"இதற்குப் பெயர்தான் விதி, கருடாழ்வாரே! இதிலிருந்து யாரும் தப்ப முடியாது. மற்றவர்களுக்கு வழிகாட்டியாக இருக்கிற நாமே மற்ற மனிதர்களைப் போல் தவறு செய்யலாமா? சரி! சரி! அதையே நினைத்துக் கொண்டிருந்தால் நிம்மதி இருக்காது. வாருங்கள் நாமிருவரும் நேராகத் திருமலைக்குச் செல்வோம்" என்றார் ஆதிசேஷன். எல்லாமே மௌன பாஷை!
ஆதிசேஷன் அன்போடும், பாசத்தோடும் கருடாழ்வார் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு திருமலையை நோக்கி நடந்தார்.
திருமலை வாசலில்............
கலிபுருஷனும், சனிஸ்வரனும் வெகு நேரமாகக் காத்துக் கிடந்தனர். கருடாழ்வார் அங்கு வந்ததும், துவார பாலகர்கள் கருடனுக்கு அனுமதி அளிக்க மறுத்தால், கருடாழ்வார் கோபித்துக் கொண்டு போன செய்தி கிடைத்தது.
இதைக்கேட்டு கலிபுருஷனுக்கு ஆனந்தம் சொல்லி முடியவில்லை. "எப்படியோ நாம் போட்ட திட்டம் அற்புதமாகச் செயல்பட்டுவிட்டது. இனி கருடனுக்கும் திருமாலுக்கும் சம்பந்தமில்லாமல் போய் விட்டது. சனீஸ்வரன், கருடாழ்வார் நாக்கில் அமர்ந்து பேசியதால் திருமாலுக்கு கெட்ட காலம் ஆரம்பமாகிவிட்டது" என்று அளவுக்கு மீறிய கற்பனையில் துள்ளிக் குதித்தான்.
இருப்பினும் கோபித்துக் கொண்டு போன கருடன் எப்படியும் ஒருமுறை திருமலைக்கு வந்தால் அவனை தன்வாசம் வைத்து பின்னர், பெருமாளை ஆட்டுவிக்கவேண்டும், என்ற எண்ணம் கலிபுருஷனுக்கு இருந்தது.
முயற்சி கைக்கூடுவதற் காக சனீச்வரனையும் தன்னோடு கூடவே அழைத்துக் கொண்டு திருமலை வாசலில் காத்திருந்த பொழுதுதான், ஆதிசேஷனும், கருடாழ்வாரும் ஒன்றாக கைகோர்த்து, திருமலை வேங்கடவனை நோக்கி வேகமாக வந்து கொண்டிருந்தனர்.
திருமலை வாசலில் சனீச்வரன் நின்றதைக் கண்டு கருடாழ்வாரும், ஆதிசேஷனும் அவரை நமஸ்காரம் செய்தனர்.
"மங்களம் உண்டாகட்டும்" என்று சனீஸ்வரர் அவர்களை மனமார வாழ்த்தினார்.
சனீச்வரன் வாக்காலே "மங்களம் உண்டாகட்டும்" என்று வந்தபோது, "இது அற்புதமான சுபசகுனம்" என்று ஆதிசேஷன் மனம் மகிழ்ந்தார். அது மட்டுமல்ல. இதுவரை சனீச்வரன் யாருக்கும் "மங்களம் உண்டாகட்டும்" என்ற சொல்லை உபயோகப்படுத்தியதே இல்லை. அந்தப் பாக்கியத்தை தாங்கள் இருவரும் திருமலை வாசலிலே பெற்றோம் என்பதை நினைத்து அகமகிழ்ந்து போனார்கள், கருடாழ்வாரும், அதிசேஷனும்.
"இனி, எல்லாம் நல்லபடியாக நடக்கும்" என்று தோன்றியதால், ஆதிசேஷன் கருடாழ்வார் சகிதம் நேராகவே வேங்கடவன் முன்பு நின்றார். இப்போது அவர்களை துவார பாலகர்கள் தடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
"என்ன கருடா! கோபமெல்லாம் தணிந்ததா?" என்று பெருமாள் திருவாய் மலர்ந்து கேட்டார்.
"என்னை மன்னித்து விடுங்கள் வேங்கடவா! தங்களை அவதூறாகப் பேசிவிட்டேன்" என்று பெருமாள் காலடியில் விழுந்தார் கருடாழ்வார்.
"எதற்காக உன்னை மன்னிக்க வேண்டும்? அன்றைக்கும் என் காலடியில் இருந்து சேவகம் செய்தாய். இன்றைக்கும் என் காலடியில் இருக்கிறாய். நீ ஒருபோதும் மாறவில்லை. நான்தான் உன்னை சோதித்துவிட்டேன்" என்றார் திருமலைவாசன்.
"அப்படி தாங்கள் ஒரு சோதனையும் செய்யவில்லையே! எல்லாம் கலிபுருஷனும், சனிஸ்வரனும் செய்த சதிதானே?" என்று ஆதிசேஷன் ஆச்சரியத்துடன் கேட்டார்.
"இல்லை! அன்றைக்கு என்னைத் தேடி வந்த பொது, துவாரபாலகர்களிடம் கருடாழ்வாரை உள்ளே விடாதே. ஏழரைச் சனி பிடித்திருக்கிறது. பொறுமையாக வரச்சொல்" என்றேன். அன்றே கருடாழ்வாரை நான் சந்தித்திருந்தால், கருடாழ்வார் கோபித்துக் கொண்டு வெளியே சென்றிருக்க மாட்டார்" என்ற பெருமாள்
"இத்தனை நாளாக எனக்குச் சேவகம் செய்த கருடனுக்கு எந்தவித பரிசும் நான் இதுவரை தரவில்லை. அதுவும் என் தவறுதானே! எனவே, எழுமலையான இந்த திருத்தலத்தில் கருடன் பெயரை காலகாலமாக நிலைத்து நிற்க ஒரு மலைக்கு "கருடாத்ரி மலை" என்று கருடனுக்காக யாம் பரிசாக வழங்குவோம்" என்று ஒரு மலைக்கு "கருடாத்ரி" என்று பெயர் சூட்டினார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத கருடாழ்வார் ஆனந்தப் பெருமிதத்தால் வேங்கடவனின் திருப்பாதத்தைக் கெட்டியாக பிடித்து ஆனந்தக் கண்ணீரால் கழுவினார்.
ஆதிசேஷன் இந்த அற்புதக் காட்சியைக் கண்டு திருமாலின் கருணையை வியந்து கொண்டிருந்தார்.
திருமலை வாசலில் சனீச்வரன் மீது கோபம் கொண்ட கலிபுருஷன் "எப்படி ஆதிசேஷனையும் கருடனையும் வாழ்த்தலாம்? இதனால் பிரம்மாவுக்கு நம்பிக்கைத் துரோகியாக மாறிவிட்டாய்!" என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான்.
சித்தன் அருள்............... தொடரும்!