருமாளின் அவதாரத்தில் நடந்த நிகழ்ச்சிகளை கூற முடியுமா? அதை தெரிந்து கொள்ள ஆவலாக உள்ளது". என்றார்.
"அது விரிவான பல நிகழ்ச்சிகளை உட்கொண்டது. நேரம் வரும் பொழுது கூறுகிறேன்" என்று கூறி பின்னர் அகத்தியப் பெருமான் நாடியில் வந்து கூறியதே, இன்று "பெருமாளும் அடியேனும்" என்ற தொடருக்காக தொகுக்கப் பட்டுள்ளது. அகத்தியரின் பெருமையை உலகறியச் செய்ய. பெருமாளும் அவர் நடத்திய திருவிளையாடலில் அகத்தியப் பெருமானை, தனது வலக்கரமாக சேர்த்துக் கொண்டார்." இதுதான் நடந்தது.
"இன்று இந்த தொடரில் வரும் விஷயங்கள் அனைத்தும் அகத்தியப் பெருமான் நாடியில் வந்து கூறியதே! இறைவனுக்கே வைஷ்ணவம், சைவம் என்கிற பேதம் இல்லாதிருக்கும் பொழுது, இறைவனை தேடி செல்கிற சித்தர் அடியவர்களான நாம் அப்படி ஒரு வித்யாசத்தை ஒரு பொழுதும் மனதில் நினைக்கவே கூடாது. அனைத்தையும் ஒன்றென உணர வேண்டும்." என பதிலளித்தார் திரு கார்த்திகேயன்.
ஓம் லோபாமுத்திரா சமேத அகத்தீசாய நமக!